கொற்றவையின் புலி - சிந்துவெளியிலும், சிலப்பதிகாரத்திலும்

கொற்றவையின் புலி - சிந்துவெளியிலும், சிலப்பதிகாரத்திலும்

கொற்றவையின் பழைமை: கொற்றவை பாரத உபகண்டத்தின் பெருந்தேவி. அவளது அண்மைக் கால அவதாரம், வங்காள மறுமலர்ச்சி 20-ம் நூற்றாண்டின் முதலில் உருவாக்கிய பாரதமாதா.  மிகப் பழையவள் இந்தக் கொல்லி (< கொல்- மயிடனை மாய்த்தவள், போர்த் தெய்வம்):

           மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
          வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
          இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
-(திருமுருகு 257-259)

இவள் வரலாறு தொல்லியல், இலக்கியம், கலைவரலாறுகளை ஆராய்கிறபோது துல்லியமாகத் தெரிகிறது. நிறைய எழுதியும் இருக்கிறேன். உதாரணமாக, கொற்றவையின் கலைமான் ஊர்தி//சின்னம், மகர விடங்கர் வாகனம்/சின்னம் (விடங்கர் = முதலை) இரண்டும் கொண்ட தாயத்துத் தாலியில் கோர்ப்பது இந்தியாவின் 4700 ஆண்டு வானியல் சாத்திரத்தின் தொன்மையை வெளிப்படுத்துகிறது. பின்னர் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழியின்   பானையோட்டிலும், பின் வட இந்தியாவில் குனிந்தர்களின் காசுகளிலும் துர்க்கையுடன் மான் காட்டப்படுகிறது. இளங்கோ அடிகள் எவ்வாறு கொற்றவை வழிபாட்டையும், அவள் சின்னம் ஆகிய புலியையும், கோவலன் கொல்லப்பட்டபின் கண்ணகி கொற்றவை ஆனமை வேங்கை எனும் படிமத்தால் பயன்கொள்கிறார் எனப் பார்ப்போம்.

Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Gharial god and Tiger goddess in the Indus valley,

Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007

https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html

Indus seal, M-312 - Proto-Koṟṟavai war with Mahiṣa
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak  
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

இப்பொழுது ஹார்வர்ட் தமிழிருக்கை பெருஞ்செலவில் அமைந்துள்ளது. 4 பெண்கள் இண்டெர்வ்யூ நடந்துள்ளது. யார் வருவார் எனப் பார்ப்போம். அமெரிக்காவில் சங்க இலக்கியம் பற்றிய முனைவர் பட்ட ஆய்வேடு ஹார்வர்டில் தான் நிகழ்ந்தது. அதில் தமிழர் சமயம், சமூகம் பற்றிய அணங்குக் கோட்பாடு வரும். பின்னர் அதனை ருஷ்யாவில் அலெக்சாண்டர் துபியான்ஸ்கி மாணவர்களிடம் போதித்தார். பெர்க்கிலி, டொராண்டோ, ஹார்வர்ட், ஹூஸ்டன், கொலோன், லண்டன், ... எனத் தமிழ், திராவிடவியல் (Comparative Dravidian Researches) பெருகும்போது 21-ஆம் நூற்றாண்டில் பர்ரோ, எமனோ, ராமானுஜன், ஹார்ட், பார்ப்போலா, ... போலப் பேராசிரியர்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

பசுபதி (மிருகபதி) சிந்துமுத்திரையில் நான்கு வனவிலங்குகள் மகர விடங்கரைச் சுற்றி இருக்கின்றன. அவை நான்கு திசைகளைக் குறிக்கும் என்பர். அவற்றில் புலி என்பது வடக்கு வாயில் செல்வி கொற்றவையின் சின்னம். எனவே, பசுபதி முத்திரை புலி வடக்கு திசை என்பர் (A. Hiltebeitel, The Indus Valley "Proto-Śiva", Reexamined through Reflections on the Goddess, the Buffalo, and the Symbolism of vāhanas.  Anthropos, 1978, pp. 767-797). 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj98PDaw_XHFKEQ-xBA38ZiL5uX2l9aXcs3NGF8ZXz5IAqFTyUud5DlyEks6diAeAERymFr-rUK_GBVds2wCx6aXsTEQUlXsGGvDUUZLas2ooJW8gRG8iRNIea42ULP0dUu-BnZog/s1600/makara-vidangar-ivc-seal.jpg

இன்றும் ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் வைஷ்ணோதேவி ஆலயத்திலும், ஒரிஸ்ஸாவிலும், பாக்கிஸ்தானத்தின் மிகப் பழைய கோவிலாகிய ஹிங்லாஜ் துர்க்கை ஆலயத்திலும், ராஜஸ்தான் ஜோத்பூரிலும், புலி மீது ஆரோகணிக்கும் துர்க்கை வழிபாடு. வடுகி - வடக்கே இருந்து வந்தவள் எனத் தமிழ்நூல்களில் இருக்கிறது.  “இன்றும் தென்னாட்டு மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் துர்க்கையின் வாகனமாகச் சிங்கத்திற்குப் பதிலாகப் புலியைச் சிற்பத்தில் காட்டுகின்றனர்.” (பக். 65, பி. எல். சாமி, தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு).  “வாருணி சாமுண்டா என்ற தெய்வம் தன்னுடைய சக்தியால் எல்லோரையும் தன்பால் இழுப்பாள் என்று வடநூலொன்று கூறுகிறது.” (பி எல் சாமி, பக். 51). மிருகபதி முத்திரையின் விடங்கர் முதலில் வருணன் ஆகி, கௌரியுடன் விளங்குவது வேத காலத்திலும், பின்னரும் நிகழ்ந்துள்ளது. வருணனின் அமிசமாக புஷ்பதந்தர் எனும் தீர்த்தங்கரரும் (முதலை), அவரது யக்‌ஷியாக தருமதேவி (அம்பிகை) அமைவது இதனால் ஆகும். பல்லவர் ஆலயமான ஜீன காஞ்சி திரைலோக்கிய சுவாமி கோவிலில், மகாவீரர் சன்னதி நடுவே நிற்க, இருபுறத்திலும் புஷ்பதந்தர், அம்பிகை (தருமதேவி) கருவறைகள் பல்லவர் நாட்டுக்கே உரிய தூங்கானை (கஜப்ருஷ்டம்/அத்திப்புட்டம்) மாடங்களாக அமைந்துள. வாருணி எனத் துருக்கையை அழைப்பது இதனால்தான். சிற்ப சாத்திரங்களில் வருணனின் மனைவி கௌரி என்றிருப்பதை என் ஆய்வுக்கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். “விந்திய மலையில் இருந்த தாய்த்தெய்வத்தைக் “கவுட வாஹ”  என்று வாக்பதி எழுதிய எட்டாம் நூற்றாண்டுப் பிராகிருத மொழிக் காவியம் குறிப்பிடுகிறது.” (பக். 63, பி. எல். சாமி). கௌரி என்ற பெயர் எருமையின்கோடு  என்பதில் இருந்து உருவான பெயர்.

புலி எனும் பெயர் புலை, புலவு/புலால் போன்றவற்றோடு உறவுடையது (DEDR ). உழுதல், கூர்மையான உகிரால் தாக்கும் விலங்கு புலி (Normally retracted, while attacking by right ‘hand’ paw with force, claws extend to clutch, puli is THE word for carnivore in Tamil.).  புலியின் கூரிய நகங்கள் தசையை உழுது நன்றாக உள்ளே பதிந்துவிடும். எனவே, உழுவை எனப் பெயர் உண்டு. உழுவை < உழுதல் என்னும் தொழிற்பெயர். உழுதல் தொழில் உழவு. பேய் அணுக்கும். தொடர்புடைய சொல் உளியம் = கரடி. உளி போன்ற உகிரால் பெறும் பெயர். வருத்துவது, துன்புறுத்துவது, பொடிப்பொடியாய்த் துகள் ஆக்குவது அணுக்குதல்/அணுங்குதல். கணாதர் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) - இந்தியாவில் அணுக் கோட்பாடு தந்தார்:  https://en.wikipedia.org/wiki/Kanada_(philosopher)

https://www.ias.ac.in/article/fulltext/reso/015/10/0905-0925

அணுக்கு/அணுங்கு என்னும் தமிழ் வினைச்சொல் தருவது அணு என்ற Atom என்பதற்கு வடமொழியில் பயன்படும் சொல். உ-ம்: இந்தியாவின் அணுசக்தி கமிஷன். அணுக்கும் தொழிலால் அணங்கு எனச் சங்க கால பேய்/தெய்வ சக்திக்குப் பெயர் (
Power to afflict, Aṇaṅku theory of ancient Tamil society, as discussed by Hart, Dubianski, ...) அணுக்குவது அணங்கு; உழுவது உழவு. வலிமை வாய்ந்த கையால் அடித்து, உகிரால் கிழிப்பதால், வேங்கை (வேம்+கை) எனப் புலிக்கு ஒரு பெயர். சங்கச் சோழர் நாணயங்களில், வேங்கைப் புலி வலக்கையால் அடிப்பது போலக் காட்டப்பட்டுள்ளது. வட இந்தியாவிலே மகிஷாசுரமர்த்தனியின் பழங்காலச் சிற்பங்களில் (12-ம் நூற்றாண்டு), சங்கப் புலவர்கள் விளக்குவதுபோலவும், சங்கச் சோழர் காசு போலவும் கொற்றி வாகனம் வடிக்கப் பட்டிருப்பது விந்தை அல்லவா? சோழருக்கு புலிக்கொடி, அவர்கள் வழிபடு தெய்வமாகிய துர்க்கை சம்பந்தத்தால் ஏற்பட்டது. கொல்- என்னும் வினைச்சொல்லால் அமைவது கொற்றி, கொற்றவை என்னும் பெயர்கள். கொற்றிகோடு கன்னியாகுமரியிலே உண்டு. இதன் பரியாயப் பெயர் குமரிக்கோடு என்பதைச் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். கொற்றியூர், கொற்றிப்புழை வட மலபாரில் இருக்கின்றன. கோடவி , கோட்டை (துர்கம்) தொடர்பாக அமையும் பெயர். சேரர் குலபருவதம் ஆகிய கொல்லி மலையின் பெயர் கொல்லி/கொற்றி காரணமாக அமைந்தது. கடுமான் என்று புலிக்குச் சங்க நூல்களில் பெயருண்டு. புலி கொற்றவையின் சின்னம் ஆதலால், கொற்றவைக்குக் கடுமி/கடும்மி என்ற பெயர்கள் 2000 ஆண்டுக்கு முந்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களிலே காண்கிறோம். அதியன் வழியினர் ஸதியபுதோ ( = அதியமான்) எனத் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் கூறப்படுவது போலவே, சேரர்கள் “கடுமி-புதோ” என அழைக்கப்படுகின்றனர். கல்வெட்டின் இறுதியில் கடுமி துர்க்கையின் ஆயுதம் ஆகிய திரிசூலம் காட்டப்பட்டுள்ளது. பல பழைய சிற்பங்களில் மகிஷாசுரனை மர்த்தனம் செய்யக் கொற்றவை இரும்புச் சூலத்தைப் பாய்ச்சுகிறாள். 'விறல் கெழு சூலி’ எனக் கொற்றவையைக் குறுந்தொகை பாடும். ஆர். பாலகிருஷ்ணன் கொல்லிமலைக் கொற்றவையும் புலியும் என 2019-ல் ஒரு கவிதை இயற்றி இருந்தார்.

குதிரை, இரும்பு, பிராமி எழுத்து, பெருஞ்சமயங்கள், ... போன்றன வேளிர் வருகையால் இரும்பூழிக் காலம் (Iron Age, in south India coincidning with the Megalithic Age, First Millennium BCE) தொடங்குவதன் முன்னம் முருகு, கொற்றி போன்றன அணங்குகளாக இருந்தன. வட நாட்டில் பெருஞ்சமயங்கள் (சைவம், வைஷ்ணவம், சமணம், பௌத்தம்) தோன்றித் தமிழகம் வந்தடையும் இரும்பூழியின் போது பழைய அணங்குகளுக்கு வானியல் சமயம் பொருத்தப்படுகின்றன. அதற்கும் 1000 ஆண்டு முன்னரே வடக்கேயும் அவ்வாறு நகரங்கள், நாகரிகம் ஏற்பட்ட போது நிகழ்ந்தது. அவ்வாறு ஏற்பட்டது தான் தவ்வை (முகடி) – கொற்றி [Cf. EreshkegalInanna in Sumeria] என்னும் சகோதரியர் வழிபாடு. பின்னர், இருவர்க்கும் நக்கன் கொற்றி திருப்பரங்குன்றில் குடைவரைக் கோயில் எடுப்பித்தான். தவ்வை வழிபாடு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம் இருந்து பின்னர் அழிந்தது.

'கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி' - பெரும்பாணாற்றுப்படை

'ஓங்குபுகழ் கானமர் செல்வி அருளலின்’ – அகநானூறு

கலித்தொகையில் கொற்றி: கொற்றவையைக் கலித்தொகை கொற்றி எனக் குறிப்பிடுகிறது. கொற்றியே ஒரு பேய் (அணங்கு). அவளுக்கே பேய் பிடித்துவிட்டது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என்று தலைவி தலைவனிடம் கூறுவதாகப் பாடல் வருகிறது. கலித்தொகையில், தலைவனின் தன்னிடம் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு உவமை கூறுவதாக, "பெருங்காட்டுக் கொற்றவைக்குப் பேய் நொடி சொல்வதுபோல" என்னும் பொருள்படும் பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்னும் வரி உள்ளது. பரிபாடலிலும், ’நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்’ என்ற வரியில் கொற்றவை பற்றிய குறிப்பு வருகின்றது. பரிபாடலில் கொற்றவைக்குத் தனியாக ஒரு பாடல் இருந்து அழிந்துவிட்டது.

சிலம்பின் கொற்றவை: முதன்முதலாக, விரிவாக அணங்கு ஆகிய கொற்றவை/துருக்கை பற்றின அரிய செய்திகளைத் தமிழில் கூறுவது சிலப்பதிகாரக் காப்பியம் ஆகும்.  அ. ச. ஞானசம்பந்தன், “இளங்கோ அடிகள் சமயம் எது?” (1996) ஓர் ஆய்வுநூல் எழுதியுள்ளார். காப்பியக் கட்டுகோப்புக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதவையாகக் கண்ணனைப் பாடும் ஆய்ச்சியர் குரவை, முருகனைப் பாடும் குன்றக்குரவை அமைந்துள்ளது என விரிவாக விளக்கும் பேரா. அ.ச.ஞா கொற்றவையைப் புகழும் வேட்டுவவரி, காப்பியத்தை முன் நகர்த்தத் தேவையே இல்லை. எனினும், இளங்கோ அடிகள் பெருந்தெய்வம் கொற்றவையைப் புகழ்தற்காக மட்டும் நுழைத்து விரிவாய்ப் பாடியுள்ளார். ஐயைக் கோட்டத்தில் சூரியன் வெப்பந் தணிவதற்காகக் கண்ணகி, கோவலன், கவுந்தி அடிகளை நிழலில் தங்கவைத்து, வேட்டுவ வரியைப் பாடினர் அடிகள்.  அடுத்த காதை ’புறஞ்சேரி இறுத்த காதையில்’ பாண்டிநாட்டில் இரவில் அச்சமின்றிப் பயணிக்கலாம் எனக் கவுந்தி தெளிவிப்பதால், ஐயைக் கோட்டம், வேட்டுவவரி கொற்றி புகழ் பாட மட்டிலுமே இடைப்பிறவரலாக இளங்கோ அடிகள் இயற்றினார் என்பது தெளிவு (அ.ச.ஞா). கவுந்தி அடிகளின் சமயம் சமணம். இந்தியக் கலைவரலாற்றில் அம்பிகை எனப் கொற்றவைப் பெருந்தெய்வத்தை சிங்கவாகினியாக புலியில் இருந்து மாற்றுவதில் சமணருக்குப் பெரும்பங்கு உண்டு. லலிதா ஸஹஸிரநாமத்தின் துதிகளை அப்படியே மொழிபெயர்த்துப் பாடியிருப்பதைப் பல எடுத்துக்காட்டுகள் தந்து தெளிவுபடுத்துகிறார். முருகன் அடியார்கள் ஆகிய குறிஞ்சிக் குறவர்கள், கண்ணபிரான் தொண்டர்குழாம் ஆயர்களை விடுத்து, குமரிக் கொற்றவை வழிபாடு இயற்றும் வேட்டுவர்களை மூன்று முக்கிய இடங்களில் அமைத்துக் கண்ணகி காப்பியத்தை வழிநடத்திச் செல்கிறது. அம் மூன்று இடங்களைப் பற்றி இவண் பார்ப்போம்.

முத்தமிழ்க் காப்பியம் சிலம்பின் தொடக்கத்திலே அமைந்துள்ள பதிகத்திலேயே, கொற்றியின் அடியார்கள் குறிஞ்சி வேட்டுவர் வாயிலாக, கண்ணகி கதையைச் சேரன் செங்குட்டுவன் கேட்கச் செய்கிறார். ’ஒருமுலை இழந்த திருமா பத்தினி’ தேவருலகம் சென்ற செய்தியை வேடுவர் வாயிலாகச் சேரமன்னன் அறிந்தான் என்கிறார் பதிக ஆசிரியர். குன்றிலே வாழ்வதால் குறவர் என்றும், தொழிலால் வேட்டுவர் என்றும் அறியப்படுவர். முருகனின் காதலி வள்ளியை வேட்டுவச்சி என்றும், குறத்தி என்றும் அழைப்பது பண்டைமரபு.

