
முரசொலி விருதளிப்பு விழா - முனைவர் வா.செ.கு. மற்றும் மூவர் பெற்றனர்
செய்தி - thatstamil.oneindia.in
முதல்வர் உரை:
இந்த விருதுகளை வழங்கி கருணாநிதி பேசியதாவது:
திமுக பொதுக் கூட்டங்கள் பற்றி அண்ணா சிறப்பித்து கூறுகையில், 'எங்கள் பொதுக்கூட்டங்கள் மாலை நேரக் கல்லூரிகள்' என்று குறிப்பிடுவார். அந்த அளவுக்கு கல்லூரியிலே தரப்படுகின்ற கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், உலக வரலாற்றுச் செல்வம் இவைகளையெல்லாம் ஒரு பொதுக்கூட்டத்தில் அறிந்து கொள்ளும் வகையில் திராவிட இயக்கத்தவர்கள் தங்களுடைய பேச்சை அமைத்துக் கொள்வார்கள் என்பது அண்ணாவின் அந்த வர்ணனைக்கு பொருள்.
அந்த மாலை நேரக் கல்லூரியை நாம் சில காலம் நடத்தவில்லை. அந்த குறையை இன்று பேசிய வா.செ.குழந்தைசாமி போக்கி விட்டார். அவர் சொல்லிய, அறிவுறுத்திய அத்தனை அறிவுரைகளையும் ஏற்று, இன்னும் இயற்கை எவ்வளவு காலம் என்னை அனுமதிக்கிறதோ அந்தக்காலம் வரை தமிழர்களுக்காக, தமிழ்நாட்டுக்காக, தமிழகம் வளம் பெறுவதற்காக, வலிமை பெறுவதற்காக உழைப்பேன்.
ஏனென்றால் (சேது சமுத்திரத் திட்டம் குறித்து) அத்துணை வலிமை வாய்ந்த வாதங்களை அவர் இங்கே எடுத்து வைத்தார். இந்தியாவிலே மேலிடத்திலே கூட இன்றைக்கு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். (சேது திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைமையை அமைச்சர் அம்பிகா சோனி குழப்பி வருவதாகக் கூறப்படுவது).
அதை நாம் நம்பியிருக்கின்ற, எதிர்பார்த்து இருக்கின்ற தம்பி டி.ஆர்.பாலுவால் கூட சரி செய்ய முடியுமா? என்கிற ஐயப்பாடு எழுந்துள்ள இந்த நேரத்தில், குழந்தை சாமி பேசிய பேச்சு மாத்திரம், போகவேண்டிய முறையிலே, போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேருமேயானால் நிச்சயமாக சேது சமுத்திர திட்டம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையை நாம் பெறலாம். அப்படிப்பட்ட ஆதாரப்பூர்வமான விளக்கங்களை எல்லாம் அவர் இன்றைக்கு வழங்கியிருக்கிறார்.
வா.செ.குழந்தை சாமியின் புனைப்பெயர் குலோத்துங்கன். சிறந்த சோழ மன்னரான குலோத்துங்கன், கருணாகர தொண்டைமானை தளபதியாக கொண்டு போரை வென்று வெற்றிவாகை சூடினார். இங்கே குலோத்துங்கனாக வா.செ.குழந்தைசாமி உள்ளார். நான் கருணாகரன். அவர் எதிர்பார்க்கிற வெற்றி கிடைத்து-கலிங்கத்துப் பரணி கீதம் முழங்கும்.
இந்த நிகழ்ச்சி உவகையும், உருக்கமும் கலந்தது. முரசொலி மாறனை பற்றி யார் பேசினாலும் என்னால் உரையை கேட்டுக்கொண்டு உட்கார இயலாது. வேதனை வெள்ளத்தில் தள்ளப்படுவேன். சோதனை புயலால் தாக்கப்படுவேன்.
ஆனாலும் தவிர்க்க முடியாமல் இந்த நிகழ்ச்சியிலும் முரசொலி மாறன் பெயரை குறிப்பிட்டேதான் தீர வேண்டும் என்ற நிலையில் உரையாற்றிய ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட காரணத்தால் அவைகளையெல்லாம் நானும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்த தியாகத்தைக்கூட அந்த கண்மணிக்காக நான் செய்யாமல் இருக்க முடியுமா என்ற அந்தக் கேள்விக்கு பதிலாகத்தான் என்னை அறிந்தவர்கள் எல்லாம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மாறனைபற்றி பேராசிரியர், வாகை சந்திரசேகர், நெப்போலியன் ஆகியோர் பேசும்போதும் என்னையே உற்றுப்பார்த்தனர். நான் அவர்களை அறியாமல் என் கண்களை துடைத்துக் கொண்டது எனக்குத்தான் தெரியும் என்று கருதினேன். அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.
மாறனை இழந்து பல வருடங்கள் ஆனாலும் துயரம் அடைகிறேன். அண்ணாவை இழந்து துயரம் அடைந்து வருவது போல, பெரியாரை இழந்து துயரம் அடைந்து வருவது போல, மாறனையும் இழந்து துயரம் அடைகிறேன். மாறனும் இப்போது இல்லை என்று என்னால் சொல்லமுடியவில்லை. அவன் என் உள்ளத்தில் குடி கொண்டுள்ளான். மாறன் என்னை எப்படி நேசித்தான் என்பதை நான் நண்பர்களிடத்தில் சொல்லியிருக்கிறேன்.
நம்முடைய இனம் வாழ, குலம் வாழ, மொழி வாழ சூளுரை மேற்கொள்ளவேண்டிய காலக்கட்டமாகும் இது.
10 ஆண்டுகளுக்கு முன் ஒரு புயல் எழும்பியது. அது இனமோதல் என்ற அளவிற்கு தமிழகத்தில் எழுந்தது. அதற்கான காலம் போர்க்களம் அல்ல. தேர்தல் களமாக அமைந்தது. அதில் திராவிட இயக்கம் வீழ்ந்துவிடும் என்றார்கள். ஆனால் நம்முடைய திராவிட இனத்திற்கு தான் வெற்றி கிடைத்தது.
நம்முடைய நாட்டை வாழ வைப்போம். தமிழர்களின் நாகரீகத்தை, கலாசாரத்தை பண்பாட்டை தரணியெங்கும் பரப்புவோம் என்றார் கருணாநிதி.
இணையப் பல்கலைத் தலைவருக்கு முரசொலி விருது
Posted by
நா. கணேசன்
at
2
comments
கட்டற்ற மென்கலன் மாநாடு
சென்னை எம்ஐடியில் கட்டற்ற மென்கலன் மாநாடு சென்ற மூன்று நாட்களாய் நடந்து முடிந்திருக்கிறது.
அதில் கலந்து கொண்டவர்கள் நிகழ்வுகளைப் பற்றி ஏதாவது வலைப்பதிவு (தமிழ் அல்லது ஆங்கிலம்) எழுதியிருக்கிறார்களா?
நன்றி,
நா. கணேசன்
--------------
http://groups.google.com/group/minTamil/msg/619317a204ea9781
*கட்டற்ற மென்பொருள் மாநாடு - அழைப்பிதழ்*
ம. ஸ்ரீ ராமதாஸ்
*கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?*
இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம் மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் ஒருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்தரத்தைப் பற்றியது:
- எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது சுதந்தரம்).
- நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல் ஆக்கிக்
கொள்ளக் கூடியச் சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்). முதற்கண் நிரலின் மூலத்தினை
அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
- பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்தரம்.
(மூன்றாவது சுதந்தரம் )
- ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த
மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண் நிரலின்
மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
(நான்காவது சுதந்தரம்)
இச்சுதந்தரங்கள் அனைத்தையும் பயனொருவருக்குத் தரவல்ல மென்பொருள் கட்டற்ற மென்பொருள் ஆகும்.
*குனு திட்டம் என்றால் என்ன?*
யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்கிட 1984 ம் ஆண்டு துவக்கப் பட்டத் திட்டம் குனுத் திட்டமாகும். இவ்வியங்கு தளம் கட்டற்ற மென்பொருளாகும். இதற்கு குனு அமைப்பென்று பெயர்.
குனுவின் கரு பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப் படுகிறது. இன்று பலக் கோடிப் பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினக்ஸின் கூட்டமைப்பிற்கு குனு/ லினக்ஸ் என்று பெயர்.
குனு/ வினக்ஸின் எண்ணற்ற வழங்கல்கள் கிடைக்கப் பெறுகின்றன. நூறு விழுக்காடு கட்டற்ற மென்பொருளாலான அதாவது பரிபூரண சுதந்தரத்தினை மதிக்கத்தக்க குனு/ லினக்ஸ் வழங்கல்களைப் பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரை செய்கின்றோம்.
"குனு யுனிக்ஸல்ல " என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். கு-நூ என இது உச்சரிக்கப் படுகிறது. விளங்'கு' எனும் போது எழும் குற்றியலுகரத்தைப் போல் இதிலுள்ள 'கு' ஒலிக்கும்.
*குனு/ லினக்ஸ் இயங்கு தளங்களில் தமிழ் வசதிகள்*
குனு/ லினக்ஸ் இயங்கு தளங்கள் பயனர்கள் தங்கள் பணியினை செவ்வனே செய்ய உதவும் பொருட்டு இடைமுகப்புகளைத் தாங்கி வருகின்றன. அவற்றுள் குநோம் எனப்படும் இடைமுகப்பும் கேடியீ எனப்படும் இடைமுகப்பும் பிரபலமாகப் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றுள் குநோம் பணிச்சூழலின் இடைமுகப்பு தமிழில் கிடைக்கப் பெறுகின்றது. கேடியீக்கான தமிழாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. தமிழ் மொழியினை அதிக சிரமங்கள் எதுவும் இன்றி இயல்பிருப்பாகவே உள்ளிடக் கூடிய வசதிகளை குனு/ லினக்ஸ் இயங்கு தளங்கள் நமக்குத் தருகின்றன.
*குனு/ வினக்ஸ் வழங்கல்கள்*
குனு மற்றும் லினக்ஸினைக் கொண்டு இன்று பல இயங்கு தளங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றுள் டெபியன், ரெட்ஹாட், சூசே, மான்ரிவா, உபுண்டு முதலியன குறிப்பிடத் தக்கவை. பாரத அரசின் சிடாக் நிறுவனமும் தற்சமயம் பாஸ் எனப் பெயரிட்டு தமது குனு/ லினக்ஸினை வெளியிட்டு வருகிறது.
*குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள்*
குனு/ லினக்ஸ் இயங்கு தளங்களின் சிறப்பம்சமே அவற்றின் பயனர் குழுக்கள் தான். சமூகம் சார்ந்த கூட்டுருவாக்கம் மற்றும் ஆதரவு முறைகளை அடிப்படையாகக்கொண்டு இத்தகைய குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பாரதத்தில் இத்தகைய பயனர் குழுக்களுக்கு முன்னோடியாக சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழு ( http://chennailug.org) பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது.
*என் ஆர் சி பாஃஸ்*
பாரத அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் *என் ஆர் சி பாஃஸ் *என்றழைக்கப்படும்* கட்டற்ற மற்றும் திறந்த மூல மென் வளத்துக்கான தேசிய மையம்* (http://nrcfoss.org.in) சென்னையினை மையமாக வைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டி கல்லூரிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, தேசிய அளவில் கட்டற்ற மென்பொருள் மாநாடுகளுக்கு ஆதரவு நல்குவது முதலியவை இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பணிகளுள் சிலவாகும்.
*கட்டற்ற மென்பொருள் மாநாடு*
தேசத்தின் குனு/ லினக்ஸ் பயனர் குழுக்களுக்கு முன்னோடியாகத் திகழும் சென்னை பயனர் குழுவும் என் ஆர் சி பாஃஸ் நிறுவனமும் இணைந்து வரும் *பிப்ரவரி மாதம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று தேதிகளில்* *சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள எம் ஐ டி வளாகத்தில் கட்டற்ற மென்பொருள் மாநாட்டிற்கு* ஏற்பாடு செய்துள்ளன. கணினியினைப் பயன்படுத்த விரும்பும் எவரும் பங்கு கொள்ளும் விதத்தில் இந்நிகழ்வு வடிவமைக்கப் பட்டுள்ளது. அடிப்படை விடயங்கள் துவங்கி ஆழமான விடயங்களையும் அலசும் பல சொற்பொழிவுகளை பயனர்கள் மற்றும் அனுபவசாலிகள் நிகழ்த்தவுள்ளனர். மக்கள் தங்கள் கருத்துக்ளை வெளிப்படுத்த மொழித் தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து அவரவர் விரும்பும் மொழியில் உரை நிகழ்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வு குறித்த விவரங்களுக்கு http://fossconf.in .
பதிவு செய்யப்பட்டுள்ள சொற்பொழிவுகள் குறித்தறிய
http://registration.fossconf.in/web/talks/
கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
Posted by
நா. கணேசன்
at
2
comments
மலையாள டாக்டர்

கேரளாவில் பிறந்து நியூ யார்க் வந்த டாக்டர் சினேகாவின் வாழ்க்கை செப்டம்பர் 11, 2001-ல் உலக வணிக மையம் (World Trade Center)தாக்குற்றபோது இறந்தார் என்ற செய்தி
வெளியாகியுள்ளது.
http://www.charleyproject.org/cases/p/philip_sneha.html
http://www.msnbc.msn.com/id/22960745?GT1=10856
Posted by
நா. கணேசன்
at
0
comments
'ஜனகணமன' மெட்டினில் ...
இந்திய தேசத்தின் குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். நண்பர் குமரனின் வலைப்பதிவில் இரவீந்திரநாத தாகூரின் ஜனகணமன அதிநாயக என்னும் இந்திய நாட்டுப்பண்ணின் நல்ல விளக்கவுரையைச் சுவைத்தேன். பாரதியாரின் 'வந்தே மாதரம்' மொழிபெயர்ப்பும், மாணவக் காலங்களில் கல்லூரி விடுதிகளில் உணவுக்குக் காத்திருக்கும் வேளையில் நகைச்சுவையாக, சனகண மெட்டில் பாடும் பாட்டும், திருமுருக கிருபாநந்த வாரியாரின் முருகன் பக்திப் பாட்டும் (சனகண மெட்டுத்தான் இதுவும்) நினைவுக்கு வர இங்கே தங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
நா. கணேசன்
வந்தே மாதரம்!
(பங்கிம் சந்திரரின் பாரதாமாதா பாடற்குப்
பாரதியாரின் ஒரு மொழிபெயர்ப்பு)
நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
தெண்ணில வதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்குமுன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?
ஆற்றலில் மிகுந்தனை, அரும்பதம் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை ஓட்டுவை. (வந்தே)
அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ!
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,
ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே. (வந்தே)
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்திதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ. (வந்தே)
திருநிறைந்தனை, தன்னிகர் ஒன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளம் சார்ந்தனை!
மருவு செய்களின் நற்பயன் மல்குவை!
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை!
பெருகுமின்பம் உடையை குறுநகை
பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநிலத்து வந்து எம்முயிர் தாங்குவை
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)
நாட்டுப்பண் (இர. தாகூர்)
ஜன கண மன அதி நாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல வங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாஹே
தவ சுப ஆஷிஷ மாஹே
ஜாஹே தவ ஜய காதா
ஜன கண மங்கல தாயக ஜெயஹே!
பாரத பாக்ய விதாதா
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
கல்லூரி விடுதி இளைஞர் பாடல்
(ஜனகணமன மெட்டில்)
ஜனங்களின் வயிறினில் மீறிய பசியே!
பார்புகழ் பாக்ய இந்தியா!
பஞ்சாய்ப் பட்னி தருவீங்க பரோட்டா
கிராம்புடன் காய்கறிக் குருமா
வெந்தய வடைஅடை வெங்கா யஞ்சேர்
இட்டிலி விரைவில் கொடய்யா!
சுவைமசால் போட்டே தோசை,
உயிரென மேலதில் ஆசை!
ஆனால் தயிர்வடை வேண்டாம்!
ஜனங்களின் மங்கலம் ஏறுக மிகுந்தே!
பாரதில் வேண்டு மிதேதான்!
குழம்பே, சுவையாய்க் குழம்பே!
சுடச் சுடச் சுடும் குழம்பே!
சரவணபவ குகனே (வாரியார் சுவாமிகள்)
(ஜனகணமன இசையில்)
சிவ குக குமர பராசல பதியே!
சீரலை வாயுறை நாதா
சிந்தூர செந்தளி பழனா புரிவாழ்
திருவேர கமுறை கந்தா!
செங்கதிர் நிகர்தணி காசலம் வந்தாள்!
செம்பழ முதிர்வன எந்தாய்!
தவமருள் ஆறா தாரா!
தவமுனி வரர்பணி வீரா!
தாதா! தருண சுபோதா!
ஜெய ஜெய சங்கர பாலக மணியே!
தாரக மந்திர வியோதா
சிவமே, சிவமே, சிவமே!
சரவண பவ சிவமே!
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
~ தேசியக்கவி பாரதியார்
Posted by
நா. கணேசன்
at
4
comments
யூனிக்கோடு அதிகாரிகளின் சென்னை விஜயம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906). தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகன். ஆறுமுகம் ஆன பொருளை கண்ணுக்கு விருந்தாக்கியவர் கண்ணாளர் இரவிவர்மா. பல்லாயிரக் கணக்கில் இவர் வரைந்த முருகனின் அச்சுப்படங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்றுத் தீர்ந்தன. அவர் வரைந்த பாரத தேசத்துக் கடவுளரில் மனம் பறிகொடுத்தவர் மகாகவி பாரதியார். மகாசித்ரகாரர் மறைந்தபோது ரம்பையும் ஊர்வசியும் தான் வரைந்ததுபோல உண்மையிலேயே உளரோ என்றுகாண ரவிவர்மா வானுலகை எய்தினார் என்று இரங்கற் கவிதை பாடினார் மகாகவி. ரவிவர்மா மறைந்தபோது பாரதியார் பாடிய சரமகவி:
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்தது அதுபருக வென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை.
மலரினில் நீல வானில் மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகரு மாறே.
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போதும் என்பான்.
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திரம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம்.
காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ?
நீங்கள் காணும் இந்த அரிய ஓவியம் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மா தீட்டிய கைவண்ணம். 1880-ம் ஆண்டில் திருவனந்தபுரத்துக்குச் சென்ற மதறாஸ் கவர்னர்-ஜெனரல் டெம்பிள்-கிரென்வில் தன் அதிகாரிகளுடன் அனந்தை அரசரையும் அவரது ஆலோசர்களையும் சந்தித்த நிகழ்ச்சிதான் இந்தச் சித்திரம். அண்மையில் ஐந்து கோடி ரூபாய்க்கு மும்பையைச் சார்ந்தவரால் வாங்கப்பட்டு இந்தியாவுக்கு மீண்டும் வருகைதரும் வண்ண ஓவியமிது. அந்தச் செய்தி பிபிசியில் பார்க்கலாம்.
அதுபோல, தமிழில், இணையத்தில் கணினிப் பயன்பாடு, வளர்ச்சி குறித்துப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகும் சந்திப்பு சென்னையில் வரும் ஜனவரி 23-24 தேதிகளில் நிகழ இருக்கிறது. மேலைநாட்டு அதிகாரிகள் யூனிகோடு நிறுவனத்திலிருந்து (மார்க் டேவிஸ், மைக்கேல் கப்லான்) சென்னைக்கு வருகை தந்து முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவைச் சந்தித்து தமிழ் யூனிக்கோடை மாற்றவேண்டுமா என்று ஆலோசிக்கின்றனர். சென்ற வருடங்கள் போலவே, தமிழ்நாட்டுக் குழுவினர் டேஸ்16 என்ற தங்கள் திட்டத்தை மெய்கள், உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாவர்றுக்கும் கோட்பாய்ண்ட் கேட்க இருக்கின்றனர். அதை மார்க் டேவிஸ் (தலைவர், யூனிகோட் கன்சார்த்தியம்) போன்றவர்கள் அளிக்கிறார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
மார்க் டேவிஸ், பொன்னவைக்கோ, அனந்தகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் எடுக்கும் முடிவுகள் மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு இயங்கும் வலைத்தளங்களில் ஏற்க இருக்கும் குறியேற்றங்களில் தாக்கம் ஏற்படுத்தும். அதன் பின்னர் அரசாங்க இணையத்தளங்கள் (உ-ம்: தமிழ் இணையப் பல்கலை) யூனிகோடுக்கு மாறுமா? அல்லது டாஸ்16க்கு மாறுமா? அல்லது டாஸ்16 மற்றும் யூனிகோடில் வழங்கப்படுமா? என்பதை எதிர்காலத்தில்தான் தமிழ்ச் சமூகம் அறியமுடியும். டாப், டாஸ்16, ... இவைகளுடன் தமிழ்நாடு அரசாங்க இணைய அமைப்புகள் யூனிகோடிலும் தங்கள் அரிய சேவைகளைப் பொதுமக்கள் பெற வாய்ப்பு ஏற்படுத்துமா? என்பதெல்லாம் தெரியவரும். இதில் பயனர் சமுதாயத்துக்கு அரசு, இண்பிட் மற்றும் கணிஞர்கள் நிலைப்பாடு போன்றவை வழிகாட்டும் என்று நம்புவோம்.
நா. கணேசன்
யூனிகோட் என்றால் என்ன?
http://www.unicode.org/standard/translations/tamil.html
http://www.unicode.org/standard/WhatIsUnicode.html
Posted by
நா. கணேசன்
at
5
comments