பிரெஞ்சுத் தமிழறிஞர் ஃழான் - லூய்க்! - தொல்காப்பியம், தேவாரங்களில் புலமை


பாரிஸ் நகரத்தில் தமிழறிஞர் ஒருவர் வாழ்கிறார். சுமார் 15 வருடங்கள் இருக்கும். இணையம் வந்த புதிது. இந்தாலஜி என்ற குழுவில் இணைந்தேன். தமிழைப் பற்றி எழுதும்போது கட்டாயமாய் ஒரு பதில் வரும். எங்கிருந்து? பாரிஸ் பல்கலையில் இருந்து. எனக்கு வியப்பு. அப்போது தொடங்கிய நட்பு. 8 ஆண்டுகளாய் செந்தமிழ் (பாரிஸ்) குழுமமாக அவர் ஆரம்பித்து நடத்துவதில் இன்றும் தினமும் தொடர்கிறது. ழான் 6 திங்கள் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு நிறுவனத்தில் வசிக்கிறார். அண்மையில் முனைவர் ராஜம் போன்றோர் முயற்சியில் மதுரையில் ஜ்யான் - லூயிக் பேசினார். இந்து நாளிதழ் ஆங்கிலச் செய்தி வெளியிட்டது. முன்பெல்லாம் எது தமிழின் கணிக் குறியீடு? என்ற சிக்கல் இருந்ததல்லவா? அதனைத் தீர்த்து இணையத்துக்கு யூனிக்கோட் என்று உத்தமம் (http://www.infitt.org) அறிக்கை வெளியிட்ட மாநாடு கொலோன், ஜெர்மனி நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் கட்டுரை வாசிக்கவும், அமர்வுகளில் தலைவராய் இருக்கவும் சென்றேன். அப்பொழுதுதான் என் பழைய நண்பர் ஃழானை நேரில் சந்தித்தேன். செம்மொழி மாநாட்டில் சிந்து சமவெளி எழுத்துக்களின் யூனிக்கோடு ஆக்கம் பற்றிப் பேசக் கோவையில் இருந்தேன். ழான் வருவார் என்றிருந்தோம், ஆனால் அவரால் கோவை வர இயலவில்லை என்பது வருத்தமே.

முனைவர் ராஜம், ழான் போன்றோரைக் கேட்டு மதுரை நிகழ்ச்சி போன்ற சொற்பொழிவை ஒலிக்கோப்பாக தமிழ் மரபு அறக்கட்டளை போன்றவற்றில் வைக்க வேண்டும். நம்மிடையே வீரமாமுனி, எல்லிஸ், கால்ட்வெல் பாதிரியார், சுவலெபில், ... போன்றோர் ஒலிக்கோப்புகள் இன்றில்லை. ஹார்ட், ழான், ... போன்றோர் தமிழுக்கு முக்கியமானவர்கள். இன்று தினமணியில் பேட்டி. ழானின் தமிழ்ப் பேச்சுத் திறனைப் பத்திரிகைச் செய்திகள் குறிப்பிடுகின்றன. நானும் கேட்டுள்ளேன். ழான் போன்றோர் தமிழ் பற்றிப் பேசுவதை ரெக்கார்ட் செய்து தமிழர் பாதுகாப்பராக.

நா. கணேசன்

குறிப்பு: ழான் என்பதில் முதல் எழுத்து தமிழ் ழாகாரம் அன்று. ழா என்பது ஒருவகை
Z ஒலிப்பு. அதைக் சுட்டிக்காட்ட ஃழான் என்று எழுதியுள்ளேன்.

----------------------------------------------------

குப்பம் சென்றேன்... குறுந்தொகை படித்தேன்!

First Published : 10 Jan 2011 04:26:43 PM IST
Last Updated : 10 Jan 2011 04:28:41 PM IST

குறுந்தொகையின் அத்தனை பாடல்களும் அவருக்கு அத்துப்படி. தேவாரத்தின் பாடல்களை அவர் பாடுவதைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழ் இலக்கணத்தை நுண்மான் நுழைபுலத்தோடு விளக்குவதைக் கேட்டால் அசந்து போய்விடுவீர்கள். அட இதிலெல்லாம் ஓர் ஆச்சரியமா? தமிழ் பட்டம் படித்து ஆய்வு மேற்கொண்டவர்களால் இதெல்லாம் சாத்தியமானதுதானே... எனக் கேட்கத் தோன்றலாம்!

சங்கத் தமிழ் நூல்கள் முதல் இப்போதைய திரைப்பாடல்கள் வரையில் இலக்கணத்தோடு அலசி ஆராயும் அவர், ஒரு வெளிநாட்டவர் என்றால் நம்ப முடிகிறதா? அதிலும் அவர் ஒரு கணித ஆசிரியர் என்றால் இன்னும் நமக்கு ஆச்சரியமல்லவா ஏற்படுகிறது...!

பிரெஞ்சு நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு வந்து தமிழ் கற்று இன்று தமிழில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அளவுக்குப் புலமை பெற்ற மொழி ஆய்வாளர் ழான் லூயிச் சேவியர் சமீபத்தில் மதுரை யாதவர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்தார்.


உங்கள் பூர்விகம்?

நான் பிரெஞ்சு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பிரஜ்ஜியார் எனும் இடத்தை பூர்விகமாகக் கொண்டவன். பிரஜ்ஜியார் சிறிய நகர். தந்தை மோரீஸ் சேவியர் தனியார் இன்சூரன்ஸ் ஊழியர். என்னுடன் பிறந்தவர்கள் ஆறுபேர். நான் கணிதத் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனக்குத் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் அதிகம் படிக்காமல் தச்சுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றொருவர் கல்லூரியில் கணிதம் படித்து வருகிறார். நானும் கணிதத்தில் சிறந்து விளங்கினேன். கணித ஆசிரியராகவே ஆசைப்பட்டேன். அதன்படி தாற்காலிகமாகவே கணிதம் கற்பிக்கும் பணியிலும் எங்கள் நாட்டில் ஈடுபட்டேன்.

தமிழகத்துக்கு எப்போது வந்தீர்கள்? தமிழ் மொழி மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

எங்கள் நாட்டில் அனைவருக்கும் ராணுவப் பயிற்சி என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக ராணுவப் பயிற்சி பெற விரும்பாதவர்கள் ஏதாவது ஒரு துறையில் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும் என்பதும் விதிமுறையாகும்.

அந்த வகையில் நான் ஏழைக் குழந்தைகளுக்குக் கணிதம் கற்பிக்க விருப்பம் தெரிவித்து புதுச்சேரிக்கு கடந்த 1981-ஆம் ஆண்டு வந்தேன். சென்னைக்கு முதன்முதலில் வந்தபோது எனக்குப் பிரஞ்சு மொழியுடன் ஓரளவு ஆங்கிலமும் தெரியும். ரஷ்ய மொழி இலக்கியங்களையும் படிக்கும் அளவுக்கு ரஷ்ய மொழி தெரியும்.

பின்னர் புதுச்சேரிக்கு வந்து அங்கு கணிதம் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்போது தனியாகவே அறை எடுத்துத் தங்கி சமைத்தேன். சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்க அருகே உள்ள குப்பத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அங்கு போய் கத்தரிக்காய், முருங்கைக்காய் மற்றும் மீன், கருவாடு ஆகியவற்றை வாங்கும்போது அவற்றின் பெயர்களைத் தெரிந்துகொண்டேன்.

பின்னர் தமிழ்நாட்டு உணவுகள் மீது விருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து முதலில் சமையல் புத்தகங்களை வாங்கிப் படிக்க முயற்சித்தேன். அதன்படி ரசம், கருவாடு, மீன் குழம்பை நானே சமைத்தேன்.

தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

புதுச்சேரியில் கணிதம் கற்பித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் சைக்கிளில் புதுச்சேரி கடற்கரை ஓரத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது குப்பத்து சிறார்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

குப்பத்துச் சிறார்கள் தமிழ்ச்சினிமா பாடல்களைப் பாடிக் காட்டினார்கள். இதையடுத்து "சகலாகலா வல்லவன்', "முந்தானை முடிச்சு' ஆகிய சினிமாப்பாடல் புத்தகங்களை வாங்கிப் படித்தேன். இப்படித் தமிழின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அதன்பின் தமிழ்ப் பழங்கதைகளைக் குப்பத்தில் உள்ளோர் கூறக்கேட்டேன். ஒரு ஊர்ல ஒரு ராஜா, ஏழுமலை தாண்டி, ஏழு கடல் தாண்டி.. போன்ற கதைகளைக் கேட்டபோது தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஏற்கெனவே பிரஞ்சு மொழிக் கதைகள் மற்றும் இலக்கியங்களை மேலோட்டமாக படித்திருந்தேன். ஆங்கிலத்தில் சில நூல்களையும் படித்திருந்தேன். ஆகவே தமிழ் இலக்கியம் படிப்பதில் எனக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை.

தமிழ் இலக்கியத்தில் உங்களுக்கு குருநாதர்கள் யார்?

பேராசிரியை ச.மதனகல்யாணி, தமிழவேள் முத்துசண்முகம், தி.வே.கோபாலய்யர் ஆகியோரையே நான் எனது ஆசிரியர்களாகக் கருதுகிறேன். தமிழில் தொகுப்பாசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர் என நான் அறிந்த சிறந்த ஆசிரியர்களும் இவர்கள்தான். இவர்களது நூலையே எனது தமிழ் இலக்கிய நூல் ஆராய்ச்சிக்கு முன்னுதாரணமாகவும் பின்பற்றி வருகிறேன்.

தமிழில் நீங்கள் கற்று ஆராய்ந்தது குறித்து கூறுங்களேன்?

எனக்குத் தமிழில் ஓரளவுக்குத்தான் பேசத் தெரியும். ஆனால், முயன்று நான் தமிழ் இலக்கியத்தைக் கற்றுள்ளேன். நீலகிரி பகுதியில் இருளர் வாழ்க்கை குறித்த நூல்களைப் படித்து தமிழ் எழுத்துகள் குறித்து அறிந்துள்ளேன். தமிழ் மொழி வரலாறு, சங்ககால தமிழ் இலக்கியங்களில் குறுந்தொகையை ஆங்கிலம்,பிரஞ்சு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளேன்.

தேவாரத்தை குறுந்தகடுகளில் பதிவு செய்து அதன் பழைய மூலத்தையும் அறிந்துள்ளேன். மேலும், இலக்கணத்தில் நிகண்டு உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து அவற்றின் மூலங்களையும் குறுந்தகடுகளில் பதிவு செய்துள்ளேன்.

எனது தமிழ் மொழி ஆய்வுக்கு திருவாவடுதுறை ஆதீன மடத்தில் உள்ள ஓலைச்சுவடிகளும் மிகவும் பயனுடையதாக அமைந்திருக்கின்றன.

தமிழ் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

தமிழ் மொழியானது தனியான மொழி அல்ல. அது அடுக்குமாடிக் கட்டடம் போன்றது. அதற்கு பல கிளைமொழிகளும் இருக்கின்றன. தமிழ் உலகின் சிறந்த மொழி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தமிழர்கள் தங்களுக்குள்ளேதான் தமிழின் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர உலக மக்கள் அறியும் வகையில் மொழியின் பெருமையை உயர்த்துமாறு செயல்படவில்லை எனக்கருதுகிறேன்.

தமிழக மக்களிடம் உங்களுக்குப் பிடித்தது? பிடிக்காதது?

மக்கள் வெளிப்படையாக பேசும் குணமுடையவர்களாக இருப்பது பிடித்ததாக உள்ளது. புதுச்சேரியில் குறிப்பிட்ட குப்பத்துக்கு ஆரம்பத்தில் வேஷ்டி, சட்டை அணிந்து செல்லும்போது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

குப்பத்துச் சிறார்கள் எனது சைக்கிளில் உள்ள பெட்டியைத் திறந்து பார்த்தனர். அதிலிருந்த பொருள்கள் வெளியே விழுந்ததும், அதை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் பெட்டியிலேயே வைத்தனர்.

அப்போது எனக்குத் தமிழ் தெரியாது. ஆகவே அந்தச் சிறுவர்களை முறைப்போடு பார்ப்பேன். உடனே மன்னிச்சுக்குங்க... என்று என்னிடம் தங்களது செயல்களுக்காக வருத்தம் தெரிவித்ததை நன்றாகத் தமிழ் தெரிந்தபோது உணர்ந்துகொண்டேன். ஆக, தவறு என்றால் வெளிப்படையாக அதற்கு வருத்தம் தெரிவிப்பதில் தமிழர்கள் சிறந்தவர்களாக இருப்பதை அறிகிறேன்.

அதே நேரம் உலகைப் பற்றிய கவலை இல்லாமலும் உள்ளனர். குறிப்பாக பிறநாட்டு மக்கள் தங்களது சிறப்பை அறியும் வகையில் தமிழர்கள் செயல்பாடு இல்லாதது வருத்தமே.

உங்களுக்குப் பிடித்த ஊரும், உணவும் எவை?

கருவாட்டுக் குழம்பு மிகவும் பிடித்தமான உணவு. பிரான்சுக்கு விமானத்தில் கருவாடு கொண்டு சென்றபோது, அதைப் பார்த்து அதிகாரிகளே சிரித்துவிட்டார்கள். தெருவோர இட்லிக் கடைகளில் சாப்பிடுவதை மிகவும் விரும்புகிறேன்.

புதுச்சேரிக்கு அடுத்து மதுரையை எனக்குப் பிடிக்கும். மூன்று முறை மதுரைக்கு வந்துள்ளேன். இங்குதான் தெருவோரத்தில் திருக்குறள் மற்றும் கூடல்மாநகர் ஆகிய நூல்களையும் வாங்கிப் படித்தேன். தமிழின் தலைநகராக இதைக் கூறுகிறார்கள். எனினும் எளிய மக்களையும், யதார்த்தமான வாழ்க்கையையும் இங்கு அறிய முடிகிறது.

வ.ஜெயபாண்டி

படங்கள்: ப.குமாரபாண்டியன்

2 comments:

Anonymous said...

பகிர்தமைக்கு மிக்க நன்றி ,
ழான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,

// தமிழர்கள் தங்களுக்குள்ளேதான் தமிழின் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர உலக மக்கள் அறியும் வகையில் மொழியின் பெருமையை உயர்த்துமாறு செயல்படவில்லை எனக்கருதுகிறேன்//
ழான் அவர்கள் சொல்வது சரி என தோன்றுகிறது , இன்று புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலான தமிழர்களுக்கு பிரென்ஸ் , ஸ்பானிஷ்
போன்ற மொழிகள் தெரிந்தும் தமிழுக்கு அவளவாக ஏதும் செய்யவில்லை என்ற தோன்றுகிறது . அவர்கள் ழான் சொன்னது போல தமிழர்கள்
தங்களுக்குள்ளேதான் பெருமை பெசிகொண்டிருகிரர்கள் அதிக பட்சத்தில் தமிழ் மாநாடு என்று சொல்லி திரை ஆட்டம் கண்டு ரசிப்பார்கள் .

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றி!