எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோயம்புத்தூர் மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராமகிருஷ்ணன் சுங்கம் கலால் ஆணையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆணையராக ஓய்வு பெற்றார். ஹைதராபாத்தில் வசித்து வந்த எஸ்விஆர் பிப்ரவரி 9, 2011-ல் மறைந்தார். தமிழின் முன்னணி இதழ்களில் கடந்த கால இந்தியாவைச் சித்தரிக்கும் விதமாக இவர் எழுதிய கட்டுரைகளை ‘அது அந்த காலம்’, ‘வைஸ்ராயின் கடைசி நாட்கள்’ என்னும் புத்தகங்களில் படித்து இன்புறலாம். கொங்குநாட்டின் 1850 - 1950 வாழ்வை நுட்பமாக அறிந்தவர், தனக்கு தெரிந்தவைகளைச் சுவைக்கும் வகையில் எழுதத் தெரிந்தவர். தனக்கு அழகணிகள் சூட்டிய கொங்கு மண்ணின் மைந்தரைத் தமிழன்னை தன்னருகே அழைத்துக்கொண்டாள்.
எஸ்விஆர் எழுதிய 3 கட்டுரைகளை வாசிக்கத் தருகிறேன். அவரது எழுத்துக்களைத் தொகுப்பது அவருக்குச் செய்யும் நல்லஞ்சலி!
நா. கணேசன்
சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் சப்ளை
http://desikan.com/blog/?p=356
எஸ்விஆர், 2006
பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் ‘பட்டக்காரர் சப்ளை’.
பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வந்திருக்கவில்லை(#). கவுண்டர் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகள் சிலர் பட்டக்காரர் வீட்டிலேயே தங்கி ஹைஸ்கூலில் படித்தார்கள்.
பட்டக்காரரின் ஒரே மகன் தாராபுரம் ஹைஸ்கூலில் படித்துவந்தவன், சில ஆண்டுகளுக்கு முன் (1930களில்) தவறிவிட்டான். இது நடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும், பட்டக்காரர் அந்தப் பையனின் ஞாபகர்த்தமாக அவனுடைய பிறந்த நாளில் பள்ளி மாணவ, மாணவியர்க்குத் தின்பண்டங்கள் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்று காலையில் பியூன் வெங்கட்டப்பன் எல்லா வகுப்புகளுக்கும் ஒரு சர்குலர் கொண்டு வருவான். பிற்பகல் இரண்டாவது பீரியடில் பட்டக்காரர் சப்ளை இருக்கும் என்றும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் இருக்காது என்றும் அதில் கண்டிருக்கும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பீரியடு(2.15 லிருந்து 3 மணி) சுமாராக நடக்கும். அப்போதே பையன்களின் மனதெல்லாம் எதிர்பார்ப்பில் லயித்து இருக்கும்.
இரண்டாவது பீரியடு தொடங்கினவுடனே சாரதா விலாஸ் ஹோட்டல் ஆட்கள் கூடை கூடையாக இனிப்புகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு கிளாஸாக வருவார்கள். அடுத்த வகுப்பிற்கு அவர்கள் வந்தது தெரிந்தவுடனே எங்கள் கிளாஸிலும் கசமுசவென்று சத்தம் தொடங்கிவிடும். இந்த ஒருநாள், வாத்தியார்களும் அதற்க்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தது கூடைகள் எங்கள் வகுப்புக்கும் வந்து விடும். ஆசிரியருக்கு முன்பக்கத்தில் கூடைகளை வைத்துக்கொண்டு ஹோட்டல்காரர்கள் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர்பாகு, தவிர பக்கோடா, காராபூந்தி இத்தனையும் விநியோகிப்பார்கள். அவற்றை வாங்கிக்கொண்டு குழந்தைகள் தலை கால் புரியாத சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடுவார்கள். வாத்தியார்களுக்கும் உண்டென்பதால் அவர்களுக்கும் சந்தோஷமே. பட்டக்காரர் இருந்தவரை வருடா வருடம் இதை சிரத்தையுடன் செவ்வனே செய்து நூற்றுக்கணக்கான பிஞ்சு உள்ளங்களில் உவகையை வரவழைத்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக (1952 ல் என்று நினைக்கிறேன்) ,பட்டக்காரர் ஒரு முறை பழனி மலைக்குப் போய் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கையில் அவருடைய எதிரிகள் யாரோ திடீரென்று அவரை மறித்துக் கத்தியால் வெட்டி விட்டார்கள். அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். அத்துடன் ‘பட்டக்காரர் சப்ளை’யும் நின்று போனது.
