சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani, 21st February 2021

உலகத் தாய்மொழி நாள் ஆகிய பிப்ரவரி 21, 2021 அன்று அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தலைவர், செயலர் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோளின் பேரில், பேரா. செ. வை. சண்முகம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), முனைவர் நா. கணேசன் (ஹூஸ்டன், அமெரிக்கா) எழுதி அனுப்பிய கட்டுரையைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஃபெட்னா பேரவைக் கடிதமும், நாங்கள் அனுப்பிய கட்டுரையும் வாசிக்கலாம். திருவள்ளுவர் திருநாள் எனத் தைத் திங்கள் பிறப்பு (பொங்கல்) அமைந்துவிட்டது. அதற்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல்நாள் (தமிழ் வருடப் பிறப்பு) அமைதற்கான வேண்டுகோள்.
அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை வேண்டுகோள்:



 

உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani

By நா. கணேசன், Published on : 21st February 2021 09:45 PM
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.html
 

நாங்கள் இருவரும் தினமணிக்கு அனுப்பிய கட்டுரை வடிவம்:

தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாளைத் தருக

செ. வை. சண்முகம், நா. கணேசன்

தொல்காப்பியம் தமிழின் முதல் நூல், முதல் இலக்கணம். தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு. 2011 செப்டம்பர் 2-ம் தேதி, தினமணியில் எழுதிய கட்டுரையில் பேரா. தமிழண்ணல், மதுரைப் பல்கலையில் இருந்து ’சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனைத் தொல்காப்பியர் திருநாள்’ என அறிவிக்கலாம் என எழுதியிருந்தார். திருவள்ளுவர் திருநாள், தொடராண்டு என தைப் பொங்கல் அமைந்துவிட்டதையும், அதற்கு இணையாகத் தொல்காப்பியர் திருநாள் வேண்டும் என்பது தமிழறிஞர்களின் வேண்டுகோள். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தில் 6000 தமிழர்கள் ஒன்று கூடி அமெரிக்காவின் பெருநகரத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது, “தமிழின் உயிர் தொல்காப்பியம், தமிழரின் உயிர் திருக்குறள்” என்ற பெருவாசகம் முழங்குகிறது. 33 ஆண்டுகளாய், ஐம்பத்தைந்து அமெரிக்க நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள் கூட்டுப் பேரவை (fetna.org) இயங்குகிறது. பேரவைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, செயலர் சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் திருநாள் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தைப்பூசம், தமிழ்நாடு நாள் என்று புதிய விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் அடிப்படை நூலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு தினம்) வரும்போது, மாணவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தொல்காப்பியம், தமிழ்வழிக் கல்வி, நம் மரபுகள் இவற்றை வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும். திருவள்ளுவர் திருநாள் என பொங்கல் நாள் அமைந்துவிட்டது. அது தமிழ் இலக்கியத்தை உலகத்தார் எல்லோருக்கும் நினைவூட்டும் நாள். திருவள்ளுவர் போன்றோர் இலக்கியம் படைக்க தொல்காப்பியரின் இலக்கணம் அடிப்படை. தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.  திருவள்ளுவருக்குச் சில நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

பொருள் இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் Poetics எனப்படும். மேலை நாடுகளுக்கு எல்லாம் பொருள் இலக்கண நூலை எழுதியவர் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் ஆவார். இந்தியாவிலே முதலில் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதன் திணை, துறைகளும், ஆண்டின் ஆறு பருவங்களும், சூழலியல் உயிரிகளைப் பற்றிய மரபியலும் கொண்ட பொருள் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் தான். எனவே, தொல்காப்பியர் ‘கிழக்கு திசையின் அரிஸ்டாட்டில்’ என்று போற்றப்படுகிறார். திராவிட மொழிகளை ஆராயவும், வடசொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும், வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும், சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. தமிழரின் பெருமைகளில் முக்கியமானது தொல்காப்பியம்.

உலகளாவிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம், குழந்தையர் தினம். அமைதி தினம் என்று குறிப்பிட்ட திங்கள், குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவைகளுக்கு மேலாக அதை ஒட்டி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. அந்த நாட்டின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் நாள் ஆகியவைப் போற்றும் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. தொல்காப்பியம் மொழியியல், இலக்கியவியல் கருத்துகளோடு இயற்பியல் (‘ நிலம், தீ, நீர் வளியொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ( மரபியல் 91); உயிரியல் ( ‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே என்று ஆறு வகை அறிவையும் பட்டியலிட்டதோடு ( மரபியல் 27), அவைகளை உடைய உயிரினங்களையும் விளக்கியுள்ளது ( மரபியல் 28-33) ; தாவிரவியல் (ஓரறிவு உடைய தாவரங்களில் புல், மரம் வேறுபாடு, மரபியல்,87) ; உடலியல் ( உந்தி முதலாக முந்துவளி தோன்றி . என்று எழுத்து பிறப்பை விளக்குவது, பிறப்பியல் 1) ; சமூகவியல் ( உயர்ந்தோன், இழிந்தோன், ஒப்போன் என்று மொழி பயன்பாட்டு அடிப்படையில் விளக்கியதோடு (எச்சவியல். 48) அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று தொழில் அடிப்படையில் விளக்கியது ( மரபியல் 71- 86) என்பவைகளோடு நூலியல் ( செய்யுளியல் 164 - 170) மரபியல் 99-102, 106-109) உரையியல் ( செய்யுளியல் 78, மரபியல் 102-105) கருத்துகள் காணப்படுவதால் தொல்காப்பியம் தமிழின் முதல் அறிவியல் களஞ்சியம் ஆகும்.

தமிழ் மாதப் பெயர்கள் ஐ என்றும், இ என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தவரும் தொல்காப்பியரே ஆவார். உயிர் மயங்கியலில்  (46) இகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது  ’திங்கள்முன்னே  இக்கே சாரியை’  என்பதால் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, மார்கழி,பங்குனி என்பதும்,  சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மூன்றும் அடங்கும். இதே போல,  27 நட்சத்திரப்  பெயர்களின்  கடைசி எழுத்துகளுக்கும் தொல்காப்பியம் நூற்பாக்கள் வழங்குகின்றன. தமிழர்கள் வாழ்வில் சித்திரை 1-ம் நாள் (சகாப்தம்) வருடப் பிறப்பாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. மேட இராசியில் சித்திரை தொடங்குதலைச் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் முதன்முறையாகக் காண்கிறோம். வளர்முகமாக இந்நாள் அமைந்துள்ளது. சித்திரை முதல் பங்குனி ஈறாக எல்லா மாதங்களுக்கும் இலக்கணம் அளித்தவர் தொல்காப்பியரே. எனவே, எந்த நாளையும் விடப் பொருத்தமாகத் தமிழ் வருடப் பிறப்பு நாள் ஆகிய சித்திரை ஒன்று அமையும். அதனை, அரசாணை வெளியிட்டு, தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை 1) அன்று ’தொல்காப்பியர் திருநாள்’ என அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் என அறிவித்திட வேண்டுகிறோம். தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் பல கோடித் தமிழரும் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல செயல் எனப் பாராட்டுவர். தமிழ் கற்கும் குழந்தைகளுக்கும் தொல்காப்பியர் பற்றி நினைவூட்டத் தொல்காப்பியர்  திருநாள் என்றும் நின்று உதவும்.

செ. வை. சண்முகம்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

நா. கணேசன்                                                                                               

ஏரோஸ்பேஸ் விஞ்ஞானி , ஹூஸ்டன், அமெரிக்கா      












2 comments:

cp said...

மிகவும் அர்த்தமுள்ள இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினர் எளிதாக *தொல்காப்பியர்* பற்றி அறிமுகமாகி நம் தமிழ் மொழியின் மேன்மையை முழுமையாக தெரிந்து பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு அற்புதமான கோரிக்கைதான் சித்திரை முதல் நாளை
தொல்காப்பியர் திருநாள் என்று அழைப்பது!
வாழ்த்துக்கள் 💐

muthupalaniappan said...

அருமையான முயற்சி வெற்றி பெற வேண்டுவோம்