பால்வீதியின் நடுவே கருங்குழிப் பூதம்

பால்வீதியின் நடுவே கருங்குழிப் பூதம்
Monster of the Milky Way


கருங்குழி (black hole) தேற்றத்தை முதலில் உருவாக்கியவர் நோபெல் விஞ்ஞானி எஸ். சந்திரசேகர். முதலில் சந்திராவின் ஆசிரியர் எட்டிங்டன் (இங்கிலாந்து) இந்த 'சிங்குலாரிட்டி" (singularity) தியரியை ஏற்க மறுத்து எள்ளினார். கொஞ்ச நாளில் அறிஞர் சந்திரா சிகாகோவுக்குக் குடியேறினார்.

நம் உலகம் சுற்றிவரும் சூரியனை மையமாகக் கொண்டது சூரிய மண்டலம் (solar system). அதுபோன்ற கோடிக் கணக்காண நட்சத்திரங்களைக் கொண்டதுதான் அகண்ட பால்வீதி (Milky way). நம் உலகை அடக்கிய சூரியனைக் கொண்டியங்கும் பால்வீதியின் நடுவே ஒரு பெரிய கருங்குழிப் பூதம் இருக்கிறது. அதன் அருகில் வரும் நட்சத்திரங்கள் தன்வேகத்தை மிகவும் அதிகரித்துத் தன்பாதைகளில் சுழல்கின்றன என்பனவற்றை வானவியல் அறிஞர்கள் நாசா அறிவியல் கருவிகளைத் துணைக்கொண்டு (உ-ம்: Keck observatory (Hawaii), Chandra X-Ray Lab) (*) அண்மையில் சில ஆண்டுகளாகக் கண்டறிந்துள்ளனர். இப்பொழுது கருங்குழிப் பூதம் உண்ணாவிரதம் பூண்டிருந்தாலும், பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து நட்சத்திரங்களை விழுங்கும். இரு பால்வீதிகள் இணையும், விண்மீன்கள் (நம் சூரியன் உட்பட) மறையும், புதிதாய்த் தோன்றும். நாம் ஒன்றும் பயப்படத் தேவையில்லை, (1) நம் சூரியன் கருங்குழிக்குத் தொலைவில் உள்ளது (2) இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சூரியன் இருந்தபின்னரே மறையும் (அதுவரை மனித இனம் தன்னைத் தன்னிலிருந்து காத்துக் கொண்டால்)!!

7 அத்தியாயங்களில், ஒரு மணி நேர நிகழ்ச்சியாக, அமெரிக்கப் பொதுத்தொலைகாட்சி (PBS) ஒளிபரப்பியது. பல முன்னணி விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இப்போது அந்நிகழ்ச்சி வலைவலம் வருகிறது. முக்கியமாக, இலங்கை, தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் அறிவியல் வகுப்புகளில் காணப்படவேண்டும்:
http://www.pbs.org/wgbh/nova/blackhole/program.html

மேலும் அதிக விவரங்களுக்கு,
http://www.pbs.org/wgbh/nova/blackhole/explained.html
http://www.pbs.org/wgbh/nova/blackhole/

நா. கணேசன்

சங்கிலித் தேற்றம் (ஸ்ட்ரிங் தியரி) பற்றி ராமன் சுந்தரம் என்னும் அறிஞர் முனைந்து இருக்கிறார்.
http://www.sciam.com/print_version.cfm?articleID=000EB657-C6C7-1331-841D83414B7FFE9F

தாதப்பட்டி நெடுங்கல்லில் பழந்தமிழ்க் கல்வெட்டு

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கிடைக்கும் சான்றுகளால் தமிழின் மிகப்பழைய வரலாறு மீளாய்வுக்கு உள்ளாகும். வத்தலக்குண்டு (வெற்றிலைக்குண்டு), நிலக்கோட்டை ஊர்களுக்கு அருகில் வைகைப் படுகையில் பல சங்ககாலக் கல்வெட்டுகள் நெடுங்கல் (menhir), நடுகல் (hero stone) இரண்டிலும் இந்தியாவிலேயே முதன்முறையாகக் கண்டெடுக்கப் பெற்றுள்ளன.

அண்மைக்காலத்தில் அப்பகுதியிலே:
நிலக்கோட்டை ஜமீந்தார்கள் தமிழை ஆதரித்துள்ளனர். கூளப்ப நாயக்கன் காதல், விறலிவிடுதூது காமச்சுவை பொருந்தியன. முதலில் மதுரைத் திருமலை நாயக்கர் மீது பாடி, அங்கே வரவேற்பில்லாமல் போகப் பிறகு நிலக்கோட்டைக் கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிச் சுப்பிரதீபக் கவிராயர் பாடியுள்ளார். திருமலையை நிந்தித்துத் தூதில், "தொந்தி வடுகன் என்னைச் சுகியானோ" என்று இரு கணிகையர் வாதில் சொல்லாடுவதாய்ச் சுப்ரதீபம் குறித்தார் என்ப. சுப்ரதீபத்தின் அச்சாகாத பழனி மதனவித்தாரம் என்னிடம் சுவடியாக உள்ளது.

வத்தலக்குண்டு தேசபக்தர்களைத் தந்துள்ளது: அவ்வூர்ச் சுப்பிரமணிய சிவா சுதந்திரம் வேண்டிப் பாடுபட்ட பாரதி, வ.உ.சி போன்றவர்களுடன் உழைத்த பெரியவர். வெஞ்சிறையில் வாடுகையில் தொழுநோய் தொற்றிற்று. பாரதமாதா ஆலயம் தருமபுரி பாப்பாரபட்டியில் அமைக்க முயற்சிகளைத் துவக்கியவர். தமிழில் ஏறுதழுவலைச் சொல்லும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி. ஆர். ராஜமையர் வத்லகுண்டுக்காரர்தான். அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (The fatal rumour : a nineteenth-century Indian novel. B R Rajam Aiyar; Stuart H Blackburn, OUP, 1998). சி. சு. செல்லப்பா வாடிவாசல் என்ற நாவலிலும் அவ்வட்டார மரபை வடித்துள்ளார்.

2300 ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியில் தமிழ் தழைத்ததற்கு அரிய சான்றுகள் கிடைத்துள்ளன.

புலிமான் கோம்பை, தாதப்பட்டி என்னும் ஊர்களில்
கண்டறியப்பட்டுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகள்:


புலிமான் கோம்பை வீரக்கற்கள்:
http://www.hindu.com/2006/04/05/stories/2006040518340600.htm

கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள் ” என்று எழுத்துக்களில் பொறித்துள்ளனர்.

விளக்கக் கட்டுரை (எஸ். ராமச்சந்திரன்)

தீ- எனில் இனிமை என்ற பொருளும் உள்ளது. உதாரணமாக,
தீங்கனி, தீந்தேன் என்கிறோம். தீயன் என்றால் த்வீபம் என்னும் வடசொல்லின் தற்பவமாகி ஈழநாட்டாரைக் குறிக்கிறதா? தீபோல் சுடர்பவன் அல்லது இனியவன் என்பாரின் மகன் அந்துவன் என்று பொருள்தரும் தமிழ்ச்சொற்களா என்று ஆராய்தற்கு இடம் இருக்கிறது. கொங்குநாட்டில் அந்துவன் என்னும் வேளாண்மரபினர் வாழ்வதும், பதிற்றுப்பத்து போன்ற சங்க நூல்களையும் குறிப்பிடலாம். மேலும் ஒரு கட்டுரை:
http://www.keetru.com/vizhippunarvu/may06/sivakumar.php

பேரா. கா. இராஜன் அவர்களின் கட்டுரை:
http://www.keetru.com/puthuezhuthu/jul06/rajan.php

இரா. கலைக்கோவன், பாராட்டுவோம்.
http://www.varalaaru.com/Default.asp?articleid=339


மான்குளம் கல்லெழுத்துக்கள் சமண முனிவர்களைக் குறிப்பிடுவது. தமிழில் கி.மு.3-ஆம் நூற்றாண்டு காலம் அது என்பர். அதே காலகட்டத்து பழவெழுத்து மதுரை அரிட்டாபட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2003/09/15/stories/2003091503060500.htm

தற்போது புலிமான்கோம்பை நடுகற் கல்வெட்டுகளும் கி. மு. 3-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளுடன் சேர்ந்துள்ளன. அத்துடன், நிலக்கோட்டை வட்டம் தாதப்பட்டி நெடுங்கல் 'மென்ஹிர்' ஈமச்சின்னப் பழைய எழுத்துக்களும் கிடைத்துள்ளன:
http://www.hindu.com/2006/09/24/stories/2006092406750300.htm

ஊடகங்களில் நெடுங்கல்லில் உள்ள வாசகம் தரப்படவில்லை. ஈரோடு செ. இராசுவிடமும்,
கா. ராஜன் அவர்கள் கி. நாச்சிமுத்துவுக்கு அனுப்பிய மின்மடலிலும் அறிந்த தொடரை இங்கே
நீங்கள் படிக்கத் தருகிறேன்:
" ..தன் அடிஓன் பாகல் பாளி கல் " என்று நெடுங்கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

"தன்" என்பதன்முன் உள்ள எழுத்துக்கள் அழிந்தன. அது சாத்தன், ஆதன், பூதன் என்பதாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அடிஓன் = அடியோன். பாகல் என்பது ஒருவரின் பெயர்.

பாகல் என்ற சொல் பலாக்காய், பாகற்காய் என்ற அர்த்தத்தில் இலக்கியச் சான்றுகளில் பயில்கிறது. பாகல் என்றால் பச்சை என்ற பொருள் இருக்கலாம். கருப்பராயன் என்பதுபோல், பச்சைமால், அல்லது பச்சைவண்ணராகிய பாரிசநாதர் (ஒரு தீர்த்தங்கரர்) என்னும் பொருளில் பாகல் என்ற பெயர் ஏற்பட்டதா?? அவர் குரவடிகளா?

தமிழ் எழுத்தின் தாக்கம் பட்டிப்ரோலு பெட்டகப் (Bhattiprolu casket inscription) பழஎழுத்தில் உள்ளது என்பதாக அறிஞர் கொள்வர். ஏற்கெனவே தமிழுக்கும், பாலி மொழிகளுக்கும் தெற்கே (தமிழகம், இலங்கை) முதலில் எழுத்துக்கள் உருவாகி வடக்கே எழுத்துமுறை பரவியதாகச் சொல்லும் சில அறிஞரின் கருதுகோள் அரிட்டாபட்டி, புலிமான்கோம்பை, தாதைப்பட்டிப் பண்டை எழுத்துக்களால் வலுப்பெறுகிறது.

அனுராதபுரம், ஆதித்தநல்லூர் முதுமக்கள் தாழிகள் - இவற்றில் கிடைக்கும் கிமு. 3, 4 நூற்றாண்டு எழுத்துக்களும் இப்புதிய கண்டுபிடிப்புகளும் மேலும் ஆராயப் படுதல் வேண்டும். சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக, பிராமி எழுத்துக்களுக்கும் செமித்திக் (மேற்கு ஆசியா) எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்புகளை ஜார்ஜ் 'ப்யூஹ்லர் போன்றோர் குறித்துள்ளனர். கடல்வழி நடந்த வணிகத்தால் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் எழுத்துமுறை பரவியதா? என்றறிய ஆய்வுகள் இனி நிகழும் என்று நம்பலாம். இந்தியாவில் வடக்கே வேதங்களை எதிலும் எழுதவே கூடாது என்ற தடை இருந்தது. செய்யாமொழி(1), எழுதாமறை என்பது வழக்கம். மொழியியலில் இந்திய எழுத்துக்களுக்கு விஞ்ஞான அடிப்படையில் நெடுங்கணக்கு வகுத்த பாணினி தன் இலக்கணத்தை வாயால் மொழிந்தார் என்பது இந்தியவியல் (Indology) கோட்பாடு. வணிகம் நிமித்தமாக சிரமண சமயங்கள் (சமணம், பௌத்தம்) ஆதரித்த எழுத்தறிவு வடக்கே தெற்கிலிருந்து போய், அசோகச் சக்கரவர்த்தியால் அரசாணைக் கல்வெட்டுகள் மூலம் பரவலாக்கப் பட்டனவா?

இக் கேள்விகளுக்கு விடைகள் தொல்பொருள் ஆய்வுகள் இனி வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆய்வேடுகளில் வெளிவரும். அரிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த தொல்லறிஞருக்கு முதலில் நாம் நன்றி பாராட்டுவோம்.

நா. கணேசன்

ஆய்வுத்துணை:
[1] A. Parpola, Pandaie and SItA: On the historical background of the Sanskrit epics, Journal of the American Oriental Society 122 (2), 2002 p. 361-373.
[2] S. U. Deraniyagala and M. Abeyratne. 'Radiocarbon Chronology of Anuradhapura, Sri Lanka: A Revised Age Estimate'. p.759-789
[3] Coningham R.A.E. 1995. The Origins of the Brahmi Script Reconsidered: The New Evidence from Anuradhapura. Minerva 8(2): 27-31.
[4] Coningham R.A.E. 2002. Beyond and Before the Imperial Frontiers: Early Historic Sri Lanka and the Origins of Indian Ocean Trade. Man and Environment 27: 99-108.
[5] Coningham R.A.E., Allchin F.R., Batt C.M. & Lucy D. 1996. Passage to India? Anuradhapur and the Early Use of the Brahmi Script. Cambridge Archaeological Journal 6(1): 73-97.
[6] Coningham R.A.E. 1995. Monks, Caves and Kings: A Reassessment of the Nature of Early Buddhism in Sri Lanka (Ceylon). World Archaeology 27: 222-242. South Asian Archaeology 1997 Vol. II, 2000, Roma, Italy
மேலும்,
https://www.dur.ac.uk/archaeology/staff/?id=2880&publications=1


குறிப்பு 1: செய்யாமொழி
பேரா. கி. நாச்சிமுத்து (கேரளப் பல்கலை)
"திருவள்ளுவர் அடிப்படையில் சமணர். திருக்குறள் சமண நூலாகவே கருதப்பட்டு வந்தது. அவரும் அவருடைய குறளும் சமணரல்லாதாரால் தம் சார்பினதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுச் சமணருக்கு அன்னியமாக்கப்பட்ட வரலாற்றையே வள்ளுவமாலை காட்டுகிறது" என்பார். 11-ஆம் நூற்றாண்டு வள்ளுவமாலைப் பாடல், செய்யாமொழி என்று அபௌருஷேயத்வம் என்னும் வைதீக தத்துவத்தை மொழிபெயர்க்கிறது.

         செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
         பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
         அதற்குரியர் அந்தணரே; ஆராயின் ஏனை
         இதற்குரியர் அல்லாதார் இல் (வள்ளுவமாலை 28)

         ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நால்மறையைப்
         போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
         வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
         சொல்லிடினும் ஆற்றல்சோர்வு இன்று (வள்ளுவமாலை 15)


செய்யாமொழியை எழுதத் தடை இருந்திருக்கிறது. எனவே, தெற்கில் எழுத்து முதலில் தோன்றியதோ?

------

It will be very interesting to find Tamil Brahmi I phase inscriptions where
distinct maatrai markers for vowels, a and aa in Tamil inscriptions.
More about the Tamil-type phenom in BhaTTiprOLu in Andhra Pradesh:
http://www.services.cnrs.fr/wws/arc/ctamil/2006-10/msg00000.html

பத்திரிகைச் செய்தி:

2300ஆண்டுகள் பழமைவாய்ந்த தூயதமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு:
Apr 5 2006

2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன.

இவை ஈமச்சின்னங்களில் நாட்டப்பட்ட நடுகற்களாக இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட முதல் கல்வெட்டில் 'கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'கூடல் என்ற ஊரில் நடைபெற்ற ஆகோள் பிணக்கில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுத்த கல்" என பொருள் கொள்ளலாம்.

இரண்டாவது கல்வெட்டில் இரு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அனால் அக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து காணப்படுவதால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றில் சில சொற்களே காணப்படுகின்றன. முதல்வரியில் 'அன் ஊர் அதன்" என்றும் இரண்டாவது வரியில் 'ன் அன் கல்" என்றும் எழுதப்பட்டுள்ளது.

மூன்றாவது கல்வெட்டில் 'வேள் ஊர் பதவன் அவ்வன்" என பொறுக்கப்பட்டுள்ளது. 'வேற்று ஊரைச் சேர்ந்த அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட கல்" என இது பொருள்படுகிறது.

இக்கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் முற்று முழுதாக தூய தமிழ் எழுத்துக்களாகும். இதில் எழுதப்பட்டுள்ள சொற்கள் சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்பிராமி வரிவடிவ ஆய்வில் புலமை பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு, அவை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தில் கிடைத்த தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருத சொற்கள் கலந்து வரும். ஆனால் இக்கல்வெட்டுக் து}ய தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பழமை வாய்ந்தவையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று ஊடகர்களிடம் இது தொடர்பில் தெரிவித்ததாவது: இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை, கள ஆய்வு மூலமும், அகழாய்வு முலமும் வெளிக்கொணர்ந்து, சங்க கால வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருப்பது, தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழியென நிரூபிக்க ஆதாரமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இக்கல்வெட்டுக்கள் மீட்பின் மூலம் சங்க காலத்தமிழர்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இக்கல்வெட்டுக்கள் மீட்கப்பட்ட புலிமான்கோம்பையும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் பெருமளவான ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகளுக்கு ஒரு தோரணவாயில்

தமிழில் 3 வலைத்திரட்டிகள் இயங்கிவருவதைப் பலரும் பயன்படுத்துகிறோம்:

(அ) தமிழ்மணம்:
http://thamizmanam.com

(ஆ) தேன்கூடு:
http://thenkoodu.com

(இ) தமிழ்ப்லாக்ஸ்:
http://tamilblogs.com

புதிய வலைத்தோரண வாசல் ஒன்றைப் பாரதத்தின் பல மொழிகளுக்கும் கூகுள் தந்துள்ளதைக் கண்டேன். நம் தமிழின் வலைவாசல்:
http://www.google.com/blogsearch?lr=lang_ta&q=site:com

முக்கியமான வசதி என்னவென்றால் ஒரு தேடுசொல் கொடுத்து எளிதாகத் தேடமுடிவதுதான். மேலும் சென்ற ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ துழாவலைக் குறுக்கமுடிகிறது. எப்போதும் போல், கூகுளின் எளிமை, அதன் பரந்துபட்ட வியாபகம், தமிழில் வரும் எல்லா வலைப்பதிவுகளையும் காட்டும் திறன், திரட்டி நடத்துநரிடம் எழுதிப் பதிவு செய்ய அவசியமினமை - இப் புதிய திரட்டியின் சிறப்பம்சங்களாகத் தோன்றுகின்றன. திங்களுக்கு ஒருமுறை இதில் காட்டும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையைக் குறித்துவைத்தால் தமிழில் ப்லாகுகள் வளர்ச்சி பின்னால் ஆராயப் பயன்படும்.

இந்தத் திரட்டியின் தொடுப்பில், lang_ta என்னும் தொடரில்,
ta (= தமிழ்) 2 எழுத்தை மாற்றி ml = மலையாளம், te = தெலுங்கு, kn = கன்னடம், gu = குஜராத்தி, pa = குருமுகி (பஞ்சாபி), th = தாய் (தாய்லாந்து மொழி), ko = கொரியன், bo = திபெத்தியம் என்று பிற மொழிகளின் பதிவுநீட்சியைக் கணக்கிடலாம்.

எனக்கு, சிங்களம், ஹிந்தி (தேவநாகரி எழுத்து), வங்கம், கிமர் (கம்போடியம்) பதிவுகளைத் தேடும் முறை தெரியவில்லை. தெரிந்தால் மடலிடுங்கள்.

நன்றி,
நா. கணேசன்

புகையிலை விடுதூது - ஒரு பிரபந்தம்

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன. இன்று மிளகாய் இல்லாவிட்டால் தமிழ்ச்சமையல் இல்லை என்பதுபோல் தோன்றிடினும் மிளகாய் உருவான இடம் மத்திய அமெரிக்காதான். மிளகாய்க்கு முன்னர் குறுமிளகு பயன்பட்டது. குறுமிளகைத் தேடிவந்த வெள்ளைக் காலனி மேலாண்மையர் அதனை இந்தோனேசியாவில் பயிரிடத் தொடங்கிய பின்னர் விலைசரிந்தது.

புகையிலை நூதனமாகத் தமிழகத்தில் அறிமுகமான பின்னர், முருகனுக்கு நிவேதனமாக அளிக்கும் வழக்கம் ஒன்று ஏற்பட்டது. விராலிமலையில் சுப்பிரமணியருக்குச் சுருட்டுப் படையல் உண்டு. பழனியைச் சுற்றிலும் வேளாண்மக்களால் புகையிலைப் பயிர் சாகுபடி இன்றும் ஆகிறது. பழனி மலையில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக் கடவுள்மீது புகையிலையைத் தூதுவிடுவதாக ஒரு பிரபந்தம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனிச் சர்க்கரைப் புலவர் பாடியிருக்கிறார். அதனை மதிப்பிற்குரிய உவேசா அவர்கள் அச்சுவாகனம் ஏற்றினார்கள். சீனிச் சர்க்கரைப் புலவர் இராமநாதபுரம் ஸம்ஸ்தான வித்துவானாக விளங்கிய சர்க்கரைப்புலவரின் குமாரர்; காளையார்கோயில் மருதுபாண்டியரைக் குறிக்கும் மயூரகிரிக் கோவை இயற்றிய சாந்துப் புலவரின் தம்பியார்.

உவேசா தன் முன்னுரையில் புகையிலை மீதான சில பழைய தனிப்பாடல்களைத் தந்துள்ளார்:

         நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
         காலுந் தலையுங் கடைச்சாதி - மேலாக
         ஒட்டு முதலெழுத்து மோதுமூன் றாமெழுத்தும்
         விட்டாற் பரமனுக்கு வீடு


(நாலெழுத்துப்பூடு = புகையிலை. 1, 4 எழுத்து = புலை. 1,3 எழுத்தை நீக்கினால், பரமன் வீடு = கைலை)


         ஊசிக் கழகு முனைமழுங் காமை யுயர்ந்தபர
         தேசிக் கழகிந் திரிய மடக்கல் தெரிகலன்சேர்
         வேசிக் கழகின் னிசைபல நூல்கற்ற வித்வசனர்
         நாசிக் கழகு பொடியெனக் கூறுவர் நாவலரே.


ஆ. இரா. வெங்கடாசலபதி 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை' (காலச்சுவடு பதிப்பகம்) என்ற நூலில் இப்பிரபந்தத்தையும் ஆய்கிறார். பின்னர் அப்புத்தகம் In Those Days There Was No Coffee: Writings In Cultural History என்ற ஆங்கில மொழிபெயர்ப்பும் ஆனது.

சீனிச்சர்க்கரைப் புலவர் இயற்றிய புகையிலை விடுதூது:
http://groups.google.com/group/CTamil/msg/6f5f04035dd7e2bc
பழைய உவேசா பதிப்பிலிருந்து தட்டெழுதினேன். அதில் இச் சிற்றிலக்கியத்தில் உள்ள கதையின் சாரமும் இணைத்தேன். புகையிலை விடுதூது பற்றிய கருத்துக்கள் உண்டா?

சீனிச்சர்க்கரைப் புலவர் (கி.பி. ~1800)
இயற்றிய
புகையிலை விடுதூது

பதிப்பாசிரியர்:
மகாமகோபாத்தியாய தாக்‌ஷிணாத்திய கலாநிதி
உ. வே. சாமிநாதையரவர்கள்,
பதிப்பாண்டு: 1939

[திருமாலுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

சீர்தந்த மாநிலத்திற் செல்வப் பயிர்தழைப்ப
நீர்தந்த பச்சை நிறங்கொண்டே - ஏர்தந்து

கார மணைந்து கனநீரிற் கண்வளர்ந்து
பாரை மணந்து படியளந்து - சாரமுடன்

எல்லார்க்கு மாலா யிசைந்து பரந்தோங்கிப்
பல்லா யிரவடிவம் பாரித்தே - அல்லாமல்

அம்புகையிற் சாரங்க மான தனுவெடுத்துத்
தம்ப வரிவடிவந் தானாகிச் - சொம்புடனே

[சிவபெருமானுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

தோலுரியும் போர்த்துத் துலங்கவன லேந்திநிறை
பாலத்து வெண்ணீறு பாலித்தே - கோலமுள்ள

பாசடையுங் கொண்டு பசுங்கொழுந்து பாலுகந்து
காசடையா ருக்கருமை காண்பித்துக் - காசினியில்

அம்பலத்துண் மேவிநிறைந் தங்காடி நின்றுநல்ல
தம்பமெனப் பித்தேறித் தாணுவாய் - இன்பமுடன்

நன்பிரமை கொண்டு நலத்தினா னற்பதங்கொண்
டன்பர்சுமை தாங்க வரனுமாய் - பண்பாய்

[பிரமதேவருக்கும் புகையிலைக்கும் சிலேடை]

மறைவாய் வளர்ந்து மனுக்களுண்டு பண்ணி
நிறைவாய் நாலுமுக நேர்ந்து - பிறர்தேறா

வாசவனஞ் சேர்ந்து மலர்க்கொம்பு தாங்குதலாற்
றேசு தரும்பிரம தேவனுமாய் - நேசமுள்ள (10)

முத்தே வருமாய் முளைத்தெவருங் கொள்ளவரும்
சித்தே புகையிலையே செப்பக்கேள் - வித்தகமாய்

[தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

ஏடதனை யாய்ந்தே யிலகுபதி கஞ்சேர்த்துப்
பாடமது போற்றிமொழி பன்னியே - கூடுபல

கோவை புனைந்து குறித்து வளமடல்சேர்
பாவுசந்த மேவிப் பதங்கொண்டு - சேவைபெறக்

கட்டமைந்து நற்பரணி கண்டுவிலைக் கானபின்பு
செட்டமைந்து பின்மதுரஞ் சேரவே - மட்டில்லாத்

தாவில்பல வித்தையுடைத் தாகித் தமிழ்போல
நாவில் விளையாடு நாமகளாய்ப் - பூவுலகில்

[புகையிலையின் வரலாறு]

வந்த புகையிலையுன் மாமகத்து வங்களைநான்
எந்த விதமென் றியம்புவேன் - விந்தையதாய்

மூவரொரு வர்க்கொருவர் முன்னொருகால் வாதாகித்
தேவ சபையகத்துச் செல்லவே - மேவிவிண்ணோர்

உங்கள்விவ கார முரைப்போம்பின் னாகவென்று
தங்குமொவ்வோர் பத்திரம தாகவே - அங்கவர்பாற்

கூவிளமும் பைந்துளவும் கொள்ளும் புகையிலையும்
தாவளமாய்க் கைக்கொடுத்துத் தாமனுப்ப - ஆவலுடன்

பின்மூவ ரந்தப் பெருஞ்சபையில் வந்தவுடன்
முன்கொடுத்த பத்ர முறைப்படியே - அன்பினுடன் (20)

தாருமென்ற போதிற் சதாசிவனார் பத்திரமும்
கார்வண்ணர் பத்திரமுங் காணாமல் - நேரான

கங்கை யிடத்துங் கவின்பாற் கடலிடத்தும்
பொங்குமலை தான்கொண்டு போகவே - இங்கிதஞ்சேர்

ஓகையுட னேபிரம னுற்ற நமதுபத்ரம்
போகையிலை யென்று புகன்றுடனே - வாகுகலை

வாணிதிருக் கையினின்றும் வாங்கியிந்தா வென்றுவைக்க
நாணியிரு வோரு நயவாமற் - பூணும்

வழக்கிழக்கச் செய்தந்த வானோர்முன் வெற்றி
விளக்கவுன் னாமம் விளக்கத் - துளக்கமொடு

ப்ரம்மபத்ர மென்றெவரும் பேசவே வந்துதித்த
தன்மப் புகையிலையே சாற்றக்கேள் - இன்னம்

[புகையிலையின் பெருமை]

குடியாத வீடு குணமாகா தென்றும்
விடியாதென் றுங்கூறல் வீணோ - படிமேற்

குடியா தவனாநீ கொற்றவன்கா ணுன்னைக்
குடியா தவன்சா குடியே - வடிவாக

எட்டுமா சித்திதரு மேகசித்து மூலிகைக்கும்
இட்டமா நீகலப்ப தில்லையே - திட்டமுடன்

வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய
சாடிப் பொடிக்குச் சரியுண்டோ - நாடியே (30)

கற்றுத் தெளிந்த கனப்ரபல வான்களுமுன்
சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ - மற்றொப்பில்

ஆகாய முன்புகைபோ லானமையா லேயரனார்
ஆகாய மேகாய மாயினார் - வாகான

தாம்பூல நாவுக்குச் சாரமது தானுமுன்றன்
காம்பி லடக்கமன்றோ கட்டழகா - வீம்பாகப்

பூராய மான பொருளை வெளிப்படுத்தும்
சாராயந் தானுனக்குத் தம்பியோ - நேரா

அதனகா மீசுரமா யார்க்குமயல் பூட்டும்
மதனகா மீசுரமச் சானோ - விதனமற

மோகப் பயிராய் முளைத்த புகையிலையே
தாகப் பயிரான சஞ்சீவீ - ஆகத்தின்

அச்ச மகற்றுவிக்கு மாண்பிளைநீ யுன்றனக்கோர்
அச்சமகத் துக்குவர லாகுமோ - விச்சையுடன்

காரமுங் காயக் கடுமையுமுண் டாமுனக்கோர்
ஈரவெங்கா யப்பகையு மேதையா - கூரும்

தகையிலையன் றோதெரியுந் தானுன் னருமை
புகையிலையே தெய்வப் பொருளே - சகமேவும்

பூத்தான மாகப் பொருந்துதிரு மாதுவளர்
பூத்தான மான புகையிலையே - பார்த்தாய்ந்து (40)

நண்ணிய மாதவத்தோர் நாடோறுந் தேடுகின்ற
புண்ணிய மான புகையிலையே - எண்ணியெண்ணிக்

கொத்தடிமை யாக்கிக் குடிகுடி யாண்டுவரும்
புத்தமுத மான புகையிலையே - வர்த்தனைசேர்

லாபமும் வர்த்தகர்க்கு நம்புவிடர் கட்குச்சல்
லாபமுங் காட்டு நயக்காரா - சோபமுடன்

வெட்டுண்டு பின்னே வெயிலிற் கிடந்தாலும்
கட்டுண்டு வந்ததென்ன காரணங்காண் - தொட்டாற்

குறுகுறுத்துத் தும்முங் குணத்துடனே பின்னும்
கிறுகிறுப்ப தென்ன கெறுவம் - முறுகப்

பகைக்கட்டாய்க் கட்டும் படுசூலைக் கட்டும்
புகைக்கட்டா லோடாதோ போக - நகையாக

முன்பொரும லையை முனிந்துவெகு வாய்மலைபோற்
றன்பொரும லைத்தீர்க்குஞ் சாமியே - அன்பாகப்

பாவியுனை நட்டுப் பலன்காணார் தம்மைமுழுப்
பாவியென்று சொல்வார் பலருமே - நாவினாற்

சொற்காட்டு நல்ல துடிகார ராரையும்போய்ப்
பற்காட்ட விட்ட பழிகாரா - கற்கவென்று

பார்த்திப ரான பரத்தை வயற்குடியார்
போற்றி வளர்க்கும் புகையிலையே - தோத்திரமாம் (50)

காங்கயம் யாழ்ப்பாணங் கானக் கறுப்பனுடன்
பாங்குபெறு குள்ளம் பலவாக - நீங்கா

அழகன் குளமுதலா மானசரக் கெல்லாம்
பழகு முனக்கிணையோ பார்க்கின் - புளகமது

கொண்ட புகையிலையே கொள்ளு மெனதுமயல்
உண்டதனை நின்பா லுரைக்கக்கேள் - வண்டிசைந்த

[பழனியாண்டவர் பெருமை]

பூங்கடப்ப மாலையான் போரசுரர் தங்களுயிர்
வாங்கடப்ப வேலையான் வாலவுருப் - பாங்குபெறு

கந்தன் முருகன்வேள் காங்கேயன் வள்ளிபுணர்
சொந்தமண வாள துரந்தரிகன் - அந்தம்

தருபழனி யூரனெங்கள் சண்முகவேள் வீதிக்
கொருபவனி மாமயின்மே லுற்றான் - வருபவனி

[தூது சென்றுவர வேண்டுதல்]

சேவிக்க யான்போய்த் தெரிசிக்கு மவ்வளவிற்
கோவித்து மாரனம்பு கொல்லவே - ஆவலுடன்

ஆகினே னென்மயக்க மாருரைப்பா ருன்னையன்றி
வாகுபெற நீபோய் வகையாக - ஓகையுடன்

சென்றுரைத்துத் திண்புயமேற் சேர்ந்திலகு பூங்கடப்ப
மன்றல்கமழ் தார்வாங்கி வா. (59)

- சுபம் -
" புகையிலையின் வரலாறாக இப்பிரபந்தத்திலே கூறப்படும்
கற்பனைக்கதை வருமாறு:

ஒருமுறை மும்மூர்த்திகளுள்ளே ஒரு வழக்கு உண்டாயிற்று. அதனைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் தேவர்கள் கூடியுள்ள சபைக்குச் சென்று தம் வழக்கை எடுத்துரைத்தனர். தேவர்கள் அவற்றைக் கேட்டபின், "உங்கள் வியவகாரத்தைப் பிறகு கவனித்துக்கொள்வோம்" என்று சொல்லி அம்மூவர்களிடத்தும் வில்வம், திருத்துழாய், புகையிலை என்னும் இவற்றைக் கொடுத்து இவற்றை மறுநாள் கொண்டுவரச் சொல்லியனுப்பினர். அவர்கள் மூவரும் அங்ஙனமே சென்றனர். சிவபெருமான்பாற் கொடுத்த பத்திரமாகிய வில்வத்தைக் கங்கையின் அலை கொண்டு போயிற்று; திருமாலிடம் கொடுத்த திருத்துழாயைப் பாற்கடலிலுள்ள அலை கொண்டுபோயிற்று. பிரமதேவர் தாம் பெற்ற புகையிலையைத் தம் நாவிலுள்ள கலைமகளிடத்திற் கொடுத்துவைத்திருந்தார். மறுநாள் மூவரும் விண்ணவர் சபைக்கு வந்தபோது தேவர்கள், "முன்னே நாம் கொடுத்த பத்திரங்களைக் கொடுங்கள்" என்று கூறவே சிவபெருமானும் திருமாலும் விழித்தனர்; "எங்கள் பத்திரங்கள் போயின" என்று அவர்கள் கூறினர். அது கண்டு மகிழ்ச்சியுற்ற பிரமதேவர் கலைமகளிடத்திலிருந்து புகையிலையை வாங்கி, "இதோ, எனக்கு அளித்த பத்திரம்" என்று முன்வைத்து, "மற்றவர்கள் பத்திரங்கள் போயின; என்னுடையது போகையிலை" என்று கூறினார். அவர் கூற்றில் புகையிலை யென்பதன் மரூஉவாகிய போகையிலை என்னும் பெயர் தோன்றியது; பிரமதேவரிடமிருந்து நழுவாமல் அவருக்கு உரியதானமையின் அதனைப் பிரம்ம பத்திரம் என்று யாவரும் அன்றுமுதல் வழங்கலாயினர். பிரமதேவர் தாம் கூறிய வழக்கில் வெற்றிபெற்றனர். ஏனை இருவரும் தம் வழக்கிழந்தனர்."

பதிப்பாசிரியர்:
மகாமகோபாத்தியாய தாக்‌ஷிணாத்திய கலாநிதி
உ. வே. சாமிநாதையரவர்கள்,
பதிப்பாண்டு: 1939

வையவலை வைப்பு:
டாக்டர் நா. கணேசன்

தமிழுக்கு ஒரு புதிய வலைவாசல்

இ-கலப்பையை யுனித்தமிழுக்கு மேம்படுத்திப் பலரும் பதிய வாய்ப்பளித்த முகுந்த் புதிதாகத் திறமூல மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு வலைத்திரட்டி அளித்துள்ளார். http://tamilblogs.com

வலைப்பதிவர்கள் அங்கேயும் பதிந்துகொள்ள வேண்டுகிறேன், http://tamilblogs.com/submit_blog.php

வலைத்திரட்டிகள் வடிவமைப்போர் மற்ற இந்திய மொழிகளில் நடப்பதையும் பார்த்துத் தமிழுக்கு அந்நுட்பைக் கொணர்தல் வேண்டும். வலைச்சுவடிகளின் சில வரிகளையும் சுட்டிகளையும் ஒரு கூகுள் குழுமத்தில் சேர்த்தால் பல மாதங்கள், ஆண்டுகள் சென்றபின் தேடுதல் எளிது. எடுத்துக்காட்டு:
http://groups.google.com/group/blog4comments

நன்றி, நா. கணேசன்

மலையாள வார்த்தை - இன்னலெ (நேற்று)

இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடர்பை நன்கு விளக்கிய பதிவை ஜெகத் அவர்களின் பதிவில் வாசித்தேன்:
http://kaiman-alavu.blogspot.com/2006/08/blog-post.html
"இரண்டு மொழிகளில் உள்ள சொற்களுக்கு இடையே உள்ளத் தொடர்பை அறிய வழக்கொழிந்துவிட்ட பழஞ்சொற்களைப் பற்றிய அறிவும் தேவை. எடுத்துக்காட்டாக, 'இன்று' என்பதை 'இண்ணு' என்றும் 'நாளை' என்பதை 'நாள' என்றும் சொல்லும் மலையாளிகள் 'நேற்று' என்பதை மட்டும் 'இன்னலெ' என்று ஏன் சொல்கிறார்கள் என்று நான் குழம்பியதுண்டு. இதற்கான விளக்கம் வேங்கடராஜுலு என்பவர் எழுதிய "தமிழ் சொல்லமைப்பு" என்ற நூலில் கிடைத்தது. பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை). நென்னல் என்பதே கன்னடத்தில் 'நென்ன' என்றும் மலையாளத்தில் இன்னலெ என்றும் திரிந்திருக்கிறது."

என் பின்னூட்டம்: சிந்தனையைத் தூண்டும் பதிவு. திராவிட மொழிக் குடும்பச் சொற்களுக்கும், இந்தோ-ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கும் இவ்வாறு தொடர்பு அனேகமாக இருக்காது.

'தென்மொழிக் கட்டுரைகள்', சமணர் நூல்களாம் ஸ்ரீபுராணம், மேருமந்தர புராணம் போன்றவற்றை அச்சிட்ட பேரா. வேங்கடராஜுலு ரெட்டியார் என்று நினைக்கிறேன். நூலின் பதிப்பு விவரம், பதிப்பகம், அச்சான ஆண்டு, மொத்தப் பக்கம் அறிய ஆவல்.

சொல்முதல் நகரவொற்று கெடுதல் வேறு சொற்களிலும் பார்க்கமுடியும். காட்டுகள்:
(1) நெருநல் > நென்னல் > இன்னலெ
மணிமொழியாரின் திருவெம்பாவையில் நென்னலை என்ற சொல் பயில்கிறது.
(2) நீர்+அம் (சாரியை) > ஈரம்.
(3) நுண்ணி(ய) > உண்ணி
குருவாயூரில் குழந்தையாய்த் திகழ்பவர் உண்ணிக் கிருஷ்ணன் (நுண்மை ~ மழலை).
கவிஞர் கண்ணதாசன் அழகான கவிதைகள் உண்ணிக் கண்ணன் மீது பாடினார்.
தமிழில், நாய்மேல் உள்ள நுண்பூச்சியை உண்ணி என்கிறோம்.

உடல் என்னும் சதைப்பிண்டத்தில் ஏறும்/உகும் உயிரை, உகிர் > உசிர் > உயிர் என்றானதா? என்று பார்க்கவேண்டும்.

மேலும், வடசொல்லாகிய நகம் என்பதற்குத் தெளிவான இந்தோ-ஐரோப்பிய மூலம் காணோம் என்கின்றனர். நுகம் > நகம் என்றாகியிருக்கலாம். ஒப்பீடு: புல்லி > பல்லி, நுணா > நணா (திருநணா (பவானி) - சம்பந்தர் பாடிய தலம்.கூடுதுறை). உகிர் (நகம்) - நுகம் என்ற சொல்லின் முதல் ந அழிவதால் ஏற்படுவதா? என்னும் ஆய்வுவினாக்கள் எழுகின்றன.

மேலும் பார்க்க:
Consonant assimilaton in Tamil and Sanskrit
ஆஸ்கோ பார்போலா அவர்களின் மறுமொழி:
Prof. Parpola's reply

நா. கணேசன்

எண்ணாயிரம் - காளமேகத்தின் ஊர்

காளமேகப் புலவரின் ஊர் என்ன என்று 17-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றின் மூலம் புலப்படுகிறது. அக்கல்வெட்டு காஞ்சி வரதராசப்பெருமாள் கோவில் இராயகோபுரத்தில்
தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கண்டறிந்தனர்.

கல்வெட்டில் நேரிசை வெண்பா:

         மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த
         கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்
         அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;
         இவனுக்கூர் எண்ணா யிரம்!


வெண்பாவின் சுவையும், சிலாலிகிதம் ஆன பெற்றியையும் நோக்குங்கால் காளமேகத்தின் பாடலே என எண்ணத் தோன்றுகிறது. கண்ணபிரானுக்கும், காளமேகத்திற்கும் உள்ள ஒப்புமைகளை இயம்புகிறது: கண்ணன் என்றால் கருப்பன் எனப்பொருள் (கிருஷ்ண > கண்ஹ, பிராகிருதத்தில்). காளமேகம் வரையாது வழங்கும் கருமுகில். கண்ணபெருமானுக்கு திருவரங்கம் ஒன்றுதான் ஊராம். ஆனால், காளமேகத்துக்கோ ஊர் எண்ணாயிரம் (8000!) என்கிறது
பழைய கல்வெட்டு. இன்றைய எண்ணாயிரம், டாக்டர் இரா. கலைக்கோவன் கட்டுரை:
http://www.varalaaru.com/Default.asp?articleid=359

திருவானைக்கா உலா: 3 பதிப்புகள் உண்டு. 1870கள், பின்னர் மு. அருணாசலம், இன்னும் ஒருபதிப்பு - சைவ ஆதீனம். இருக்கின்றன, தட்டெழுதலாம்.

சித்திரமடல்: 1880-ல் அச்சானது. பின்னர் ஆழ்வார் திருநகரிப் பிரதிப்படி வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் 1948-ல் பெ. தூரனின் கோவை புதுமலர் நிலையம் மூலம் பதிப்பானது. இரண்டும் ஒப்பிட்டு 1978-ல் கழக வாயிலாகவும் வெளியானது. தட்டெழுதலாம்.

அன்புடன்,
நா. கணேசன்

இரவாவின் காளமேகப் பாட்டுரை

முத்தமிழ் குழுமத்தில் முனைவர் இர. வாசுதேவன் அவர்களின் உரை.

மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


உரை:


நின் பெருமை பொருந்திய கைகளிலே யிருந்து ஒலிக்கும் வளைகளும், வளர்கின்ற சக்கரவாகப் பறவையினைப் போன்றதாக விளங்கும் தன பாரங்களும், அழுத்தமாகப் பொருந்தித் தாக்கிய விடத்துச் சிங்கத்தைத் தாக்கி யழிக்கும் சிம்புள் என்னும் வடிவை மேற்கொண்ட சிவபெருமானின் வலிய திருமேனியும் குழைந்து போயினதே!


அதுதான் எப்படியோ?


உலகத்தைப் படைத்து வளம் பெருக்கி அழகான அறச்சாலையிலே அனைவருக்கும் உணவும் அளித்து உயிர்களைக் காக்கும் பொருட்டாக, ஒப்பற்ற மாமரத்தின் கீழே அமர்ந்து, தவமிருக்கும், கருமை நிறமும், குயிலினும் இனிய குரலும் உடையவளான உமையே! அதனை எனக்குச் சொல்வாயாக!


அன்புடன்
இரவா
http://thamizhkkuil.blogspot.com/
http://thamizmandram.blogspot.com/
www.thamizhkkuil.com

யூனிகோடு தளத்தில் தமிழ் குறியேற்றம் பற்றிய அறிவிப்பு

இன்று ரிக் மெக்காவனின் மடலொன்றின்படி,தமிழ் குறியேற்றம் பற்றிய அறிவிப்பு ஒன்றைக் காணலாம். "A new FAQ page on Tamil issues has recently been added:
http://www.unicode.org/faq/tamil.html "

Unicode Named Character Sequences தமிழின் மெய்யெழுத்துக்களைச் சேர்த்தலாமா? என்று பலமுறை யுனிகோட் கன்சார்த்தியத்தாரிடம் கேட்டிருக்கிறேன். இப்பொழுது அதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.

மாலத்தீவு எழுத்துக்கள் அரபி எழுத்துக்களைப்போல் இருந்தாலும் தமிழின் தாக்கம் உண்டு. தமிழுக்கு மெய்யெழுத்துக்கள் code chart-ல் இல்லாதது போல, தானா எழுத்துக்களுக்கு யுனிகோட் அதற்கு உயிர் எழுத்துக்கள் இல்லாமல், வெறும் உயிரெழுத்து மாத்திரைகளைத் (vowel signs) தந்துள்ளது. மாலத் தீவு எழுத்துக்களுக்கும் தனி உயிரெழுத்துக்களின் தொடர்களை அதிகாரப்பூர்வமாக்க விண்ணப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.
http://www.unicode.org/charts/PDF/U0780.pdf

நா. கணேசன்

காஞ்சி காமாட்சியிடம் காளமேகத்தின் கேள்வி

காளமேகப் புலவர் 6 பறவைகள் வரும்படியாக ஒரு பாடல் செய்திருக்கிறார்: நாரை (குருகு), சக்ரவாகம், சிம்புள் (சரபம்), காக்கை, கொக்கு, குயில். இறுதி மூன்றும் ஈற்றடியிலே இருப்பது அதன் சிறப்பம்சம்.

மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


காஞ்சியில் கம்பா நதிக்கரையில் மணலால் இலிங்கம் தாபித்து உமையம்மை வழிபடுகையில் வெள்ளம் வர, சிவலிங்கத்தைத் தழுவினார். அதனால் பிருதுவித்தலம் என்ற பெயரும், வளைத்தழும்பு போன்றவையால் தழுவக் குழைந்தநாதர் என்ற பேரும் உண்டு என்கிறது தலபுராணம். சுந்தரமூர்த்தி நாயனார் கச்சியில் கண்பெற்று இக்கதையைச் சொல்லியிருக்கிறார்:

         எள்கல் இன்றி இமையவர் கோனை
                  ஈசனை வழிபாடு செய்வாள் போல்
         உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
                  வழிபடச் சென்று நின்றவா கண்டு
         வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
                  வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
         கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
                  காணக் கண் அடியேன் பெற்றவாறே!

                                                                       சுந்தரர் தேவாரம்

சரி, காளமேகம் பாட்டுக்கு வருவோம்.
பிற்காலச் சோழர் காலக் கோயில்களில் (உ-ம்: தாராசுரம் (குடந்தை) ) நரசிம்மரை அடக்க சிவபிரான் சரபேசுவரராகத் தோன்றினார் என்னும் சிற்பங்களைக் காணலாம். சரபம் ஒரு வலிய பறவை, மூக்கு கருடன் போலேயும், சிறகுகள் கொண்டதாகவும், சிங்கம் போன்ற உருவமுடனும் இருப்பதான கற்பனை வடிவம். திருபுவனம் என்ற ஊரில் உள்ள சரபமூர்த்தியின் படிமம் வெகு அழகு. கண்டபேரண்டப் பறவையாகப் பெருமாள் வந்து சரபம் அடங்கிற்று என்னும் வைணவக்கதையும் உண்டு.

குருகு என்றால் நாரை. வெண்ணிற சங்குகளால் வளையல்கள் சிந்துநதி நாகரீகந்தொட்டு அணிந்துள்ளனர். சங்க இலக்கியங்களில் சங்கின் வளையல்களைப் பரக்கக் காணலாம். மாக்கைக்கு இரங்கும் கை = மகிமை பொருந்திய பிராட்டியின் கைகளில் ஒலிக்கும் வளைகளின் தழும்பும், சக்கிரவாகப் பறவைகள் சோடியாக வாழ்வன, இணைபிரிந்தால் உயிர்துறக்கும். சக்கரவாகம் என்பது நகிற்சுவடு இப்பாட்டில். சக்கிரவாகத்தின் சுவடுகளாலும் எவ்வாறு சரபப்புள் குழைந்தது? என்று அம்பிகையை முன்னிறுத்திக் கவிஞர் கேட்கிறார். தழுவக் குழைந்த புராணம் பேசப்படுகிறது:
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு?


காமாக்‌ஷி அம்மன் அன்னச்சாலை நாட்டிக், கணவன் உட்பட உலகத்திற்கே படி அளந்தாள். காக்கை = (உலகைக்) காத்தல். கொக்கு = மாமரம், காஞ்சியில் மாமரம் தலவிருட்சம். அதனால் வடமொழியில் ஏகாம்ரேசுரர், (ஏகாம்பரம்) என்று பெயர். ஆம்ரம் = மாமரம். காமாட்சிதன் அண்ணன் விஷ்ணு போலக் கருத்த கருங்குயில். சாதாரணமாக, குயில் மாமரத்தில் மேல் இருக்கும். கச்சியிலோ குயில் போலும் அன்னை மாமரத்தின் கீழ் வீற்றிருக்கிறாள் என்கிறார் கவிஞர்.

                                                                                                  சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!

(நம்மைக் காத்தற்பொருட்டாய் மாவடி வைகும் குயிலாகிய அம்மையே!).

காளமேகப் புலவர் காஞ்சி காமாட்சி அம்பிகைமேல் சொல்லியது:
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


இன்னும் சில பழைய பாடல்களைப் பார்க்கலாமா?

நா. கணேசன்