தொல்காப்பியம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப்பொழில், 1925

கரந்தைத் தமிழ்ச் சங்கத்து திரு. ஜெயக்குமார் அவர்களிடம் பெற்று, ஐந்து ஆண்டு முன்னர், தமிழ்ப்பொழில் இதழ்களின் பிடிஎப் கோப்புகளைத் தமிழ்மரபு அறக்கட்டளைக்கு அனுப்பினேன். தமிழ்ப்பொழில் இதழ்கள் இணையத்தில் இன்று இலங்குகின்றன. சிற்சில செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி இதழ்கள் தமிழ் எண்ம நூலகத்தில் (http://tamildigitallibrary.in ) கிட்டுகின்றன. இன்னும் 3 இலட்சம் நூல்களாவது இணையம் ஏறினால், தமிழ் ஆழம் பெறும். ஆறாம் திணைத் தெய்வதம் கூகுளாண்டவர் துழாவும் தமிழ்மாணவர்க்கு அருளுவார். பல எம்.ஏ, பிஎச்டி தீஸிஸ்கள் அழியும் தறுவாயில் உள்ளன. இடைக்கால இலக்கியம் வாசிப்போரோ, அவற்றில் புலமையோ இலா ஒரு தலைமுறை உருவாகி வருதலான் வாடுகிற தமிழ்ச்சூழலைக் காண்கிறோம். பேரா. சு. பசுபதி வலைப்பதிவில் , நாட்டார் ஐயா 1925-ஆம் ஆண்டு தமிழ்ப்பொழிலில் எழுதிய கட்டுரை ஒருங்கு குறியீட்டில் வெளியாகிறது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை தொல்காப்பியர் திருநாள் என சித்திரை முதல் நாளைக் (14 - 4 - 2021) கொண்டாடும் தருணம் இது. வாசித்துப் பயன்கொள்க.  ~ நா. கணேசன்

தொல்காப்பியம்

மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி 

யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே 

அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ 

டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.'


உலகத்திலுள்ள மொழிகள் எல்லாவற்றையும் வென்று ஆரிய
மொழியுடன் உறழ்வது தமிழ் என்று சில நூற்றாண்டுகளின் முன் விளங்கிய ஒரு பேரறிஞர்  இப்பாட்டிலே கூறி வைத்தனர்.   இப்பொழுது தமிழ்மொழியுடன் வேறு  மொழிகளையும் ஒருங்கு நன்காராய்ந்த ஆராய்ச்சி வல்ல புலமையாளர்கள் இம் முடிவுக்கே வருகின்றனர். தமிழ் மொழி எவ்வளவு பழமையுடையது என்பதனையும், பண்டை நாளில் எவ்வளவு பரவியிருந்தது என்பதனையும் ஆராய்ந்தறிந்த மதிவல்லராகிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை யவர்கள்அதனை

    ‘சதுமறையா ரியம்வருமுன் சகமுழுதும் நினதாயின்

    முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே.

என்று மொழிந்தருளினர். இங்னம் பழமையால் மாத்திரமன்றிஇயல்வம்பாகிய திருந்திய நிலையாலும், இனிமை முதலியவற்றாலும் தமிழ்மொழி தலைசிறந்து விளங்குதலின், புலமையும் , தெய்வத்தன்மையும் வாய்ந்துளோர் என நம்மாற் போற்றப் பெறும் நம் பெரு மக்கள் பலரும் தமிழைக் குறிக்குமிடத்தெல்லாம் செந்தமிழ்பைந்தமிழ்இன்றமிழ் , மென்றமிழ் , வண்டமிழ் , ஒண்டமிழ் , நற்றமிழ் , சொற்றமிழ் என்றிங்கனம் அடையடுத்து வழங்குவாராயினர் . இந் நாட்டிற்குரிய தொன்முது மக்களாகிய தமிழருடன் ஆரியர் விரவி ஒரு நாட்டினராக வாழலுற்ற காலத்தில் தமிழருடைய தத்துவ ஞானங்கள் வடமொழி நூல்களாகப் பரிணமித்தன. ஆரியருடைய கலை ஞானங்களும் , கோட்பாடுகளும் தமிழிலும் ஏறின . இரு மொழியும் ம்முடைய பெருமொழிகளென இந்நாட்டு முன்னையோர் போற்றி வந்தனர். எனினும் சிற்சில துறைகளில் ஒரு மொழி மற்றொரு மொழியினும் ஒவ்வொரு காலத்திற் சிறந்து விளங்குதல் இயற்கையே. தமிழ் மொழியானது ஆரியத்தை வெல்லுதற்கு மாறு கொண்டு நிற்கின்றது என்பது தலைப்பிற் காட்டிய பாட்டிலே குறிக்கப் பெற்றுளது. உறழ்தல் என்பதற்கு ஒத்தல் என்றும் பொருள் கூறப்படினும், வெல்லுதற்கு மாறுகொள்ளல் என்பதே சிறந்த பொருளாகும் . நம் இருமொழிகளில் வடமொழி வழக்கற்று வீழ்ந்ததனையும்  தமிழ்மொழி இளமைச் செவ்வியுடன் என்றும் வழங்குதற்குரியதாய் மிளிர்வதனையும்  நோக்குழி தமிழ் ஆரியத்தை ஒருவாற்றால் வென்று விட்டதென்றே இப்பொழுது கூறுதலும் ஏற்புடைத்தாகும்.

தமிழ் தன் மொழியமைதியாற் பிறமொழிகளை வென்று விளங்குதலேயன்றி , தன்னிடத்துள்ள சில நூல்களாலும் வாகை சூடித் திகழ்தல் கண்கூடாம் . திருக்குறள் , திருவாசகம் , திருவாய் மொழி என்னும் நூல்களுக்கு இணையான நூல்களை வேறெம் மொழியிற் காணக்கூடும்தொல்காப்பியம் என்னும் இயல் நூலும் அத்தன்மையதே. இயல், இசை , நாடகம் என்னும் முத்துறையிலும் முச்சங்க நாளிலே இயற்றப் பெற்றுப் பரந்து கிடந்த இலக்கண நூல்களெல்லாம் கரந்துபடவும், தொல்காப்பிய மென்னும் இவ்வியற் மிழிலக்கணம் இன்று காறும் நின்று நிலவுவது , பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னையோர் இதனை எங்கனம் மதித்துப் போற்றி வந்தனரென்பதற்கு உறு சான்றாகும் .

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து

 பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை

 மண்ணி டைச்சில விலக்கண வம்பிலா மொழிபோ

 லெண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ.” 

என்றிவ்வாறாக , இலக்கண வரம்புடைமையால் நம் தமிழ்மொழி நிகரற்றதென வைத்துப் போற்றப்பெறுவது புனைந்துரையாமென ஏதிலார் புறங்கூறுதற் கிடனின்றி , எய்ப்பினில் வைப்பாக இந்நூல் கிடைத்திருப்பது நாம் புரிந்த தவத்தின் பயனேயாம். தமிழின் வரலாறனைத்தும்  ஒருங்குணர்ந்து கோடற்குச் சிறந்த கருவியாகவுள்ள இந்நூல் இனி எக்காலத்தும் நிலவுதலுறும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை . இந்நூலானது தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து முந்து நூல்கண்டு முறைப்படத் தொகுத்தியற்றப்பட்டதென்பது வடவேங்கடம் என்னும் இதன் சிறப்புப் பாயிரத்தால் அறியலாவது. இந்நூலை ஆராய்ச்சி செய்யுமிடத்து இது நன்கு தெளிவாம். இந்நூலின் எழுத்ததிகாரத்து மொழி மரபின் கண்ணே மொழிக்கீறாம் எழுத்துக்கள் கூறிவருமிடத்தே , சகமெய்யூர்ந்த முற்றுகரமும் , நவொற்றும் இவ்விரண்டு மொழிகட்கே ஈறாகு மென்றும், பகமெய்யூர்ந்த முற்றுகமும் ஞக வொற்றும் ஒவ்வொரு மொழிக்கே ஈறாகு மென்றும் , பக மெய்யூர்ந்த வுகர வீற்றுச்சொல் ஒன்றே தன்வினைப் பொருளும் பிறவினைப் பொருளும் பயப்ப தாமென்றும் உணர்த்துவார்

'உச்ச காரம் இருமொழிக் குரித்தே.

'உப்ப காரம் ஒன்றென மொழிப.

'இருவயி னிலையும் பொருட்டா கும்மே.

'உச்ச காரமொடு நகாரம் சிவணும்.

'உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே

   அப்பொரு ளிரட்டா திவணையான.

என ஆசிரியர் கூறி வைத்திருப்பன சிலவற்றிலிருந்தே, தமிழின் இரு வகை வழக்கினு முள்ள சொற்பரப் பெல்லாம் ஒருங்கு தொகுத்து வைத்துக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டதென உணரலாகும் . மற்றும், தொகைமரபின் கண்ணே

             'அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி 

               உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே 

               அவைதாம்,

   கசதப என்றா நமவ என்றா

               அகர உகரமோ டவையென மொழிப.’

