அறிஞர் அண்ணாதான் முதன்முதலில் ... டாக்டர் அண்ணா பரிமளம்

1. அண்ணாதான் முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டும் இலக்கியப் பணியைத் தொடர்ந்தவர்.

2, அரசியலில் இருந்துகொண்டே இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, சரித்திர நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லாப் பிரிவிலும் தனி முத்திரை பதித்தவர் - முதன்முதலில்

3. தமிழக இந்தி எதிர்ப்பு வரவாற்றின் முதல் சர்வாதிகாரர் அண்ணாதான் - 1938-ல் இந்தியை எதிர்த்துச் சிறை சென்றவர்.

4. முதன்முதலில் தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கி தன் பணிமனைத் தோழர்களையே நடிக்க வைத்தவர்.

5. 1943-ல் முதன்முதலில் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் அடுக்குமொழியைக் கையாண்டவர்.

6. ஓர் இரவு எனும் ஓர் இரவில் நடக்கும் நிகழ்ச்சிகளை அமைத்து ஒரு நாடகத்தை எழுதியவர் - முதன்முதலில் - 1945 ல்.

7. ஓர் இரவு நாடகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிய காட்சிகளாக ((Flash Back) அமைத்தவர் - முதன்முதலில்

8. முதன்முதலில் வேலைக்காரி எனும் நாடகத்தில் வழக்கு மன்றக் காட்சிகளை அமைத்தவர்.

9. தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்த திரு.வி.கல்யாணசுந்தரனார், அண்ணாவைப் பாராட்டுகிறபோது இனி திரு.வி.க நடை என்பது மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும் எனப் பாராட்டினார் - முதன்முதலில் அந்தப் பெருமையைப் பெற்றவர் அண்ணா.

10. அண்ணாதான் முதன்முதலில் ’வேலைக்காரி’ திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துக்களைச் சொன்னவர்.

11. சமகாலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகர்சாமி போன்றவர்களுக்கு நிதி திரட்டித் தந்தவர், முதன்முதலில் அண்ணாதான் 1946-ல்

12. பாவலர்கள் மத்தியில் இருந்த தமிழை முதன்முதலில் பாமரர்களிடம் கொண்டு வந்தவர் அண்ணா.

13, முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ. 20,000 ஊதியம் வாங்கியவர்.

14. கல்கி கிருட்டிணமூர்த்தி என்கின்ற சமகால எழுத்தாளர் முதன்முதலில் பாராட்டியது அண்ணாவைத்தான் - இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று.

15. அண்ணாதான் முதன்முதலில், வானொலியில் பல தலைப்புகளில் பல நேரங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.

16. அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர்

17. கம்பராமாயணம், பெரிய புராணம் இவைகளை நன்கு கற்றுத் தேர்ந்து, புலவர்களும், தமிழறிஞர்களும் மறுக்க முடியாத வாதங்களை எடுத்து வைத்து வாதிட்டவர் - முதன்முதலில் ஒரு புதிய கோணத்தில் திறனாய்வு செய்தவர்.

18. அந்தத் திறனாய்வுக் கருத்துக்களை எளிய மக்களுக்கும் புரியவைக்கும் விதத்தில் நாடகமாக்கியவர் - நீதி தேவன் மயக்கம் எனும் பெயரில் - முதன்முதலில் அண்ணாதான்.

19. தான் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடலாமா என்பதை முடிவெடுக்கக் கழக மாநாட்டில் வாக்குப்பெட்டி அமைத்து மக்களிடம் கருத்து கேட்டவர் முதன்முதலில்.

20. திறனாய்வு செய்கின்ற கோணத்தில், அண்ணாதான் முதன்முதலில் சில நாடகங்களை ஆக்கியவர். அவை, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், கட்டை விரல், இளங்கோவின் சபதம், பிடிசாம்பல், தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் ஒமகுண்டம் ஆகிய புதினங்கள்.

21. சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் - அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.

22. முதன்முதலில் தமிழில் பல புதிய சொற்களைச் சொல்லாக்கம் செய்தவர் அண்ணாதான்.

23. தன் தொண்டர்களைத் ’தம்பி’ என பாசமுடன் அழைத்தது அண்ணாதான். அதேபோல் தன் தலைவனை அண்ணனாகவே பாவித்து அண்ணா என்று தொண்டர் அழைத்தது - முதன்முதலில் இவரைத்தான்.

24. தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்தபோதே தனக்கு அடுத்து இருந்தவரை, கட்சியின் பொதுச் செயலாளராக்கி தம்பி வா தலைமை ஏற்கவா என விளித்த முதல் அரசியல்வாதி.

25. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்தபோது அன்றைய முதல்வரைத் தன் தொகுதிக்கு அழைத்து தன் தொகுதிமக்களுடன் நேருக்குநேர் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

26. கட்சி மாநாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி அறிவு விளக்கம் தந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

27. அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களைப் புகுத்தியவர் அண்ணாதான் - முதன்முதலில்.

28, இந்த நாட்டு மக்கள் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும், அரசியல்வாதிகளுக்கல்ல எனச் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணாதான்.

29. அரசியல் போராட்டத்தில் கைதாகி நீதிபதி முன் தனக்காகத் தானே வாதாடிய முதல் அரசியல்வாதி அண்ணாதான்.

30. திராவிடநாடு பிரிவினைப்பற்றி இந்தியத் துணைக்கண்ட பாராளுமன்றத்தில் முதன்முதலில் பேசிய தமிழர் அண்ணாதான்.

31. இன்றைய புதுக்கவிதையை முதன்முதலில் புதுப்பா என சொல்லாடல் செய்தவர்

32. அண்ணாதான் முதன்முதலில் ஆளுங்கட்சி காங்கிரசைப் பார்த்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னின்ன திட்டங்களை நிறைவேற்றுங்கள், நான் சார்ந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம் 15 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாது என அறிவித்த அரசியல்வாதி.

33. அண்ணாதான் முதன்முதலில் தன் காலத்தில் பல துறைகளில் சிறப்புடன் வாழ்ந்தவரை அடைமொழியுடன் அழைத்தார் - அதவே பின்னாளில் நிலைபெற்றது. வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், உத்தமர் காந்தி, கொடுமுடி கோகிலம் (கே.பி.சுந்தராம்பாள்), நடிகமணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் (கே.ஆர்.ராமசாமி)

34. அண்ணாவின் சிவாஜி கண்ட இநது ராஜ்யம் எனும் நாடகத்தில் முதன்முதலில் சிவாஜியாக நடித்த வி.சி.கணேசன் இன்றுவரை சிவாஜி என்றே அழைக்கப்படுகிறார்.

35. தன் தலைவர் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய அண்ணா, தான் தொடங்கிய கட்சிக்கு தலைவர் பெரியாரே, தலைவர் நாற்காலி இங்கு காலியாகத்தான் இருக்கும் என அறிவித்து அவ்வழியே நடந்து காட்டியவர் முதன்முதலில் அண்ணாதான்.

36. பெரியாரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் தலைவரைத் தாக்காமல் கட்சி நடத்தி அரசையும் கைப்பற்றிப் பகைமை மறந்து, தலைவரைப் பார்த்து இந்த ஆட்சி தங்களுக்கு காணிக்கை என அறிவித்த ஒரே மனிதர் - இவ்வுலகில் அண்ணா ஒருவர்தான் - முதன்முதலில்

37. அண்ணாதான் முதன்முதலில் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து, சுவரொட்டிகளில் மனதில் பதியவைக்கும் கருத்துக்களைச் சுருங்கச் சொல்லிப் பிரச்சாரத்தில் புதிய யுத்தியைக் கையாண்டவர்.

38. முதல்வரான பிறகு இவர்தான் முதன்முதலில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களைப் பின்தொடராமல், தங்கள் பணியைச் செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியவர்.

39. முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய முதல் தமிழர்.

40. முதன்முதலில் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனும் சட்டத்தைச் செய்தவர் இவர்தான்.

41. ஆங்கிலம் தமிழ் போதும் - இந்தி வேண்டாம் என் இரு மொழி திட்டத்தைக் கொண்டு வந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

42. எரியும் குடிசைகளை அகற்றி ஏழைகளுக்கு எரியா வீடுகளை கட்டிக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

43. முதன்முதலில் தமிழ்நாட்டில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியவர், தமிழ்ப் போராளிகளுக்குக் கடற்கரையில் சிலை நிறுவியவர்

44. முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கியவர் ஏழைகளுக்கு.

45. முதன்முதலில் புன்செய் நிலங்களுக்கு வரியைத் தள்ளுபடி செய்தவர்.

46. அண்ணாதான் சீரணி என்ற அமைப்பை முதன்முதலில் தொடங்கினார். பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள எவரும் எந்த பலனும் எதிர்பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை நல்கும் திட்டமிது. நகர் கிராமப்புறம் இரண்டிலும் தன் உள்ளத்தை திறந்துக் காட்டி, எதையும் மறைக்காமல், இயலாததை இயலாது என்றும், தவறாயிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக்கொள்கிறேன் என்றும் சொன்ன முதல் அரசியல்வாதி.

47. எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - எனச் சொன்ன முதல் அரசியல்வாதி.

48. அமெரிக்க பல்கலைகழகமான யேல் பல்கலைக்கழகம் சப்பெலோசிப் எனும் சிறப்பை வழங்கியது அண்ணாவுக்குத்தான். அண்ணாதான் இந்த சிறப்பைப் பெற்ற முதல் தமிழர் - முதல் ஆசிரியர்.

49. உலகத்தில் வாழ்ந்த தலைவர்களின் மறைவின்போது, எவருக்கும் சேராத பெருங்கூட்டம் அண்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது - முதன்முதலில் - வரலாற்றில்.

50. அரசு அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தவர்.
( டாக்டர் அண்ணா பரிமளம் )

test ‘எதிரொலி’

தமிழ்மணத்தில் Apostrophe(') குறியைப் பயனித்தால் தலைப்பு காணாமல் போய்விடுகிறது என்று ஜாம்பஜார் ஜக்கு, ஆசிப் மீரான், ... குறிப்பிட்டிருந்தனர். ஒரு தீர்வைக் கண்டேன். பகிர்ந்துகொள்கிறேன்.

இடப்புற ஒற்றை-மேற்கோள்: & lsquo; வலப்புற ஒற்றை-மேற்கோள்: & rsquo; உதவும்.
(when you use, type without any space after & sign. i.e., lsquo; or rsquo; should immediately follow ampersand (=& ) sign without gap).

உ-ம்:
& lsquo;எதிரொலி& rsquo;

(ஒற்றை மேற்கோள் குறிகள் ஆவதற்கு &-க்கு அப்புறம் இடைவெளி இருக்கக் கூடாது.)

பயன்பட்டால் பதில் அனுப்பவும்.
வேறு ஏதாவது முறையும் இருக்கலாம், தெரிந்தால் சொல்லித்தரலாமே.

நா. கணேசன்

rsquo = right single quotation mark = வலப்புற ஒற்றை-மேற்கோள்
lsquo = left single quotation mark = இடப்புற ஒற்றை-மேற்கோள்


http://jambazarjaggu.blogspot.com/2009/08/bug.html
[Begin Quote]
தமிழ்மணத்தில் ஒரு BUG?

இதுல இன்னா பொடி இருக்குதோன்னு டென்ஷன் ஆவாதீங்க தலீவா! மெய்யாலுமே தமிழ்மணத்துல ஒரு bug இருக்கிற மாதிரி கீது!

இன்னா மேட்டருன்னா நீங்க பதிவுக்கு தலைப்பு வைக்கும் போது தலைப்புல ' அப்டீங்கிற எளுத்த (அதான் வாத்யார் apostrophe இல்லாங்காட்டி சிங்கிள் கோட்) யூஸ் பண்ணீங்கன்னு வைங்க தமிழ்மணம் உங்க பதிவ திரட்டும் போது சுத்தமா தலைப்பே காணாம பூடுது!

உதாரணமா இப்டி எல்லாம் தலைப்பு வைச்சீங்கன்னா கண்டிப்பா தமிழ்மண முகப்புல உங்க தலைப்பு தெரியாது!!!

1) Don't Miss it
2) 'அதுவும்', 'இதுவும்'
3) அவரு சொல்றாரு 'ஹி..ஹி'

இன்னா, சொன்னா நம்ப மாட்டீங்களா? சரி ஒரு தபா இப்டி தலைப்ப வச்சு இன்னா ஆவுதுன்னு பாத்து சொல்லுங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
[End Quote]

http://asifmeeran.blogspot.com/2009/08/blog-post_6523.html
[Begin Quote]
பதிவின் தலைப்பு எங்கே?
தமிழ் மணத்தில் இணைக்கப்படும் பதிவுகளில் சில சமய்ங்களில் தலைப்பு காணாமல் போவதை நீங்கள் கண்டிருக்கலாம் சற்று முன்னர் நான் இணைத்த 'காஞ்சிவரம்' திரைப்படத்திற்கான விமர்சனமும் தலைப்பில்லாமல் முண்டமாக (என்னை மாதிரியே) வந்து தொலைத்திருக்கிறது.

ஏன் இப்படி நேர்கிறது?
இதற்கு முன்னர் ஜெஸிலாவின் பதிவிற்கும், பைத்தியக்காரனின் பதிவிற்கும் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. தமிழ் ம்ணத்திடம் ஏன் இப்படி?' என்று கேட்டு முன்னர் எழுதியிருந்தேன்.
சில சமயங்களில் மேற்கோள் குறியிட்டு (",") எழுதினால் இப்படி நிகழ்ந்து விடுவதாகவும் இதை சரிசெய்யும் முயற்சிகளில் தொழில்நுட்பக்குழு தொடர்ந்து இயங்கி வருவதாகவும் சொல்லியிருந்தார்கள். கதை விடுகிறார்களோ என்று நினைத்துத்தான் மேற்கோள் காட்டி தலைப்பு வைத்தான்.

கதையின் நீதி:
உன்னைப் போல எல்லாருமே 'ஃபிராடு' என்று எண்ணாதே!!

பிகு
இதெல்லாம் ஒரு பதிவாடே என்று திட்டாதீர்கள்
எவ்வளவு பெரிய தொழில் நுட்பக் குறிப்பைத் தந்திருக்கிறேனே என்று வாழ்த்தி விட்டு போங்க!
[End Quote]

பாரதியின் இறுதிப் பேருரை (ஈரோடு, ஜூலை 31, 1921)

ethiroli


பெ. தூரன் தாத்தா, விழுப்புரம் ர. அ. பத்மநாபன் போலவே பாரதியின் மறைந்து நிற்கும் எழுத்துக்களைக் கண்டறிதலை வாழ்வுப் பணியாகத் தலைமேற் கொண்ட ‘எதிரொலி’ விசுவநாதனை வாழ்த்தி மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் போன்றோர் பொன்னாடை அணிவிக்கும் சீர் (பாரதியார் சங்க 61-ஆம் ஆண்டுநாள், ராணி சீதை அரங்கம், சென்னை, செப். 11, 2009). ஈரோட்டில் பாரதியாரின் கடைசிப் பிரசங்கம் நிகழ்ந்தது. அதுபற்றி ஸ்டாலின் குணசேகரன் அவர்களிடம் ச. து. சு. யோகியார் அச் சொற்பொழிவைக் கேட்டபின் எழுதிய கட்டுரையை முழுக்க வாங்கி வெளியிட ஆசை.


நா. கணேசன்



பாரதியின் இறுதிப் பேருரை

த. ஸ்டாலின் குணசேகரன்
தினமணி, செப். 11, 2009

தேசியக் கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், தேசபக்தர், அமைப்பாளர், ஆய்வாளர், செயல்வீரர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராளுமை கொண்ட சுப்பிரமணிய பாரதியார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்துள்ளார்.

1921-ம் ஆண்டின் மத்தியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த பழக்கப்பட்ட யானைக்குத் திடீரென மதம் பிடித்து, வழக்கம்போல் பழங்கள் கொடுக்க வந்த பாரதியை எதிர்பாராத விதத்தில் தனது துதிக்கையால் பிடித்து இழுத்து, கீழே கிடத்திவிட்டது. யானைக்கடியில் கிடந்த பாரதியை அங்கிருந்தோர் பாய்ந்து சென்று இழுத்து வந்து காப்பாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் உருவான அதிர்ச்சியும், ஏற்பட்ட காயங்களால் விளைந்த சுகவீனமும் தொடர் சிகிச்சையால் விடுபட்டது.

குணமடைந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்த பாரதியின் அன்பரும், தேசபக்தருமான வழக்குரைஞர் தங்கப்பெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், அவர் நடத்திய வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக ஈரோடு சென்றார் பாரதி.

சுதேசமித்திரன் இதழில் "என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் தனிக்கட்டுரை வெளியிட்டார் பாரதி.

""இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்'' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி.

தனது ஈரோடு சொற்பொழிவையே சுதேசமித்திரனின் இன்னொரு இதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார் பாரதி.

""மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தர்க்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்'' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி.

ஹிரணியன், தன் மகன் பிரகலாதனிடத்தில் ""சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே'' என்று கேட்டதையும், அதற்குப் பிரகலாதன் ""நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்'' என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பாரதி.

""வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை. மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குரு சிவமென்று உரைத்தார் மேலோர்...'' என்று அடுக்கடுக்காக ஆதாரக் கருத்துகளை எடுத்துரைத்து ""அத்வைத நிலைகண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன் காண்பீர்'' என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் பாரதி.

"நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டுத் தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன'' என்று சாவிற்கான இன்னொரு காரணத்தை விளக்குகிறார் பாரதி.

""அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ?'' என்று போரில்லா உலகம் பற்றி அக்கூட்டத்தில் போதித்தார் பாரதி.

""நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்? என்று விஞ்ஞானியாகிய ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்: கொடுங்கோபம் பேரதிர்ச்சி; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடவே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்'' என்று ஒரு ஞானிக்குரிய இலக்கணத்துடன் இக்கூட்டத்தில் எடுத்தியம்பினார் இந்த சுப்பிரமணியக் கவிராயர்.

""மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ? பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை... வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாடோறும் முயன்று நலிந்து சாவான்'' என்று பெண்ணடிமை புரிவோருக்கு எதிராகப் பிரகடனம் செய்கிறார் பாரதி.

""எல்லா மதங்களின் சாரமும் இதுதான். பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி; யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே. ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'' என்று மானுட ஒற்றுமையை வலியுறுத்தி "அன்பே அடிநாதம்' என்ற பொருள்பட தனது அன்றைய உரையை அமைத்துக் கொண்டார் மகாகவி.

ஈரோடு நகரில் அன்று நிகழ்த்தப்பட்ட "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பிலான இந்த உரை அன்று கூடியிருந்தோரை உரக்கச் சிந்திக்க வைத்ததாக அவ்வுரை கேட்டோர் எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழகத்தின் கீர்த்தி மிக்க தேசபக்தக் கவிஞர்களில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ச.து. சுப்பிரமணிய யோகியும் ஒருவர். பாரதியின் ஈரோடு உரையைக் கேட்டவர் அவர்.

பாரதியின் இவ்வுரை குறித்துக் கூறும் யோகியார், ""நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்போது உலகமே "கிடுகிடு' என்று நடுங்குவதுபோல் தோன்றும். மகா காளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே வந்து "மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைப்புகள், குறுகிய நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார். சள்ளெனக் கடிப்பார். சினத்தோடு சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்'' என்று அணுஅணுவாக அனுபவித்து வர்ணிக்கிறார்.

பாரதி பேசத் தொடங்கும் முன் நிலவிய சூழல் குறித்தும், பேச அழைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்தவை குறித்தும் தனது கட்டுரையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் யோகியார்.

""மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சுமுட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை- அசையவில்லை. சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூடச் சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது; மீசைமுறுக்கும் போதன்று வேறு யாதொரு சலனமும் கிடையாது. ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்... எழுந்தார் என்பது தவறு... குதித்தார். நாற்காலி பின்னே உருண்டது. பேச்சோ? அதில் வாசகசாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்' என்றார். அவ்வளவுதான். பாடலானார். அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், "ஓ ஹோ ஹோ' வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக்குரல்"" என்று வியந்து வியந்து கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் யோகியார்.

1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட சான்றோர்கள் தாம் கூறிய கருத்துகள் குறித்து விவாதித்து ஏகோபித்து அங்கீகரித்ததாகவும், பாரதியாரே பிறகு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட பெரிய வித்துவான்கள், பண்டிதர்கள், தேச பக்தர்கள் யாவரும் அதே ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் அடுத்தநாள் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து அக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை சென்ற பாரதியார் வயிற்றுக் கடுப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் துன்புற்றார். மேலும் மேலும் நலிவடைந்து செப்டம்பர் 11-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் பாரதியின் உயிர் பிரிந்தது.

ஈரோடு நகரில் ஆற்றிய உரைதான் பாரதியின் இறுதிப் பேருரை! இந்தியாவின் எதிர்கால நிலையைப் பற்றியே எண்ணி எண்ணி வாழ்ந்த இம்மாபெரும் மனிதனுக்கு மரணமென்பதே இல்லை!

(இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள்)

கட்டுரை தருகிறீர்களா? உத்தமம் கருத்தரங்க (கொலோன், ஜெர்மனி) மின்மஞ்சரிச் சிறப்பிதழ்

நண்பர்களே:

வருகின்ற அக்டோபர் 23-25, 2009 கொலோன், ஜெர்மனி நகரில் நடக்க இருக்கும் தமிழ் இணைய மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் `மின்மஞ்சரி` ஒரு சிறப்பு இதழை தயாரித்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதோர், கருத்தாழமிக்க நல்ல கட்டுரைகள் வைத்திருந்தால் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள அழைக்கிறேன்.

உங்கள் கட்டுரையை உடனே எனக்கு அனுப்பி வைக்கக் கோருகிறேன். இக்கட்டுரை மின் வடிவிலும், அச்சு வடிவிலும் கருத்தரங்கில் விநியோகிக்கப்படும். கருத்தரங்க மலர் என்பதால் தரக்கட்டுப்பாடு கண்காணிக்கப்படும்.

நா.கண்ணன் ,

எனக்கு (naa.ganesan@gmail.com) அனுப்பி வைத்தாலும் மின்மஞ்சரி ஆசிரியர் குழுவுக்கு
அனுப்பி வைக்கிறேன். தமிழ்க் கணிமை பற்றியதான கருப்பொருளில் கட்டுரை இருக்கவேண்டும். உதாரணமாக,
1. Open source software and Localization
2. Tamil enabling in mobile phones
3. Machine Translation, OCR & Voice
recognition
4. Tools for Tamil Computing
5. Tamil Internet & Social Networking
6. E-Learning
7. Databases for Digital libraries
8. Digital archiving of Tamil heritage materials
9. Standards for Tamil Computing

http://www.infitt.org/

Press release about Tamil Internet Conference 2009

INFITT is pleased to announce that the next Tamil Internet Conference TIC 2009 will be held in Europe, at the Institute of Indology and Tamil Studies of the University of Cologne in Germany during October 23-25, 2009.

Tamil Internet Conferences of INFITT are major events for computer professionals and Tamil Diaspora working or interested in Tamil Computing- Information Technology and Tamil Internet Development in various areas. Tamil Internet Conference 2009 is the Eighth in the series, with earlier ones held in Singapore (1997, 2000, 2004) , Chennai (1999, 2003), Kuala Lumpur, Malaysia (2001), San Francisco, California, USA (2002). TIC 2009 will be the first conference to be held in Europe.

Institute of Indology and Tamil Studies (IITS), headed by Prof. Ulrike Niklas is one of the major Tamil Studies and Research Center of Europe. A Tamil teacher and researcher of IITS well known to Tamil community is Dr. Thomas Malten, who led a pioneering effort two decades back to bring Tamil literature in electronic form. IITS of U Koeln also has the unique distinction as the only Tamil Studies Center outside Tamil Nadu to have more than 60,000 Tamil books. So we are delighted to have the next TIC at this key Institution devoted to Tamil Research in Europe.

Tamil Internet 2009 Conference will have a number of technical sessions on Tamil Computing, IT and on Tamil Internet for two and half days. Attendance to the Technical sessions of the conference will be limited. Interested participants are encouraged to register online for this international conference at
http://www.infitt.org/ti2009/ or for details contact ti2009@infitt.org

Following are few topics that are to be addressed:
1. Open source software and Localization
2. Tamil enabling in mobile phones
3. Machine Translation, OCR & Voice
recognition
4. Tools for Tamil Computing
5. Tamil Internet & Social Networking
6. E-Learning
7. Databases for Digital libraries
8. Digital archiving of Tamil heritage materials
9. Standards for Tamil Computing

தமிழ் மரபு அறக்கட்டளை விழா, மயிலாப்பூர், ஆகஸ்ட் 30, 2009

phoca_thumb_l_souvenir2

முனைவர் நா. கணேசனுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/) வழங்கிய ’மரபுச்செல்வர்’ பட்டம். 30ம் தேதி (ஞாயிறு) தமிழ் மரபு அறக்கட்டளை 8ம் ஆண்டு நிறைவு விழா சென்னை மயிலையில் கற்பகாம்பாள் நகர் கே. என். சண்முகசுந்தரம் அரங்கில் நடத்தியது.

விழா முழுக்க இங்கே கேட்கலாம்:
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=234&Itemid=316


வெண்பா விரும்பியின் வாழ்த்து!
(அறுசீர் விருத்தம்)

அறிவிருந்துந் தாயகத்தின் பண்பாடுங் கலைவளமும்
... அறிந்து கொள்ளா
வறியவருந் தனம்பெறுமா றையரைப்போற் பொருள்வழங்கு
... மரபுச் செல்வ
பொறியியலிற் புலவவளப் பொழில்வாய்ச்சி புவிக்கீந்த
... புதல்வ கையில்
எறியயிலேந் திறைதமையன் பெயரேற்ற நினக்கென்வாழ்த்
... தியம்பு வேனே.

ஐயர்=மகாமகோபாத்தியாய ஐயரவர்கள்
வானிலொரு காலூன்றி மரபிலொரு காலூன்றித்
தேனொத்த தமிழ்நூல்கள் சேகரித்து வலையேற்றும்
சேவையினைச் செய்’மரபுச் செல்வர்’நம் கணேசர்க்குப்
பாவழியே பாராட்டைப் பகர்ந்தவரை வாழ்த்துவனே!
~ அனந்தா


phoca_thumb_l_DSC06289

யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்களின் விழாத் தொடக்கவுரை


phoca_thumb_l_DSC06286

பெ. சு. மணி, இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன், கடலோடி நரசையா


phoca_thumb_l_DSC06293

கடலோடி நரசையா ‘மரபுச் செல்வர்’ விருது பெறுகிறார்


phoca_thumb_l_DSC06295

ரா. ரத்தின சபாபதி (மேனாள் இயக்குனர், பல்லவன் போக்குவரத்துக் கழகம்) டாக்டர் நா. கணேசன் சார்பில் ‘மரபுச் செல்வர்’ பட்டயம் பெறுகிறார்

phoca_thumb_l_DSC06298

’வரலாறு’ அறிஞர் திவாகர் ‘மரபுச் செல்வர்’ ஆகிறார்

phoca_thumb_l_Mr.Indra Parthasarathy2

phoca_thumb_l_on Behalf of Dr.Ganesan

phoca_thumb_l_participants3

விழா அமைப்பாளரும், விருந்தினரும். கடலூர் டாக்டர் தி. வாசுதேவன், அண்ணா கண்ணன் (சென்னை ஆன்லைன் ஆசிரியர்), ...

விழாவைச் சிறப்புற நடத்திய தமிழ் மரபுக் கட்டளைக் குழுவினர் யாவர்க்கும் நன்றி!
நா. கணேசன்

The Hindu writeup on Tamil Heritage Foundation published on Aug. 20, 2009:
http://www.hindu.com/2009/08/20/stories/2009082051520200.htm

நிகழ்ச்சி அழைப்பிதழ்:
http://emadal.blogspot.com/2009/08/blog-post_25.html
இடம்: கே. என். சண்முகசுந்தரம் அரங்கம்
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
ஆகஸ்ட் 30, 2009. பிற்பகல் 2 மணி

இந்திரா பார்த்தசாரதி
திருப்பூர் கிருஷ்ணன்
பெ.சு.மணி
கடலோடி நரசய்யா
யுகமாயினி சித்தன்
புதுவை சுகுமாரன்
கடலூர் வாசுதேவன்
இலந்தை ராமசாமி
இன்னம்பூரார்
ஆர். தேவராஜன்
அண்ணா கண்ணன்
கீதா சாம்பசிவம்
திருவேங்கடமணி
...

போன்ற தமிழ்ப் பண்பாடு மீது அக்கறையுள்ளோர் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக்ஸ் சந்திரா (ஒளிப்படங்களுக்கு நன்றி)!

முனைவர் நா. கண்ணன் மின்தமிழ் குழுவில் விழா பற்றி எழுதிய மடல்:

மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் மரபுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

வழக்குகள் என்பவை நாம் உருவாக்குவதே!

தமிழ் அன்பகலா டாக்டர் கண்ணன் நடராஜன் தமிழ் மரபு அறக்கட்டளை உருவான நாளை "தமிழ் மரபுப் பெருநாள்" எனக் கொண்டாட மின்மடலிட்டார்.

மின்தமிழ் அன்பர்களுக்கு அது உவப்பாக இருந்ததால் இன்றிலிருந்து ஒரு புதிய வழக்கு (சம்பிரதாயம்) உருவாகிறது. எமது 8வது ஆண்டு நிறைவு விழாவை சென்னை மரபுச்செல்வங்கள் வருகின்ற ஞாயிறு அன்று நடத்த உள்ளனர்.

நம் வலைக்குரு (webmaster) சுபா சொல்லியபடி இன்றிலிருந்து ஞாயிறு வரை இடைப்பட்ட நாளில் தமிழ் மரபு காப்பிற்கு நாம் நம்மால் முடிந்த அளவு என்ன செய்கிறோம் என்பதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். சிறுதுளிதானே பேராற்று வெள்ளம். உங்கள் சிறு, சிறு செய்கைகளைக் கூட மின் தமிழ் மதிக்கிறது. சரஸ்வதி பூஜை என்பது வேறு என்ன?

இவ்வாண்டு தொடக்கம் தமிழ்மரபு அறக்கட்டளை தமிழ் வளம் மின்னுலகில் நிலைபெற உதவும் தமிழர்களை இனம் கண்டு கௌரவிக்க உள்ளது. அவ்வகையில் மூவர் இவ்வாண்டில் சிறப்புப் பெருகின்றனர்.

1.
தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் 'கடலோடி' நரசய்யா. பெரும்பாலும் வயது ஆகும் போது சக்தி குறையும் என்பார்கள். இவர்கள் குடும்பத்தில் அதற்கு எதிர்மாறு ;-) நான் முதலில் இவரை சந்தித்த போது கணினி மூலம் தமிழை எவ்வளவு சிக்கலான முறையில் தட்டச்சு செய்யமுடியுமோ அவ்வளவு சிக்கலான முறையில், ஆனால் வெகு லகுவாகச் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வார்ப்பின் மூலகுறியீட்டு முறையில் (பைனரி) அந்த எண்ணை மின்னேற்றம் செய்து கொண்டிருந்தார். அசந்துவிட்டேன். இந்த வயதில் தவழும் பிள்ளை போல் அவர் மின்னுலகில் தளிர் நடை பயில்வது மகிழ்வாக உள்ளது. உண்மையில் நரசய்யாவை வயதானவர் என்று சொல்லக்கூடாது, அவர் மாமா, சிட்டி சுந்தர ராஜன், 90 வயது. அவரை மின்னுலகப் பிரவேசம் செய்ய வைத்திருக்கிறார் பாருங்கள். அது சரித்திரம். சிட்டியாரின் முதல் வலைப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்று நடத்தியது மிக மகிழ்வான செயல். அன்னாரின் உதவியுடன் தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் (1875) வலையேறி இருக்கிறது. சிட்டி மாமாவை நான் கடைசியில் சென்னையில் பார்த்த போது ஒரு குழந்தையின் வாஞ்சையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விஜாரித்தார். அதற்குப்பெயர்தான் தமிழ் அக்கறை என்பது! இந்த அக்கறை 90+ பெரியவருக்கு இருந்தது. அது நம் இளைஞர்களுக்கு வர வேண்டும்.

Chitti recollects - http://chitti.blogspot.com/
ஆதியூர் அவதானி சரிதம் (1875) - தமிழின் முதல் புதினம் (நாவல்) -
http://bharani.dli.ernet.in/thf/text/etext/etext.html

அது மட்டுமில்லை, நரசய்யா எனது களப்பணியில் என்னுடன் துணை நின்றார். உ.வே.சா நூலகத்தொடர்பை உருவாக்கி (நன்றி ஆண்டோ பீட்டர்) உதவினார். அதன் பின் தொடர்ந்து எம் மரபுக்காப்பிற்கு உதவி வருகிறார். இ-சுவடி மட்டுறுத்தர்களுள் ஒருவர். மின்தமிழ் ஆர்வலர். இவருக்கு 'மரபுச் செல்வர்' எனும் பட்டமளிக்கிறோம். ஞாயிறன்று நடைபெறும் விழாவில் அவர் கௌரவிக்கப்படுவார்.

2.
டெக்சாஸ் முனைவர் நா.கணேசன்!
மின்தமிழ் (மின்னுலகம்) நன்கறிந்த தமிழ் அறிஞர். மின்னுலகம் உருவாகி, அதில் தமிழ் நிலை பெற்ற காலத்திலேயே காலூன்றி தமிழ்ச் சேவை செய்து வருபவர். தமிழ் ஒருங்குறி கட்டமைப்பில் பெர்க்கிலி பல்கலைக்கழகத்துடன் இணைந்து 90களிலேயே தமிழ் மின்னுலகில் நிலைபெற ராஜபாட்டை போட்டவர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய தனியார் தமிழ் நூலகத்தை வைத்திருப்பவர். பல அரிய சேகரங்கள் இவரிடமுண்டு, 10,000 மேல்! தமிழ் மரபு அறக்கட்டளை உருவான காலத்திலிருந்து எம்முடன் துணை நிற்பவர். இப்போது நம்மையெல்லாம் இணைக்கும் வலைப்பதிவு மன்றம் 'தமிழ்மணம்' நிர்வாகஸ்தர்களில் ஒருவர். பல்பரிமாண பொறியியல் வல்லுநர் அவர். அவர் நம்முடன் துணை நிற்பது நமக்கு பலம். இப்பெரியவரையும் 30 தேதி 'மரபுச் செல்வர்' பட்டமளித்து கௌரவிக்க உள்ளோம்.

3.
'விஜயவாடா' திவாகர். மின்தமிழ் அன்பர்கள் அறிந்த பெயர். தமிழ் மரபின் கூறுகளை புதினமாக்கி இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ் வரலாற்றுச் சிற்பி. மின்தமிழின் பரந்துபட்ட மின்னாக்க நோக்கை முதலிலேயே இனம் கண்டு, சிற்பக்கலை ஆர்வமுள்ள சிங்கப்பூர் விஜய் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தியவர். இன்னும் முக்கியமாக பொன்னியின் செல்வன் ஆர்வலர் பேரவையுடனான நமது உறவை பலப்படுத்துபவர். மின்னாடற்குழுக்களுக்குள் பாலமைக்கும் வல்லுநர். நம் திவாகரை, 'மரபுச் செல்வர்' எனச் செல்லமாக அழைக்கிறோம். தமிழகத்தின் அயலகச் சூழலில் தமிழ் காப்பது அரிதான செயல். விஜயவாடாவில் தமிழ் மன்றம் காத்து, நம்மாவாழ்வாருக்கு விழாவெடுத்து தமிழ்ப்பணி ஆற்றுகிறார். இவரது அனுபவமும், உந்துதலும் த.ம.அக்கு வளம் சேர்க்கும்.

இன்னும் வரும்...

நா.கண்ணன்

--
"Be the change you wish to see in the world." -Gandhi