திருவாய்மொழி: 'மல்லிகை கமழ் தென்றல்'

கண்ணபிரான் மீது காதல் கொண்ட முல்லைநில ஆய்ச்சியர் நெஞ்சுருகிப் பாடிய பத்துப் பாசுரங்கள் தமிழின் கருவூலம்.

    இன்கவி பாடும் பரம கவிகளால்
    தன்கவிதான் தன்னைப் பாடுவியாது இன்று
    நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை
    வன்கவி பாடும் என் வைகுந்தநாதனே. (7.9.6)


எனப் பாடிய முத்தமிழ் விநோதர் அல்லவா நம்மாழ்வார்! அந்தாதி அமைப்பைப் பத்துப் பாடல்களையும் வாசித்தால் தெரியும். இரண்டு முறை படித்தால் தமிழ்ப் பயிற்சி கூடும்; பொருளும் விளங்கிவிடும். 1100-1200 ஆண்டுகளுக்கு முன்னால் என்னமாய் பிரபந்நஜன கூடஸ்தர் தமிழில் விளையாடியிருக்கிறார்! பாசுரத்தை நாம் இன்று படித்தாலும் கிருஷ்ணனிடம் முல்லைக்காடுளின் கோபியர் விளையாட்டும், பிரிந்தபோது அவர்கள் ஏக்கமும் வெளிப்படுகின்றன. 1000 ஆண்டுகளாக நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திற்கு உரைகளின் நெடிய மரபுகள் உண்டு. பக்தி இலக்கியங்களில் நாலாயிரத்துக்கு மாத்திரந்தான் தமிழில் இச்சிறப்பு.

வாசக நண்பர்களின் வாழ்த்துக்களையும், நானறியாப் புதுச் செய்திகளையும் படிக்குங்கால் கவிகுல திலகரின் புகழ்பெற்ற பாசுரத் தொடக்க வாக்கியத்தை வலைத்திரட்டிக்கும் இணைக்கத் தோன்றிற்று:

மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ!
   தமிழ்மணம் கமழ் பதிவுகள் ஈர்க்குமாலோ!


நா. கணேசன்

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஒருபத்து
---------------------------------------

3761
மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ.
       வண்குறிஞ் சியிசை தவழு மாலோ,
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ.
       செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ,
அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்
       ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்,
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
       புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. 9.9.1

3762
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ.
       புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ,
பகலடு மாலைவண் சாந்த மாலோ.
       பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ,
அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து
       அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்,
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
       இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்? 9.9.2

3763
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
       இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க,
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
       துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
       தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும்
       பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. 9.9.3

3764
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ.
       வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ,
மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ.
       மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ,
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு
       துதைந்த எம் பெண்மையம் பூவி தாலோ,
ஆவியிம் பரமல்ல வகைக ளாலோ.
       யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. 9.9.4

3765
யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ.
       ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ,
யாமுடை ஆயன்தன் மனம்கல் லாலோ,
       அவனுடைத் தீங்குழ லீரு மாலோ,
யாமுடை துணையென்னும் தோழி மாரும்
       எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ,
யாமுடை ஆருயிர் காக்கு மாறென்?
       அவனுடை யருள்பெ றும்போது அரிதே. 9.9.5

3766
அவனுடை யருள்பெ றும்போ தரிதால்
       அவ்வருள் அல்லன அருளும் அல்ல,
அவனருள் பெறுமள வாவி நில்லாது
       அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன்வண் திரும டந்தை
       சேர்திரு வாகமெம் மாவி யீரும்,
எவனினிப் புகுமிடம்? எவஞ்செய் கேனோ?
       ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். 9.9.6

3767
ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்.
       ஆருயிர் அளவு அன்று இக்கூர்தண் வாடை,
காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம்
       கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்க ணஃதே,
சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு
       பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து,
போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
       புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. 9.9.7

3768
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ.
       பொங்கிள வாடைபுன் செக்க ராலோ,
அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம்
       கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர்,
மதுமன மல்லிகை மந்தக் கோவை
       வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து,
அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே
       ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். 9.9.8

3769
ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்.
       அதுமொழிந் திடையிடைத் தஞ்செய் கோலத்,
தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
       தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி,
பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து
       பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை,
யாதுமொன் றறிகிலம் அம்ம அம்ம.
       மாலையும் வந்தது மாயன் வாரான். 9.9.9

3770
மாலையும் வந்தது மாயன் வாரான்
       மாமணி புலம்பல் லேற ணைந்த,
கோலநன் னாகுகள் உகளு மாலோ.
       கொடியென குழல்களும் குழறுமாலோ,
வாலொளி வளர்முல்லை கருமு கைகள்
       மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ,
வேலையும் விசம்பில்விண் டலறு மாலோ.
       என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே? 9.9.10

3771
அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா
       அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்,
அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி
       அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்,
அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த
       ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு,
அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர்.
       அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. 9.9.11

5 comments:

Unknown said...

அருமையான நம்மாழ்வார் பாசுரத்தை இட்டு அதன் இனிமையைச சுவைக்கத் தந்தமைக்கு நன்றி. மகிழ்ச்சி.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
'சனவரி 3, 2008

குமரன் (Kumaran) said...

பராங்குச நாயகியின் பரிதவிப்பும் கோதை நாச்சியாரின் பரிதவிப்பைப் போலவே இருக்கிறது. நீங்கள் மட்டும் இவை நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் என்று சொல்லியிருக்காவிட்டால் நாச்சியார் திருமொழி என்றே நினைத்திருப்பேன்.

ஒரே நேரத்தில் இந்தப் பத்துப் பாசுரங்களையும் படிக்க இயலவில்லை. இரண்டு இரண்டு பாசுரங்களாகத் தான் படிக்க இயன்றது. அதற்கு மேல் அந்த ஆனந்த அனுபவத்தைத் தாங்கிக் கொள்ள தகுந்த கலமாக என் மனம் இல்லை.

enRenRum-anbudan.BALA said...

கணேசன்,

முதற்கண், நட்சத்திர வாழ்த்துக்கள், ஒரு சமீபத்திய மாஜி நட்சத்திரமிடமிருந்து :)

அருமையான பாசுரங்களை வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி. அப்படியே, சற்று எளிமையான பொருள் விளக்கமும் அளித்திருக்கலாமே !

எ.அ.பாலா

நா. கணேசன் said...

ராதா, குமரன், பாலா -
வருகைக்கு வாழ்த்தும், நன்றியும்.

நா. கணேசன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்று தான் இப்பதிவைக் கண்டேன் கணேசன் ஐயா!
பராங்குச நாயகி, மாலோ மாலோ என்று மாலிடம் ஏங்கும் அழகே அழகு!

ஒரே சமயத்தில் பத்தையும் ஆளுமாலோ?
அதைப் பாழும் என்நெஞ்சம் தான் தாளுமாலோ? :-))

//கண்ணபிரான் மீது காதல் கொண்ட முல்லைநில ஆய்ச்சியர்//

ஆகா...என் மேல இத்தினி பேருக்குக் காதலா! :-))