பழந்தமிழ் இலக்கியத்தில் வடநாடு - பேரா. அ. கி. பரந்தாமனார்

பழந்தமிழ் இலக்கியத்தில் வடநாடு

            - அ. கி. பரந்தாமனார்

வடநாட்டினர் தமிழ்நாட்டைக் குறித்து அக்காலத்தில் தெரிந்திருப்பதைப் பார்க்கிலும், தமிழர்கள் வடநாட்டைப் பற்றி மிகுதியாக அறிந்திருந்தார்கள். இமயமலையையும் கங்கையாற்றையும் தமிழர்கள் பார்த்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.பழந்தமிழர் வடநாட்டைப் புண்ணிய நாடாகவும், வட திசையைப் புண்ணிய திசையாகவும் கங்கையாற்றைக் கடவுள் மாநதியாகவும் இமயம் முதல் குமரி வரை ஒருநாடாகவும் கண்டனர். இதற்குக் காரணமாய் இருந்தவை வடநாட்டுச் சமயங்களே எனலாம்.

சங்ககாலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய இவை தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன. கிமு.மூன்றாம் நூற்றாண்டிலேயே இச்சமயங்கள் தமிழ்நாட்டில் நன்கு தழைத்து சங்க இலக்கியங்களில் நன்கு புகுந்து விட்டன. சைவம் தமிழ்நாட்டுச் சமயமே என்று கூறினும் அது வடநாட்டுச் சமயமாகவே காட்சி அளிக்கிறது. இமயமே சிவனுறையும் கைலாயம் என்று குறிப்பதொன்றே இதற்குப் போதிய சான்றாகும். சைவம் தமிழர் சமயம் என்று போற்றுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை.

சைவ வைணவ சமண பௌத்த சமயங்கள் வடநாட்டைப் புண்ணிய நாடாகக் கருதுமாறு செய்து விட்டன. திருநாவுக்கரசர் கைலாயம் செல்லக் கருதி இமயம் நோக்கியே சென்றார். தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்துக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், வடவேங்கடம் என்கிற சொற்றொடரை எடுத்துக் காட்டி, ‘வடதிசை புண்ணிய திசை ஆகலான் அதனை முதற்கூறினார்’ என்றார். ஏணிச்சேரி முடமோசியார், ஆய் என்கிற வள்ளலைக் குறித்துப் பாடிய 132-ஆம் செய்யுளுக்கு உரை கூறிய உரையாசிரியர், ‘வடதிசை தேவருலகோடு ஒத்தலான்’ என்று குறிப்பெழுதி உள்ளார். அவரே, 229-ஆம் புறப்பாட்டில் விண்மீன் வீழ்ச்சியைக் குறிப்பிடுகையில் “தீத்திசையாகிய தெற்கும் மேற்குமான இரண்டனுள் ஒரு திசைக்கண் வீழ்ந்ததென்றுமாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வடதிசையைப் புண்ணிய திசையாகவும், தென்திசையைத் தீய யம திசையாகவும் கருதினார்கள்.

கீழ்வரும் நாலடியார்ச் செய்யுளைக் காண்க:

‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்குஆகா
தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்’

“தென்னாட்டவர் கூட முயற்சி செய்தால் சுவர்க்கம் போக முடிகிறது; வடநாட்டவராயிருந்தும் முயற்சி செய்யாமல் அதனை இழப்பவரும் இருக்கிறார்களே” என்கிற பொருளின் அடிப்படை அளவுகோலைப் பாருங்கள்.

இமய உச்சியில் சிவபெருமான் எழுந்தருளி இருப்பதாகவும் இமயத்தை ஈர்ஞ்சடை அந்தணன் (சிவ பெருமான்) வில்லாகக் கொண்டதாகவும் இமயத்து உச்சியில் இருந்து கங்கைப் பேரியாறு இழிந்து வருவதாகவும் இமயமலையில் முனிவர்கள் தவம் செய்வதாகவும் சங்ககாலத்து இலக்கியங்களிலும் குறிப்புகள் இருக்கின்றன.

வடதிசையில் இமயம் இருப்பதாலும் தென்திசையில் ஆய் வள்ளல் இருப்பதாலும் இப்பெருநாடு கவிழாமல் சமநிலையில் இருக்கிறது என்று பாடுகிறார் முடமோசியார். சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை “வட இமயமும் தென் பொதியமும் போன்று நீடு வாழ” வாழ்த்துகிறது புறநானூற்றின் இரண்டாம் பாடல். “இமயம் சேர்ந்த காக்கை பொன்னிறமாதல் போல்” என்கிறது யாப்பெருங்கலக் காரிகைச் செய்யுள்.

கங்கையாற்றை “வளமழை மாறிய என்றூழ்க்காலை மன்பதையெல்லாம் சென்றுணக் கங்கை” என்று புறநானூறும், “பொன்கொழித்து இழிதரும் போக்கருங் கங்கை” என்று பெரும்பாணாற்றுப் படையும் “கங்கையும் பேரியாறு கடர்படர்ந்து” என்று மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு இமயத்தையும் கங்கையையும் வர்ணிப்பதோடு நில்லாமல் வடநாட்டில் நிகழ்ந்த செய்திகளையும் கூறுகின்றன சங்க இலக்கியங்கள். மகாபாரதப் போர் பற்றிய குறிப்பு முன்சொன்ன புறநானூற்றுப் பாடலில் இருக்கிறது. அகநானூறு வடநாட்டில் கிமு நான்காம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆட்சி புரிந்த நந்தர்களுடைய பெருஞ்செல்வத்தைக் குறிப்பிடுகிறது. *நந்தர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்ததற்கு ஒரு குறிப்பும் இல்லை; ஆனால் அகநானூற்றின் 251, 265 ஆகிய பாடல்களில் அவர்களுடைய ஆட்சியின் பெருஞ் செல்வச் சிறப்பை மட்டும் காண்கிறோம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் வடநாட்டைச் சமய நிலையில் உயர்வாக குறிப்பிடினும் அரசியல் நிலையிலும் வீரச் சிறப்பைக் கூறும் முறையிலும் வடநாட்டை மதித்துக் கூறவில்லை. வடநாட்டினர் மேல் தமிழர்க்ள் பகை கொண்டிருந்தது போலவே தோன்றுகிறது. தமிழ் மன்னர்கள் வடநாடு சென்று இமயத்தில் தங்கள் இலச்சினைகளைப் பொறித்ததும் இமயம் முதல் குமரி வரை தமிழ் மன்னர்கள் ஆண்டதும் வடநாட்டு மன்னர்கள் தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கு அடி பணிந்ததும் திறை கொடுத்ததும் வடபுல மன்னர்களான கனக விசயர்கள் தலையில் கண்ணகி படிவக் கற்களைச் சுமக்க வைத்ததும் வடநாட்டுக்குப் படையெடுத்ததுமான செய்திகளைப் பழந்தமிழ்ச் சங்க இலக்கியமாகிய பதிற்றுப்பத்து அகநானூறு சிலப்பதிகாரம் போன்றவை கூறுகின்றன.

பெருவீரனான அசோகனும் தமிழ்நாட்டில் காலெடுத்து வைக்கவில்லை.கலிங்கத்தை வென்றதோடு நின்றான். அவன் தன் கல்வெட்டுகளில் சேர சோழ பாண்டியர்களை நேச மன்னர்களாகவே குறிப்பிட்டான். புறநானூறு அசோகருக்குப் பின் வந்த மோரியர் படையெடுப்பை ‘வம்ப மோரியர் படையெடுப்’பாகவே கூறுகிறது. அப்படி வந்தவர் வெற்றி பெற்றதாகக் குறிப்பைக் காணோம்.

ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் பலர் தமிழ் மன்னர்களின் வீரச் செயல்களையும் படையெடுப்புகளையும் கற்பனைத் திறன் மிகுந்த காப்பியக் கதைகளாகத் தான் கருதுகின்றனர். பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் தவிர்த்த அனைவரும் செங்குட்டுவன் உள்ளிட்ட தமிழ் வேந்தர்களின் படையெடுப்புகள் அனைத்தையுமே கட்டுக்கதைகளாகப் புறக்கணிக்கின்றனர்.

வடவர்கள் காஞ்சியைத் தவிர பிற பழந்தமிழ் நகரங்களைப் புண்ணிய நகரங்களாகக் கருதவில்லை. தமிழ்ப் புலவர்களோ வட நாட்டைப் புண்ணிய நாடாகவும் வட மொழியைத் தெய்வ மொழியாகவும் மதித்தார்கள்; வடநாட்டுக் கதைகளைக் காப்பியங்களாகப் பாடினார்கள். இது பழந்தமிழர் பண்பாடு மட்டுமன்று; இன்றையத் தமிழர் பண்பாடும் ஆகும்.

- பேராசிரியர் அ.கி.பரந்தாமனார், 
வரலாற்றுக் கட்டுரைகளும், பிறவும், 1965, அல்லி நிலையம், சென்னை.

-----------------------------------------------------------------------------------------

நாலடியார், பொருட்பால்
25. அறிவுடைமை
243எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் ;
தன்னாற்றா னாகும் மறுமை ; வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்

(பொ-ள்.) எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரங்காழ் தெங்கு ஆகாது - எந்தநிலத்தில் விதையை இட்டாலும் எட்டி விதை தென்னைமரமாக வளராது ; எந்நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால் தன் ஆற்றான் ஆகும் மறுமை - ஆதலால், எந்தநாட்டின்கண் வாழ்வோரும் தமது நல்வினையினால் தேவருலகம் செல்லுதலால், ஒருவற்குத் தன் முயற்சி வகையினாலேயே மறுமைப் பேறு உண்டாதல் கூடுமன்றி இடத்தின் சார்பினாலன்று: வடதிசையும் கொன்னாளர் சாலப் பலர் - போக உலகிருக்கும் வடநாட்டின் கண்ணும் வறிது வாழ்நாட் கழித்து நரகு புகுவோர் மிகப் பலராவர்,

(க-து.) இடம் முதலிய சார்பினையே பெரிதாகக் கருதாமல் தமது புண்ணியப் பேற்றில் முயற்சியுடையராய் ஒழுகுதலே அறிவுடைமையாகும்.

(வி-ம்.) உம்மை, உயர்வு.கொன்னாளர், பயனிவாளர்; "நம்மருளாக் கொன்னாளர்"1 என்றார் பிறரும். அவரவர் அறிவின் முயற்சியே அவரவர்க்கு உய்தி கூட்டுமென்பது பொருள்.

(3)


1. கலித். 42 : 18.