யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கை அரசினால் எரிக்கப்பட்ட நாள். மே 31, 1981.
எழுத்தாளர் சுஜாதா இந்தக் கொடுமை பற்றி ஓர் சிறுகதை எழுதினார். அவர்
மறைந்தபோது, தமிழ் நூலகங்களுக்கு ஏற்பட்ட மூன்று போகூழ் நிகழ்வுகளைப்
பற்றி எழுதினேன். 2008-ல் எழுதிய பதிவு:
http://nganesan.blogspot.com/2008/02/writer-sujatha.html
தமிழன்னை அழுத தருணங்கள் சில. சென்னையிலே கலெக்டராயிருந்த பிரான்சிஸ் வைட் எல்லிசு திருவள்ளுவனாரைச் சமணத் துற்வியாகத் தங்கக் காசுகள் வெளியிட்டவர். திராவிட மொழிக் குடும்பம் சமற்கிருத்தினின்று வேறுபட்ட மூலத்தில் தோன்றியது என்று உலகுக்கு அறிவித்தவர் எல்லீசனே. 35 ஆண்டு கழித்து 1856-ல் நூலாக விரித்தவர் கால்டுவெல் பாதிரியார். எல்லிஸ் இராமநாதபுரஞ் சென்றபோது நஞ்சுண்டு இளவயதில் மாண்டார். அடுத்து வந்த வெள்ளை ஆட்சியருக்குத் தமிழின்பால் நாட்டமில்லை. எல்லிஸ் அகாலத்தில் அகன்றதால், புலவர்கள் அவரிடம் ஒப்படைத்த பொக்கிசங்களைக் கலெக்டர் மாளிகை 'பட்லர்' சுடுதண்ணீர் அடுப்பெரிக்கப் பயன்படுத்தினான். அத்தனை ஓலைச்சுவடிகளும் ஒன்றில்லாமல் ஒழிந்தன, சமணக் காவியங்கள் (உ-ம்: வளையாபதி), பௌத்தப் பொத்தகங்கள், .... 1820களில் தீக்கிரையாயின.
ஏராளமான பழந்தமிழ்ப் புலவர்கள் சேதுபதி, பாலவநத்தம் பொன்னுசாமித் தேவர், பெத்தாச்சி வள்ளல் போன்ற புரவலர்களை நாடித் தஙகியிருந்த சோலை மதுரைத் தமிழ்ச் சங்கம். அன்றைய தாழ்நிலையில் தமிழ்த் திறமையைக் கொண்டு சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என்றெல்லாம் சந்தைப்படுத்திக் காசுபார்க்க முடியாது. 20 - சனவரி - 1920ல் மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம் தீப்பற்றி எரிந்தது, எண்ணிறந்த கருவூலங்களைத் (எ-டு: குறளின் பழைய உரைகள் பல) தமிழ் அன்றும் இழந்துபட்டது. பின்னர் சிங்களக் காடையர்கள் 31- மே- 1981ல் கொளுத்திய யாழ்ப்பாணப் பொது நூல்நிலைய இழப்பு. இத் தீயழிப்பு பற்றிச் சுஜாதா 'ஒரு லட்சம் புத்தகங்கள்' என்னும் சிறுகதை எழுதியுள்ளாராம். ~NG, 2008
----------------
ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா சிறுகதை
https://azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post.html
இந்தச் சிறுகதை பற்றிய திறனாய்வு - பேரா. அ. ராமசாமி
https://ramasamywritings.blogspot.com/2009/08/blog-post_5649.html
சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
-மகாகவி
Welcome to delegates of Bharathi International
நீல
வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின்
வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது.
அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி
கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே
குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள்
நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார்.
சாகித்திய அகாதமி சிகரெட்
பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை
மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ்
உலவியது.
"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான
சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப்
பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."
"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"
"பேரறிஞர் அண்ணாங்களா?"
"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"
"அவரு
எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து
இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம்
வேணும்"
டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக "வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்."
"எதுக்கு?" என்றார் டாக்டர்.
"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க."
"உண்மையிலேயே தெரியாதுங்க"
"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்."
"ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது."
"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க"
"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க"
"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...?"
"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது.." டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..
"வள்ளுவர் சொல்லிக்காரு-
`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.
இப்ப யாருங்க பார்ப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு..."
ரிஸப்ஷனில்
அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், "ஸர் யூ ஹேவ் எ
மெஸேஜ்" என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள்.
"செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்" நல்லுசாமிக்குச்
சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம்? புரியவில்லை.
"தாங்க்ஸ்" என்று அவளைப் பார்த்தபோது "யூ ஆர் வெல்கம்" என்று
புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப்
படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை
விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.
கூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி...
"டாக்டர் வணக்கம்"
"ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப?"
"உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க..."
"உத்கல் எங்க இருக்குது?"
பக்கத்தில்
பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ`
என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.
"இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி"
"ஆ.
ஐ ஸீ" என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது.
டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி
முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.
"யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ?"
"நோ... ஐம் பிரிஸைடிங். மத்தியானம்... ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்?"
"எஸ். காண்ட் ஸ்பீக்."
"இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது"
"அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை.."
"டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?"
"சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா?"
"ஆயிட்டுதுன்னுதான்
சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது
எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு
அதிகமா....? என்னுடைய பைல்ஸுக்கு ஒத்துக்கிடலை."
"பாக்கலாங்க.
முதல்ல ஆகட்டும்" செல்வரத்னம்... எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே.
ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற
மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.
மணிமேகலைக்குச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.
மெஸ்ஸனைன்னைத்
தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல்
ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது
உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு
கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது "அவன் சர்வதேசக்
கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி
உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப்
பாடினான் அவனன்றோ" என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள்.
பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர்
என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு
வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது.
திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள்
யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு
அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக்
கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும்
போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால்
மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.
டாக்டர் லேசாக,
`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்...`
என்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.
"வணக்கம் ஐயா"
"வணக்கம். நீங்க"
இருபத்தைந்து
சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன்
வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில்
விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
"கண்டு கன காலம்" என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.
எங்கோ பார்த்திருக்கிறோம்? மையமாக... "வாங்க. எப்ப வந்தீங்க?"
"இஞ்சாலையா?"
இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.
"நீங்கதானா செல்வரத்னம்?"
"ஐயாவுக்கு
நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்." இப்போது முழுவதும்
ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது
டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.
"எங்க வந்தீங்க?"
"சும்மாத்தானாக்கம்.
இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்." மனசுக்குள்
மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும்
"வாங்க வாங்க. உள்ள வாங்க." என்றார்.
அறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.
"விழாவில எண்ட பேச்சும் உண்டு," என்றான்.
"அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து?"
"ஆமாம்."
"ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப.."
இப்போது
அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன்
குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து
வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும்
நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன...
"உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?"
"ஊர்ல யாரும் இல்லிங்க"
"அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?"
"தங்கச்சி இல்லைங்க," என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.
"என்ன சொல்றீங்க?"
"எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க"
"அடப்பாவமே. எப்ப? எப்படி?"
"ஆகஸ்ட் கலகத்திலதாங்க"
"ஐயையோ, எப்படி இறந்து போனாங்க?"
"தெருவில வெச்சு... வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்."
டாக்டர்
மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக்
கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம்
துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,
"ஏதாவது சாப்பிடறீங்களா?"
"கோப்பி" என்றான்.
"இத்தனை
நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம
பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது."
"அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,"
"சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது?"
"நிகழ்ந்ததெல்லாம்
தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம்
பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே
எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?"
"அப்படியா?"
"அருமையான
புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீதங்கள்`
1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது.
ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட
சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங்
களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில
எரிச்சாங்க."
"அடடா"
"அதை நான்
சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா
தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்."
"எங்க சொல்ல விரும்பறீங்க?"
"இன்றைய கூட்டத்திலதான்"
"இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே"
"பாரதி
பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக்
கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா
சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?"
"கட்டாயம். கட்டாயம்"
"அதைத்தாங்க சொல்லப் போறேன்."
"அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே.."
"இந்த
மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும்
வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள்,
அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த
வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்."
டாக்டர் சற்றே கவலையுடன் "குறிப்பா என்ன சொல்லப் போறீங்க?" என்றார்.
"சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்."
"புரியலீங்க"
"ஐயா.
நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற்
காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன
செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு..
ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ?
டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா? டேப்ரிக்கார்டர் கொண்டு வந்திருக்கியா?
தங்கத்
தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை
வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு
போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை.
சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா
இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை
அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு
ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்னு பேரு.
எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும்
லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப்
பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும்,
கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த
நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.
1964
வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு
`இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா
பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க
இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு
இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க.
இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா?"
"எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு..."
"வேற
எங்கங்க சொல்ல முடியும்? அரசியல்வாதிவாதிங்ககிட்டயா? ஏடிஎம்கே-காரங்க
`இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க,
டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு
செஞ்சமே`ங்கறாங்க"
"இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க..."
"சொல்றேங்க.
எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க - நாங்க
அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம்
ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க.
ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக்
கமேன்னாங்க.."
"நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க."
"அந்தப்
புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை
வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர்
மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும்
எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவேம்..
கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை.
எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே
துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க
அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க
உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க.
சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே..
கண் முன்னாலயே. .." அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல்
அழுதான்.
"ரொம்ப பரிதாபங்க"
கொஞ்ச
நேரம் அழுதுவிட்டு "எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க
விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது.
இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது
என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில
இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. "
சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு,
"எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள்
வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து
வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட
வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம்?
ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?"
டாக்டர்
மூக்கைச் சொறிந்து கொண்டார். "இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது
இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு
செய்யுங்க..."
"அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா?
சொந்த சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ – கிளியே
செம்மை மறந்தாரடீ
-ன்னு பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?"
"அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்.."
"எனக்கு
இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச்
சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம்
புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில
எரிக்கப் போறேன்."
"என்ன புத்தகம்?" என்றார் கவலையோடு.
"இந்த மாநாட்டு மலரை"
"எதுக்குங்க அதெல்லாம்...?"
"பாரதி
சொன்னதை எதும் செய்யாம ஏர்கண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக்
சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட
சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை
நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம்
அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும்.
நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்?" அவன் எழுந்து வணங்கி
விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.
டாக்டர் அவன் போன
திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார்.
நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம்,
ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை
எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். "பிப்பி கால்.. டாக்டர்
மணிமேகலை"
பத்து நிமிஷத்தில் கால் வந்தது.
"மணி.. நான்தான்"
"என்ன, விசாரிச்சிங்களா? கிடைச்சிருச்சா?"
"ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்."
"அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க..."
"மணி. ஒரு சின்ன சிக்கல்..."
"என்னது? அருணாசலம் மறுபடி பாயறாரா?"
"அதில்லை
மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு
சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில
சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்."
"பேசட்டுமே. உங்களுக்கென்ன?"
"அதில்லை
மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில
இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்."
"என்ன செய்யப் போறான்?"
"யாழ்ப்பாணத்தில்
லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை
எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு
என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம்
வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து..."
"த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்"
"எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க"
"என்ன. கேக்குதா?"
"கேக்குது,
கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது
ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்."
"எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?"
கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.
"என்ன செய்யச் சொல்றீங்க?"
"எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு.."
"அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க"
"எப்படியாவது.."
"வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்."
"சரி மணிமேகலை"
"கவலைப்படாதீங்க.
பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு.
அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு.."
டெலிபோனை
வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து
காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன? இப்போதே அவள்
விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி
இரண்டு
மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார
முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய
நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு "எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே
எண்ணல் வேண்டும்..." என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள்
வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப்
பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன.
ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும்
வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர்
"தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே.."
என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு
நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன்
இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி
கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.
இப்போது
கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை
காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று
அதிகமாகியது.
"முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்." என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.
"ரெஸ்பெக்டட்
அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன்
டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி
கிரேட் ஸுப்ரமண்ய பாரதி..."
டாக்டர் தன்னை அறியாமல்
பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில்
ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட,
இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ
சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த்
தார்.
பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.
"அடுத்து
பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில்
காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்."
தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.
டாக்டர்
இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது "சிங்களத் தீவினுக்கோர் பாலம்
அமைப்போம்" என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை.."
என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி
பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்
பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.
செல்வரத்தினத்தின்
விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு
திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும்
வரவில்லை.
*****
பாரதி
நூற்றாண்டு நினைவுத் தொகுப்பாக, பாரதி பதிப்பக வெளியீட்டில் சிறந்த
எழுத்தாளர்கள் எழுதிய "பாரதி சிறுகதைகள்" முதற்பதிப்பில் (1982) இருந்து.