கடுவாய் வளைவு, ‘தீபம்’ நா. பார்த்தசாரதி (1963-க்கு முன்)

கடுவாய் வளைவு

‘தீபம்’ நா. பார்த்தசாரதி (1963-க்கு முன்)

செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் போது, புனலூர் வரையிலும், மலைத்தொடர்களின் நடுவேயும், பள்ளத்தாக்குப் பகுதியிலுமாக இயற்கை வளமிக்க காட்சிகளுக்கு ஊடே புகைவண்டி செல்கிறது. இந்த இயற்கைக் காட்சிகளில் மயங்கிவிட்டவர்கள், செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை எத்தனை ஸ்டேஷன்கள் இருக்கின்றன, அவைகளுக்கு என்னென்ன பெயர்கள் என்பதையெல்லாம் மறந்துவிடுவதுதான் வழக்கம் !

இந்த வழியில் மலையடிவாரத்துப் பள்ளத்தாக்கில் பள்ள பகவதியாபுரம் என்ற முதல் ஸ்டேஷனை அடுத்து, மலைமேல் உள்ள ஆரியங்காவு என்ற ஸ்டேஷன் இருக்கிறது. இவ்விரண்டு ஸ்டேஷன்களுக்கும் நடுவில் முக்கால் மைல் தொலைவு இருளடைந்த மலைக் குகையினுள்ளேயே புகைவண்டி செல்வதை மட்டும் எவரும் நிச்சயமாக மறந்திருக்க மாட்டார்கள்.

ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவில் செங்கோட்டை தென்காசிப் பகுதிகளில் பிரசித்தமானது. வரப்பிரசாத சக்தி மிகுந்த தெய்வம் என்று மக்கள் சாஸ்தா கோவிலுக்குச் சென்று வருகிறார்கள்.

குற்றாலத்தில் சீஸனுக்காகப் போய்த் தங்கியிருந்தேன். என்னுடைய செங்கோட்டை நண்பர் சிவனுக் கரையாளரைத் தற்செயலாக அருவிக்கரையில் சந்திக்க நேர்ந்தது.

''குற்றாலம் குற்றாலம் என்று இங்கேயே கிடந்து மடிகிறீர்களே, ஸார்! நாளைக்கு ஆரியங்காவு வரையில் போய்விட்டு வரலாமே" என்றார் அவர்.

நான் அதற்கு இணங்கினேன். கரையாளர் நிறைந்த தெய்வ பக்தியுடையவர். தமிழ் நாட்டின் பெருமைக்குக் காரணமான பழம் பண்பாட்டை அழிக்கின்ற எந்தச் செயலையும் துணிந்து வெறுப்பவர். புளியரை, ஆரியங்காவு, பகவதியாபுரம் முதலிய பகுதிகளில், எஸ்டேட மானேஜராக இருந்தவர். அந்த நாட்களில் வருமானத்தில் 'நாலுகாசு' மீதம் பிடித்துச் சிறிது சிறிதாக உள்ளூரிலேயே நிலபுலங்களை வாங்கிச் சேர்த்துக் கொண்டபின், வேலையை விட்டுவிட்டார். இவர் சுபாவத்தில் நல்ல மனிதர்.

மறுநாள் காலை, நானும் சிவனுக்கரையாளரும் செங்கோட்டையிலிருந்து காலை ஒன்பது மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் பாசஞ்ஸரில் ஆரியங்காவுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

ஆரியங்காவு ஸ்டேஷனில் இறங்கியதும் நான் பிரமித்துப் போனேன், நாம் தமிழ் நாட்டிலுள்ள ஒரு மலைத்தொடரின் நடுவேதான் இருக்கிறோமா? அல்லது காஷ்மீரில் ஏரிக்கரையிலுள்ள பழத் தோட்டங்களின் நடுவிலோ, அல்லது குலு பள்ளத்தாக்கிலோ இருக்கிறோமா?' என்று எனக்குச் சந்தேகமாகப் போய்விட்டது!

