கிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)


பேராசிரியர் செ. இரா. செல்வகுமார் (டொராண்டோ, கனடா) அவர்கள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து அயன்மொழிச் சொற்களை எழுத எளிய முறை ஒன்றைத் தமிழ்.நெட்டில் பரிந்துரைத்தார்:
http://www.tamil.net/list/1999-09/msg00632.html

முனைவர் செல்வாவின் பரிந்துரை கருத்தூன்றிப் பயிலவேண்டிய ஒன்று. 1999-ல் பேரா. செல்வா எழுதிய மடலை இங்கே முற்செலுத்துகிறேன். என் அடுத்த மடல்களில் மேலும் பேச ஆசை.

நட்புடன்,
நா. கணேசன்-----------------------------------------------------
அன்புள்ள தமிழ் இணையத்தாருக்கு:

வணக்கம்.

பயனுடையதாக இருக்கும் என்று எண்ணித் தமிழ் மொழியின் நலத்திற்காக ஒரு புதிய கருத்தை இங்கே முன் வைக்கிறேன்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவப் பெருந்தகையார் கூறியிருப்பதை நினைவிற் கொண்டு என் கருத்தை அருள்கூர்ந்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன்.

தமிழ் மொழியின் இனிமைக்குக் குறைபாடு வாராமல் தமிழ் மொழியிலே பிற மொழி ஒலிப்புகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதே கேள்வி. தொழில் நுட்பப் புரட்சியால் (ஊர்தி, தொலை தொடர்பு, கணிணி முதலான நுட்பங்களிலே கடந்த 30-40 ஆண்டுகளிலே
ஏற்பட்ட மிகப்பெரும் வளர்ச்சிகளினால்) இன்று மக்கள் உறவாட்டத்திலே உலகம் மிகச் சுருங்கி வருவதை பலரும் நன்கு உணர்வர். இதனால் வேற்று மொழி ஒலியன்களைத் தமிழில் எடுத்தாள வேண்டிய தேவை இன்னும் வலுவாக ஏற்படுகிறது.

வேற்று மொழிப் பெயர்களிலே வழங்கும் b, d, f, g, h, முதலான எழுத்தொலிகளை எவ்வாறு தமிழில் வழங்கலாம் ?

ஏற்கனவே கணிணி எழுத்துப் பலகைகளில் உள்ள சில குறிகளைப் பயன் படுத்தி பல புதிய ஒலிப்புகளைக் குறிக்கலாம் என்பதே என் எண்ணமும் அடிக்கருத்தும். முதலில் தமிழ் முறை என்னவென்று கீழே சற்று விளக்கிவிட்டு பின்னர் புதிய முறையை விளக்குகிறேன். அருள்கூர்ந்து பொறுமையாக எண்ணிப் பாருங்கள்.

1. தமிழில் 18 மெய் எழுத்துக்களே உள்ளன. அவற்றில் 6 எழுத்துக்கள் மட்டுமே வல்லின எழுத்துக்கள். அவையாவன க், ச், ட், த், ப், ற் என்பனவே. இந்த 6 எழுத்துக்களிலும் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக, உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.

எனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே உயிர் எழுத்தோடு கூடி தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரும். தமிழ் மொழியிலே வல்லின எழுத்துக்கள் வலித்து ஒலித்தல் இரண்டே இடங்களில் தான்.

முதலாவது ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தால் வலித்து ஒலிக்கும். இரண்டாவது, புள்ளி வைத்த (தமிழில் இதற்கு ஒற்று என்று பெயர்) ஒரு வல்லின எழுத்துக்கு பின் வரும் பொழுது வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில் எல்லாம் வல்லின எழுத்து மெலிந்தே ஒலிக்கும்.

சில எடுத்துக் காட்டுகளைப் பார்த்தால் சட்டென்று விளங்கும்:

கடல் என்னும் சொல்லைப் பாருங்கள். முதல் எழுத்தாகிய க என்னும் வல்லின எழுத்து, சொல்லின் முதல் எழுத்தாக வருவதால் வலித்து ஒலிக்கின்றது. கடல் என்னும் சொல்லில் வரும் இரண்டாவது எழுத்தாகிய டகரமும் வல்லின எழுத்துதான், என்றாலும் மெலிந்தே ஒலிக்கின்றது. ஏன் ? அந்த டகரத்திற்கு முன் புள்ளி வைத்த வல்லின எழுத்து வரவில்லை. இப்பொழுது, வேறு ஒரு சொல்லாகிய கட்டம் என்னும் சொல்லை எடுத்துக்கொண்டால், அதில் வரும் மூன்றாவது எழுத்தாகிய டகரம் வலித்து ஒலிக்கின்றது. ஏனென்றால், புள்ளி வைத்த ட் என்னும் வல்லின எழுத்து இரண்டாவது எழுத்தாக வந்து டகரத்திற்கு முன்னால் இருப்பதால் கட்டம் என்னும் சொல்லில் உள்ள டகரம் வலித்து ஒலிக்கின்றது. முன்னே வரும் புள்ளி வைத்த எழுத்து வல்லின எழுத்தாக இல்லாமல், மெல்லின எழுத்தாக இருந்தால் மெலிந்தே ஒலிக்கும், வலித்து ஒலிக்காது. இப்பொழுது கீழ்க்காணும் சொற்களை எழுத்தொலி விளங்க ஒலித்துப் பாருங்கள், வாய் விட்டு சொல்லிப்பாருங்கள் (பலுக்கிப்பாருங்கள்).

வாடு - வாட்டு - வாண்டு (டு என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் (பலுக்குகின்றோம் ) ?)அக்கம் பக்கம் - அகம் - அங்கம்- தங்கம் (க என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?) பத்து - பந்து - பதுங்கு (து என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? ) பச்சை - பஞ்சு - பஞ்சை - குடிசை - பசி (சகரத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? (மெலிந்து ஒலிக்கும் சகரம் இரு வேறு விதமாக ஒலிக்கும். சொல்லின் முதல் ஒலியாக வரும் சகரமும், மெலிந்து ஒலித்தல் தமிழில் விதி விலக்கு).

காம்பு - காப்பு - கபுக்கென்று (பு என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?) எனவே வல்லின எழுத்துக்களைத் தமிழில் ஒலிக்கும் முறை என்னவென்றால், ஒரு வல்லின எழுத்து இரண்டே இரண்டு இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மெலிந்தே ஒலிக்கும்.

இவ்விரு இடங்களாவன, (1) ஒரு சொல்லின் முதல் எழுத்தும், (2) புள்ளி வைத்த வல்லின எழுத்துக்கும் பின் வரும் வல்லின எழுத்துமே. முதல் எழுத்தாக வரும் சகரம் சிலவிடங்களில் மெலிந்து ஒலிப்பது ஒரு விதி விலக்கு. முதல் எழுத்தை வலித்து (ச்)சட்டி, (ச்)சொல் என்றும் சொல்லலாம். (அப்படிச் சொல்லுவோர்களும் உள்ளனர்) அல்லது முதல் எழுத்தையே காற்றொலி கலந்த மெல்லொலியாக சட்டி, சொல் என்றும் சொல்லலாம். ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வராமல், இடையே வரும் சகரமும், தமிழ் முறைப்படி மெலிந்து ஒலிக்கும் இடங்களிலும், இரு வேறு ஒலிப்புகளுடன் ஒலிக்கின்றது. ஒன்று பாம்பு சீறுவது போல் தோன்றும் காற்றொலியாகவும் மற்றொன்று மூக்கொலி கலந்ததாகவும் உள்ளன. எடுத்துக்காட்டுகள் : கொசு - கொஞ்சு. கொசுவில் வரும் சு காற்றொலி கலந்தது, கொஞ்சு என்னும் சொல்லில் உள்ள சு மூக்கொலி கலந்தது.

2. அடுத்ததாக வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எப்படி வழங்கலாம் என்று பார்க்கலாம். முதலாவதாக தமிழில் எவ்வாறு b, d, f, g, h, j, 'dh', 'sh' என்னும் எழுத்தொலிகளைக் குறிக்கலாம் என்று பார்ப்போம். தமிழில் கம்பு என்று சொல்லும் பொழுது அதில் வரும் பு என்னும் எழுத்தொலியானது ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் வரும் b என்னும் எழுத்தோடு உயிரெழுத்து கூடிய எழுத்தொலியேதான். என்றாலும் Berlin, Bell என்னும் பெயர்ச்சொற்களில் வருவதைப்போல தமிழில் முதலொலியாக வர இஇயலாது (தமிழ் முறைப்படி). எனவே ஒரு வல்லின எழுத்துக்கு முன்னே ஒலி மாறி வருவதைக்குறிக்க (ஒலித்திரிபைக் குறிக்க) ஒரு கணிணி எழுத்துப்ப்லைகையில் உள்ள ஒரு குறியைப் பயன் படுத்தலாம். apostrophe அல்லது single quote என்னும் குறியை (தமிழில் முன்கொட்டு என்று பெயரிடலாம் என்று நினைக்கிறேன்) இட்டுக் குறிக்கலாம் என்று நினைக்கிறேன். இதே முறையில், தமிழில் வழங்கா f, sh முதலிய எழுத்துக்களையும் குறிக்க முன்கொட்டு ஒன்று இட்டு ஒலித்திரிபைக் குறிக்கலாம்.

2.1 முன்கொட்டுடன் வரும் எடுத்துக்காட்டுகள்:

Ball = 'பால்
Bell = 'பெல்
Berlin = 'பெர்லின்
Gandhi = 'காந்தி
Johnson, Jagannaathan = 'சான்சன் , 'சகன்னாதன்
David = 'டேவி 'ட்
Dirac = 'டிராக்
Dumdam Airport = 'டம்டம் வானூர்தி நிலையம் (வான் நிலையம், வான் துறை)
Dadabhai Navroji = 'தாதாபாய் நவ்ரோ'சி
Fermi = 'வெர்மி
Ford = 'வோர் 'ட்
Usha = உ'ழா
Ship = 'ழிப் ( பழக்கத்தில் முன் கொட்டுடன் வரும் 'ழ என்பதை sha என்று
சொல்லிப் பழக வேண்டும்)

2.2 அடுத்ததாக H என்னும் ஒலியை தமிழில் ஆய்த எழுத்தைக்கொண்டு குறிக்கலாம்.

எடுத்துக்காட்டுக்கள்:

Hitler = ·இட்லர்
Hardy = ·ஆர்டி
Hilbert = ·இல்பெர்ட்

2.3. காற்றொலி கலந்தொலிக்கும் S என்பதைக்குறிக்க, தமிழில் (tilda) ~ச் என்று குறிக்கலாம். பெரும்பாலும் இது தேவைப்படாது என்றாலும், சில இடத்தில் இம்முறை பயன் படலாம். எடுத்துகாட்டாக Brooks, Francis முதலான பெயர்ச்சொற்களை 'புரூக்~ச் அல்லது 'ப்ரூக்~ச் என்றும் 'விரான்சி~ச் அல்லது 'வ்ரான்சி~ச் என்றும் எழுதலாம். அல்லது சற்றே தமிழ்ப்படுத்தி 'புரூக்~சு என்றும் 'விரான்சிசு என்றும் எழுதலாம்.

2.4 சில இடங்களில் தமிழ் முறைக்கு மாறாக புள்ளி வைத்த வல்லின எழுத்து வாராமலும்
வல்லின எழுத்துக்கள் வலிந்து ஒலிக்க வேண்டி இருக்கின்றது. எடுத்துக்காட்டாக Bapu என்று வரும் பொழுது நாம் 'பா(ப்)பு என்று எழுதலாம். இவ்வாறு வரும் இடங்கள் மிகக் குறைவானவே என்பதால், இப்படி பிறைக்குறிக்குள் வல்லின ஒற்றை (புள்ளி வைத்த எழுத்தை) எழுதி சரியான ஒலிப்பைக்குறிக்கலாம். அல்லது வேறு விதமாக இரட்டை முன்கொட்டு இட்டும் காட்டலாம். 'பா''பு. Gopi என்பதை 'கோ''பி என்று எழுதலாம்.

2.5 கடைசியாக, அகர-ஏகாரக் கலவை ஒலியாக வழங்கும் ஓர் உயிர் ஒலியை எப்படிக் குறிக்கலாம் என்று பார்ப்போம். கீழ்க்காணும் ஆங்கில சொற்களைப் பார்த்தால் இந்த அகர-ஏகாரக் கலவை ஒலி விளங்கும்: cat, gap, fat முதலிய சொற்களில் வழங்கும் a என்னும் உயிரொலி சற்றே ஏகார ஒலி கலந்து ஒலிப்பதை உணரலாம். இதனைக் குறிக்க, தமிழில் எழுத்தின் முன்னொட்டாக தொப்பி போன்ற கூரைக் குறியை (^) இட்டுக் குறிக்கலாம். ஏனவே Apple Computer என்பதை ^ஆப்பிள் கணினி என்று குறிக்கலாம். Faraday என்னும் பெயரை 'வாரடே என்பதற்கு பதிலாக ^'வேரடே என்றோ அல்லது ^'வாரடே என்றோ குறிக்கலாம்.

2.6 சரி, ஒற்றைக் கொட்டு மேற்கோள் குறியைப் பயன் படுத்துவதால் குழப்பம் வாராதா ? (மேற்கோள் குறி என்பதை சுருக்கமாக மேறி என்று சொல்லலாமா ? மேல் என்னும் சொல்லே அடிப்படை எனவே அது மேற்- என்று மாறும் இயல்புடையதுதான்; இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கோள் என்பதின் முதல் எழுத்தும் (மே), குறி என்பதின் கடை எழுத்தும் (றி) சேர்த்து மேறி என்றாயிற்று என்றும் கொள்ளலாம்) எனவே, தமிழில் நாம் எப்பொழுதும் இரட்டை மேறியை மட்டுமே பயன் படுத்துவோம். அல்லது ஒற்றை மேறியைப் பயன் படுத்துவதானால் ஒற்றை மேறிக்கு அடுத்து சற்று இடைவெளி தர வேண்டும். அவ்வளவுதான்.

3 இந்த முறையினால் என்ன நன்மை ?

3.1 தமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து வரிசை) உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டுமே போதுமானது. (ஜ ஜி, ஷ, ஷி , ஹ, ஹி, ஸ, ஸி போன்ற எழுத்து வரிசைகள் தேவையே இல்லை; இகர,ஈகார ,ஊகார எழுத்துக்களும், புள்ளி வைத்த தனி மெய்யெழுத்துக்களும் தேவையே இல்லை.). தமிழ் மரபில் இருந்து மாற விருப்பம் இல்லா தமிழர்கள் இன்றும் ஜகன்னாதன் என்னும் பெயரை சகன்னாதன் என்றுதான் வழங்குகிறார்கள். இங்கு கூறியுள்ள முறைப்படி 'சகன்னாதன் என்று அவர்களும் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். இனி நான் என் நண்பர் 'கணேசன் என்று எழுத முடியும். என் நண்பரின் மனைவியின் பெயர் உ'ழா. இப்பெயருக்கு வடமொழியில் வைகறை, அதிகாலை, கதிரவன் முளைத்து எழும் சிற்றம் சிறூகாலை எனப்பொருள். கணித மேதை ·இல்பெர்ட்டை தமிழில் எளிதாக எழுதலாம். தமிழ்க் கணித மேதை ராமானு'சன் என்றும் எழுதலாம். கலைமகளை சரசுவதி என்று எழுதுவதே போதும். ~சர~ச்வ(த்)தி என்று எழுதத்தேவை இல்லை என்பது என் கருத்து.

3.2 மேலும் தமிழ் மரபுக்கு மாறாக வரும் பல வேற்றொலிக்கூட்டங்களையும் (மொழி முதலா வரும் G,B,D, Dh ஒலியன்கள் ) மற்றும் தமிழில் வழங்கா F என்னும் ஒலியையும் குறிக்க முடியும். அணுவியல் அறிஞர் 'வெர்மி என்றும், இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனைச் சிற்பிகளில் ஒருவராகிய 'பக்-மினிசு(ட்)டர் 'வுல்லர் என்றும் இனி எழுத முடியும். ஒரு கூண்டுபோல் அமைந்திருக்கும் 60 கரிம அணுக்கள் கொண்ட ஒரு வியப்பூட்டும் கூட்டணுவை (!!) அண்மையில் கண்டுபிடித்து அதற்கு பேரறிஞர் 'வுல்லரின் நினைவாக 'வுல்லரீன் என்று பெயரிட்டுள்ளார்கள்.

3.3 மிகக்குறைந்த எழுத்துக்களுடன் முன்பினும் அதிகமான வேற்று

மொழிச் சொல்லொலிப்புகளைத் தமிழில் வழங்க இயலுகின்றது. எழுத்துக்களைக் குறைப்பது மட்டுமே நோக்கம் இல்லை, ஆனால் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிகம் மாறுபடாத ஒரு வகையில், எவ்வாறு இன்னும் அதிகமான எழுத்தொலிகளைத் தமிழில் வழங்கலாம் என்பதே என் கேள்வி. தமிழில் வழங்கும் அருமையான மரபாகிய வல்லின-மெல்லின ஒலிப்பு முறை மாறாமல் இருப்பதும் என் அடிப்படைநோக்கம்.

3.4 கையால் எழுதும் பொழுதும், இம்முறை மிக எளிதாக கைக்கொள்ளத் தக்கது.

மேற்கண்ட முறையை எல்லோரும் விரைந்து பயன் படுத்தினால், பயன் வளரும் என்று கருதுகிறேன். குற்றம் குறை இருப்பின், அறிஞர்கள் அருள்கூர்ந்து எடுத்துக்கூறி திருத்துமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்.

அன்புடன்
செல்வா
___________________
செ. இரா. செல்வகுமார்
வாட்டர்லூ, ஒன்ட்டாரியோ, கனடா
ஆக~ச்ட்டு, 24, 1999.

7 comments:

R. said...

அருமையான புதிய முறை.
தமிழ்மொழி ஆய்வாளர்கள் சிந்தித்து, சில எளிமையான கூறுகளை ஏற்றுகொள்ளலாம்.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
'சனவரி 1, 2008

குறும்பன் said...

எளிய முறை. தமிழ்மொழி வல்லுனர்கள் இதைப்பற்றி என்ன கருதுகிறார்கள்?

இசை said...

தமிழின் வரி வடிவம் பல்வேறு மாற்றங்களை உள்வாங்கி வளர்ந்துள்ளது. இப்பொழுது திருவள்ளுவர் இருந்தால், திருக்குறளை அவராலேயே வாசித்தறிய இயலாது. பன்மொழி ஒலி வடிவங்களை வாசிப்பவருக்கு விளங்கச்செய்வதில் உள்ள தொல்லை நமறிந்ததே. எங்கள் வட்டார வழக்கில் சிறு குன்றுக்கும் அளவில் சிறிதான பாறைகளை குட்டை என்றழைப்போம். கன்னடம் மருவிய தமிழா அல்லது தமிழ் மருவிய கன்னடமா என தெரியவில்லை. அவ்வார்த்தையின் ஒலிவடிவம் goodtie /goodtai என வரும். தமிழ் வட்டார வழக்கின் ஒலி வடிவத்தை கடத்துடுவதிலேயே தொல்லைகளுண்டு.

செல்வா அவர்களின் ஆர்வமும் முன்னெடுப்புகளும் பாராட்டிற்குறியது, என் ஐயம் என்னவெனில், வரிவரிவம் மிகவும் சிதைவிற்குள்ளாகி 'வெரெஞ் மொழி போன்றாகிவிடுமோ என அஞ்ச வேண்டி உள்ளது. சீரிய மாற்று அலசலகள் மற்றும் தெளிவான மாற்றங்களுடன் அதிகார மையங்களை அணுக வேண்டிய நேரம் தான். பள்ளிகளில் இதை புகுத்திவிட்டால் இயல்பாகவே வளர்ந்துவிடும்.

வடமொழி எழுத்துருக்கள் தவிர்ப்பு மற்றும் பிறமொழி ஒலிவடிவங்களை இயல்பாக தமிழில் கடத்துவது என் இரண்டும் செவ்வனே நிறைவுறும். ஒருங்கிணைந்த முயற்சி பலன் தரும். ஆராய்ந்து தெளிந்த பின் அதிகார பூர்வமாகாலாம்.

தமிழின் தொன்மை கெடா மாற்றங்களை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.

Kasi Arumugam - காசி said...

இன்றுதான் முனைவர் செல்வா அவர்கள் பரிந்துரைத்த இந்த முறையை அறிகிறேன். நன்றி, நா.க.

எனக்கு ஒரு ஐயம்: கணினி நிரல்களில் ' (முன்கொட்டு) குறிக்கு சில விசேச பயன்கள் குறிக்கப்பட்டுள்ளனவே அங்கே சிக்கல் வராதா?

' (0x27) க்குப் பதிலாக ` (0x60)குறியை பயன்படுத்தினால் இந்தச் சிக்கலிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது. என்ன நினைக்கிறீர்கள்?

nayanan said...

தங்கள் எழுத்துகளைக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தாண்டு நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

செல்வாவின் இந்தப் பரிந்துரையை
98/99 கால கட்டத்தில் அதிகம் புழங்கியவன் நான்.

என்னுடைய மினன்ஞ்சலின் அடிக்கோளாகவும் இந்தக் குறிகளை
வைத்திருந்தேன்.

ஆயினும், கிரந்த எழுத்துகளை நீக்கி
எழுதுவதற்கு இது மாற்று அல்ல என்பதனை உணர்ந்த போது முழுவதுமாக நிறுத்தி விட்டேன்.

கிரந்தக் குறிகள் நீக்குவதற்கு வேறு குறிகள் மாற்றாக ஆக முடியாது.
அதற்குக் கிரந்தத்தையே பயன்படுத்தி
விட்டுப் போகலாமே என்ற எண்ணம்தான் தோன்றும்.

கிரந்தத்த்தினால் உள்ள கேட்டை உணர்ந்து அதைத் துறந்த அந்த 99/00 ஆண்டுகளில் இருந்து எனது மொழி
எந்த இடையூறும் இல்லாமல் இயல்பாக தமிழில் மட்டுமே இருக்கிறது.

கிரந்தத்தை நீக்குவதற்கு
மாற்றுக் குறிகள் தேவையில்லை.
மனம் மட்டும் போதும்; தொல்காப்பியரும் மறைமலையடிகளாரும் துணைக்கு தாமே வருவர்.

எல்லோரையும் போல கிரந்தம் கலந்து எழுதிக் கொண்டிருந்து பின்னர் அறவே அதைக் கலக்காமல் எழுதுகின்ற எனது
துய்ப்பறிவு, செல்வாவின் பரிந்துரையையும் பலநாள் பயன்படுத்திய எனது துய்ப்பறிவு, 'இந்த மாற்றுக் குறிகளை மேலும்
பரப்ப வேண்டாம்; மாற்றாக அறவே
கிரந்தம் இல்லாமல் எழுதுவது பற்றிய
பரப்புரை தேவை' என்றே சொல்கிறது.

அதை செல்வாவும் நீங்களும் செய்தால் மிகவும் பலன் விளையும்
என்று உங்களையும் செல்வாவையும்
கேட்டுக் கொள்கிறேன்.

நட்சத்திரங்கள் நிறைய மின்னட்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

நா. கணேசன் said...

Kasi Arumugam - காசி said...
"இன்றுதான் முனைவர் செல்வா அவர்கள் பரிந்துரைத்த இந்த முறையை அறிகிறேன். "

காசி, வருகைக்கு நன்றி. இம்முறை தமிழில் கணினியில் எழுத முதலில் முற்பட்ட போது எழுந்த ஒன்று. முன்கொட்டு சிக்கல் தருமானால் வேறு ஒன்றும் பயனிக்கலாம். நாக. இளங்கோ
மடலையும் பார்க்கவும்.

-------------

இளங்கோ, உங்கள் வருகைக்கும் சீரிய கருத்துக்களுக்கும், துய்ப்பறிவைப் பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி.

துய்ப்பறிவு - experience என்று எடுத்துக்கொள்கிறேன். நல்ல கலைச்சொற்கள் தோன்றிவருகின்றன,
4-5 பேர் சேர்ந்து குழுவோ, பதிவோ அமைத்து அங்கே சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு ஆங்கிலச்
சொற்குப் ஒன்றுக்கு மேலே கூடப் பரிந்துரைகள் இருக்கலாம். பயனர் உகப்பாக விட்டுவிடலாம். ஒருபதிவும், குழுவும் தொடங்கினால் காசி, நீங்கள், இராமகி ஐயா, ரமணி, ... ஒரு பத்துப் பேர் இருக்கலாம். கலைச்சொல் வேண்டுவோர் அங்கே சென்று தேட
ஒரு வாய்ப்பு. மக்கள் அனுப்பும் கலைச்சொற்களையும் அங்கே சேர்த்துவிடலாம். பெரி. சந்திரா போன்றோரிடமும் சில வார்த்தைகளை அனுப்பினால் அவர்கள் கலைச்சொற்கள்
தருவர்.

நா. கணேசன்

nayanan said...

கலைச்சொல் பற்றிய இந்த சிந்தனை நெடுநாளாக இருக்கிறது. மடற்குழுக்களில் பல முறை தோன்றி
தோற்றுவித்து நின்று போன சங்கதி.

ஒன்று கூடிச் செய்ய வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கக் கூடும்.

துய்ப்பறிவு என்பது experience தான்.
பட்டறிவு என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தேன். அது பிடிக்க வில்லை.

பட்டுப் போன அறிவு பட்டறிவு என்ற பொருள் வருகிறதே என்று பிடிக்க வில்லை.

அதனால் படறிவு என்றே புழங்க ஆரம்பித்தேன். படுதல் என்ற வினை
சரியானது என்று கருதி படறிவு என்றே பயன்படுத்தி சில நாள்களில்
அப்பர் பெருமான் சொல்லெடுத்துக் கொடுத்தார்.

"துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ..." என்கிறார் அப்பர் பெருமான்.

அந்தத் துய்ப்பை உற்றுப் பார்த்தால்
அது வேறோன்றுமில்லை experience தான்.

அன்புடன்
நாக.இளங்கோவன்