தமிழ்மணம் நடாத்தும் நண்பர்கள் யூனிக்கோடு பற்றிய சில அனுபவங்கள், வரலாறுகளை எழுத அழைத்ததால் எனக்குப் பெருமை. யூனிக்கோடுக்குத் தமிழ் வரலாற்றிலே ஒரு பெருமை உண்டு ~ பெரும்பான்மையான ஒரு குறியேற்றமாக மாறி வலைப்பதிவுகள் போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கான தமிழரைத் தமிழ்நாட்டிலேயும் வெளியேயும் வையவிரிவலையில் (world-wide web) மடலாட வைத்தது. கணினிக் குறியேற்றங்கள் பல இருந்தாலும் யூனிக்கோடினால் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்க்க முடிகிறது. கணினி என்ற கலைச்சொல் கிண்டி பொறியியற் கல்லூரியில் 1970களின் கடைசியிலே ஏற்பட்டது. யூனிக்கோடுக்கு ஒருங்குறி என்று தமிழ்ப்படுத்தியவர் நண்பர் இராமகி ஆவார். இணையம் (web), உலாவி (browser), மட்டுநர்(moderator), தொடுப்பு (link), ... எத்தனை, எத்தனைக் கலைச்சொற்கள்! தொழில்நுட்புகள் அனைத்துக்கும் உழைக்கும் தமிழ்மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழன்னைக்கு அழகுச் சொல்மாலைகள் புனையும் முயற்சிக்கு முக்கியமான வழி இணையம் என்றானது. எந்த ஓர் ஆங்கில வார்த்தைக்கும் தமிழில் பொருத்தமான சொல்லைத் தோற்றுவிக்க நொடியினில் முடிகின்றது. இணைய நாட்டாமை மேட்டிமைக் குடிகளால் நடத்த இயலாதவாறு அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கும் வாய்ப்புகளைத் தொழில்நுட்பம் இன்று தருகிறது. வணிக நிறுவனங்களிடம் உள்ள ஊடகங்களிலே எழுதக் காத்திராமல், உடனுக்குடன் தத்தம் படைப்புக்களை, எண்ணங்களை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ள ஏலுகிறது. 100,000 வலைப்பதிவுகள் தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படும் நாள் தொலைவில் இல்லை எனும் கனா மெய்ப்படவேண்டும்.
யூனிக்கோடில் கூகுள் குழுக்கள்:
முதன்முதலில் ஏற்பட்ட மடலாடு மின்குழு தமிழ்.நெட். பின்னர் கிளைத்து யாகூ குழுமங்கள் பலவாகின. தமிழ்ச் சொற்களைக் கொடுத்துத் தேட வசதிகள் நல்கின கூகுள் குழுமங்கள், ஆனால் அவ்வசதி இன்றுகூட யாகூ குழுக்களில் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். முதன்முதலில் தமிழின் கூகுள்குழு 'அன்புடன்' புகாரி [1] அமைத்துச் சிறப்பாக இயக்கி வருகிறார். இப்போது அன்புடன், முத்தமிழ், மின்தமிழ், பிரவாகம், பண்புடன், ... என்று பல துறைகளில் கூகுள்குழுக்கள் ஒருங்குறியில் நடைபெறுகின்றன, இலட்சக் கணக்கில் கடிதங்கள் பரிமாற்றம்! கூகுள் குழுக்களின் அறிமுகக் கட்டுரைகளைப் ஃபெட்னா மலர்களில் கவிஞர்கள் வரைந்தனர்: புகாரி கட்டுரை (2005), இர. வாசுதேவன் கட்டுரை (2006).
கூகுளில் இணைக்குழு உருவாக்கம்:
2005 வாக்கில் இருந்த பெரிய பிரச்சினை என்னவெனில் மரபுக் கவிஞர்கள், யாகூ குழுவின் முதலாளிகளுக்கும் கூட இணையத்தில் யூனிக்கோடு எழுதுகை என்பது கைவசப்படாத வேளை. மேலும் யூனிக்கோடு மாறுகிறது என்று தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு ஒருமுறை செய்திகள் வெளிவந்த காலம். குறியீடு மாறிய பின்னால் மாறுங்கள் என்றும் சொன்னார்கள். அந்நிலையில் யாகூகுழுவில் எழுதுவோர் எழுதட்டும், தானியங்கியாக நிழற்குழு கூகுளில் அமைத்து அந்தத் திஸ்கி மடல்களை யூனிக்கோடுக்குப் பெயர்த்து இணைக்குழுவில் வைப்போம் என்று நினைத்தேன். 'தமிழ்மணம்' காசி மென்கலம் தயாரித்து உதவினார். அதற்கு உடனே அனுமதி அளித்து, தொழில்நுட்ப முன்னெடுப்புக்கு ஆதரவு அளித்தவர் கவிமாமணி இலந்தை இராமசாமி ஆவார். மரபுக் கவிதைக் கடலைக் கடக்கும் கப்பலாகச் சந்தவசந்தம் இலங்குகிறது. அதன் மீகாமன் இலந்தையார். பலரும் பாராட்டினர். கனடா நாட்டுக் கவிஞர் பேரா. அனந்தநாராயணனின் வாழ்த்துப்பா நினைவில் இருக்கிறது [2] :
பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
காரணமாய் நின்றார் களித்து!
உமர் அவர்களின் தேனீ எழுதுருவும், நானும் உதவிய முகுந்தராசின் எ-கலப்பை மென்கலங்கள் பதிவுகள் வளர்ச்சிக்கு உறுதுணையாயின. பின்னர், தமிழ்மணம், தேன்கூடு உருவானதும் தமிழ்வலைப் பதிவுலகம் நிலைபெற்று தமிழர் கூடும் மேடைகளாக வலைத் திரட்டிகள் விளங்க ஆரம்பித்தன.
முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் டேஸ் பற்றிய என் கருத்துக்கள்? தற்போதைய யூனிக்கோடின் பிழை என்ன? மேலும் புதிதாக யூனிக்கோடு எழுத்துக்களை எவ்வாறு தமிழ் பெறுவது?
என் சிறு ஒருங்குறிப் பட்டறிவை அடுத்த பதிவில் காண்போம்.
நா. கணேசன்
குறிப்புகள்:
[1]
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
கவிஞர் புகாரி
புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய் !
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்!
ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்!
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்!
ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்!
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்!
காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்!
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்!
அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்!
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்!
அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்!
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்!
[2]
பாரதம் - மகாபாரதம்; பாரதம் = பா ரதம் - கவிதை எனும் தேர் (சந்தவசந்தம் கவிதைக்குழு). வாரணம் = ஆனைமுகன்.
தமிழர் இணையும் யூனிக்கோடு!
Labels: ஒருங்குறி , கூகுள்குழுக்கள் , டேஸ் , யூனிக்கோடு
Subscribe to:
Post Comments (
Atom)
21 comments:
நண்பரே
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நட்சத்திர வாரத்திற்கும் இனிய வாழ்த்துகள்.
உங்களின் தமிழ் பணியை வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியாது
சிறந்த பணி
தொடரட்டும்.
நட்சத்திரவாரத்திற்கு வாழ்த்துக்கள்.
வளர்க உங்கள் தமிழ்ப் பணியும் ஆர்வமும்.
அழகு தமிழ் ஆழ்ந்த அறிவு
பழகு தமிழ் பைந்தமிழின் இனிப்பு
பார் புகழும் அறிவுலக மேதை
பார் புகலே பார் தமிழ் வளத்தைப் பார்
கணிணிக்கும் இளமை வளம்
கண்ட தமிழ் பார்!
தமிழுலகம் வாழ்த்தும் கணேசனார்
வாழ்க!புத்தாண்டு,பொங்கல் சொல்லி
உம் பெயரில் தமிழுலகம் வாழ்த்தும்!
யூனிகோடின் பிதாமகருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களின் உழைப்பாலும் உதவியாலும்தான் நாங்கள் இன்று தமிழில் எழுதுகிறோம். நன்றி. இன்னொரு கொங்குத்தும்பி
நண்பர் கணேசன்:
நட்சத்திர வாரத்தில் உங்கள் தமிழ்ப்பணி மேலும் தொடர்வது கண்டு மகிழ்ச்சி. யூனிக்கோடு பற்றிய தொகுப்பு தந்தும் இரு கவிதைகளை படித்து மகிழும்படி வாய்ப்பு அளித்தும், 2008 ஆண்டு தொடக்கத்தை இனிமையாக்கியுள்ளீர்கள்.
நன்றி.
உங்களுக்கும், தமிழ்மணம் பெற்று மகிழும் அன்பர்களுக்கும் 2008ன் இனியபுத்தாண்டு வாழ்த்து.
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க மகிழ்வுடன்
அன்புடன் ராதாகிருஷ்ணன்
திசம்பர் 31, 2008
அன்பரே!!
யுனிக்கோட் உங்கள் கைப்பட்டும் வளர்ந்த குழந்தையா??
அந்தக் குழந்தையைக் கொஞ்சி மகிழ்பவர்களில் நானும் ஒருவன்
வாழ்த்துகிறேன்.
இன்னும் செய்யுங்கள்...
ஒவ்வொருமுறை தமிழா இகலைப்பை நிறுவப்படும்போதும் உங்கள் பெயரைக் கண்டு உங்கள் பதிவு எது என வியப்பேன். பின்னால் ஓசையின்றி செயலாற்றிய எங்கள் பதிவுகளுக்கு காரணகர்த்தாவை நட்சத்திரமாக்கி முன்னணியில் நிறுத்தியதற்கு தமிழ்மணத்திற்கு நன்றி. ஒருங்குறி உருவான கதையும் துணையாக அழகான இரு கவிதைகளும் என புதிய வருடத்தை இனிய தமிழால் துவக்கியுள்ளீர்கள்.
உங்கள் தமிழ்ப்பணிக்கு எங்கள் சிரம்குவிந்த நன்றிகள்.மேலும் புத்தாண்டில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !
முனைவரே...
புத்தாண்டில் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள். உங்கள் பதிவு மலரும் நினைவாக நிற்கிறது.மறக்காமல் தமிழ் இனையத்தை (Net) குறிப்பிட்டுள்ளீர்கள். பழைய தமிழ் இணைய நண்பர்கள் நாக இளங்கோவன், மணி மணிவன்ணன், தமிழரசன்,பூபதி மாணிக்கம், மெய்யப்பன்,குமார் மல்லிகார்ஜுனன்,ரமனீதரன் கந்தையா எங்கே ?
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
=இஸ்மாயில் கனி
http://kanijraja.blogspot.com
நட்சத்திர வார வாழ்த்துக்கள் முனைவரே. வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு.
மதிப்புக்குரிய நா.கணேசன் அவர்களுக்கு,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்
அன்புடன்
முபாரக்
மதிப்பிற்குரிய கணேசன் அவர்களுக்கு,
உங்களின் தமிழ்பணி பிரமிக்க வைக்கிறது.ஒருங்குறி பற்றிய தகவலை இப்போதுதான் நன்கு அறிய முடிந்தது.
சிறப்பான பணி.
நீங்கள் சொன்னது மிக்க சரி ஐயா. ஒருங்குறி தமிழர்களை இணைத்தது; இணைக்கிறது; இணையத்தில் வாழவைக்கிறது என்பது மிகவும் உண்மை. சுருக்கமாக இணையத் தமிழ் வரலாற்றைத் தந்திருக்கிறீர்கள். உங்கள் தமிழ்த்தொண்டிற்கு என் வணக்கங்களும் நன்றிகளும்.
தங்கத் தமிழ் மொழி அன்னையவள் அழகு மொழி
ஆர்ப்பரிக்கும் ஆங்கிலத்தால் கரைந்து போன கனிமொழி
கண்ணான கண்மணிகளாம் கணேசன் போல் கற்றோரால்
மீண்டு கரைகடந்து வெளிப்பட்டாள் காலமெலாம் கோலோச்ச
அன்பரே வணக்கம், என் வயது 50,
எழுத்துக்களில் மோகம் 1970ல் வந்தது. ஜெயகாந்தன் அவர்களின் வரிகளில் மயங்கியிருந்த காலம். கண்ணதாசன் அவர்களின் இயல்பு
நடைஅன்னைத் தமிழ் மீது அயராத காதல் கொள்ளவைத்தது. அறிவியில் துறையில் சுஜாதா போன்றோரின் எழுத்துக்கள் தமிழை ஆங்கிலத்துக்கு
இணையாக கொண்டு சென்றது.
ஆனாலும் முட்டுக்கட்டையாய் இருந்தது ஆங்கில மொழி.
கிராமப்புரங்களிலிருந்து வந்து பள்ளிப் படிப்பை முடித்து கல்லுாரிக்கு கால் வைத்த நாளில் ஆங்கிலம் அலைக்கழித்தது. ஆங்கிலப் புலமைக்குத்தான் அங்கீகாரம் கிட்டியது. புரியாமல் கற்றதை மனனம் செய்து தேர்வுகள் எழுதி அறிவின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்தது ஒரு அந்நிய மொழி.
தட்டுத்தடுமாறி தேர்வில் தேறி அறிந்த அறிவை முழுமையாய் வெளிப்படுத்த முடியா சோகம். விளைவு தேர்வுகளில் குறைந்த மதிப்பெண். பின் வெறி கொண்டு கற்று உத்தியாகத்திற்கான அளவில் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டு ஏதோ வேலையும் தேடிக் கொண்டாயிற்று.
உறவுகளுக்கு கடிதம் எழுத ஆங்கிலம் அவசியமாக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதினால்தான் அங்கீகாரம் தரப்பட்டது. தமிழில் எழுதப்பட்ட
கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டன. கேவலமானவற்றைக் கூட ஆங்கிலத்தில் நாசுக்காகக் கூற முடியும். தமிழின் வளமை கேலிக் கூத்தாயிற்று.
"தேவரீருக்கு வணக்கம் " என்று விளித்து தமிழில் கடிதம் எழுதுவது கிட்டத் தட்ட முடிவுக்கு வந்தாயிற்று.
இந்த காலகட்டததில் இழந்த கெளரவத்தை தமிழுக்கு ஈட்டுக் கொடுத்ததில் இணையதளம் பேருதவி செய்துள்ளது என்றால் மிகையில்லை.
இணைய தளத்தில் தமிழ் பீடு நடை போட்டுவர தங்கள் போன்றோரின் பங்கு போற்றுதலுக்குரியது. அன்னைத் தமிழுக்கு உலகளவில் இன்று
அங்கீகாரம் இணையத்தில் கிடைத்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அதன் பின்னால் தங்கள் போன்றோரின் உழைப்பு வியக்க வைக்கிறது. தாங்கள்
கூறியது போல் பத்திரிக்கைத் துறையில் அங்கீகாரம் கிடைக்காத பலரின் வலிமை மிக்க எழுத்துக்களை தமிழ் பதிவுகளில் கண்ணுறும் போது
சொல்லொணாத ஆனந்தம் உண்டாகிறது. ஒவ்வொருவரும் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை தங்கள் போன்றோரின் உழைப்பு மெய்ப்பித்துள்ளது. அதிலும் யுனிக்கோடு முறை வந்தபின் என்போன்றோருக்கு மிக்க உதவியாய் உள்ளது. உங்கள் போன்றோரின் தயவால் நாங்கள் மீண்டும் தமிழில் எழுத முனைப்பட்டுள்ளோம்.
நட்சத்திர வாரத்தில் தங்கள் பெயர் காணவும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அனைத்துத் தகுதிகளையும் பெற்று அந்நிய தேசத்தில் இருந்து தமிழ்த்
தொண்டாற்றி வருதுவது அதிக மகிழ்வைத் தருகிறது. தொடரட்டும் தங்கள் பணி, மேலும் தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
தமிழின் சிறப்பினைத் கூறும் முகத்தான், தமிழ் மொழியில் உள்ள சங்கேத வார்த்தைகள் பற்றி ஒரு அன்பருக்கு அளித்த என் பதிவின் தொடுப்பை இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் கருத்துக்கள் அறிய ஆவலாய் உள்ளேன்.
http://salaisjr.blogspot.com/
வணக்கம்
முதற்தடவையாக இப்பதிவைப் பார்த்ததுமே இதை எழுதுகிறேன். கணேசனுக்கு இனிய நல்வாழத்துகள். தொடரட்டும் அரிய பணி!
கடந்து வரும் சில நூற்றாண்டுகளாக அரசிழந்த நிலையிலும் தமிழ் வாழ்வது இவரைப்போன்ற தமிழார்வலர்களால்தானே!!
தேச எல்லைகளைக் கடந்து தமிழர்களாக தமிழார்வலர்களாக ஒருங்கிணைவோம்!
- முகிலன்
அன்பு கணேசன்.,
மனம் நிறைந்த நன்றியுடன் இந்த பின்னூட்டம் இடுகிறேன். நமக்கெல்லாம் ஆர்வம் உள்ள அளவு.. தமிழ் அறிவு கிடையாது.... இன்றைய பொருளாதார சூழலில் தமிழ் கற்றவன் கொலைகாரன் ஆவான் என்னும் கதையம்சம் கொண்ட "கற்றது தமிழ்" படம் பார்த்து வெறுத்துப்போய் தமிழ் தேடி ஒதுங்கியதில் இந்த புதிய உலகம் தெரிந்தது. ஒரு அண்ணா/கலைஞர்/பாரதி/பாரதிதாசன்/ கண்ணதாசன்/வைரமுத்து பாராம்பரியத்துக்கு பின் தமிழின் இலக்கிய மற்றும் ஜனரஞ்சக வளர்ச்சி குறித்த கவலை நீங்கியது.
தங்கள் கவிதை அருமை...தொடரட்டும் தங்கள் பணி...
எல்லைகள் கடந்து மெல்லத் தமிழ் இனி வளரும் என்ற நம்பிக்கையுடன்
மதுரைக்காரன்
மதிப்பிற்குரிய கனேசன்,
இணையத்திலும்-கனினியிலும் தமிழ் வளர-மிளிர-ஒளிர உதவிய நட்சத்திரங்களில் ஒருவரான உங்களை - வாழ்த்தி பெருமையடைந்துக்கொள்கிறேன்.
இணையத் தமிழர்களை
இணைய வைத்து
ஒருங்குறியால்
முத்தமிழை வளர்க்கும்
தமிழா
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
தமிழ் போல்
சீரும் சிறப்புமாய்
உமது பணி தொடருட்டும்.
அன்புடன்
தமிழ் வாலிபன்
http://groups.google.com/group/Piravakam
முனைவரே வணக்கம்,
இணையத்தில் எழுதினால் முதலில்
இணையம்பற்றி எழுதவேண்டும்!
அதை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர் நீங்கள்.
பழந்தமிழ் + கணித்தமிழ் இதுவே உங்களின் இரு கண்கள்.
யுனித்தமிழ் பற்றி வரலாறுபோலவே எழுதியிருக்கும்
உங்கள் கட்டுரையைக் கண்டு நான் பெருமகிழ்வடைந்தேன்.
தயங்கி நின்றோரைத் தள்ளிக்கொண்டு யுனித்தமிழ்
தன் கோட்டையை மிக உயரமாகக் கட்டிக்கொண்டது.
அந்த முதல்நாள் முதலாகவே உங்கள் ஆதரவும் சேவையும்
என்போன்றோருக்கு உந்துதல் தந்தவை, யுனித்தமிழ் பெருக உரமிட்டவை.
இன்றும் தொடரும் அவற்றை நன்றியோடு பார்க்கிறேன்.
இன்னமும் திஸ்கியிலிருந்து வெளிவராதவர்கள் இருக்கவே
செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மையென்றாலும்
யுனித்தமிழ் என்ற இனிப்பு நதி பொங்கி நிறைந்து வழிந்து ஓடுவது
உயிருக்கு அமுத ஒத்தடம்.
நான் பல திஸ்கி குழுமங்களில் முன்பு இருந்தேன் என்று அறிவீர்கள்.
யுனித்தமிழுக்கு மாற தொடர்ந்து மடல்கள் இட்டு கட்டுரைகள் எழுதி
பயன்களைக் கூறி அயராது அழைப்புகள் விடுத்தேன்.
இன்று அன்புடனின் செழுமையை மாதிரியாகக் கொண்டு வளரும்
யுனித்தமிழ்க் குழுமங்கள் பலப்பபல.
அன்புடன் இதுவரை எத்தனை ஆயிரம்பேருக்கு யுனித்தமிழ்
கற்றுத் தந்திருக்கும்? எத்தனை பேரை யுனித்தழுக்கு இழுத்திருக்கும்?
இன்று இணையத்தில் யுனித்தமிழ் எழுதும் மிகப்பெரும்பான்மையினர்
அன்புடன் கற்றுத்தந்த யுனித்தமிழ் கொண்டு எழுதுபவர்களே என்று
உறுதியாகச் சொல்வேன்.
என் இணைய பக்கங்களில் யுனித்தமிழுக்கான அனைத்து உதவிகளையும்
இட்டு நிரப்பியிருக்கிறேன்.
உங்கள் கட்டுரைகளில் எனக்கும் ஒரு சிறப்பிடம் தந்து எழுதியிருப்பது
மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
நன்றிகள் முனைவரே.
அன்புடன் புகாரி
முனைவரே வணக்கம்,
இணையத்தில் எழுதினால் முதலில்
இணையம்பற்றி எழுதவேண்டும்!
அதை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர் நீங்கள்.
பழந்தமிழ் + கணித்தமிழ் இதுவே உங்களின் இரு கண்கள்.
யுனித்தமிழ் பற்றி வரலாறுபோலவே எழுதியிருக்கும்
உங்கள் கட்டுரையைக் கண்டு நான் பெருமகிழ்வடைந்தேன்.
தயங்கி நின்றோரைத் தள்ளிக்கொண்டு யுனித்தமிழ்
தன் கோட்டையை மிக உயரமாகக் கட்டிக்கொண்டது.
அந்த முதல்நாள் முதலாகவே உங்கள் ஆதரவும் சேவையும்
என்போன்றோருக்கு உந்துதல் தந்தவை, யுனித்தமிழ் பெருக உரமிட்டவை.
இன்றும் தொடரும் அவற்றை நன்றியோடு பார்க்கிறேன்.
இன்னமும் திஸ்கியிலிருந்து வெளிவராதவர்கள் இருக்கவே
செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மையென்றாலும்
யுனித்தமிழ் என்ற இனிப்பு நதி பொங்கி நிறைந்து வழிந்து ஓடுவது
உயிருக்கு அமுத ஒத்தடம்.
இன்று அன்புடனின் செழுமையை மாதிரியாகக் கொண்டு வளரும்
யுனித்தமிழ்க் குழுமங்கள் பலப்பபல.
அன்புடன் இதுவரை எத்தனை ஆயிரம்பேருக்கு யுனித்தமிழ்
கற்றுத் தந்திருக்கும்? எத்தனை பேரை யுனித்தழுக்கு இழுத்திருக்கும்?
இன்று இணையத்தில் யுனித்தமிழ் எழுதும் மிகப்பெரும்பான்மையினர்
அன்புடன் கற்றுத்தந்த யுனித்தமிழ் கொண்டு எழுதுபவர்களே என்று
உறுதியாகச் சொல்வேன்.
என் இணைய பக்கங்களில் யுனித்தமிழுக்கான அனைத்து உதவிகளையும்
இட்டு நிரப்பியிருக்கிறேன்.
உங்கள் கட்டுரைகளில் எனக்கும் ஒரு சிறப்பிடம் தந்து எழுதியிருப்பது
மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
நன்றிகள் முனைவரே.
அன்புடன் புகாரி
koothanalluran said...
"புத்தாண்டில் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள். உங்கள் பதிவு மலரும் நினைவாக நிற்கிறது.மறக்காமல் தமிழ் இணையத்தை (Net) குறிப்பிட்டுள்ளீர்கள். பழைய தமிழ் இணைய நண்பர்கள் நாக இளங்கோவன், மணி மணிவன்ணன், தமிழரசன்,பூபதி மாணிக்கம், மெய்யப்பன்,குமார் மல்லிகார்ஜுனன்,ரமனீதரன் கந்தையா எங்கே ? "
சடையன் சாபு, வணக்கம். இளங்கோவனின் வலைப்பதிவு:
http://nayanam.blogspot.com/ ரமணியின் வலைப்பதிவுகள் சில இருக்கின்றன.
--------------------------------
சேதுக்கரசி said...
"நட்சத்திர வார வாழ்த்துக்கள் முனைவரே. வளர்க உங்கள்
தமிழ்த்தொண்டு. "
நன்றி சேது. உங்கள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களின் சேவையால் அல்லவோ தமிழ் கூகுள் குழுக்களில் பெருக்கெடுத்தது.
புகாரி said...
"இன்னமும் திஸ்கியிலிருந்து வெளிவராதவர்கள் இருக்கவே
செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மையென்றாலும்
யுனித்தமிழ் என்ற இனிப்பு நதி பொங்கி நிறைந்து வழிந்து ஓடுவது
உயிருக்கு அமுத ஒத்தடம்."
நன்றி, புகாரி. திஸ்கி குழுக்கள் யுனித்தமிழ் ஆகிவருகின்றன.
சந்தவசந்தம் கூகுள்குரூப் ஆகிறது, பார்த்தீர்களா? தமிழ்-உலகம் யுனித்தமிழ் ஆகிறது, ஆனால் யாகூவில் இருப்பதால், வரிகள் உடைந்துவருவது இயற்கைதானே.
மேலும், சொற்தேடல் இயலாது.
என் பதிவுகளுக்கு மறுமொழியிட்ட
அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்,
நா. கணேசன்
Post a Comment