கொண்டாடுவோம்! தொல்காப்பியர் திருநாள்!! முனைவர் மு.இளங்கோவன்


கொண்டாடுவோம்! தொல்காப்பியர் திருநாள்!!

முனைவர் மு.இளங்கோவன்

செயலாளர், உலகத் தொல்காப்பிய மன்றம்

புதுச்சேரி, இந்தியா

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாம் தொல்காப்பியம் தமிழர்களின் மொழிச் சிறப்பையும் இலக்கியப் பெருமைகளையும் தாங்கி நிற்கும் அரிய ஆவணம் என்று துணிந்துசொல்லலாம். இந்நூலின் தாக்கம் ஈராயிரம் ஆண்டுகாலத் தமிழ் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் படிந்து கிடக்கின்றது. தொல்காப்பிய அறிவு நிரம்பப் பெற்றவர்களே மிகச் சிறந்த புலவர்களாக மிளிர்ந்து தமிழ்த்தொண்டாற்றியுள்ளனர். தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டே பிற்கால இலக்கண நூல்கள் தமிழில் தோற்றம் பெற்றுள்ளன. பழந்தமிழ் நூலாசிரியர்கள் மட்டுமன்றிப் பிற்கால உரையாசிரியர்களும் தொல்காப்பியத்தில் பேரறிவு பெற்றிருந்தனர். இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், பேராசிரியர், கல்லாடர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் தொல்காப்பியத் தோய்வு பெருமைக்குரியதாகும்.  அடியார்க்குநல்லார் போன்ற பெருமக்கள் தொல்காப்பியத்தை உள்வாங்கிக்கொண்டு, சிலப்பதிகாரத்திற்கு உரைவரைந்துள்ள பாங்கினை நினைக்கும்பொழுது தொல்காப்பிய நூலின் பெருமை எளிதில் விளங்கும். சில காலம் தொல்காப்பியக் கல்வி தமிழகத்தில் அருகி இருந்தமையையும் அறியமுடிகின்றது. ஆயினும் தமிழார்வம் தழைத்த புலவர்கள் தொல்காப்பிய மரபினைத் துலக்கிக்காட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளமையைத் தொல்காப்பிய வரதப்ப முதலியார் வாழ்க்கை வழியாக அறிந்துகொள்ளமுடிகின்றது.

ஓலைச்சுவடிகளிலும், புலவர்களின் மனப்பாடத் திறனிலும் தழைத்து வளர்ந்த தொல்காப்பியம் 1847 இல் முதன் முதல் மழவை மகாலிங்கையரால் (வீர சைவ மரபினர்) அச்சுவடிவம் கண்டது. அதன் பின்னர் சாமுவேல் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, இராசகோபால பிள்ளை, சுப்புராய செட்டியார், பவானந்தம் பிள்ளை, புன்னைவனநாத முதலியார், கா. நமச்சிவாய முதலியார், வ. உ. சிதம்பரம் பிள்ளை, இரா. இராகவையங்கார், கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை, கணேசையர், கு.சுந்தரமூர்த்தி, ஆ.சிவலிங்கனார், அடிகளாசிரியர், ச.பாலசுந்தரனார், இரா.இளங்குமரனார், தமிழண்ணல், க.வெள்ளைவாரணனார், தி.வே. கோபாலையர், ச.வே.சுப்பிரமணியன், ச. திருஞானசம்பந்தம் உள்ளிட்ட  பேரறிஞர்களால் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டு, உலகப் பரவலுக்கு வழிவகுக்கப்பட்டது. பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார், சி.இலக்குவனார், வ. முருகன், ழான் லூக் செவ்வியார் உள்ளிட்ட அறிஞர்களின் மொழிபெயர்ப்பாலும் அயல்மொழியினர்க்கு அறிமுகம் ஆனது.

தொல்காப்பியப் பயில்வு பெருமைக்குரியதாகவும், தொல்காப்பியம் பயிற்றுவித்தல் பெரும்புலமையின் அடையாளமாகவும் தமிழ்க் கல்வியுலகில் நிலவியது. புலவர் கல்லூரிகள் தொல்காப்பியத்தைப் பரப்பும் அறிவு மையமாகச் செயலாற்றின. அந்தோ! தமிழகத்தில் தமிழ் வணிகப் பொருளான பிறகு பல்கலைக்கழகங்களில் தமிழின் மதிப்பு கோடியாக உயர்ந்தது. தமிழ்த் துறைகளில் இலட்சங்களில் தமிழின் மதிப்பு நிலைநிறுத்தப்பட்டது. கல்லூரியில் சென்று பயிலாதவர்கள் பல்கலைக்கழகங்களில் துறைத்தலைமையையும் புலமுதன்மையையும் கைப்பற்றினர். பணம், சாதி, மதம், அரசியல் போர்வையில் பல்கலைக்கழகப் பணிகளில் பலர் நுழைந்தனர். தமிழ்க் கல்வியின் தரம் தமிழகத்தில் தாழும் நிலை உருவானது. தொல்காப்பியம், சங்கப் பனுவல்கள், திருமுறைகள், பாசுரங்கள், காப்பியங்கள் பயின்றோரின் குரல் ஒடுங்கியிருப்பதை உணர்ந்து, இதனைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளைச் செய்தேன். வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதி, பாரதிதாசன் பெயர்களில் பல்வேறு தமிழமைப்புகள் தமிழ்த்தொண்டாற்றி வருவதை அறிவேன்.ஆயின் தமிழின் தலைநூலாக விளங்கும் தொல்காப்பியத்தையோ, தொல்காப்பியரையோ உலக அளவில் உரத்துப் பேசும் அமைப்பு இல்லையே  என்ற பெருங்கவலை என் உள்ளத்தை வாட்டியது. அதன் அடிப்படையில் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பை உருவாக்கித் தொல்காப்பிய அறிஞர்களைப் போற்றவும், தொல்காப்பியக் கல்வியைப் புதுவேகத்தில் பாய்ச்சவும் முனைந்தேன். என் முயற்சிக்குத் தமிழறிஞர்கள் பலரும், தமிழ் ஆர்வலர்கள் சிலரும் ஒத்துழைப்பு நல்கினர்.

18.08.2015 இல் உலகத் தொல்காப்பிய மன்றத்திற்கு ஓர் இணையதளம் தொடங்கினோம். புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தகைமிகு து. மணிகண்டன் இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டு, இணையதளத்தைத் தொடங்கிவைத்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு என் முயற்சியை ஊக்கப்படுத்தினர். 27.09.2015 இல் பிரான்சு நாட்டில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழா நடைபெற்றது. குவைத்து நாட்டில் வாழும் முனைவர் கு. இளங்கோவன் அவர்களும் அவர்களின் துணைவியார் தேவிகா இளங்கோவனும் குத்துவிளக்கேற்றி உலகத் தொல்காப்பிய மன்றத்தைப் பிரான்சில் தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்வில் முனைவர் இ. பாலசுந்தரம், முனைவர் ஈவா வில்டன், முனைவர் ழான் லூக் செவியார், சுரேஷ் பாரதி, முனைவர் மு.இளங்கோவன், பாட்டரசர் கி.பாரதிதாசன், செவாலியே இரகுநாத் மனே, பொறியாளர் கோபி இரமேஷ்(நெதர்லாந்து), பொறியாளர் அரிஷ்(இலண்டன்), பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பேராசிரியர் தளிஞ்சன் முருகையன், திருவாட்டி இலெபோ லூசியா, புலவர் வ. கலியபெருமாள், பேராசிரியர் அலெக்சிசு தேவராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2016 ஆம் ஆண்டு சூன் மாதம் 4, 5 நாள்களில் கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின்  கருத்தரங்கம் நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா – வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. த.சிவபாலு, இ.பாலசுந்தரம் ஆகியோரின் பெருமுயற்சியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகப் பொறுப்பாளர்கள், மாணவர்களின் ஆதரவும் கருத்தரங்கைப் பெருமைக்குரியதாக மாற்றின. கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகவும், சிங்கப்பூர்ப் பேராசிரியர் சீதாலட்சுமி அவர்கள் சிறப்புரையாளராகவும், கனடாவில் வாழும் தமிழாராய்ச்சி அறிஞர்கள் கட்டுரையாளர்களாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மலேசியாவின், செலாங்கூர் மாநிலத்தில் பந்திங், தெலுக் பங்ளிமா காராங் என்னும் ஊரில் 23.12.2017 மாலை 5 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் மலேசியக் கிளை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தமிழச்சி காமாட்சி, முனைவர் முரசு, நெடுமாறன், திரு. இராசசேரன், அறிஞர் இர. திருச்செல்வம், டத்தோ சேகரன், பொறியாளர் இரா. பெருமாள், ம. முனியாண்டி, சரசுவதி வேலு உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொல்காப்பிய அறிஞர் இர. திருச்செல்வம் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, தொல்காப்பியச் செம்மல் என்னும் விருதளித்துப் பாராட்டப்பட்டது.

                சப்பான் நாட்டின் டோக்கியோ மாநகரில் 03.02.2018 இல் உலகத் தொல்காப்பிய மன்றக் கிளையைத் தொடங்கி, தமிழார்வலர்கள் இயன்ற அளவு தொல்காப்பியப் பரவலுக்கு வழிசெய்துள்ளனர். 

அமெரிக்கா நாட்டில், நியூசெர்சி மாநிலத்தில் உள்ள பிசுகாட்டவேயில் (Piscataway) 16.06.2018 சனி(காரி)க் கிழமை காலை 10:30 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை அறிஞர் நா. க. நிதி அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. அதன் பிறகு இலண்டனில் 30.06.2018 இல் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை ஈழத்து அறிஞர் சிவச்சந்திரன் தலைமையில் தொடங்கப்பட்டது.  15.04.2018 இல் கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை முனைவர் க.இராமசாமி அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது. முனைவர் செ.வை. சண்முகம், ஆய்வறிஞர் கு. சிவமணி, பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆயிடை, திருச்சிராப்பள்ளியில் பேராசிரியர் இ.சூசை அவர்களின் முயற்சியாலும், சென்னையில் எழுத்தாளர் தமிழியலன் முயற்சியாலும் திருவண்ணாமலையில் அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களின் முயற்சியாலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற எம் அமைப்புக்கு உரிய வித்தூன்றப்பட்டது. எம் முயற்சியைக் கண்ணுற்ற அன்பர்கள் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்காப்பியம் பரப்பும் பணியைப் புதிய அமைப்புகளைத் தோற்றுவித்துச் செய்துவருகின்றமை எம் முயற்சிக்குக் கிடைத்த ஏற்பளிப்பாக நினைக்கின்றோம். 

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்றும் முகத்தான் ஆராய்ச்சிப் பணிகளிலும் ஆவணமாக்கும் பணிகளிலும் கடுமையாக உழைத்துள்ளோம். இதன் பயனாகத் தொல்காப்பியம் குறித்த அரிய நூல்கள் எழுதி முடிக்கப்பெற்று விரைந்து வெளிவரும் நிலையில் உள்ளன. தமிழறிஞர்களான இரா. இளங்குமரனார். கு.வெ. பாலசுப்பிரமணியம், நாமக்கல் புலவர் பொ. வேல்சாமி, தெ. முருகசாமி, ப. அருளி, ந. இரா. சென்னியப்பனார், பா.வளன் அரசு, வீ.செந்தில்நாயகம், விசயவேணுகோபால், சரசுவதி வேணுகோபால், ப. மருதநாயகம், கு.சிவமணி, ஆ. செல்வப்பெருமாள், இராச. கலைவாணி, இராச. குழந்தைவேலனார், மேரி கியூரி பால் உள்ளிட்டோரின் பேச்சுகளைப் பதிவு செய்து இணையப்பெருவெளியில் வெளியிட்டுள்ளோம். இவற்றை உலக அளவில் 3, 28, 589 பேர் (10.04.2021) பார்வையிட்டுள்ளனர். இன்னும் படத்தொகுப்பு செய்து வெளிவர வேண்டிய காணொலிகளின் எண்ணிக்கையும் மிகுதியாக உள்ளன. ஒலித்தொகுப்பு செய்து வெளிவர வேண்டிய ஒலிக்கோப்புகளும் உள்ளன. வகுப்பறைகளைக் கடந்து தொல்காப்பியம் வானலைகளில் மிதந்து உலகச் சொத்தாக மாறுவதற்கு எம் முயற்சி பெரிதும் உதவியுள்ளது.

தொல்காப்பியம் தமிழ் மொழியமைப்பைக் கூறுவதுடன் இலக்கிய உருவாக்கம் பற்றியும் எடுத்துரைக்கின்றது. இதில் இடம்பெறும் நூற்பாக்களைக் கொண்டு தமிழகத்தின் நில அமைப்பு, இயற்கை அமைப்பு, வழக்கில் இருந்த அளவை முறைகள், வாழ்க்கை முறை, போர்முறை உள்ளிட்ட பல செய்திகளை அறிந்துகொள்ள முடிகின்றது. மழை(கார், கூதிர்), பனி (முன்பனி, பின்பனி), வெயில் (முதுவேனில்,இளவேனில்) கொண்டு ஓர் ஆண்டினை ஆறு கூறுகளாகப் பிரித்துள்ளமையையும், ஒரு நாளின் பொழுதுகளை ஆறு கூறுகளாக்கிக் கணக்கிட்டமையும் (வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்) நினைந்து வியப்பே மேலிடுகின்றது. அதுபோல் தொல்காப்பியர் வெளிப்படுத்தும் மாந்தனுக்குத் தோன்றும் எண்வகை மெய்ப்பாடுகளும் அதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கமும் மேல்நாட்டு நாடக மாந்தர்களும் சிந்திக்காத அறிவுவெளிப்பாடு எனலாம். இத்தகைய சிறப்பு மிக்க நூலின் பெருமை பற்றி நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது காலத் தேவையாகும்.

தொல்காப்பியர் குறித்த முழுமையான வரலாறோ, அவர் காலம் பற்றிய துல்லியமான குறிப்போ ஆய்வுலகில் பதிவுறாமல் போனமை நம் போகூழ் ஆகும். எனினும் ஒவ்வொரு அறிஞர்களும் தொல்காப்பியர் காலத்தை மதிப்பிடுவதிலும் அவர்தம் ஊரினை அடையாளம் காட்டுவதிலும் கருத்து முரண்பட்டு நிற்கின்றனர். கட்டுரைகளிலும் நூல்களிலும் தொல்காப்பியர் பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் மாறுபட்ட கருத்துகள் அறிஞர் பெருமக்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் கோவிலூர் மடத்தின் ஏற்பாட்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற கருத்தரங்கில் (2009, செப்டம்பர், 26,27,28)  அறிஞர்கள் முன்னிலையில் பெரும் பேராசிரியர்கள் தமிழண்ணல், கு. சிவமணி, ஆறு.அழகப்பன் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் கி.மு. 711 ஐத் தொல்காப்பியர் காலமாக வரையறுத்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்ளலாம். மேலும், தொல்காப்பியரின் பெருமையை ஆண்டின் ஒரு நாளில் நினைவுகூர்வதற்கு ஒரு நாளினை முன்மொழியும்பொழுது தமிழகத்தில் வழக்கில் இணைந்துவிட்ட சித்திரை மாதத்தின் முதல் நாளினைத் தேர்வுசெய்யலாம். எனவே சித்திரை முதல் நாளினை ஆண்டுதோறும் தொல்காப்பியர் திருநாளாக அமைத்துக் கொண்டாடுவது பொருத்தமாகத் தெரிகின்றது. அறிஞர்கள் சிலர் விண்மீன் அடிப்படையிலும், முழுமதி அடிப்படையிலும் வேறு நாள்களை அமைக்க முற்படுகின்றனர். இதில் நாள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. முழுமதி நாளில் கண்ணகி விழா நடைபெறுகின்றது. எனவே, இந்த ஆண்டு முதல் சித்திரை மாதம் முதல் நாளினைத் (ஏப்ரல் 14) தொல்காப்பியர் திருநாளாகக் கொண்டாடுவதற்கு உலகத் தமிழர்களும், தமிழ்நாட்டு அரசும் முன்வர வேண்டும். உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு உழைக்கவேண்டும் என்பது எம் விருப்பம்.

தமிழ் உணர்வாளர்களால் தழைத்து நிற்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டுதோறும் அமெரிக்காவில் தமிழ் விழாக்களை நடத்தியும் தமிழ்க் கல்விக்கு அரும்பணியாற்றியும் பெருந்தொண்டாற்றி வருகின்றது. தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் நூற்றாண்டு விழாக்களை நடத்துவது, தமிழறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவாற்றச் செய்வது, தமிழகத்துக் கலைஞர்களை அழைத்துத் தமிழ்க் கலைநிகழ்வுகளை நடத்துவது என்று தமிழ் வளர்ச்சிப்பணிகளைத் தொடர்ந்து செய்துவருவதை நான் நன்கு அறிவேன். அத்தகு பெருமைக்குரிய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை இந்த ஆண்டின் சித்திரை முதல் நாளினைத் தொல்காப்பியர் திருநாளாகக் கொண்டாட முன்வந்தமைக்கு எம் உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பிலும் உலகத் தமிழர்களின் சார்பிலும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழகத்திலும், உலகின் பிற நாடுகளிலும் உள்ள தமிழமைப்புகளும் தமிழர்களும் தங்கள் பகுதிகளில் சித்திரை முதல்நாளில் தொல்காப்பியர் திருநாளைக் கொண்டாடுமாறு வேண்டுகின்றேன். மேலும், உலகத் தமிழர்களின் வேட்கையை எடுத்துரைக்கும் வகையில், சித்திரை மாதம் முதல் நாளினைத் தொல்காப்பியர் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடும் சிறப்பு ஆணையைப் பிறப்பிக்க வழி காணுமாறு தமிழ்நாட்டு அரசினை வலியுறுத்த அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். சித்திரை முதல் நாளினைத் தொல்காப்பியர் நாளாகக் கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு உழைக்கும் பெருமக்களை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் ஆரத் தழுவிப் போற்றுகின்றேன். 

அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவில் தொல்காப்பியம் குறித்த சிறப்பு அரங்கினை ஏற்பாடு செய்து, தொல்காப்பியக் கண்காட்சி நடத்தவும், தொல்காப்பியம் குறித்த சிறப்புரை நிகழவும், தொல்காப்பியக் கலைநிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யுவும் அதன் பொறுப்பாளர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இம்முயற்சி அடுத்த தலைமுறைக்குத் தொல்காப்பியத்தை அறிமுகம் செய்வதற்கு வழிகோலும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. 

அனைவரும் இணைந்து தொல்காப்பியம் பயில்வோம்; பரப்புவோம்! அனைவரும் இணைந்து தொல்காப்பியர் திருநாளைக் கொண்டாடுவோம்.

 

0 comments: