இணையப் பல்கலைத் தலைவருக்கு முரசொலி விருது



முரசொலி விருதளிப்பு விழா - முனைவர் வா.செ.கு. மற்றும் மூவர் பெற்றனர்

செய்தி - thatstamil.oneindia.in

முதல்வர் உரை:

இந்த விருதுகளை வழங்கி கருணாநிதி பேசியதாவது:

திமுக பொதுக் கூட்டங்கள் பற்றி அண்ணா சிறப்பித்து கூறுகையில், 'எங்கள் பொதுக்கூட்டங்கள் மாலை நேரக் கல்லூரிகள்' என்று குறிப்பிடுவார். அந்த அளவுக்கு கல்லூரியிலே தரப்படுகின்ற கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், உலக வரலாற்றுச் செல்வம் இவைகளையெல்லாம் ஒரு பொதுக்கூட்டத்தில் அறிந்து கொள்ளும் வகையில் திராவிட இயக்கத்தவர்கள் தங்களுடைய பேச்சை அமைத்துக் கொள்வார்கள் என்பது அண்ணாவின் அந்த வர்ணனைக்கு பொருள்.

அந்த மாலை நேரக் கல்லூரியை நாம் சில காலம் நடத்தவில்லை. அந்த குறையை இன்று பேசிய வா.செ.குழந்தைசாமி போக்கி விட்டார். அவர் சொல்லிய, அறிவுறுத்திய அத்தனை அறிவுரைகளையும் ஏற்று, இன்னும் இயற்கை எவ்வளவு காலம் என்னை அனுமதிக்கிறதோ அந்தக்காலம் வரை தமிழர்களுக்காக, தமிழ்நாட்டுக்காக, தமிழகம் வளம் பெறுவதற்காக, வலிமை பெறுவதற்காக உழைப்பேன்.

ஏனென்றால் (சேது சமுத்திரத் திட்டம் குறித்து) அத்துணை வலிமை வாய்ந்த வாதங்களை அவர் இங்கே எடுத்து வைத்தார். இந்தியாவிலே மேலிடத்திலே கூட இன்றைக்கு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். (சேது திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைமையை அமைச்சர் அம்பிகா சோனி குழப்பி வருவதாகக் கூறப்படுவது).

அதை நாம் நம்பியிருக்கின்ற, எதிர்பார்த்து இருக்கின்ற தம்பி டி.ஆர்.பாலுவால் கூட சரி செய்ய முடியுமா? என்கிற ஐயப்பாடு எழுந்துள்ள இந்த நேரத்தில், குழந்தை சாமி பேசிய பேச்சு மாத்திரம், போகவேண்டிய முறையிலே, போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேருமேயானால் நிச்சயமாக சேது சமுத்திர திட்டம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையை நாம் பெறலாம். அப்படிப்பட்ட ஆதாரப்பூர்வமான விளக்கங்களை எல்லாம் அவர் இன்றைக்கு வழங்கியிருக்கிறார்.

வா.செ.குழந்தை சாமியின் புனைப்பெயர் குலோத்துங்கன். சிறந்த சோழ மன்னரான குலோத்துங்கன், கருணாகர தொண்டைமானை தளபதியாக கொண்டு போரை வென்று வெற்றிவாகை சூடினார். இங்கே குலோத்துங்கனாக வா.செ.குழந்தைசாமி உள்ளார். நான் கருணாகரன். அவர் எதிர்பார்க்கிற வெற்றி கிடைத்து-கலிங்கத்துப் பரணி கீதம் முழங்கும்.

இந்த நிகழ்ச்சி உவகையும், உருக்கமும் கலந்தது. முரசொலி மாறனை பற்றி யார் பேசினாலும் என்னால் உரையை கேட்டுக்கொண்டு உட்கார இயலாது. வேதனை வெள்ளத்தில் தள்ளப்படுவேன். சோதனை புயலால் தாக்கப்படுவேன்.

ஆனாலும் தவிர்க்க முடியாமல் இந்த நிகழ்ச்சியிலும் முரசொலி மாறன் பெயரை குறிப்பிட்டேதான் தீர வேண்டும் என்ற நிலையில் உரையாற்றிய ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட காரணத்தால் அவைகளையெல்லாம் நானும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த தியாகத்தைக்கூட அந்த கண்மணிக்காக நான் செய்யாமல் இருக்க முடியுமா என்ற அந்தக் கேள்விக்கு பதிலாகத்தான் என்னை அறிந்தவர்கள் எல்லாம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாறனைபற்றி பேராசிரியர், வாகை சந்திரசேகர், நெப்போலியன் ஆகியோர் பேசும்போதும் என்னையே உற்றுப்பார்த்தனர். நான் அவர்களை அறியாமல் என் கண்களை துடைத்துக் கொண்டது எனக்குத்தான் தெரியும் என்று கருதினேன். அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

மாறனை இழந்து பல வருடங்கள் ஆனாலும் துயரம் அடைகிறேன். அண்ணாவை இழந்து துயரம் அடைந்து வருவது போல, பெரியாரை இழந்து துயரம் அடைந்து வருவது போல, மாறனையும் இழந்து துயரம் அடைகிறேன். மாறனும் இப்போது இல்லை என்று என்னால் சொல்லமுடியவில்லை. அவன் என் உள்ளத்தில் குடி கொண்டுள்ளான். மாறன் என்னை எப்படி நேசித்தான் என்பதை நான் நண்பர்களிடத்தில் சொல்லியிருக்கிறேன்.

நம்முடைய இனம் வாழ, குலம் வாழ, மொழி வாழ சூளுரை மேற்கொள்ளவேண்டிய காலக்கட்டமாகும் இது.

10 ஆண்டுகளுக்கு முன் ஒரு புயல் எழும்பியது. அது இனமோதல் என்ற அளவிற்கு தமிழகத்தில் எழுந்தது. அதற்கான காலம் போர்க்களம் அல்ல. தேர்தல் களமாக அமைந்தது. அதில் திராவிட இயக்கம் வீழ்ந்துவிடும் என்றார்கள். ஆனால் நம்முடைய திராவிட இனத்திற்கு தான் வெற்றி கிடைத்தது.

நம்முடைய நாட்டை வாழ வைப்போம். தமிழர்களின் நாகரீகத்தை, கலாசாரத்தை பண்பாட்டை தரணியெங்கும் பரப்புவோம் என்றார் கருணாநிதி.

2 comments:

kANDHASAMY said...

KARUPPATHAL

Unknown said...

நன்றி கணேசன்,
'என்றும் வேண்டும் இன்ப அன்பு'
ராதாகிருட்டிணன்