நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்

தாராபுரம் கொழிஞ்சிவாடியில் குழந்தைப் பருவத்தில் வளர்ந்து, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்து இணையற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்த நாகேஷ் இயற்கை எய்திவிட்டார். பலருக்கும் இரண்டு பெயர் வீட்டில் இருக்கும்: official பெயர் (கல்வி, கோயில், ...) பயன்பட நாகேஸ்வரன். முதன்முதலில் நடித்த நாடகத்தில் நாகேஸ்வரனுக்கு முதற்பரிசு அளிக்கிறேன் என்று இந்த official பெயர் சொல்லிப் பரிசளித்தவர் எம்ஜிஆர். நாகேஷைக் கூப்பிடச் செல்லப்பெயர்: குண்டுராவ்.

மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆனது. ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்கள்" என்பர். தை, தக்கா என்று மேடையில் குதித்து அமர்க்களம் செய்து எம்ஜிஆரிடம் பரிசு பெற்றவர் நகைஞர் நாகேஷ்!

ஆட்டுக்கல்லைப் போல் தான் - ஆண்டவன்! ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், "உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?' என்றார். சிரித்தபடியே நாகேஷ், "உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா... அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா... மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல் தான். ஆண்டவன் "அம்மை' என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது' என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. "சிரித்து வாழ வேண்டும்' என்ற தன்வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருக்கிறார்.

அபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷைக் கவிஞர் கண்ணதாசன் வாழ்த்திய விருத்தம் ஒன்று உண்டு. சூரி என்ற மருத்துவராக மறைந்த நாகேஷ் நடிக்க, கவியரசர் தானாகவே வருவார்.

அந்த விருத்தத்தைத் தருகிறேன்:

அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்
பெருமருந்து உயர்பக்தி என்பதைப் பெரியவர்பலர் பேசுவர்
சுரமருந்தென எதனையோதரும் சூரி என்ற மருத்துவர்
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே !


சுர மருந்து = medicine for fever (சுரம் = காய்ச்சல் நோயின் வடசொல்). 'யானை மெல்லிசானால் தோல்போர்த்திய உடம்பிருக்குமே அப்படி நாகேஷின் உடல்வாகு, அவர் காலமெல்லாம் வாழி' என மங்கலிக்கிறார். பாட்டைக் கேட்டு நாகேஷ் 'அதுதான் கண்ணதாசன்' என்று வியப்பார், 'அதுதான் (டாக்டர்) ஃபீஸ்' என்று அதிர்வெடியைப் போட்டுவிட்டு எழுந்து செல்வார் கவிஞர் :-) தமிழர் நெஞ்சினில், காணொளிகளில் காலமெல்லாம் வாழ்க!

நா. கணேசன்

        எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

       அரும ருந்துகள் போன்ற வர்தமிழ் 
             அரச ராம்திரு வள்ளுவர் 
       பெரும ருந்(து)உயர் பக்தி  என்பதைப் 
             பெரிய வர்பலர் பேசுவர் 
       சுரம  ருந்தென எதனை யோதரும் 
             சூரி என்றம  ருத்துவர் 
       கரிமெ லிந்தது போல்மெ லிந்தவர் 
             கால காலங்கள்* வாழ்கவே! 

 (*இங்கு, மெல்லின ஒற்று 'ங்'' அலகிடப்படாமல் விளச்சீராக ஒலிக்கும்). 
வாய்பாடு: புளிமா விளம் மா விளம் மா விளம் விளம் 
1,5 மோனை.  நன்றி: சந்தவசந்தம் குழுமம் 

நாகேஷின் பேட்டி (வானொலியில்):
http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_31.html

http://tfmpage.com/forum/archives/23209.5180.07.11.34.html
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=4739&postdays=0&postorder=asc&start=90
நடிகர் நாகேஷ்
''ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகன் ஆக்கினார்கள்!''

தமிழ்ப்பட உலகில் தான் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில் கூட நினைத்தது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னால், மாம்பலம் கிளப் ஹவுஸ் விடுதியில், படுக்க இடமின்றி 'மொபைல் நாகேஷா'கத் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் தனக்கு ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூடச் செய்து பார்த்தது கிடையாது.

''காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; கைதட்டினார்கள். 'நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான்' என்று அவர்களே முடிவுகட்டிவிட்டார்கள். ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்'' என்கிறார் நாகேஷ்.

1933-ம் வருஷம் செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர் நாகேஷ். நிஜப்பெயர் குண்டுராவ். 1951-ம் வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதியைத் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார். அன்றுதான் அவருக்கு வைசூரி போட்டது. அதன் பலனாக அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிக் அழுதார். தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று நினைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், படிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத் சென்று ரேடியோ கம்பெனி ஒன்றில் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு சென்னையில் குடியேறி, ரயில்வே ஆபீசில் என்.ஜி.ஓ-வாக வேலைக்கு அமர்ந்தார்.

''உண்மையைச் சொல்கிறேன்... எனக்குக் கொடுத்த சம்பளம் தண்டம். நான் ஒழுங்காகவே வேலை செய்யமாட்டேன். நாடக வசனம்தான் உருப்போட்டுக்கிட்டிருப்பேன். நாலு மணி அடிச்சா ஏதாவது சாக்கு சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். ஒரு நாள், மேல் அதிகாரி எனக்கு அனுமதி கொடுக்கமாட்டேன்னுட்டார். 'அப்படின்னா நான் போன வாரம் கடனா கொடுத்த எட்டணாவைத் திருப்பிக் கொடுங்க, சார்!' என்று கேட்டு எல்லார் எதிர்லேயும் அவர் மானத்தை வாங்கிவிட்டேன். பாவம், அவர்கிட்டே எட்டணா கூட இல்லே. மரியாதையா என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்.

எப்படி எனக்கு நடிப்பில் ஆசை வந்ததுன்னு கேட்கறீங்களா... சொல்றேன். ஒரு நாள் மாம்பலம் தேவி பாடசாலையில் ஒரு நாடக ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதுலே ஒரு காரெக்டர் சரியா டயலாக் பேசவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் டைரக்டரைப் பார்த்து 'இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமே' என்று சொல்லிப் பேசிக் காட்டினேன். ஆனால், அவர் என்னை அலட்சியப்படுத்திவிட்டார். அன்று முதல் எனக்கு நாடகத்திலே நடிக்கணும்னு ஒரு வெறி ஏற்பட்டது. ஆபீஸ்லே 'எங்கே இன்பம்?' என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளவு தான்... நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுச்சு. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி, 'தாமரைக் குளம்' என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டுப் போய் அதுலே நடித்தேன். ஆனால், பெயரும் வரல்லே; எதிர்பார்த்த பணமும் வரல்லே..!''

அதற்குப் பிறகுதான் நாகேஷ் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. நாகேஷை தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, சாப்பாடும் டானிக்கும் கொடுத்து, நல்ல பர்ஸனாலிட்டியாக்கப் பாடுபட் டார். பட முதலாளிகளிடமும் டைரக்டர்களிடமும் முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு ஒரு சிறு பாகம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டு மானால் என் கான்ட்ராக்டில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள் ளுங்கள்'' என்று சொல்லுவாராம். ''பாலாஜி எனக்குச் செய்த உதவி களை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று சொன்னபோது நாகேஷின் கண்கள் கலங்கின.

எல்லோரையும் சிரிக்க வைக்கும் தான், சொந்த வாழ்க்கையில் சிரிக்கமுடியவில்லை என்கிறார் அவர். அதுவும் இந்த சினிமா வாழ்க்கையின் காரணமாக, சாகும் தறுவாயில் இருந்த தன் தாயாரைக் காணமுடியாமலேயே போய் விட்டதை நினைத்து நினைத்து ஏங்குகிறார். ''இந்தப் போலி வாழ்க்கை அருவருப்பைத் தருகிறது. மனைவியுடன் பேசும்போதுகூட சினிமாவில் நடித்த ஒரு சீன்தான் ஞாபகம் வருகிறது. ஆப்த நண்பனிடம் 'நாளைக்குக் கட்டாயம் ஆறு மணிக்குச் சந்திக்கிறேன்' என்றால், அவன் 'என்னடா, உண்மையா சொல்றயா, இல்லே இதுவும் நடிப்பா?' என்கிறான். எது அசல், எது போலி என்றே புரியமாட்டேங்குது சார்'' என்கிறார் அவர்.

''வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். 'கலையைக் காப்பாற்றுகிறேன்' என்று நான் சொல்லத் தயாராக இல்லை. 'கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது' என்று எல்லோரும் நினைத்தால், கலையும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்'' என்கிறார்.

மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆயிற்றாம். ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்களாம்.

நாகேஷூக்கு ஒரே ஒரு ஆசை... 'அமெரிக்கா சென்று நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்!'

7 comments:

திகழ்மிளிர் said...

அருமையான செய்தி

தங்களின் இடுகையின் வாயிலாக நகைஞர் (comedy actor)என்னும் சொல்லைத் தெரிந்துக் கொண்டேன்
மிக்க மகிழ்ச்சி

அன்புடன்
திகழ்

kalyangii said...

very good article about amarar naagesh. even print media or visual media also not given this type of details abt naagesh. vaalthukkal.
anbudan
kalyan
kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

கானா பிரபா said...

முழுமையான ஒரு சிறந்த தொகுப்பால் அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு இன்னொரு மகுடம் இட்டிருக்கின்றீர்கள்.

இளங்கோ said...

நம்மல மாதிரி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு பெரும் இழப்பு.


பின்குறிப்பு:
என்ன காரணங்கள்னு என்னால சொல்ல முடியல.. The Andy Griffth Show (1960-1968 in USA) TV sitcomல வர Don Knottsக்கும் (Barney Fife character), நம்ம நாகேஷ்க்கும் நிறைய ஒற்றுமை இருக்கற மாதிரி எனக்கு தோணும்.

ஜெஸிலா said...

ஏன் எப்போதும் நாம் ஒரு கலைஞர் இறந்த பிறகே அவரை பற்றி எழுதுகிறோம், நிறைய விஷயம் அவரைப் பற்றி ஆர்வமாக தெரிந்து கொள்கிறோம்!? நிறைய தகவல் தந்த கட்டுரை. அருமை. நன்றி.

ச்சின்னப் பையன் said...

அருமையான தகவல்கள்... நன்றி...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்பின் ஐயா,

நகைஞர் நாகேஷ் - அருமையான பதிவு .....எத்துனை தகவல்களைத் திரட்டியுள்ளீர்கள்......!!