என்னுஞ் சூத்திரத்தால் , தமிழக முழுதும் வழங்கிய அளவுப்பெயர்நிறைப்பெயர்களை அவற்றின் முதலெழுத் தெடுத்தோதிக் குறித்து வைத்ததும்பொருளதிகாரத்து மபியலில், இளமைப் பெயர் , ஆண்மைப் பெயர் , பெண்மைப் பெயர் எல்லாம் எடுத்தோதி , இன்னின்வற்றிற்கு இன்னின்ன பெயர்கள் உரியவெனக் கூறி வைத்திருப்பதும் போல்வன இவ்வுண்மையை நன்கு விளக்குவனவாகும் . தமிழுக்கே உரிய சிறப்புவாய்ந்த பொருளதிகாரத்தில் மக்களுடைய ஒழுகலாறெல்லாம் தொகுத்துணர்த்தி யிருக்கும் மாட்சி அளவிடற் பாலதன்று . இவ்வாறாக இந்நூலின் கண் அமைந்து கிடக்கும் எழுத்துச் சொற்பொருட்டிறங்களையும் , அவற்றை ஆசிரியர் கூறிச் செல்லும் நெறிமுறைகளையும் நூற்பாக்களின் திட்ப நுட்ப அகுகளையும்இன்னோரன்ன பிற சிறப்புக்களையும் ஒரு கட்டுரையில் எழுதிக் காட்டுவதென்பது இயலாத தொன்றாம்.

இனி , இத்தகைய சீருஞ்சிறப்பும் வாய்ந்த இவ்வியல் நூலையருளிய ஆசிரியராகும் ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாது வரலாறு னைப்பல ஆசிரியர்களின் வரலாறு போன்றே நாம் செவ்விதின் அறிய வொண்ணாத்தாயிற்று , இவ்வாசிரியரின் வரலாற்றுக் குறிப்புக்களாக மக்குக் கிடைத்திருப்பன மிகச்சிலவே . இவை கொண்டு சிற்சிலர் தாம் தாம் கருதியவாது இவ்வாசிரியரைப் பற்றி எழுதியிருக்கின்றனர். யாமும் தொல்காப்பியர் வரலாறாக அறிவனவற்றைத் தொல்காப்பிய ஆராய்ச்சி முடிவிற் கூறுவேம் . இனித் தொல்காப்பிய ஆராய்ச்சியைப் பல பகுதிளாகப் பகுத்துக் கொண்டு , அவற்றை முறையே ஒவ்வொன்றாக எழுதிவக் கருதியுள்ளேம் . இயல்பிலே சுருங்கிய அறிவினேமாகிய யாம் பலவினை  லிவுகட்கு இடையே இப்பேராராய்ச்சியை எடுத்துக் கொண்டது தமிழன்னையின் சிறுமகார் ஆற்றும் இச்சிறு திருத்தொண்டுக்கு அன்பர்களின் அன்பு முன்னின்று ஊக்கமளிப்பது போன்று  இறைவன்றிருவருள் உண்ணின்று ஊக்கமளிக்கும் என்னும் துணிபு கொண்டேயாம்.

            வாழி கரந்தை வளருந் தமிழ்ச்சங்கம் 

            வாழி தமிழ்ப்பொழில் மாண்புடனே - வாழியரோ 

            மன்னுமதன் காவலராய் வண்மைபுரி வோரெவரும் 

            உன்னுபுக ழின்பலம் உற்று.

 

          நாவலர் பண்டித. நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார்.

கிண்ணிமங்கலம் லிங்கம் - முழுவடிவம், பின்னர் உடைபட்ட நிலை - ஒளிப்படங்கள்

 கிண்ணிமங்கலத்தில் இலிங்கவடிவில் உள்ள சிற்பத்தில் தமிழ் பிராமிக் கல்வெட்டு சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் வெளியானது. கிண்ணிமங்கலம் முகலிங்கத்தின் முதல் படம் முகநூல், தி ஹிண்டு நாளிதழ் இவற்றில் அச்சாயின. பின்னர், அதன் தலை உடைபட்ட நிலையில் உள்ள போட்டோவே மீடியாக்களில் வருகிறது. முதலில் வெளியான ஒளிப்படம், இப்போது பரவலாக வரும் படம் இரண்டையும் ஒப்பிட்டு, இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கிச் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். சோழ வரலாற்று ஆய்வுச் சங்கத் தலைவர்: அய்யம்பேட்டை ந. செல்வராஜ் மற்றும் குழுமம் இவற்றைப் படிக்க வேண்டுகிறேன். மேலும், கிண்ணிமங்கலக் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு, விருது அளிக்கும் விழாக்களில் உள்ள அறிக்கைகள், வரவேற்பிதழ்கள் இவற்றிலும் முழுமையான கிண்ணிமங்கலச் சிற்பத்தின் ஒளிப்படத்தைப் பயன்படுத்தினால் வரலாறு வருங்கால இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வர். வட்டெழுத்து ஓலைச் சுவடி, வட்டெழுத்து ஃபாண்ட் போல உள்ளது. மேலும், வட்டெழுத்துக் கல்வெட்டு இலக்கணப் பிழைகள் கொண்டதாய் இருக்கிறது. 
 
(1) Kinnimangalam Ekamukha Linga - earlier Intact form as found and later Broken form
http://nganesan.blogspot.com/2020/07/ekamukga-linga-intact-and-broken.html

(2) ஐந்து புள்ளிகளுடன் கூடிய கிண்ணிமங்கல இலிங்கக் கல்வெட்டு
http://nganesan.blogspot.com/2020/07/kinnimangalam-linga-brahmi-pulli.html
கிண்ணிமங்கலத்தில் முகலிங்கம் (நெட்ரம்பாக்கம் இலிங்கத்தில் உள்ளது போலவே தமிழ் பிராமி எழுத்து எழுதிய முறை முக்கியமானது.)

இரண்டு சிவாலயங்களில் தான் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன: (1) நெட்ரம்பாக்கம் (2) கிண்ணிமங்கலம். மற்ற சங்ககாலக் கல்வெட்டுக்களில் அனேகம்  மலைக்குகைகள், கற்படுகைகளில் சமணர்களின் தொடர்புடையவை. கிண்ணிமங்கலம் இலிங்கத்தை தலைகீழாகத் திருப்பித் தான் எழுத்துக்களைப் படிக்கவேண்டும். இதே போல, 2016-ல் கிடைத்த நெட்ரம்பாக்கம் இலிங்கத்திலும் “சேநருமான்” என்று எழுதியுள்ளதைப் படிக்கச், சிவலிங்கத்தை 180 பாகை தலைகீழாகத் திருப்பல் வேண்டும். மண்ணுக்குள் - பாதாள லோகம் சென்றுவிட்டதால், தலைவன் பேரை இவ்வாறு எழுதி, ஈமச்சீர்கள் செய்து, சிவலிங்கத்தை நாட்டுவது வழக்கம் எனத் தெரிகிறது. பள்ளிப்படைகொண்டான் பெயர் மண்ணுள்ளே மறைந்துவிடும். நெற்றம்பாக்கம் லிங்கத்தில் நெய்தல் மலர்களும், இலைகளும் உள்ள தடாகமும், அத்துடன் தமிழ் பிராமி எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. நெய்தல் நீர்ப்பூத் தாவரம் தொல்காப்பியத்திலே நெய்தல் திணைக் கடவுள் வருணன் தொடர்பைக் காட்டுகிறது. இவை பற்றி விரிவாக எழுதியுள்ள கட்டுரை:

(3) Ekamukha Linga with Tamil Brahmi inscription in Kiṇṇimaṅkalam Ekanathan Mutt
https://nganesan.blogspot.com/2020/07/ekamukha-linga-with-tamil-brahmi.html
Comparing Lingas of Netrambakkam and Kinnimangalam
In 2016, Tamil Brahmi inscription on a large linga in Netrambakkam village  Śiva temple was discovered. Dr. R. Nagaswamy read the inscription as, "cēntamān", https://www.thehindu.com/news/cities/chennai/Siva-Linga-with-early-Brahmi-inscription-found/article14009612.ece
However, upon re-examination, it is read as "cēnarumān", with cēnaru = armyfolk. cēnarumān will be son/heir of warriors. cēnaru is a tadbhava from sena, a Sanskrit word, while cēntan is Tamil for Murukan-Skanda. The most significant aspect of both the Netrambakkam and Kinnimangalam lingas is that they have to be rotated upside down for reading the script. From Tamil verb, cāy-tal, Sanskrit nouns like sayana 'bed', śava 'corpse' are derived. Extreme cāytal  is 180 degree turn limit and this is done in memorial linga writing. The Netrambakkam lingam has Neytal 'blue water lily, nymphaea violacea' flowers,  plant-symbol of Neytal Littoral (Sea) Landscape in Sangam texts showing the ancient connection of Linga form with Varuṇa, the neytal god. neytal paṟai is 'death drum' which Tiruvalluvar calls as "paṭāap paṟai".  The Netrambakkam inscription, with Neytal flowers and leaves, is dated to 2nd or 3rd century CE. Similar date can be assigned to Kinnimangalam image and inscription.
 
கிண்ணிமங்கலம் இலிங்கம் ஒளிப்படங்களைப் பார்த்து ஆராய்க. 
நா. கணேசன்
 
முதலில் அச்சாகிய கிண்ணிமங்கலம் இலிங்கம்:
 
https://1.bp.blogspot.com/-DWdBWdqPudE/XwRjvlmR1nI/AAAAAAAALAk/I7uXu9lhgQE2PQSo3fNWrF_J1v-gpbs6wCLcBGAsYHQ/s1600/image.png 
 
பின்னர் தலை சிதைந்த நிலை:
https://1.bp.blogspot.com/-xtkQzuJnQHg/XwRnc3gCDwI/AAAAAAAALAw/FgEv2ZaFiEwd9c98VVceJUwrbsCX7wN2QCLcBGAsYHQ/s1600/Eagan%2BAdhan%2BGottam%2Bhistory%2B27.jpg 
ஒப்பீடு.

 
 
 

 

சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani, 21st February 2021

உலகத் தாய்மொழி நாள் ஆகிய பிப்ரவரி 21, 2021 அன்று அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தலைவர், செயலர் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோளின் பேரில், பேரா. செ. வை. சண்முகம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), முனைவர் நா. கணேசன் (ஹூஸ்டன், அமெரிக்கா) எழுதி அனுப்பிய கட்டுரையைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஃபெட்னா பேரவைக் கடிதமும், நாங்கள் அனுப்பிய கட்டுரையும் வாசிக்கலாம். திருவள்ளுவர் திருநாள் எனத் தைத் திங்கள் பிறப்பு (பொங்கல்) அமைந்துவிட்டது. அதற்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல்நாள் (தமிழ் வருடப் பிறப்பு) அமைதற்கான வேண்டுகோள்.
அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை வேண்டுகோள்: 

உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani

By நா. கணேசன், Published on : 21st February 2021 09:45 PM
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.html
 

நாங்கள் இருவரும் தினமணிக்கு அனுப்பிய கட்டுரை வடிவம்:

தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாளைத் தருக

செ. வை. சண்முகம், நா. கணேசன்

தொல்காப்பியம் தமிழின் முதல் நூல், முதல் இலக்கணம். தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு. 2011 செப்டம்பர் 2-ம் தேதி, தினமணியில் எழுதிய கட்டுரையில் பேரா. தமிழண்ணல், மதுரைப் பல்கலையில் இருந்து ’சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனைத் தொல்காப்பியர் திருநாள்’ என அறிவிக்கலாம் என எழுதியிருந்தார். திருவள்ளுவர் திருநாள், தொடராண்டு என தைப் பொங்கல் அமைந்துவிட்டதையும், அதற்கு இணையாகத் தொல்காப்பியர் திருநாள் வேண்டும் என்பது தமிழறிஞர்களின் வேண்டுகோள். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தில் 6000 தமிழர்கள் ஒன்று கூடி அமெரிக்காவின் பெருநகரத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது, “தமிழின் உயிர் தொல்காப்பியம், தமிழரின் உயிர் திருக்குறள்” என்ற பெருவாசகம் முழங்குகிறது. 33 ஆண்டுகளாய், ஐம்பத்தைந்து அமெரிக்க நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள் கூட்டுப் பேரவை (fetna.org) இயங்குகிறது. பேரவைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, செயலர் சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் திருநாள் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தைப்பூசம், தமிழ்நாடு நாள் என்று புதிய விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் அடிப்படை நூலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு தினம்) வரும்போது, மாணவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தொல்காப்பியம், தமிழ்வழிக் கல்வி, நம் மரபுகள் இவற்றை வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும். திருவள்ளுவர் திருநாள் என பொங்கல் நாள் அமைந்துவிட்டது. அது தமிழ் இலக்கியத்தை உலகத்தார் எல்லோருக்கும் நினைவூட்டும் நாள். திருவள்ளுவர் போன்றோர் இலக்கியம் படைக்க தொல்காப்பியரின் இலக்கணம் அடிப்படை. தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.  திருவள்ளுவருக்குச் சில நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

பொருள் இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் Poetics எனப்படும். மேலை நாடுகளுக்கு எல்லாம் பொருள் இலக்கண நூலை எழுதியவர் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் ஆவார். இந்தியாவிலே முதலில் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதன் திணை, துறைகளும், ஆண்டின் ஆறு பருவங்களும், சூழலியல் உயிரிகளைப் பற்றிய மரபியலும் கொண்ட பொருள் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் தான். எனவே, தொல்காப்பியர் ‘கிழக்கு திசையின் அரிஸ்டாட்டில்’ என்று போற்றப்படுகிறார். திராவிட மொழிகளை ஆராயவும், வடசொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும், வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும், சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. தமிழரின் பெருமைகளில் முக்கியமானது தொல்காப்பியம்.

உலகளாவிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம், குழந்தையர் தினம். அமைதி தினம் என்று குறிப்பிட்ட திங்கள், குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவைகளுக்கு மேலாக அதை ஒட்டி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. அந்த நாட்டின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் நாள் ஆகியவைப் போற்றும் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. தொல்காப்பியம் மொழியியல், இலக்கியவியல் கருத்துகளோடு இயற்பியல் (‘ நிலம், தீ, நீர் வளியொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ( மரபியல் 91); உயிரியல் ( ‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே என்று ஆறு வகை அறிவையும் பட்டியலிட்டதோடு ( மரபியல் 27), அவைகளை உடைய உயிரினங்களையும் விளக்கியுள்ளது ( மரபியல் 28-33) ; தாவிரவியல் (ஓரறிவு உடைய தாவரங்களில் புல், மரம் வேறுபாடு, மரபியல்,87) ; உடலியல் ( உந்தி முதலாக முந்துவளி தோன்றி . என்று எழுத்து பிறப்பை விளக்குவது, பிறப்பியல் 1) ; சமூகவியல் ( உயர்ந்தோன், இழிந்தோன், ஒப்போன் என்று மொழி பயன்பாட்டு அடிப்படையில் விளக்கியதோடு (எச்சவியல். 48) அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று தொழில் அடிப்படையில் விளக்கியது ( மரபியல் 71- 86) என்பவைகளோடு நூலியல் ( செய்யுளியல் 164 - 170) மரபியல் 99-102, 106-109) உரையியல் ( செய்யுளியல் 78, மரபியல் 102-105) கருத்துகள் காணப்படுவதால் தொல்காப்பியம் தமிழின் முதல் அறிவியல் களஞ்சியம் ஆகும்.

தமிழ் மாதப் பெயர்கள் ஐ என்றும், இ என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தவரும் தொல்காப்பியரே ஆவார். உயிர் மயங்கியலில்  (46) இகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது  ’திங்கள்முன்னே  இக்கே சாரியை’  என்பதால் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, மார்கழி,பங்குனி என்பதும்,  சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மூன்றும் அடங்கும். இதே போல,  27 நட்சத்திரப்  பெயர்களின்  கடைசி எழுத்துகளுக்கும் தொல்காப்பியம் நூற்பாக்கள் வழங்குகின்றன. தமிழர்கள் வாழ்வில் சித்திரை 1-ம் நாள் (சகாப்தம்) வருடப் பிறப்பாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. மேட இராசியில் சித்திரை தொடங்குதலைச் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் முதன்முறையாகக் காண்கிறோம். வளர்முகமாக இந்நாள் அமைந்துள்ளது. சித்திரை முதல் பங்குனி ஈறாக எல்லா மாதங்களுக்கும் இலக்கணம் அளித்தவர் தொல்காப்பியரே. எனவே, எந்த நாளையும் விடப் பொருத்தமாகத் தமிழ் வருடப் பிறப்பு நாள் ஆகிய சித்திரை ஒன்று அமையும். அதனை, அரசாணை வெளியிட்டு, தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை 1) அன்று ’தொல்காப்பியர் திருநாள்’ என அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் என அறிவித்திட வேண்டுகிறோம். தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் பல கோடித் தமிழரும் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல செயல் எனப் பாராட்டுவர். தமிழ் கற்கும் குழந்தைகளுக்கும் தொல்காப்பியர் பற்றி நினைவூட்டத் தொல்காப்பியர்  திருநாள் என்றும் நின்று உதவும்.

செ. வை. சண்முகம்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

நா. கணேசன்                                                                                               

ஏரோஸ்பேஸ் விஞ்ஞானி , ஹூஸ்டன், அமெரிக்கா      
அணைக்கவா என்ற அமெரிக்கா! 1996

 ஈரோடு தமிழன்பன் ஐயாவின் முதல் அமெரிக்கப் பயண நூலில் சில பக்கங்கள். பக்கங்களைக் கிளிக்கினால் பெரிதாகிப் படிக்க வசதி. வருடி அலகிட்டு அனுப்பிவைத்த நண்பர், திரு. பெ. சண்முகம், நியூ யார்க் அவர்களுக்கு என் நன்றி பல.    நா. கணேசன்


 


 ஸ்ரீ இரமணர் ஷட்கம் - நாமக்கல் கவிஞர் பாடல்

                    நற்றவசி ரமணரிஷி

                                        - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை

    சித்தர்களும் முத்தர்களும் செறிந்து வாழ்ந்து
        சேர்த்துவைத்த தவப்பயனின் சிறப்பே யாகும்.
    எத்திசையும் இவ்வுலகில் எங்கும் காணா
        எழில்மிகுந்த தமிழ்நாட்டின் அமைதி என்றும்
    அத்தகைய மரபினுக்கிங் காக்கம் தந்தே
       அருணகிரி நாதனுடை அருளைத் தேக்கி
    முத்திநெறி காட்டுகின்ற மோன ஞான
       முழுமதியாம் ரமணமகா முனிவன் ஜோதி

    வெற்றியென்றும் வீரமென்றும் வெறிகள் மூட்டி
        வேற்றுமையே மக்களிடை விரியச் செய்து
    கற்றுணர்ந்த பெரியவரைக் கசக்கப் பேசும்
       கசட்டறிவின் தலையெடுப்பைக் காணும் இந்நாள்
    பற்றொழித்த மெய்ஞ்ஞானி இவரே யென்று
        பலகோடி பக்தர்மனம் பரவச் செய்த
    நற்றவசி ரமணரிஷி வாழ்ந்த வாழ்வே
        நம்நாட்டின் பெரும்புகழின் ஜீவ நாடி.
    
   அணுவினுடன் அணுமோதி அழியச் செய்தே
         ஆருயிர்கள் பதைபதைக்க அவதி மூட்டப்
    பணவெறியும் பார்வெறியும் பற்றித் தூண்டும்
         பாதகமே சாதனையாய்ப் படிக்கும் இந்நாள்
    அணுவினுடன் அணுசேர அணைத்து நிற்கும்
        ஆண்டவனின் திருவருளை அறியச் செய்த
    குணமலையாம் ரமணரிஷி மோன வாழ்வே
       கொடுமைகளை நம்மிடையே குறைக்கும் போதம்.

    இன்றிருந்து நாளைக்குள் மறைந்து போகும்
        இச்சிறிய உடலினுக்குள் புகுந்து கொண்டு
    நன்றிருந்து பேசுகின்ற 'நான்யார்?' என்று
       நாளில்ஒரு தரமேனும் நாடிப் பார்த்தால்
    'என்றிருந்தோம்? எங்குவந்தோம்? எதுநாம்?' எல்லாம்
       எளிதாகக் கண்டுகொள்வாய் என்றே சொல்லிக்
    குன்றிருந்த விளக்கேபோல் திசையைக் காட்டும்
       குறிக்கோளாம் ரமணமகா குருவின் வாழ்க்கை.

    இந்திரியச் சுகங்களுக்கே ஓடி யாடி
       இழிவடைந்து துறவடைந்தோர் பலபே ருண்டு
    வந்தகடன் தீர்ப்பதற்கு வழியில் லாமல்
        வைராக்யம் பூண்டவர்கள் வகையும் உண்டு
    கந்தையற்றுத் தரித்திரத்தின் கவலை மாற்றக்
       காவியுடை அணிந்தவரைக் காண்ப துண்டு
    வந்துதித்த நாள்முதலாய்ப் பரத்தை நாடும்
        வைராக்யம் ரமணரிஷி வாழ்வாய் நிற்கும்.

    சக்திகளில் மிகச்சிறந்த சக்தி யாகும்
        துன்பங்கள் சகிப்பதையே சாதித் திட்டான்.
    வித்தைகளில் மிகப்பெரிய வித்தை யாகும்
        விருப்புவெறுப் பில்லாத வேள்வி செய்தான்.
    உத்திகளில் உச்சநிலை உள்ள தாகும்
        உள்ளத்தில் பொய்யாமை உடைய னானான்
    சித்திகண்ட ரமணரைநாம் சிந்தித் திட்டால்
        சித்தசுத்தி பெற்றுமிகச் சிறந்து வாழ்வோம்.
                                            - நாமக்கல் கவிஞர்

ஹிண்டு, ஃப்ரண்ட்லைன் பத்திரிகைகளில் பல ஆண்டுகளாகத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், மெகாலிதிக் கால இடுகாட்டு பதுக்கைகள், கல்வட்டம், ... அணுசக்தி, இஸ்ரோ, விஞ்ஞானம் பற்றி எழுதிவரும் டி. எஸ். சுப்பிரமணியன் அண்மையில் ஹூஸ்டன் வந்திருந்தார். பழமையான வரலாறுகளைக் காட்டும் தொல்லியல் கண்டுபிடிப்புகள், சோழர், பாண்டியர் காலக் கோவில்களின் ஓவியங்கள், மண்டபங்கள் இடிக்கப்படுதல் போன்றமை மீது தம் அனுபவங்களை 2 மணி நேரம் பேசினார். ’தி ஹிண்டு’ வெளியீடாக, அண்மையில் அவர் எழுதிய ரமண மகரிஷி பற்றிய நூலை எனக்குப் பரிசளித்தார். அந்நூலும், பிறவும் ஹிந்து தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது: https://publications.thehindugroup.com/bookstore/Purchase அப்போது, ஓம்சக்தி (கோவை) இதழில் 2004-ல் வந்த நாமக்கல் கவிஞர் பாடலைப் பற்றி அனுப்பினார். முழுமையாக, ஆறு பாடல்களும், புலவர் கன்னியப்பன் பதிப்பில் உள்ளது இணையப் பல்கலை தளத்தில் உள்ளதைத் தந்துள்ளே

எண்சீர் விருத்தங்களான் இயன்ற இந்த ஆறு பாடல்களின் ஒரு சிறப்பு. முருகனின் திருமுறை தந்த அருணகிரிநாதரின் அருள்பெற்ற நற்றவசி (நல் தவசி) என்று போற்றுகிறார் நாமக்கல்லார். சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் ஆறுமுகனுக்கானதால், ஷட்கம் (ஆறு விருத்தங்கள்) ஆக ஆறு பாடல் செய்துள்ளார்.   

“ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும், ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே” அருணைத் திருப்புகழ்.
சிரவை மதிராஜா, சிரவை ஆதீனப் பள்ளி, கோவை: https://www.youtube.com/watch?v=GUWjwhT0O8I
https://www.youtube.com/watch?v=5fnvoCv4L6A
https://www.youtube.com/watch?v=vmq-QN8wAgU
https://www.youtube.com/watch?v=7gPfv_wFdpY
இரமண இருடியின் அடியார் இசைஞானி இசையில்: https://www.youtube.com/watch?v=fi_GK5weUqw&
சினிமாவில், https://www.youtube.com/watch?v=ywo_OMY1mXY
https://www.youtube.com/watch?v=_5hxDKqdVVg
இப்பாடலின் உள்ளர்த்தம் வாசிக்க:  http://kaumaram.com/thiru/nnt1328_u.html

புகழ்பெற்ற ஷட்கம் ஒன்று: https://en.wikipedia.org/wiki/Atma_Shatkam
நா. கணேசன்

" ஸ்ரீ ஸ்கந்த ஷட்கம் “ ⚜

ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்
ஓம் ஸ்ரீகணேஶாய நமஹ:

(1)
ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரெளஞ்சஶைல விமர்தநம் ।
தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸுரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என்தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(2)
தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸந ஸம்ஸ்திதம் ।
ஶக்திபாணிம் ச தேவேஶம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

தாரகாஸுரனை வதம்செய்தவனும், மயில் மீதுஅமர்ந்தவனும், ஞான வேலைக் கையில் தரித்தவனும்,சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(3)
விஶ்வேஶ்வர ப்ரியம் தேவம் விஶ்வேஶ்வர தநூத்பவம் ।
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீபரமேஶ்வரனின் அன்பிற்கு உரியவனும், தேவனும்,  ஸ்ரீவிச்வேஶ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும், மனதைக் கவருகின்றவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(4)
குமாரம் முநிஶார்தூல மாநஸாநந்த கோசரம் ।
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

குமரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும்,வள்ளியின் கணவனும், உலகங்களுக்கு காரணமானவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(5)
ப்ரலய ஸ்திதி கர்தாரம் ஆதிகர்தாரமீஶ்வரம் ।
பக்தப்ரியம் மதோந்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும், முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்புகொண்டவனும், ஆனந்தத்தால் மதம் கொண்டவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(6)
விஶாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம் ।
ஸதாபலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும், ஜடையை தரித்தவனுமான, சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(7)
ஸ்கந்த ஷட்கம் ஸ்தோத்ரமிதம் ய:படேத் ஶ்ருʼணுயாந்நர: ।
வாஞ்சிதாந் லபதேஸத்ய ஸ்சாந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத் ॥

ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்ரீஸ்கந்தனின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள், அவர்கள் கோரிய பொருளை உடன் அடைவார்கள். முடிவில் ஸ்ரீஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பார்கள்.

இதி ஶ்ரீஸ்கந்த ஷட்கம் ஸம்பூர்ணம் ॥