ராஜாளியார் வாழ்த்து - வித்வான் ம. கோபாலகிருஷ்ணையர்

 தொல்காப்பியருக்கு அரிய சிலை வடித்து உதகை மாவட்டக் குன்னூரில் நிறுவி 10- செப்டம்பர்-1911-ல் பெரிய விழா எடுத்தவர் தமிழ்ப் புரவலர் அரித்துவாரமங்கலம் இரகுநாத இராசாளியார் ஆவார். அரித்துவார மங்கலம் தேவார காலத்தில் அரதைப் பெரும்பாழி என்ற பாடல் பெற்ற சிவத்தலம். 10-செப்டம்பர்-1911-ம் தேதி உதகை மக்கள் வாசித்தளித்த வரவேற்புப் பத்திரத்தின்படி, தொல்காப்பியர் சிலை ஒரு முனிவரைப் போல இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆனால், ஒரு ஐம்பது, அல்லது அறுபது ஆண்டுகளாக அதனைக் குன்னூரில் கண்டார் இல்லை. http://nganesan.blogspot.com/2021/04/tolkappiyar-statue-coonoor-september.html

ஒருவேளை, பழைய இத் தொல்காப்பியர் சிலையின் ஒளிப்படம் எங்காவது இருந்து வெளிச்சத்துக்கு எதிர்காலத்தில் வரலாம்.

பனம்பாரனார் பாடிய பாயிரத்தில் ’முந்துநூல்’ என்பது என்ன என ஆர்தர் கோக் பர்னல் தொடங்கிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். “மயங்கா மரபின் எழுத்து முறை காட்டுதல்” என்பது தமிழி (அ) தமிழ் பிராமி என்னும் சங்ககாலக் கல்வெட்டுகளில் புள்ளிக் கோட்பாடு எனத் தெரிய வருகிறது. முத்தாய்ப்பாகப், பனம்பாரனார் ’படிமையோனே’ எனத் தன் பாயிரத்தை நிறைவு செய்கிறார். படிமை (< படிமா) என்று தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல்லானது சமணர்கள் இடையே மட்டும் இருப்பதை அவர்கள் நூல்கள் அறிவிப்பதாலும், ஓருயிரில் இருந்து ஆருயிர் ஈறாக உயிரிகளைப் பகுக்கும் கோட்பாடு சமண நூல்களில் இருப்பதாலும், தொல்காப்பியர் அச் சமயம் சார்ந்தவர் என்ப. சங்க காலத் தமிழ்க் கல்வெட்டுகளை மதுரை, கொங்குப் பகுதிகளில் ஆராய்ந்தாலும் இம்முடிபு சரியே எனக் காட்டிநிற்கின்றன.

தொல்காப்பியர் சிலை முதலில் நிறுவப்பெற்று 110 ஆண்டுகள் சென்றுவிட்டன. இன்று ஆறாம் திணையாகிய இணையம், திறன்பேசி யுகம் மலர்ந்துவிட்டது. உலகமெலாம் தொல்காப்பியர் புகழைப் பரப்பும் வகையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை (http://fetna.org) ஒவ்வோர் ஆண்டும் சித்திரை முதல்நாளைத் தொல்காப்பியர் திருநாள் எனக் கொண்டாடுகிறது. இசை நிகழ்ச்சிகள், தமிழ் இருக்கைகளுக்கு ஆதரவு, அருவி என்னும் இதழின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் (14 ஏப்ரல் 2021) எனப் பல்வேறு வகையான விழாக்களை எடுத்துப் பரப்பிவருகிறது. முதல் தொல்காப்பியர் திருநாள் தொடர்பாக, பேரவை நடாத்திய ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் இலக்கியத் தமிழிசை நிகழ்ச்சி:  https://www.youtube.com/watch?v=kKETavfXgZY . தினமணியில் அச்சான கட்டுரை:  http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

மதுரை வித்வான் திரு. ம. கோபாலகிருஷ்ணன் பாரதியாருக்குப் பல்லாற்றானும் உதவியவர். ஆங்கிலப் பாக்களைத் தமிழில் தருவதில் நிகரற்றவர். மதுரையில் செந்தமிழ்ப் பாடசாலை, இலக்கியப் பத்திரிகைகள் நடத்தியவர். ராஜாளியார் கொடைத் திறத்தை அறியப் புலவர் ம.கோ. பாடல்கள் உதவுவன.  தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரால் ’மதுரை மாப்பிள்ளை’ என்று அழைக்கப்பெற்ற ராஜாளியாரை வாழ்த்திப் புலவர் கோபாலகிருஷ்ணையர் இயற்றிய பாக்களை, அதன் மூல அச்சு நூல் ஆகிய அரும்பொருட்டிரட்டில் இருந்து குடவாயில் பாலு அவர்கள் அனுப்பினார்கள். அன்னாருக்கு என் மனங்கனிந்த நன்றி. 

அமெரிக்கப் பேரவையின் அருவி இதழின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் முகப்போவியமும், கட்டுரைகளின் பொருளடக்கமும் இணைத்துள்ளேன். தொல்காப்பியர் திரு ஓவியம் வரைந்த மணியம் செல்வன் அவர்களுக்கு நன்றி.

10-செப்டம்பர்-1911 உலகில் முதன்முதலாக, நீலகிரிக் குன்றூரில் தொல்காப்பியர்க்குச் சிலை ராஜாளியார் நிறுவினார் எனக் குறிப்பிடும் நேரிசை வெண்பா.

               வாழ்த்து

திருமால் திருப்பதியெண் சேர்த்துமே லொன்று

வருநாளில் குன்னூரில் வாழுந் திருவாளர்

நாட்டியரா சாளியார் நற்புத் தகசாலை

நாட்டினிலே வாழ்கநெடு நாள்!

 குறிப்பு:

விஷ்ணு திருப்பதி எண் = 108, 108+1 = 109.

அதாவது:

வருஷம் - விரோதிகிருது - 45

மாதம் - ஆவணி - 5

தேதி - 25

கிழமை - ஞாயிறு - 1

நட்சத்திரம் - உத்திரட்டாதி - 26

இலக்கினம் - துலாம் - 7

45 + 5 + 25 + 1 + 26 + 7 = 109.

இதற்குச் சரியான ஆங்கில காலண்டர் தேதி: 10-செப்டம்பர்-1911 ஆகும்.

https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=10/09/1911

 ஆங்கிலத் தேதி 10-9 (1911)-க்கு இணையாக, 109 என்ற எண்ணைக் கணக்கிடும்போது தமிழ்ப் பஞ்சாங்கமும் இணைந்திருப்பது அருமை. 

~ நா. கணேசன்






3 comments:

முனைவர் சிவ. இளங்கோ said...

அருமை திரு கணேசன்
தங்கள் பணி மகத்தானது. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு நாங்கள் எல்லாம் என்ன செய்கிறோம் என்று நினைக்க வைத்து விட்டது.
வளர்க உங்கள் தொண்டு.

முனைவர் சிவ. இளங்கோ said...

அருமை திரு கணேசன்
தங்கள் பணி மகத்தானது. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு நாங்கள் எல்லாம் என்ன செய்கிறோம் என்று நினைக்க வைத்து விட்டது.
வளர்க உங்கள் தொண்டு.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் அயரா தேடல் போற்றுதலுக்கு உரியது ஐயா.
நிச்சயம் விரைவில் தொல்காப்பியரின் முதல் சிலையின் படம் வெளிச்சத்திற்கு வரும் ஐயா