------------
# வங்காளத்தில் இதனாலேயே கல்கத்தா பூதாகரமாக வளர, மீதி வங்காளம் முழுவதிலும் கோவை, மதுரை போன்ற பட்டணங்கள் வளரவில்லை
-------------------------------------------------------------
தாராபுரம் to கோவை, ஒரு சின்ன ஆப்பரேஷன் (1942)
‘The peacock didn't dance, lion moaned'
S. V. Ramakrishnan, 3 Jun 2009, New Indian express
I had just turned six the previous day. Some relatives had come from Patnam (that is how Madras was referred to in those days) and I was busy playing with their girl Saroja. She suggested that we play ‘Lion and lamb'. It was settled that I would play the lion and Saroja the lamb. Two cots lying near each other in the upstairs hall would be the forest.
The lion let out a terrific roar from one cot and the lamb, looking properly frightened, retreated to a corner on the other. With another ‘simha garjana' the lion now leapt to reach its prey, but lo, fell in between the two cots. Its roar now turned a piteous wail, so loud that everybody downstairs heard it and rushed to our play spot. Initially I was surprised at the unusual attention, as I really did not feel that much of pain. All the same, to keep up my self-respect, I cried louder still. Meantime, I heard my father's remark "Oh. It looks like a fracture". Some thing really serious, I thought. With a sense of thrill, I awaited further happenings. I was not to be disappointed.
As I playfully watched, my anxious parents rushed me to the ‘Periyaspattiri' (Big Hospital, as our town government hospital was respectfully called). The doctor examined me in detail and said that my elbow was fractured and as they had no x-ray, we had to go to Coimbatore. A taxi was sent for. Soon an ancient model car with canvas top arrived (these taxis were around till the mid Sixties, but mainly for marriage processions). But the driver reported a problem. He did not have enough petrol for the journey. He took some advance to procure it in black market. That was wartime, when petrol was severely rationed. If not all petrol, he could mix some kerosene (also rationed).
At Coimbatore, Ramarao and Lakshmanrao, two doctor brothers, had a hospital, famous for ‘fixing broken bones'. Father having telegraphed, they were readily waiting when we reached. Putting me on the operation table, Ramarao, whose kind face I still remember, asked me "Do you know counting?" I proudly declared, "Yes".
"Up to how much?" he posed a trickier question. I boldly claimed ‘hundred', but was immediately worried whether I could manage so much. As it happens, most of the time in my life, my diffidence proved unnecessary. As he lightly pressed an exotically smelling pad on my nose, I had counted only nineteen, when the job was done. Yes, I was now unconscious inhaling chloroform, like Queen Victoria a century earlier. When I woke up, my elbow was all in plaster.
We stayed on at Coimbatore reporting to doctor every two days. My uncle's house with its spacious compound and mango trees, his grandchildren of my age group and a peacock around to boot, was great fun to stay. My only disappointment was that this peacock never danced; mother told me that female peacocks did not learn dancing. All good things have to come to an end and after sometime the doctor told my mother that the fracture had healed and we could go home. But he advised that I carry some weight and walk fifteen minutes everyday to strengthen my elbow.
Mother would put some sand in a tiffin-box for me to carry up and down. I first used my fractured (left) hand but when I found it easier to carry on the other hand, I simply shifted it rightward. Only when my mother discovered it and laughed, it struck me that exercising with the good hand was useless, though comfortable.
------------------------------
தெலுங்கானா பிரச்சினை நடந்தவையும் நடக்கக் கூடியவையும்
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
சில எரிமலைகள் பல ஆண்டுகள் மௌனமாக இருந்துவிட்டு திடீரெனக் குமுறத் தொடங்கும். எப்போது வேண்டுமானால் லாவாவைக்கக்கலாம், சிலசமயம் வெடிக்கவும் செய்யலாம் எனக் கேட்டு இருக்கிறோம். இன்று தெலுங்கானா பிரச்சினை அப்படித்தான் இருக்கிறது.
நாற்பதாண்டு முன் முதன்முறை அவ்வூருக்குப் போனபோது கேட்டது: ஹைதராபாத் வீதியில் யாரோ பேசிக்கொண்டு நடக்கிறார்கள். “தூகானம் குல்லா உந்தா?” என்று கணவன் மனைவியைக் கேட்டது என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழில் சொல்வதானால் “கடை திறந்திருக்கிறதா” என்று கேட்கிறார். அவருடைய கேள்வியில் இருக்கும் மூன்று சொற்களில் தூகானம் (அதாவது கடை) என்பது தூகான் என்ற ஹிந்தி வார்த்தையின் மருவிய ரூபம், குல்லா (திறந்து) என்பது அசல் ஹிந்தியேதான். உந்தா (உள்ளதா, இருக்கிறதா) என்பது மட்டுமே தெலுங்கு. அவர் தெலுங்கு பேசுவதாகத்தான் எண்ணியிருக்கிறார். ஆனால் இதைத் தெலுங்கு என்று அசல் ஆந்திரர்கள் அதாவது கூட்டு சென்னை ராஜ்யத்திலிருந்து* 1953ல் பிரிந்து ஆந்திரம் என்று ஒரு தனிமாநிலம் – சுதந்திர இந்தியாவின் முதல் பாஷாவாரி மாகாணம்-(அமைத்தவர்கள்) ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சுவையைக் கூட்டும் தமிழின் ‘மெட்ராஸ் பாஷைÕயைப் பற்றி சோழநாட்டுத் தமிழர்கள் நினைப்பது போலத்தான் அவர்களுடைய பேச்சுத் தெலுங்கு. இதைவிட சுத்தத் தெலுங்கு, குறிப்பாக கடற்கரை ஜில்லாக்களின் தெலுங்கு சுந்தரத் தெலுங்கு. அதைப் பற்றி அவர்களுக்குப் பெருமையும் உண்டு. விஜயவாடாவில் இதே கேள்வி “அங்காடி தீசி உந்தா” என்றிருந்திருக்கும். இந்த உதாரணம் தினசரி வாழ்க்கையில் காணப்படும் ஆந்திரா-தெலுங்கானா வித்தியாசத்தின் ஒரு பிரத்தியட்ச வெளிப்பாடு. சொல்லப் போனால் வெளிப்பாட்டின் பல அம்சங்களில் ஒன்று. இதுபோல் பற்பல.
2009 நவம்பர் இறுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) தலைவர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா வேண்டி ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ இருக்கப்போகிறேன் என்று ஆரம்பித்தபோது யாரும் அதை அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர், கட்சி அரசியல் நடத்தும் ஒரு “இந்தக் காலத்து அரசியல்வாதி”தான்.
ஆந்திர மாநிலம் வேண்டி உயிரையே விட்ட அந்தக் காலத்து பொட்டி ஸ்ரீராமுலுவைப் போல் (1953) தியாகியெல்லாம் கிடையாது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த உண்ணாவிரதத்தின் விளைவு. இத்தனை தீவிரமாயிருக்கும் என்று நிச்சயமாக, சொல்லப் போனால் சந்திரசேகர ராவ் உள்பட, எவருமே எதிர்பார்க்கவில்லை. 2009 பொதுத் தேர்தலில் தனித் தெலுங்கானா மாநிலம் என்ற கோரிக்கையைப் பிரதானமாக முன்வைத்து பெரிய எதிர்பார்ப்புகளுடன் தேர்தல் களத்தில் இறங்கிய டி.ஆர்.எஸ். எதிர்பாராத தோல்வியினால் துவண்டு போயிருந்தது. தெலுங்கானா பிரிய வேண்டுமென்று சொன்ன ஒரே அகில இந்தியக் கட்சியான பி.ஜே.பி.யின் நிலை அதைவிட மோசம்.