கொற்றவையின் சின்னமாக, கலைமான் (Indian blackbuck) இருப்பது 4700 ஆண்டுக்கால சிந்துவெளி வானியல் மூலம் காட்டியிருக்கிறேன்.  மாதவியின் தோழி வசந்தமாலை வடிவில் வந்த சிறுதெய்வத்தை அடக்கப் பாய்கலைப்பாவை (துர்க்கை) மந்திரத்தைக் கோவலன் பயன்படுத்துகிறான் (காடுகாண் காதை). சமணர்களுக்கு அம்பிகை என்னும் துர்க்கை வழிபாடு உண்டு. தொன்மையானவள் என்பதற்காக யக்‌ஷி என்பர். தருமதேவி எனத் தமிழ்நாட்டில் அழைப்பர். தருமநாதர் எனும் தீர்த்தங்கரரின் யக்ஷி புலிவாகனி என்பது குறிப்பிடத்தக்கது. காடுகாண் காதைக்கு அடுத்ததாக வரும் வேட்டுவ வரியின் தொடக்கத்தில் சாலினி என்னும் குமரியைக் கொற்றவையாக கலைமான் ஊர்தியில் வைத்து வேடுவர் அலங்கரிக்கின்றனர்.குமரி வழிபாடு நேப்பாளத்தில் பிரசித்தம் (M. Allen, The cult of Kumari: Virgin worship in Nepal, 1975). அதனை, கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் 1901-ல் ராமகிருஷ்ணர் மடத்தில் தொடங்கிவைத்தார். திரிகோட்டுக் கருமானில்  அமர்ந்த சாலினிக்கு, கொற்றவை மயிடனுடன் போரிடும் போது உதவும் புலியின் பல்கோத்த தாலியைச் சூட்டினர். மேலும் புலித்தோலை உடுத்தினர். வேட்டுவ மகளாகிய சாலினி கொற் றவை உருக்கொண்டு ஆடிய கோலவரியில் கண்ணகி பற்றிக் கூறுகிறாள்:

    ‘கணவனோடு இருந்த மணம்மலி கூந்தலை -
இவளோ கொங்கச் செல்வி குடமலை ஆட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒரு மாமணி ஆய் உலகிற்கு ஓங்கிய
திரு மாமணி என தெய்வம் உற்று உரைப்ப
பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று
அரும்பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப’

மிக முக்கியமான வருணனை இது. சேரர் தலைநகர் வஞ்சி மாநகரில் (இன்றைய கரூர்) செங்குட்டுவன் பின்னர் கண்ணகிக்குக் கோவில் எடுக்கிறான். மேலும், கொல்லி என்னும் கொற்றவை ஆட்சி செய்யும் கொல்லிமலையும், வட கொங்கில் கொல்லி என்னும் துர்க்காபரமேசுவரி கோவில்களும் இருப்பதால், கண்ணகி வர்ணனையில் முதலில் ‘கொங்கச் செல்வி’ என்றார். வேள்தங்கடி வட்டம், தட்சிண கர்நாடகத்தில் கொல்லி என்ற பெயரிலே திருக்கோயில் இன்றும் உள்ளது. வேள்தங்கடியில் குடிமல்லம் போலவே மிகப்பழைய லிங்கம் உள்ளது. அதற்கும் சற்று வடக்கே குடகு மலைப் பகுதியிலும் கொல்லி என்ற பேரோடு துர்க்கை வழிபாடு இருக்கிறது. ஒரு மாமணி என்னும் உலகப் பெருந்தெய்வம் (கொற்றவை) இந்தத் திருமாமணி என்றாள் சாலினி. சாலினி தெய்வ ஆவேசம் வந்து மயக்கத்தில் கூறுகிறாள் என்று கண்ணகி கோவலனின் பக்கலில் சாய்ந்துகொள்கிறாள். மதுராபதித் தெய்வத்தின் வழியாக, கோவலனின் பெயர்க்காரணம் உரைக்கும் இளங்கோ அடிகள், சாலினி என்னும் குமரி வழியாக, கண்ணகி/கர்ணகை பெயர்க் காரணமும், கொற்றவையாகவே எதிர்காலத்தில் ஆக இருப்பது காட்டும் பகுதி இது. விஷ்ணு போல நாகக் குடையின் கீழ் இருக்கும் பார்சுவநாதரின் யக்‌ஷி பத்மாவதி என்பது கோவலன் - கண்ணகி பெயர்க் காரணத்துடன் ஒப்பிடலாம். ஒரு மா மணி, திரு மா மணி என்பதில் மணி என்பது அரதனம் (> ரத்நம்) என்பதும், பத்மாவதி ஒரு நாகமாகச் சமணர்கள் காட்டுவதும், அரவின் தலை மணி ஈனும் என்னும் சங்ககால நம்பிக்கையையும் ஓர்க.

திருமா பத்தினி, திருமாமணி = ஸ்ரீ. திரு என்னும் ஸ்ரீலக்ஷ்மி பெயரால், கண்ணகி (< கர்ணகீ) பெயர் அமைந்ததைக் குறிப்பிடுகிறார். கர்ணகம் என்பது தாமரைப் பொகுடு. கர்ணகத்தின் மேல் அமர்வதால் கர்ணகீ என்பது திருமகளின் பெயர். பிராகிருத வழியில், கண்ணகி எனப் பெயர் அமைக்கிறார். மேலும், மாதவி என்ற குருக்கத்திப் பூவின் பெயரைக் கணிகைக்கு அமைக்கிறார். குருக்கத்தியும், முல்லையும் இணைபிரியாமல் இருப்பதைச் சங்கப் பாடல்கள் காட்டும். முல்லை கற்புக்குக் குறியீடு. கற்புக்கடம் பூண்ட கண்ணகிக்கு மாற்றாக பகரி போல,  மாதவி என்ற பெயரையும், மதுராபதித் தெய்வத்தின் வாக்கால் விளங்கும் கோவலன் என்பது கண்ணபிரான் பெயரையும் அமைத்தார். கண்ணன் கோபியர், பலதார உறவு எனவே காப்பியத்தில் இறக்கச்செய்தார். பார்த்த சாரதி இதிகாசத்தில் பார்த்தனுக்குப் போரில் கீதை போதித்தான்.. கனகன் – பொன் நிறம் கொண்ட ஹரி, விஜயன் – அர்ஜுனன் என்னும் மகாபாரதப் பெயர்கள். எனவே, வட நாட்டு மன்னர் பெயர்களாக, கனக விசயர் என்று தம் நாவலில் கொடுத்தார் சிலம்பின் ஆசிரியர்.

வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலையாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி (வேட்டுவ வரி)

கொற்றவைத் தெய்வம் மீதான வர்ணனையில் “அரியின் உரிவை” எனச் சிங்கத்தின் தோலைப் போர்த்தியவள் என்கிறார். ஆனால், பின்வரும் பகுதியில் புலித் தோல் போர்த்த கொற்றவை என்கிறார். குமரி என்னும் சாலினிக்கு எயினர் அணிவிப்பதும் புலித்தோலே. திராவிட, ஆரிய மரபுகள் இரண்டையும் தமிழ்த் தேசிய நாவலில் இணைத்துவிடுகிறார்.

    ஆனைத்தோல் போர்த்து புலியின் உரி உடுத்து
   கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால்
   [...]
   சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி
   செங்கண் அரிமால் சினவிடை மேல் நின்றாயால்

தேவி மகாத்மியம் என்னும் நூலில் தான் பெண்தெய்வங்களின் பல மரபுகள் முதன்முதலாக, வடமொழியில் நூல்வடிவம் பெறுகின்றன. பெருந்தேவி என துர்க்கை வடிவம் பெறுகிறாள். தேவி மகாத்மியம் வட இந்தியாவில் ராஜசபைகளில் ஐந்து நூற்றாண்டுகளாக ஓவியங்களாகத் தீட்டப்படுகின்றன. அவற்றில், மகிஷனை மாய்க்கும் துர்க்கையின் ஓவியங்கள் ஏராளம். சிங்கமோ, அல்லது புலியோ வாகனமாக உள்ளவை பல. சிங்க முகத்துடன் புலியாய் இருப்பவையும் உண்டு. இவற்றை ஆங்கிலத்தில் leonine tiger என அழைப்பர்.ஒரிசா மாநிலத்தில் திராவிட மொழி பேசும் மக்கள் அதிகம். இனும் துர்க்கையை புலி மீது ஆரோகணிப்பவளாக வணங்குகின்றனர். மூரியர் என்னும் ஜனங்கள் இன்றும் எருமையின் கொம்பை, சிந்துவெளி போலவே, அணிதலைக் காண்கிறோம். புலிகளின் கண்களைச் செங்கண் என்பது சங்கப் புலவர் வாக்கு. ‘செங்கண் இரும்புலி’ (நற். 148, குறு. 321, அக. 92) . இதனை வில்லியம் பிளேக் போன்ற ஆங்கில மகாகவிகளும், “Tiger, Tiger burning bright” போன்ற சாகாவரம் கொண்ட கவிதைகளில் பொறித்துள்ளனர். மால் என்பது மயல், மயக்கம் என்ற பொருளினது. செங்கண் அரி மால்விடை என்பது பின்னர் ஓவியங்களில் தீட்டப்பெறும் சிங்கமுகங் கொண்ட புலி ஏற்றின் வர்ணனையாக இளங்கோ அடிகள் பாடியுள்ளார் எனக் கொள்ளலாம். 4000+ ஆண்டுகாலக் கொற்றவையின் புலியேறு, பின்னர் இடைக்காலத்தில் குஷாணர்கள் கந்தார நாட்டிலும், வட மதுராவிலும் புலியைச் சிங்கமாக மாற்றுதலும் அறிந்தே கொற்றவையின்  வாகனத்தை “செங்கண் அரி மால்விடை” (Leonine Tiger, a Chimera )என அடைமொழிகள் கொடுத்து வர்ணிக்கிறார்.

கேரள அம்பலங்களில், யானை மீது செல்லுமே திடம்பு, அதுபோல. புலியைத் திடம்பாக ஏந்திச் செல்லும் சிந்து முத்திரைகள் கிடைத்துள்ளன. இளங்கோ அடிகளும் புலி – கொற்றவைத் தொன்மை உறவுகளை இலாவகமாகக் கையாள்கிறார்.

மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல்காப்பியம், புறத். 4)

மறவர் ஆகோள் பூசலுக்குச் செல்லும்போது, கொற்றவை கொடி எடுத்துச் செல்வாள். அதைப் புலியா, சிங்கமா எனக் குறிக்காது விட்டார். மறவர் அறிந்தது புலி என்பதாலும், குமரி வழிபாட்டில் புலிப்பல்லும், தோலும் அக் கன்யாகுமரிக்குச் சார்த்துதலானும், புலித்தோல் உடுத்திக் எருமைக் கருந்தலை மேல் நிற்பவள் துர்க்கை எனப் பாடியிருப்பதாலும், புலிக்கொடி எனக் கொள்ளவியலும்:

 புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமர முன் செல்லும் போலும்
(சிலம்பு. வேட்டுவவரி, பா.13)

குமரிக்கு அணிகலன் புலியிடம் பெற்றவை:
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை உடீஇ (வேட்டுவ வரி)

“வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள்
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு” (வேட்டுவ வரி)

”பலுச்சிஸ்தானத்தில் உள்ள ஹிங்லாஜ் என்ற ஊரில் உள்ள தாந்திர தாய்த்தெய்வ பீடத்தில் வழிபடப்படும் தாய்த்தெய்வத்திற்குக் கொட்டரி, கொட்டவி, கொட்டரீசா என்ற பெயர்கள் வழங்குகின்றன. இப்பெயர்கள் தமிழில் உள்ள கொற்றவைப் பெயரே என்று தெரிகிறது: கொற்றவை என்ற பெயரே வடமொழியில் கொட்டவி ஆகியதை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தெய்வத்தையே பீ பிநானி, மரிநானி என்ற பெயரில் இன்றும் தொழுவதைக் காணலாம். குஷாணர்களின் காசுகளில் நானா தெய்வமும், கொட்டவி எனப்படும் தமிழ் இலக்கியத் தெய்வமான கொற்றவையும் ஒன்றே என்று கருதலாம்.” (பக். 71, பி. எல்.சாமி)

”அடியார்க்கு நல்லார் கண்ணகி துர்க்கையாகப் பிறந்தாள் என்று கூறிய இடத்தில் கொல்லித்தெய்வம் என்று கூறியுள்ளார். மலையாளக் காடுகளிலும், மலைகளிலும் இந்தத் தாய்த் தெய்வம் பழங்குடி மக்களால் ‘புள்ளிக் கருங்காளி’ என்று வழிபடப்பெறுகின்றாள். இவளுடைய வாகனம் புள்ளியுடைய புலி. ஆடையும் புலித்தோல். கொல்லி என்பதற்குப் புலி என்ற பொருள் நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை கொல்லி மலையில் தோன்றிய புகழ்பெற்ற தாய்த்தெய்வம் என்று தெரிகின்றது.” (பக்.81, பி.எல்.சாமி)

மேலும், கொற்றவையைப் புலியேற்றுடன் எவ்வாறு இளங்கோ அடிகள் தொடர்புபடுத்துகிறார் எனப் பார்ப்போம். வேம்+கை என்பது வேங்கை ஆயிற்று எனவும், இதனைச் சங்கப்புலவரும், பழஞ்சிலைகளும் துர்க்கையின் புலியேறாகக் காட்டுதலும் கண்டோம். சொற்சித்திரமாக, கோவலன் கொலையுண்டபின் கண்ணகி (< கர்ணகீ, கர்ணகை) வேங்கை மர நீழலில் நிற்பதால் அவளது கொற்றவை அவதார உறவினை உறுதி செய்கிறது சிலப்பதிகாரம். பல இடங்களில், திரும்பத்திரும்ப வேங்கை மரத்தின் அடியில் கண்ணகி என்று அவளது துர்கா சம்பந்தத்தைத் தெளிவாக்குகிறார்.

வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து பாறை மேல் புலியின் தோற்றத்தைத் தருவதாகச் சங்கப் பாடல்கள் பல உண்டு (குறுந்தொகை 47, ஐங். 396, அகம் 205, அகம் 228, புறம் 202, நற். 383). இதே செய்தி 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வேட்டைக்காரர்களும் சொல்லியுள்ளனர் (e.g., Lt. Col. Pollock, ...). இதனாலேயே இம்மரம் வேங்கை எனப்பெயர் பெற்றது. புலி, புலி என்று பெண்கள் ஒலியெழுப்பி வேங்கைப் பூக்களைக் கொய்தனர். இச்செய்தி மேலும், இரத்தம் சொட்டுவது போலப் பால்வடியும் உதிர வேங்கை மரமும் உண்டு. எனவே தான், புலித் தெய்வம் கொல்லி/கொற்றவையாகி விட்டாள் என வேங்கை மர நீழலில் கண்ணகி நின்று தெய்வம் ஆனாள் எனச் சிலப்பதிகாரம் முழுவதிலும் பல இடங்களில் பொருத்தமாக அடிகள் பாடினார்.

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு (சிலம்பு, பதிகம்)

கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு
அவுணரைக் கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர்
தீத் தொழில் ஆட்டியேன் யான் என்று ஏங்கி
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த
கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ (கட்டுரை காதை, மதுரைக் காண்ட முடிவில்)

மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க
முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என (குன்றக் குரவை, வஞ்சிக் காண்டம்)

தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர்
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே ! (குன்றக் குரவை)

கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே

கான வேங்கை கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து தனி துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி (காட்சிக் காதை)

மதுரை மூதூர் மா நகர் கேடு உற
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை
அறக்களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி (நடுகற் காதை)

புலி வேட்டையாடும்போது இடப்புறமாக வீழ்ந்ததை உண்ணாது என்பது இயற்கையான நிகழ்ச்சி அன்று. வேங்கை வலக்கையால் அடித்தால் இடப்புறமே இரை வீழும். ஆனால், வலக்கையால் அடித்து வலப்புறம் வீழ்ந்தால் சிறப்பு எனக் கருதி வேங்கைக்குச் சிறப்பு, மேன்மை, உயர்ச்சி கருதிச் சங்கப் புலவர் பாடியுள்ளனர். அதே போல, ஆளி (சிங்கம்??) பற்றிக் கற்பனையான செய்திகள் சங்க நூல்களில் உண்டு. ஆளியைக் கண்டு புலி நடுங்கும் என்ற சங்கப் புலவர் கற்பனையால் கொற்றவைக்கு ஆளிக்கொடி என்று புறப்பொருள் வெண்பாமலையில் பாடல். பின்னர், திருமுதுகுன்றத் தேவாரத்திலும் ஆளிபற்றிக் கேட்கலாம். சிங்கம், கங்கை முதலை (விடங்கர்) பற்றிய செய்திகள் சிற்பங்கள், கலைகள் வழியாகத் தமிழகத்துக்கு வேளிர் வருகையால் இரும்புக் காலத்தில் வந்திருக்கவேண்டும்.

சிந்துவெளிக் கொற்றவையின் புலி வாகனம் சிங்கமாக மாற்றம் . குஷாணர்கள் வடமேற்குத் திசையில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது கொற்றவையின் வாகனம் மாறுகிறது. இதுபற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

நா. கணேசன்

சிந்துவெளிக் கொற்றவை

  ~ஆர். பாலகிருஷ்ணன்  I.A.S (Retired),  05/ 01/ 2019

படைப்பில் தன்னை
பார்வையாளனாக மட்டும்
ஆண் உணர்ந்து
பயந்திருந்த காலம்.

வேட்டையாடித்
திரிந்தவன்..
பிறப்பின் ‌ரகசியம்
புரிந்தவன் அல்ல.

காட்டில் "இனிஷியல்"
வைத்துத் திரிந்தது
எந்தப் புலி...?

பெண்ணே
ஆணையும் பெற்றாள்
என்பதில்
ஆரம்பித்தது அவன் அச்சம்.
மாதக்குருதி
அவனை‌ மட்டுமல்ல
அவளையும் கூட
பயமுறுத்தியது..

அது ஒரு மாயம் போல
வந்து மறைந்தது.

கர்ப்பிணிகளின்
பெருத்த வயிறு
படைப்பு நிகழ்த்தும்
பானையாய்..
பனிக்குடம் உடைத்து
ரத்தச் சகதியில்
விழித்து அழுதது
தொப்புள் கொடி தாங்கி
இன்னொரு தலை...

கொற்றவையாய்
கொல்லிப்பாவையாய்
அணங்காய் துணங்காய்
ஆடித்தீர்த்தாள் அன்னை.

சிந்துவெளியில்
அவள்
எதைத் தொலைத்தாள்
கீழடியில் எதை மீட்டாள்?

கண்ணகி முலை அறுத்தாள்
காரைக்கால்
முலை தொலைய
வரம் கேட்டாள்.
கேரளத்தில்
இன்னொருத்தி
முலையறுத்துக் கொடுத்தாள்
வரித்தொகையாய்.

இவை.
ஆறும் சினம் அல்ல
என்று
அடிக்கோடிட்ட
ஆறாச் சினம்.

இதோ..
சேரர் பூமியில்
மகளிர் எழுப்பிய
மதிலில்
யுகங்களுக்கான
கேள்விகளும் ‌பதில்களும்..

கொற்றவை சிரித்தாள்
கொல்லிமலையில்...
பால் கொடுத்த புலியின்
பக்கத்தில் நின்று...

 

0 comments: