கடுவாய் வளைவு, ‘தீபம்’ நா. பார்த்தசாரதி (1963-க்கு முன்)

கடுவாய் வளைவு

‘தீபம்’ நா. பார்த்தசாரதி (1963-க்கு முன்)

செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் போது, புனலூர் வரையிலும், மலைத்தொடர்களின் நடுவேயும், பள்ளத்தாக்குப் பகுதியிலுமாக இயற்கை வளமிக்க காட்சிகளுக்கு ஊடே புகைவண்டி செல்கிறது. இந்த இயற்கைக் காட்சிகளில் மயங்கிவிட்டவர்கள், செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை எத்தனை ஸ்டேஷன்கள் இருக்கின்றன, அவைகளுக்கு என்னென்ன பெயர்கள் என்பதையெல்லாம் மறந்துவிடுவதுதான் வழக்கம் !

இந்த வழியில் மலையடிவாரத்துப் பள்ளத்தாக்கில் பள்ள பகவதியாபுரம் என்ற முதல் ஸ்டேஷனை அடுத்து, மலைமேல் உள்ள ஆரியங்காவு என்ற ஸ்டேஷன் இருக்கிறது. இவ்விரண்டு ஸ்டேஷன்களுக்கும் நடுவில் முக்கால் மைல் தொலைவு இருளடைந்த மலைக் குகையினுள்ளேயே புகைவண்டி செல்வதை மட்டும் எவரும் நிச்சயமாக மறந்திருக்க மாட்டார்கள்.

ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவில் செங்கோட்டை தென்காசிப் பகுதிகளில் பிரசித்தமானது. வரப்பிரசாத சக்தி மிகுந்த தெய்வம் என்று மக்கள் சாஸ்தா கோவிலுக்குச் சென்று வருகிறார்கள்.

குற்றாலத்தில் சீஸனுக்காகப் போய்த் தங்கியிருந்தேன். என்னுடைய செங்கோட்டை நண்பர் சிவனுக் கரையாளரைத் தற்செயலாக அருவிக்கரையில் சந்திக்க நேர்ந்தது.

''குற்றாலம் குற்றாலம் என்று இங்கேயே கிடந்து மடிகிறீர்களே, ஸார்! நாளைக்கு ஆரியங்காவு வரையில் போய்விட்டு வரலாமே" என்றார் அவர்.

நான் அதற்கு இணங்கினேன். கரையாளர் நிறைந்த தெய்வ பக்தியுடையவர். தமிழ் நாட்டின் பெருமைக்குக் காரணமான பழம் பண்பாட்டை அழிக்கின்ற எந்தச் செயலையும் துணிந்து வெறுப்பவர். புளியரை, ஆரியங்காவு, பகவதியாபுரம் முதலிய பகுதிகளில், எஸ்டேட மானேஜராக இருந்தவர். அந்த நாட்களில் வருமானத்தில் 'நாலுகாசு' மீதம் பிடித்துச் சிறிது சிறிதாக உள்ளூரிலேயே நிலபுலங்களை வாங்கிச் சேர்த்துக் கொண்டபின், வேலையை விட்டுவிட்டார். இவர் சுபாவத்தில் நல்ல மனிதர்.

மறுநாள் காலை, நானும் சிவனுக்கரையாளரும் செங்கோட்டையிலிருந்து காலை ஒன்பது மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் பாசஞ்ஸரில் ஆரியங்காவுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

ஆரியங்காவு ஸ்டேஷனில் இறங்கியதும் நான் பிரமித்துப் போனேன், நாம் தமிழ் நாட்டிலுள்ள ஒரு மலைத்தொடரின் நடுவேதான் இருக்கிறோமா? அல்லது காஷ்மீரில் ஏரிக்கரையிலுள்ள பழத் தோட்டங்களின் நடுவிலோ, அல்லது குலு பள்ளத்தாக்கிலோ இருக்கிறோமா?' என்று எனக்குச் சந்தேகமாகப் போய்விட்டது!

எத்தனை எத்தனை விதமான மரங்கள்? எத்தனை மலர்கள்! எவ்வளவு நிறங்கள்! எத்தனை வகைப் பழ மரங்கள்! எவ்வளவு செடி கொடிகள்! எங்கும் ஒரே பசுமை! அங்கங்கே அற்புதமான கீத ஓசையோடு கலகலவெனப் பாயும் நீரூற்றுகள்; சுற்றிலும் மேகமென்கின்ற மெல்லிய வெள்ளைச் சல்லாத் துணியைப் போர்த்து விளங்கும் மலைச் சிகரங்கள் அழகு! அழகு! ஒரே இயற்கையின் எழில்!

"கரையாளரே! சாஸ்தாவைக் கும்பிடுவதற்கு முன்னால், முதலில் உம்மை ஒருதரம் கும்பிடலாம் போலத் தோன்றுகிறது ஐயா! நேற்றுவரை என்னால் கற்பனைகூடச் செய்திருக்க முடியாத இடத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டீரே!"

"இப்பொழுதே அதிகமாகப் புகழ்ந்து விடாதீர்கள் ஸார்! இன்னும் பிரமாதமான இடங்களை எல்லாம் இனிமேல் தான் பார்க்கப் போகிறோம். முக்கியமாக இதன் கிழக்கே தேயிலைத் தோட்டங்களுக்குப் பக்கத்தில், 'கடுவாய் வளைவு' என்று ஒரு இடமிருக்கிறது. அது இயற்கை யழகின் சிகரம் மட்டுமல்ல, பயங்கர நிகழ்ச்சிகளின் சிகரமும் கூட."

"ஆமாம். பயங்கரத்தின் சிகரமாக விளங்குவதற்கு அப்படி அங்கே என்னதான் ஆபத்திருக்கிறது?"

"பயந்துவிடாதீர்கள், ஸார்! அது மிக அடர்த்தியான மலைப்பகுதி. இந்தப் பக்கத்தில் இதற்கு மற்றொரு பெயர் 'புலிகளின் கோட்டை' என்பது. இங்கே வேட்டைக்கு வந்து போகிற வெள்ளைக்காரர்கள் வைத்த பேர் ஸார், அது!"

"ஐயையோ! வேண்டாம் கரையாளரே! நான் சினிமாவில் நிறையப் புலிகளைப் பார்த்திருக்கிறேனே...'

''முதலில் கோவிலுக்குப் போகலாம். அடுத்த திட்டத்தைப் பற்றிப் பின்பு யோசிப்போம். நீங்கள் இப்போதிருந்தே நடுங்க வேண்டாம்!"

ஆரியங்காவு ரயில்வே ஸ்டேஷன் ஊரைவிட மேட்டின் மேல் அமைந்திருந்த தனால், படி வழியாக இறங்கித் திருவனந்தபுரத்திற்கு மலை வழியாகச் செல்லும் சாலை மேல் நடந்தோம். பத்து, இருபது கெஜ தூரம் சென்றதும் ஐந்தாறு டீக் கடைகளுக்கு நடுவே, செம்மண்பட்டை அடித்த வாயில் ஒன்று தென்பட்டது. பகலிலேயே கும்மென்று இருள் சூழுமாறு மரஞ்செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. கூரை வேய்ந்து தாழ்வான மண் சுவர்களால் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கிராமாந்தரத்து டீக்கடைகளில் மலையாளத் தினப் பத்திரிகைகளைப் படித்துக்கொண்டு, சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். தமிழும் மலையாளமும் கலந்த கதம்ப பாஷையில் அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. சாரல் விழுந்தப்படி குளிர் மூட்டமாக இருந்த அந்தப் பருவச் சூழ்நிலையில், உடம்புக்குச் சூடேற்றுவதற்காக எத்தனை டீ வேண்டுமானாலும் குடிக்கலாம்! டீக் கடைகளில் பத்திரிகையும் கையுமாகக் கூடி அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்கள், கால் மணி நேரத்திற்கு ஒரு டீ வீதம் பருகிக் கடைக்காரர்கள் 'நம்பிக்கை' மோசம் போகாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கரையாளரை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் போலும். கடையில் உட்கார்ந்து, ஊர்வம்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் அவரைக் கண்டதும் மரியாதையோடு எழுந்திருந்து வணங்கி வரவேற்ற விதத்திலிருந்தே அது தெரிந்தது. கரையாளர் மலையாளத்தில் அவர்களோடு ஏதோ பேசினார்.

சிறிது நேரத்தில் ஒரு ஜீப் வந்தது. அதை எஸ்டேட் கட்டிடத்திலிருந்து 'டிரைவ்' செய்து கொண்டு வந்த மலையாளி, எங்கள் அருகில் கொண்டுவந்து நிறுத்தினான். கரையாளரும் நானும் ஏறிக்கொண்டோம். அவர் அவனிடம் மலையாளத்தில் ஏதோ கூறினார். ஜீப் புறப்பட்டது. ஏற்றமும் இறக்கமுமான மலை ரஸ்தாவில், வானளாவி வளர்ந்திருந்த தேக்கமரங்களின் இடையே குளிர்ந்த காற்று முகத்தில் வந்து மோத, அது ஊர்ந்து சென்றது.

"ஸார் ! புலிகளுக்கும் அவைகள் இருக்கின்ற இடத்துக்கும் தானே நீங்கள் பயப்படுகிறீர்கள்? புலிகளைப் பற்றிய கதையைச் சொன்னால்கூட நீங்கள் பயப்படுவீர்களோ ?''

சிவனுக்கரையாளர் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போதே பேச்சைத் தொடங்கினார் கதை என்றால் நானா சும்மா விடுகிறவன்?

"ஏன்? ஏதாவது ரெடிமேடாக வைத்திருக்கிறீர்களா? இருந்தால் சொல்லுங்கள்!'' கரையாளர் தமக்கே உரிய அனுபவ பாணியில் கூற ஆரம்பித்தார்.

''புலிகளின் கோட்டை' என்று கூறினேனே கடுவாய் வளைவு' பிரதேசத்தைப் பற்றி. அந்த இடத்தினிடையேதான் எங்கள் 'எஸ்டேட் பங்களா' அமைந்திருந்தது. 'பிரவிருத்தி' என்று வந்த பிறகு ஆபத்துள்ள வனாந்தரம் ஆபத்தில்லாத நகர வாழ்வு என்று வித்தியாசம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? எங்காவது வாழ்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது?

பங்களாவைச் சுற்றி ஆழமான குழி வெட்டியிருந்தார்கள். கதவுகள் எல்லாம் இரும்பால் அமைக்கப்பட்டிருந்தன. ஜன்னல்களை உயரமாகத் தரைக்கெட்டாமல் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று துப்பாக்கிகளும் பங்களாவில் இருந்தன. இவ்வளவு தற்காப்புச் சாதனங்களையும் நம்பித்தான், நானும் குடும்பத்தோடு அந்தப் பங்களாவில் வசிப்பதற்குச் சம்மதித்தேன்.

ஆனால், இவர்கள் கொடுத்திருந்த இந்த ஆயுதங்களை எல்லாம் விட உன்னதமான ஓர் ஆயுதம் என்னிடம் இருந்தது. அது கடவுளால் எனக்குக் கொடுக்கப்பட்டது. அதுதான் என் சொந்த மனோதைரியம்.

என்ன தலைபோகிற காரியம் இருந்தாலும், விடிந்து பத்து மணியாவதற்கு முன்பும் மாலை ஐந்தரை மணிக்குப் பின்பும் பங்களா வாசலைக் கடந்து செல்வதில்லை; செல்லக் கூடாது. கண்டிப்பாக இதை அமுல் நடத்தினோம்.

எஸ்டேட் காரியமாகக் கொல்லம், புனலூர், கொட்டாரக்கரை என்று நான் வெளியூர்களுக்கு அடிக்கடி போய் வரவேண்டியிருக்கும். சில சமயங்களில் இரவு ரெயிலில் ஊருக்குத் திரும்புவேன். ஆனால், அப்படித் திரும்புகிற நாட்களில் ஆரியங்காவு ஸ்டேஷனிலேயே இறங்கிப் படுத்துக் கொள்வேனே தவிர, இரவில் மலை வழியாக எஸ்டேட் பங்களாவுக்குப் போகமாட்டேன். விடிந்த பிறகு பத்து மணிக்கு மேல்தான் போவேன். இந்த வழக்கத்துக்குச் சோதனை போல் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

அப்போது இங்கே மழை சீஸன் கைவசமிருந்த, உலர்த்திப் பாடம் செய்யப்பட்ட தேயிலையை மேலும் வைத்துக் கொண்டிருந்தால் கெட்டுப் போய்விடும். எப்படி யாவது மொத்த விற்பனைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் திரும்ப வேண்டும் என்று நான் வெளியூர்ச் சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்தேன்.

ஐந்தாறு நாட்களாக வெளியூர்களில் சுற்றினேன். கடைசியில் கொல்லத்திலுள்ள 'ஸோல் ஏஜண்ட்' ஒருவர் அகப்பட்டார். மறுநாள் எழுத்து மூலம் அவரிடம் உடன்படிக்கை செய்து கொண்டு, ஊர் திரும்பலாம் என்று இருந்தேன் நான்.

ஆனால், என்னுடைய துரதிஷ்டமோ, என்னவோ அன்று மாலையே ஊருக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ஊரிலிருந்து என் மனைவி தந்தியடித்திருந்தாள்.

"குழந்தை பகவதிக்கு மலேரியாக் காய்ச்சல். அபாயம், உடனே வரவும்.'' உடன்படிக்கையைத் தபால் மூலம் செய்து கொள்ளலாம் என்றெண்ணித் தந்தி கிடைத்த உடனே ரெயிலேறி விட்டேன். குழந்தையின் காய்ச்சல் தீர்ந்து நல்லபடி ஆக வேண்டுமே என்ற பிராத்தனையைத் தவிர, என் மனம் வேறெதையுமே அப்பொழுது நினைக்கவில்லை. 'குழந்தையின் உயிருக்கே நாம் போவதற்குள் ஆபத்து நேர்ந்து விடுமோ?' என்ற ஒரு பயமும் மனத்தில் எழுந்து குழப்பிக்கொண்டிருந்தது.

ஆரியங்காவு ஸ்டேஷனில் நான் இறங்கும் போது இரவு மணி ஏழேகால். நல்ல நிலாக் காலமானாலும், மழை மேகம் இருளாகக் கப்பி வான வெளியை மூடியிருந்தது. 'இஇ' என்ற ஓசையைத் தவிர நிசப்தமும், இருட்டும் குடி கொண்டிருந்தன. சாதாரணமாக நான் ஊருக்குத் திரும்பியிருந்தால் அப்படியே ஸ்டேஷன் 'வெயிட்டிங் ரூமி'ல் படுத்துக் கொண்டிருந்து விட்டுக் காலையில்தான் போவேன்.

ஆனால், அன்றோ குழந்தை பகவதியின் மலேரியாக் காய்ச்சல் என்னைத் துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தது. என்ன ஆனாலும் சரி, இப்போதே கடுவாய் வளைவுக்குப் போய் எஸ்டேட் பங்களாவை அடைந்து விடுவது' என்று தீர்மானித்துக்கொண்டேன்.

 அதிருஷ்டவசமாக, என் கைப் பையில் 'மூன்று ஸெல் டார்ச் லைட்' ஒன்று இருந்தது. வெளியூர்களுக்குச் செல்லும்போது, அதை நான் கையோடு கொண்டு போவது வழக்கம்.

மனத்தைத் திடப்படுத்திக் கொண்டேன். உடலையும் உயிரையும் சர்வத்தையும் விதிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, 'கடுவாய் வளைவு'க்குச் செல்லும் மலை ரஸ்தாவில் நடந்தேன்.

மனம் என்னவோ, நான் தைரியமாகக் காலை எட்டி வைத்து வேகமாய் நடப்பதாக எண்ணிக்கொண்டிருந்தது! ஆனால், உண்மையில் கால்களின் நடையில் ஒரு நடுக்கம், ஒரு தயக்கம் இருப்பதை நானே உணரமுடிந்தது. தேள் என்று தெரிந்துகொண்டே அதன் கொடுக்கைத் தடவிப் பார்ப்பது போலிருந்தது என் செயல். இதை நீங்கள் அசட்டுத் துணிச்சல் என்பீர்களோ, அல்லது பாராட்ட வேண்டிய தைரியம் என்பீர்களோ, எனக்குத் தெரியாது.

'படக் படக்' என்று கொள்ளை போகிறாற் போல் அடித்துக் கொள்ளும் மனமும், நடக்கத் தயங்கிக் கொண்டே நடக்கும் கால்களுமாக நான் சென்று கொண்டிருந்தேன். கால்கள் பழக்கமான வழியில் தடம் தெரிந்து நடந்து கொண்டிருந்தன. 'டார்ச்சுலைட்' கையில் இருந்ததே ஒழிய, அதை உபயோகிக்கவே எனக்குப் பயமாக இருந்தது. வெளிச்சமில்லாமல் இருட்டிலேயே நடந்துவிட்டால் அபாயமோ , ஆபத்தோ எதையுமே பார்க்காமலேயே போய்விடலாம். வழியோரத்தில் டார்ச்சை அடித்துப் பார்க்கப் போய், அங்கே ஏதாவது ஒரு பயங்கர மிருகம் முடங்கிக் கிடப்பதைக் கண்கள் கண்டுவிட்டால், பின்பு கால்கள் மரத்துப் போய் அப்படியே நிற்கும்படி ஆகிவிடும்!

வழியின் பயங்கரத் தன்மையாலும், குழந்தையைப் பற்றிய கவலையாலும் என் மனம் இருண்டிருந்தது. வழியும் இருண்டிருந்ததால், மனம் இந்த இருட்டை விரும்பியது.

சர்வ சாதாரணமாகப் பயங்கர மிருகங்கள் பழகுகிற இடமாகையினால், தொலைவிலும் சமீபத்திலும் அவைகள் இருப்பதற்குரிய முழக்கங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு முழக்கம் கேட்டு முடியும் போதும், என் உடலில் உள்ள மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும். காற்றினால் சலசலக்கும் புதர்களிலிருந்து கொடிய மிருகம் ஒன்று சிலிர்த்துக்கொண்டு கிளம்புவது போல மனத்தில் பயங்கரக் கற்பனைகள் தாமாகவே தோன்றிவிடும்.

"ஆயிற்று ! இதோ இந்த மலைத் திருப்பத்தில் திரும்பி, கிழக்கே பதினைந்து - இருபது கெஜம் நடந்துவிட்டால் கடுவாய் வளைவு', 'எஸ்டேட் பங்களா' கண்ணுக்குத் தெரியும். ஆனால் திருப்பமும், பதினைந்து இருபது கெஜ தூரமும் சாமானியமான இடங்களா? நினைக்கும் போதே உடம்பு புல்லரித்தது.

திருப்பத்தின் முகப்பில் யாரோ பெரிய தேக்கு மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தார்கள் போலும். காட்டிலாகா அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இரவோடிரவாகத் தேக்கு மரம் வெட்டிக்கொண்டு போகும் மரத் திருடர்கள் அந்தப் பகுதியில் அதிகம். வெட்டுகிற ஓசைமிக அருகில் கேட்டதால், நான் நடந்து கொண்டிருந்த திருப்பத்திற்கு இருபது இருபத்தைந்து தப்படித் தொலைவில் அவர்கள் வெட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று என்னால் அனுமானிக்க முடிந்தது. அவர்களையும், அவர்களுடைய மரம் திருடும் சாமர்த்தியத்தையும் பற்றி வியந்துகொண்டே திருப்பத்தை அடைந்தேன். வெட்டுவதற்காக வெளிச்சம் வேண்டிச் சிறிதாகத் தீ மூட்டியிருந்தனர் அவர்கள்.

திடுதிடுப்பென்று ஒருவிதமான முடை நாற்றம் என்னைத் திணற அடித்தது. நான் திடுக்கிட்டேன். 'எந்த மிருகம் மிக அருகில் இருந்தால் அந்த மாதிரி மாமிச ரத்தமுடைய நாற்றம் வரும்' என்பது எனக்குத் தெரியும். அந்தத் திருப்பத்தின் பெயரை ஒட்டித்தான் காடுவாய் வளைவு' என்ற பெயரே அந்தப் பிரதேசத்திற்கு ஏற்பட்டது. என் உடல் வெட வெடவென்று நடுங்கியது. கைகால்கள் உதறலெடுத்தன. உடம்பில் அங்கங்கே ரத்தம் ஓடியதா உறைந்து போய்விட்டதா என்றே தெரியவில்லை! கண்கள் மிரள மிரளச் சுற்றிலும் நோக்கின. எதற்கு நான் பயந்து நடுங்கினேனோ 'அது' ரஸ்தாவின் மேலேயே வாலை முறுக்கியவாறு நின்று கொண்டிருந்தது!

மேட்டில் தேக்க மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு நேர் கீழே, ரஸ்தாவின் மேல் 'அது' நின்று கொண்டிருந்ததனால், அவர்கள் மூட்டியிருந்த தீ வெளிச்சத்தின் மங்கலான ஒளியில் நான் அதைக் காணமுடிந்தது.

மனிதவாடை தட்டுப் பட்டுத்தான் 'அது' அந்த இடத்தைவிட்டுப் போகாமல், அடித்த முளைமாதிரி வாலை முறுக்கிக் கொண்டு நிற்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பிரகாசமாக எரியும் இரண்டு சிவப்பு மின்சார விளக்குகளைப் போன்ற அந்தக் கண்கள், மரம் வெட்டும் ஓசை வந்த மேட்டை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் மூட்டியிருந்த தீயே அதை அங்கே தடுத்து நிறுத்தியிருக்கிறது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. தவிர, திருட வந்திருக்கும் அவர்கள் துப்பாக்கி முதலிய ஆயுத வசதிகளோடுதான் இந்த நேரத்தில் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியும்! துப்பாக்கியால் சுடும் போது கூடச் சுடுபவர் மேல் ஆக்ரோஷமாக எதிர்த்துப் பாயும் மிருகத் தன்மை வாய்ந்த மிருகமது. ஆனால் தீ எரிந்து கொண்டிருந்தால் மட்டும் அதைக் கண்டு தயங்கி நின்றுவிடும் சுபாவம் அந்த மிருகத்துக்கு உண்டு.

ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் அப்படியே நின்றேன் நான். நாக்கு அடித் தொண்டையில் ஒட்டிக் கொண்டது. எங்கே ஓடுவது? எப்படித் தப்புவது?' எதையுமே பிரக்ஞையோடு சிந்திக்க முடியவில்லை என்னால் 'இன்றைக்கு நம்முடைய உயிர் இந்தக் கடுவாய்ப் புலியால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்பதுதான் ஈசுவர சித்தம் போலும்' என்றெண்ணி, ஒடுங்கிவிட்டது என் உணர்வு.

கை நடுக்கத்தால் கையிலிருந்த 'டார்ச்' கீழே விழுந்து ஓசை உண்டாக்கிவிட்டது. சிறிய ஓசைதான்! ஆனால் அந்தப் பயங்கர மிருகத்தின் கூரிய செவிகளுக்கு அது போதாதா, நான் நிற்பதைத் தெரிந்து கொள்வதற்கு?

அப்பப்பா! மேட்டைப் பார்த்து வாலை முறுக்கிக் கொண்டிருந்த அந்த மிருகம் எவ்வளவு வேகமாக என் பக்கம் திரும்பியது என்று நினைக்கிறீர்கள்? இப்போது நினைத்தாலும் குடல் நடுங்குகிறது. தீப்பந்தங்களின் ஜ்வாலை போன்ற கண்களுடன் 'அது' என்னைப் பார்த்துப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. நான் உயிரோடு செத்துக் கொண்டிருந்தேன். அது கொல்வதற்கு முன்பே - அது என்னை அறைந்து கொல்ல யத்தனிப்பதற்கு முன்னால் 'பயம்' என்ற கடுவாய் என் தைரியத்தை அறைந்து கொன்று விட்டது!

வாட்ட சாட்டமான அதன் உடல் பின்னுக்குப் பதுங்கி வளைந்து பாயத் தயாராகப் பம்மியது. நான் கண்களை இறுக மூடிக் கொண்டேன். அலற வேண்டும் போல இருந்தது. நா எழவில்லை. அடுத்த நொடி என் மார்பிலும் முகத்திலும் பிச்சுவாக் கத்திகளைப் போன்ற கூரிய நகங்கள் மோதிக் கிழிக்கும் என்று எதிர்பார்த்தேன். எனக்கும் அதற்கும் இடையில் பத்து அல்லது பன்னிரண்டடி இடைவெளி இருக்கலாம்.

ஒரு நொடியாயிற்று! 'சடசட'வென்று ஏதோ முறிந்து விழும் ஓசை என் செவிகளை அதிரச் செய்தது. அதையடுத்து, ஒரு புலியின் பெரிய முழக்கம், வயிற்றிலே ஐந்தாறு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததும் பரிதாபகரமாக அலறுமே அந்த மாதிரி அலறல்! காடே கிடுகிடுத்தது.

'என்மேல் புலி பாயவில்லை. நான் உயிரோடுதான் இருக்கிறேன்' என்பதை உறுதி செய்து கொண்ட பின், மெல்லக் கண்களைத் திறந்தேன். ஈனஸ்வரத்தில் அதே மிருகத்தின் வேதனை அலறல் என் செவிகளில் கேட்டுக் கொண்டிருந்தது. எதிரே பார்த்தேன், என்ன கோரம்? அந்தப் பயங்கர மிருகத்தின் உடல் பருத்த தேக்கு மரக்கட்டைக்கிடையில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்தது. சுற்றி ரத்த வெள்ளம் தேங்கியிருந்தது. ஈனஸ்வரத்தில் வந்து கொண்டிருந்த மெல்லிய அலறலும் சிறிது சிறிதாக ஓய்ந்தது.

தரிசு நிலத்தில் பாய்ந்த வாய்க்கால் தண்ணீர்போல், ஏறக்குறைய பிரேத மாகிவிட்ட என் உடம்பில் தைரியம் 'குபுகுபு' வென்று எங்கிருந்தோ வந்தது! சிறிது நாழிகைக்கு முன் துப்புரவாக வெளியேறியிருந்த பொருளல்லவா அது?

அப்போது என் மனத்தில் என்ன தோன்றிற்று தெரியுமா? ஆண்டவன் தான் எவ்வளவு நல்லவன்? க்ஷணப்போதில் குறுக்கிட்டு விளைவை எப்படி மாற்றிவிட்டான்! திருடர்கள் வெட்டிக் கொண்டிருந்த தேக்கு மரமாக இருந்து, சரியாகப் புலி என்மேல் பாயப் பதுங்கிய அதே நேரத்தில், தான் வெட்டுண்டு முறிந்து, அதன் மேல் பாய்ந்து ஆண்டவனே எனக்காக ஓர் அற்புதமான திருவிளையாடலை நடத்திவிட்டது போலத் தோன்றியது எனக்கு. 'அழிந்துவிட்டோம்' என்று கருதிய என் உயிரை, அழியாமற் காத்தும், 'அழித்துவிடப் போகிறோம்' என்று கருதிப் பாய்ந்த அதன் உயிரை அழியச் செய்தும், அந்த இரவில் விதியின் மூலம் விளையாடிய இறைவனைக் கைகூப்பி வணங்கினேன்.

துணிச்சலோடு கீழே விழுந்திருந்த டார்ச்சை எடுத்து மரத்தை நோக்கி ஒளியைப் பரவச் செய்தேன். அருகில் சென்று பார்த்தேன். சரியாகப் புலியின் நடு வயிற்றில் விழுந்திருந்தது மரம். மூன்று யானைகள் இருக்கவேண்டிய அவ்வளவு சுற்றுப் பருமன் உடைய மரம் அது.

புலி நல்ல ஜாதிக் கடுவாய். ஆகையால் பார்ப்பதற்குப் பதினாறடி வேங்கை மாதிரி இருந்தது. நசுங்கிச் செத்துக் கிடந்த அதைப் பார்க்கும்போது, 'மனித உயிருக்கு ஆண்டவன் தான் எஜமானன்! அவனுடைய ஆணை, விதி என்ற வடிவில் துணை செய்தாலொழிய, எந்த ஒரு துஷ்டஜந்துவும் மனிதனைக் கொல்ல முடியாது!' - இப்படி ஓடியது என் எண்ணம்.

மேலும், அங்கே தாமதித்தால் மரத்தை வெட்டித் தள்ளியவர்கள் வருவார்கள்; அவர்கள் கண்களில் தென்பட்டால், விசாரணைக்கு ஆளாக நேரிடும். அதனால் உடனே திருப்பத்தைக் கடந்து பங்களா காம்பவுண்டை நோக்கி நடந்தேன். போகும் போது அந்த மரத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது எனக்கு.

அப்படியே செய்துவிட்டு, மலேரியாக் காய்ச்சலினால் துன்புறுகிற என் குழந்தையைக் காணத் துடிக்கும் ஆவலோடு விரைவாகச் சென்றேன்" கரையாளர் கூறி முடித்தார்.

ஒரு பெரிய பங்களாவின் முன் போய் நின்றது. ஒரு மலைத் திருப்பத்தை அடுத்து அடர்ந்த மலைப் பகுதியினிடையே அது அமைந்திருந்தது. கரையாளர் கூறிய சம்பவத்தில் வந்த பங்களா மாதிரியே, சுற்றி ஆழமான குழிவெட்டியிருந்தது. அடர்த்தி என்றால் அப்படி இப்படிப்பட்ட அடர்த்தி இல்லை. இருண்டு அடர்ந்த மலைப்பகுதி அது.

கரையாளர் என்னைப் பங்களாவிற்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்தவர்கள் அன்போடு வரவேற்றனர். தேநீரும் நேந்திரங்காய் வறுவலும் சாப்பிடக் கிடைத்தன.

"இந்த மலைப்பகுதிகளில் இயற்கை அழகு எப்படி இருக்கிறது? இங்கே இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?" கரையாளர் தேநீரைப் பருகிவிட்டு என்னைப் பார்த்துக் கேட்டார்.

"ஆகா! கட்டாயம் பார்க்கலாம். எவ்வளவு அற்புதமான இடமாக இருக்கிறது? என்ன 'ஸீனரிகள்'!"

தேனீரைக் குடிப்பதற்குக் கையிலெடுத்துக் கொண்டே கூறி வியந்தேன் நான்.

"இந்த இடத்தின் பேர் என்ன தெரியுமா?"

"என்னவாம்? சொல்லுங்களேன்.''

''இதுதான் சார் கடுவாய் வளைவு!''

பயத்தில் தேநீர்க் கிண்ணத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டேன். என் மேலெல்லாம் டீ சிந்திவிட்டது. கதைகளில் ஆயிரம் தத்துவம் பேசலாம். ஆனால் உணர்ச்சி வருகிறபோது, பயன் என்னவோ பயமாகத்தானே இருக்கிறது!

(1963-க்கு முன்)

 

 

அரிய ஒளிப்படம் 1977, ஜி. சுப்பிரமணிய ஐயர் நினைவுக்கூட்டம்

 இந்த வாரம், 19, 20-ம் நூற்றாண்டுகளின் ஆய்வாளர் பெ.சு. மணி இயற்கை எய்தினார். நரசையாவின், ‘இரு சுந்தரர்கள்’ (புதுகைத் தென்றல், டிசம்பர் 2012) கட்டுரையும், பெ.சு. மணியின் மறுமொழியும், ஓர் அரிய ஒளிப்படம் (1977) இணைத்துள்ளேன். இவற்றை 2012-ல் எழுதிய கடிதத்தில் நரசையா அனுப்பியிருந்தார். பழைய கணினியில் கிடைத்தது. அமரர் பெ. சு. மணி அவர்கள் குறிப்பிடும் ‘ஆதியூர் அவதானி சரித்திரம்’ பழைய நூல் என்னிடம் உண்டு. சேலம் பகடால நரசிம்மலு நாயுடு அவர்களின் நூலகத்தில் இருந்து பலரிடம் சென்று எனக்கு வந்த அரிய நூலாகும்.  

அமரர் பெ.சு.மணி அவர்களின் கட்டுரைகள், நூல்கள், ஆய்வுகள் யாவும் நாட்டுடமை ஆகி, இணையத்தில் பிடிஎஃப் கோப்புகள் ஆகவேண்டும்.

~ நா. கணேசன்



முன்வரிசை: எஸ். ஆர். வேங்கடராமன், கி. சந்திரசேகரன், மபொசி, சோ. சிவபாதசுந்தரம், தீபம் நா.பா. 

நிற்பவர்கள்: பெ.சு.மணி, வி. சுப்பிரமணிய ஐயர் (ஜி. சுப்பிரமணியையர் பேரன்), சுப்ரபாலன், சிட்டி, விக்கிரமன் 


 












இரு சுந்தரர்கள் (சிட்டி சுந்தரராஜன் - சிவபாதசுந்தரம்) 

நரசய்யா

இரண்டாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்த இந்த இலக்கிய இரட்டையர்கள், தமிழுக்குச் செய்துள்ள மகத்தான சேவையை தமிழுலகம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை போலும்! 1912 ஆம் ஆண்டில் பிறந்த சிவபாதசுந்தரத்தின் நூற்றாண்டு நிறைவினை தமிழுலகச் சஞ்சிகைகள் (அமுதசுரபி தவிர) எவையும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை!

சோமசுந்தரம் என்பவ்ரின் குமாரராக சிவபாதசுந்தரம் யாழ்ப்பாணத்தில் ஆகஸ்டு 27, 2012 ல் பிறந்தார். அவ்வூர் மத்தியக் கல்லூரியிலும், கொழும்பு சர்வகலாசாலையிலும் படித்து சட்டத்தையும் கற்றுக் கொண்டபின்னர், வ. ரா வைத் தொடர்ந்து கொழும்பு பத்திரிகையான ஈழகேசரிக்கு ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்போது இலங்கை வானொலி ஒலிபரப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவரது திறமையைக் கண்டு லண்டன் பி. பி. சி நிலயம் இவரைத் தமிழோசை நிகழ்ச்சியை நடத்த அழைப்பு விடுத்தது. மிகச் சிறப்பாக அவ்வேலையைச் செய்த இவருடைய திறமை உலமெங்கும் வாழும் தமிழர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அந்த அனுபவத்தை ஆதாரமாக வைத்து இவர் எழுதிய நூல் ஒலிபரப்புக் கலை என்பதாகும். இந்நூல் அமுத நிலயத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் சிறப்பு, அதற்கு ராஜாஜி அவர்கள் எழுதிய ஆசியுரை தான்! சாதாரணமாக, ராஜாஜி அவர்கள் எந்த நூலுக்கும் முகவுரை எழுதுவதில்லை என்பதை ஒரு விரதமாகவே எடுத்துக் கொண்டவர். ஆனால் சிவபாதசுந்தரம், அவரை அணுகியபோது அந்நூலின் பிரதி ஒன்றைப் பெற்றுக் கொண்டார். அவரே சொல்கிறார்: “ ஆசிரியர் தம் புஸ்தகத்தின் ’ஒத்திகை’ அச்சுப் பிரதி ஒன்று எனக்கு அனுப்பித் தம் நூலுக்கு நான் ஒரு முன்னுரை எழுதி உதவ வேண்டுமென்று கடிதத்தில் கேட்டிருந்தார். சில காலமாக நான் ஒருவர் கஷ்டப்பட்டு எழுதிய நூலுக்கு மற்றொருவர் விஷயம் ஒன்றும் தெரியாமல், யாதொரு தகுதியுமில்லாமல், ஏதோ காரணங்களால் ’முன்னுக்கு’ வந்துவிட்டவர், எல்லாம் தெரிந்தவரைப் போல முன்னுரை எழுதி வரும் வழக்கம் தவறு என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் பல நூலாசிரியர்களுக்கு இல்லை, இல்லை, முடியாது என்று சொல்லி வந்தேன். சிலர் இந்த ஏமாற்றத்தால் என்பேரில் கோபமும் கொண்டதுண்டு! திரு சிவபாதசுந்தரத்துக்கும் இப்படியே இல்லை என்று எழுதிவிடவேண்டும் என்பதாக நிச்சயித்துக் கொண்டே, புஸ்தகத்தைப் பார்க்கலாம், எப்படியிருக்கிறதோ என்று ஏடுகளைத் திருப்பினேன். . .” என்று தான் ஆரம்பிக்கிறார். ஆனால் படிக்கப் படிக்க, ராஜாஜிக்கு அந்நூல் மிகவும் பிடித்து விட்ட காரணத்தால் ஒரு முன்னுரையும் எழுதி விட்டர்! இறுதியாக நான்கு பக்கங்களில் அம்முன்னுரையை முடிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்: “. . .ரேடியோவில் சேர்ந்து உழைப்பவர்களுக்கு அந்த வேலை செய்வதில் உள்ளத்தில் மகிழ்ச்சி ஊறவேண்டும்; எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும் போது உள்ளத்தில் திருப்தி பொங்க வேண்டும் என்று ஆசிரியர் சரியாகச் சொல்லியிருக்கிறார். அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தப் புது தெய்வத்துக்காக அர்ப்பணம் செய்யலாம். நிலையத்து உத்தியோகஸ்தர்கள், பேச்சாளர், சங்கீதக்காரர், ஆசிரியர்கள், நடிகர்கள், எல்லோருக்குமே நூல் மிகவும் பயன் படும். இந்த நூலுக்குப் பெயர் ‘ரேடியோ வாத்தியார்’ என்றே வைத்திருக்கலாம் – இராஜகோபாலாச்சாரி” என்று முடிக்கிறார்!

இதைத்தான் வசிஷ்டர் வாயால் மகரிஷி என்று சொல்வார்களோ!

ஒலிபரப்புக் கலையில் தேர்ந்த சிவபாதசுந்தரத்தைத்தான், சென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக அழைத்தது.

சிவபாதசுந்தரம், மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (1947) என்ற நூல் மூலம் பிரயாண இலக்கியத்தில் தமிழுக்கு ஒரு புது மரபை உண்டாக்கியவர். இவர் எழுதிய கெள்தம புத்தர் அடிச்சுவட்டில் இலங்கை சாகித்ய மண்டலத்தின் பரிசு பெற்றது. தமிழ் எழுத்தாளர்களுடன் இருந்த நெருக்கமான தொடர்பு காரணமாக சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டர். தொடர்ந்து சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகச் செயல் பட்டார். 1972 ஆம் ஆண்டில், கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி. ராஜம் அய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகச் செயல் பட்டார். சிட்டியும் சிவபாதசுந்தரமும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப்பட்டனர். இலக்கிய இரட்டையர்கள் என்றறியப்பட்ட இவ்விருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக் கழகங்களால் வருகை தரும் பேராசிரியர்களாக அழைக்கப்பட்டனர்.

1986 ஆம் வருடம், மே மாதம் 16, 17 தேதிகளில் மதுரைப் பல்கலைக்கழகம் யூனிவர்சிடி கிராண்ட்ஸ் கமிஷன் சார்பில், கிழக்கு மேற்கு இலக்கியத் தொடர்புகள் என்ற கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதை அன்றைய பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ். கிருஷ்ணசுவாமி துவக்கி வைத்தார். சுமார் நாற்பது உரைகள் சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் கருத்தரங்கைக் குறித்து ஹிந்து நாளிதழ் மிகச் சிறப்பாக, இலக்கிய இரட்டையர்களான் சிட்டியும் சிவபாதசுந்தரமும் இவ்வரங்கில் கலந்துகொண்டது விழாவிற்கு மதிப்பைக் கூட்டியது என்று குறிப்பிட்டது!

பெரிய புராணத்து63 நாயன்மார்கள் பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று பாடி பெருமை சேர்த்த நிகழ்ச்சிகள் தொடர்பான சம்பவங்கள் ஆராய்வதற்காக சிவபாதசுந்தரம் மேற்கொண்ட பயணத்தில் முன்னர் இலங்கை வானொலியில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவில் 2001 ல் காலம் சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சிட்டி, பரராஜசிங்கம், சிட்டியின் குமாரர் வேணுகோபாலன் கலந்துகொண்டனர். இதை ஒரு மறக்கமுடியாத அனுபவ்மென சிட்டி கூறுவார்.

சிவபாதசுந்தரத்தின் சிறந்த தமிழ்ச் சேவை அவர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து கொணர்ந்த சில அரிய தமிழ் நூல் பிரதிகள். தூசில் வீரவல்லி சேஷய்யங்கார் எழுதிய ஆதியூர் அவதானி சரித்திரம்,  (1875) மற்றும் பிரணதார்த்திஹரன் என்பவர் எழுதிய சிலப்பதிகார ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகும். இவை பின்னர் சிட்டியால் கண்டெடுத்த கருவூலம் என்ற பெயரில் வெளியிடப்பட்டன்.  

இவ்விரு சுந்தரர்களும் தமிழுக்கு ஆற்றிய பணியைத் தமிழுலகம் சரியாகக் கண்டுகொள்ளவில்லை என்பது தான் வருந்தத்தக்க விஷயம்!

ராஜாளியார் வாழ்த்து - வித்வான் ம. கோபாலகிருஷ்ணையர்

 தொல்காப்பியருக்கு அரிய சிலை வடித்து உதகை மாவட்டக் குன்னூரில் நிறுவி 10- செப்டம்பர்-1911-ல் பெரிய விழா எடுத்தவர் தமிழ்ப் புரவலர் அரித்துவாரமங்கலம் இரகுநாத இராசாளியார் ஆவார். அரித்துவார மங்கலம் தேவார காலத்தில் அரதைப் பெரும்பாழி என்ற பாடல் பெற்ற சிவத்தலம். 10-செப்டம்பர்-1911-ம் தேதி உதகை மக்கள் வாசித்தளித்த வரவேற்புப் பத்திரத்தின்படி, தொல்காப்பியர் சிலை ஒரு முனிவரைப் போல இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆனால், ஒரு ஐம்பது, அல்லது அறுபது ஆண்டுகளாக அதனைக் குன்னூரில் கண்டார் இல்லை. http://nganesan.blogspot.com/2021/04/tolkappiyar-statue-coonoor-september.html

ஒருவேளை, பழைய இத் தொல்காப்பியர் சிலையின் ஒளிப்படம் எங்காவது இருந்து வெளிச்சத்துக்கு எதிர்காலத்தில் வரலாம்.

பனம்பாரனார் பாடிய பாயிரத்தில் ’முந்துநூல்’ என்பது என்ன என ஆர்தர் கோக் பர்னல் தொடங்கிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். “மயங்கா மரபின் எழுத்து முறை காட்டுதல்” என்பது தமிழி (அ) தமிழ் பிராமி என்னும் சங்ககாலக் கல்வெட்டுகளில் புள்ளிக் கோட்பாடு எனத் தெரிய வருகிறது. முத்தாய்ப்பாகப், பனம்பாரனார் ’படிமையோனே’ எனத் தன் பாயிரத்தை நிறைவு செய்கிறார். படிமை (< படிமா) என்று தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல்லானது சமணர்கள் இடையே மட்டும் இருப்பதை அவர்கள் நூல்கள் அறிவிப்பதாலும், ஓருயிரில் இருந்து ஆருயிர் ஈறாக உயிரிகளைப் பகுக்கும் கோட்பாடு சமண நூல்களில் இருப்பதாலும், தொல்காப்பியர் அச் சமயம் சார்ந்தவர் என்ப. சங்க காலத் தமிழ்க் கல்வெட்டுகளை மதுரை, கொங்குப் பகுதிகளில் ஆராய்ந்தாலும் இம்முடிபு சரியே எனக் காட்டிநிற்கின்றன.

தொல்காப்பியர் சிலை முதலில் நிறுவப்பெற்று 110 ஆண்டுகள் சென்றுவிட்டன. இன்று ஆறாம் திணையாகிய இணையம், திறன்பேசி யுகம் மலர்ந்துவிட்டது. உலகமெலாம் தொல்காப்பியர் புகழைப் பரப்பும் வகையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை (http://fetna.org) ஒவ்வோர் ஆண்டும் சித்திரை முதல்நாளைத் தொல்காப்பியர் திருநாள் எனக் கொண்டாடுகிறது. இசை நிகழ்ச்சிகள், தமிழ் இருக்கைகளுக்கு ஆதரவு, அருவி என்னும் இதழின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் (14 ஏப்ரல் 2021) எனப் பல்வேறு வகையான விழாக்களை எடுத்துப் பரப்பிவருகிறது. முதல் தொல்காப்பியர் திருநாள் தொடர்பாக, பேரவை நடாத்திய ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் இலக்கியத் தமிழிசை நிகழ்ச்சி:  https://www.youtube.com/watch?v=kKETavfXgZY . தினமணியில் அச்சான கட்டுரை:  http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

மதுரை வித்வான் திரு. ம. கோபாலகிருஷ்ணன் பாரதியாருக்குப் பல்லாற்றானும் உதவியவர். ஆங்கிலப் பாக்களைத் தமிழில் தருவதில் நிகரற்றவர். மதுரையில் செந்தமிழ்ப் பாடசாலை, இலக்கியப் பத்திரிகைகள் நடத்தியவர். ராஜாளியார் கொடைத் திறத்தை அறியப் புலவர் ம.கோ. பாடல்கள் உதவுவன.  தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரால் ’மதுரை மாப்பிள்ளை’ என்று அழைக்கப்பெற்ற ராஜாளியாரை வாழ்த்திப் புலவர் கோபாலகிருஷ்ணையர் இயற்றிய பாக்களை, அதன் மூல அச்சு நூல் ஆகிய அரும்பொருட்டிரட்டில் இருந்து குடவாயில் பாலு அவர்கள் அனுப்பினார்கள். அன்னாருக்கு என் மனங்கனிந்த நன்றி. 

அமெரிக்கப் பேரவையின் அருவி இதழின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் முகப்போவியமும், கட்டுரைகளின் பொருளடக்கமும் இணைத்துள்ளேன். தொல்காப்பியர் திரு ஓவியம் வரைந்த மணியம் செல்வன் அவர்களுக்கு நன்றி.

10-செப்டம்பர்-1911 உலகில் முதன்முதலாக, நீலகிரிக் குன்றூரில் தொல்காப்பியர்க்குச் சிலை ராஜாளியார் நிறுவினார் எனக் குறிப்பிடும் நேரிசை வெண்பா.

               வாழ்த்து

திருமால் திருப்பதியெண் சேர்த்துமே லொன்று

வருநாளில் குன்னூரில் வாழுந் திருவாளர்

நாட்டியரா சாளியார் நற்புத் தகசாலை

நாட்டினிலே வாழ்கநெடு நாள்!

 குறிப்பு:

விஷ்ணு திருப்பதி எண் = 108, 108+1 = 109.

அதாவது:

வருஷம் - விரோதிகிருது - 45

மாதம் - ஆவணி - 5

தேதி - 25

கிழமை - ஞாயிறு - 1

நட்சத்திரம் - உத்திரட்டாதி - 26

இலக்கினம் - துலாம் - 7

45 + 5 + 25 + 1 + 26 + 7 = 109.

இதற்குச் சரியான ஆங்கில காலண்டர் தேதி: 10-செப்டம்பர்-1911 ஆகும்.

https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=10/09/1911

 ஆங்கிலத் தேதி 10-9 (1911)-க்கு இணையாக, 109 என்ற எண்ணைக் கணக்கிடும்போது தமிழ்ப் பஞ்சாங்கமும் இணைந்திருப்பது அருமை. 

~ நா. கணேசன்






தொல்காப்பியர் திருநாள் – நினைவலைகள் (பேரா. கு. சிவமணி ஆய்வுக் கட்டுரை)

தொல்காப்பியர் திருாள் – ினைவலைகள்

கு.சிவமணி

மேனாள் முதல்வர், கர்தைப்புலவர் கல்லூரி,தஞ்சாவூர்/திருவள்ளுவர்கல்லூரி,பாவாசம்;

ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு மத்திய ிறுவனம், சென்னை.

தொல்காப்பியரின் ாளும் காலமும் குறித்துக் கட்த ஒரு ூற்றாண்டு வரலாற்றில் சிலவற்றை ினைவுகூர்்து தொல்காப்பியர் திருாளை ிலையுறுத்துவதே இக்கட்டுரையின் ோக்கம்.

இற்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன் ீலகிரி- குன்னூரில் ூலகக் காதலரான தஞ்சை மாவட்டத்துப் பெருிலக்கிழார் ஒருவர் ஒரு ூலகத்தை ிறுவி அதற்குப் பத்தாயிரம் ரூபாய் ன்கொடை அளித்தார் –அத்துடன், அூலக வளாகத்தில் தொல்காப்பியர் சிலையை  10.9.1911 அன்று ிறுவி  அ்தாளைத் தொல்காப்பியர் திருாள் எனக் கொண்டாடினார். அவர் - தமிழ், ஆங்கிலம், சமற்கிருத மொழிகளில் வல்லவர்; இசை, சித்த மருத்துவம், யோகம் முதலாய பலகலைகள் பயின்றவர். அவர்காலத்திய சென்னை மாகாண ஆளுர் சர். ஆர்தர் லாலி, மாவட்டத் துணையாட்சியர் ஆஸ்டின் போன்ற ஆங்கில ஆட்சியாளர்களின் ெருங்கிய ண்பர்; புதுதில்லியில் 12.12.1911 அன்று ஐ்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டிக்கொண்டபோது சிறப்பு விரு்தினராகக் குடும்பத்தோடு அழைக்கப்பெற்றவர்; தமது இனத்தைக் குற்றப்பரம்பரைச் சட்டத்திலிரு்து விடுவிக்க வேண்டி மன்னரிடம் ேரடியாக  வாதுரைத்து வெற்றிக்கு வித்திட்டவர்; தமது சிற்றூரில் காரனேசன் ூலகம் என்ற ஒரு பெரிய ூலகத்தை உருவாக்கி, அரிய ூல்களையும் ஓலைச் சுவடிகளையும் திரட்டிக் காத்துப் பின்னாளில் சங்கூல் பதிப்பித்த டாக்டர் உ வே. சாமிாதையர், ஔவை துரைசாமிப்பிள்ளை, பின்னத்தூர் ாராயணசாமிஐயர் போன்ற பலருக்கும் அவற்றைக் கொடுத்துதவியவர்; சுற்றுப்புறத்துள்ள 50 சிற்றூர்களின் லம் கருதி ஔடதசாலை அமைத்தவர்; பெரும்புலவர் சோழவ்தான் அரசஞ்சண்முகனார் பிணிீக்கி உயிர்காத்து அவரது தொல்காப்பியப் பாயிரவிருத்தி ூலைத் தாமே பார்வையிட்டு வெளிட்ட புலமைலஞ் சான்ற புரவலர்.  அவரே அரித்துவாரமங்கலம் கோபாலசாமி இரகுாத இராசாளியார் எனும் மாிதிக் கிழவர். (சிதை்துள்ள அச்சிலையையும் ூலகத்தையும் தமிழக அரசு பேணிக் காக்கவேண்டும் எனும் தீர்மானத்தைத் திருவள்ளுவர் இலக்குவனார் அரசுக்கு அனுப்பினார்.)

1902இல் தொல்காப்பியம் பற்றிய முதல் கட்டுரையை மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் செ்தமிழ் இதழில் ரா.இராகவையங்கார் எழுதினார். பின்னர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியச் சொல்லதிகார ஆய்வுக் குறிப்புகள் என்ற ஓர் ஆய்வேட்டுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. இவற்றினுடைய ோக்கம் தொல்காப்பியம் சமற்கிருதத்துக்குக் கடன்பட்டது என்பதை ிறுவுவது ஆகும். புலமைப்போர் தொடங்கியது. டாக்டர் சாத்திரியாரின்  ஆய்வை வரிக்கு வரி மறுத்துத் தொல்காப்பியத்தின் தமிழியல் வேர்களைக் கண்டறி்து கர்தைத் தமிழ்ச் சங்கத்துத் தமிழ்ப்பொழில் – 21 இதழ்களில் தொடர்கட்டுரைகளை எழுதியவர், தொழில்முறையில் பேராசிரியர் அல்லர், காவல் உதவி ஆய்வாளர்,  மன்னார்குடி ா. சோமசு்தரம் பிள்ளை. இது இடைக் காலிலை;  தொல்காப்பியர் காலம் பற்றிக் கருத்து மோதல்கள் இருப்பினும் அவரது ாள் பற்றி இராசாளியாரைத் தவிர, யாரும்அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. 20ஆம் ூற்றாண்டு இறுதியில், அதாவது- 1975க்குப் பின், தொல்காப்பியம்- சங்க இலக்கிய ஆய்வுகள் வெறும் ஐ்து விழுக்காட்டுக்குக் கீழ் இரு்தன.

ிலையில் 21ஆம் ூற்றாண்டுத் தொடக்கத்தில்  அதாவது 2004ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய ிறுவனம் தோற்றம் பெற்றது. அப்பொழுது தமிழ் முதுகலை மாணவர்கள், ஆய்வியல்ிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களிடம் சங்க இலக்கியம் - தொல்காப்பியம் பற்றிய ஆர்வம் பெரிதாக இல்லை. செம்மொழி ிறுவனத்தின் அன்றைய முதல் பொறுப்பலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பெற்றது. அதற்கிணங்க, ஓர் ஐ்தாண்டுகளில்   ஒரு கருத்தரங்கம்(3-ாள்), பயிலரங்கம்(10-ாள்) என்ற அளவில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட தமிழியல்  ிகழ்வுகள் ்தன. . ாளொன்றுக்குக் குறை்தது 5 அறிஞர்கள் . . ஏறத்தாழ 1800 ாட்கள்.. 9000 ஆய்வுரைகள் ிகழ்்தன. ஓர் அரங்கத்திற்குத் தொடக்கத்தில்  ஆய்வாளர் எண்ணிக்கை 60,  காலப்போக்கில் 100 என உயர்்து 25000 ஆய்வுமாணவர்கள் பயன்பெற்றனர். பயிலரங்க ிறைவுாளில் ஆய்வாளர் ஒவ்வொரு வருக்கும் 3000 ரூபாய் விலைமதிப்புள்ள சங்க இலக்கியத் தொகுதி அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. தமிழகம் மட்டுமன்றிக்    கேரளம், ஆ்திரம், கர்ாடகம் ஆகிய அண்டை மாிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், இ்த ிகழ்ச்சிகள் டைபெற்றன செம்மொழி ிறுவன ஆய்வறிஞர் எனும் ிலையில் கட்டுரையாளர் 60க்கும் மேற்பட்ட ிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக அமை்து திறம்பட டத்தினார். இதன் விளைவாக இளம் ஆய்வாளர்களிடையே ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் புரட்சி ஏற்பட்டு, 2010இல் தொல்காப்பியம் - சங்க இலக்கிய ஆய்வுகள்  வியக்கத்தக்க வகையில் 85 விழுக்காட்டை  எட்டிப் பிடித்தன .

 செம்மொழி ிறுவனம் தொல்காப்பியர் கருத்தரங்கம்/பயிலரங்கம் என்ற வகையில் 40 ிகழ்ச்சிகளை டத்தியிரு்தது அப்போதெல்லாம் அறிஞர்கள் தொல்காப்பியரின் காலத்தையும் ாளையும் வரையறுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர். 2009இல் இவ்வேண்டுகோள் மிகவும் வலுப்பெற்ற ிலையில், கோவிலூர்த் திருமடத்தின் ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் ாச்சியப்ப தேசிகர் அவர்கள் அதனை முன்மொழியவே, செம்மொழித் தமிழாய்வு ிறுவனம் கோவிலூர்த் திருமடத்துடன் இணை்து 26, 27, 28 செப்டம்பர் 2009 ஆகிய ாட்களில் தொல்காப்பியர் கருத்தரங்கைக் கோவிலூரில் டத்தியது. சென்னைத் தலைகர்த் தமிழ்ச்சங்கம் முதல் குமரி மாவட்டத் தமிழ் அமைப்புக்கள் வரை பல்வேறு ிறுவனங்களும், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்களும் தனிிலையில் தொல்காப்பிய  அறிஞர்களும் இிகழ்ச்சியில் பங்கேற்றனர்; 28 பேர் கட்டுரை வழங்கினர்; ஏனையோர் உரை ிகழ்த்தினர்; வேனிற்காலத்தில் புலவர்கள் கூடல் மாகரில்  ஒருங்கிணை்து தமிழாய்்தனர் என்று கலித்தொகை சுட்டிய மரபுவழக்கத்தை ஒட்டித் தொல்காப்பியர் ாள் சித்திரை முழுமதி ாள்  என்பதில் கருத்தொருமை கொண்டனர்; ஆனால் தொல்காப்பியர் காலத்தில் அன்று. கிமு ஏழாயிரம் முதல் கிமு ூறு வரை எனக் கருத்து வேறுபாடு இரு்தது. பொதுக்கருத்து அடிப்படையில் தீர்மானத்துக்கு அறுதி வடிவம் கொடுக்க இரவு 9மணிக்கு அமர்்த தமிழண்ணலும் கட்டுரையாளரும் அவ்விளக்கத்தை எழுதிமுடித்தபோது விடியல் கோழி கூவிற்று. 8 பக்கம் கொண்ட அ்தத் தீர்மானம்(ப.1) + விளக்கம்(ப.7) ஆகியவற்றைத் தமிழண்ணல் 20 மணித்துளிகள் படித்து முன்மொழி்தார்; கட்டுரையாளர் அதனை வழிமொழிகையில் ிறைய வினாக்கணைகள் தொடுக்கப்பட்டதால் அவற்றிற்கெல்லாம் விடைகூறுதற்கு  ஒன்றரை மணிேரம் பிடித்தது. ிறைவாக, ஆய்வாளர்கள் தொல்காப்பியர் காலத்தைப் பொறுத்து அவரவர் கருத்தையே கொண்டாலும், கீழ்எல்லை 711 என்றும், தொல்காப்பியர் ாள்  சித்திரை முழுிலவுாள் என்றும்  ஒப்புகை செய்தனர்.

 அதற்குமேலும்  கட்டுரையாளர் தமது சொ்தக் கருத்தாகப் பின்வருவனவற்றை அவையினருக்குத் தெரிவித்தார், அவை வருமாறு: இன்றைய ிலையில் சித்திரை முழுிலவு ாள் என்பது (1) உலகெங்கும் புத்த பூர்ணிமா எனவும், (2) 1965 காலகட்டத்தில் சிலம்பொலி செல்லப்பனார், சேலம் (திருச்செங்கோடு) தி. மு. காளியண்ணன்  முயற்சியினால் திருச்செங்கோட்டில்  சிலப்பதிகாரவிழா- குறிப்பாகக் கண்ணகி விழா எனவும், (3) தமிழகத்தில்  சித்திரைத் திருவிழா எனவும்  கொண்டாடப்படுகின்றது. மேலும், இளங்கோ அடிகள் ாள் என அமையச் சிற்த ாள் சித்திரைப் பௌர்ணமி ஆகும்: “சிலப்பதிகாரத்தை முடிமன்னர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசியக் காப்பியம், கலைமிளிர் காப்பியம் என்று ாடெங்கும் பரப்பிய ம் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., அவர்கள், சென்னையில் 24.04.1956 இல்  செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் முதன் முதலாகச்  சென்னை மாவட்டத் தமிழரசுக் கழகத்தாரால் இளங்கோ விழாவைத்  தொடங்கி வைக்கச் செய்தார். 

  இ்த வகையிலும், சிலப்பதிகாரத்தில் 28 ாள் ிகழ்்த இ்திர விழவூரெடுத்த காதையில் குறிப்பிடப்படும்  சித்திரைத் திங்களின் சித்திரை முழுிலவைக் கருதியும்  எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு இ்திரா விழாவின் இறுதி ாளான ஏப்ரல் 24ம் ாளில் இளங்கோவடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. ” (இதயத்தை அள்ளும் இளங்கோ அடிகள், ஔவை அருள்).

உலக அளவிலும் தமிழகத்திலும் வேறு பல விழாக்கள் சித்திரை முழுிலவு ாளில்  இடம்பெறுவதால், ’பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’ எனும் ாட்டுப்புற மொழிக்கேற்ப, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் திருாளையும் அவற்றுடன் சேர்ப்பது சிறப்பாகாது.

 ஏனென்றால் தொல்காப்பியத்துக்கு மற்றெவற்றுக்கும் இல்லாத் தனிப்பெரும் புகழும் பெருமிதமும் உண்டு. இன்றியமையா எடுத்துக்காட்டாக இரண்டைக் குறிப்பிடலாம்: (1) 2000-ஆண்டில் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகப் மொழியியல்வாணர்கள் ஏ.எல்.பெக்கர், கெய்த் டெய்லர், இ்திய மொழியியலாளர் ஏ.கே இராமானுசன் ஆகியோர் ஒரு ேர்காணலில்  தொல்காப்பியத்தின் ுட்பங்கள் பலவற்றையும் விய்துரைத்தனர்; அமெரிக்க ூலகங்கள் தோறும் தொல்காப்பியர் சிலை ிறுவப்படவேண்டும் என்றனர்; ஏனென்றால், ’ தீர்முடிவாக, தொல்காப்பியர் ஒரு மொழியியல் குருாதர்’ (you would call (Tolkappiyar) a linguist’s ’ultimate Guru’)  எனப் புகழாரம் சூட்டினர் என்பதும் ினைவில் கொள்ளத்தக்கதாகும். (2) உலகச் செவ்வியல்மொழிகளுள் தமிழ்மொழி தனிச்சிறப்பும் தலைமையும் பெற்றது என மொழிஞாயிறு தேவேயப்பாவாணர் ஒப்பியன் மொழிூல் (1940), The Primary Classical Language of The World(1966) ூல்கள் எழுதியபோது இங்குள்ள மொழிூலாருள் பலர் முகஞ்சுளித்தனர்; ஆனால், மாற்றிலக்கணக் கோட்பாட்டுத் த்தை என மொழியியல் உலகம் மதித்துப்போற்றும் ோவாம்சோம்ஸ்கி, 22.11.2001 அன்று கல்கத்தாப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமது இலக்கணக் கோட்பாட்டை எடுத்தியம்பி அவற்றுடன் பொரு்துகிற ஒரு மொழி முதற்படியாகத் தமிழ்மொழி என  விளம்பியபோது அவர்கள் மௌனஞ்சாதித்தனர். சோம்ஸ்கியின் ஆய்வு முடிபுக்கு அடித்தளமாக அமை்தது தொல்காப்பியம்.

 இன்று உலகெங்கும் காதலர் ாள், த்தையர் ாள், அன்னையர் ாள் போன்றவை இ்தாளில்தான் எனத் திட்டவட்டமாக அமைகின்றன. அதுபோன்று தொல்காப்பியர் திருாளும் தனிாளில் அமையவேண்டும்; எனவே சித்திரை முதல்ாள் தொல்காப்பியர் திருாள் எனக் கொள்ளலாம். மேலும் முழுிலவுாளை அடுத்துத் தேய்பிறை தொடங்குகிறது. ‘கல்லெனக் கவின்பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் புல்லென்ற களம் போல’ எனக் கலித்தொகை(5) கூறுவதைப் போன்று, திருவிழா முடி்த  மறுாளே மகிழ்ச்சி அலைகள் மறை்து மனம் வெறிச்சோடுகிறது. அதுமட்டுமன்றிப் பஞ்சாங்கத்தின்படி முழுிலவுாள் ஆண்டுதோறும் மாறக்கூடியது. சித்திரைத் திங்களில் எப்போது வேண்டுமானாலும் அமையும். சித்திரை முதல்ாள் என்றால் அன்று முகிழ்க்கும் மகிழ்வுணர்வு பிறைிலா போல வளர்்து முழுிலாாள் வரையிலும் தொடர்்து முழுமைபெறும். ஆகவே சித்திரை முதல்ாளே தொல்காப்பியர் திருாள் என்பதை அறிஞர்கள் சி்திக்கலாம் என ஒரு வேண்டுகோளையும் கட்டுரையாளர் முன்வைத்தார். இதுகாறும் கட்டுரையாளரின் இக்கருத்து காற்றலைகளில் தவழ்்துகொண்டிரு்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப் பெற்றது. அதன் அறிவுரைஞர் ிலையில் பல ிகழ்ச்சிகளில் கல்துகொண்ட கட்டுரையாளர் தொல்காப்பியர் காலமும் ாளும் பற்றிச் சொற்பொழிவாற்றிய ஆய்வுரையை, அதன் செயலாளர், முனைவர் மு. இளங்கோவன் ஆவணப் படமாக்கி யிரு்தார். அண்மையில் வகுப்புத்தோழர் பேரா.செ.வை.சண்முகம் தொல்காப்பியர்ாள் பற்றிய கருத்தைப் பகிர்்து கொண்டார்;  பொள்ளாச்சி முனைவர் ா. கணேசன் (அமெரிக்கா) இதுபற்றிக் கட்டுரை எழுதத் தூண்டினார். இன்று தமிழர்கள் உலகெங்கணும் பரவியிருக்கிறார்கள்; அவர்கள் எ்த ாட்டில் வாழ்்தாலும் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதில் கருத்தூன்றுகிறார்கள்;  வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆண்டுதோறும் தமிழ்த் திருவிழா கொண்டாடுகின்றனர். அவர்கள் தனிச்சிறப்புமிக்க தொல்காப்பியருக்கு உலகளாவிய ிலையில் திட்டவட்டமாக தனித்துவமாகச் சித்திரை முதல்ாள் அமையவேண்டும் எனும் முயற்சியை முன்னெடுத்துச் செல்வதை அறிய மிக்க மகிழ்ச்சி, அவர்களுக்கு இனிய ல்வாழ்த்துக்கள்.

       ’சித்திரை முழுிலவுாள் என்று ஏற்கனவே உள்ளதை மாற்றலாமா’ எனச் சிலருக்கு ஐயம் எழலாம். 1921இல் திருவள்ளுவர்ாள் தைப்பொங்கலை ஒட்டியாள் எனத் திட்டப்படுத்திய கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய மறைமலையடிகளார், அதற்கு முன்பு வைகாசி,அனுசமே ’திருவள்ளுவர் திருாள்’ எனக் கொண்டாடியதையும் ினைவுகூர்தல் லமாகும். ’மாற்றம் ஒன்றே மாறாதது.’ தைப் பொங்கல் முதலிலே திருவள்ளுவர் தொடராண்டும், திருவள்ளுவர் திருாளும் அரசால் சிறப்புச் செய்யப்படுவது போலவே, சித்திரை முதல்ாள் ’தொல்காப்பியர் திருாள்’ என அரசாணையில் மலர வேண்டும். வாழையடி வாழையென உலகளாவிய இளைய தமிழர்கள் தாய்த்தமிழ் மொழி பயில என்றும் துணைசெய்யும்.

                              தொல்காப்பியர் திருாள் - சித்திரை முதல் ாள்!

             இம்முழக்கம்  யாண்டும் பரவுக!                       முயற்சிகள் யாவும் வெல்க!

முதல் தொல்காப்பியர் சிலை, குன்னூர், 10-செப்டம்பர்-1911

அரித்துவாரமங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத ராசாளியார் சாதனைச் சரித்திரம்

இந்த அரிய நூலை எனக்களித்த கரந்தை திரு. ஜெயக்குமார், தஞ்சை சரசுவதி மகால் வித்துவான் திரு. மணிமாறன் இருவருக்கும் என் நன்றி. 

Rajaliyar’s Tolkappiyar Library is near St. Anthony’s School, Coonoor. We can check the building and also see if the Coonoor Club, At. Anthony’s, Ooty long time residents have the photograph of Tolkappiyar that Tiru. Reghunatha Rajaliyar (Fellow, Theosophical Society & land lord, Haridvara Mangalam, Tanjore district) installed in the premises on 10th September 1911. One of the first instances when patrons honored Tamil poets in public thereby leading to Tamil renaissance in the 20th century.  Please read the two pages from the book compiled on the contributions of Tiru. Rajaliyar at the end of this posting.

தொல்காப்பியர் திருநாள் என அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டுப் பேரவை (http://fetna.org ) 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் யாண்டும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடுகிறது. முதல் தொல்காப்பியர் திருநாள் தொடர்பாக, பேரவை நடாத்திய ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் இலக்கியத் தமிழிசை நிகழ்ச்சி:  https://www.youtube.com/watch?v=kKETavfXgZY .தினமணியில் அச்சான கட்டுரை:  http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

மலைமீது தொல்காப்பியன் சிலையை வைத்தாய்!
   மனதினிலே நீங்காது நிலைத்து நின்றாய்!

 ~நா. கணேசன்

         வாழ்த்து 

   வெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
   எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
   வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
   தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!

                                                                             - பேரா. சு. பசுபதி, கனடா

10-9-1911-இல் நீலகிரி மாவட்டக் குன்னூரில் உள்ள 'இராஜாளியார்' நூல் நிலையத்தின் முன்பு தொல்காப்பியரின் உருவச் சிலைதனை நிறுவித் திறந்துவைத்த இராஜாளியார் அவர்கட்கு நீலகிரி மக்கள் வாசித்தளித்த வரவேற்புரை.

                                           ஆசிரிய விருத்தம்

1. அந்நாளில் சுயநலம்வேட் டொருமுனியைத் தென்மலைமேல்
        அரன்வைத் திட்டான்
பன்னாளும் பொதுநலம்வேட் டரித்வார மங்கலக்கோ
        பால சாமி
பின்னாளில் தமிழ்க்கடலுண்டு  இமயமலை யமிழ்த்துதொல்காப்
      பியர்பேர் பூண்ட
தென்னாரும் ஒருமுனியை நீலமலை மேல்வைத்தான்
      சிறப்பா மீதே

குறிப்புரை :

மேலைக் கடல் உண்டு, விந்தமலை தாழ்த்திய அகத்தியன் போல் தமிழ்க்கடல் உண்டு , வடதிசை இமயமலையை அழுத்தியவன்  தொல்காப்பியன் என்ற பெயர் பூண்டவன்;  தென்திசை  நிறைந்த புகழுடைய ஒருமுனியாகிய  தொல்காப்பியனை  நீலகிரி மேலே ஏற்றிச்   சிலையாக  வைத்தார்  இராசாளியார்.   

சிவபெருமான் சுயநலத்திற்காக, மீனாட்சியைத் திருமணம் செய்தற் பொருட்டு, அகத்தியரைத்  தென்மலை பொதிகைக்கு அனுப்பினான். என்றும் பொதுநலம் கருதும் கோபாலசாமி, பின்னாளில் தமிழ்க்கடல் உண்டு இமயமலையை அழுத்துமாறு இலக்கணம் செய்த தொல்காப்பியரை நீலமலைமேல் வைத்தான். இது சிறப்பானது.

2. ஆசிரியன் குறுமுனிவன் விந்தகிரி தாழ்த்தினன்றொட்
       டவன்முற் சீடன்
தேசவிரும் நீலகிரி யுயர்த்தினன்றான் வீற்றிருந்தே
       திருமா லுக்குத்
தாசரெனுங் கோபால சாமிரகு நாதரா
      சாளி யார்செய்
நேசமிகு உதவிபெறி லெவருமெத னையுமுயர்த்தல்
     நேரா தேயோ?

தொல்காப்பியருக்கு ஆசிரியராகிய அகத்தியர் விந்திய மலையைத் தாழ்த்தினார். ஆனால் அவரைத் தொடர்ந்து இலக்கணஞ் செய்த முதற் சீடன் தொல்காப்பியர் தேசு அவிரும்(ஒளி வீசும்) நீலமலையைத் தான் வீற்றிருப்பதன் மூலம் உயர்த்திவிட்டார். நட்பு மிகும் இராசாளியார் செய்கிற உதவியைப் பெற்றால் எவரும் எதையும் உயர்த்த மாட்டார்களா என்ன? 

3. நீலகிரி குன்னூரில் தமிழபிமா னச்செல்வர்
        நிலவ நாட்டு
மேலுமிசை ராசாளி யார்புத்த கச்சாலை
     யெவற்றி னுக்கு
மேலதென வதனிடையே காட்டுமதன்  றியுமலைமேல்
      விளக்க மென்னு
ஞாலமொழி யுங்காட்டு நாமெடுத்துக் காட்டலெவன்?
      நாட்டுங் காலே

தமிழ் அபிமானி இராசாளியாரின் புத்தகசாலையில் மட்டுமன்றி குன்றூர் (குன்னூர்) மலைமேலே தொல்காப்பியர் சிலையை அவர் நாட்டும் போது ’குன்றின்மேல் இட்ட விளக்கு’ என்னும் பழமொழிக்கு ஏற்ப நாடறியும். வெளிப்படையாக விளங்கும் இச் செய்திகளை நாம் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ? வேண்டா என்றவாறு.

இது காய் காய் காய் காய் மா தேமா  என்னும் அமைப்புடைய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

(விளக்கிய கவிமாமணி இலந்தை, புலவர் இராமமூர்த்தி இருவருக்கும் என் நன்றி.)

10-செப்டம்பர்-1911 உலகில் முதன்முதலாக, நீலகிரிக் குன்றூரில் தொல்காப்பியர்க்குச் சிலை ராஜாளியார் நிறுவினார் எனக் குறிப்பிடும் நேரிசை வெண்பா.

               வாழ்த்து

 

திருமால் திருப்பதியெண் சேர்த்துமே லொன்று

வருநாளில் குன்னூரில் வாழுந் திருவாளர்

நாட்டியரா சாளியார் நற்புத் தகசாலை

நாட்டினிலே வாழ்கநெடு நாள்!

 

குறிப்பு:

விஷ்ணு திருப்பதி எண் = 108, 108+1 = 109.

அதாவது:

வருஷம் - விரோதிகிருது - 45

மாதம் - ஆவணி - 5

தேதி - 25

கிழமை - ஞாயிறு - 1

நட்சத்திரம் - உத்திரட்டாதி - 26

இலக்கினம் - துலாம் - 7

45 + 5 + 25 + 1 + 26 + 7 = 109.

இதற்குச் சரியான ஆங்கில காலண்டர் தேதி: 10-செப்டம்பர்-1911 ஆகும்.

https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=10/09/1911

 ~ நா. கணேசன்