இந்த வாரம், 19, 20-ம் நூற்றாண்டுகளின் ஆய்வாளர் பெ.சு. மணி இயற்கை எய்தினார். நரசையாவின், ‘இரு சுந்தரர்கள்’ (புதுகைத் தென்றல், டிசம்பர் 2012) கட்டுரையும், பெ.சு. மணியின் மறுமொழியும், ஓர் அரிய ஒளிப்படம் (1977) இணைத்துள்ளேன். இவற்றை 2012-ல் எழுதிய கடிதத்தில் நரசையா அனுப்பியிருந்தார். பழைய கணினியில் கிடைத்தது. அமரர் பெ. சு. மணி அவர்கள் குறிப்பிடும் ‘ஆதியூர் அவதானி சரித்திரம்’ பழைய நூல் என்னிடம் உண்டு. சேலம் பகடால நரசிம்மலு நாயுடு அவர்களின் நூலகத்தில் இருந்து பலரிடம் சென்று எனக்கு வந்த அரிய நூலாகும்.
அமரர் பெ.சு.மணி அவர்களின் கட்டுரைகள், நூல்கள், ஆய்வுகள் யாவும் நாட்டுடமை ஆகி, இணையத்தில் பிடிஎஃப் கோப்புகள் ஆகவேண்டும்.
~ நா. கணேசன்
முன்வரிசை: எஸ். ஆர். வேங்கடராமன், கி. சந்திரசேகரன், மபொசி, சோ. சிவபாதசுந்தரம், தீபம் நா.பா.
நிற்பவர்கள்: பெ.சு.மணி, வி. சுப்பிரமணிய ஐயர் (ஜி. சுப்பிரமணியையர் பேரன்), சுப்ரபாலன், சிட்டி, விக்கிரமன்
இரு சுந்தரர்கள் (சிட்டி சுந்தரராஜன் - சிவபாதசுந்தரம்)
நரசய்யா
இரண்டாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்த இந்த இலக்கிய இரட்டையர்கள், தமிழுக்குச் செய்துள்ள மகத்தான சேவையை தமிழுலகம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை போலும்! 1912 ஆம் ஆண்டில் பிறந்த சிவபாதசுந்தரத்தின் நூற்றாண்டு நிறைவினை தமிழுலகச் சஞ்சிகைகள் (அமுதசுரபி தவிர) எவையும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை!
சோமசுந்தரம் என்பவ்ரின் குமாரராக சிவபாதசுந்தரம் யாழ்ப்பாணத்தில் ஆகஸ்டு 27, 2012 ல் பிறந்தார். அவ்வூர் மத்தியக் கல்லூரியிலும், கொழும்பு சர்வகலாசாலையிலும் படித்து சட்டத்தையும் கற்றுக் கொண்டபின்னர், வ. ரா வைத் தொடர்ந்து கொழும்பு பத்திரிகையான ஈழகேசரிக்கு ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்போது இலங்கை வானொலி ஒலிபரப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவரது திறமையைக் கண்டு லண்டன் பி. பி. சி நிலயம் இவரைத் தமிழோசை நிகழ்ச்சியை நடத்த அழைப்பு விடுத்தது. மிகச் சிறப்பாக அவ்வேலையைச் செய்த இவருடைய திறமை உலமெங்கும் வாழும் தமிழர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அந்த அனுபவத்தை ஆதாரமாக வைத்து இவர் எழுதிய நூல் ஒலிபரப்புக் கலை என்பதாகும். இந்நூல் அமுத நிலயத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் சிறப்பு, அதற்கு ராஜாஜி அவர்கள் எழுதிய ஆசியுரை தான்! சாதாரணமாக, ராஜாஜி அவர்கள் எந்த நூலுக்கும் முகவுரை எழுதுவதில்லை என்பதை ஒரு விரதமாகவே எடுத்துக் கொண்டவர். ஆனால் சிவபாதசுந்தரம், அவரை அணுகியபோது அந்நூலின் பிரதி ஒன்றைப் பெற்றுக் கொண்டார். அவரே சொல்கிறார்: “ ஆசிரியர் தம் புஸ்தகத்தின் ’ஒத்திகை’ அச்சுப் பிரதி ஒன்று எனக்கு அனுப்பித் தம் நூலுக்கு நான் ஒரு முன்னுரை எழுதி உதவ வேண்டுமென்று கடிதத்தில் கேட்டிருந்தார். சில காலமாக நான் ஒருவர் கஷ்டப்பட்டு எழுதிய நூலுக்கு மற்றொருவர் விஷயம் ஒன்றும் தெரியாமல், யாதொரு தகுதியுமில்லாமல், ஏதோ காரணங்களால் ’முன்னுக்கு’ வந்துவிட்டவர், எல்லாம் தெரிந்தவரைப் போல முன்னுரை எழுதி வரும் வழக்கம் தவறு என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் பல நூலாசிரியர்களுக்கு இல்லை, இல்லை, முடியாது என்று சொல்லி வந்தேன். சிலர் இந்த ஏமாற்றத்தால் என்பேரில் கோபமும் கொண்டதுண்டு! திரு சிவபாதசுந்தரத்துக்கும் இப்படியே இல்லை என்று எழுதிவிடவேண்டும் என்பதாக நிச்சயித்துக் கொண்டே, புஸ்தகத்தைப் பார்க்கலாம், எப்படியிருக்கிறதோ என்று ஏடுகளைத் திருப்பினேன். . .” என்று தான் ஆரம்பிக்கிறார். ஆனால் படிக்கப் படிக்க, ராஜாஜிக்கு அந்நூல் மிகவும் பிடித்து விட்ட காரணத்தால் ஒரு முன்னுரையும் எழுதி விட்டர்! இறுதியாக நான்கு பக்கங்களில் அம்முன்னுரையை முடிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்: “. . .ரேடியோவில் சேர்ந்து உழைப்பவர்களுக்கு அந்த வேலை செய்வதில் உள்ளத்தில் மகிழ்ச்சி ஊறவேண்டும்; எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும் போது உள்ளத்தில் திருப்தி பொங்க வேண்டும் என்று ஆசிரியர் சரியாகச் சொல்லியிருக்கிறார். அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தப் புது தெய்வத்துக்காக அர்ப்பணம் செய்யலாம். நிலையத்து உத்தியோகஸ்தர்கள், பேச்சாளர், சங்கீதக்காரர், ஆசிரியர்கள், நடிகர்கள், எல்லோருக்குமே நூல் மிகவும் பயன் படும். இந்த நூலுக்குப் பெயர் ‘ரேடியோ வாத்தியார்’ என்றே வைத்திருக்கலாம் – இராஜகோபாலாச்சாரி” என்று முடிக்கிறார்!
இதைத்தான் வசிஷ்டர் வாயால் மகரிஷி என்று சொல்வார்களோ!
ஒலிபரப்புக் கலையில் தேர்ந்த சிவபாதசுந்தரத்தைத்தான், சென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக அழைத்தது.
சிவபாதசுந்தரம், மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (1947) என்ற நூல் மூலம் பிரயாண இலக்கியத்தில் தமிழுக்கு ஒரு புது மரபை உண்டாக்கியவர். இவர் எழுதிய கெள்தம புத்தர் அடிச்சுவட்டில் இலங்கை சாகித்ய மண்டலத்தின் பரிசு பெற்றது. தமிழ் எழுத்தாளர்களுடன் இருந்த நெருக்கமான தொடர்பு காரணமாக சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டர். தொடர்ந்து சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகச் செயல் பட்டார். 1972 ஆம் ஆண்டில், கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி. ராஜம் அய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகச் செயல் பட்டார். சிட்டியும் சிவபாதசுந்தரமும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப்பட்டனர். இலக்கிய இரட்டையர்கள் என்றறியப்பட்ட இவ்விருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக் கழகங்களால் வருகை தரும் பேராசிரியர்களாக அழைக்கப்பட்டனர்.
1986 ஆம் வருடம், மே மாதம் 16, 17 தேதிகளில் மதுரைப் பல்கலைக்கழகம் யூனிவர்சிடி கிராண்ட்ஸ் கமிஷன் சார்பில், கிழக்கு மேற்கு இலக்கியத் தொடர்புகள் என்ற கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதை அன்றைய பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ். கிருஷ்ணசுவாமி துவக்கி வைத்தார். சுமார் நாற்பது உரைகள் சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் கருத்தரங்கைக் குறித்து ஹிந்து நாளிதழ் மிகச் சிறப்பாக, இலக்கிய இரட்டையர்களான் சிட்டியும் சிவபாதசுந்தரமும் இவ்வரங்கில் கலந்துகொண்டது விழாவிற்கு மதிப்பைக் கூட்டியது என்று குறிப்பிட்டது!
பெரிய புராணத்து63 நாயன்மார்கள் பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று பாடி பெருமை சேர்த்த நிகழ்ச்சிகள் தொடர்பான சம்பவங்கள் ஆராய்வதற்காக சிவபாதசுந்தரம் மேற்கொண்ட பயணத்தில் முன்னர் இலங்கை வானொலியில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவில் 2001 ல் காலம் சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சிட்டி, பரராஜசிங்கம், சிட்டியின் குமாரர் வேணுகோபாலன் கலந்துகொண்டனர். இதை ஒரு மறக்கமுடியாத அனுபவ்மென சிட்டி கூறுவார்.
சிவபாதசுந்தரத்தின் சிறந்த தமிழ்ச் சேவை அவர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து கொணர்ந்த சில அரிய தமிழ் நூல் பிரதிகள். தூசில் வீரவல்லி சேஷய்யங்கார் எழுதிய ஆதியூர் அவதானி சரித்திரம், (1875) மற்றும் பிரணதார்த்திஹரன் என்பவர் எழுதிய சிலப்பதிகார ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகும். இவை பின்னர் சிட்டியால் கண்டெடுத்த கருவூலம் என்ற பெயரில் வெளியிடப்பட்டன்.
இவ்விரு சுந்தரர்களும் தமிழுக்கு ஆற்றிய பணியைத் தமிழுலகம் சரியாகக் கண்டுகொள்ளவில்லை என்பது தான் வருந்தத்தக்க விஷயம்!
3 comments:
இவ்விரு சுந்தரர்களும் தமிழுக்கு ஆற்றிய பணியைத் தமிழுலகம் சரியாகக் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனைதான்
வணக்கம் ஐயா!
என் பெயர் விஜய், நான் ஒரு தமிழிசை ஆய்வாளன். உங்கள் தமிழிசை குறித்த பதிவுகளை minTamil கூகுள் குழுமத்தில் கண்டு உங்கள் ஆர்வம்/தமிழிசை அறிவு அறிந்தேன்!
minTamil குழுமத்தில் நான் தமிழிசைக்காக ஒரு திரியைத் துவங்கியுள்ளேன். https://groups.google.com/g/mintamil/c/EH0rHdpwQMA தங்களைப் போன்ற அறிஞர்கள் ஆர்வலர்கள் அதில் பங்குபெற அன்புடன் அழைக்கின்றேன், நலிந்துவரும் தமிழிசையை மீட்கவேண்டிய சூழலில் உள்ளோம் அனைவரும். நன்றி வணக்கம்!
வணக்கம் ஐயா,
என் பெயர் ஆதிஸ்வரன்.
த.சரவணத்தமிழன் ஐயாவின் தமிழ்நூல் புத்தகத்தைப் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். அந்த இலக்கண நூலைப் படிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால் தற்போது இணைய நூலகத்தில் அப்புத்தகம் கிடைக்கவில்லை. தங்களிடம் அந்நூல் இருப்பின், எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனது மின்னஞ்சல் adhiselvaraj20@gmail.com.
நன்றி!
Post a Comment