சங்கப் பலகை அளித்த படலம்

கிரந்த எழுத்துக்களை வேறுபாடு உடையன என்று தமிழ் மன்னர்கள் கருதியதாகத் தெரியவில்லை. கல்வெட்டுக்களில் தமிழும் கிரந்தமும் கலந்தே வருகின்றன. மகேந்திர வர்மன், இராஜராஜ சோழன் போன்றோர் கிரந்த எழுத்துக்களைத் தமிழல்லா இந்திய மொழிச் சொற்களை எழுதப் பயன்படுத்தி உள்ளனர். திருப்பாவை, திருவெம்பாவை, திவ்வியப் பிரபந்தம், தேவாரம் போன்ற நூல்கள் கிரந்தத்தில் எழுதியதும் உள்ளன.

இது தொடர்பாக, கல்வெட்டறிஞர் செ. ராசு அவர்கள் (ஈரோடு), சிற்பி, நாச்சிமுத்து - எனக்குச் சொல்லிய திருவிளையாடற் படலம் - சங்கப் பலகை தந்த படலம் - முக்கியமானது. தமிழின் அழகில் தலைசிறந்த புராணங்கள் ஐந்து என்ப. அவற்றில் ஒன்றாம் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணப் பாடல்களும், நாட்டார் ஐயா உரையும் தருகிறேன். ந. மு. வே. நாட்டாரின் கபிலர் என்னும் நூலையும் பெற்றுப் படிக்க வேண்டும். திருப்புகழில் அருணகிரிநாதர் கிரந்த எழுத்துக்களைப் விரவிப் பாவித்துள்ளார்.

மதுரையிலே தமிழ்ச் சங்கப் பலகையில் கவிபாடும் மனிதராய் இடம்பெற்றவை 49 சம்ஸ்கிருத எழுத்துக்கள் என்று பாடியுள்ளார். தமிழ்ப் புலவோராய் வீற்றிருந்த 49 ஸம்ஸ்க்ருத எழுத்துக்கள் யாவை? என்று அறிவோம்:

" உயிரும் மெய்யுமாக ஸம்ஸ்கிருத நெடுங்கணக்கு மொத்தம் 49 எழுத்துக்களைக் கொண்டது என்பர். ஆனால் தமிழ் நாட்டிலோ அதிகப்படியான எழுத்துக்களைக் கொண்டு 51 எனவும், 52 எனவும் இருவிதமாகக் கொள்ளப்படுகிறது. நாற்பத்தொன்பதுடன் ள, க்ஷ ஆகிய இரண்டையும் சேர்த்து 51-ஆகக் கருதுவர். “ஷ்ப” என்ற எழுத்தையும் சேர்த்து ஐம்பத்திரண்டாகவும் கருதுவர்.” (Thirty Pallava copper Plates, The Tamil Varalatru Kazhakam, Page 34.)

தமிழர் வாழ்வில் அதிகமாகப் புழங்கிவரும் ஆங்கில, அரபி, ... வார்த்தைகள் எழுதக் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தலாம். தமிழ் எழுத்துக்களின் மேல் மீக்குறிகள் (டையாக்ரிடிக்ஸ்) அமைத்தும் எழுதுகிற ஒருமுறையை அமைக்கவும் கூடும். வடமொழி போலே ஆங்கிலம், ஜெர்மன், பெர்ஸியன், ... இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம், எனவே, தமிழோடு இயைந்துவருகிற கிரந்தம் பயன்படுகிறது.

நா. கணேசன்

------------------------------------------------------------------------------------

திருவிளையாடற் புராணம்

ஐம்பத்தொன்றாவது - சங்கப்பலகை தந்தபடலம்
உரையாசிரியர்: ந. மு. வேங்கடசாமி நாட்டார்

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]

வேடுரு வாகி மேரு வில்லிதன் னாமக் கோலெய்
தாடம ராடித் தென்ன னடுபகை துரந்த வண்ணம்
பாடினஞ் சங்கத் தார்க்குப் பலகைதந் தவரோ டொப்பக்
கூடிமுத் தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை சொல்வாம்.

(இ - ள்.) மேருவில்லி - மேருமலையை வில்லாகவுடைய சோமசுந்தரக்கடவுள், வேடு உருவாகித் தன் நாமக்கோல் எய்து - வேட்டுவத்திருமேனி கொண்டு தனது திருப்பெயர் தீட்டிய கணைகளை விடுத்து, ஆடு அமர் ஆடி - வெற்றியையுடைய போர்புரிந்து, தென்னன் அடுபகை துரந்த வண்ணம் பாடினம் - பாண்டியனது கொல்லும் பகையாகி வந்த சோழனைத் துரத்திய திருவிளையாடலைக் கூறினாம்; சங்கத்தார்க்குப் பலகை தந்து - (இனி அவ்விறைவனே) சங்கப் புலவர்க்குப் பலகை அளித்தருளி, அவரோடு ஒப்பக்கூடி - அவரோடு வேற்றுமையின்றிக் கூடியிருந்து, முத்தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை சொல்வாம் - முத்தமிழாகிய செல்வத்தைப் பொலிவுபெறச் செய்த திருவிளையாடலைக் கூறுவாம்.

கோல் - அம்பு. அடு, பகைக்கு அடை. முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்றும் மூவகைத் தமிழ். தமிழின், இன் : சாரியை அல்வழிக்கண் வந்தது. (1)

வங்கிய சேக ரன்கோல் வாழுநாண் மேலோர் வைகற்
கங்கையந் துறைசூழ் கன்னிக் கடிமதிற் காசி தன்னிற்
பங்கய முளரிப் புத்தேள் பத்துவாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறைவழி போற்றிச் செய்தான்.

(இ - ள்.) வங்கிய சேகரன் கோல் வாழுநாள் - வங்கிய சேகரபாண்டியனது செங்கோல் நன்கு நடைபெறும் நாளில், மேல் ஓர்வைகல் - முன் ஒரு நாளில், கங்கை அம்துறை சூழ் - கங்கையின் அழகிய துறை சூழ்ந்த, கன்னிக் கொடிமதில் காசி தன்னில் - அழியாத காவலையுடைய மதில் சூழ்ந்த காசிப்பதியின்கண், பங்கய முளரிப் புத்தேள் - தாமரைமலரை இருக்கையாக வுடைய பிரமன், வாம்பரி மாவேள்வி பத்து - தாவுகின்ற துரங்க வேள்வி பத்தினை, புங்கவர் மகிழ்ச்சி தூங்க - தேவர்கள் மகிழ்கூர, மறைவழி போற்றிச் செய்தான் - வேதவிதிப்படி பேணிச் செய்தான். வாழுநாள் மதுரை நோக்கி நண்ணுவார் என மேற் பதின்மூன்றாஞ் செய்யுளோடு இயையும். பங்கயமாகிய முளரியென்க. வாம் - வாவும்; பரிக்கு அடை. பரிமா : இருபெயரொட்டு. (2)

நிரப்பிய வழிநா ணன்னீ ராடுவா னீண்ட வீணை
நரப்பிசை வாணி சாவித் திரியெனு நங்கை வேத
வரப்பிசை மனுவாங் காயத் திரியெனு மடவா ரோடும்
பரப்பிசைக் கங்கை நோக்கிப் படருவான் படரு மெல்லை.

(இ - ள்.) நிரப்பிய வழிநாள் - (அவற்றைச்) செய்து முடித்த பின்னாள், நல்நீர் ஆடுவான் - நல்லநீரின்கண் ஆடுதற் பொருட்டு, நரம்பு இசை நீண்ட வீணை வாணி - நரம்பின் இசை பொருந்திய நெடிய வீணையையுடைய கலைமகளும், சாவித்திரி எனும் நங்கை - சாவித்திரி என்னும் நங்கையும், வேதவரம்பு இசை மனுவாம் - வேதவரம்பாக அமைந்த மந்திர வடிவாகிய, காயத்திரி எனும் மடவாரோடும் - காயத்திரியுமாகிய இம்மூன்று மனைவிகளோடும், இசை பரப்பு கங்கை நோக்கிப் படருவான்; புகழைப் பரப்புகின்ற கங்கையாற்றினை நோக்கிச் செல்வானாயினன்; படரும் எல்லை - அங்ஙனஞ் செல்லும் பொழுது.

மனு - மந்திரம். (3)

நானவார் குழலி னாரம் மூவரு* ணாவின் செல்வி
வானவா றியங்கும் விஞ்சை மாதரா ளொருத்தி பாடுங்
கானவா றுள்ளம் போக்கி நின்றனள் கமல யோனி
யானவா லறிவ னேகி யந்நதிக் கரையைச் சேர்ந்தான்.

(இ - ள்.) நானவார் குழலினார் அம்மூவருள் - மயிர்ச் சாந்தணிந்த நீண்ட கூந்தலையுடைய அந்த மூன்று மகளிருள், நாவின் செல்வி - நாமகள், வான ஆறு இயங்கும் விஞ்சை மாதராள் ஒருத்தி - வானின் வழியே செல்லுதலையுடைய ஒரு விஞ்சைமகள், பாடும் கான ஆறு உள்ளம் போக்கி நின்றனள் - பாடுகின்ற இசை நெறியில் உள்ளத்தைச் செலுத்தி நின்றாள்; கமலயோனி ஆன வால் அறிவன் ஏகி - தாமரையிற் றோன்றினவனாகிய தூய அறிவினையுடைய பிரமன் சென்று; அந் நதிக்கரையைச் சேர்ந்தான் - அந்நதிக் கரையினை அடைந்தான்.

நின்றனள் - தாழ்த்து நின்றனள். கமல யோனி - திருமாலின் உந்தித் தாமரையில் உதித்தோன். (4)

நாமகள் வரவு தாழ்ப்ப நங்கைய ரிருவ ரோடுந்
தாமரைக் கிழவன் மூழ்கித் தடங்கரை யேறு மெல்லைப்
பாமகள் குறுகி யென்னை யன்றிநீ படிந்த வாறென்
னாமென வெகுண்டாள் கேட்ட வம்புயத் தண்ணல் சொல்வான்.

--------------------------------------------------------------------------------

(பா - ம்.) * அம்மூவரில்.

(இ - ள்.) நாமகள் வரவு தாழ்ப்ப - வாணியின் வரவு தாழ்த்தலினால், நங்கையர் இருவரோடும் - மற்றை இரண்டு மடந்தையரோடும், தாமரைக் கிழவன் மூழ்கி - தாமரை மலரில் இருக்கும் பிரமன் நீராடி, தடம்கரை ஏறும் எல்லை - பெரிய கரையில் ஏறுங்கால், பாமகள் குறுகி - கலைமகள் சென்று, என்னை அன்றி நீ படிந்தவாறு என்னாம் என வெகுண்டாள் - என்னை யல்லாது நீ நீராடியது என்னை என்று சினந்தாள்; கேட்ட அம்புயத்து அண்ணல் சொல்வான் - அதனைக் கேட்ட பிரமன் கூறுவான். (5)

குற்றநின் மேல தாக நம்மைநீ கோபங் கொள்வ
தெற்றென வினைய தீங்கை யெண்ணறு மாக்க டோற்றம்
உற்றனை யொழித்தி யென்னா உரைத்தனன் சாப மேற்கும்
பொற்றொடி மடந்தை யஞ்சிப் புலம்புகொண் டவலம் பூண்டாள்.

(இ - ள்.) குற்றம் நின்மேலது ஆக - குற்றம் நின்கண்ணதாக, நம்மை நீ கோபம் கொள்வது எற்றுஎன - எம்மை நீ வெகுள்வது எத்தன்மைத்து என்று கூறி, இனைய தீங்கை - இந்தக் குற்றத்தை, எண்அறு மாக்கள் தோற்றம் உற்றனை ஒழித்தி என்னா சாபம் உரைத்தனன் - நாற்பத்தெட்டு மக்களாகத் தோன்றி ஒழிப்பா யென்று சாபங் கூறினன்; ஏற்கும் பொன்தொடி மடந்தை - அச்சாபத்தை ஏற்கும் பொன்னாலாகிய வளையை யணிந்த கலைமகள், அஞ்சிப் புலம்பு கொண்டு அவலம் பூண்டாள் - அஞ்சிப் புலம்பித் துன்பமுற்றாள்.

இனைய தீங்கு - வரவு தாழ்த்த குற்றமும், கோபங் கொண்ட குற்றமும். (6)

ஊனிட ரகன்றோ யுன்னா ருயிர்த்துணை யாவே னிந்த
மானிட யோனிப் பட்டு மயங்குகோ வென்ன வண்டு
தேனிடை யழுந்தி வேதஞ் செப்பும்வெண் கமலச் செல்வி
தானிட ரகல நோக்கிச் சதுர்முகத் தலைவன் சாற்றும்.

(இ - ள்.) ஊன்இடர் அகன்றோய் - உடம்பெடுத்தலாலுளதாகிய துன்பம் நீங்கியோய், உன் ஆர் உயிர்த்துணை ஆவேன் - உனது அரிய உயிர்த்துணை ஆகும் யான், இந்த மானிட யோனிப்பட்டு மயங்குகோ என்ன - இந்த மனித்தப்பிறப்பின் பாற்பட்டு மயங்குவேனோ என்று கூற, வண்டு தேன்இடை அழுந்தி வேதம் செப்பும் - வண்டுகள் தேனில் மூழ்கி வேதம் பாடுவதற்கிடமாயுள்ள; வெண்கமலச் செல்வி - வெண்டாமரை மலரை இருக்கையாகவுடைய அக் கலைமகளின், இடர் அகல நோக்கி - துன்பம் நீங்க நோக்கி, சதுர்முகத்தலைவன் சாற்றும் - நான்முகனாகிய நாயகன் கூறுவான்.

அயன் பிறப்பில்லாதவன் என்னுங் கருத்தால் ஊனிட ரகன்றவன் எனப்பட்டான். மனிதப் பிறப்பின் துன்பத்தை யறியாத உனக்கு உயிர்த்துணையாகிய யான் அத்துன்பத்துள் அழுந்துதல் முறையோ என்றாள் என்க. அவள் இருக்கையாகிய கமலத்து வண்டு வேதஞ் செப்பும் எனவே அவள் வேதஞ் செப்புதல் கூற வேண்டாதாயிற்று. (7)

முகிழ்தரு முலைநின் மெய்யா முதலெழுத் தைம்பத் தொன்றிற்
றிகழ்தரு மாகா ராதி ஹாகார மீறாச் செப்பிப்
புகழ்தரு நாற்பத் தெட்டு நாற்பத்தெண் புலவ ராகி
அகழ்தரு கடல்சூழ் ஞாலத் தவதரித் திடுவ வாக.

(இ - ள்.) முகிழ்தரும் முலை - அரும்பு போலும் முலையையுடைய மாதே, நின் மெய்யாம் முதல் எழுத்து ஐம்பத்து ஒன்றில் - நினது வடிவமாகிய ஐம்பத்தொரு முதலெழுத்துக்களில், திகழ்தரும் - விளங்கா நின்ற, ஆகாரம் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிப் புகழ்தரும் நாற்பத்தெட்டும் - ஆகாரம் முதல் ஹாகாரம் இறுதியாகக் கூறிப் புகழப்பட்ட நாற்பத்தெட்டு எழுத்துக்களும், நாற்பத்து எண் புலவர் ஆகி - நாற்பத்தெட்டுப் புலவர்களாகி, அகழ்தரு கடல்சூழ் ஞாலத்து - தோண்டிய கடல் சூழ்ந்த நிலவுலகில், அவதரித்திடுவ ஆக -அவதரித்திடுவனவாக.

நாற்பத்தெட்டெழுத்து - வடமொழி உயிரெழுத்தில் ஆகாரம் முதலிய பதினைந்தும் ககரம் முதலிய முப்பத்து மூன்றும் ஆம். க்ஷ முதலியன கூட்டெழுத்து ஆதலின் விலக்கப்பட்டன. சீர் நிரம்புதற்கு ஹாகாரம் என நெடிலாக்கிச் சாரியை கொடுத்தார். (8)

அத்தகு வருண மெல்லா மேறிநின் றவற்ற வற்றின்
மெய்த்தகு தன்மை யெய்தி வேறுவே றியக்கந் தோன்ற
உய்த்திடு மகாரத்திற்கு முதன்மையா யொழுகு நாதர்
முத்தமி ழால வாயெம் முதல்வரம் முறையான் மன்னோ.

(இ - ள்.) அத்தகு வருணம் எல்லாம் - அத்தகைய எழுத்துக்கள் அனைத்திலும், ஏறி நின்று - ஊர்ந்து நின்று, அவற்று அவற்றின் மெய்த்தகு தன்மை எய்தி - அவ்வெழுத்துக்களின் மெய்யாய தன்மையைப்பொருந்தி, வேறு வேறு இயக்கம் தோன்ற உய்த்திடும் அகாரத்திற்கு - வேறு வேறாக இயங்குமாறு செலுத்தும் அகரத்திற்கு, முதன்மையாய் ஒழுகும் நாதர் -தலைமையாய் ஒழுகும் இறைவர், முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் - மூன்று தமிழையுமுடைய ஆலவாயின் கண் அமர்ந்த எமது சோமசுந்தரக் கடவுள்; அம்முறையால் - அம்மரபினால்.

வருணம் - வர்ணம்; எழுத்து.

"மெய்யி னியக்கம் அகரமொடு சிவணும்" என்னும் தொல்காப்பியச் சூத்திர வுரையில் ‘இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்குமென்பது ஆசிரியர் கூறாராயினர், அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று உணர்க. இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்ப முடிந்தது’ என நச்சினார்க்கினியர் கூறியிருப்பதும், "அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு" என்னும் முதற் குறளும், "அகர வுயிர்போல் அறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து" என்னும் திருவருட்பயன் முதற் செய்யுளும் இங்கு நோக்கற்பாலன. மன்னும் ஓவும் அசைகள். (9)

தாமொரு புலவ ராகித் திருவுருத் தரித்துச் சங்க
மாமணிப் பீடத் தேறி வைகியே நாற்பத் தொன்ப
தாமவ ராகி யுண்ணின் றவரவர்க் கறிவு தோற்றி
ஏமுறப் புலமை காப்பா ரென்றனன் கமலப் புத்தேள்.

(இ - ள்.) தாம் ஒரு புலவர் ஆகித் திரு உருத் தரித்து - தாமும் ஒரு புலவராகத் திருமேனி தாங்கி, சங்கம் மாமணிப் பீடத்து ஏறி - சங்கத்தின் பெருமை பொருந்திய மணிகள் அழுத்திய தவிசில் ஏறி, வைகி - ஒரு சேர வீற்றிருந்து, நாற்பத்தொன்பதாம் அவராகி - நாற்பத்தொன்பதாவது புலவர் என்னும் எண்ணை யுடையராய், உள் நின்று அவர் அவர்க்கு அறிவு தோற்றி - அகத்தின்கண் நின்று அந்நாற்பத்தெண்மருக்கும் அறிவை விளக்கி, ஏமுறப் புலமை காப்பார் என்றனன் கமலப்புத்தேள் - அரணாகப் புலமையைக் காத்தருளுவர் என்று பிரமன் கூறினன்.

சங்கப்பீடம் - சங்கப்பலகை. (10)

அக்கர நாற்பத் தெட்டு மவ்வழி வேறு வேறு
*மக்களாய்ப் பிறந்து பன்மாண் கலைகளின் வகைமை தேர்ந்து
தொக்கவா ரியமு மேனைச் சொற்பதி னெட்டு மாய்ந்து
தக்கதென் கலைநுண் டேர்ச்சிப் புலமையிற் றலைமை சார்ந்தார்.

(இ - ள்.) அக்கரம் நாற்பத்து எட்டும் - நாற்பத்தெட்டு எழுத்துக்களும் அவ்வழி வேறுவேறு மக்களாய்ப் பிறந்து - அங்ஙனமே வெவ்வேறு மக்களாகத் தோன்ற, பல் மாண் கலைகளின் வகைமை தேர்ந்து - (அவர்கள்) பல மாட்சிமைப்பட்ட கலைகளின் வகைகளைத் தெளிந்து, ஆரியமும் ஏனை தொக்க சொல்பதினெட்டும் ஆய்ந்து - ஆரிய மொழியையும் மற்றைய பதினெட்டாகத் தொகுக்கப்பட்ட மொழிகளையும் ஆராய்ந்து, தக்க தென்

--------------------------------------------------------------------------------
* அக்கரங்கள் மக்களாய்ப் பிறந்தனவாகக்கூறியதன்கருத்து, கபிலர் என்னும் உரை நூலில் விளக்கப் பெற்றுளது.

கலைநுண் தேர்ச்சிப்புலமையில் - பெருமை வாய்ந்த தமிழ்க்கலையின் நுண்ணிய தேர்ச்சிப்புலமையில், தலைமை சார்ந்தார் - தலைமை பெற்றார். மக்களாய்ப்பிறக்க அங்ஙனம் பிறந்த நாற்பத்தெண்மரும் தேர்ந்து ஆய்ந்து தலைமை சார்ந்தார் என விரித்து முடித்துக்கொள்க. சிறப்புப்பற்றி ஆரியமும் தமிழும் பிரித்தோதப்பட்டன. (11)

கழுமணி வயிரம் வேய்ந்த கலன்பல வன்றிக் கண்டிக்
கொழுமணிக் கலனும் பூணுங் குளிர்நிலா நீற்று மெய்யர்
வழுவறத் தெரிந்த செஞ்சொன் மாலையா லன்றி யாய்ந்த
செழுமலர் மாலை யானுஞ் சிவார்ச்சனை செய்யு நீரார்.

(இ - ள்.) கழுமணி வயிரம் வேய்ந்த - (அவர்கள்) சாணைபிடித்த மணிகளாலும் வயிரங்களாலும் புனைந்த, கலன் பல அன்றி - பல கலன்களே அல்லாமல், கண்டிக் கொழுமணிக் கலனும் பூணும் - உருத்திராக்க மாலையாகிய கொழுவிய மணிக்கலனையும் அணியும், குளிர் நிலா நீற்று மெய்யர் - தண்ணிய நிலாப்போலுந் திருநீறு தரித்த மேனியையுடையார், வழு அறத்தெரிந்த செஞ்சொல் மாலையால் அன்றி - குற்றமற ஆராய்ந்த செவ்விய சொற்களாற் றொடுக்கப்பட்ட பாமாலை யாலல்லாமல், ஆய்ந்த செழுமலர் மாலையாலும் - ஆராய்ந்தெடுத்துத் தொடுத்த புதிய மலர்மாலையினாலும், சிவார்ச்சனை செய்யும் நீரார் - சிவ வழிபாடு செய்யுந் தன்மையையுடையார்.

பாமாலை சூட்டுவதும் அருச்சனையாதலை,
"மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகு மாதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்"

என்று சிவபிரான் வன்றொண்டர்க்கு அருளினமை கூறும் பெரியபுராணச் செய்யுளால் அறிக. (12)

புலந்தொறும் போகிப் போகிப் புலமையால் வென்று வென்று
மலர்ந்ததண் பொருநை நீத்த வளங்கெழு நாட்டில் வந்து
நிலந்தரு திருவி னான்ற நிறைநிதிச் செழியன் செங்கோல்
நலந்தரு மதுரை நோக்கி நண்ணுவார் நண்ணு மெல்லை.

(இ - ள்.) புலந்தொறும் போகிப் போகி - நாடுகள்தோறுஞ் சென்று சென்று, புலமையால் வென்று வென்று - புலமைத் திறத்தால் அங்குள்ளவர்களை வென்று வென்று, மலர்ந்த தண் பொருநை நீத்தம் - பரந்த தண்ணிய பொருநை வெள்ளத்தால், வளம் கெழு நாட்டின் வந்து - வளம் மிக்க பாண்டியநாட்டின்கண் வந்து, நிலம் தருதிருவில் - மாற்றாரது நிலத்தைத் தனக்கு நல்கும் போர்த்திருவினால், ஆன்ற நிறை நிதிச் செழியன் - மிகவும் நிறைந்த நிதியினையுடைய பாண்டியனது, செங்கோல் நலம் தரு மதுரை நோக்கி நண்ணுவார் - செங்கோலால் நன்மை பொருந்திய மதுரையை நோக்கி வருவாராயினர்; நண்ணும் எல்லை - அங்ஙனம் வரும்பொழுது.

அடுக்கு தொழிற் பயில்வுப்பொருட்டு. தொல்காப்பியப் பாயிரவுரையில் "நிலந்தரு திருவிற் பாண்டியன்" என்பதற்கு ‘மாற்றாரது நிலத்தைக்கொள்ளும் போர்த்திருவினையுடைய பாண்டியன்’ என நச்சினார்க்கினியர் உரை கூறியது இங்கு நோக்கற்பாலது; வேற்று நாட்டு மன்னர்களாலே திறையாகத் தரப்பட்ட திரு என்றுமாம். திருவின் என்பதற்குத் திருவுடன் என்றுரைத்தலுமாம். (13)

பற்பல கலைமாண் டேர்ச்சிப் பனுவலின் பயனாய் நின்ற
அற்புத மூர்த்தி யெந்தை யாலவா யடிக ளாங்கோர்
கற்பமை கேள்வி சான்ற கல்வியின் செல்வ ராகிச்
சொற்பதங் கடந்த பாத மிருநிலந் தோய வந்தார்.

(இ - ள்.) பற்பலகலை - பலவகைப்பட்ட கலைகளையுடைய, மாண்தேர்ச்சிப் பனுவலின் பயனாய் நின்ற அற்புதமூர்த்தி எந்தை - மாட்சிமைப்பட்ட தேர்ச்சியை யுடைய மறையின் பயனாய் நிலைபெற்ற ஞானமூர்த்தியும் எம் தந்தையும் ஆகிய, ஆலவாய் அடிகள் - மதுரைப் பிரானாகிய சோமசுந்தரக்கடவுள், ஆங்கு - அங்கு, ஓர் கற்பு அமை கேள்வி சான்ற கல்வியின் செல்வராகி - கற்றலும் அமைந்த கேள்வியும் நிறைந்த ஒரு புலவராகி, சொல்பதம் கடந்த பாதம் இருநிலம் தோயவந்தார் - சொல்லளவைக் கெட்டாத திருவடிகள் இப்பெரிய நிலத்திற் றோய நடந்து வந்தார்.

கற்பும் அமை கேள்வியும் சான்ற என்க; "கற்றல் கேட்ட லுடையார் பெரியார்" என்பது திருநெறித்தமிழ்மறை. கல்வியின் செல்வர் - கல்வியாகிய செல்வத்தை யுடையர்; சாரியை அல்வழிக்கண் வந்தது. பாதம் சொற்பதங் கடந்ததாதலைப் "பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்" என்னும் திருவாசகத்தானறிக. (14)

அவ்விடை வருகின் றாரை நோக்கிநீ ராரை நீவிர்
எவ்விடை நின்றும் போது கின்றனி ரென்ன வன்னார்
வெவ்விடை யனையீர் யாங்கள் விஞ்சைய ரடைந்தோர் பாவம்
வௌவிடு பொருநை நாட்டின் வருகின்றே மென்ன லோடும்.

(இ - ள்.) அவ்விடை வருகின்றாரை நோக்கி நீர் ஆர் - அங்கு வருகின்றவரை நோக்கி நீவிர் யாவர், நீவிர் எவ்விடை நின்றும் போதுகின்றனிர் என்ன - நீவிர் எங்கிருந்து வருகின்றீர் என்று கேட்க, அன்னார் - அப்புலவர்கள், வெவ்விடை அனையீர் - பெருமிதமுடைய இடபம் போல்வீர், யாங்கள் விஞ்சையர் - யாங்கள் புலவ்களாவேம்; அடைந்தோர் பாவம் வௌவிடு - அடைந்தாரது பாவத்தைப் போக்கும், பொருநை நாட்டின் வருகின்றேம் - பொருநை சூழ்ந்த பாண்டி நாட்டின் கண்ணே வந்துகொண்டிருக்கின்றேம், என்னலோடும் - என்று கூறிய வளவில்.

ஆரை, ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. வெவ்விடை - விருப்பஞ் செய்யும் விடையுமாம். பொருநை நாட்டின் எல்லையை அடைந்து அங்கு நின்றும் வருகின்றேம் என்றுமாம். (15)

தனிவரு புலவர் நீவிர் தண்டமி ழால வாயெங்
கனிவரு கருணை மூர்த்தி கனைகழ லிறைஞ்சல் வேண்டும்
இனிவரு கென்ன நீரே யெங்களுக் களவில் கோடி
துனிவரு வினைக டீர்க்குஞ் சுந்தரக் கடவு ளென்றார்.

(இ - ள்.) தனிவரு புலவர் - தனியே வந்த புலவராகிய இறைவர், நீவிர் - நீங்கள், தண்தமிழ் ஆலவாய் - தண்ணிய தமிழையுடைய திருவாலவாயில் எழுந்தருளிய, எம் கனிவரு கருணைமூர்த்தி கனைகழல் இறைஞ்சல் வேண்டும் - எமது கனிந்த அருளையுடைய சோமசுந்தரக் கடவுளின் ஒலிக்கும் வீரக்கழலணிந்த திருவடியை வணங்கவேண்டும் (ஆதலால்), இனி வருக என்ன - இப்பொழுதே வரக்கடவீர் என்று கூறியருள, எங்களுக்கு அளவு இல்கோடி துனிவரு வினைகள் தீர்க்கும் - எங்களுக்கு அளவிறந்த கோடி துன்பத்தைத் தரும் வினைகளைப் போக்கியருளும், சுந்தரக்கடவுள் நீரே என்றார் - சோமசுந்தரக்கடவுள் நீரே என்று (அப்புலவர்கள்) கூறினார்கள்.

சோமசுந்தரக்கடவுளின் திருவடியை வணங்குமாறு நீர் எதிர்வந்து அழைத்த பேருதவியை உன்னின் எங்கட்கு நீரே அக்கடவுளாவீர் என்றனர்; சமற்காரமாக உண்மையை வெளிப்படுத்தியவாறுங் காண்க. வருகென்ன : அகரந் தொகுத்தல். (16)

மறையினா றொழுகும் பன்மாண் கலைகள்போன் மாண்ட கேள்வித்
துறையினா றொழுகுஞ் சான்றோர் சூழமீண் டேகிக் கூடற்
கறையினார் கண்டத் தாரைப் பணிவித்துக் கரந்தா ரொற்றைப்
பிறையினார் மகுடந் தோற்றா தறிஞராய் வந்த பெம்மான்.

(இ - ள்.) மறையின் ஆறு ஒழுகும் பல்மாண் கலைகள்போல் - வேதத்தின் வழியே ஒழுகும் பல மாட்சிமைப்பட்ட கலைகள்போல, மாண்ட கேள்வித் துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ - மாட்சிமைப்பட்ட வேள்வித் துறையின் வழியே ஒழுகும் புலவர் தம்மைச் சூழ்ந்துவர, ஒற்றைப் பிறையின் ஆர் மகுடம் தோற்றாது - ஒற்றைப்பிறை பொருந்திய சடை முடியை வெளிப்படுத்தாது, அறிஞராய் வந்த பெம்மான் - புலவராய் வந்த சோமசுந்தரக் கடவுள், மீண்டு ஏகி - திரும்பிச் சென்று, கூடல் கறையின் ஆர் கண்டத்தாரைப் பணிவித்துக் கரந்தார் - கூடலி லெழுந்தருளிய நஞ்சக் கறை பொருந்திய திருமிடற்றையுடைய இறைவனை வணங்குவித்து மறைந்தருளினார்.

சான்றோர் கலைகள்போற் சூழ என்க. கறையினார், பிறையினார் என்பவற்றில் இன் வேண்டாவழிச் சாரியை. (17)

விம்மித மடைந்து சான்றோர் விண்ணிழி விமான மேய
செம்மலை வேறு வேறு செய்யுளாற் பரவி யேத்திக்
கைம்மலை யுரியி னார்தங் காறொழு திறைஞ்சி மீண்டு
கொய்ம்மலர் வாகைச் செவ்வேற் செழியனைக் குறுகிக் கண்டார்.

(இ - ள்.) சான்றோர் - புலவர்கள், விம்மிதம் அடைந்து - வியப்புற்று, விண் இழி விமானம் மேய செம்மலை - வானினின்றும் இறங்கிய இந்திரவிமானத்தில் எழுந்தருளிய இறைவரை, வேறு வேறு செய்யுளால் பரவி ஏத்தி - வெவ்வேறு செய்யுட்களாலே துதித்துப் புகழ்ந்து, கைமலை உரியினார் தம் கால் தொழுது - யானைத்தோலைப் போர்வையாகவுடைய அவ்விறைவர் திருவடிகளைத் தொழுது, இறைஞ்சி - வணங்கி, மீண்டு - திரும்பி, கொய் வாகைமலர் செவ்வேல் செழியனைக் குறுகிக் கண்டார் - கொய்த வாகை மலர்மாலை சூடிய சிவந்த வேலையுடைய பாண்டியனைச் சென்று கண்டனர்.

தம்மை அழைத்துவந்து தா¤சிப்பித்தவர் அவ்விறைவரேயென உணர்ந்தமையால் விம்மித மெய்தினர் என்க. வாகைமாலை - வெற்றிமாலை. (18)

மறமலி நேமிச் செங்கோன் மன்னவன் வந்த சான்றோர்
அறமலி கேள்வி நோக்கி யவைக்களக் கிழமை நோக்கித்
திறமலி யொழுக்க நோக்கிச் சீரியர் போலு மென்னா
நிறைமலி யுவகை பூத்த நெஞ்சினா னிதனைச் செய்தான்.

(இ - ள்.) மறம்மலி நேமிச் செங்கோல் மன்னவன் - வெற்றிமிக்க சக்கரத்தையும் செங்கோலையுமுடைய வங்கிய சேகர பாண்டியன், வந்த சான்றோர் அறம்மலி கேள்வி நோக்கி - வந்த புலவர்களின் அறம் நிறைந்த கல்வியை நோக்கியும், அவைக்களக் கிழமை நோக்கி - அவைக்களத்தில் இருத்தற்குரிய தகுதியை நோக்கியும், திறம்மலி ஒழுக்கம் நோக்கி - வகையமைந்த ஒழுக்கத்தை நோக்கியும் சீரியர்போலும் என்னா - சிறந்தவர்கள் என்று கருதி, நிறைமலி உவகை பூத்த நெஞ்சினான் இதனைச் செய்தான் - நிறைதல் மிக்க மகிழ்பூத்த உள்ளமுடையனாய் இதனைச் செய்வானாயினன்.

அவைக்களத்தில் இருத்தற்குரிய தகுதியாவது,

"குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை
நடுச்சொல்லு நல்லணி யாக்கங் - கெடுக்கும்
அழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டெட்டும்
இழுக்கா அவையின்க ணெட்டு"

என வெண்பாமாலையிற் கூறப்பட்ட எண்வகை யியல்பினை உடைத்தாயிருத்தல். போலும் : ஒப்பில் போலி. (19)

திங்களங் கண்ணி வேய்ந்த செக்கரஞ் சடில நாதன்
மங்கலம் பெருகு கோயில் வடகுட புலத்தின் மாடோர்
சங்கமண் டபமுண் டாக்கித் தகைமைசால் சிறப்பு நல்கி
அங்கமர்ந் திருத்தி ரென்ன விருத்தினா னறிஞர் தம்மை.

(இ - ள்.) திங்கள் அம் கண்ணி வேய்ந்த - சந்திரனாகிய அழகிய மாலையை யணிந்த, செக்கர் அம் சடிலநாதன் - சிவந்த அழகிய சடையையுடைய சோமசுந்தரக் கடவுளின், மங்கலம் பெருகு கோயில் - மங்கலம் மிக்க திருக்கோயிலின், வடகுடபுலத்தின் மாடு - வடமேற்றிசைப் பக்கத்தில், ஓர் சங்கமண்டபம் உண்டாக்கி - ஒரு சங்கமண்டபம் எடுத்து, தகைமைசால் சிறப்பு நல்கி - தகுதிநிறைந்த பலவரிசைகளை அளித்து, அங்கு அமர்ந்து இருத்திர் என்ன இருத்தினான் அறிஞர் தம்மை - அங்கே தங்கி யிருப்பீராக என்று அப்புலவர்களை இருத்தினான்.

அமர்ந்திருத்திர் என்பதற்கு விரும்பி யுறைவீர் என்றுரைத்தலுமாம். (20)

வண்டமிழ் நாவி னார்க்கு மன்னவன் வரிசை நல்கக்
கண்டுளம் புழுங்கி முன்னைப் புலவரக் கழகத் தோரை
மண்டினர் மூண்டு மூண்டு வாதுசெய் தாற்றன் முட்டிப்
பண்டைய புலனுந் தோற்றுப் படருழந் தெய்த்துப் போனார்.

(இ - ள்.) வண்தமிழ் நாவினார்க்கு - வளவிய தமிழையுடைய செந்நாப் புலவர்கட்கு, மன்னவன் வரிசை நல்க - பாண்டியன் பலவரிசைகளை அளிக்க (அதனை), முன்னைப் புலவர் கண்டு உளம் புழுங்கி - பழைய புலவர்கள் கண்டு உள்ளம் வெந்து, அக்கழகத்தோரை - அச்சங்கப் புலவரை, மண்டினர் மூண்டு மூண்டு வாது செய்து - நெருங்கிச் சென்று சென்று வாது புரிந்து, ஆற்றல் முட்டிப் பண்டைய புலனும் தோற்று - தங்கள் ஆற்றல் குன்ற முன்னுள்ள புலமையையும் இழந்து, படர் உழந்து எய்த்துப் போனார் - துன்புற்று மனமிளைத்துச் சென்றனர்.

மண்டினர் : முற்றெச்சம். அடுக்கு தொழிற் பயில்வுப் பொருட்டு. முட்டி : செயவெனெச்சத் திரிபு. பழைய புலமை இழுக்குற்றமையால் ‘பண்டைய புலனுந் தோற்று’ என்றார். (21)

இனையர்போல் வந்து வந்து மறுபுலத் திருக்குங் கேள்வி
வினைஞரு மதமேற் கொண்டு வினாய்வினாய் வாதஞ் செய்து
மனவலி யிளைப்ப வென்று கைகுவோ ரொன்றை வேண்டிப்
புனையிழை பாக நீங்காப் புலவர்மு னண்ணி னாரே.

(இ - ள்.) இனையர்போல் - இந்தப் புலவர்கள்போலவே, மறுபுலத்து இருக்கும் கேள்வி வினைஞரும் - வேற்று நாட்டிலுள்ள நூற்கேள்வி வல்ல புலவர்களும் வந்து வந்து மதம் மேற்கொண்டு வினாய்வினாய் வாதம் செய்து - வந்து வந்து தருக்கினை மேற்கொண்டு பலமுறை வினாவி வாதித்து, மனவலி இளைப்ப - மனத்தின் திட்பங்கெட, வென்று - (அவர்களை) வென்று, வைகுவோர் - தங்கி யிருக்கும் அக்கழகத்தார், ஒன்றை வேண்டி - ஒரு பொருளைக் கருதி, புனை இழை பாகம் நீங்காப் புலவர்முன் நண்ணினார் - உமையம்மையை இடப்பாகத்தில் நீங்காத புலவராகிய சோமசுந்தரக்கடவுள் திருமுன் சென்றனர். ஈண்டும் அடுக்குகள் அப்பொருளன. நூற்கேள்வியே தொழிலாகவுடைய ரென்பார் ‘கேள்வி வினைஞரும்’ என்றார். மதம் மேற்கொண்டு என்பதற்கு உடன்படல் முதலிய எழுவகை மதத்தினை மேற்கொண்டு என்றுரைத்தலுமாம். வினாவி என்பது விகாரமாயிற்று. ஒன்று : பண்பாகு பெயர்.

புனையிழை அணியப்பட்ட அணியினையுடையாள் : அன்மொழித்தொகை. (22)

முந்துநூன் மொழிந்தார் தம்மை முறைமையால் வணங்கி யெம்மை
வந்துவந் தெவரும் வாதஞ் செய்கின்றார் வரிசை யாக
அந்தமில் புலமை தூக்கி யளப்பதா* வெம்ம னோர்க்குத்
தந்தருள் செய்தி சங்கப் பலகையொன் றென்று தாழ்ந்தார்.

(இ - ள்.) முந்துநூல் மொழிந்தார் தம்மை - முதனூலாகிய வேதாகமங்களை அருளிச்செய்த இறைவனை, முறைமையால் வணங்கி - முறைப்படி வணங்கி, எம்மை வரிசையாக வந்து வந்து எவரும் வாதம் செய்கின்றார் - எம்மோடு தொடர்ச்சியாக வந்து வந்து எவரும் வாதிக்கின்றனர்; அந்தம் இல் புலமை தூக்கி அளப்பதா - (ஆதலால்) முடிவில்லாத புலமையைச் சீர்தூக்கி அளக்குங் கருவியாக, எம்மனோர்க்கு - எமக்கு, சங்கப்பலகை ஒன்று தந்தருள் செய்தி என்று தாழ்ந்தார் - ஒரு சங்கப் பலகை அளித்தருளுவாயாக என்று வேண்டி வணங்கினார்.

முந்துநூல் - தமிழ் இலக்கண முதனூலுமாம்;

"வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்" என்பதுங் காண்க. வரிசையாக - இடையறாது என்றபடி. (23)

பாடிய பாணற் கன்று வலியவே பலகை யிட்டார்
பாடிய புலவர் வேண்டிற் பலகைதந் தருளார் கொல்லோ
பாடிய புலவ ராகும் படியொரு படிவங் கொண்டு
பாடிய புலவர் காணத் தோன்றினார் பலகை யோடும்.

--------------------------------------------------------------------------------

(பா - ம்.) * அளப்பதாய்

(இ - ள்.) பாடிய பாணற்கு அன்று வலியவே பலகை இட்டார் - தம்மைப் பாடிய பாணபத்திரனுக்கு அன்று வலிந்து பலகை அருளிய சோமசுந்தரக்கடவுள் பாடிய புலவர் வேண்டில் - பாடிய புலவர்கள் தாமே (ஒரு பலகையை) வேண்டினால் பலகை தந்தருளார் கொல்லோ - அதனைத் தாரா திருப்பரோ, பாடிய புலவர் ஆகும்படி ஒரு படிவம் கொண்டு - பாடுகின்ற புலவராம் வண்ணம் ஒரு திருவுருவந்தாங்கி, பாடிய புலவர் காண பலகையோடும் தோன்றினார் - பாடிய அப்புலவர்கள் காணப் பலகையுடன் வெளிவந்தனர்.

பாணற்குப் பலகை யிட்டமை பலகையிட்ட படலத்திற் காண்க. வலிய - கேளாமலே. இட்டார் : பெயர். கொல்லோ என்பதில் கொல் அசை நிலை; ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு. இது சொற்பொருட் பின்வரு நிலையணி. (24)

சதுரமா யளவி ரண்டு சாணதிப் பலகை யம்ம
மதியினும் வாலி தாகு மந்திர வலிய தாகும்
முதியநும் போல்வார்க் கெல்லா முழம்வளர்ந் திருக்கை நல்கும்
இதுநுமக் களவு கோலா யிருக்குமென் றியம்பி யீந்தார்.

(இ - ள்.) சதுரமாய் அளவு இரண்டு சாணது இப்பலகை - சதுர வடிவினதாய் இரண்டு சாண் அளவுள்ளதாகிய இந்தப் பலகை, மதியினும் வாலி தாகும் - சந்திரனிலும் வெள்ளியதாகும்; மந்திரவலியது ஆகும் - மந்திரவலியை யுடையதாகும்; முதிய நும்போல்வார்க்கு எல்லாம் - அறிவால் முதிய நும் போன்றார்க்கெல்லாம், முழம் வளர்ந்து இருக்கை நல்கும் - ஒவ்வொரு முழமாக வளர்ந்து இருக்கை யளிக்கும்; இது - இப்பலகை, நுமக்கு அளவு கோலாய் இருக்கும் என்று இயம்பி - உங்களுக்கு ஓர் அளவு கருவியாக இருக்குமென்று கூறி, ஈந்தார் - (அதனைத்) தந்தருளினார்.

சாணது : குறிப்பு முற்று பெயரெச்சமாயது. அம்ம : வியப்பிடைச்சொல். பலகை வெண்ணிற முடையதென்பதனை வருஞ்செய்யுளாலுமறிக; அறிவால் அளத்தற்கரிய புலமைத் திறத்தை இஃது அளத்தலால் அறிவினும் தூயதாகும் என்றலுமாம். புலமை முற்றியார்க்கு வளர்ந்து இருக்கை நல்கி ஏனையர்க்கு இடந்தராமையின் ‘மந்திரவலியது’ என்றார். (25)

நாமக ளுருவாய் வந்த நாவலர் தமக்கு வெள்ளைத்
தாமரை யமளி தன்னைப் பலகையாத் தருவ தென்னக்
காமனை முனிந்தார் நல்கக் கைக்கொடு களிறு தாங்கும்
மாமணிக் கோயி றன்னை வளைந்துதங் கழகம் புக்கார்.

(இ - ள்.) நாமகள் உருவாய் வந்த நாவலர் தமக்கு - கலைமகள் வடிவாக வந்த அப்புலவர்களுக்கு, வெள்ளைத்தாமரை அமளி தன்னை - வெண்டாமரை யாகிய தவிசினை, பலகையாத் தருவதென்ன - ஒரு பலகையாகச் செய்து தருவதுபோல, காமனை முனிந்தார் நல்க - மன்மதனை எரித்த இறைவர் தந்தருள, கைக்கொடு - (அவர்கள்) அதனை ஏற்றுக்கொண்டு, களிறுதாங்கும் மாமணிக்கோயில் தன்னை - யானைகள் சுமக்கும் பெரிய மணிகள் அழுத்திய திருக்கோயிலை, வளைந்து - வலம் வந்து, தம் கழகம் புக்கார் - தமது அவையிற் புகுந்தனர்.

தருவது : தொழிற்பெயர். (26)

நாறுபூந் தாம நாற்றி நறும்பனி தோய்ந்த சாந்தச்
சேறுவெண் மலர்வெண் டூசு* செழும்புகை தீப மாதி
வேறுபல் வகையாற் பூசை வினைமுடித் திறைஞ்சிக் கீரன்
ஏறினான் கபில னோடு பரணனு மேறி னானே.

(இ - ள்.) நாறுபூந்தாமம் நாற்றி - மணமுள்ள பூமாலைகளைத் தொங்கவிட்டு, நறும்பனி தோய்ந்த சாந்தச்சேறு - நறிய பனிநீர் அளாவிய சந்தனக்குழம்பும், வெண்மலர் வெண்தூசு செழும்புகை தீபம் ஆதி - வெண்மலரும் வெள்ளாடையும் செழிய தூபமும் தீபமும் முதலிய, வேறு பல்வகையால் பூசை வினைமுடித்து - வேறு பலவகையாலும் பூசைவினை முடித்து இறைஞ்சி - வணங்கி, கீரன் ஏறினான் - நக்கீரன் முன்னர் ஏறினான்! கபிலனோடு பரணனும் ஏறினான் - கபிலனோடு பரணனும் ஏறினான்.

இறைவனால் அருளப்பட்ட தெய்வமாப் பலகை ஆதலின் பூசித்து வணங்கி யேறினர் என்க. முதன்மைபற்றி இம் மூவரையும் விதந்து கூறினார். ஓடு : உடனிகழ்ச்சி. (27)

இருங்கலை வல்லோ ரெல்லா மிம்முறை யேறி யேறி
ஒருங்கினி திருந்தார் யார்க்கு மொத்திடங் கொடுத்து நாதன்
தருஞ்சிறு பலகை யொன்றே தன்னுரை செய்வோர்க் கெல்லாஞ்
சுருங்கிநின் றகலங் காட்டித் தோன்றுநூல் போன்ற தன்றே.

(இ - ள்.) இருங்கலை வல்லோர் எல்லாம் - பெரியநூல் வல்லோரனைவரும் இம்முறை ஏறி ஏறி ஒருங்கு இனிது இருந்தார் - இங்ஙனமே ஏறியேறி ஒருசேர வீற்றிருந்தனர்; நாதன் தரும் சிறுபலகை ஒன்றே - இறைவன் தந்தருளிய சிறிய பலகையொன்றே, யார்க்கும் ஒத்து இடம் கொடுத்து - அனைவர்க்கும் ஒக்க இடங் கொடுத்து, தன் உரை செய்வோர்க்கு எல்லாம் - தன் உரை காண்பாரனைவருக்கும், சுருங்கி நின்று அகலம் காட்டித் தோன்றும் நூல்போன்றது - எழுத்தாற் சுருங்கி நின்று பொருள் விரிவு காட்டித் தோன்றும் நூலை ஒத்தது.

ஒத்து - ஒக்க. கொடுத்து அதனால் நூல்போன்றது என்க. அகலம் - விரிவுரை. அன்று, ஏ : அசைகள். (28)

--------------------------------------------------------------------------------

(பா - ம்.) * வண்மலர் வண்டூசு

மேதகு சான்றோர் நூலின் விளைபொருள் விளங்கத் தம்மில்
ஏதுவு மெடுத்துக் காட்டு மெழுவகை மதமுங் கூறும்
போதவை தெளிந்த கிள்ளை பூவையே புறம்பு போந்து
வாதுசெய் வார்கள் வந்தான் மறுத்துநேர் நிறுத்து மன்னோ.

(இ - ள்.) மேதகு சான்றோர் - மேம்பட்ட அப்புலவர்கள், நூலின் விளை பொருள் விளங்க - நூல்களில் அமைந்த பொருள் விளங்க, தம்மில் - தம்முள், ஏதுவும் எடுத்துக்காட்டும் எழுவகை மதமும் கூறும்போது - ஏதுவும் உதாரணமும் எழுவகை மதமும் கூறும்போது, அவை தெளிந்த கிள்ளை பூவையே - அவற்றைக் கேட்டுத் தெளிந்த கிளியும் நாகணவாய்ப் பறவையுமே, புறம்பு போந்து - வெளியே வந்து, வாது செய்வார்கள் வந்தால் - வாதஞ்செய்வார்கள் வந்தால், மறுத்து நேர் நிறுத்தும் - அவர்கள் கொள்கையை மறுத்துத் தங்கொள்கையை நிலைநாட்டும்.

ஏதுவும் எடுத்துக்காட்டும் தமது மேற்கோளை நிலைபெறுத்துதற் பயத்தன. எழுவகை மதமாவன - உடன்படல், மறுத்தல், பிறர் மதம் மேற்கொண்டு களைதல், தான் நாட்டித் தனாது நிறுப்பு, இருவர் மாறுகோள் ஒருதலை துணிதல், பிறர் நூற் குற்றங் காட்டல், பிறிதொடு படான் றன்மதங்கொளல் என்பன. எண்ணும்மை தொக்கன. நூற்பொருள் விளங்க ஏது திருட்டாந்தங்களும் எழுவகை மதம் முதலியவும் இடையறாது கூறுதலின் கிளியும் பூவையும் அவற்றைப் பயின்று கூறுவ வாயின என்க. அவையே அங்ஙனஞ் செய்யுமென அச்சான்றோர் பெருமை கூறியவாறு. மன்னும் ஓவும் அசைகள்.

"பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலை யாமே"
என்னும் பிள்ளையார் தேவாரமும்,

"உள்ள மாருரு காதவர் ஊர்விடை
வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாம்
தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்"

என்னும் பெரிய புராணச் செய்யுளும் இங்கே சிந்திக்கற் பாலன. (29)

[கலி விருத்தம்]

ஆய வாறெண் புலவரு மாய்ந்துணர்
பாய கேள்விப் பயன்பெற மாட்சியாற்
றூய பாட றொடங்கினர் செய்துகொண்
டேய வாறிருந் தாரந்த வெல்லைவாய்.

(இ - ள்.) ஆய ஆறு எண் புலவரும் - அந்நாற்பத்தெட்டுப் புலவர்களும், ஆய்ந்து உணர் பாய கேள்விப் பயன் பெற - (தாம்) ஆராய்ந்து தெளிந்த பரந்த நூற்கேள்வியின் பயன் விளங்க, மாட்சியால் தூய பாடல் தொடங்கினர் செய்துகொண்டு - மாண்புடனே தூய பாடல்களைத் தொடங்கிப் பாடிக்கொண்டு, ஏயவாறு இருந்தார் - தம்மிச்சை வழியே இருந்தனர்; அந்த எல்லைவாய் - அப்பொழுது.

பயனைப் பிறரும் பெறுதற்பொருட்டு என்றுமாம். தொடங்கினர் : முற்றெச்சம். ஏயவாறு என்பதற்கு இறைவர் பணித்தவாறு என்றுரைத்தலுமாம். (30)

பலருஞ் செய்த பனுவலு மாண்பொருண்
மலருஞ் செல்வமும் சொல்லின் வளமையுங்
குலவுஞ் செய்யுட் குறிப்புமொத் தொன்றியே
தலைம யங்கிக் கிடந்தவத் தன்மையால்.

(இ - ள்.) பலரும் செய்த பனுவலும் - அப்புலவர் பலருஞ் செய்த பாட்டுக்கள் அனைத்தும், மலரும் மாண்பொருள் செல்வமும் - (உரை காண்போர் அறிவிற்கேற்றவாறு) விரியும் மாட்சிமையுடைய பொருள் விழுப்பமும், சொல்லின் வளமையும் - சொல் வளப்பமும், குலவும் செய்யுள் குறிப்பும் - செய்யுளிலே குறிப்பிற்றோன்றும் பொருளும், ஒத்து ஒன்றி - ஒரு நிகரவாகப் பொருந்துதலால், தலைமயங்கிக் கிடந்த - (வேறுபாடு அறிய முடியாது) தலைமயங்கிக் கிடந்தன; அத் தன்மையால் - அதனால்.

பனுவல் - பாட்டு. குறிப்பு - வியங்கியம். கிடந்த. அன்பெறாத பலவின்பால் முற்று. (31)

வேறு பாடறி யாது வியந்துநீர்
கூறு பாட லிதுவென்றுங் கோதிலென்
தேறு பாட லிதுவென்றுஞ் செஞ்செவே*
மாறு பாடுகொண் டார்சங்க வாணரே.

(இ - ள்.) வேறுபாடு அறியாது - வேறுபாடு உணராமல், வியந்து தம்முள் வியப்புற்று, நீர் கூறு பாடல் இது என்றும் - நீர் கூறிய பாடல் இதுதான் என்றும், கோது இல் என் தேறுபாடல் இது என்றும் - குற்றமில்லாத எனது தெளிந்த பாடல் இதுதான் என்றும், சங்க வாணர் செஞ்செவே மாறுபாடு கொண்டனர் - சங்கப் புலவர்கள் ஒருவருக்கொருவர் நேரே மாறுபாடு கொண்டனர்.

செஞ்செவே - செவ்வையாக; நன்றாக. வாணர் : மரூஉ. (32)

மருளு மாறு மயக்கற வான்பொருள்
தெருளு மாறுஞ் செயவல்ல கள்வர்சொற்
பொருளு மாமது ரேசர் புலவர்முன்
அருளு நாவல ராய்வந்து தோன்றினார்.

--------------------------------------------------------------------------------

(பா - ம்.) * செஞ்சவே.

(இ - ள்.) மருளுமாறும் - மயங்குமாறும், மயக்கு அற வான் பொருள் தெருளுமாறும் - அம்மயக்கம் நீங்க உண்மைப் பொருள் தெளியுமாறும், செயவல்ல கள்வர் - செய்தற்கு வல்ல கள்வரும், சொல் பொருளும் ஆம் மதுரேசர் - சொல்லும் பொருளுமாம் மதுரேசரு மாகிய சோமசுந்தரக் கடவுள், புலவர் முன் அருளும் நாவலராய் வந்து தோன்றினார் - அப்புலவர்கள் முன் அருளுகின்ற ஒரு புலவராய் வந்து தோன்றினார்.

இறைவர் சொல்லும் பொருளுமாதலை, “சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி” என நம்பியாரூரர் தேவாரத்துள் ஓதுதலான் அறிக. (33)

வந்த நாவலர் வந்திக்கு நாவலர்
சிந்தை யாகுலஞ் செய்ய மயக்குறும்
பந்த யாப்பைக் கொணர்கெனப் பாவலர்
எந்தை யீங்கிவை யென்றுமுன் னிட்டனர்.

(இ - ள்.) வந்த நாவலர் - அங்ஙனம் வந்த நாவலராகிய இறைவர், வந்திக்கும் நாவலர் சிந்தை ஆகுலம் செய்ய மயக்குறும் - தம்மை வணங்கும் புலவர்களின் மனம் வருந்த மயக்கும், பந்த யாப்பைக் கொணர்க என - தளையமைந்த செய்யுட்களைக்கொண்டு வருவீராக என்று கட்டளையிட, பாவலர் - அப்புலவர்கள், எந்தை - எம்தந்தையே; ஈங்கு இவை என்று முன் இட்டனர் - இங்குள இவையே என்று அவற்றைக்கொண்டு வந்து திருமுன் வைத்தனர்.

பந்தம் தளை. யாப்பு - செய்யுள் என்னும் பொருட்டு. கொணர் கென : அகரந்தொகுத்தல். (34)

தூய சொல்லும் பொருளின் றொடர்ச்சியும்
ஆய நாவல ரவ்வவர் தம்முது
வாய பாடல் வகைதெரிந் தவ்வவர்க்
கேய வேயெடுத் தீந்தன ரென்பவே.

(இ - ள்.) தூய சொல்லும் பொருளின் தொடர்ச்சியும் ஆய நாவலர் - தூய சொல்லும் தொடர்ந்த பொருளுமாகிய அந்நாவலர் பெருமான், அவ்வவர்தம் முதுவாயபாடல் - அவ்வப்புலவர்களின் பொருள் முதிர்ச்சி வாய்ந்த பாடல்களின், வகை தெரிந்து - வேறுபாடுகளை அறிந்து, அவ்வவர்க்கு ஏயவே - அவ்வவர்க்கு மனம் பொருந்துமாறு, எடுத்து ஈந்தனர் - எடுத்து அளித்தனர்.

பொருளின் றொடர்ச்சி என்பதனைத் தொடர்ந்த பொருள் என மாறுக. சொல்லும் பொருளுமாம் என்பதற்கு மேல் எடுத்துக்காட்டினமை காண்க. இதற்குச் சொல்லின் தொடர்ச்சியும் பொருளின் றொடர்ச்சியும் ஆராய என்றுரைப்பாருமுளர். முதுவாய பாடல் என்பதற்கு முதிர்ந்த வாயிடத்தவான பாடல் என்றுரைத்தலுமாம். என்ப : அசை. (35)

வாங்கு சங்கப் புலவர் மனங்களித்
தீங்கு நீரெம ரோடு மொருத்தராய்
ஓங்கி வாழ்திரென் றொல்லெனத் தங்களைத்
தாங்கு செம்பொற் றவிசி லிருத்தினார்.

(இ - ள்.) வாங்கு சங்கப்புலவர் - அவற்றை வாங்கிய சங்கப் புலவர்கள், மனம் களித்து - மனமகிழ்ந்து, நீர் எமரோடும் ஒருத்தராய் ஈங்கு ஓங்கி வாழ்திர் என்று - நீர் எம்முடன் ஒருவராய் இங்கே சிறந்து வாழ்வீராக என்று கூறி, ஒல்லென - விரைந்து, தங்களைத் தாங்கு செம்பொன் தவிசில் இருத்தினார் - தங்களைத் தாங்குகின்ற சிவந்த பொன்னாலாகிய பலகையில் இருத்தினார்கள்.

ஒல்லென, விரைவுக் குறிப்பு, ஒல்லென இருத்தினார் என்க. (36)

பொன்னின் பீடிகை யென்னும்பொன் னாரமேல்
துன்னு நாவலர் சூழ்மணி யாகவே
மன்னி னார்நடு நாயக மாமணி
என்ன வீற்றிருந் தார்மது ரேசரே.

(இ - ள்.) பொன்னின் பீடிகை என்னும் - பொற்பலகை என்னும், பொன் ஆரமேல் - பொன்னாரத்தில், துன்னும் நாவலர் சூழ் மணியாக மன்னினார் - பொருந்திய நாற்பத்தெண் புலவரும் சுற்றிலும் பதித்த மணிகளாக இருந்தனர், மதுரேசர் - சோமசுந்தரக்கடவுள், மாநடு நாயகம் மணி என்ன வீற்றிருந்தார் - பெருமை பொருந்திய நடுநாயகமணி என்னுமாறு வீற்றிருந்தனர்.

நாயகமணி - தலைமை மணி. (37)

நதிய ணிந்தவர் தம்மொடு நாற்பத்தொன்
பதின்ம ரென்னப் படும்புல வோரெலாம்
முதிய வான்றமிழ் பின்னு முறைமுறை
மதிவி ளங்கத் தொடுத்தவண் வாழுநாள்.

(இ - ள்.) நதி அணிந்தவர் தம்மொடும் - கங்கையைத் தரித்த இறைவரோடும், நாற்பத்தொன்பதின்மர் என்னப்படும் புலவோரெலாம் - நாற்பத்தொன்ப தின்மரென்று கூறப்படும் புலவர்களனைவரும், பின்னும் முதியவான் தமிழ் - மீண்டும் தொன்மையுஞ் சிறப்புமுடைய தமிழ்ப்பாக்களை, முறை முறை மதிவிளங்கத் தொடுத்து - முறை முறையாகக் கற்போர்க்கு அறிவு விளங்கத் தொடுத்து, அவண் வாழுநாள் - அங்கு வாழும்பொழுது.

தமிழ் என்றது தமிழ்ச் செய்யுட்களை யுணர்த்திற்று. முதிய என்றது தமிழுக்கு அடை. மதிவிளங்க என்பதற்குப் புலமைத்திறம் வெளிப்பட என்றுரைத்தலுமாம். (38)

[கலிநிலைத்துறை]

வங்கிய சேகரன் வங்கிய சூடா மணிதன்னைப்
பொங்கிய தேசார் முடிபுனை வித்துப் புவிநல்கி
இங்கியல் பாச வினைப்பகை சாய விருந்தாங்கே
சங்கியல் வார்குழை யானடி யொன்றிய சார்புற்றான்.

(இ - ள்.) வங்கிய சேகரன் - வங்கிய சேகரபாண்டியன், வங்கிய சூடாமணி தன்னை - வங்கிய சூடாமணிக்கு, பொங்கியதேசு ஆர் முடி புனைவித்து - விளங்கிய ஒளி நிறைந்த முடி சூட்டி, புவிநல்கி - புவியாட்சியை அளித்து, இங்கு இயல்பாசவினைப்பகைசாய இருந்து - இம்மையில் அமைந்த வினைப்பாசம் என்னும் பகைமை கெட இருந்து, ஆங்கே சங்கு இயல்வார் குழையான் அடி ஒன்றிய சார்பு உற்றான் - மறுமையிற் சங்கினாலமைந்த நீண்ட குழையினையுடைய சிவபெருமான் திருவடியிற் கலத்தலாகிய வீடுபேற்றை அடைந்தனன்.

வங்கிய சூடாமணிக்கு என நான்கனுருபாகத் திரிக்க. பாசவினை - வினைக் கயிறு; “பாசமாம் வினைப் பற்றறுப்பான்” என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுளும் நோக்குக. சார்பு - முத்திநிலை என்னும் பொருட்டு. (39)

ஆகச் செய்யுள் 2432.



--------------------------------------------------------------------------------

1 comments:

Murugeswari Rajavel said...

அரிய தகவல்கள் அறிந்தோம்.நன்றி!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்,
வணக்கமும் ஐயா!