உசாத்துணை - நாவலர் மாநாடு விழா மலர், 1969

 உசாத்துணை

அ.வி.ம

(நாவலர் மாநாடு விழா மலர், 1969.

நல்லூர், யாழ்ப்பாணம். பக். 57-60

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, கொழும்பு.)

 https://noolaham.net/project/88/8789/8789.pdf

நாவலர் பெருமான் சைவத்துக்கும் தமிழுக்கும் செய்து தந்த படைப்புக்களைப் பற்றித் தமிழ் கூறு நல்லுலகம், அவருக்குப் பின் சென்று கழிந்த ஒரு நூற்றாண்டாக வியந்தும் நயந்தும் பேசி, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது. பள்ளியிற் பயிலும் பச்சிளஞ் சிறார் முதற் பல்கலைக் குரிசில்கள் வரையும் படித்துப் பயன் கொள்ளத்தக்க பல நூல்களை அப் பெருமான் ஆக்கியும், ஆய்ந்து அச்சேற்றியும் அளித்துள்ளார். இதனால், இளைஞரும் முதிர்ந்தோரும் இவரைத் தம் உசாத்துணையாகக் கொள்ளக் காணலாம். தமிழ் என்னும் கடலிலே இலக்கண வழுக்களாகிய பாறைகளையும், ஐயந் திரிபுகளாகிய சுழிகளையும் விலக்கி, இன்பமாக முன்னேறிச் சென்று எய்தவேண்டிய துறையை அடைவதற்கு இவருடைய படைப்புகளே எமக்கு ஏமப்புணையாக உதவுகின்றன.

கல்வியை வளர்த்துப் பரப்புவதற்கு வாழும் தமிழே வாய்ப்புடைய கருவியெனக் கண்டு பேச்சு வழக்கிலுள்ள தமிழை இலக்கண நெறிக்கமையச் செம்மைபடுத்தி, இனிய பல உரைநடை நூல்களை எழுதி உதவியவர் நாவலர். இவருடைய உரைநடை நூல்களிலே பண்டை உரையாசிரியர்களின் இலக்கணச் சீர்மையும் பேச்சு வழக்குத் தமிழின் நேர்மையும் கலந்துள்ளமையால், அவை காதுக்குங் கருத்துக்கும் இனிக்கின்றன. இன்று, பேச்சு வழக்கிலே பிழைபட வழங்கும் எத்தனையோ சொற்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றின் திருந்திய வடிவத்தை நாம் நாவலருடைய பாலபாடங்களிற் பார்க்கிறோம். அனுபானம். அந்தியேட்டி, சர்த்தி, புடவை, பூசினிக் காய், என்பன போன்ற சொற்களைத் திருத்தமாக எழுதத் தெரியாதவர், படித்தவருள்ளேயே பலர் இன்றும் இருக்கின்றனர். அநாதப் பிள்ளை (அ+நாத: தலைவனை இல்லாத) என்ற சொல்லை அநாதைப் பிள்ளை என்று எழுதுவோர் எத்தனை பேர்? முதற் புத்தகம் என்று எழுதுவதறியாமல் 'முதலாம் புத்தகம்' என்று பிழையாக எழுதுவோர் எத்தனை பேர்? இருபத்து மூன்று, நூற்று முப்பத்து மூன்று, ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பது என்பன போன்ற எண்ணுப் பெயர்களை இருபத்தி மூன்று' 'நூற்றி முப்பத்திமூன்று' 'ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பது' என்று பிழையாக உச்சரிப்பதையும் எழுதுவதையும் நாம் நாளும் காண்கிறோம். இன்னோரன்ன சொற்களையும் சொற்றொடர்களையும் எவ்வாறு திருத்தமாக எழுத வேண்டுமென்பதை, நாவலர் முதற் பாலபாடத்திலிருந்தே கற்பித்துள்ளார். பிழை யில்லாமலே பேசப் பழகு என்பது நாவலரின் முதற் பால பாடத்திலே முப்பத்தேழாம் பாடத்திலே வரும் பதினொராம் வாக்கியம். இப் பாலபாடங்களை முறையாகக் கற்றுவரும் மாணாக்கர் பாழ்ங்கிணறு, வரகுசோறு, புழுகுசம்பா, கீழ் காற்று, மேல் காற்று (இவை முதற் புத்தகத்தில் வருவன) ஏரிகரை, விறகு கட்டு (இவை இரண்டாம் புத்தகத்தில் வருவன) என்பன போன்ற சொற்றொடர்களைப் புணர்ச்சி வழுவில்லாது திருத்தமாக வழங்கப் பழகிக் கொள்வர்.

இனிப் பழைய சொற்களும், சொற்றொடர்களும் வாக்கிய அமைப்புக்களும் காலப்போக்கிற் புதுவடிவம் பெற்று, உலக வழக்கில் நிலைபெற்றுள்ள விடத்து, நாவலர் அவற்றையும் தழுவிக் கொண்டுள்ளார். வெயில் என்பது பழைய வடிவம்; வெய்யில் என்பது புதுவடிவம்; நாவலருடைய பாலபாடங்களில் வெய்யில் என்ற சொல்லே பலகாலும் பயின்று வருகின்றது. இவ்வாறே வியர், வியர்வை என்ற பழைய சொற்களுக்குப் பதிலாக, ‘வெயர்வை' என்ற புதுவடிவத்தையே நாவலர் பெரும்பாலும் கையாண்டுள்ளார். குற்றுதல், பழையது; குத்துதல் புதியது. நாவலர், அரிசி குற்றுகிறேன் (முதற் புத்தகம் 13 ஆம் பாடம்) என்றும், 'நெற்குத்துதல்' (நான்காம் புத்தகம், கற்பு) என்றும் ஆண்டு காட்டியுள்ளார். 'மற்று' என்ற இடைச் சொல்லடியாகப் பிறக்கும் பெயரெச்சம் மற்றை என்று வருவதே பண்டை வழக்கு; பிற்காலத்தில் அது மற்ற என்று வழங்குகிறது. நாவலர் இரு வடிவங்களையும் ஆண்டுள்ளார்.

(உ-ம்) 1. மற்றைப் பெண்கள் என்றது கன்னியரையும் பிறன் மனைவியரையும் பொதுப் பெண்களையும். (நான்காம் புத்தகம். வியபிசாரம்)

2. மற்ற நாள் உதய காலத்திலே சிவபத்தர்கள் எல்லாருங் கூடிவந்து, சுந்தர மூர்த்தி நாயனாருக்குப் பரவையாரை விதிப்படி விவாகஞ் செய்து கொடுத்தார்கள். (பெரிய புராண வசனம், சுந்தரமூர்த்தி நாயனார் புராணம். பக்கம் 21)

இவை 'கடிசொல்லில்லைக் காலத்துப் படினே. (தொல். எச்சவியல் சூ. 56) என்ற தொல்காப்பியர் விதியால் அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறே ஏனைய வழக்குக்களையும் காணலாம்.

பொரூஉப் பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமையை 'இன்' உருபு கொடுத்து எழுதுவதே பண்டை வழக்கு. தொல்காப்பியர் இதனை

'இதனின் இற்று இது' என்ற வாய்பாட்டால் விளக்குவர் (தொல். சொல். வேற்றுமை இயல். சூ.16) நன்னூலாரும் 'இன்' (இல் என்பது இன் உருபின் வேற்றுவடிவம்) உருபே கூறியுள்ளார். ஆனால், இக்கால வழக்கில் இது வேறுபட்டு வருவதை உணர்ந்த நாவலர், தாம் எழுதிய இலக்கணச் சுருக்கத்திலே இப் புது வழக்குக்கு விதி செய்து தந்துள்ளார் (இவர் பொரூஉப் பொருளை எல்லைப் பொருள் என்பர்.)

"ஒரோவிடத்து எல்லைப் பொருளிலே காட்டிலும், பார்க்கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் சொல்லுருபுகளாக வரும் (இலக்கணச் சுருக்கம், அங்கம் 211)

'அவனைக் காட்டிலும் பெரியனிவன்' என்றும் 'இவனைப் பார்க்கிலுஞ் சிறியனவன்' என்றும் அவர் இதற்கு உதாரணமுங் காட்டியுள்ளார். ஆயினும், தம்முடைய பாலபாடங்களில் இந்த அமைப்புக்களோடு, இன்னுஞ் சில புதிய அமைப்புக்களையும் தந்துள்ளார்.

உ-ம்: 1. என்னைப் பார்க்கினும் அவன் நன்றாக வாசிப்பான்.

2. பணத்தினும் பார்க்கப் பெரியது நல்ல பெயர். (முதற் பாலபாடம், 28ஆம் பாடம்)

3. கல்வியும் அறிவும் நல்லொழுக்கமும் செல்வமும் அழகும் தமக்குப் பார்க்கிலும் பிறருக்கு மிகப் பெருகல் வேண்டு மென்று நினைத்தல் வேண்டும். (பாலபாடம், நான்காம் புத்தகம் நல்லொழுக்கம்)

இனித் தேற்றப் பொருள் தரும் வேண்டும் என்னுஞ் சொல் 'தல்' 'அல்' என்னும் ஈற்றை யுடைய தொழிற் பெயரையடுத்து வருவதே பண்டை வழக்கு. உ-ம் போதல் வேண்டும், உண்ணல் வேண்டும். (பார்க்க, நன்னூற் காண் டிகை உரை, சூ.339) ஆனால், இக்கால வழக்கில் அச்சொல் (அதாவது வேண்டும் என்பது) செய வென்னும் வாய்பாட்டு எச்சச் சொல்லோடு (இதனை ஈறுதிரிந்த தொழிற்பெயர் என்பர் ஒரு சாரார்) சேர்ந்தே பெரும்பாலும் வரக் காண்கின்றோம். நாவலர் இருவகை வழக்கையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

உ-ம்: 1. இப்படிப்பட்ட கடவுளை நாம்......எந்த நாளும் வணங்கித் துதித்தல் வேண்டும். (பாலபாடம் முதற் புத்தகம். 45 ஆம் பாடம்)

2. நம்முடைய செயல்கள் அனைத்தும் சுருதிக்கும் யுக்திக்கும் இசைந்திருக்க வேண்டும் (பாலபாடம், இரண்டாம் புத்தகம், நீதிவாக்கியம். 31)

இவை “புதியன புகுதல்" என்ற விதியால் (நன்னூல் சூ.462) அமைத்துக் கொள்ளப்படும். ஏற்கும் நிலையம் என்ற சொற்கள் ஏற்கு நிலையம் என்றாகாது, ஏல் நிலையமென்றே ஆகுமென இக் காலத்திற் சிலர் வாதிக்கின்றனர். இத்தகையோர், நாவலர் எழுதிய இலக்கணச் சுருக்கத்தின் 146 ஆம் அங்கத்தில்,

'மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியினுங் கெடும்' என்று விதியிருப்பதைக் கண்டிலர் போலும். நாவலர், 'கற்குநூல்' போன்ற தொடர்களை வழங்கியுள்ளாராதலின், ‘ஏற்கு நிலையம்' என்பதும் ஏற்புடைத்தேயாகும்.

இக்காலத்தவர், 'ஏரிக்கரையிலே செம்படவர் மீன் உலர்த்துவர்' என்று எழுதுகின்றாராயினும், நாவலர் 'எந்த உயிரையும் கொல்லாத ஒரு சந்நியாசி ஒரு ஏரி கரை மேலே போனார்’ (பாலபாடம், 2 ஆம் புத்தகம், கதை 1) என்றே எழுதிக் காட்டுகிறார். நன்னூற் காண்டிகை உரையிலே,

'இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் க ச த ப மிகும் விதவாதன மன்னே (சூ.165)

என்ற சூத்திரத்தின் உரைப் பகுதியில் நாவலர் பின்வருமாறு இதற்கு இலக்கணம் அமைத்துள்ளார்.

1. "விதவாதன பெரும்பாலும் மிகும் எனவே, விதந்தன சிறுபான்மை மிகும் எனவும், விதவாதன சிறுபான்மை மிகா  எனவுங் கூறினாராயிற்று. அவை வருமாறு:

2. “ஏரிகரை, குழவிகை, குழந்தைகை 'பழ முதிர்சோலை மலைகிழவோனே' என்றும், கூப்புகரம்,ஈட்டுதனம், நாட்டு புகழ் என்றும் முறையே வேற்றுமையிலும் அல்வழியிலும் பின் விதவாதன மிகாவாயின”

இவ்விதியால், 'ஏரிக்கரை' என்றும் 'மலைக்கிழவோனே' எழுதுவது பிழையென்பது பெறப்படும். 

இனி, உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் வல்லின மெய்யின்முன் இயல்பாகும் என்ற விதியே தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் (சூ. 182) இலக்கணச் சுருக்கத்திலும் (அங்கம்.125) உளது.

இவ்விதிக் கமையவே, உருபுபுணர்ச்சி, வரகு சோறு, விறகுகட்டு, அரசுகட்டில், முரசுகண் என்றற் றொடக்கத்துச் சொற்றொடர்களை ஆன்றோர் வழங்கியுள்ளனர். ஆறுமுக நாவலரும் இவ்விதி பிழையாமலே எழுதியுள்ளார். ஆயினும், மரபுப் பெயர், மரபுச் சொல், மரபுத் தொடர் என்ற வழக்குகளை நாம் இக்காலத்திற் காண்கின்றோம். மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர் போன்ற சான்றோரே மரபுப் பெயர் என்ற தொடரை ஆண்டுள்ளனர் (பார்க்க: நன் னூல் (சூ.274 மயிலைநாதர்), 275 (சங்கரநமச்சிவாயர்). இதனை 'விதவாதன் மன்னே' என்ற இலேசினாலே அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

இனி, நாவலர் பதிப்பித்த நூல்களிலே அவர் கொண்ட சில பாடங்கள் வியக்கத்தக்கவை. அவை ஏட்டுப் பிரதிகளில் உள்ள பாடபேதங்களுள் நூலாசிரியர் கருத்துக்குப் பொருந்தியவை எவையென நுனித்துத் துணியும் நாவலருடைய நுண்மாணுழை புலத்துக்குச் சான்றாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டொன்றைத் தருவாம். நாவலருடைய திருக்குறட் பதிப்பிலே,

'எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லைச்

செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (குறள் 110)

என்ற குறளுக்கு ஒப்புமைப் பகுதியாக, புறநானூறு, 34 ஆம் பாட்டு, அடிக்குறிப்பிலே காட்டப் பட்டுள்ளது, 'ஆன்முலையறுத்த....." என்று தொடங்கும் இப்புறப்பாட்டின் மூன்றாம் அடியைக் "குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்'' என்றே நாவலர் காட்டியுள்ளார். இதற்கொப்பப் பரிமேலழகருடைய உரைப்பகுதியிலும் "பெரிய வறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலையறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும் "குரவர்த் தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல்" என்ற வாக்கியம் வருகின்றது. இவ்வாறிருப்பவும் பிறர் பதிப்பித்த புறநானூற்றிலே, இச்செய்யுளடி "பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்றே காணப்படுகிறது. அவர்கள், நாவலர் கொண்ட பாடத்தைப் பாடபேதமாகவும் காட்டினாரல்லர். இனித் திருக்குறளைப் பதிப்பித் தோருள் வித்துவான் ச. தண்டபாணி தேசிகர் (தருமபுர ஆதீனப் பதிப்பு) “குரவர்த் தபுதலும்" என்றே பரிமேலழகர் உரைப்பகுதியைக் கொண்டுள்ளார்; ஆனாற் பிறர் (சைவசித்தாந்தக் கழகப் பதிப்பு) "பார்ப்பார்த் தபுதலும்" என்று அப் பகுதியைத் திருத்தியுள்ளனர். இது, பிற பதிப்புக்களிலுள்ள புறநானூற்றுப் பாடலை அடியொற்றிச் செய்யப்பட்டதாகலாம். ஆனால், முன் சொன்ன தண்டபாணி தேசிகர், தாம் காட்டும் ஒப்புமைப்பகுதியில் இப் புறநானூற்றுப் பாட்டைக் காட்டி, 'குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் என்பது முன்னைய பாடம் போலும்' என்று அடிக்குறிப்பெழுதியுள்ளார். நாவலர் கொண்ட பாடமோ, பிறர் கொண்ட பாடமோ எது சிறந்ததென்பதை அறிவுடையோர் அறிந்து தெளிக.

இவ்வாறே, பத்துப் பாட்டில் வரும் திருமுரு காற்றுப் படையின் 38 ஆம் அடியை, ’கோழி யோங்கிய வென்றடு விறற் கொடி' என்று பிறர் பாடங் கொண்டு பதிப்பித்துள்ளார். வென்று பின் அடுதல் என்று பொருள் கொள்வது சிறவாதெனக் கருதிய நாவலர், தாம் பதிப்பித்த திருமுருகாற்றுப்படை உரையிலே, இவ் வடியை 'கோழி யோங்கிய வேன்றடு விறற் கொடி' என்று பாடங் கொண்டு, என்று அடு என்று சொற்களைப் பிரித்து 'பகைவரை வஞ்சியாது எதிர்நின்று கொல்லும்' என்ற நச்சினார்க்கினியாரின் உரைப்பகுதிக்குப் பொருந்த வைத்துள்ளார். ஏட்டுப் பிரதிகளிலே எகரத்துக்கும் ஏகாரத்துக்கும் வேற்றுமையில்லாமையால், வேன்றடு என்பதையே வென்றடு என்றும் வாசிக்கலாம். பிறர் வென்றடு என்று பாடங்கொண்டதையே நாவலர் வேன்றடு என்று பாடங் கொண்டு பதிப்பித்துள்ளார். நாவலர் கொண்ட பாடமே பொருளுக்குப் பொருந்துவதாயும் உயர்ந்த பொருள் தருவதாயும் உளது.

இனி, புறநானூறு 279 ஆம் பாட்டிலே, 'இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇ..... ஒருமனல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே.

என்ற பாடம் பிற பதிப்புக்களிலே காணப்படு கிறது. மறக்குல மாதொருத்தி மனந்துணிந்து தன் ஒரு மகனைச் செருக்களம் செல்ல விடுபவள் மயங்கினாள் என்றல் பொருந்தாது. இது முயங்கி என்று இருத்தலே சிறப்புடைத்து. முயங்கி என்பதைப் பாடபேதமாகக் காட்டியுள்ளனராயின் அதுவே சிறந்ததாக ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கும்.

பொருட் சிறப்புள்ள பாடங்களை நாம் நாவலர் பெருமானின் பதிப்புக்களிலும் அவரை அடியொற்றிய புலவர் நூல்களிலும் கண்டு களிக்கலாம். அவர் செய்து வைத்த அருந்தொண்டு என்றும் மங்காது சிறக்க.


0 comments: