பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906). தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகன். ஆறுமுகம் ஆன பொருளை கண்ணுக்கு விருந்தாக்கியவர் கண்ணாளர் இரவிவர்மா. பல்லாயிரக் கணக்கில் இவர் வரைந்த முருகனின் அச்சுப்படங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்றுத் தீர்ந்தன. அவர் வரைந்த பாரத தேசத்துக் கடவுளரில் மனம் பறிகொடுத்தவர் மகாகவி பாரதியார். மகாசித்ரகாரர் மறைந்தபோது ரம்பையும் ஊர்வசியும் தான் வரைந்ததுபோல உண்மையிலேயே உளரோ என்றுகாண ரவிவர்மா வானுலகை எய்தினார் என்று இரங்கற் கவிதை பாடினார் மகாகவி. ரவிவர்மா மறைந்தபோது பாரதியார் பாடிய சரமகவி:
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்தது அதுபருக வென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை.
மலரினில் நீல வானில் மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகரு மாறே.
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போதும் என்பான்.
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திரம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம்.
காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? நீங்கள் காணும் இந்த அரிய ஓவியம் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மா தீட்டிய கைவண்ணம். 1880-ம் ஆண்டில் திருவனந்தபுரத்துக்குச் சென்ற மதறாஸ் கவர்னர்-ஜெனரல் டெம்பிள்-கிரென்வில் தன் அதிகாரிகளுடன் அனந்தை அரசரையும் அவரது ஆலோசர்களையும் சந்தித்த நிகழ்ச்சிதான் இந்தச் சித்திரம். அண்மையில் ஐந்து கோடி ரூபாய்க்கு மும்பையைச் சார்ந்தவரால் வாங்கப்பட்டு இந்தியாவுக்கு மீண்டும் வருகைதரும் வண்ண ஓவியமிது. அந்தச் செய்தி பிபிசியில் பார்க்கலாம்.
அதுபோல, தமிழில், இணையத்தில் கணினிப் பயன்பாடு, வளர்ச்சி குறித்துப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகும் சந்திப்பு சென்னையில் வரும் ஜனவரி 23-24 தேதிகளில் நிகழ இருக்கிறது. மேலைநாட்டு அதிகாரிகள் யூனிகோடு நிறுவனத்திலிருந்து (மார்க் டேவிஸ், மைக்கேல் கப்லான்) சென்னைக்கு வருகை தந்து முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவைச் சந்தித்து தமிழ் யூனிக்கோடை மாற்றவேண்டுமா என்று ஆலோசிக்கின்றனர். சென்ற வருடங்கள் போலவே, தமிழ்நாட்டுக் குழுவினர் டேஸ்16 என்ற தங்கள் திட்டத்தை மெய்கள், உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாவர்றுக்கும் கோட்பாய்ண்ட் கேட்க இருக்கின்றனர். அதை மார்க் டேவிஸ் (தலைவர், யூனிகோட் கன்சார்த்தியம்) போன்றவர்கள் அளிக்கிறார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
மார்க் டேவிஸ், பொன்னவைக்கோ, அனந்தகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் எடுக்கும் முடிவுகள் மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு இயங்கும் வலைத்தளங்களில் ஏற்க இருக்கும் குறியேற்றங்களில் தாக்கம் ஏற்படுத்தும். அதன் பின்னர் அரசாங்க இணையத்தளங்கள் (உ-ம்: தமிழ் இணையப் பல்கலை) யூனிகோடுக்கு மாறுமா? அல்லது டாஸ்16க்கு மாறுமா? அல்லது டாஸ்16 மற்றும் யூனிகோடில் வழங்கப்படுமா? என்பதை எதிர்காலத்தில்தான் தமிழ்ச் சமூகம் அறியமுடியும். டாப், டாஸ்16, ... இவைகளுடன் தமிழ்நாடு அரசாங்க இணைய அமைப்புகள் யூனிகோடிலும் தங்கள் அரிய சேவைகளைப் பொதுமக்கள் பெற வாய்ப்பு ஏற்படுத்துமா? என்பதெல்லாம் தெரியவரும். இதில் பயனர் சமுதாயத்துக்கு அரசு, இண்பிட் மற்றும் கணிஞர்கள் நிலைப்பாடு போன்றவை வழிகாட்டும் என்று நம்புவோம்.
நா. கணேசன்
யூனிகோட் என்றால் என்ன?
http://www.unicode.org/standard/translations/tamil.html
http://www.unicode.org/standard/WhatIsUnicode.html
மதியம் ஞாயிறு, ஜனவரி 20, 2008
யூனிக்கோடு அதிகாரிகளின் சென்னை விஜயம்
Posted by
நா. கணேசன்
at
1/20/2008 02:41:00 PM
Subscribe to:
Post Comments (
Atom)
5 comments:
No one seem to bother in the Tamizh blog world.
arumai yaana pathivu
வணக்கம்
இப்போதுதான் தங்கள் வலை பூவை பண்புடனில் பார்த்தேன்.
அறிய படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
சந்திப்பின் முடிவை அறிய ஆவலாக உள்ளேன். நன்றி
நீங்கள் காணும் இந்த அரிய ஓவியம் ////புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மா தீட்டிய கைவண்ணம். 1880-ம் ஆண்டில் திருவனந்தபுரத்துக்குச் சென்ற மதறாஸ் கவர்னர்-ஜெனரல் டெம்பிள்-கிரென்வில் தன் அதிகாரிகளுடன் அனந்தை அரசரையும் அவரது ஆலோசர்களையும் சந்தித்த நிகழ்ச்சிதான் இந்தச் சித்திரம். அண்மையில் ஐந்து கோடி ரூபாய்க்கு மும்பையைச் சார்ந்தவரால் வாங்கப்பட்டு இந்தியாவுக்கு மீண்டும் வருகைதரும் வண்ண ஓவியமிது. அந்தச் செய்தி பிபிசியில் பார்க்கலாம்.////
மனதை நெகிழவைக்கும் செய்தி, பதிவில் படத்துடன் இட்டமைக்கு, மிக்க நன்றி அய்யா (சார்)
Post a Comment