தொல்காப்பியர் திருநாள் – நினைவலைகள்
கு.சிவமணி
மேனாள் முதல்வர், கரந்தைப்புலவர் கல்லூரி,தஞ்சாவூர்/திருவள்ளுவர்
ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
தொல்காப்பியரின் நாளும் காலமும் குறித்துக் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில் சிலவற்றை நினைவுகூர்ந்து தொல்காப்பியர் திருநாளை நிலையுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இற்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி- குன்னூரில் நூலகக் காதலரான தஞ்சை மாவட்டத்துப் பெருநிலக்கிழார் ஒருவர் ஒரு நூலகத்தை நிறுவி அதற்குப் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார் –அத்துடன், அந்நூலக வளாகத்தில் தொல்காப்பியர் சிலையை 10.9.1911 அன்று நிறுவி அந்தநாளைத் தொல்காப்பியர் திருநாள் எனக் கொண்டாடினார். அவர் - தமிழ், ஆங்கிலம், சமற்கிருத மொழிகளில் வல்லவர்; இசை, சித்த மருத்துவம், யோகம் முதலாய பலகலைகள் பயின்றவர். அவர்காலத்திய சென்னை மாகாண ஆளுநர் சர். ஆர்தர் லாலி, மாவட்டத் துணையாட்சியர் ஆஸ்டின் போன்ற ஆங்கில ஆட்சியாளர்களின் நெருங்கிய நண்பர்; புதுதில்லியில் 12.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டிக்கொண்டபோது சிறப்பு விருந்தினராகக் குடும்பத்தோடு அழைக்கப்பெற்றவர்; தமது இனத்தைக் குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டி மன்னரிடம் நேரடியாக வாதுரைத்து வெற்றிக்கு வித்திட்டவர்; தமது சிற்றூரில் காரனேசன் நூலகம் என்ற ஒரு பெரிய நூலகத்தை உருவாக்கி, அரிய நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் திரட்டிக் காத்துப் பின்னாளில் சங்கநூல் பதிப்பித்த டாக்டர் உ வே. சாமிநாதையர், ஔவை துரைசாமிப்பிள்ளை, பின்னத்தூர் நாராயணசாமிஐயர் போன்ற பலருக்கும் அவற்றைக் கொடுத்துதவியவர்; சுற்றுப்புறத்துள்ள 50 சிற்றூர்களின் நலம் கருதி ஔடதசாலை அமைத்தவர்; பெரும்புலவர் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் பிணிநீக்கி உயிர்காத்து அவரது தொல்காப்பியப் பாயிரவிருத்தி நூலைத் தாமே பார்வையிட்டு வெளிட்ட புலமைநலஞ் சான்ற புரவலர். அவரே அரித்துவாரமங்கலம் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் எனும் மாநிதிக் கிழவர். (சிதைந்துள்ள அச்சிலையையும் நூலகத்தையும் தமிழக அரசு பேணிக் காக்கவேண்டும் எனும் தீர்மானத்தைத் திருவள்ளுவர் இலக்குவனார் அரசுக்கு அனுப்பினார்.)
1902இல் தொல்காப்பியம் பற்றிய முதல் கட்டுரையை மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் செந்தமிழ் இதழில் ரா.இராகவையங்கார் எழுதினார். பின்னர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியச் சொல்லதிகார ஆய்வுக் குறிப்புகள் என்ற ஓர் ஆய்வேட்டுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. இவற்றினுடைய நோக்கம் தொல்காப்பியம் சமற்கிருதத்துக்குக் கடன்பட்டது என்பதை நிறுவுவது ஆகும். புலமைப்போர் தொடங்கியது. டாக்டர் சாத்திரியாரின் ஆய்வை வரிக்கு வரி மறுத்துத் தொல்காப்பியத்தின் தமிழியல் வேர்களைக் கண்டறிந்து கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் தமிழ்ப்பொழில் – 21 இதழ்களில் தொடர்கட்டுரைகளை எழுதியவர், தொழில்முறையில் பேராசிரியர் அல்லர், காவல் உதவி ஆய்வாளர், மன்னார்குடி நா. சோமசுந்தரம் பிள்ளை. இது இடைக் காலநிலை; தொல்காப்பியர் காலம் பற்றிக் கருத்து மோதல்கள் இருப்பினும் அவரது நாள் பற்றி இராசாளியாரைத் தவிர, யாரும்அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. 20ஆம் நூற்றாண்டு இறுதியில், அதாவது- 1975க்குப் பின், தொல்காப்பியம்- சங்க இலக்கிய ஆய்வுகள் வெறும் ஐந்து விழுக்காட்டுக்குக் கீழ் இருந்தன.
இந்நிலையில் 21ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அதாவது 2004ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தோற்றம் பெற்றது. அப்பொழுது தமிழ் முதுகலை மாணவர்கள், ஆய்வியல்நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களிடம் சங்க இலக்கியம் - தொல்காப்பியம் பற்றிய ஆர்வம் பெரிதாக இல்லை. செம்மொழி நிறுவனத்தின் அன்றைய முதல் பொறுப்பலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பெற்றது. அதற்கிணங்க, ஓர் ஐந்தாண்டுகளில் ஒரு கருத்தரங்கம்(3-நாள்), பயிலரங்கம்(10-நாள்) என்ற அளவில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட தமிழியல் நிகழ்வுகள் நடந்தன. . நாளொன்றுக்குக் குறைந்தது 5 அறிஞர்கள் . . ஏறத்தாழ 1800 நாட்கள்.. 9000 ஆய்வுரைகள் நிகழ்ந்தன. ஓர் அரங்கத்திற்குத் தொடக்கத்தில் ஆய்வாளர் எண்ணிக்கை 60, காலப்போக்கில் 100 என உயர்ந்து 25000 ஆய்வுமாணவர்கள் பயன்பெற்றனர். பயிலரங்க நிறைவுநாளில் ஆய்வாளர் ஒவ்வொரு வருக்கும் 3000 ரூபாய் விலைமதிப்புள்ள சங்க இலக்கியத் தொகுதி அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. தமிழகம் மட்டுமன்றிக் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன செம்மொழி நிறுவன ஆய்வறிஞர் எனும் நிலையில் கட்டுரையாளர் 60க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக அமைந்து திறம்பட நடத்தினார். இதன் விளைவாக இளம் ஆய்வாளர்களிடையே ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் புரட்சி ஏற்பட்டு, 2010இல் தொல்காப்பியம் - சங்க இலக்கிய ஆய்வுகள் வியக்கத்தக்க வகையில் 85 விழுக்காட்டை எட்டிப் பிடித்தன .
செம்மொழி நிறுவனம் தொல்காப்பியர் கருத்தரங்கம்/பயிலரங்கம் என்ற வகையில் 40 நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தது அப்போதெல்லாம் அறிஞர்கள் தொல்காப்பியரின் காலத்தையும் நாளையும் வரையறுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர். 2009இல் இவ்வேண்டுகோள் மிகவும் வலுப்பெற்ற நிலையில், கோவிலூர்த் திருமடத்தின் ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் நாச்சியப்ப தேசிகர் அவர்கள் அதனை முன்மொழியவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் கோவிலூர்த் திருமடத்துடன் இணைந்து 26, 27, 28 செப்டம்பர் 2009 ஆகிய நாட்களில் தொல்காப்பியர் கருத்தரங்கைக் கோவிலூரில் நடத்தியது. சென்னைத் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் முதல் குமரி மாவட்டத் தமிழ் அமைப்புக்கள் வரை பல்வேறு நிறுவனங்களும், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்களும் தனிநிலையில் தொல்காப்பிய அறிஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்; 28 பேர் கட்டுரை வழங்கினர்; ஏனையோர் உரை நிகழ்த்தினர்; வேனிற்காலத்தில் புலவர்கள் கூடல் மாநகரில் ஒருங்கிணைந்து தமிழாய்ந்தனர் என்று கலித்தொகை சுட்டிய மரபுவழக்கத்தை ஒட்டித் தொல்காப்பியர் நாள் சித்திரை முழுமதி நாள் என்பதில் கருத்தொருமை கொண்டனர்; ஆனால் தொல்காப்பியர் காலத்தில் அன்று. கிமு ஏழாயிரம் முதல் கிமு நூறு வரை எனக் கருத்து வேறுபாடு இருந்தது. பொதுக்கருத்து அடிப்படையில் தீர்மானத்துக்கு அறுதி வடிவம் கொடுக்க இரவு 9மணிக்கு அமர்ந்த தமிழண்ணலும் கட்டுரையாளரும் அவ்விளக்கத்தை எழுதிமுடித்தபோது விடியல் கோழி கூவிற்று. 8 பக்கம் கொண்ட அந்தத் தீர்மானம்(ப.1) + விளக்கம்(ப.7) ஆகியவற்றைத் தமிழண்ணல் 20 மணித்துளிகள் படித்து முன்மொழிந்தார்; கட்டுரையாளர் அதனை வழிமொழிகையில் நிறைய வினாக்கணைகள் தொடுக்கப்பட்டதால் அவற்றிற்கெல்லாம் விடைகூறுதற்கு ஒன்றரை மணிநேரம் பிடித்தது. நிறைவாக, ஆய்வாளர்கள் தொல்காப்பியர் காலத்தைப் பொறுத்து அவரவர் கருத்தையே கொண்டாலும், கீழ்எல்லை 711 என்றும், தொல்காப்பியர் நாள் சித்திரை முழுநிலவுநாள் என்றும் ஒப்புகை செய்தனர்.
அதற்குமேலும் கட்டுரையாளர் தமது சொந்தக் கருத்தாகப் பின்வருவனவற்றை அவையினருக்குத் தெரிவித்தார், அவை வருமாறு: இன்றைய நிலையில் சித்திரை முழுநிலவு நாள் என்பது (1) உலகெங்கும் புத்த பூர்ணிமா எனவும், (2) 1965 காலகட்டத்தில் சிலம்பொலி செல்லப்பனார், சேலம் (திருச்செங்கோடு) தி. மு. காளியண்ணன் முயற்சியினால் திருச்செங்கோட்டில் சிலப்பதிகாரவிழா- குறிப்பாகக் கண்ணகி விழா எனவும், (3) தமிழகத்தில் சித்திரைத் திருவிழா எனவும் கொண்டாடப்படுகின்றது. மேலும், இளங்கோ அடிகள் நாள் என அமையச் சிறந்த நாள் சித்திரைப் பௌர்ணமி ஆகும்: “சிலப்பதிகாரத்தை முடிமன்னர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசியக் காப்பியம், கலைமிளிர் காப்பியம் என்று நாடெங்கும் பரப்பிய நம் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., அவர்கள், சென்னையில் 24.04.1956 இல் செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் முதன் முதலாகச் சென்னை மாவட்டத் தமிழரசுக் கழகத்தாரால் இளங்கோ விழாவைத் தொடங்கி வைக்கச் செய்தார்.
இந்த வகையிலும், சிலப்பதிகாரத்தில் 28 நாள் நிகழ்ந்த இந்திர விழவூரெடுத்த காதையில் குறிப்பிடப்படும் சித்திரைத் திங்களின் சித்திரை முழுநிலவைக் கருதியும் எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு இந்திரா விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 24ம் நாளில் இளங்கோவடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. ” (இதயத்தை அள்ளும் இளங்கோ அடிகள், ஔவை ந. அருள்).
உலக அளவிலும் தமிழகத்திலும் வேறு பல விழாக்கள் சித்திரை முழுநிலவு நாளில் இடம்பெறுவதால், ’பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’ எனும் நாட்டுப்புற மொழிக்கேற்ப, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் திருநாளையும் அவற்றுடன் சேர்ப்பது சிறப்பாகாது.
ஏனென்றால் தொல்காப்பியத்துக்கு மற்றெவற்றுக்கும் இல்லாத் தனிப்பெரும் புகழும் பெருமிதமும் உண்டு. இன்றியமையா எடுத்துக்காட்டாக இரண்டைக் குறிப்பிடலாம்: (1) 2000-ஆண்டில் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகப் மொழியியல்வாணர்கள் ஏ.எல்.பெக்கர், கெய்த் டெய்லர், இந்திய மொழியியலாளர் ஏ.கே இராமானுசன் ஆகியோர் ஒரு நேர்காணலில் தொல்காப்பியத்தின் நுட்பங்கள் பலவற்றையும் வியந்துரைத்தனர்; அமெரிக்க நூலகங்கள் தோறும் தொல்காப்பியர் சிலை நிறுவப்படவேண்டும் என்றனர்; ஏனென்றால், ’ தீர்முடிவாக, தொல்காப்பியர் ஒரு மொழியியல் குருநாதர்’ (you would call (Tolkappiyar) a linguist’s ’ultimate Guru’) எனப் புகழாரம் சூட்டினர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். (2) உலகச் செவ்வியல்மொழிகளுள் தமிழ்மொழி தனிச்சிறப்பும் தலைமையும் பெற்றது என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் ஒப்பியன் மொழிநூல் (1940), The Primary Classical Language of The World(1966) நூல்கள் எழுதியபோது இங்குள்ள மொழிநூலாருள் பலர் முகஞ்சுளித்தனர்; ஆனால், மாற்றிலக்கணக் கோட்பாட்டுத் தந்தை என மொழியியல் உலகம் மதித்துப்போற்றும் நோவாம்சோம்ஸ்கி, 22.11.2001 அன்று கல்கத்தாப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமது இலக்கணக் கோட்பாட்டை எடுத்தியம்பி அவற்றுடன் பொருந்துகிற ஒரு மொழி முதற்படியாகத் தமிழ்மொழி என விளம்பியபோது அவர்கள் மௌனஞ்சாதித்தனர். சோம்ஸ்கியின் ஆய்வு முடிபுக்கு அடித்தளமாக அமைந்தது தொல்காப்பியம்.
இன்று உலகெங்கும் காதலர் நாள், தந்தையர் நாள், அன்னையர் நாள் போன்றவை இந்தநாளில்தான் எனத் திட்டவட்டமாக அமைகின்றன. அதுபோன்று தொல்காப்பியர் திருநாளும் தனிநாளில் அமையவேண்டும்; எனவே சித்திரை முதல்நாள் தொல்காப்பியர் திருநாள் எனக் கொள்ளலாம். மேலும் முழுநிலவுநாளை அடுத்துத் தேய்பிறை தொடங்குகிறது. ‘கல்லெனக் கவின்பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் புல்லென்ற களம் போல’ எனக் கலித்தொகை(5) கூறுவதைப் போன்று, திருவிழா முடிந்த மறுநாளே மகிழ்ச்சி அலைகள் மறைந்து மனம் வெறிச்சோடுகிறது. அதுமட்டுமன்றிப் பஞ்சாங்கத்தின்படி முழுநிலவுநாள் ஆண்டுதோறும் மாறக்கூடியது. சித்திரைத் திங்களில் எப்போது வேண்டுமானாலும் அமையும். சித்திரை முதல்நாள் என்றால் அன்று முகிழ்க்கும் மகிழ்வுணர்வு பிறைநிலா போல வளர்ந்து முழுநிலாநாள் வரையிலும் தொடர்ந்து முழுமைபெறும். ஆகவே சித்திரை முதல்நாளே தொல்காப்பியர் திருநாள் என்பதை அறிஞர்கள் சிந்திக்கலாம் என ஒரு வேண்டுகோளையும் கட்டுரையாளர் முன்வைத்தார். இதுகாறும் கட்டுரையாளரின் இக்கருத்து காற்றலைகளில் தவழ்ந்துகொண்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப் பெற்றது. அதன் அறிவுரைஞர் நிலையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கட்டுரையாளர் தொல்காப்பியர் காலமும் நாளும் பற்றிச் சொற்பொழிவாற்றிய ஆய்வுரையை, அதன் செயலாளர், முனைவர் மு. இளங்கோவன் ஆவணப் படமாக்கி யிருந்தார். அண்மையில் வகுப்புத்தோழர் பேரா.செ.வை.சண்முகம் தொல்காப்பியர்நாள் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொண்டார்; பொள்ளாச்சி முனைவர் நா. கணேசன் (அமெரிக்கா) இதுபற்றிக் கட்டுரை எழுதத் தூண்டினார். இன்று தமிழர்கள் உலகெங்கணும் பரவியிருக்கிறார்கள்; அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதில் கருத்தூன்றுகிறார்கள்; வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆண்டுதோறும் தமிழ்த் திருவிழா கொண்டாடுகின்றனர். அவர்கள் தனிச்சிறப்புமிக்க தொல்காப்பியருக்கு உலகளாவிய நிலையில் திட்டவட்டமாக தனித்துவமாகச் சித்திரை முதல்நாள் அமையவேண்டும் எனும் முயற்சியை முன்னெடுத்துச் செல்வதை அறிய மிக்க மகிழ்ச்சி, அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.
’சித்திரை முழுநிலவுநாள் என்று ஏற்கனவே உள்ளதை மாற்றலாமா’ எனச் சிலருக்கு ஐயம் எழலாம். 1921இல் திருவள்ளுவர்நாள் தைப்பொங்கலை ஒட்டியநாள் எனத் திட்டப்படுத்திய கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய மறைமலையடிகளார், அதற்கு முன்பு வைகாசி,அனுசமே ’திருவள்ளுவர் திருநாள்’ எனக் கொண்டாடியதையும் நினைவுகூர்தல் நலமாகும். ’மாற்றம் ஒன்றே மாறாதது.’ தைப் பொங்கல் முதலிலே திருவள்ளுவர் தொடராண்டும், திருவள்ளுவர் திருநாளும் அரசால் சிறப்புச் செய்யப்படுவது போலவே, சித்திரை முதல்நாள் ’தொல்காப்பியர் திருநாள்’ என அரசாணையில் மலர வேண்டும். வாழையடி வாழையென உலகளாவிய இளைய தமிழர்கள் தாய்த்தமிழ் மொழி பயில என்றும் துணைசெய்யும்.
தொல்காப்பியர் திருநாள் - சித்திரை முதல் நாள்!
இம்முழக்கம் யாண்டும் பரவுக! முயற்சி
1 comments:
சித்திரை முதல் நாள்
தொல்காப்பியர் நாள்
முயற்சி வெல்லட்டும்
Post a Comment