மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்

சுஜாதா பற்றிப் பல விமரிசனங்களைப் பதிவுகளில் பார்க்கிறேன். 70களில் பள்ளி மாணவனாக இருந்தபோது வைரங்கள் என்ற கதையில் வடநாட்டான் வந்து கோவையில் தலைமுறைகளாக வைத்திருந்த தன் குறுநிலத்தை வாங்கும்போது ஏற்படும் மனஉளைச்சலைச் சொல்லும். இன்று கோயம்புத்தூரில் வீட்டுவிலை எங்கோ எகிறிவிட்டது. என் பக்கத்து வீட்டு மருத்துவத் தம்பதியர்
(முத்துக்குமாரசாமி - கனகவல்லி) கரையெல்லாம் செண்பகப்பூவைத் திரைப்படம் எடுத்துச் சம்பாதித்த காசைக் கரைத்தனர். அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாப் புலம் அது. கலை, பணம் - இருநோக்கிலும் தோல்வியே. புனைகதைகளையும், சினிமாவையும் தெரியாததால், சுஜாதாவை அதிகம் நான் படிக்க நேர்ந்ததில்லை. அவர் வாராவாரம் மின்னரட்டைக்கு அம்பலம்.காம் என்ற தளத்துக்கு வருவாராம் என்று பதிவுகளில் நேற்றுக் கண்டேன். கணினி முன்னேற்றங்களுக்கு ஜார்ஜ் ஹார்ட் எழுத்துரு, பாலா சாமிநாதனின் எழுதி, முத்தெழிலன் நெடுமாறன் (முத்துவின் முரசு அஞ்சல்), சுரதாவின் பொங்குதமிழ், இ-கலப்பை முகுந்த், இணையம், தமிழ்மணம் போன்ற வளர்ச்சிகளை நேரில் கண்டதால், சுஜாதா இணையம் பற்றி எழுதியவை தமிழ்நாட்டில் புதுமை, ஆனால் வெளிநாடுகளில் அல்ல எனும் உண்மையை உணரமுடிகிறது. அவரது நல்ல கட்டுரைகளைத் தேடியெடுத்து, மதுரை முன்னியம், முனைவர் நா. கண்ணன் தொடங்கி நடத்தும் முதுசொம் போன்ற தரவுத்தளங்களில் வலையேற்ற சுஜாதா அன்பர்கள் முன்வரவேண்டும். அது அன்னாருக்குச் செய்யும் நெடுநாள் அஞ்சலியாக அமையும்.

தமிழன்னை அழுத தருணங்கள் சில. சென்னையிலே கலெக்டராயிருந்த பிரான்சிஸ் வைட் எல்லிசு திருவள்ளுவனாரைச் சமணத் துற்வியாகத் தங்கக் காசுகள் வெளியிட்டவர். திராவிட மொழிக் குடும்பம் சமற்கிருத்தினின்று வேறுபட்ட மூலத்தில் தோன்றியது என்று உலகுக்கு அறிவித்தவர் எல்லீசனே. 35 ஆண்டு கழித்து 1856-ல் நூலாக விரித்தவர் கால்டுவெல் பாதிரியார். எல்லிஸ் இராமநாதபுரஞ் சென்றபோது நஞ்சுண்டு இளவயதில் மாண்டார். அடுத்து வந்த வெள்ளை ஆட்சியருக்குத் தமிழின்பால் நாட்டமில்லை. எல்லிஸ் அகாலத்தில் அகன்றதால், புலவர்கள் அவரிடம் ஒப்படைத்த பொக்கிசங்களைக் கலெக்டர் மாளிகை 'பட்லர்' சுடுதண்ணீர் அடுப்பெரிக்கப் பயன்படுத்தினான். அத்தனை ஓலைச்சுவடிகளும் ஒன்றில்லாமல் ஒழிந்தன, சமணக் காவியங்கள் (உ-ம்: வளையாபதி), பௌத்தப் பொத்தகங்கள், .... 1820களில் தீக்கிரையாயின.

ஏராளமான பழந்தமிழ்ப் புலவர்கள் சேதுபதி, பாலவநத்தம் பொன்னுசாமித் தேவர், பெத்தாச்சி வள்ளல் போன்ற புரவலர்களை நாடித் தஙகியிருந்த சோலை மதுரைத் தமிழ்ச் சங்கம். அன்றைய தாழ்நிலையில் தமிழ்த் திறமையைக் கொண்டு சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என்றெல்லாம் சந்தைப்படுத்திக் காசுபார்க்க முடியாது. 20 - சனவரி - 1920ல் மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம் தீப்பற்றி எரிந்தது, எண்ணிறந்த கருவூலங்களைத் (எ-டு: குறளின் பழைய உரைகள் பல) தமிழ் அன்றும் இழந்துபட்டது. பின்னர் சிங்களக் காடையர்கள் 31- மே- 1981ல் கொளுத்திய யாழ்ப்பாணப் பொது நூல்நிலைய இழப்பு. இத் தீயழிப்பு பற்றிச் சுஜாதா 'ஒரு லட்சம் புத்தகங்கள்' என்னும் சிறுகதை எழுதியுள்ளாராம். இதைத் தேடி அனுப்புங்கள், வலைமலரிலோ, குழுமம் ஒன்றிலோ இடுங்கள். படித்துப் பார்கக ஆசை.

சுஜாதா நவீன இலக்கியத்திற்கு முன்தோன்றிய தமிழ் இலக்கியங்களைப் பலருக்கும் அறிமுகப்படுத்தியும் இருக்கிறார். பிரதமர் மொரார்ஜி தேசாய் அமெரிக்க அதிபர் கொடுத்த விருந்தில்கூட அவரது சிறுநீர் வைத்தியத்தை விளக்கத்தான் வெகுநேரம் செலவிட்டார்(தளைதட்டுகிற) வெண்பாவில் சுஜாதா குறிப்பிடுவார்:

மீசா மறைந்து எமர்ஜென்ஸி விட்டுப்போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் - பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
மூத்திரம் குடிக்க வாரும்!

விமானம் பேசுகிறது (வானமென்னும் வீதியிலே)

என்னை அடைந்தே எனக்குள் நுழைந்துவிட்டீர்!
சென்னைக்குச் செல்கின்ற சிந்தனையோ? - என்னைப்
பறக்கவைக்கும் சக்தி சிலசமயம் உன்னை
இறக்கவைக்கும் எச்சரிக் கை.

சுஜாதாவின் பழந்தமிழ் இலக்கியப் புரிந்துணர்வு பற்றி நியாயமான ஐயப்பாடுகள் பேராசிரியர்களிடம் உண்டு. இப்போது வரும் பல பதிவுகளின் ஒற்றுச் சந்திப் பிழைகளைக் கண்ணுறுங்கால் வெகுஜனப் பத்திரிகைகளில் சுஜாதா போன்றவர்கள் வளர்த்த இலக்கணப்பாடுகளும் க், ச், த், ப் ஒற்றுகள் மிக வேண்டும் இடத்தில் மிகாமைக்கும், தேவையில்லாமல் மிகுதற்கும் காரணம் என்பதை உணரமுடிகிறது. ஆயிரக் கணக்கான காட்டுகளுடன் புத்தகம் தொகுத்து இணையத்தில் வைத்தால் பலருக்கும் பயன்படும்,
சொல்திருத்தி (spell checker) நிரலெழுதத் துணைவகுக்கும்.

சுஜாதா நினைவலைகளை அப்துல் ஜப்பார், ஜெயமோகன், வெங்கட், லக்கிலுக், எல்லே ராம், கண்ணன், கானா பிரபா, இராகவன், பாலா, ... எழுதியனவற்றைத் தமிழ்மணத்தில் கண்டேன். காசி தன்பதிவில் சுஜாதாவை வாரஆசிரியர் என்னும் பகுதியைத் தமிழ்ப்பதிவர்களுக்கு அறிமுகஞ்செய்ய அழைத்தால் வாராரோ என எண்ணிக் கைவிட்டாராம். இணையத்தில் ஒரே எழுத்துக் குறியீட்டில் தமிழர் பலரும் எழுத வேண்டும், இலக்கியங்களை வகைப்படுத்தி வளர்க்க வேண்டும் என்று விரும்பிய சுஜாதா நிச்சயம் வந்திருப்பார் (Note 1), அவர் செந்தமிழ், யூனிக்கோடு, இணையப் பயன்கள் குறித்த கட்டுரை என்னிடம் உளது. 2005ல் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF), ஃபெட்னா (FeTNA) சேர்ந்து டெக்சாஸ் டல்லஸ் நகரில் நடத்திய மாநாட்டு மலர்க்கட்டுரையாக வெளியானது. தமிழறிவர்கள் படித்துச் சிந்திக்க வேண்டிய அக்கட்டுரை அடுத்த மடலில்.

சுஜாதா தமிழை விளித்து 'மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்" சொல்லியவர். தமிழ்த்தாய் தன்னிடம் வந்துசேர்ந்த அம்மகனை மடிநீழலில் இருத்தி இளைப்பாற்றி அருளுவாளாக!

~ நா. கணேசன்

Note 1: http://agaramuthala.blogspot.com/2005/12/adieu-amigos.html
வலைப்பதிவு வந்த புதிதில் சுஜாதா அவற்றை 'டைரிக்குறிப்புகள் / கையெழுத்துப் பிரதிகள் போன்றவை' என்று குறிப்பிட்டதோடு நில்லாமல், 'யார் யார் எப்போ என்னென்ன எழுதிருக்காங்கன்னு ஒவ்வொண்ணா போய் தேட முடியாது. எழுதியிருப்பவற்றைத் தேடி எடுக்கவும் முடியாது. ஆனா வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வரிசைப்படுத்தினால் அது நிறைய விஷயங்களைச் சுலபமாக்கிவிடும். அப்படி யாராவது ஒருங்கிணைக்க முயற்சிப்பார்களா என்று தெரியலை' என்று சொல்லி சில வாரங்களிலேயே தமிழ்மணம் வந்துவிட்டது. இன்று வரை வளர்ந்துகொண்டும் இருக்கிறது. தமிழ் இணைய உலகிற்கு தமிழ் மணத்தின் இந்தப் பங்களிப்பு சிறந்த ஒன்று என்றும் குறிப்பிட விரும்புகிறேன்.

2 comments:

குமரன் (Kumaran) said...

தமிழ் இலக்கிய பொக்கிசங்கள் அடுப்பில் வீழ்ந்தும் நூலக தீயிலும் அழிந்து போனது பெரும் துயரம். அதனை அறியாமல் 'பாவம் ஓரிடம் பழி ஓரிடம்' என்றாற் போல் வேறொரு பிரிவினரைத் திட்டிக் கொண்டிருக்கிறோம் போலிருக்கிறதே.

தமிழநம்பி said...

"சுஜாதா தமிழை விளித்து 'மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்" சொல்லியவர். தமிழ்த்தாய் தன்னிடம் வந்துசேர்ந்த அம்மகனை மடிநீழலில் இருத்தி இளைப்பாற்றி அருளுவாளாக!" -என்று முடித்திருக்கின்றீர்கள்! மிக அருமை!
அன்பன்,
தமிழநம்பி