'ஜனகணமன' மெட்டினில் ...

இந்திய தேசத்தின் குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். நண்பர் குமரனின் வலைப்பதிவில் இரவீந்திரநாத தாகூரின் ஜனகணமன அதிநாயக என்னும் இந்திய நாட்டுப்பண்ணின் நல்ல விளக்கவுரையைச் சுவைத்தேன். பாரதியாரின் 'வந்தே மாதரம்' மொழிபெயர்ப்பும், மாணவக் காலங்களில் கல்லூரி விடுதிகளில் உணவுக்குக் காத்திருக்கும் வேளையில் நகைச்சுவையாக, சனகண மெட்டில் பாடும் பாட்டும், திருமுருக கிருபாநந்த வாரியாரின் முருகன் பக்திப் பாட்டும் (சனகண மெட்டுத்தான் இதுவும்) நினைவுக்கு வர இங்கே தங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

நா. கணேசன்

    வந்தே மாதரம்!
(பங்கிம் சந்திரரின் பாரதாமாதா பாடற்குப்
பாரதியாரின் ஒரு மொழிபெயர்ப்பு)

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தெண்ணில வதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்குமுன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?
ஆற்றலில் மிகுந்தனை, அரும்பதம் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை ஓட்டுவை. (வந்தே)

அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ!
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,
ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே. (வந்தே)

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்திதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ. (வந்தே)

திருநிறைந்தனை, தன்னிகர் ஒன்றிலை!
    தீது தீர்ந்தனை, நீர்வளம் சார்ந்தனை!
மருவு செய்களின் நற்பயன் மல்குவை!
    வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை!
பெருகுமின்பம் உடையை குறுநகை
    பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநிலத்து வந்து எம்முயிர் தாங்குவை
    எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

        நாட்டுப்பண் (இர. தாகூர்)

        ஜன கண மன அதி நாயக ஜெயஹே
            பாரத பாக்ய விதாதா
        பஞ்சாப சிந்து குஜராத மராட்டா
            திராவிட உத்கல வங்கா
        விந்திய ஹிமாசல யமுனா கங்கா
            உச்சல ஜலதி தரங்கா
                தவ சுப நாமே ஜாஹே
                தவ சுப ஆஷிஷ மாஹே
                ஜாஹே தவ ஜய காதா
        ஜன கண மங்கல தாயக ஜெயஹே!
                பாரத பாக்ய விதாதா
            ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
            ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.


    கல்லூரி விடுதி இளைஞர் பாடல்
       (ஜனகணமன மெட்டில்)

        ஜனங்களின் வயிறினில் மீறிய பசியே!
            பார்புகழ் பாக்ய இந்தியா!
        பஞ்சாய்ப் பட்னி தருவீங்க பரோட்டா
            கிராம்புடன் காய்கறிக் குருமா
        வெந்தய வடைஅடை வெங்கா யஞ்சேர்
            இட்டிலி விரைவில் கொடய்யா!
                சுவைமசால் போட்டே தோசை,
                உயிரென மேலதில் ஆசை!
                ஆனால் தயிர்வடை வேண்டாம்!
        ஜனங்களின் மங்கலம் ஏறுக மிகுந்தே!
                பாரதில் வேண்டு மிதேதான்!
            குழம்பே, சுவையாய்க் குழம்பே!
            சுடச் சுடச் சுடும் குழம்பே!


    சரவணபவ குகனே (வாரியார் சுவாமிகள்)
       (ஜனகணமன இசையில்)

        சிவ குக குமர பராசல பதியே!
            சீரலை வாயுறை நாதா
        சிந்தூர செந்தளி பழனா புரிவாழ்
            திருவேர கமுறை கந்தா!
        செங்கதிர் நிகர்தணி காசலம் வந்தாள்!
            செம்பழ முதிர்வன எந்தாய்!
                தவமருள் ஆறா தாரா!
                தவமுனி வரர்பணி வீரா!
                தாதா! தருண சுபோதா!
        ஜெய ஜெய சங்கர பாலக மணியே!
                தாரக மந்திர வியோதா
            சிவமே, சிவமே, சிவமே!
            சரவண பவ சிவமே!



வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
        ~ தேசியக்கவி பாரதியார்

4 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக ஞாபகம் வைத்து போட்டிருக்கிறீர்கள்.

குமரன் (Kumaran) said...

கணேசன் ஐயா. கல்லூரி இளைஞரின் பாடல் அருமை என்றால் வாரியார் எழுதிய பாடலோ அருமையிலும் அருமை. இரண்டையும் சுவைக்கத் தந்ததற்கு மிக்க நன்றி.

நா. கணேசன் said...

வருகைக்கு நன்றி, குமார், குமரன்.

பல பிரபந்த இலக்கியங்கள் (அபிராமி பட்டர் உட்பட) அறியப்படாமல் இருக்கின்றன. உங்கள் உதவிகள் இருந்தால் எளிதில் தட்டெழுதி அவை வலையுலாக் காணும்.

அன்புடன்,
நா. கணேசன்

குமரன் (Kumaran) said...

கணேசன் ஐயா. சென்ற வார இறுதியில் வெளியே சுற்றிக் கொண்டிருந்ததால் உங்களுடன் தொலை பேச இயலவில்லை. இந்த வார இறுதியில் கட்டாயம் பேசுகிறேன்.

அபிராமி அந்தாதியை ஏற்கனவே என் பதிவுகளில் ஒன்றில் எழுதிக் கொண்டிருக்கிறேன். மற்ற பிரபந்தங்களையும் எழுதி வலையேற்றலாம். ஆனால் எதற்கும் இப்போதே உறுதி அளிக்கவில்லை. உங்களுடன் பேசிய பிறகு எதையும் கமிட் செய்கிறேன். :-)