எத்தனை எத்தனை விதமான மரங்கள்? எத்தனை மலர்கள்! எவ்வளவு நிறங்கள்! எத்தனை வகைப் பழ மரங்கள்! எவ்வளவு செடி கொடிகள்! எங்கும் ஒரே பசுமை! அங்கங்கே அற்புதமான கீத ஓசையோடு கலகலவெனப் பாயும் நீரூற்றுகள்; சுற்றிலும் மேகமென்கின்ற மெல்லிய வெள்ளைச் சல்லாத் துணியைப் போர்த்து விளங்கும் மலைச் சிகரங்கள் அழகு! அழகு! ஒரே இயற்கையின் எழில்!

"கரையாளரே! சாஸ்தாவைக் கும்பிடுவதற்கு முன்னால், முதலில் உம்மை ஒருதரம் கும்பிடலாம் போலத் தோன்றுகிறது ஐயா! நேற்றுவரை என்னால் கற்பனைகூடச் செய்திருக்க முடியாத இடத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டீரே!"

"இப்பொழுதே அதிகமாகப் புகழ்ந்து விடாதீர்கள் ஸார்! இன்னும் பிரமாதமான இடங்களை எல்லாம் இனிமேல் தான் பார்க்கப் போகிறோம். முக்கியமாக இதன் கிழக்கே தேயிலைத் தோட்டங்களுக்குப் பக்கத்தில், 'கடுவாய் வளைவு' என்று ஒரு இடமிருக்கிறது. அது இயற்கை யழகின் சிகரம் மட்டுமல்ல, பயங்கர நிகழ்ச்சிகளின் சிகரமும் கூட."

"ஆமாம். பயங்கரத்தின் சிகரமாக விளங்குவதற்கு அப்படி அங்கே என்னதான் ஆபத்திருக்கிறது?"

"பயந்துவிடாதீர்கள், ஸார்! அது மிக அடர்த்தியான மலைப்பகுதி. இந்தப் பக்கத்தில் இதற்கு மற்றொரு பெயர் 'புலிகளின் கோட்டை' என்பது. இங்கே வேட்டைக்கு வந்து போகிற வெள்ளைக்காரர்கள் வைத்த பேர் ஸார், அது!"

"ஐயையோ! வேண்டாம் கரையாளரே! நான் சினிமாவில் நிறையப் புலிகளைப் பார்த்திருக்கிறேனே...'

''முதலில் கோவிலுக்குப் போகலாம். அடுத்த திட்டத்தைப் பற்றிப் பின்பு யோசிப்போம். நீங்கள் இப்போதிருந்தே நடுங்க வேண்டாம்!"

ஆரியங்காவு ரயில்வே ஸ்டேஷன் ஊரைவிட மேட்டின் மேல் அமைந்திருந்த தனால், படி வழியாக இறங்கித் திருவனந்தபுரத்திற்கு மலை வழியாகச் செல்லும் சாலை மேல் நடந்தோம். பத்து, இருபது கெஜ தூரம் சென்றதும் ஐந்தாறு டீக் கடைகளுக்கு நடுவே, செம்மண்பட்டை அடித்த வாயில் ஒன்று தென்பட்டது. பகலிலேயே கும்மென்று இருள் சூழுமாறு மரஞ்செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. கூரை வேய்ந்து தாழ்வான மண் சுவர்களால் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கிராமாந்தரத்து டீக்கடைகளில் மலையாளத் தினப் பத்திரிகைகளைப் படித்துக்கொண்டு, சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். தமிழும் மலையாளமும் கலந்த கதம்ப பாஷையில் அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. சாரல் விழுந்தப்படி குளிர் மூட்டமாக இருந்த அந்தப் பருவச் சூழ்நிலையில், உடம்புக்குச் சூடேற்றுவதற்காக எத்தனை டீ வேண்டுமானாலும் குடிக்கலாம்! டீக் கடைகளில் பத்திரிகையும் கையுமாகக் கூடி அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்கள், கால் மணி நேரத்திற்கு ஒரு டீ வீதம் பருகிக் கடைக்காரர்கள் 'நம்பிக்கை' மோசம் போகாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கரையாளரை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் போலும். கடையில் உட்கார்ந்து, ஊர்வம்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் அவரைக் கண்டதும் மரியாதையோடு எழுந்திருந்து வணங்கி வரவேற்ற விதத்திலிருந்தே அது தெரிந்தது. கரையாளர் மலையாளத்தில் அவர்களோடு ஏதோ பேசினார்.

சிறிது நேரத்தில் ஒரு ஜீப் வந்தது. அதை எஸ்டேட் கட்டிடத்திலிருந்து 'டிரைவ்' செய்து கொண்டு வந்த மலையாளி, எங்கள் அருகில் கொண்டுவந்து நிறுத்தினான். கரையாளரும் நானும் ஏறிக்கொண்டோம். அவர் அவனிடம் மலையாளத்தில் ஏதோ கூறினார். ஜீப் புறப்பட்டது. ஏற்றமும் இறக்கமுமான மலை ரஸ்தாவில், வானளாவி வளர்ந்திருந்த தேக்கமரங்களின் இடையே குளிர்ந்த காற்று முகத்தில் வந்து மோத, அது ஊர்ந்து சென்றது.

"ஸார் ! புலிகளுக்கும் அவைகள் இருக்கின்ற இடத்துக்கும் தானே நீங்கள் பயப்படுகிறீர்கள்? புலிகளைப் பற்றிய கதையைச் சொன்னால்கூட நீங்கள் பயப்படுவீர்களோ ?''

சிவனுக்கரையாளர் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போதே பேச்சைத் தொடங்கினார் கதை என்றால் நானா சும்மா விடுகிறவன்?

"ஏன்? ஏதாவது ரெடிமேடாக வைத்திருக்கிறீர்களா? இருந்தால் சொல்லுங்கள்!'' கரையாளர் தமக்கே உரிய அனுபவ பாணியில் கூற ஆரம்பித்தார்.

''புலிகளின் கோட்டை' என்று கூறினேனே கடுவாய் வளைவு' பிரதேசத்தைப் பற்றி. அந்த இடத்தினிடையேதான் எங்கள் 'எஸ்டேட் பங்களா' அமைந்திருந்தது. 'பிரவிருத்தி' என்று வந்த பிறகு ஆபத்துள்ள வனாந்தரம் ஆபத்தில்லாத நகர வாழ்வு என்று வித்தியாசம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? எங்காவது வாழ்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது?

பங்களாவைச் சுற்றி ஆழமான குழி வெட்டியிருந்தார்கள். கதவுகள் எல்லாம் இரும்பால் அமைக்கப்பட்டிருந்தன. ஜன்னல்களை உயரமாகத் தரைக்கெட்டாமல் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று துப்பாக்கிகளும் பங்களாவில் இருந்தன. இவ்வளவு தற்காப்புச் சாதனங்களையும் நம்பித்தான், நானும் குடும்பத்தோடு அந்தப் பங்களாவில் வசிப்பதற்குச் சம்மதித்தேன்.

ஆனால், இவர்கள் கொடுத்திருந்த இந்த ஆயுதங்களை எல்லாம் விட உன்னதமான ஓர் ஆயுதம் என்னிடம் இருந்தது. அது கடவுளால் எனக்குக் கொடுக்கப்பட்டது. அதுதான் என் சொந்த மனோதைரியம்.

என்ன தலைபோகிற காரியம் இருந்தாலும், விடிந்து பத்து மணியாவதற்கு முன்பும் மாலை ஐந்தரை மணிக்குப் பின்பும் பங்களா வாசலைக் கடந்து செல்வதில்லை; செல்லக் கூடாது. கண்டிப்பாக இதை அமுல் நடத்தினோம்.

எஸ்டேட் காரியமாகக் கொல்லம், புனலூர், கொட்டாரக்கரை என்று நான் வெளியூர்களுக்கு அடிக்கடி போய் வரவேண்டியிருக்கும். சில சமயங்களில் இரவு ரெயிலில் ஊருக்குத் திரும்புவேன். ஆனால், அப்படித் திரும்புகிற நாட்களில் ஆரியங்காவு ஸ்டேஷனிலேயே இறங்கிப் படுத்துக் கொள்வேனே தவிர, இரவில் மலை வழியாக எஸ்டேட் பங்களாவுக்குப் போகமாட்டேன். விடிந்த பிறகு பத்து மணிக்கு மேல்தான் போவேன். இந்த வழக்கத்துக்குச் சோதனை போல் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

அப்போது இங்கே மழை சீஸன் கைவசமிருந்த, உலர்த்திப் பாடம் செய்யப்பட்ட தேயிலையை மேலும் வைத்துக் கொண்டிருந்தால் கெட்டுப் போய்விடும். எப்படி யாவது மொத்த விற்பனைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் திரும்ப வேண்டும் என்று நான் வெளியூர்ச் சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்தேன்.

ஐந்தாறு நாட்களாக வெளியூர்களில் சுற்றினேன். கடைசியில் கொல்லத்திலுள்ள 'ஸோல் ஏஜண்ட்' ஒருவர் அகப்பட்டார். மறுநாள் எழுத்து மூலம் அவரிடம் உடன்படிக்கை செய்து கொண்டு, ஊர் திரும்பலாம் என்று இருந்தேன் நான்.

ஆனால், என்னுடைய துரதிஷ்டமோ, என்னவோ அன்று மாலையே ஊருக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ஊரிலிருந்து என் மனைவி தந்தியடித்திருந்தாள்.

"குழந்தை பகவதிக்கு மலேரியாக் காய்ச்சல். அபாயம், உடனே வரவும்.'' உடன்படிக்கையைத் தபால் மூலம் செய்து கொள்ளலாம் என்றெண்ணித் தந்தி கிடைத்த உடனே ரெயிலேறி விட்டேன். குழந்தையின் காய்ச்சல் தீர்ந்து நல்லபடி ஆக வேண்டுமே என்ற பிராத்தனையைத் தவிர, என் மனம் வேறெதையுமே அப்பொழுது நினைக்கவில்லை. 'குழந்தையின் உயிருக்கே நாம் போவதற்குள் ஆபத்து நேர்ந்து விடுமோ?' என்ற ஒரு பயமும் மனத்தில் எழுந்து குழப்பிக்கொண்டிருந்தது.

ஆரியங்காவு ஸ்டேஷனில் நான் இறங்கும் போது இரவு மணி ஏழேகால். நல்ல நிலாக் காலமானாலும், மழை மேகம் இருளாகக் கப்பி வான வெளியை மூடியிருந்தது. 'இஇ' என்ற ஓசையைத் தவிர நிசப்தமும், இருட்டும் குடி கொண்டிருந்தன. சாதாரணமாக நான் ஊருக்குத் திரும்பியிருந்தால் அப்படியே ஸ்டேஷன் 'வெயிட்டிங் ரூமி'ல் படுத்துக் கொண்டிருந்து விட்டுக் காலையில்தான் போவேன்.

ஆனால், அன்றோ குழந்தை பகவதியின் மலேரியாக் காய்ச்சல் என்னைத் துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தது. என்ன ஆனாலும் சரி, இப்போதே கடுவாய் வளைவுக்குப் போய் எஸ்டேட் பங்களாவை அடைந்து விடுவது' என்று தீர்மானித்துக்கொண்டேன்.

 அதிருஷ்டவசமாக, என் கைப் பையில் 'மூன்று ஸெல் டார்ச் லைட்' ஒன்று இருந்தது. வெளியூர்களுக்குச் செல்லும்போது, அதை நான் கையோடு கொண்டு போவது வழக்கம்.

மனத்தைத் திடப்படுத்திக் கொண்டேன். உடலையும் உயிரையும் சர்வத்தையும் விதிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, 'கடுவாய் வளைவு'க்குச் செல்லும் மலை ரஸ்தாவில் நடந்தேன்.

மனம் என்னவோ, நான் தைரியமாகக் காலை எட்டி வைத்து வேகமாய் நடப்பதாக எண்ணிக்கொண்டிருந்தது! ஆனால், உண்மையில் கால்களின் நடையில் ஒரு நடுக்கம், ஒரு தயக்கம் இருப்பதை நானே உணரமுடிந்தது. தேள் என்று தெரிந்துகொண்டே அதன் கொடுக்கைத் தடவிப் பார்ப்பது போலிருந்தது என் செயல். இதை நீங்கள் அசட்டுத் துணிச்சல் என்பீர்களோ, அல்லது பாராட்ட வேண்டிய தைரியம் என்பீர்களோ, எனக்குத் தெரியாது.

'படக் படக்' என்று கொள்ளை போகிறாற் போல் அடித்துக் கொள்ளும் மனமும், நடக்கத் தயங்கிக் கொண்டே நடக்கும் கால்களுமாக நான் சென்று கொண்டிருந்தேன். கால்கள் பழக்கமான வழியில் தடம் தெரிந்து நடந்து கொண்டிருந்தன. 'டார்ச்சுலைட்' கையில் இருந்ததே ஒழிய, அதை உபயோகிக்கவே எனக்குப் பயமாக இருந்தது. வெளிச்சமில்லாமல் இருட்டிலேயே நடந்துவிட்டால் அபாயமோ , ஆபத்தோ எதையுமே பார்க்காமலேயே போய்விடலாம். வழியோரத்தில் டார்ச்சை அடித்துப் பார்க்கப் போய், அங்கே ஏதாவது ஒரு பயங்கர மிருகம் முடங்கிக் கிடப்பதைக் கண்கள் கண்டுவிட்டால், பின்பு கால்கள் மரத்துப் போய் அப்படியே நிற்கும்படி ஆகிவிடும்!

வழியின் பயங்கரத் தன்மையாலும், குழந்தையைப் பற்றிய கவலையாலும் என் மனம் இருண்டிருந்தது. வழியும் இருண்டிருந்ததால், மனம் இந்த இருட்டை விரும்பியது.

சர்வ சாதாரணமாகப் பயங்கர மிருகங்கள் பழகுகிற இடமாகையினால், தொலைவிலும் சமீபத்திலும் அவைகள் இருப்பதற்குரிய முழக்கங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு முழக்கம் கேட்டு முடியும் போதும், என் உடலில் உள்ள மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும். காற்றினால் சலசலக்கும் புதர்களிலிருந்து கொடிய மிருகம் ஒன்று சிலிர்த்துக்கொண்டு கிளம்புவது போல மனத்தில் பயங்கரக் கற்பனைகள் தாமாகவே தோன்றிவிடும்.

"ஆயிற்று ! இதோ இந்த மலைத் திருப்பத்தில் திரும்பி, கிழக்கே பதினைந்து - இருபது கெஜம் நடந்துவிட்டால் கடுவாய் வளைவு', 'எஸ்டேட் பங்களா' கண்ணுக்குத் தெரியும். ஆனால் திருப்பமும், பதினைந்து இருபது கெஜ தூரமும் சாமானியமான இடங்களா? நினைக்கும் போதே உடம்பு புல்லரித்தது.

திருப்பத்தின் முகப்பில் யாரோ பெரிய தேக்கு மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தார்கள் போலும். காட்டிலாகா அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இரவோடிரவாகத் தேக்கு மரம் வெட்டிக்கொண்டு போகும் மரத் திருடர்கள் அந்தப் பகுதியில் அதிகம். வெட்டுகிற ஓசைமிக அருகில் கேட்டதால், நான் நடந்து கொண்டிருந்த திருப்பத்திற்கு இருபது இருபத்தைந்து தப்படித் தொலைவில் அவர்கள் வெட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று என்னால் அனுமானிக்க முடிந்தது. அவர்களையும், அவர்களுடைய மரம் திருடும் சாமர்த்தியத்தையும் பற்றி வியந்துகொண்டே திருப்பத்தை அடைந்தேன். வெட்டுவதற்காக வெளிச்சம் வேண்டிச் சிறிதாகத் தீ மூட்டியிருந்தனர் அவர்கள்.

திடுதிடுப்பென்று ஒருவிதமான முடை நாற்றம் என்னைத் திணற அடித்தது. நான் திடுக்கிட்டேன். 'எந்த மிருகம் மிக அருகில் இருந்தால் அந்த மாதிரி மாமிச ரத்தமுடைய நாற்றம் வரும்' என்பது எனக்குத் தெரியும். அந்தத் திருப்பத்தின் பெயரை ஒட்டித்தான் காடுவாய் வளைவு' என்ற பெயரே அந்தப் பிரதேசத்திற்கு ஏற்பட்டது. என் உடல் வெட வெடவென்று நடுங்கியது. கைகால்கள் உதறலெடுத்தன. உடம்பில் அங்கங்கே ரத்தம் ஓடியதா உறைந்து போய்விட்டதா என்றே தெரியவில்லை! கண்கள் மிரள மிரளச் சுற்றிலும் நோக்கின. எதற்கு நான் பயந்து நடுங்கினேனோ 'அது' ரஸ்தாவின் மேலேயே வாலை முறுக்கியவாறு நின்று கொண்டிருந்தது!

மேட்டில் தேக்க மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு நேர் கீழே, ரஸ்தாவின் மேல் 'அது' நின்று கொண்டிருந்ததனால், அவர்கள் மூட்டியிருந்த தீ வெளிச்சத்தின் மங்கலான ஒளியில் நான் அதைக் காணமுடிந்தது.

மனிதவாடை தட்டுப் பட்டுத்தான் 'அது' அந்த இடத்தைவிட்டுப் போகாமல், அடித்த முளைமாதிரி வாலை முறுக்கிக் கொண்டு நிற்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பிரகாசமாக எரியும் இரண்டு சிவப்பு மின்சார விளக்குகளைப் போன்ற அந்தக் கண்கள், மரம் வெட்டும் ஓசை வந்த மேட்டை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் மூட்டியிருந்த தீயே அதை அங்கே தடுத்து நிறுத்தியிருக்கிறது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. தவிர, திருட வந்திருக்கும் அவர்கள் துப்பாக்கி முதலிய ஆயுத வசதிகளோடுதான் இந்த நேரத்தில் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியும்! துப்பாக்கியால் சுடும் போது கூடச் சுடுபவர் மேல் ஆக்ரோஷமாக எதிர்த்துப் பாயும் மிருகத் தன்மை வாய்ந்த மிருகமது. ஆனால் தீ எரிந்து கொண்டிருந்தால் மட்டும் அதைக் கண்டு தயங்கி நின்றுவிடும் சுபாவம் அந்த மிருகத்துக்கு உண்டு.

ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் அப்படியே நின்றேன் நான். நாக்கு அடித் தொண்டையில் ஒட்டிக் கொண்டது. எங்கே ஓடுவது? எப்படித் தப்புவது?' எதையுமே பிரக்ஞையோடு சிந்திக்க முடியவில்லை என்னால் 'இன்றைக்கு நம்முடைய உயிர் இந்தக் கடுவாய்ப் புலியால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்பதுதான் ஈசுவர சித்தம் போலும்' என்றெண்ணி, ஒடுங்கிவிட்டது என் உணர்வு.

கை நடுக்கத்தால் கையிலிருந்த 'டார்ச்' கீழே விழுந்து ஓசை உண்டாக்கிவிட்டது. சிறிய ஓசைதான்! ஆனால் அந்தப் பயங்கர மிருகத்தின் கூரிய செவிகளுக்கு அது போதாதா, நான் நிற்பதைத் தெரிந்து கொள்வதற்கு?

அப்பப்பா! மேட்டைப் பார்த்து வாலை முறுக்கிக் கொண்டிருந்த அந்த மிருகம் எவ்வளவு வேகமாக என் பக்கம் திரும்பியது என்று நினைக்கிறீர்கள்? இப்போது நினைத்தாலும் குடல் நடுங்குகிறது. தீப்பந்தங்களின் ஜ்வாலை போன்ற கண்களுடன் 'அது' என்னைப் பார்த்துப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. நான் உயிரோடு செத்துக் கொண்டிருந்தேன். அது கொல்வதற்கு முன்பே - அது என்னை அறைந்து கொல்ல யத்தனிப்பதற்கு முன்னால் 'பயம்' என்ற கடுவாய் என் தைரியத்தை அறைந்து கொன்று விட்டது!

வாட்ட சாட்டமான அதன் உடல் பின்னுக்குப் பதுங்கி வளைந்து பாயத் தயாராகப் பம்மியது. நான் கண்களை இறுக மூடிக் கொண்டேன். அலற வேண்டும் போல இருந்தது. நா எழவில்லை. அடுத்த நொடி என் மார்பிலும் முகத்திலும் பிச்சுவாக் கத்திகளைப் போன்ற கூரிய நகங்கள் மோதிக் கிழிக்கும் என்று எதிர்பார்த்தேன். எனக்கும் அதற்கும் இடையில் பத்து அல்லது பன்னிரண்டடி இடைவெளி இருக்கலாம்.

ஒரு நொடியாயிற்று! 'சடசட'வென்று ஏதோ முறிந்து விழும் ஓசை என் செவிகளை அதிரச் செய்தது. அதையடுத்து, ஒரு புலியின் பெரிய முழக்கம், வயிற்றிலே ஐந்தாறு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததும் பரிதாபகரமாக அலறுமே அந்த மாதிரி அலறல்! காடே கிடுகிடுத்தது.

'என்மேல் புலி பாயவில்லை. நான் உயிரோடுதான் இருக்கிறேன்' என்பதை உறுதி செய்து கொண்ட பின், மெல்லக் கண்களைத் திறந்தேன். ஈனஸ்வரத்தில் அதே மிருகத்தின் வேதனை அலறல் என் செவிகளில் கேட்டுக் கொண்டிருந்தது. எதிரே பார்த்தேன், என்ன கோரம்? அந்தப் பயங்கர மிருகத்தின் உடல் பருத்த தேக்கு மரக்கட்டைக்கிடையில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்தது. சுற்றி ரத்த வெள்ளம் தேங்கியிருந்தது. ஈனஸ்வரத்தில் வந்து கொண்டிருந்த மெல்லிய அலறலும் சிறிது சிறிதாக ஓய்ந்தது.

தரிசு நிலத்தில் பாய்ந்த வாய்க்கால் தண்ணீர்போல், ஏறக்குறைய பிரேத மாகிவிட்ட என் உடம்பில் தைரியம் 'குபுகுபு' வென்று எங்கிருந்தோ வந்தது! சிறிது நாழிகைக்கு முன் துப்புரவாக வெளியேறியிருந்த பொருளல்லவா அது?

அப்போது என் மனத்தில் என்ன தோன்றிற்று தெரியுமா? ஆண்டவன் தான் எவ்வளவு நல்லவன்? க்ஷணப்போதில் குறுக்கிட்டு விளைவை எப்படி மாற்றிவிட்டான்! திருடர்கள் வெட்டிக் கொண்டிருந்த தேக்கு மரமாக இருந்து, சரியாகப் புலி என்மேல் பாயப் பதுங்கிய அதே நேரத்தில், தான் வெட்டுண்டு முறிந்து, அதன் மேல் பாய்ந்து ஆண்டவனே எனக்காக ஓர் அற்புதமான திருவிளையாடலை நடத்திவிட்டது போலத் தோன்றியது எனக்கு. 'அழிந்துவிட்டோம்' என்று கருதிய என் உயிரை, அழியாமற் காத்தும், 'அழித்துவிடப் போகிறோம்' என்று கருதிப் பாய்ந்த அதன் உயிரை அழியச் செய்தும், அந்த இரவில் விதியின் மூலம் விளையாடிய இறைவனைக் கைகூப்பி வணங்கினேன்.

துணிச்சலோடு கீழே விழுந்திருந்த டார்ச்சை எடுத்து மரத்தை நோக்கி ஒளியைப் பரவச் செய்தேன். அருகில் சென்று பார்த்தேன். சரியாகப் புலியின் நடு வயிற்றில் விழுந்திருந்தது மரம். மூன்று யானைகள் இருக்கவேண்டிய அவ்வளவு சுற்றுப் பருமன் உடைய மரம் அது.

புலி நல்ல ஜாதிக் கடுவாய். ஆகையால் பார்ப்பதற்குப் பதினாறடி வேங்கை மாதிரி இருந்தது. நசுங்கிச் செத்துக் கிடந்த அதைப் பார்க்கும்போது, 'மனித உயிருக்கு ஆண்டவன் தான் எஜமானன்! அவனுடைய ஆணை, விதி என்ற வடிவில் துணை செய்தாலொழிய, எந்த ஒரு துஷ்டஜந்துவும் மனிதனைக் கொல்ல முடியாது!' - இப்படி ஓடியது என் எண்ணம்.

மேலும், அங்கே தாமதித்தால் மரத்தை வெட்டித் தள்ளியவர்கள் வருவார்கள்; அவர்கள் கண்களில் தென்பட்டால், விசாரணைக்கு ஆளாக நேரிடும். அதனால் உடனே திருப்பத்தைக் கடந்து பங்களா காம்பவுண்டை நோக்கி நடந்தேன். போகும் போது அந்த மரத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது எனக்கு.

அப்படியே செய்துவிட்டு, மலேரியாக் காய்ச்சலினால் துன்புறுகிற என் குழந்தையைக் காணத் துடிக்கும் ஆவலோடு விரைவாகச் சென்றேன்" கரையாளர் கூறி முடித்தார்.

ஒரு பெரிய பங்களாவின் முன் போய் நின்றது. ஒரு மலைத் திருப்பத்தை அடுத்து அடர்ந்த மலைப் பகுதியினிடையே அது அமைந்திருந்தது. கரையாளர் கூறிய சம்பவத்தில் வந்த பங்களா மாதிரியே, சுற்றி ஆழமான குழிவெட்டியிருந்தது. அடர்த்தி என்றால் அப்படி இப்படிப்பட்ட அடர்த்தி இல்லை. இருண்டு அடர்ந்த மலைப்பகுதி அது.

கரையாளர் என்னைப் பங்களாவிற்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்தவர்கள் அன்போடு வரவேற்றனர். தேநீரும் நேந்திரங்காய் வறுவலும் சாப்பிடக் கிடைத்தன.

"இந்த மலைப்பகுதிகளில் இயற்கை அழகு எப்படி இருக்கிறது? இங்கே இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?" கரையாளர் தேநீரைப் பருகிவிட்டு என்னைப் பார்த்துக் கேட்டார்.

"ஆகா! கட்டாயம் பார்க்கலாம். எவ்வளவு அற்புதமான இடமாக இருக்கிறது? என்ன 'ஸீனரிகள்'!"

தேனீரைக் குடிப்பதற்குக் கையிலெடுத்துக் கொண்டே கூறி வியந்தேன் நான்.

"இந்த இடத்தின் பேர் என்ன தெரியுமா?"

"என்னவாம்? சொல்லுங்களேன்.''

''இதுதான் சார் கடுவாய் வளைவு!''

பயத்தில் தேநீர்க் கிண்ணத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டேன். என் மேலெல்லாம் டீ சிந்திவிட்டது. கதைகளில் ஆயிரம் தத்துவம் பேசலாம். ஆனால் உணர்ச்சி வருகிறபோது, பயன் என்னவோ பயமாகத்தானே இருக்கிறது!

(1963-க்கு முன்)

 

 

0 comments: