ஸ்ரீ இரமணர் ஷட்கம் - நாமக்கல் கவிஞர் பாடல்

                    நற்றவசி ரமணரிஷி

                                        - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை

    சித்தர்களும் முத்தர்களும் செறிந்து வாழ்ந்து
        சேர்த்துவைத்த தவப்பயனின் சிறப்பே யாகும்.
    எத்திசையும் இவ்வுலகில் எங்கும் காணா
        எழில்மிகுந்த தமிழ்நாட்டின் அமைதி என்றும்
    அத்தகைய மரபினுக்கிங் காக்கம் தந்தே
       அருணகிரி நாதனுடை அருளைத் தேக்கி
    முத்திநெறி காட்டுகின்ற மோன ஞான
       முழுமதியாம் ரமணமகா முனிவன் ஜோதி

    வெற்றியென்றும் வீரமென்றும் வெறிகள் மூட்டி
        வேற்றுமையே மக்களிடை விரியச் செய்து
    கற்றுணர்ந்த பெரியவரைக் கசக்கப் பேசும்
       கசட்டறிவின் தலையெடுப்பைக் காணும் இந்நாள்
    பற்றொழித்த மெய்ஞ்ஞானி இவரே யென்று
        பலகோடி பக்தர்மனம் பரவச் செய்த
    நற்றவசி ரமணரிஷி வாழ்ந்த வாழ்வே
        நம்நாட்டின் பெரும்புகழின் ஜீவ நாடி.
    
   அணுவினுடன் அணுமோதி அழியச் செய்தே
         ஆருயிர்கள் பதைபதைக்க அவதி மூட்டப்
    பணவெறியும் பார்வெறியும் பற்றித் தூண்டும்
         பாதகமே சாதனையாய்ப் படிக்கும் இந்நாள்
    அணுவினுடன் அணுசேர அணைத்து நிற்கும்
        ஆண்டவனின் திருவருளை அறியச் செய்த
    குணமலையாம் ரமணரிஷி மோன வாழ்வே
       கொடுமைகளை நம்மிடையே குறைக்கும் போதம்.

    இன்றிருந்து நாளைக்குள் மறைந்து போகும்
        இச்சிறிய உடலினுக்குள் புகுந்து கொண்டு
    நன்றிருந்து பேசுகின்ற 'நான்யார்?' என்று
       நாளில்ஒரு தரமேனும் நாடிப் பார்த்தால்
    'என்றிருந்தோம்? எங்குவந்தோம்? எதுநாம்?' எல்லாம்
       எளிதாகக் கண்டுகொள்வாய் என்றே சொல்லிக்
    குன்றிருந்த விளக்கேபோல் திசையைக் காட்டும்
       குறிக்கோளாம் ரமணமகா குருவின் வாழ்க்கை.

    இந்திரியச் சுகங்களுக்கே ஓடி யாடி
       இழிவடைந்து துறவடைந்தோர் பலபே ருண்டு
    வந்தகடன் தீர்ப்பதற்கு வழியில் லாமல்
        வைராக்யம் பூண்டவர்கள் வகையும் உண்டு
    கந்தையற்றுத் தரித்திரத்தின் கவலை மாற்றக்
       காவியுடை அணிந்தவரைக் காண்ப துண்டு
    வந்துதித்த நாள்முதலாய்ப் பரத்தை நாடும்
        வைராக்யம் ரமணரிஷி வாழ்வாய் நிற்கும்.

    சக்திகளில் மிகச்சிறந்த சக்தி யாகும்
        துன்பங்கள் சகிப்பதையே சாதித் திட்டான்.
    வித்தைகளில் மிகப்பெரிய வித்தை யாகும்
        விருப்புவெறுப் பில்லாத வேள்வி செய்தான்.
    உத்திகளில் உச்சநிலை உள்ள தாகும்
        உள்ளத்தில் பொய்யாமை உடைய னானான்
    சித்திகண்ட ரமணரைநாம் சிந்தித் திட்டால்
        சித்தசுத்தி பெற்றுமிகச் சிறந்து வாழ்வோம்.
                                            - நாமக்கல் கவிஞர்

ஹிண்டு, ஃப்ரண்ட்லைன் பத்திரிகைகளில் பல ஆண்டுகளாகத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், மெகாலிதிக் கால இடுகாட்டு பதுக்கைகள், கல்வட்டம், ... அணுசக்தி, இஸ்ரோ, விஞ்ஞானம் பற்றி எழுதிவரும் டி. எஸ். சுப்பிரமணியன் அண்மையில் ஹூஸ்டன் வந்திருந்தார். பழமையான வரலாறுகளைக் காட்டும் தொல்லியல் கண்டுபிடிப்புகள், சோழர், பாண்டியர் காலக் கோவில்களின் ஓவியங்கள், மண்டபங்கள் இடிக்கப்படுதல் போன்றமை மீது தம் அனுபவங்களை 2 மணி நேரம் பேசினார். ’தி ஹிண்டு’ வெளியீடாக, அண்மையில் அவர் எழுதிய ரமண மகரிஷி பற்றிய நூலை எனக்குப் பரிசளித்தார். அந்நூலும், பிறவும் ஹிந்து தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது: https://publications.thehindugroup.com/bookstore/Purchase அப்போது, ஓம்சக்தி (கோவை) இதழில் 2004-ல் வந்த நாமக்கல் கவிஞர் பாடலைப் பற்றி அனுப்பினார். முழுமையாக, ஆறு பாடல்களும், புலவர் கன்னியப்பன் பதிப்பில் உள்ளது இணையப் பல்கலை தளத்தில் உள்ளதைத் தந்துள்ளே

எண்சீர் விருத்தங்களான் இயன்ற இந்த ஆறு பாடல்களின் ஒரு சிறப்பு. முருகனின் திருமுறை தந்த அருணகிரிநாதரின் அருள்பெற்ற நற்றவசி (நல் தவசி) என்று போற்றுகிறார் நாமக்கல்லார். சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் ஆறுமுகனுக்கானதால், ஷட்கம் (ஆறு விருத்தங்கள்) ஆக ஆறு பாடல் செய்துள்ளார்.   

“ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும், ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே” அருணைத் திருப்புகழ்.
சிரவை மதிராஜா, சிரவை ஆதீனப் பள்ளி, கோவை: https://www.youtube.com/watch?v=GUWjwhT0O8I
https://www.youtube.com/watch?v=5fnvoCv4L6A
https://www.youtube.com/watch?v=vmq-QN8wAgU
https://www.youtube.com/watch?v=7gPfv_wFdpY
இரமண இருடியின் அடியார் இசைஞானி இசையில்: https://www.youtube.com/watch?v=fi_GK5weUqw&
சினிமாவில், https://www.youtube.com/watch?v=ywo_OMY1mXY
https://www.youtube.com/watch?v=_5hxDKqdVVg
இப்பாடலின் உள்ளர்த்தம் வாசிக்க:  http://kaumaram.com/thiru/nnt1328_u.html

புகழ்பெற்ற ஷட்கம் ஒன்று: https://en.wikipedia.org/wiki/Atma_Shatkam
நா. கணேசன்

" ஸ்ரீ ஸ்கந்த ஷட்கம் “ ⚜

ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்
ஓம் ஸ்ரீகணேஶாய நமஹ:

(1)
ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரெளஞ்சஶைல விமர்தநம் ।
தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸுரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என்தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(2)
தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸந ஸம்ஸ்திதம் ।
ஶக்திபாணிம் ச தேவேஶம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

தாரகாஸுரனை வதம்செய்தவனும், மயில் மீதுஅமர்ந்தவனும், ஞான வேலைக் கையில் தரித்தவனும்,சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(3)
விஶ்வேஶ்வர ப்ரியம் தேவம் விஶ்வேஶ்வர தநூத்பவம் ।
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீபரமேஶ்வரனின் அன்பிற்கு உரியவனும், தேவனும்,  ஸ்ரீவிச்வேஶ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும், மனதைக் கவருகின்றவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(4)
குமாரம் முநிஶார்தூல மாநஸாநந்த கோசரம் ।
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

குமரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும்,வள்ளியின் கணவனும், உலகங்களுக்கு காரணமானவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(5)
ப்ரலய ஸ்திதி கர்தாரம் ஆதிகர்தாரமீஶ்வரம் ।
பக்தப்ரியம் மதோந்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும், முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்புகொண்டவனும், ஆனந்தத்தால் மதம் கொண்டவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(6)
விஶாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம் ।
ஸதாபலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும், ஜடையை தரித்தவனுமான, சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(7)
ஸ்கந்த ஷட்கம் ஸ்தோத்ரமிதம் ய:படேத் ஶ்ருʼணுயாந்நர: ।
வாஞ்சிதாந் லபதேஸத்ய ஸ்சாந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத் ॥

ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்ரீஸ்கந்தனின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள், அவர்கள் கோரிய பொருளை உடன் அடைவார்கள். முடிவில் ஸ்ரீஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பார்கள்.

இதி ஶ்ரீஸ்கந்த ஷட்கம் ஸம்பூர்ணம் ॥

0 comments: