முதல் தொல்காப்பியர் சிலை, குன்னூர், 10-செப்டம்பர்-1911

அரித்துவாரமங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத ராசாளியார் சாதனைச் சரித்திரம்

இந்த அரிய நூலை எனக்களித்த கரந்தை திரு. ஜெயக்குமார், தஞ்சை சரசுவதி மகால் வித்துவான் திரு. மணிமாறன் இருவருக்கும் என் நன்றி. 

Rajaliyar’s Tolkappiyar Library is near St. Anthony’s School, Coonoor. We can check the building and also see if the Coonoor Club, At. Anthony’s, Ooty long time residents have the photograph of Tolkappiyar that Tiru. Reghunatha Rajaliyar (Fellow, Theosophical Society & land lord, Haridvara Mangalam, Tanjore district) installed in the premises on 10th September 1911. One of the first instances when patrons honored Tamil poets in public thereby leading to Tamil renaissance in the 20th century.  Please read the two pages from the book compiled on the contributions of Tiru. Rajaliyar at the end of this posting.

தொல்காப்பியர் திருநாள் என அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டுப் பேரவை (http://fetna.org ) 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் யாண்டும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடுகிறது. முதல் தொல்காப்பியர் திருநாள் தொடர்பாக, பேரவை நடாத்திய ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் இலக்கியத் தமிழிசை நிகழ்ச்சி:  https://www.youtube.com/watch?v=kKETavfXgZY .தினமணியில் அச்சான கட்டுரை:  http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

மலைமீது தொல்காப்பியன் சிலையை வைத்தாய்!
   மனதினிலே நீங்காது நிலைத்து நின்றாய்!

 ~நா. கணேசன்

         வாழ்த்து 

   வெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
   எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
   வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
   தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!

                                                                             - பேரா. சு. பசுபதி, கனடா

10-9-1911-இல் நீலகிரி மாவட்டக் குன்னூரில் உள்ள 'இராஜாளியார்' நூல் நிலையத்தின் முன்பு தொல்காப்பியரின் உருவச் சிலைதனை நிறுவித் திறந்துவைத்த இராஜாளியார் அவர்கட்கு நீலகிரி மக்கள் வாசித்தளித்த வரவேற்புரை.

                                           ஆசிரிய விருத்தம்

1. அந்நாளில் சுயநலம்வேட் டொருமுனியைத் தென்மலைமேல்
        அரன்வைத் திட்டான்
பன்னாளும் பொதுநலம்வேட் டரித்வார மங்கலக்கோ
        பால சாமி
பின்னாளில் தமிழ்க்கடலுண்டு  இமயமலை யமிழ்த்துதொல்காப்
      பியர்பேர் பூண்ட
தென்னாரும் ஒருமுனியை நீலமலை மேல்வைத்தான்
      சிறப்பா மீதே

குறிப்புரை :

மேலைக் கடல் உண்டு, விந்தமலை தாழ்த்திய அகத்தியன் போல் தமிழ்க்கடல் உண்டு , வடதிசை இமயமலையை அழுத்தியவன்  தொல்காப்பியன் என்ற பெயர் பூண்டவன்;  தென்திசை  நிறைந்த புகழுடைய ஒருமுனியாகிய  தொல்காப்பியனை  நீலகிரி மேலே ஏற்றிச்   சிலையாக  வைத்தார்  இராசாளியார்.   

சிவபெருமான் சுயநலத்திற்காக, மீனாட்சியைத் திருமணம் செய்தற் பொருட்டு, அகத்தியரைத்  தென்மலை பொதிகைக்கு அனுப்பினான். என்றும் பொதுநலம் கருதும் கோபாலசாமி, பின்னாளில் தமிழ்க்கடல் உண்டு இமயமலையை அழுத்துமாறு இலக்கணம் செய்த தொல்காப்பியரை நீலமலைமேல் வைத்தான். இது சிறப்பானது.

2. ஆசிரியன் குறுமுனிவன் விந்தகிரி தாழ்த்தினன்றொட்
       டவன்முற் சீடன்
தேசவிரும் நீலகிரி யுயர்த்தினன்றான் வீற்றிருந்தே
       திருமா லுக்குத்
தாசரெனுங் கோபால சாமிரகு நாதரா
      சாளி யார்செய்
நேசமிகு உதவிபெறி லெவருமெத னையுமுயர்த்தல்
     நேரா தேயோ?

தொல்காப்பியருக்கு ஆசிரியராகிய அகத்தியர் விந்திய மலையைத் தாழ்த்தினார். ஆனால் அவரைத் தொடர்ந்து இலக்கணஞ் செய்த முதற் சீடன் தொல்காப்பியர் தேசு அவிரும்(ஒளி வீசும்) நீலமலையைத் தான் வீற்றிருப்பதன் மூலம் உயர்த்திவிட்டார். நட்பு மிகும் இராசாளியார் செய்கிற உதவியைப் பெற்றால் எவரும் எதையும் உயர்த்த மாட்டார்களா என்ன? 

3. நீலகிரி குன்னூரில் தமிழபிமா னச்செல்வர்
        நிலவ நாட்டு
மேலுமிசை ராசாளி யார்புத்த கச்சாலை
     யெவற்றி னுக்கு
மேலதென வதனிடையே காட்டுமதன்  றியுமலைமேல்
      விளக்க மென்னு
ஞாலமொழி யுங்காட்டு நாமெடுத்துக் காட்டலெவன்?
      நாட்டுங் காலே

தமிழ் அபிமானி இராசாளியாரின் புத்தகசாலையில் மட்டுமன்றி குன்றூர் (குன்னூர்) மலைமேலே தொல்காப்பியர் சிலையை அவர் நாட்டும் போது ’குன்றின்மேல் இட்ட விளக்கு’ என்னும் பழமொழிக்கு ஏற்ப நாடறியும். வெளிப்படையாக விளங்கும் இச் செய்திகளை நாம் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ? வேண்டா என்றவாறு.

இது காய் காய் காய் காய் மா தேமா  என்னும் அமைப்புடைய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

(விளக்கிய கவிமாமணி இலந்தை, புலவர் இராமமூர்த்தி இருவருக்கும் என் நன்றி.)

10-செப்டம்பர்-1911 உலகில் முதன்முதலாக, நீலகிரிக் குன்றூரில் தொல்காப்பியர்க்குச் சிலை ராஜாளியார் நிறுவினார் எனக் குறிப்பிடும் நேரிசை வெண்பா.

               வாழ்த்து

 

திருமால் திருப்பதியெண் சேர்த்துமே லொன்று

வருநாளில் குன்னூரில் வாழுந் திருவாளர்

நாட்டியரா சாளியார் நற்புத் தகசாலை

நாட்டினிலே வாழ்கநெடு நாள்!

 

குறிப்பு:

விஷ்ணு திருப்பதி எண் = 108, 108+1 = 109.

அதாவது:

வருஷம் - விரோதிகிருது - 45

மாதம் - ஆவணி - 5

தேதி - 25

கிழமை - ஞாயிறு - 1

நட்சத்திரம் - உத்திரட்டாதி - 26

இலக்கினம் - துலாம் - 7

45 + 5 + 25 + 1 + 26 + 7 = 109.

இதற்குச் சரியான ஆங்கில காலண்டர் தேதி: 10-செப்டம்பர்-1911 ஆகும்.

https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=10/09/1911

 ~ நா. கணேசன்

 

 



1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

முதல் தொல்காப்பியர் சிலை குறித்த தங்களது ஆர்வமும், அயரா தேடலும் போற்றுதலுக்கு உரியது ஐயா