தமிழ்நாட்டின் பெருநகர்கள் ~ 2 கவிதைகள்

தமிழ்நாட்டின் ஊர்ப்பாடல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவன். எடுத்துக்காட்டாக, திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் புகழ்வாய்ந்த இரண்டு கவிஞர்களின் கோவை, மதுரைப் பாட்டுகளை இப்பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாடு, இலங்கை, ... மற்ற இந்திய, அயல்நாடுகளின் ஊர், நகரங்களைப் பற்றி நல்ல தமிழ்க்கவிதைகள் இருந்தால் அறியத்தர வேண்டுகிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

    கோயம்புத்தூர்: ஒரு விளக்கம்
        கவிஞர் கண்ணதாசன்

கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.


---------------------------------------------------------------------------------

            மதுரை
        கவிஞர் வைரமுத்து (1997)

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - தூள்
        பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளந்
        தோகைமார்தம் மெல்லடியும்
            மயங்கி ஒலித்த மாமதுரை - இது
            மாலையில் மல்லிகைப் பூமதுரை!

நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்
        நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்
        அழுந்தப் பதிந்த சுவடுகளும்
            காணக் கிடைக்கும் பழமதுரை - தன்
            கட்டுக் கோப்பால் இளமதுரை!

மல்லிகை மௌவல் அரவிந்தம் - வாய்
        மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
        கொள்ளை அடித்த வையைநதி
            நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
            நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன் நீதி பிழைத்ததனால்
        தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள்
        கந்தக முலையில் எரிந்ததனால்
            நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று
            ஜாதிக் கஞ்சும் தென்மதுரை!

தமிழைக் குடித்த கடலோடு - நான்
        தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி - நீர்
        ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
            மானம் எழுதிய மாமதுரை - இது
            மரபுகள் மாறா வேல்மதுரை!

மதுரை தாமரைப் பூவென்றும் - அதன்
        மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை
        எம்குடி மக்கள் திரளென்றும் - பரி
            பாடல் பாடிய பால்மதுரை - வட
            மதுரா புரியினும் மேல்மதுரை!

மீசை வளர்த்த பாண்டியரும் - பின்
        களப்பிரர் பல்லவர் சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த
        அந்நிய ரில்சில கண்ணியரும்
            ஆட்சி புரிந்த தென்மதுரை - மீ
            னாட்சியி னால்இது பெண்மதுரை!

மண்ணைத் திருட வந்தவரைத் - தம்
        வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட வந்தவரை - ஊர்
        பொசுக்கிப் போக வந்தவரைத் - தன்
            சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
            தாயாய் வணங்கிய தூய்மதுரை!

அரபு நாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு
        அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக் கவிதை படைத்தல்போல் - ஒரு
        மண்டபம் திருமலை கட்டியதால்
            கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
            கவிதைத் தமிழின் தலைமதுரை!

வையைக் கரையின் சோலைகளும் - அங்கு
        வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம்
        மேனி கறுத்த மறவர்களும்
            மிச்ச மிருக்கும் தொன்மதுரை - தமிழ்
            மெச்சி முடிக்கும் தென்மதுரை!

போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும்
        பூசை மணிகளின் ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை
        நிறுத்திப் போகும் வளையொலியும்
            தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண்
            தூங்கா திருக்கும் தொழில்மதுரை!

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும்
        அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம்
        வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால்
            பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று
            பட்டப் பகலில் பாழ்மதுரை!

நெஞ்சு வறண்டு போனதனால் - வையை
        நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் - நதியைப்
        பட்டாப் போட்டுக் கொண்டதனால்
            முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
            மூச்சில் வாழும் பதிமதுரை!

14 comments:

மணியன் said...

அருமையான இரு முத்துக்கள். கோவைக்கு கவியரசரின் விளக்கம் சிறப்பாக இருந்தது.

Osai Chella said...

அட என்னங்கோ இப்படி சொல்லிப்புட்டீங்க! சோத்துக்கு பேர் போன ஊருன்னு?! இன்ன தேதிக்கு சென்னை முதல் குமரி வரை பட்டம் படிக்காட்டீலும் உழைச்சுப் பிழைக்கலாம்னு சனங்க வந்து தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கறத்துக்கு காரணம் நம்மூருதானுங்கோ!

கோவை சிபி said...

அருமையான கவிதை.கோவையைப் பற்றி படிக்கும்போது இனம்புரியாத மகிழ்ச்சி.

மு. சுந்தரமூர்த்தி said...

நா.க.
கோயம்புத்தூரா, கோயமுத்தூரா? அப்பகுதியில் உள்ள குனியமுத்தூர், சுண்டைக்காய்முத்தூர் போன்ற பிற ஊர்ப் பெயர்களைப் பார்த்தால் கண்ணதாசனின் கற்பனை சுவையாக இருந்தாலும் உண்மையாக இருப்பதாகத் தெரியவில்லை.

எங்கள் ஊரான வேலூருக்கு 'முருகன் வேல் ஊன்றிய ஊர்' என்று வாரியார் விளக்கமளித்திருந்தார். அவர் சொன்ன கதையின்படி வேலூருக்கு வடகிழக்கில் உள்ள வள்ளிமலையில் முருகன் வள்ளியைத் தேடிச் சென்றபோது வள்ளியின் வேட்டுவ சகோதரர்கள் முருகனை விரட்டிக்கொண்டுவர, அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்து வேல் ஊன்றி நின்ற ஊர் ஆகையால் வேலூர் என்ற பெயர் பெற்றது. அப்படி முருகன் வேல் ஊன்றியது உண்மையாக இருந்திருந்தால் அங்கு யாராவது கோவில் ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்து வேலூர் நகரத்திலோ அல்லது சுற்றுப் பகுதியிலோ தொன்மையான முருகன் கோவில் எதுவுமில்லை.

பாச மலர் / Paasa Malar said...

கவிதைப் பகிர்வுக்கு நன்றி. மதுரைக்குப் பொருத்தமான வரிகள்.

oosi said...

Hi Ganesan,

Just curious. Are you the friend of Mr. Kuppusami and Dr. Narmada Kuppusami from IL?

cheena (சீனா) said...

இரு பெரும் ஊர்களுக்கு மாபெரும் கவிஞர்கள் இருவர் எழுதிய கவிதைகள் அருமை. அழகான வரிகள் - எளிமையான விளக்கம். இன்றைய மதுரையை அழகாக விளக்கி இருக்கிறார்.

Anonymous said...

இந்த வார நட்சத்திரம் நண்பர் கணேசன் அவர்களே உங்களது படைப்புகள் பல கண்டு படித்து மகிழ்ந்தேன் சுவையாகவும் இருந்தது சிந்திக்கவும் தூண்டியது. சில படைப்புகள் வரலாற்றை நினைவுகூர்ந்தன.

கண்ணதாசனின் கோவை கவியும் கண்டேன், வணக்கமுங்க நன்றிங்கோ இன்னும் எழுதுங்கோ

அன்புடன்
சுந்தர் கருப்புசாமி Houston TX

nayanan said...

முனைவர் நா.கணேசன்,

நல்ல பாடல்கள்.

இந்தக் கால கவிஞர்கள் இந்த இரண்டு ஊரைப் பற்றி எழுதினதிலும் சிலப்பதிகாரத் தொடர்புக்குள் போய்விடுவதை கவனித்தீர்களா?

கோவன் புத்தூருக்கும் இளங்கோவடிகளாருக்கும் முடிச்சுப் போட்டிருக்கிறார் கண்ணதாசன். உண்மையாக இருக்க வாய்ப்பில்லை
என்றே எனக்குத் தோன்றுகிறது.

இருப்பினும் எனது பேரில் பாதியை
வைத்துப் பார்ப்பதில் மகிழ்ச்சிதான் :-)
வாழ்க கோவன் புத்தூர்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

நா. கணேசன் said...

நயனன் சொன்னார்:


"கோவன் புத்தூருக்கும் இளங்கோவடிகளாருக்கும் முடிச்சுப் போட்டிருக்கிறார் கண்ணதாசன். உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது."


ஆம்.
இளங்கோவுக்கும் கரூருக்கும் வேண்டுமானால் தொடர்பு இருக்கலாம்.
சங்ககால வஞ்சி கரூர்தான் என்கிறது தொல்லியல். அப்போதெல்லாம் சேரர் ஆட்சிக்கு உட்பட்டதே கரூர், கோவை மாவட்டங்கள். பதிற்றுப் பத்தில் கரும்புவேளாண்மை நிறையப் பேசப்படும். கரும்பு இன்று பாலைக்காட்டுப் பகுதியில்தான் விளைகிறது. சித்தூரில் சர்க்கரை ஆலை உண்டு. முசிறி துறைமுகத்தில் இருந்து வரும் வணிகப் போக்குவ்ரத்து கோவை மாவட்டத்தின் உயிராக விளங்கியிருக்கிறது. ரோமானிய நாணயங்கள் பெரிதும் கிடைப்பது கோவை மாவட்டத்திலேதான்.

சுந்தரமூர்த்தி சொன்னார்:

"கோயம்புத்தூரா, கோயமுத்தூரா? அப்பகுதியில் உள்ள குனியமுத்தூர், சுண்டைக்காய்முத்தூர் போன்ற பிற ஊர்ப் பெயர்களைப் பார்த்தால் கண்ணதாசனின் கற்பனை சுவையாக இருந்தாலும் உண்மையாக இருப்பதாகத் தெரியவில்லை.

எங்கள் ஊரான வேலூருக்கு 'முருகன் வேல் ஊன்றிய ஊர்' என்று வாரியார் விளக்கமளித்திருந்தார். அவர் சொன்ன கதையின்படி வேலூருக்கு வடகிழக்கில் உள்ள வள்ளிமலையில் முருகன் வள்ளியைத் தேடிச் சென்றபோது வள்ளியின் வேட்டுவ சகோதரர்கள் முருகனை விரட்டிக்கொண்டுவர, அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்து வேல் ஊன்றி நின்ற ஊர் ஆகையால் வேலூர் என்ற பெயர் பெற்றது. அப்படி முருகன் வேல் ஊன்றியது உண்மையாக இருந்திருந்தால் அங்கு யாராவது கோவில் ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்து வேலூர் நகரத்திலோ அல்லது சுற்றுப் பகுதியிலோ தொன்மையான முருகன் கோவில் எதுவுமில்லை. "


முதலாக, இப் பதிவைப் படித்துப் பதிலனுப்பிய அனைவர்க்கும் நன்றி.
வேலூர் - வேல மரக் காடுகள் நிறைந்த ஊர். (எ-டு: ஆலவாய், புன்னைக்காயல், பாலைக்காடு, புங்கத்தூர், பைஞ்ஞீலி, ...)

கோயம்புத்தூர் என்று பெயர் சரிதான். ஆங்கிலேயர் கேட்டவற்றை
அப்படியே பேராக்கினர்: Coimbatore. ஆங்கிலப் பேர் Tinneveli எடுத்துக்
கொள்வோம். திருநெல்வேலி > தின்னெவேலி என்பது பேச்சுவழக்கு.
இதற்கு, நெருநல் > நென்னல், பெருமான் > பெம்மான் போன்ற
உதாரணங்களும் காட்டலாம். மலையாள வார்த்தை இன்னலெ (நேற்று),
http://nganesan.blogspot.com/2006/08/blog-post_30.html

பிரெஞ்சுக்காரர் புதுச்சேரி என்பதைப பிரெஞ்சில் Pouducheri என்றெழுதி u > n ஆகத் திரிந்து பாண்டிச்சேரி
ஆனது ஒரு சோகக்கதை. பாண்டியரின் புதுவைத் தொடர்பாய்க்
கல்வெட்டுக்களுமில்லை என்பதையும் ஒப்பிடலாம். Trichinopoly - திருச்சினப்பள்ளி
(ஜிநன்: ஜைநம்/சமணம்) - இதைச் சொல்ல விரும்பாத சம்பந்தர்
சிராப்பள்ளி என்கிறாரா என்பது ஆய்வுக்குரியது.

கோயம்புத்தூருக்கு வருவோம்: சங்க இலக்கியங்களில் 'கொங்கிளம் கோசர்' காணலாம்.
வாய்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் என்றெல்லாம் வரும்.
கோசர்கள் புதிதாய் ஏற்படுத்திய ஊர் கோசம்புத்தூர் > கோயம்புத்தூர்.
இன்னொன்றும் கேட்டிருக்கிறேன்: இருளர் குலமக்களின் தெய்வம்
கோனியம்மன். கோனி என்ற பெயர் (ஆண்பால்: கோன்) இருளரில்
உள்ளது. இருளர் தலைவன் கோவன் பெயரால் ஏற்பட்ட ஊர்:
கோவன்புத்தூர் > கோயம்புத்தூர்.

நா. கணேசன்

குமரன் (Kumaran) said...

கணேசன் ஐயா.

கோயம்புத்தூர் என்ற பெயருக்கு கவியரசர் சொன்ன விளக்கத்தைக் கேட்டு சுவையாக இருக்கிறதே என்று நினைத்தேன். மற்ற ஊர்களைப்பற்றி நீங்கள் சொன்ன தகவல்கள் அதனை விட சுவையாக இருக்கின்றன. :-)

கவியரசரின் இந்தப் பாடல் வரிகளை அவர் பெயரையே சொல்லாமல் எங்காவது படித்தாலும் அவர் வரிகள் என்று எளிதாகப் புரிந்துவிடும் போல. அவர் பாணி மிக நன்றாகத் தெரிகின்றது. அதிலும் 'இது தவறென்றுரைத்தாலும் தவறேயாக!' என்னும் போது அவரது முத்திரை நன்கு தெரிகிறது. :-) இவர் இப்படி எழுதியதைப் படிக்கும் போதெல்லாம் திருப்பாவையில் வரும் 'வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக' என்ற வரி நினைவிற்கு வரும். :-)

மதுரையைப் பற்றிய கவிதை முழுக்க முழுக்கப் புகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் தற்போதைய நிலையையும் சாடுகிறது. இன்னும் இருமுறை படிக்க வேண்டும் போல் இருக்கிறது.

SP.VR. SUBBIAH said...

////நெஞ்சு வறண்டு போனதனால் - வையை
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் - நதியைப்
பட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை!///

கவிஞ்ர்களால் மட்டுமே இப்படி நான்கே வரிகளில் நச்'சென்று சொல்ல முடிகிறது அய்யா!

பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி!

ஓகை said...

அருமையான இரண்டு கவிதைகள்.

செட்டிநாட்டுக் கவிஞரும் விதந்து போற்றும் சாப்பாடென்றால் அது எத்தகையதாக இருக்க வேண்டும்?

காலத்திற்கேற்ற தொழில்களைப் பெருக்காமல் பழம்பெருமையிலேயே வாழ்கிறது மதுரை. மதுரை மக்களை யோசிக்கச் சொல்கிறார் வைரமுத்து.

பவள சங்கரி said...

அன்பின் ஐயா,

கவியரசரின் திருவாய் மொழியில் நம் கொங்கு தமிழ் கேட்பது இனிமை. மிக யதார்த்தமாக நம்ம ஊர் மக்களின் விருந்தோம்பல் பண்பாடை நையாண்டியாக விளக்கியிருக்கும் பாங்கு அவருக்கு நிகர் அவர்தான்.......இத்துனை அழகானதொரு கவிதை ஏன் பாடலாக வெளிவரவில்லை என்று ஆச்சரியமாக உள்ளது!நன்றி ஐயா.