புத்தாண்டே வருக (2024)!
எங்கும் பசுமை! இதழ்களில் பனித்துளி!
பொங்கும் குளிரால் பொழுது புலர்ந்திட
ஈரா யிரத்திரு பத்தினான் காண்டே!
சீராய் வந்தனை திருவடி வணக்கம்!
உலகம் உவப்ப உந்தன் அருளே
நிலவுக! யாண்டும் நீணிலம் மீதில்
அன்பும் வளமும் அமைதியும் மக்கள்
இன்புற் றிருக்க ஏற்றம் தருவாய்!
வறுமையும் பிணியும் வன்முறைக் கொடுமையும்
சிறுமைப் படுத்தும் சாதி மதங்களின்
பிணக்கும் ஒழிந்து பேருலகம் எல்லாம்
இணக்கம் வளர இனிதாய் வருவாய்!
புத்தாண் டென்னும் பொன்மகளே!
இத்தரை உன்னால் ஏற்றம் பெறுகவே!
-கொல்லிக்கிழான் (புலவர் வெ. ரா. துரைசாமி)
https://kollikilan.blogspot.com/2023/12/PuthaandeVaruka.html
(one ciir is changed to reflect the current year, 2024. NG)
கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைந்து
எல்லோரும் வாழ்க இசைந்து!
- இராமலிங்க அடிகள்
புத்தாண்டே வருக!
(கலிவிருத்தம்)
நாணயத்தால் நம்மை நன்றாக ஏமாற்றி
வீணாக நமது வாக்குகளைச் செய்கின்ற
அரசியலில் புதிதாய் அறம்பேணும் தலைவர்கள்
உருவாக இந்தப் புத்தாண்டு மலரட்டும்.
- கவிஞர் இரமணி
எண்டிசையும் ஒன்றிணைவோம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வடதிசை வசிப்பவர் அடிமனக் கருத்திலும்
தென்றிசை மக்களின் சிந்தனை யாவிலும்
குடதிசை மாந்தர்தம் கொள்கைப் பிடிப்பிலும்
குணதிசை வாழ்பவர் குணத்தின் திறத்திலும்
இழையாய் ஓடிடும் உணர்ச்சிகள் யாவும்நம்
முழுமனத் தியல்பின் வேறெனப் பாரோம்!
எண்டிசை வாழ்வோர் யாவரும் நமரென
மண்மிசை முழங்கி வான்முர சறைவோம்!
உடுக்கை இழந்தவர் போல்பிறர் உறுதுயர்
தடுக்கும் பரிவினைப் பெருக்கிட முனைவோம்;
செருக்குறு பகையினை வளர்க்கும் போர்களால்
நெருக்குறும் மானுடம் நெறிப்பட இணைவோம்;
நம்மெதிர் காலம் செவ்வுறல் கருதிப்
பேதங்கள் யாவையும் தீதென மறுப்போம்;
யாதும் ஊரே யாவரும் கேளிரென்
றோதிடும் நெறியே உயர்வெனக் கொள்வோம்;
நானிலம் முழுதும்நல் லுறவை நாட்டி
மானுடக் கடலாய் வானுற எழுவோம்.
வீழினும் தாழினும் இனிப்பிரி வுறோமென்
றொன்றிணைந் தென்றும் வெல்வமிங்(கு) ‘இதுவே
நிசம்,இது நிசம்!'என இசைக்குமெண் டிசையே!
- இமயவரம்பன்
0 comments:
Post a Comment