நவ்வி மரை (= Chinkara antelope)

நவ்வி மரை (Chinkara Antelope) – சங்க இலக்கியத்தில்
Abstract: 'navvi', the name of the Chinkara anteope in Tamil Sangam literature is analyzed. 'marai' is the name for antelopes in Tamil, as ‘tiruku-marai’ is spiraling screw in Tamil. The defining feature of “marai” (= antelope) is that their horns are screwed in to their skulls always. On the other hand, for deer, the branching antlers 'kavaik kōḍu' are shed and then the antlers regrow each year. Tolkāppiyam sūtra-s relevant to the deer and antelope species are 
discussed.

மரை (antelope):

கலை - கருமை நிறத்தால் வரும் பெயர். Kalai, due to black color, is applied both for antelopes (Blackbucks) as well as deer (Sambur). கலைமானில் இருவகை: (i) மரை (=antelope) இனத்தில் இரலைக்கு வரும். மரை எனும் பெயர் கொம்பு மண்டையோட்டில் நிரந்தரமாய் இருப்பதால். ‘அவனுக்கு மரை கழன்று போனது’, மரையாணி (=திருகாணி), மரையாடு (=கேழையாடு, muntjac) (ii) மான் (deer) இனத்தில் கடமானுக்கு வரும். கடமான் கலை நிறத்தில் (=கலங்கிய கரு நிறம்). சங்க இலக்கியத்தில் கலை என்ற சொல்லை ஆராய்ந்த தெளிவு இஃது. 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). இரலை (Cf. இருள்) = Blackbuck [Ref. 1]. புல்வாய் = மரை (antelopes) + கலை (deer, esp. Sambur = kalaimān); பொதுப்பெயர். புல்வாய் இப்போது நாம் மான் என்று உபயோகிக்கிறோமே, அப்பொருளில் வழங்கிய பழம்பெயர்: pulvāy, an all encompassing term for deer and antelopes (Tolkāppiyar says so.)

தொல்திராவிடர்கள் வைத்த கலைச்சொல்: மரை = antelope. மரையா/மரையான் (lit. “cow-like antelope”, Nilgai), கன்னடத்தில் மராவு, மரவி என்கிறார்கள். ஆக, antelope என்பதற்கு மிகப்பழைய த்ராவிட வார்த்தை ‘மரை’ என்பது உறுதி.

For representative, typical species in zoology, we see the scientific names repeated twice: Axis Axis deer (puḷḷi mān), Gazella Gazella (African gazelle) etc.,
https://en.wikipedia.org/wiki/List_of_tautonyms#Mammals
அதுபோன்ற நூற்பா மேற்சொன்ன தொல்காப்பிய நூற்பா ஆகும். தமிழகத்தில் உள்ள Antelopes-ல் சிறந்த இரலை-யும், Deer-ல் சிறந்த கடமானையும் குறித்து, புல்வாய் என்பது இரண்டையும் சேர்த்த பொதுப்பெயருள் அடங்கும் என்கிறார்: 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). பல இடங்களில் மனிதன் என்றால் பெண்ணையும் சேர்த்துத்தான். அதுபோன்ற சூத்திரம். Mankind என்றால் பெண்ணும் உளப்படத் தானே.

பின்னர், இருபாலுக்கும் பொதுவான பெயர் கொண்ட நவ்வி (chinkara), உழை (spotted deer) இரண்டுமே புல்வாய் என்பதாகவும் ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். அதாவது, இங்கே முன்னர் சொன்ன ராஜ-மரை (representative antelope) ஆகிய இரலை, ராஜ-மான் (representative deer) ஆகிய கடமான் இரண்டையும் விட்டுவிட்டு நவ்வி மரை + புள்ளிமான் இரண்டும் புல்வாய் என்கிறார். இது பேராசிரியர் உரையால் தெரிகிறது.
”தொல்காப்பிய மரபியலில்,
“யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே”

என்று வரும் சூத்திரத்திற்கு (தொல்-மரபு-12) உரை கூறும் பேராசிரியர் ’நவ்வியும் உழையும் புல்வாயும் அடங்குமன்றே. அவற்றை மூன்றாக ஓதியதேன்?’ என்று தாமே கேள்வி கேட்டு விடை கூறுவது போலப் புல்வாயில் மடனுடைய நவ்வி யெனவும், இடைநிகரன உழை எனவும் கொள்க என்று எழுதுகிறார்.” (பி. எல். சாமி).

இரண்டு சூத்திரங்களாலும் புல்வாய் என்பது பொதுப்பெயர். சில இடங்களில் சிறப்புப் பெயராக இரலைக்கும் வரும் என அறியலாகிறது. கலை என்பது கருமை நிறம்பற்றின பெயர். இது கடமானுக்கும், இரலைக்கும் பெயராக சங்க இலக்கியத்திலும் பின்னரும் வரும். மரை (Antelope) நிலையான கொம்புகள் பொருந்தியவை. ஆனால், deer உள்துளை உள்ள "அறுகோடு" (deer's antlers) ஆண்டுதோறும் விழுந்து முளைப்பவை, கவைகள் (branches) கொண்டவை. கலைமான் என்னும் கடமானுக்கும், புள்ளி மானுக்கும் உள்ள கவைக்கொம்பு அறுகோடு (வினைத்தொகை) என்கிறது சங்க இலக்கியம். கலை என்னும் கடமாவின் கவைக்கோடு போல புள்ளிமானுக்கும் உண்டு. சங்க நூல்களில் கலைக்கு முன்னே புகர் (அ) புள்ளி எனக் குறிப்பிட்டிருந்தால் அந்த மான் Axis deer (புள்ளிமான்). புள்ளிமா கருமை இல்லையே, ஏன் கலை என்றனர் என்ற கேள்வி எழலாம்: எண்ணெய் (எள் +நெய்) மற்றவற்றிற்கும் எண்ணெய் (Oil) ஆவது போல. கலை கருமையால் இரலைக்கும், கடமாவிற்கும் முதலில் உருவாகி, புள்ளிக்கலை என்று பொருள் விரிந்தது. அராகம் என்று மனத்தைப் பண்படுத்தும் பண் சிவப்பு நிறத்தால் ஏற்பட்டு, மற்ற எல்லா நிறங்களுக்கான பண்களுக்கு பொதுப்பெயர் ஆக இசையில் ராகம் என்று ஆனாற்போல எனக் கொள்க (Cf. Rāgamālā paintings).

உழை என்பது புள்ளிமானுக்குப் பெயர். உழுகிற உழவுக் காலத்தில் (before sunrise, until sun gets hot) மேயும் புல்வாய் இது. தொல்லியல் அகழாய்வுகளில் மான் கொம்புகள் கலப்பையின் கொழுவாகப் பயன்பட்டமை கிடைக்கிறது. கலூஉழ் என்பது கலூஷ (Th. Burrow), திருவிழாவை திருவிஷா எனல், சூரியன் ஒரு நட்சத்திரத்தில்/ராசியில் வீழ்வது விழு (>> விஷு, ஸம்ஸ்கிருதம், மலையாளம்), இதனால் விழவு/விழா எனப்பெயர்கள். இவற்றை எல்லாம் நோக்குங்கால், உழை “மான் மேயுங் காலம், உழவன் உழுங் காலம்” என்பது உஷத் காலம் என ஸம்ஸ்கிருதம். இக் கருதுகோளை உறுதிப் படுத்த ஆப்கானி, பாரசீக மொழிகளில் உஷத் காலம் இல்லையா எனப் பார்க்கணும்.

நவ்வி மரை (Chinkara antelope) ~ Indian Gazelle:
தும்மு செம்மரை – Chinkara ‘the sneezer’ :: Ballerina of the Desert

நாவு/நவ்வு என்பதன் பொருள் அங்குமிங்கும் அசைதல். நாவு- < நேமி/நேம்பு- (Cf. நேமிநாத தீர்த்தங்கரர்) இதில் இருந்து நவ்வி என்ற சிறிய (நுண்ணிய), மடம்பொருந்திய, எழில் மரைக்கான பெயர் தோன்றியிராது. அப்படிப் பார்த்தால் நவ்வி என்பது எல்லா மானுக்கும் பொருந்தும் பொதுச்சொல் ஆகிவிடும். சங்க இலக்கியம் தெளிவாக நவ்வி/நௌவி என்றால் Chinkara மரைக்கே பொருந்தும் எனக் காட்டுகிறது.

கோவை/கொவ்வை கனி, மோது-/மொத்து- ... போல, நூவு/நுவ்வு என்றால் எள், தினை எனும் நுண்கூலங்கள் என அறிவோம். எனவே தான் மரையா/ன் (= Nilgai, மாடு போன்றது), இரலை (Blackbuck, Ref. 1) போன்ற மரைகளை விட, அளவில் சிறுத்ததும், அழகுடையதுமான மரைக்கு நுவ்வி என்ற பெயர் ஏற்பட்டு, சங்க காலத்தில் நவ்வி என மாறிற்று என்ற கருதுகோள் வலுப்பெறுகிறது. விவசாயம், மக்கட்டொகை பெருக்கத்தால், நுவ்வி/நவ்வி மரையினம் தென்னிந்தியாவில் அழிந்துவிட்டது. யா என்னும் (ராஜ)சாலம், அகில் போன்ற மரங்கள் இன்று தென்னிந்தியாவில் இல்லை. அதுபோன்றதுதான். முதலைகளில் மூன்று இனங்கள் என்பார் பேராசிரியர் உரையில்: “மூன்று சாதிகள்”. இன்று அவை தமிழ்நாட்டில் இல்லை: முதலை, இடங்கர், கராம். மகர இனங்களில் விடங்கர்/இடங்கர் (Gharial) இல்லை, கராம் “உவர்நீர் முதலை” கடற்கரையில் இல்லை. அதுபோல் தான் நுவ்வி/நவ்வி மரையும் அருகிற்று. புல்லி > பல்லி போல, நுவ்வி > நவ்வி.

Ref. 1: இரலை ரோஹிணீ நக்ஷத்ரத்தின் சின்னமாக 4700 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய வானியலில் இருந்தமை பற்றி ஆராய்ந்து அறிவித்துள்ளேன். This Blackbuck as the mount/symbol of Koṟṟavai (< kol-), later Durgā, has an amazing continuity in Tamil country: http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

சங்க நூல்களிலும், பின்னரும் நவ்வி மரை:
நவ்வி (= Chinkara) நளினம் மிக்க மரை இனம் இது. வட நாட்டில் மெலிசாகத் தும்முவது என்ற பொருளில், சிங்காரா எனப் பெயர். இக்கட்டுரையில் உள்ள காணொளியில் நவ்வி மரை தும்மக் காணலாம். நவ்வி/நௌவி மரையைத் தும்முமரை, தும்மு செம்மரை என்றலும் பொருத்தமே. கருமரை என்பது இரலை. கருமரை பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணத்தில் ஆளப்பெற்ற பழைய பெயர். செம்மரை என்பது நவ்வி.
https://en.wikipedia.org/wiki/Chinkara இந்த மரையைச் “சிறுதலை நவ்வி” என்றார் சங்கப்புலவர். “நாறு உயிர் நவ்வி” என்பதும் சங்கம். நாறு உயிர் = தும்முவது போல மூச்சு விடல். இங்கே, உயிர் = மூச்சு. எதற்கும் அஞ்சித் தாவும். இந்த நவ்வி மரையைப் பெண்களுக்கு உவமை கூறுவர்.

கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக, வரும் பாடல் முரஞ்சியூர் முடி நாகராயர் பாடல். புறநானூற்றின் மிகப் பழைய பாடல்கள் முதலில் கோக்கப்பட்டுள்ளன. எனவே, புறம் முதலாம் பாடலில் பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த உதியன் சேரலாதனைப் போற்றும் பாடல். இதில் தான் முதன் முதலாக, அச்சமும், மடப்பமும் உடைய நவ்வி மரை பற்றிச் சங்க இலக்கியங்களில் பேசப்படுகிறது. நான்மறை அந்தணர்கள் வேள்விகளை இமயமலைச் சாரலில் வேட்கின்றனர். குளிர் காய்ந்து நவ்வி மரையின் பிணை (பெண்மான்) துஞ்சுகின்றனவாம். மரையான் (Nilgai), இரலை (Blackbuck), மரையாடு (கேழையாடு, Muntjac), நாற்கோட்டு மரை (Chousinga), சருகுமான் (mouse deer), கலை (Sambur), புள்ளிக்கலை (Spotted deer) இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, துடுக்குற்று திடுமென்று பாய்ந்து தாவி ஓடிவிடும் நவ்வி மரைகளைச் (Chinkara antelope) முடி நாகராயர் பாடியிருப்பது பாடலின் சிறப்புகளில் ஒன்று. பாரத உபகண்டத்தின் தம்பங்களாக விளங்கும் வட, தென் குலபருவதங்களைக் குறிக்கும் பாடலில் நௌவி இடம்பெறுதல் அருமை. சேர மன்னன் ஆகட்டும், வடக்கே அரைசன் ஆகட்டும் அறவழிப்பட்ட ஆட்சியில் நவ்வியும் அச்சமின்றி இருந்தது என்பது குறிப்பு.
”சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!”
- புறம் 2 (சோறு அளித்த சேரன், கிவாஜ).

மரை இனங்களில், மடப்பத்தை உடையதும், எதையும் கண்டவுடன் துடுக்குற்று அஞ்சுவதும், பெரிய கண்களை உடையதும் ஆகியது நவ்வி மரை ஆகும். சிறு கூட்டங்களாக மேயும், https://youtu.be/ew-lxbMuoK0 . அதன் தும்மும் குணாதிசயத்தை, “நாறு உயிர் நவ்வி” என்று அகநானூறு 7-ம் பாட்டில் காண்கிறோம். உயிர் என்பது மூச்சுக்காற்று. தும்மும் ஓசை ’நாறு உயிர்’. நவ்வி - அழகுக்குத் தமிழில் ஓர் பெயர் (திவாகர நிகண்டு).
" ... இன்சிலை
ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி
வலைகாண் பிணையில் போகி” அகம் 7

ஒரு காட்சியைக் கண்டதும், துடுக்குற்று, திடுமெனக் குதித்துக் காற்றில் பாய்ந்து வேற்றிடத்துக்குச் செல்லும்:
“கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி
அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப்
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென” - அகம் 39

“செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த
கவ்வை நாற்றின் காரிருள் ஓரிலை
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும்” - குறுந்தொகை

”பெருங்கவின் பெற்ற சிறுதலை நவ்வி
மடக்கண் பிணையொடு மறுகுவன உகளச்” - மதுரைக் காஞ்சி
உகளுதல் - Sprint of the Indian gazelle (Chinkara).

”முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி” - நற்றிணை 124
நோன்றல் = தாங்குதல். ஒரு விநாடியே மண்ணில் பதிந்து தாவும் வலிமை படைத்த கால்களை “நோன் குளம்பு” என்று விவரிக்கிறார். குதிரைப் பந்தயங்களில் ஓடும் குதிரையின் கால்கள், “நோன்கால் வண்பரி”. இதனை அகநானூற்றின் கடைசிப்பாடல் பேசுகிறது:

   பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
   மதியுடைய வலவன் ஏவலின் இகுதுறைப்
   புனல்பாய்ந் தன்ன வாமான் திண்தேர்க்
   கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரி அகம் 400

The scientific name of the chinkara is "gazelle bennettii". There are at least 4 subspecies, one subspecies has the longest horn among them. E. T. Bennett was secretary, London Zoological Society: https://en.wikipedia.org/wiki/Edward_Turner_Bennett

இந்தச் செம்மரைகளில் இருபாலுக்கும் வளையங்கள் கொண்ட கொம்புகள் உண்டு. நௌவி என்ற பாடபேதமும் நவ்வி என்ற இந்த மரையின் பேருக்கு உண்டு (உ-ம்: மதுரைக்காஞ்சி). தொல்காப்பிய நூற்பா உதாஹரணமாக, நௌவி எனப் பழைய உரைகளில் காட்டுவர். http://www.tamilvu.org/slet/l0121/l0121oin.jsp?st=1722&ed=1722&sno=61
"61. கதந பமவெனு மாவைந் தெழுத்து
மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே.
[..]
நந்து நாரை நிலம் நீலம் நுகம் நூல் நெய்தல் நேமி நைவளம் நொச்சி நோக்கம் நௌவி எனவும், படை பால் பிடி பீடு புகழ் பூமி பெடை பேடை பைதல் பொன் போது பௌவம் எனவும், மடி மாலை மிடறு மீளி முகம் மூப்பு மெலிவு மேனி மையல் மொழி மோத்தை மௌவல் எனவும் வரும்."

நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
கவ்வை கூர்தரச் சானகியாம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்தடைந்த
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை! - கவிச்சக்கிரவர்த்தி கம்பர்

திருக்கோவையாரில், நவ்வி எனும் மரையை மிக அழகாக வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர். அவர் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனின் ஸர்ஜன் ஜெனெரல் என்னும் மந்திரியாக இருந்தவர். எனவே, நவ்விக்கும், மற்ற மான்களுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக உணர்த்துகிறார்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=82120&padhi=12&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
”எழில் தொண்டைச் செவ்வாய் நவ்வி”
தொண்டைக்காய் போலும் எழிலையுடைய செவ்விய வாயினையுமுடைய நவ்வி. செம்மரையின் முகத்தில் தொண்டைக் காய்கள்போல வரிகள் உள்ளன என உவமிக்கிறார் மணிமொழியார். இது நவ்வி மரை என்றால் Chinkara என உறுதிப்படுத்த நல்ல சான்று. இந்தியாவின் மற்ற மரையினங்களாகிய மரையான், இரலை, மரையாடு (Muntjac) இவற்றுக்கு முகவாயில் தொண்டைக்காய் போன்ற வரிகள் இல்லை. https://growerjim.blogspot.com/2014/08/tindora-coccinia-grandis.html

இலங்கையில், வவுனியா பகுதியில் நவ்வி என்ற நெய்தல் பிரதேசம் இருக்கிறது. இது நவ்வி மரை (Chinkara antelope) காரணமாக வைத்த இடப்பெயர்.

நவ்வி (< நுவ்வி) :: பெயர் ஆய்வு
-------------------------------------

நூ-/நோ- மெலிதலைக் குறிப்பது. நோ(ய்)தல்/நோலுதல்/நோற்றல் நோன்பு (பட்டினி-விரதம்) . நூ - எள்; நூநெய் நூனெ என்றால் எண்ணெய். எள் - நுண்ணிய விதை எனவே, நூ(வு) என்ற பெயர். நுவணை = எள்ளுண்டை, இடித்த மாவு. நுண்ணியது என்ற பொருளில், ”நூஞாயம் பேசறாள்” என்பது நுணையாடல். -ல் விகுதி ஏற்று, நூல் ‘thread' என்ற சொல் தோன்றுகிறது. சிலந்தி வாயில் நூல் பிறக்கும். நூல்- என்றாலே முன்பு குருமுகமாகக் கேட்டுப் பயில்வதுதான். குரு தன் நூலை நுவல்வார். நூல்- > நுவல்-தல்.

நூ = நுண்ணிய என்ற வேர். உ-ம்: நூ- : நூல். நூ = மிகச்சிறு கூலம். நூல் = எள் எனவுமுண்டு. நூலை/நோலை = எள்ளுருண்டை
“புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்கெழுந்தாடி” - (சிலம்பு: 5: 68 - 70)
நோலை < நூலை = எள்ளுருண்டை.

நோய்தல்.- பெருமாள் முருகனின் மேத் திங்கள், 2000-ஆம் ஆண்டு பிரசுரமான “கொங்கு வட்டாரரச் சொல்லகராதியில்” உள்ள வினைச்சொல் இதனைச் சற்று ஆராய்வோம். பக். 110, “நோய்(தல்) - வி. உராய்தல். ‘எதுக்கு இப்படி மேல வந்து நோயற?’ கொங்குநாட்டுப்புறத்தில் இந்த வினைச்சொல்லை சாதாரணமாகக் கேட்கலாம். இன்னொரு உதாரணம்: “கழுதை குட்டிச்செவுத்தில நோஞ்சிட்டிருக்கு”. நோய்தல்/நோஞ்சுதல் = உரைசுதல்/உராய்தல்/உரோசுதல் என்னும் பொருளில் வழங்கும் தொன்மையான வினைச்சொல். நோப்பு- உரசுதல் - ரோஷம், கோபம், சினம்.

கொங்கு வட்டார நாவல்கள், சிறுகதைகளை ஆராயும் ஆய்வேட்டில், சில சொற்கள் உள்ளன. நோப்பாளம் = ரோஷம்.
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/106531/13/13_appendix%201.pdf
MTL: நோப்பாளம் nōppāḷam , n. < நோ-. Irritation, anger, offence; கோபம். ’உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்’.
பெருமாள் முருகன் அகராதி: நோப்பாளம் - பெ. பிணக்கு. ‘என்ன சொல்லீட்டன், நோப்பாளம் வந்திருச்சு.’ நொய்யல், நொய்மணல் கொண்ட கொங்கு நாட்டின் ஆறு.

நூப்பு nūppu , n. perh. நூக்கு-. Reduction, subduing, abatement; தணிப்பு. (யாழ். அக.)
நூதல் nūtal, n. cf. நுது-. Being extinguished; அவிகை. (யாழ். அக)
நூபுரம் ‘சிலம்பு, பாதசரம்’:
நூபுரம் nūpuram, n. < nūpura. 1. Anklets formed of little bells; பாதகிண்கிணி. (திவா.) 2. Tinkling anklets; சிலம்பு. (சூடா.) ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா. நகர. 56).
நூ- என்னும் தாதுவுக்கு தாழ்ந்த, மெல்லிதான என்ற பொருளை, ஒலிக்கு ஏற்றி “நூபுரம்” என்ற சொல் தோன்றியுள்ளது. நூப்புரம்/நூபுரம்: தூம்பு தூபு என்றே சோழர் கல்வெட்டுகளில் காண்கிறோம்.


சிறிய/நுண்ணிய தலை, வாய் உடைய மரை, நூவு- > நுவ்வி எனப் பெயர் அமைந்திருக்கும். புல்லி > பல்லி ஆவது போல, நுவ்வி > நவ்வி ஆகிறது. இதற்கோர் காரணம் உண்டு. நுவ்வை = நும் + அவ்வை (தமக்கை) என்ற உறவுப்பெயர் வழங்கிய காலம்.
  ”நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
   அன்னை கூறினள் புன்னையது சிறப்பே”
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai172.html#.YMZmukxOnVI
நுவ்வை, நுவ்வி இரண்டும் பொருள்மயக்கம் உண்டாக்கும். எனவே, அப்போதே அருகி வந்த நுவ்வி மரையை, நவ்வி மரை என அழைக்கலாயினர் எனக் கருதவேண்டி உள்ளது.

மான் வகைகள்:

கலைமா (black buck), மரைமா (antelope), கடமா (sambur), உழை (axis deer)These are all the four major mān jāti-s of India's forests.

  தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமா
  வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைமா
  நீளுடல்விடு சரமுருவிட நிமிர்வனமிடை கடமா
  மீளிகொள்கணை படுமுடலெழ விழுவனபல உழையே. (சேக்கிழார்)

இப்பாடல் சுந்தரரின் பின்வரும் தேவாரத்தில் ஒரு பாடலின் முதலடியில் முதற்சீர் மாவும் எனத் தொடங்கும் எனத் தெளிவிக்கிறது.
சுந்தரர் தேவாரம்:
----------------------

தமிழிலே மூன்று அன்றில் பறவைச் சாதிகளுக்கும் உள்ள பெயரை விளக்கினேன்:
https://groups.google.com/g/houstontamil/c/_4FfKRzq0ww/m/Lrp1CwW-AQAJ
அப்போது (WA group), சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் இரண்டைக் குறிப்பிட்டேன்,

சுந்தரர்: (clearly, distinction between deer "mā/mān" vs. antelopes "marai" is made)

மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே

மற்ற அடிகளின் எதுகையை நோக்கினால், முதல் அடி “மாவும்” எனத் தொடங்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆ/ஆன், மா/மான் என்பதாக மாவும் = மான்களும் என்ற பொருளில் இருந்த பாட்டில், காலப்போக்கில்
ஏடுபெயர்த்தோர் மாவும் என்பதை “மானும்” எனத் திருத்திவிட்டார்கள். கவரிமா (குறள்) கவரிமான் ஆகிறது. அது போல.

'கடமா தொலைச்சிய கானுறை வேங்கை' - சங்கம். கடமா = கடமான், Sambur deer.

கீழ்வரும் அதே பதிகப் பாடலில் “மானும் மரை இனமும்” வருகிறது. எதுகை சரியாக இருக்கிறது. ஆனால், மேலே கொடுத்துள்ள பாடல் "மாவும் மரை இனமும்" எனத் தொடங்க வேண்டும். மாவும் = மானும் எனப் பொருள். எனவே, மாவும் என்பதை மானும் என்று திருத்தத் தேவையே இல்லை.

ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும்
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம்
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே

நவ்வி மரை தென்னிந்தியாவில் கி.பி. 1000-க்குப் பின்னர் அழிந்துபோனது. எனவே, நவ்வி என்ற பழைய விலங்கினப் பெயர் மான் என்ற பொதுப்பொருள் ஏற்றது. எ-டு: புள்ளி நவ்வி (திருப்புகழ்)

References:
(2) பி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1970 (அதிகாரம்: மான்கள்).

(3)Antelopes, Global Survey and Regional Action Plans. Part 4: North Africa, the Middle East and Asia.
https://portals.iucn.org/library/efiles/documents/2001-024.pdf

(4) Dookia, S. and Goyal, S. P. (2007). Chinkara or Indian Gazelle. In “Ungulates of Peninsular India” (Eds. K. Sankar and S. P. Goyal), ENVIS Bulletin, Wildlife Institute of India. 103-114 pp.

(5) Chinkara: The Dainty Desert Ballerina
https://sustain.round.glass/species/chinkara-thar-desert/

(6) Indian Gazelle Chinkara in Dhawa Doli Wildlife Sanctuary
https://youtu.be/H5gRDpEeZ1g

(7) Genetic diversity of the Chinkara, of the Indian gazelle
https://slideplayer.com/slide/10604505/

(8) https://www.naturepl.com/stock-photo-bishnoi-holy-man-or-priest-feeding-chinkara-indian-gazelle-gazella-image01209514.html
https://www.naturepl.com/stock-photo/the-bishnoi-woman-breastfeeding-an-orphaned-indian-gazelle--chinkara-fawn/search/detail-0_01604001.html
https://www.naturepl.com/stock-photo/the-bishnoi-woman-holding-and-kissing-indian-gazelle-or-chinkara-fawn-(gazella/search/detail-0_01604003.html

 

0 comments: