தைப் புத்தாண்டு!

"தைப் புத்தாண்டு" பிறந்த கதை!

தமிழறிஞர்களின் 87 ஆண்டு கனவு நனவாகிறது.

சென்னை, ஜன. 12: இப்போது நடைமுறையில் உள்ள தமிழ் ஆண்டுகள் "பிரபவ' முதல் "அட்சய' வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை.

ஆண்டுகளைக் குறிக்கும் இந்தப் பெயர்களின் பின்னணியில் உள்ள கதை, தமிழ் மண்ணுக்குப் பொருந்துவதாக இல்லை என்ற கருத்தும் தமிழறிஞர்களிடம் நிலவுகிறது.

எனில், தமிழர்களுக்கென புதிய ஆண்டு முறை குறித்த ஆய்வு 1921-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அப்போது, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் தமிழ் ஆண்டு குறித்து ஆராய்ந்தனர்.

இக்கூட்டத்தில், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், சைவப் பெரியார் சச்சிதானந்தம், கா. சுப்பிரமணியப் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், கா. நமச்சிவாய முதலியார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், புலவர்கள் பங்கேற்றனர்.

அதில், திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டுக் கணக்கைப் பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்ற வரலாற்று கருத்து உள்ளது. அதன் அடிப்படையில் 31 ஆண்டு கூட்டப்படுகிறது. உதாரணத்துக்கு, தற்போதைய 2008-ம் ஆண்டுடன் 31 ஆண்டைக் கூட்டி, 2039 என்று திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படுகிறது.

படிப்படியான முன்னேற்றம்: 1921-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முதல் முடிவுக்குப் பின்னர் தமிழறிஞர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பிலும் இது தொடர்பான விவாதம் நீடித்தது.

இந்தச் சூழலில் 1935-ம் ஆண்டு நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சியில் மறைமலை அடிகள் இந்த முடிவை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அப்போது முதலே பல்வேறு தமிழ் அமைப்புகள் திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிக்கத் தொடங்கின.

அதன் பின்னர், பல்வேறு நிலைகளைக் கடந்து 1971-ம் ஆண்டில் தமிழக அரசின் நாட்குறிப்பேடு ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் ஆண்டாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

1972-ம் ஆண்டில் தமிழக அரசின் அரசிதழ் அறிவிப்பில் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. 1981-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் அனைத்து ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் ஆண்டாக நடைமுறைக்கு வந்தது. இதன் பின்னரும் திருவள்ளுவர் ஆண்டு ஏட்டளவில் நடைமுறையில் இருந்தாலும், சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக நடைமுறையில் இருந்து வருகிறது.

நாள்காட்டி உருவாக்கம்:

தமிழக அரசின் தமிழகப் புலவர் குழு உள்ளிட்ட அமைப்புகள் தை முதல்நாளை அடிப்படையாகக் கொண்டு முறைசெய்து புதிய நாள்காட்டியை வடிவமைத்தன.

இப்போது தமிழ், தமிழர் தொடர்பான பல்வேறு விழாக்களில் இந்த நாள்காட்டியை இலவசமாக வழங்கி வருவதாக தமிழ்க் கலை அறிவியல் மன்றத்தின் நிறுவனர் வ. வேம்பையன் தெரிவித்தார். இந்தச் சூழலில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை நவீன உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான "சென்னை சங்கமம்' கலைவிழாவை தொடங்கிவைத்தபோது முதல்வர் கருணாநிதி இதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் போவதாகத் தெரிவித்தார். இது தமிழறிஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வெளியிட்ட தகவலை அடுத்து தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து தமிழறிஞர்களின் 87 ஆண்டு கனவு நனவாகிறது.

நன்றி: தினமணி

0 comments: