ஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என் கடிதம்

சென்னை மற்றும் கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் இதழ் தென்றல் அழகான பொலிவுடன் அச்சிலும், இணையத்திலும் வாசகர்களைக் கவர்ந்து வருகிறது. http://www.tamilonline.com/thendral/

முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்களின் பேட்டி:

http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=87&cid=4&aid=4644

http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=88&cid=4&aid=4709

அரிய பல தகவல்கள் உள்ள அச் செவ்வியில் ஒரு கருத்து தற்போது நடப்பில் மாறாக உள்ளது.

"தமிழ் படிக்காதவர் எத்தனை பேர்? பள்ளியில் தமிழைப் படிக்காமல், பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள்12,059. எந்த ஆண்டும் சதவீத அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்தச் சிலர் தமிழ் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் சிலர் தவிர்த்து எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறுபல வடிவங்களில் வந்துகொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதுகூட இல்லை."

இக்கருத்திற்கு என் பதிலைத் தென்றல் (ஏப்ரல், 2008) இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். அதனைத் தங்களின் மேலான பார்வைக்கு வெளியிடுகிறேன்.

http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=89&cid=16&aid=4817

வாசகர் கடிதம்

அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் அரிய நேர்காணலை வெளியிட்டமைக்காகத் தென்றலுக்கு நன்றியும் பாராட்டும். 'குலோத்துங்கன்' அவரது புனைபெயரை விளக்கிக் கட்டுரைத் தொடக்கமே சிறப்பாய் இருக்கிறது. மரபுக்கவிதை படைக்கும் இருவர் -- வா.செ.கு., ஹரிகிருஷ்ணன் --அளவளாவியது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தமிழக முதல்வர் கலைஞர் முரசொலி அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில் தன்னைக் குலோத்துங்கனின் சேனாபதி கருணாகரன் என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். கலைஞர் சொற்பொழிவு இங்கே. சென்ற 30-35 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டிலே பொறியியல் படித்தவர் மனங்களைத் தன் நேர்மை, உழைப்பு, அறிவியல் கட்டுரைகள், சொல்லாற்றல், தமிழ் உணர்வு, புலமை கொண்டு ஈர்த்தவர் துணைவேந்தர் வா.செ.கு. கொங்கின் குக்கிராமம் ஒன்றிலே பிறந்து வாழ்வில் பல பட்டங்களும் பதவிகளும் தன்னைத் தேடிவரச் செய்த முனைவர்.

தமிழைச் செவ்வியல் மொழியாக என் நண்பர்கள் பேரா. ஜார்ஜ் ஹார்ட், சென்னை ஆசியவியல் நிறுவனம் ஜான் சாமுவேல் ஆகியோர் பல்லாண்டுகளாக முயன்று எழுதிய முன்னீடுகளை (proposals) இந்தாலஜி போன்ற மேலைநாட்டுப் பேராசிரியன்மார் சொல்லாடும் இடங்களில் நானும் 10 ஆண்டுகளுக்கு முன்னமே வைத்திருக்கிறேன். மேதகு. அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருக்கையில் டாக்டர் வா.செ.கு. போன்றோர் முயற்சி எடுத்து இரண்டாண்டுகளுக்கு முன் அதிகார பூர்வமாகத் தமிழ் செம்மொழி ஆனது மகிழ்ச்சி. அதிலும், அரசாணையில் 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியம் இருக்கவேண்டும் என வரையறை செய்து இருப்பதனால் வடமொழி தவிர வேறு இந்திய மொழிகளுக்கு அத்தகுதி இல்லை என்றாகிறது.

வா.செ.கு. ஐயா தமிழ்த் தாத்தா உவேசா அவர்களின் தபால்தலை வெளியீட்டுக்குத் தூண்டுகோலாக இருந்தார் என்பதைத் தென்றல் வழியே அறிகிறேன். தமிழ் இணையப் பல்கலை வலைத்தளத்தை TAM/TAB தராதரத்தில் மட்டுமன்றி, வலையாடும் தமிழ்மக்கள் ஒருமித்துப் பயன்படுத்தும் யூனிகோடிலும் ஏற்படுத்த வேண்டுகோளை வைக்கிறேன். இன்று ஆனந்தவிகடன், தென்றல், ஆறாம்திணை, தினமலர் போன்ற பல முக்கியமான வலையிதழ்கள் யூனிகோடுக்கு மாறிவிட்டன. தமிழ் வலைத்திரட்டிகளில் (blog aggregators) இன்று சுமார் 3000 தமிழ் வலைப்பதிவுகள் காணக் கிடைக்கின்றன. அனைத்து வலைப்பதிவுகளும் இந்திய மொழிகளில் யூனிகோடில் தான்.

வா.செ.கு. அவர்களுக்கு மிகவும் பிடித்த பணித்திட்டம் தமிழ் எழுத்துச் சீரமைப்பு. அதை எளிதில் நடைமுறைப்படுத்தும் வழி யூனிகோட் தான். இன்று வா.செ.கு. எழுத்துரு என்றே font இருக்கிறது. அதில் இ/ஈ, உ/ஊ ஏறிய உயிர்மெய்களைப் பிரித்து வைத்திருக்கிறோம். ஆனால், தமிழ் கற்பித்தலுக்கு எளிதாக, உ/ஊ உயிமெய்கள் உடைத்து எழுதப்படல் அவசியம். அப்பொழுதுதான் தமிழ் உயிர்மெய்கள் ஒரு பூரணமான 'ஸிலபரி' (syllabary) என்று காட்ட முடியும். உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுதக் கிரந்தக் குறியீடோ, வாசெகு பரிந்துரையோ, வேறொன்றோ வரட்டும், அறிஞர் குழு முடிவெடுக்கட்டும். ஆனால், மலையாளம் போலத் தமிழிலும் உ/ஊ ஏறிய உயிர்மெய்கள் உடைத்து விரும்புவோர் எழுதலாம் என்ற அரசாணையை டாக்டர் வாசெகு போன்றோர் பெற்றுத் தந்தால் அதற்காக வடிவுடைய 50 சீர்மை எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாகத் தமிழருக்கு வழங்க நாங்கள் தயாராய் இருக்கிறோம்.

எல்லோரும் தமிழ் படிக்கவேண்டும்

'பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டு விடும்?' என்று வா.செ.கு. அவர்கள் கூறியிருக்கிறார்.

இது 1995-ன் நிலைமையாக இருந்திருக்கலாம். ஆனால், 2008-ல் பள்ளிகளில் தமிழ் பயிலும் நிலைமை தனியார் ஆங்கிலக் கான்வென்டுகளால் தலைகீழாக மாறிவிட்டது. நகரங்களில் இன்று மையக்கல்வி வாரியம் (CBSE), மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகள் அரிதாய் இருந்த நிலை மாறி தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளைக் காட்டிலும் அதிகமாக எண்ணிக்கையில் ஏறிக்கொண்டே போகின்றன. இன்று தமிழை ஒரு பாடமாக எடுக்காத பள்ளி மாணவர்கள் தமிழ்நாட்டில் கணிசமாக இருக்கிறார்கள். ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தொகை மாநிலக் கல்வி இயக்ககத்தின் பள்ளி மாணவர்களின் தொகைக்கு நிகராகி வருகிறது. இதைப் பாருங்கள்: அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள். ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எண்ணிக்கை 2053, மாணவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சம். ஆதாரம்:

http://www.tn.gov.in/schooleducation/statistics/tablep3.htm

உலகமயமாதல் என்பதன் ஓர் அங்கமாக ஆங்கிலம் வேலைவாய்ப்பு வசதிகளுக்குத் தேவைதான். ஆனால், தமிழை ஒரு பாடமாகவேனும் பயிலக் கட்டாயமாக்கல் என்பது அரசாங்கச் சட்ட ஆதரவுடன் நிகழவேண்டும். இல்லாவிட்டால், இன்னும் ஒரு பத்தாண்டுகளில் சாதாரண அடுக்களை மொழியாகி விடும் தமிழ். நடுத்தர வர்க்கத்தாரும், மேல்தட்டு நிலையினரும் எழுதவோ, படிக்கவோ தெரியாத ஒரு கூலி மொழியாகிவிடும் அபாயத்தில் இருக்கிறது தமிழ். ஏழை-பணக்காரர், கிராமம்-நகரம் என்ற வேறுபாடில்லாமல் யாவரும் தமிழை ஒரு பாடமாகப் படிக்கவேண்டும். இதில் முரண்நகை என்னவென்றால் தொழில்நுட்பம் கணினி வலைப் பதிவுகளாகவும், சொற்களைக் கொடுத்து எந்த ஓர் அரிய செய்தியையும் நொடியில் துழாவித் தேடெந்திரங்களில் தருவதாகவும், அரிய சங்கீதப் பாடல்கள், சினிமாப் பாட்டுகள் என்று எவற்றையும் யுட்யூப் தளம் போன்றவற்றால் கிடைப்பதற்கும் வழிவகை செய்து விட்டது.

தமிழே வாசிக்கத் தெரியாத ஒரு சமுதாயமாக ஒரு 50 விழுக்காடு மக்களைத் தமிழ்நாட்டின் ஆங்கிலப் பள்ளிகள் உருவாக்குவதால் 'கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா' என்பது தமிழுக்கு உண்மையாகி விடும். ஒரு பாடமாகவாவது தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் பயிற்றப்படல் வேண்டும், அதற்கு அரசு துணைநிற்க வேண்டும்.

நன்றி, நா. கணேசன்

வலைப்பதிவுலகில் அறிஞரின் கருத்து விவாதமேடை ஆனது. உதாரணமாக,

புருனோ, பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2 சதவிதம் தானா?? http://payanangal.blogspot.com/2008/03/2.html

கொத்தனார், தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்! http://elavasam.blogspot.com/2008/03/blog-post.html

ரவிசங்கர், கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி http://tinyurl.com/6kdfo2

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//அதில் இ/ஈ, உ/ஊ ஏறிய உயிர்மெய்களைப் பிரித்து வைத்திருக்கிறோம். ஆனால், தமிழ் கற்பித்தலுக்கு எளிதாக, உ/ஊ உயிமெய்கள் உடைத்து எழுதப்படல் அவசியம். அப்பொழுதுதான் தமிழ் உயிர்மெய்கள் ஒரு பூரணமான 'ஸிலபரி' (syllabary) என்று காட்ட முடியும். உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுதக் கிரந்தக் குறியீடோ, வாசெகு பரிந்துரையோ, வேறொன்றோ வரட்டும்,//

இது பற்றிய மேலதிக விளக்கங்கள், தகவல்கள், தொடுப்புகளைத் தர இயலுமா? நன்றி.

(உங்கள் பதிவில் captchaவை நீக்கினால் உதவியாக இருக்கும். நன்றி)

குமரன் (Kumaran) said...

பேட்டி என்ற சொல்லிற்குப் பதிலாக செவ்வி என்ற சொல்லை இணையத்தில் சில தமிழறிஞர்கள் புழங்குவதைக் கண்டேன். செவ்வி என்ற சொல்லின் விளக்கம் என்ன?

Yazhini said...

ஆங்கிலப் பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து நான் பெரிதும் மதிக்கும் அறிஞர் வா.செ.கு கூறிய புள்ளிவிபரம் பழையதே என்று நானும் எனது மனைவியும் வியந்தோம். சரியான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.நன்றி. தமிழக அரசின் சமீபத்தைய சட்டம் மெட்ரிக் பள்ளிகளை மட்டும் கட்டுபடுத்தும் அல்லவா? மைய அரசு பள்ளிகளில்(சிபிஎஸ் சி) தமிழைப் பாடமாக எடுத்து படிப்பவர்கள் 50-60 % என்று எங்கோ கேட்டேன். சரியான புள்ளிவிபரம் யாராவது தரமுடியுமா?