'ரோஜா' முத்தையா நூலகத்தில் ரிச்சர்ட் ஸ்ப்ரோட்

ரோஜா முத்தையா சேகரித்த கருவூலம்:

சென்னையின் தரமணியில் (முன்பு முகப்பேரில்) ரோஜா முத்தையா நூலகம் இயங்கி வருகிறது. அரிய 100,000 புத்தகங்கள் கொண்டது. பத்திரிகைத் தொகுப்புகளோ ஏராளம். முன்பு தமிழ்நாட்டு அரசாங்கம் கூடச் சரியான விலைதந்து கோட்டையூர் 'ரோஜா' முத்தையாவின் நூலகத்தை வாங்கி வளர்த்தாத சூழ்நிலை. எழுத்தாளர் அம்பை போன்றோர் பேரா. ஏ. கே. இராமாநுஜனுக்குத் தெரிவித்து அவரது பரிந்துரையால் ஜேம்ஸ் நை (James Nye, University of Chicago) முயற்சி எடுத்துப் பல லட்சங்கள் செலவிட்டுச் சிக்காகோ பல்கலைக்கழகத்தால் சென்னைக்கு ஒரு நவீன பலகலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஏ. கே. இராமனுஜன், இந்திரா பீட்டர்சன் எனக்கு முதலில் இப்படி ஒரு நூலகம் கட்டுகிறோம் என்று அறிவித்தனர். சென்னை சென்றபோது அதன் அலுவலர்களைப் பார்த்துச் சரிவர நடக்கிறதா என்றறியச் சொன்னார் ஜிம் நை. அப்போது, 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன், நூலகர் சங்கரலிங்கம் போன்றோர் இருந்தனர். ரோஜா முத்தையா நூலகத்தை அருமையாக வளர்த்தெடுத்த என் நண்பர் சங்கரலிங்கம் அகாலமாக இயற்கை எய்திவிடவே, பின்னர் தியோடோர் பாஸ்கரன், தற்போது சுந்தர் இயக்குநர்களாக விளங்குகின்றனர். தமிழ்நாடு ஃபௌண்டேசன் விஸ்கான்சினில் நடத்திய ஜூலை 4 மாநாடு ஒன்றில் நண்பர் ஜேம்ஸ் நை (அவர் அடிப்படையில் ஸம்ஸ்க்ருத பிஎச்டி) அவர்களை அழைத்து அவர் செய்த செயலைப் பாராட்டி மாலையிட்டுக் கௌரவித்தேன். அன்று அந்த ஊரின் பல தமிழர்களே இவரைப் பற்றி இதுவரை தெரியவில்லை என்றனர்.

சிந்து சமவெளி நாகரிக ஆய்வுகள்:

மைக்கேல் விட்சல் (ஹார்வர்ட் பல்கலை, வேதவியல் நிபுணர்) மற்றும் அவர் நண்பர் ஸ்டீவ் ஃபார்மர் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகம் அல்ல, அதன் காரணங்களுள் ஒன்று ரிக் வேதத்தில் முக்கியமான இடம் வகிக்கும் குதிரை, குதிரை பூட்டிய இரதங்கள் (chariots) இல்லை என்பர்.

உடைந்த ஒரு சிந்து முத்திரை காளையைக் காட்டுவது, அதை எடுத்துக் கணினியில் ஃபோட்டோஷாப் போன்ற மென்பொருட்களால் அடியோடு மாற்றிக் குதிரை என்று புத்தகங்களில் அறிவித்திருந்தார் பெங்களூரின் நவரத்ன எஸ். ராஜாராம். இதனைக் கண்டறிந்து ஸ்டீவ் எழுதிய கட்டுரை ஹிந்து நாளிதழின் Frontline பத்திரிகையில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியமை நீங்கள் அறிந்திருக்கலாம். ஐராவதம் மகாதேவன் நாமெல்லாம் நன்கறிந்த தெனாலிராமன் கதை மூலமாக என். எஸ். ராஜாராமின் "சிந்துக் குதிரை" பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் பலர் ஆங்கிலப் பத்திரிகைளில் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியருடையது என்று எழுதினர்; இவர்களில் பலருக்கும் இவ்வாறு அறிவிக்க அடிப்படைத் தகுதிகள் இருக்காது, ஆனால் இந்தியத் தொல்பொருள் துறையில் உயர்பதவி வகித்த எஸ். ஆர். ராவ், பி.பி. லால் போன்றோரும் பதவி ஓய்வு பெற்றபின் பல புத்தகங்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சிந்து முத்திரைகளில் உள்ள எழுத்துக்களை வடமொழியில் படிக்கலாம் என்று கூறுகின்றனர்.

மேலும் பா.ஜ.க ஆட்சிக் காலம் நிகழ்ந்த காலத்தில் தான் பல பத்திரிகைகள் இணையப் பதிப்பாயின. அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி. அமெரிக்கா வந்த பல இந்தியர்களுக்கும் கணினி, இணைய வசதிகள் ஏற்பட்ட சூழல். இதெல்லாம், ஐ.டி. துறையில் சிற்றூர் கல்லூரிகளில் படித்தோர்கூட அமெரிக்கா போன்ற வெளியூர்களுக்குச் செல்ல வாய்ப்புகள் ஏற்படுவதன் முன்னம் நிகழ்ந்தன. ஐ.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் படித்து முடித்தவுடன் அமெரிக்கா வந்துவிடுவார்கள், பலர்க்கும், தமிழ் போன்ற தாய்மொழிகளைப் படிக்கவோ, எழுதவோ தெரியாது. இன்றும் ஆங்கிலத்தில் எழுதுவோரின் இணையத் தமிழ்ப் பங்களிப்புக் குறைவாகவே இருத்தலை அவதானிக்கக் கூடும்.

பல பத்தாண்டுகளாக ஹீராஸ் பாதிரியார், ஃபேர்செர்விஸ், ஆஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன் போன்றோர் சிந்து சமவெளி நாகரிகம் திராவிடருடையது என்ற ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவர்கள் திராவிட மொழிகள் சிந்து முத்திரை எழுத்துக்களில் உள்ளன என்று கூறுகின்றனர். வேதவியல் நிபுணர் ஆஸ்கோ பார்போலா கட்டுரையைப் படிக்கலாம்.

சிந்து முத்திரைகளில் ஒருவகை எழுத்துக் குறியீடுகள் இருக்கின்றன. ஒரு 4000 முத்திரைகள் 10,000 சதுர மைல் பரப்பில் நூறு ஆண்டுகளாய்த் தோண்டித் தொல்லியலாளரால் எடுக்கப்பட்டுள்ளன. முத்திரை எழுத்துக் குறிகள் மிகக் குறைவானவையாக இருக்கின்றன. ஏறத்தாழ ஒரு முத்திரைக்கு 5 குறிகளே உள்ளன. நிறைய (உ-ம்: 30-40) எழுத்துக்குறிகளுடன் ஒரு முத்திரையும் இதுவரை அகப்படவில்லை. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பேராசிரியர்கள் மைக்கேல் விட்சல், ஸ்டீவ் ஃபார்மர், ரிச்சர்ட் ஸ்ப்ரோட் மூவரும் ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளனர். அவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தினர் எழுத்தறிவு இல்லாதார், அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றுரைக்கின்றனர்.அதன் தேற்றம் சிந்து முத்திரைகளில் இருப்பவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல, எனவே சிந்து முத்திரைகளை வடமொழி, தென்மொழி என்று படிப்பதெல்லாம் வெட்டிவேலை என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்டீவ் ஃபார்மர் நடத்தும் ஆய்வுக்குழு:
http://groups.yahoo.com/group/indo-eurasian_research/

சென்னையில் ரிச்சர்டின் சொற்பொழிவு:

பேரா. ரிச்சர்ட் ஸ்ப்ரோட் வரும் திங்கட்கிழமை ரோஜா முத்தையா நூலகத்தில் பேசுகிறார். ஃபெஸ்தோஸ் வட்டில் (Phaistos disc) என்பதன் எழுத்துக்களைப் பலர் படிக்க முயன்றும் இன்னும் அவிழ்க்க முடியாத புதிராக விளங்குகிறது. இன்னும் மேலும் அதேபோன்ற எழுத்துக்கள் கொண்ட சான்றுகள் கிடைத்தாலொழிய அதனைப் படிப்பது இயலாக் காரியம். நேரம் இருந்தால் சென்னையில் உள்ளோர் ரிச்சர்டின் ஆய்வுரையை வரும் திங்கட் கிழமையன்று கேட்கலாம். ரோஜா முத்தையாவின் அரும்பணிகளையும், தமிழின் புதிய சரசுவதி மகாலையும் காணலாமே!

நா. கணேசன்

1 comments:

இரமணன் said...

வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்

முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.

இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

நன்றி
இரமணன்
www.thurikai.comட்