தேர்தலில் தெலுங்கானா பிராந்தியத்தில் கூட முதல்வர் ராஜசேகரரெட்டியின் காங்கிரஸ் நன்றாகவே செய்திருந்தது வருக்கும் வியப்பைத் தந்தது.. அண்மைக் காலத்தில் அப்பகுதியில் கிளைத்து வந்த தெலுங்கானா உணர்வு இப் போது களைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது போலத் தென்பட்டது. வெற்றிபெற்று மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த ராஜ சேகரரெட்டி “நான் இருக்கும்வரை தெலுங்கானா பிரிவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றே தோள் தட்டி அறிவித்தபோது அதை எவரும் தட்டிக்கேட்கவில்லை. இந் நிலையில் முதல்வர் ரெட்டியின் திடீர் மரணத்துக்குப்பின் ஆளுங்கட்சியினரிடையே தோன்றிய உட்கட்சிப் பூசலும் குழப்பமும் (முக்கியமாக, பழைய முதல்வரின் மகன் ஜகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவி வேண்டிக் கொடி பிடித்தது) கண்ட சந்திரசேகர ராவுக்கு சிறிது நம்பிக்கை மீண்டது. அரசியலில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி, பலவீனமடைந்திருந்த தன் கட்சிக்குப் புத்துயிரூட்டுவதற்கு இதுதான் தருணம் இன்று கருதியே சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் அறிவித்தார். உயிருக்கு ஆபத்து தேடிக்கொள்ள அவர் தயாராயில்லை. அதனால், இன்று எல்லா அரசியல்வாதிகளும் செய்வதுபோலவே தொடங்கி சில நாட்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர்களிலிருந்து ஆளுங்கட்சியினர் வரை பலரும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, கௌரவமாக விரதத்தை முடித்துக் கொண்டார்.
அப்போதுதான் ஒரு திடீர்த்திருப்பம் நிகழ்ந்தது. தெலுங்கானாவில் பரவலாக, முக்கியமாக மாணவர்களிடையே நீறுபூத்த நெருப்பு போல இருந்துவந்த தனித் தெலுங்கானா உணர்வு இந்த உண்ணா விரதத்தை சாக்காகக் கொண்டு திடீரென்று கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது. ஹைதராபாத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அப்போது என்னிடம் தனிப்பட்ட முறையில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் தனது கணிப்பைத் தெரிவித்தார் (அப்போது அவர் இதைப் பேப்பரில் எழுதியதாகத் தெரியவில்லை) அதில் இரண்டு விஷயங்கள் இருந்தன. ஒன்று: இந்தத் தடவை, முன்னால் (1969ல்) ஆனது போல் தீ அடங்காது, தொடரும். இரண்டு: ஆனால் சந்திரசேகரராவ் இதனால் அதிகப் பயன் அடையமாட்டார். ஏனெனில் இயக்கத்தையே மாணவ சமுதாயம் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டதால் என்ன ஆகும் என்று சொல்லமுடியாது ஆனால் ராவுடைய தலைமையை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம் என்பது அவரது ஹேஷ்யம். அவரது கணிப்பு ரொம்பவே சரி என்று ஒரு வார காலத்திலேயே புலனாயிற்று. சந்திரசேகரராவ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுகிறார் என்று கேட்டதும் மாணவர்கள் பொங்கியெழுந்தார்கள். அவரைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டார்கள். இந்த நிலையில் அவர் விரதத்தை நிறுத்தினால் உத்வேகம் பெற்று வந்த இயக்கம் மறுபடி மந்தகதிக்குத் திரும்பும் என அவர்கள் பயந்தனர். கடைசியில் ராவ் வேறுவழியின்றி உண்ணா நோன்பைத் தொடரலானார். இந் நிலையில் அரசு அவரைக் கைது செய்தது. அவரது உடல்நிலை சீர் குலையவே அவரை நிம்ஸ் (NIMS) என்ற அரசினர் ஆஸ்பத்திரியில் வைத்தது. சிலநாளிலேயே அவர்நிலை கவலைக்கிடமாக, எல்லா அரசியல் தலைவர்களும் உண்ணா விரதத்தைக் கைவிடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கலாயினர். ஆனால் இம்முறையும் அப்படிச் செய்வது அரசியல் தற்கொலையாக முடியும் என்பதை நன்குணர்ந்தராவ், அதைவிட தான் ஒரு தெலுங்கானாவின் பொட்டி ஸ்ரீராமுலுவாக சரித்திரத்தில் இடம்பெறுவது சிலாக்கியம் எனக் கருதி விரதத்தைத் தொடர்ந்தார். ஆனால் மத்திய அரசு இன்னொரு 1952 டிசம்பரை** எதிர்கொள்ளத் தயாராயில்லாத நிலையில் டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவில் உள்துறை மந்திரி சிதம்பரம் டி.வி.யில் தோன்றி தனித் தெலுங்கானா அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். உடனே ராவ் உண்ணாவிரதத்தை முடித்தார். ஹைதராபாதில் வெற்றிக் களியாட்டங்கள் நிகழலாயின.
டெல்லி முற்றிலும் எதிர்பாராத வகையில் இது ஆந்திரப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதானமாக அப் பிராந்தியத்திலே நிலைகொண்ட பிரஜாராஜ்யமும்(நடிகர் சிரஞ்சீவியின் கட்சி) தெலுங்கு தேசமும் உடனேயே ஐக்கிய ஆந்திரம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பொது ஜன உணர்ச்சியின் தீவிரத்தைக் கண்டு மருண்டுபோன ஆந்திரப் பிராந்திய காங்கிரஸ் எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் அதையே இன்னும் கூட ஆவேசமாக முழங்கலாயினர். இல்லாவிடில் அவர்கள் தங்கள் தொகுதி மக்கள் முகத்தில் விழிக்க முடியாதென்ற நிலை. சிலநாள் முன்புதான் தனித் தெலுங்கானா கொடுக்கிறோம் என்ற மத்திய அரசு இப்போது தர்மசங்கடத்தில் சிக்கியது. ஆந்திரப் பிரதேசம் காங்கிரஸுக்கு முக்கியமான மாநிலமென்றால், அதன் இரு பகுதிகளில் ஜனத்தொகை, தொகுதிகள் எண்ணிக்கை, பணச்செழிப்பு அனைத்திலும் முன்னின்ற ஆந்திரம்தான் தெலுங்கானாவைவிட அதற்கு முக்கியமாயிருந்தது. தவிர, அங்கேதான் தற்போதைய நிலையில் வெற்றி வாய்ப்பும் அதிகம். தனித் தெலுங்கானாவை ஆதரித்துவந்த டி.ஆர்.எஸ். பி.ஜே.பி. இரண்டின் செல்வாக்கும் தெலுங்கானாவில் மட்டுமே. ஆந்திரத்தில் பலம்படைத்த ஒரே எதிரியான சந்திரபாபுவை சிரஞ்சீவியுடன் கூட்டு வைத்துக்கொண்டு எளிதில் சமாளித்துவிடலாம் என்று காங்கிரஸ் தலைமை கணக்குப் போட்டது. (அந்தக் கணக்கு இன்றும் நீடிக்கிறது.).
அதே சமயம், சிதம்பரத்தின் டிவி. அறிவிப்பைத் தொடர்ந்து, தெலுங்கானாவிலும் தனி மாநிலம் என்ற உணர்வு தினம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. ஐக்கிய ஆந்திரமே நல்லதென்று எண்ணும் தெலுங்கானா பிரமுகர்கள் கூட அதைத் தைரியமாய்ச் சொல்லும் நிலையில் இல்லை. சொன்னால் அவர்கள் வீடு தாக்கப்படலாம், கார் கொளுத்தப்படும் என்ற நிலை. இத்தகைய நெருக்கடிகளில் காலங்காலமாய்க் கைகொடுத்த உபாயத்தை இப்போது மத்திய அரசு கடைப்பிடித்தது. ஜஸ்டிஸ் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷனை நியமித்து தெலுங்கானா அமைப்பது குறித்து அனைத்துத் தரப்புகளின் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்து, ஆராய்ந்து ஒரு வருடத்தில் ரிப் போர்ட் கொடுக்குமாறு பணித்தது. இது ஏமாற்று வேலையென்றும் சிதம்பரத்தின் வாக்கு காப்பாற்றப்படவில்லையென்றும் தெலுங்கானாவில் பலத்த கூக்குரல்கள் எழுந்தன. கல்லூரி மாணவர்கள் பெரிய அளவில் கிளர்ந்தெழ, உஸ்மானியா பல்கலைக்கழகம் ஒரு போர்க்களமாய்த் தோற்றமளித்தது. டி.ஆர்.எஸ்., பி.ஜே.பி.யின் தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து துணைத்தேர்தலெனும் பலப் பரீட்சையை அரசின் மீது திணித்தார்கள். சில மாதங்கள் கழித்தே நடந்த அத்தேர்தலில் அவர்கள் அனைவருமே ஜெயித்தும் காட்டினார்கள். அவர்கள் விரும்பியவாறே இப்பகுதியில் தனி மாநிலக் கோரிக்கைக்கு பொதுஜன ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்கள். இத்தேர்தலில் மிகப்பெரிய இழப்பு, தெலுங்கு தேசத்துக்குத்தான். காங்கிரஸ் அபேட்சகர்கள் வெறுமனே தோற்றார்கள், அவ்வளவுதான்; சந்திரபாபு கட்சியினர் டெபாசிட்டை இழந்தார்கள். இத்தனைக்கும் 2009 தேர்தலில் தெலுங்குதேசம் தெலுங்கானவில் 39 இடங்கள் பெற்றிருந்தது. (டி.ஆர்.எஸ்.ஸைப் போல் மூன்று மடங்கு.) தெலுங்கானாவில் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் குழப்பமான இந்த அரசியலில் எதையும் சொல்வதற்கில்லை.
சரியோ தப்போ, இப்போது தெலுங்கான முழுதும் கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி… தனி மாநிலம் வேண்டும் என்ற விருப்பம் பரவலாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆந்திரர்களுக்கும் மற்ற வெளியார்களுக்கும் எதிரான வெறியாகவும் உருவெடுத்துக்கொண்டிருப்பது கவலை தரும் விஷயம். 1969ல் தனித் தெலுங்கானா வேண்டி ஒரு பலமான போராட்டம் நடந்தது. அரசியல் சதுரங்கத்தில் வல்லவரான இந்திரா காந்தி முதலில் விஷயத்தை ஆறவைத்துப் பின் அதன் தலைவர் சென்னா ரெட்டியையே ஆந்திரப் பிரதேச முதல்வராக்கி, அவருடைய பிரஜா சமிதி கட்சியையும் காங்கிரஸில் இணைக்க வைத்தார். இந்தமுறை கிளர்ச்சி பலமாதங்கள் கடந்தும் ஆறுவதாகக் காணோம். தற்போதைக்கு எரியவில்லையே தவிர, புகைந்து கொண்டேயிருக்கிறது. டெல்லியில் இந்திராவைப்போலவோ ஹைதராபாத்தில் ராஜசேகர ரெட்டியைப் போலவோ சாலக்காக கையாளுவோர் (பீமீயீt லீணீஸீபீறீவீஸீரீ) எவரும் இல்லை. இரண்டு கேள்விகள் – கிரேக்கப் புராணத்தில் வரும் டெமோ கிளின் கத்தி (ஞிணீனீஷீநீறீமீs’ sஷ்ஷீக்ஷீபீ) போல் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டிலிருந்தும் சரி உள்நாட்டிலிருந்தும் சரி, முன்போலப் பெரிய முதலீடுகள் வருவதில்லை. போனவருடம் வரை அசுரவேகத்தில் வளர்ந்து வந்த ஹைதராபாத் அம்முதலீடுகளை பெங்களூருக்கும் சென்னைக்கும் இழந்துவிட்டு ஸ்தம்பித்து நிற்கிறது. முதலீட்டாளரைத் தயங்க வைக்கும் அவ்விரண்டு வினாக்கள்:
ஒன்று: இன்றைய ஆந்திரப் பிரதேசம் ஆந்திரம், தெலுங்கானா என்று பிரிக்கப்படுமா.?
இரண்டாவது கேள்வி (அவர்களுக்கு இன்னும் முக்கியமானது): பிரிக்கப்பட்டால் ஹைதராபாத்தின் அந்தஸ்து என்ன?
தெலுங்கானாவைப் பிரிப்பதில் மத்திய அரசுக்குப் பல கஷ்டங்கள் இருக்கின்றன.
1. இதைக் கொடுத்தால் விதர்ப்பா, கூர்க்காலாந்து என்று பக்கம் பக்க மாக பிரிவினைக் கிளர்ச்சிகள் வீறு கொண்டு எழும்பும். அது பெரிய தலைவலி.
2. பிரிவினை நதிநீர் பங்கீடு முதல் பல விஷயங்களிலும் சச்சரவுக்கு வழிவகுக்கும்.
3. ஆந்திரர்கள் தெலுங்கானா பிரிய சம்மதிக்கலாம், ஆனால் பெரிதும் அவர்களால் (அவர்களுடைய முதல், அவர்களின் தொழில்திறன்) வளர்ந்த ஹைதராபாத் பெரு நகரை இழக்கச் சம்மதிக்கமாட்டார்கள். ஹைதராபாத்திலேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலை முறை பல லட்சம் ஆந்திரர்கள் பெருநகரில் இருக்கின்றனர். தொழிலதிபர்களில் முக்கால்வாசியும் அவர்களே. நகரம் தெலுங்கானவுக்குப் போனால் அவர்களுக்கு நியாயம் கிடைக்காதென்று அஞ்ச இடமிருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரு தீர்வு, நகரை யூனியன் பிரதேசமாக்கி இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகரமாக்குவது. அப்படியிருந்தால்தான் முதலீட்டாளர்களும் தொழில் வளர்ச்சியும் திரும்புவதற்கும் ஏதுவாகும்.
3. இதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. அ. சண்டீகரைப் போலன்றி இத்தலைநகர் இரு ராஜ்யங்களுக்கு மத்தியில் அமையாமல், தெலுங்கானாவுக்கு நட்டநடுவே ஆந்திரத்திலிருந்து நூறுமைல் தூரத்திலிருக்கும். ஆ. தெலுங்கானர்கள் இதை எதிர்ப்பார்கள்.
மொத்தத்தில் பார்க்கும்போது ஸ்ரீகிருஷ்ணா ரிப்போர்ட் எப்படியிருந்தாலும் டெல்லி அரசு தெலுங்கானாவைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகக்கூடும். அதற்கு இருக்கும் ஒரு அனுகூலம், நாடாளுமன்றம், ஆந்திர சட்டசபை இரண்டிற்குமே இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆயுள் இருப்பது. அதற்குள் எவ்வளவோ நடக்கலாம், அப் புறம் பார்க்கலாம் என்ற யோசனை இருக்கிறாற்போல் தெரிகிறது.
அடிக்குறிப்பு:
* Composite Madras State
** பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்த தேதி 16-12-52.
எஸ். வி. ராமகிருஷ்ணன் (1936 - 2011)
Subscribe to:
Post Comments (
Atom)
1 comments:
Good post.. I really appreciate your patience to type a big article..!
Post a Comment