பறை என்பது ஓடும்
இசையை ஒழுங்குபெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க இசைக்கு நடை கற்பிக்கும்
கருவி என்பர். பறை என்பதனைக் கொட்டு, மேளம், முழவு என்று குறிப்பிடுவர்.
பறை – கருப்பொருள்
இசைக்கு
இன்றியமையாத _ நெருங்கிய தொடர்பு உடைய பறையினைத் தொல்காப்பியர் கருப்பொருள்களுள்
ஒன்றாகக் கொண்டமை பண்டைத் தமிழரின் இசையறிவுக்குச் சிறந்ததொரு சான்றாகும்.
தொல்காப்பியத்தில்
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முப்பிரிவில் கருப்பொருள்களுள்
ஒன்றாகப் பறை குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.
“தெய்வம்
உணாவே மாமரம் புள்பறை
செய்தி
யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகை
பிறவும் கருவென மொழிப’’
(தொல்.பொரு.அகத்திணையியல்.18)
என்ற
தொல்காப்பியக் கருப்பொருள் நூற்பாவின் வைப்பு முறையில் ‘பறை’ வைக்கப்பட்டுள்ள
பான்மை தோற்கருவிகளின் தொன்மைச் சிறப்பினை அறிய உதவுகின்றது. இந்நூற்பாவில்
பறை =
கொட்டு, முழவு
செய்தி = செம்மையான தொழில்
யாழ் = பெரும்பண்
யாழ்பகுதி = சிறுகிளைப்பண்
எனச்
செய்திக்கு (தொழிலுக்கு) முன்னும் புள்ளுக்குப் பின்னும் இசைக்கருவிகள் தொழிலோடு
வைத்து எண்ணப்பட்டுள்ளது. ‘இனக்குழு மக்கள் செய்தொழிலுக்குச் செல்லும் முன் குழு
உணர்வைப் பெறப் பறையைப் பயன்படுத்தினர் என்றும் செய்தொழிலுக்குப் பின்னர் உள்ளக்
கிளர்ச்சி பெற யாழிசை நுகர்ந்தனர் என்றும் இந்த வைப்பு முறைக்கு விளக்கம் தரலாம்
என கோ.கண்ணன் ‘பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
பல்வேறு தொழில்களை மேற்கொண்ட தமிழ் மக்கள் அத்தொழில்களில் ஏதாவதொரு வகையில்
பறையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆகையால் தொல்காப்பிய நூற்பாவிலும் இக்கருவியை
முன்வைத்துத் குறிப்பிட்டுள்ளனர் என்றும் கருத இடமுண்டு.
நிலவியல்
பாகுபாட்டில் தமிழரின் பண்பாட்டை முழக்கும் கருவியாக பறை செயல்பட்டு வந்துள்ளது
என்பதை விளக்கும் சூடாமணி நிகண்டு (ப.135) குறிப்பும் இதற்கு ஒரு சான்றாகும்.
அவை
பின்வருமாறு:
1.
இடக்கையின் பெயர்-ஆமந்திரிகை
2.
முழவின் பெயர்-குளிர்
3.
படகத்தின் பெயர்-பணவம், திண்டி, ஆனகம்
4.
கடிப்பின் பெயர்-குணில்
5.
ஒரு கட்பறையின் பெயர்-மொந்தை
6.
பேரிகையின் பெயர்-நந்தி
7.
சிறுபறையின் பெயர்-ஆகுளி
8.
திமிலையின் பெயர்-சல்லரி
9.
நிசாளத்தின் பெயர்-தண்ணுமை
10.
பன்றிப்பறையின் பெயர்-குடப்பறை
11.
ஒருகட் பகுவாய்ப் பறையின் பெயர்-பதலை
12.
கரடிப்பறையின் பெயர்-தட்டை
நிலவியல்
பாகுபாட்டின்படி பறை, பின்வருமாறு:
1.
குறிஞ்சிப் பறைகளின் பெயர்-தொண்டகம், முருகியம், துடி
2.
முல்லைப் பறைகளின் பெயர்-பம்பை, ஏறங் கோட்பறை
3.
மருதப்பறையின் பெயர்-கிணை
4.
நெய்தற்பறையின் பெயர்-சாப்பறை (பிணப்பறை)
5.
பாலைப்பறையின் பெயர்-துடி
என சூடாமணி நிகண்டு காட்டுகிறது.
ஒரு
பறை வகைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை
இக்குறிப்பு காட்டுகிறது. மேலும் சூடாமணி நிகண்டில் முழவின் பெயர் _ குளிர்,
திமிலையின் பெயர் _ சல்லரி, நிசாளத்தின் பெயர்_ ண்ணுமை, உவகைப் பறையின் பெயர் _
தூரியம், தண்ணுமையின் பெயர்_உடுக்கை எனக் கூறுவது தவறு. பொருத்தமற்றது என தமிழிசை
ஆய்வறிஞர் முனைவர் வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுகிறார்-.
பண்டையப் பயன்பாடு
பறை
நிலத்தின் அடையாளம் மட்டுமல்லாது அந்நில மக்களின் அடையாளமாக, அவர்கள் செய்யும்
தொழிலில் பயன்படும் கருவியாக இருந்து வந்துள்ளது.
“தொல்காப்பியம்
குறிக்கும் திணைக் குமுகாயத்திலும் பறையறைந்து செய்தி அனுப்பும் முறை இருந்தது.
பறை என்ற சொல்லே இசைக் கருவியையும் செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது.
பறையைத் தொல்காப்பியர் ஒரு கருப்பொருளாகக் குறித்துள்ளார். இயற்கைக்
கருப்பொருள்கள் செயற்கைக் கருப்பொருள்கள் என்ற இரு வகைகளுள் பின்னவற்றுள்
அடங்கும். சமயச் சடங்குகளைத் ‘தெய்வம்’ எனவும், இசையை ‘யாழின் பகுதி’ எனவும்
செய்தித் தொடர்பு முறையைப் ‘பறை’ எனவும் குறித்தார். இதன்படி ஒவ்வொரு நிலத்திற்கும்
செய்தி தெரிவிக்கும் தனிப்பறை உண்டு.
குறிஞ்சிக்கு
: தொண்டகச் சிறுபறை
முல்லைக்குப்
: ஏறங்கோட்பறை
மருதத்திற்கு
: தண்ணுமை
நெய்தலிற்கு
: மீன்கோட்பறை
பாலைக்கு
: ஆறெறிபறை
என்ற
வரையறை பொருத்தமானதாகும்.
ஆநிரைகளை
மேய்த்ததற்கும், ஏறு தழுவுவதற்கும் ஏறங்கோட்பறை பயன்பட்டது. மலையில் விளைந்த பயிரை
விலங்குகளினின்று காத்தற்குப் புள்ளோட்டுதற்கும், வெறியாட் டிற்கும் தொண்டகப்
பறையும், பாலை நிலத்தில் திரிந்த கள்வர் தம்முள் மறைமுகச் செய்தியைத் தெரிவித்துக்
கொள்வதற்கு ஆறெறி பறையும், புனல் செறுப்பதற்கும், கழனி விளைநர்க்குச் செய்தி
அறிவித்ததற்கு அரிப்பறையும், கடலில் மீன் பிடித்தற்கும் மரக்கலங்கள் இயக்குதற்கும்
மீன்கோட் பறையும் பயன்பட்டன.
பெருகிவரும்
புனலை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றியை
தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை
செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னனின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,
மேலும் இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில், என வாழ்வியல்
கூறுகளுடன் இணைந்து இயங்கியுள்ளது ‘பறை’ எனும் தோற்கருவி.
1.
‘சேம்பு மஞ்சளும் ஒம்பினர் காப்போர் பன்றிப் பறையும்’ (மலைபடு - 344)
2.
‘கழனி விளைநர்க்கெறிந்த பறை கேட்டு’ (தி.மொ.ஐம்.31:2)
3.
‘அரிப்பறையாற் புள் ஓப்புந்து’ (புறநா.396:4)
4.
‘மென்பறையாற்புள் இரியுந்து’ (புறநா. 396:4)
5.
‘போர்த்தெறிந்த பறையாற் புனல் செறுக்குநரும்’ (பதிற்று. 21:20)
6.
‘களிற்றின்மேல்... பறையறைந்தான்’ (சீவக. 297:3)
7.
‘போர்ப்பறை முழங்க’ (சீவக.758:1)
8.
‘போர்ப்பறை யரவமோ டார்ப்ப’ (பெருங். 217:65)
9.
‘போர்ப்பறை முழக்கினும்’ (கம்ப. பால. 290:4)
10.
‘அறைபறை என்றனன் அரசர்கோமான்’ (பெருங்.320:30)
போன்ற
200க்கும் மேற்பட்ட இலக்கியச் சான்றுகள், தமிழர் வாழ்வியலில் ‘பறை’ பெற்றிருந்த
முக்கியத்துவத்தை விளக்குவ தாகவும், அதன் சிறப்புகளை உணர்த்துவதாகவும்
அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் பல இடங்களில் முரச மண்டபம் அமைத்து செய்தி அறிவிக்கும் முறை இருந்து
வந்துள்ளது. செய்தி அறிவித்தலுக்கு அமைதியான அதிகாலைப் பொழுது அல்லது அந்திப்
பொழுது உகந்த வேளையாக இருந்தது. பறையின் ஒலி 5 கி.மீ. முதல் 11 கி.மீட்டர் வரையில்
கேட்கும் என்பர். ஒரு பறையன் அறையும் செய்தியைக் கேட்டு மற்றொரு பறையன்
அச்செய்தியைக் கேட்டு முழங்க, அச்செய்தி நெடுந்தொலைவிற்கு அனுப்பவியலும்.
திருச்செந்தூரில்
கோயில் பூசை முடிந்ததைப் பறையறைந்து பாஞ்சாலங்குறிச்சி வரைத் தெரிவித்துள்ளனர்.
அச்செய்தியைக் கேட்ட பின்பே கட்டபொம்மன் உணவு கொண்டி ருக்கிறான். அதுபோன்று
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு பூசைமுடிந்த பின்பே மதுரையில் திருமலைநாயக்கர்
செய்தி அறிந்து உணவு கொண்டார் என்ற செய்தி மன்னர்கள் ஆட்சியில் பறையொலி
முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதைக் காட்டுவனவாகும்.
பறையில் செய்தி கூறிய முறை
பறையில்
செய்தியைத் தெரிவிப்பதற்குக் குறிப்பிட்ட இசைப்பு முறையை கையாண்டிருக்க வேண்டும்.
இன்றும் பறை அடிக்கும் இசைப்பைக் கொண்டு தொலைவில் உள்ள மக்கள் இறப்பு, திருமணம்,
திருவிழா, பிற கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்கின்றனர்.
சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் வஞ்சிக் காண்டத்து காட்சிக் காதையில் நீண்ட பறை
செய்தியை அறிவித்துள்ளனர். சேரன் செங்குட்டுவனின் ஆட்சியின்போது சேரநாட்டுத்
தலைநகரான வஞ்சியில் பிறநாட்டு ஒற்றர் இருந்தனர் என்றும், அவர் தம் அரசர்க்கு
மறைமுகமாகச் செய்தியைப் பறையறைந்து அறிவிக்க வல்லவர் என்றும், பறைமுறையுடன்
திருமுகம் வழிச் செய்தி அறிவிக்கும் முறையும் இருந்தது எனவும், செங்குட்டுவனின்
அரச யானையின் பிடரியில் பறையை ஏற்றி வள்ளுவர் சமூகத்தினர் செய்தியைத் தெரிவித்தனர்
என்றும், அவர்கள் அறிவித்த செய்தி இன்னது என்றும், வஞ்சிக் காண்டத்துக் காட்சிக்
காதை குறிக்கின்றது.
வாழ்க
எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொறூழி
யுலகங் காக்கென
விற்றவைக்
கொண்ட வியன்பே ரிமயத்தோர்
கற்கொண்டு
பெயருமெங் காவலன் ஆதலின்
வடதிசை
மருங்கின் மன்ன ரெல்லாம்
இடுதிறை
கொடுவந் தெதிரீ ராயின்
கடற்கடம்
பெறிந்த கடும்போர் வார்த்தையும்
கேட்டு
வாழுமின் கேளீராயின்
தோட்டுணை
துறக்கும் அறிவொரு வாழுமின்
தாழ்கழல்
மன்னன் தன்திரு மேனி
வாழ்க
சேனாமுகம்
இத்தகைய
நீண்ட செய்தியை எவ்வாறு பறை கொண்டு அறிவித்தனர்? இச்செய்தியை இசைப்பாக மாற்றியே
அறிவிக்க இயலுமாதலால், தமிழில் அக்காலத்தில் இசைப்பு ஓர் அழுத்தமான பண்பாக
இருந்திருத்தல் வேண்டும். அதாவது இசைப்பு வேறுபாட்டால் பொருள் வேறுபட்டிருத்தல் வேண்டும்
என முனைவர் நிர்மல் செல்வமணி தொல்காப்பிய இசைமரபும் பிறநாட்டு இசைமரபும் என்ற
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்திற்குச் சான்றாக பின்வருமாறு
எடுத்துக்காட்டியுள்ளார்.
சீன
மொழியில் மா என்ற சொல் நால்வகை ஒலிப்பால் நான்கு வெவ்வேறு பொருள்களைத் தரும். ஒவ்வொன்றிற்கும்
வேறுவேறு இசைப்பு இருந்திருத்தல் வேண்டும். இசைப்பினால் எப்பொருள்
உணர்த்தப்படுகின்றது என்பதைக் கேட்போர் தெரிந்து கொள்ளவும் இயலும். இது ஒரே
சொல்லிற்கு எவ்வாறு பல பொருள்களை வழங்க நேர்ந்தது என்ற கேள்விக்கு ஏற்ற விடையும்
ஆகும். அவ்வாறே ஒரே சொல்லின் இருவேறு எதிர்மறைப் பொருள்களை வேறுபடுத்திக் காணவும்
உதவும். எடுத்துக் காட்டாக பெருகு, சுருங்கு என்ற இருவேறு பொருள்களையும் உடைய,
நந்து என்ற சொல்லிற்கு இருவேறு இசைப்பினால் குறித்த பொருளை உணர்த்த இயலும் என
முனைவர் நிர்மல் செல்வமணி ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ளார்.
பறை
கருவியின் அமைப்பு
பறை
விலங்கின் தோலால் போர்த்தப்பட்ட ஒரு கருவி. பொதுவாகத் தமிழர்கள்
தோற்கருவிகளுக்குப் பல விலங்கினங்களின் தோலினைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
விலங்கின் தோலால் பரப்பி மூடிப் போர்த்தப்பட்டு தோல் வார்களால் இறுக வலித்துக்
கட்டப்பட்டது. மேற்புறப் பரப்பின் ஓரங்களில் துளையிட்டுத் தோல் போர்த்து, தோலின்
வாரால் இறுக வலித்துக் கட்டினால் இதற்குப் பறை என்று பெயர். பறையின் அமைப்பு
இதுவேயாகும். விசித்து வாங்கு பறை என்று அகநானூறு (231:3) குறிப்பும் இதன் அமைப்பை
விளக்குகிறது.
விசி
= கட்டு
வாங்கு
= வளைந்த
தோலால்
இழுத்துக் கட்டுவதால் தோல் பாளங்கள் வட்டத்தின் சுற்றளவு முழுவதும் ஒரே சீராக
இழுக்கப்படுகின்றன.
போர்த்தப்படும்
தோல்
பண்டைத்
தமிழர்கள் தோற்கருவிகளுக்கு இறந்த பசுவின் தோல், காளையின் தோல், மான்தோல்,
உடும்புத்தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தோலை மயிர் சீவாமல்
போர்த்தியுள்ளனர். சிறந்த பசுவின் தோல், இறந்த இளங்கன்றுப் பசுத்தோலையும்,
புலியைப் போரிட்டு வென்ற காளையின் தோலையும், மென்மை ஒலி எழுப்பும் கருவிகளுக்கு
மட்டும் மான்தோலையும் பயன்படுத்தியுள்ளனர்.
மான்தோற்
சிறுபறை கறங்கக் கல்லென (மலைபடுகடாம்: 321) என்ற பாடல் வரி இதற்குச் சான்றாகும்.
கன்னியிளம்
பசுவின் காயாப் புறந்தோலாம்
பின்னுமதலு
ரிதகையாம் - பன்னிய
பக்கத்தோல்
வார்கொள்ளப் பார்க்கி லதன் கொம்பு
மிக்க
குடுப்பாகு மென்
(பஞ்சமரபு
பா. எண்.115)
கன்னி
இளம் வயதிலே உள்ள சூடுபடாதே செத்த பசுவின், காயாப் புறந்தோலை, வன்மை முழவிற்கும்
இப்பசுவின் உதிரத்தைப் போர்த்துக் கிடந்தத் தோலை மென்மை முழவிற்கும்
பயன்படுத்துதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது பஞ்சமரபு. ஆவினுடைய வஞ்சித்தோல் _
உத்தமான ஆவின்தோல் ஈனாத நாகான (இள) வயதிலே சூடுபடாத செத்த பசுவின் தோல் _
சீவியேறிடுவது (இத்தகைய தோல்வன்மை முழவுக்குக் கொள்ளப்பட்டது). மேற்கூறியவாறு
பசுவின் உதிரத்தைப் போர்த்துக்கிடந்த தோலையும் (இத்தகைய தோல் மென்மை முழவுக்குக்
கொள்ளப்பட்டது) மான்தோலையும் பயன்படுத்தினர் (மலைப்படு கடாம். 321)
பொதுவாகப்
பறைகளுக்கு பசுவின் தோலைப் பயன்படுத்தியுள்ளனர். நீளுதலும் சுருகுதலும் ஆகிய
நெகிழ்வுத் தன்மை உடையது என்பதால் பறை கருவிகளுக்குப் பசுவின் தோல்
பயன்படுத்தப்பட்டது. ஆவஞ்சி என்ற சொல்லின் பொருள் இதை விளக்குவதாக அமைகிறது.
பறைகட்குத்
தோற் போர்வை மூடுங்கால், விலங்குகளின் வயிற்றுத் தோலையே இட்டு மூடுவார்கள். பெண்
விலங்கின் அடிவயிற்றுத் தோல் நீண்டு கொடுப்பது (நெகிழ்வு தருவது). ஆவின் வஞ்சித்
தோலால் போர்த்தப்பட்ட பறை ஆவஞ்சியாகும் என்றார் அடியார்க்கு நல்லார். ஆவஞ்சி
எனினும், குடுக்கை எனினும், இடக்கை எனினும் ஒக்கும். ஆவினுடைய வஞ்சித்தோலைப்
போர்த்தலால் ஆவஞ்சி என்று பெயராயிற்று. குடுக்கையாகச் செய்து அடைத்தலால் குடுக்கை
என்று பெயராயிற்று; வினைக் கிரியைகள் இடக்கையால் செய்தலின் இடக்கை என்று
பெயராயிற்று (சிலப். 3.26 அடியார்க்). பசுவின் அடிவயிற்றுத் தோலானது
நீளுதலும், சுருங்குதலும் பெறுவதுடன் சற்றுத் தண்ணீர்ப் பதம் ஏற்று நீண்டு
மென்மையாகி நெகிழ்ந்து கொடுக்கும். தாழ்ந்து ஒலிக்கும். கஞ்சிராவின் உட்பகுதியில்
தண்ணீர்பதம் இடுவது தாழ்குரல் தருவதற்குச் செய்வதாகும். வெப்பம் ஏற்றத் தோலின்
சுருதி ஏறி ஒலிக்கும். தோற்கருவிகளுக்குப் போர்த்தப்பட்ட விலங்கின் தோல் கூட
வீரம் மிக்கதாய் இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளனர் தமிழர்.
மண்ணைக்
குத்திக்கொள்வதால் வரிவரியாகக் கீறப்பட்ட,
மிக்க
கூரிய கோட்டினையுடைய பெருமை பொருந்திய நல்ல
ஆனேறு
இரண்டினைத் தம்முள் போர் செய்ய விடுத்து, வெற்றி
பெற்ற
தோலை மயிர்சீவாது போர்த்தினர்
(புறநா:
288)
புலியோடு
போரிட்டுப் புறங்கொடாது வென்ற அழகிய காளையினது தோலால் போர்த்தப்பட்டது.
(அகநா
: 334)
புலியைப்
பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டு மண்
கொண்ட
ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர்சீவாமல் போர்த்தினர்.
(சிலப்
: 5:88 அடியார், உரை)
மாறுபாட்டை
ஏற்றுக் கோறற்றொழிலையுடைய ஏற்றினது செவ்வித்தோலை மயிர்சீவாமல் போர்த்துவதுண்டு
(மதுரைக்காஞ்சி
: 732)
சீவக
சிந்தாமணியின் உரையில் நச்சினார்க்கினியர் தோற்கருவியைப் பற்றிய இலக்கணத்தை
வழங்கியுள்ளார். தோற்பொலி முழவும் யாழுந் துளைபயில் குழலுமோங்க
என்ற
பாடல் வரிக்கு
மார்ச்சனை
முதலியவுமுளதாய் இடக்கண் இளியாய் வலக்கண்
குரலாய்
நடப்பது தோலியற் கருவியாகும்
(சீவக.
675)
என
விளக்கமளித்துள்ளார்.
இங்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள
இலக்கியச் சான்றுகள் மூலம் பண்டைக் காலத்தில் தமிழர் எருமைக் கன்றின் தோலைத் தோற்கருவிகளுக்குப்
பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது. தற்காலத்தில் ‘பறை’ கருவிகளுக்கு எருமைக்கன்றின்
தோலையும், ஆட்டுத் தோலையும் பயன்படுத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில்
இளங்கன்றாக உள்ள சுமார் 3 அல்லது 4 மாத எருமைக் கன்றின் தோலை மட்டுமே ‘பறை’க்குப் பயன்படுத்துகின்றனர்.
எருமைக் கன்றின் தோலை முதலில் நன்றாகக் காயவைத்து மயிர் நீக்கிச் சுத்தம் செய்து, தண்ணீரில்
ஊற வைக்கின்றனர். புளியங்கொட்டையை நசுக்கி ஊற வைத்து அதன் சாற்றை சட்டியிலிட்டு கொதிக்க
வைக்கின்றனர். இதை மேளக்குண்டில் காய வைக்கின்றனர். பிறகு தோலைப் போர்த்தி வாரால் இறுக
இழுத்துக் கட்டுவதற்காக 27 அல்லது 29 துளைகளிடுகின்றனர். மேற்பகுதியில் போர்த்தப்படும்
அதே எருமைக் கன்றின் தோலினால் வார் தயாரிக்கின்றனர். தோலைத் தேவையான அளவு சீவி வாராக
முறுக்கி ஏற்றபடி செய்து 3/4 வளையத்தில் கட்டுகின்றனர். பறையின் மேற்பரப்பை நெருப்பனலில்
சூடுகாட்டிக் கொட்டும்பொழுது அடிப்பதற்கு எளிதாகவும்,
அதிகத் தொலைவு பறையின் ஓசை கேட்கும்படியாகவும் இருக்கும்.
நெல்லை, சிதம்பரனார்
மாவட்டங்களில் வெள்ளாடுகளின் தோலினைப் பயன்படுத்தும் வழக்கமும் இருந்து வருகிறது. இவர்கள்
பறை மேளம் செய்யும் முறையும் சற்று வேறுபட்டதாக உள்ளது.
‘மேளம் செய்வதற்கெனக்
கன்றுக் குட்டிகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் தோல்களைப் பயன்படுத்துகின்றனர். முதலில்
தோலின் வெளிப்புறத்தில் உள்ள உரோமங்களை நீக்குவதற்காக அவற்றை நிழலில் சுருட்டி வைத்து
அழுகப் பண்ணுகிறார்கள். மூன்று நாட்களுக்குப் பின் ரோமத்தை நீக்கிச் சூரிய ஒளியில்
உலர்த்துவர். தோலில் இருக்கும் அழுகிய பகுதிகள் நாற்றம் நீங்குவதற்காகச் சுண்ணாம்புப்
பொடி தூவி வைக்கப்படுகிறது. நன்றாக வெயிலில் உலர்த்திச் சுமார் ஒரு வாரம் கழித்து ஆவரை
என்ற செடியின் பட்டையை உரித்து அதனுடன் நீரில் ஊற வைக்கப்படுகிறது. இந்தச் செடியின்
பட்டையில் உள்ள துவர்ப்புப் பொருட்கள் தோலை நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாக்கும்
எனக் கூறப்படுகிறது. இறுக்கமும் செறிவும் தருவது அந்தப் பசை. சுமார் மூன்று அல்லது
ஐந்து நாட்கள் இந்த நீருடன் ஊறியபின் வெயிலில் உலர்த்தி மேளத்திற்கென உள்ள உருளையின்
இரு பக்கத் துளைகளிலும் வைத்துக் கட்டப்படுகிறது. இளம் கன்றுகளின் தோலில் செய்யும்
கருவிகளில்தான் ஓசை நயம் இருக்கும் என்பதால் அவற்றிற்கே முக்கியத்துவம் அளித்துத் தயார்
செய்யப்படுகிறது. மேளம் அடிக்க அரளி, ஆவரை, மூங்கில் ஆகிய தாவரங்களின் கம்புகள் உலர
வைத்துப் பயன்படுத்தப்படுகின்றன.’’ தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு வேறு முறைகளில்
‘பறை’ கருவியைத் தயாரிக்கின்றனர்.
தஞ்சைக்கு மேற்கே
15 கி.மீ. தொலைவில் புதாற்றங்கரையில் ரெட்டிப்பாளையம் என்று அழைக்கப்படும் ராமநாதபுரம்
கிராமம் முழுக்க 200 தலித் குடும்பங்கள் இசைக் குடும்பங்களாக உள்ளன. இந்தக் குடும்பங்களின்
உறுப்பினர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கலைஞர்களாகவே உள்ளனர். தப்பாட்டம், தவில்,
நாதஸ்வரம், உறுமி, பம்பை, கிடிகட்டி, கொம்பு, உடுக்கு, ஒத்து, ஜால்ரா, கடைசிங்கி, கும்மி,
கோலாட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கரடி, பொய்க்கால் குதிரை, மயில் ஆட்டம்,
மாடு ஆட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று எல்லாவற்றிலும் தேர்ந்த கலைஞர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் பரம்பரை இசைக்கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்கள்
இசைக் கருவிகளைத் தாங்களே செய்து கொள்கின்றனர்.
“நாங்க வாசிக்கிற
தப்பு தவில் எல்லாமே நாங்களேதான் செய்துக்குவோம். அதாவது கட்டை மட்டும் கடையிலே வாங்கிப்போம்.
தோல் போடுவதை நாங்களே செய்துக்குவோம். எருமைக் கன்னுகுட்டியோட தோலிலேதான் செய்ய முடியும்.
கறி போடுகிறவங்ககிட்ட தோலை வாங்கிக்குவேன். தோல் மட்டுமே ரூ.150லிருந்து 250 வரை இருக்கும்.தப்புக்கட்டை
ரூ.250 ஆகும். இல்லேன்னா 4 கட்டை வைத்து ஒட்டிச் செய்வோம். முன்னாடியெல்லாம் வார்போட்டுத்
திருவி செய்வோம். இப்பல்லாம் போல்ட்டு போட்டு முடுக்கி விடுகிறோம். தவில் மட்டும் ரூ.3000லிருந்து
12,000 வரை இருக்கும். யாழ்ப்பாணத் தவில் 8000 ஆகும். திருவாடுதுறை, நரசிங்கம்பேட்டை,
உடையார்பாளையம் இங்கிருந்தெல்லாம் கட்டை வாங்குவோம். தப்பு வாத்தியம் பலா, வேம்பு மரத்தில்
செய்றது. நாதஸ்வரம் கருங்காலி மரத்தைக் குடைந்து செய்வாங்க. இதுக்குத் தனித்தனியா பசை
எல்லாம் வாங்கிச் செய்றது ரொம்ப கஷ்டமான வேலை’’ என்று கூறுகிறார் நாதஸ்வரக் கலைஞர்
குமார்.
இசைக் கருவிகளுக்குத்
தோலைப் பதப்படுத்துதல் வேலை மிகவும் கடினமானது என்று கூறினாலும் தொடர்ந்து இம்மக்கள்
இதைச் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் சுப்ரமணி என்ற தவில், நாதஸ்வரக் கலைஞர் தம்
அனுபவத்தை பின்வருமாறு கூறுகிறார். “தோலைப் பதப்படுத்துறதுதான் ரொம்பவும் கஷ்டமான வேலை
தொடர்ந்து வேலை செஞ்சா ஒரு வாரம் ஆகும். காயவச்சு, மயிரை எல்லாம் எடுத்து, பசை தடவி,
ஊறவச்சு மறுபடியும் காயவச்சு. இப்படி பெரிய வேலை. இதுக்கு ‘வளை மூட்டுதல்’ன்னு பேரு’’
என்று தோற்கருவிகள் தயாரிப்பில் ஈடுபடும் இக்கலைஞர் கூறுகிறார்.
கர்நாடக மாநிலத்தில்
‘ஸந்தால்’ என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் குரங்குத்தோலைக் கொண்டு ‘டும்டா’ (தம்பட்டம்)
என்ற பறையும் ‘ஓராவோன்’ சமூகத்தைச் சார்ந்தோர் ‘மந்தார்’ என்ற பறையும் தயாரிக்கின்றார்.
ஓராவோன் மக்களிடையே ஒரு சிறுவன் பாடுவதாக உள்ள பாடல் பின்வருமாறு:
“அந்த மலைக்கோட்டையின்
மீது
அவரைக்காய்காய்த்துக்
குலுங்குகிறது
அதைப் பார்க்கும்
குரங்கை நோக்கி
நான் கூறினேன்
நான் உன்னை என்
வில் அம்புகளைக் கொண்டு
கொல்வேன். உன்
தோலை உரிப்பேன்.
அத்தோலைக் கொண்டு
ஒரு மந்தார் தயாரிப்பேன்.
நான் அதை வாசிக்கும்போது
கிராமப் பெண்கள்
வந்து என்னைச்
சூழ்வர்’’
‘இந்த சுவையான
பாடலிலிருந்து சில ஜாதியினரிடையே குரங்குத் தோலைக் கொண்டு பறைகள் செய்யப்பட்டு வரும்
வழக்கத்தை நாம் அறிகிறோம். ஸந்தால் ஜாதியினரும் குரங்குத் தோலை உபயோகித்து ‘டும்டா’
என்ற தம்பட்டத்தை அமைக்கின்றனர். குரங்குகளைப் பிடிக்க அவர்கள் அவை வாழும் காடுகளுக்குச்
செல்கின்றனர். அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து ‘ஹநுமான் மந்திரத்தை’ ஓதுகின்றனர்.
அதனால் மயக்கமடைவதாகக் கருதப்படும் குரங்குகளைப் பிடித்துக் கொன்று தோலை உரித்துப்
பறை செய்கின்றனர். இதனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இனக் குழுக்களாக வாழும் மக்கள்
கூட்டம் பறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளன என்பதையும் பல்வேறு விலங்குகளின் தோலையும்
பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் அறியலாம்.
தோற்கருவிகளுக்குப்
பிண்டமாகிய உடல்பகுதியைக் கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, குரவம் ஆகிய மரவகைகளைக்
கொண்டு செய்வது சிறந்தது என்று பஞ்சமரபு நூல் குறிப்பிடுகிறது. இன்றும் முழவுக் கருவிகளுக்கு
இவ்வகை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ‘இம்மரங்கள் வடுப்படாமல், பொத்துப்படாமல், சாவாமல்,
மூவாமல், இளமையின்றி நடுவயதினவாய் உயர்ந்த சமதளமான நிலத்துளவான மரங்களே முழவுகள் செய்யத்
தகுந்தவை’ என்ற குறிப்பு பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளைப் பற்றிய நுண்ணறிவைப் புலப்படுத்துகிறது.
வட ஆற்காடு மாவட்டத்தில்
பலகை, சட்டி, டோல் எனும் மூன்று வகையான பறை பயன்படுத்தப்படுகிறது. ‘பலகை’யைத் தோளில்
மாட்டியவாறும் ‘சட்டி’யை இடுப்பில் கட்டியவாறும், ‘டோல்’ கழுத்தில் மாட்டியபடியும்
ஈச்சங்குச்சிகளால் அதன் கண்ணில் அடிக்கின்றனர். இவை திருமணம், திருவிழா, மஞ்சள் நீராட்டுவிழா,
சீர்வரிசை கொண்டு செல்லுதல், கரகாட்டம், புலியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள், இறப்பு
நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் பொழுது பயன்படுத்தப் படுகின்றன. அந்தந்த நிகழ்ச்சிகளுக்கேற்ப
பறையின் ஒலிப்பு முறை, அந்த ஒலிப்புக்கேற்ப வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. பல்லாண்டுகளாக
21 வகையான தாள முறைகள் கையாண்டு வந்ததில் தற்காலத்தில் 7 வகையான ஒலிப்பு முறைகள் மட்டுமே
பெரும்பான்மையாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஓரம், நடுவம், பக்கம், தலை,
பாதம் ஆகியன பறையின் ஒலிப்பு இடங்களாகும். பறை முழக்கத்தில் பயன்படுத்தப்படும் தாள
முறைகளில் மூன்றலகுத்தாளம், நான்கலகுத்தாளம், அய்ந்தலகுத்தாளம், ஏழலகுத்தாளம் ஆகிய
நான்கு அளவுத் தாளமுறைகளும் மிக முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில்
உள்ள கிராமங்களில் 32 தாள முறைகள் அறிந்த கலைஞர்களும் உள்ளனர்.
விசித்துக் கட்டும்
வார்
பறைக்குப்
போர்த்தப்படும் தோல், தோலால் செய்யப்பட்ட வார்களால் இறுக வலித்துக்
கட்டப்படுகிறது. இறந்த கன்றுப் பருவப் பசுவின் பக்கத்தோலை வாராகக் கொண்டனர்.
திண்ணிய வாரால் இறுக வலித்துக் கட்டும்பொழுது தோற்கருவிகளின் அடிக்கும் இடமாகிய
கண்களிலே தேவையான சுருதி அமைக்கப்பட்டது. துடி என்னும் தோற் கருவியின் வார்
செறிந்தும் நெகிழ்ந்தும் அமைந்திருக்கும். வார்கள் துண்டுகளாகப் பகுக்கப்பட்டு,
அத்தகைய துண்டான வார்களால் வலித்துக்கட்டினர்.
வார்
அறுப்புண்டு சீர்குலைந்து கிடந்த தெளிந்த கண்ணையுடைய மாக்கிணையைப் புதுவார்கொண்டு
விசித்துக் கட்டி, இசைக்கேற்பக் கண் அமைத்தனர். அதற்கேற்ப புதிய வலிய தோலைப்
போர்த்தினர். அளவில்லாத மாலை போன்ற நெடிய வார்களால் வலித்துக் கட்டினர். வார்
குறையற்றதாக இருக்க வேண்டும். இறுக வலித்துக் கட்டுவதற்கேற்ப நீண்டிருக்க
வேண்டும். ஒருசில தோற்கருவிகள் சிறிய வார் கொண்டும் பிணிக்கப்பட்டன. வார்
தயாரிப்பதற்கும் தமிழர்கள் சில குறிப்பிட்ட முறைகளைக் கையாண்டுள்ளனர் என்பதை
இதன்மூலம் அறியலாம்.
பண்டைத் தமிழரின்
தோல் தொழில்
பண்டைத்
தமிழர் தோலின் இயல்புகளையும், அதன் பயனையும் அறிந்து வாழ்க்கைக்குத் தேவையான பல
பொருள்களைச் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியப் பாடல்கள்
உணர்த்துகின்றன. அவர்கள் தோலுக்கு வழங்கிய வேறு பெயர்களான அதள், பச்சை, உரிவை,
உரி, சருமம் போன்ற பெயர்களையும் அறிய முடிகின்றது. உடும்பின் தோல், ஆட்டின் தோல்,
மான்தோல், பசுவின் தோல், காளைமாட்டின் தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல தோற்
கருவிகளைச் செய்து வந்துள்ளனர். போர்வீரர்கள் பயன்படுத்தும் கேடயம் (கேடகம்),
கைச்சரடு, போர்க் கருவிகளுக்கான உறை, போர்வீரர்கள் தாக்குதலின்றும் காத்துக்
கொள்ளும் கவசமான மெய்புதை அரணம், கேடயங்களைக் கொண்டு அமைக்கும் பாசறை அரண் கொல்லன்
பட்டறையில் பயன்படுத்தப் பட்ட ஊதுலைக்கருவி, படுக்கை, தோளணி, காலணி, பைகள், யாழின்
போர்வை ஆகிய தோலால் செய்யப்பட்ட பொருட்களைத் தமிழர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இசைக்கருவிகளான முழவு, பதலை, ஆகுளி, சிறுமுழா, தண்ணுமை, கிணைப்பறை, தடாரி, துடி
போன்ற கருவிகள் தோற்பாவைக் கூத்துக்கான பொம்மைகள் ஆகியவற்றைத் தோலினால் செய்து
பயன்படுத்தி வந்துள்ளனர். தோலைப் பதப்படுத்தி இப்பொருட்களைச் செய்துவந்த
கைவினைஞர்கள் இக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.
கஞ்ச
காரரும் செம்பு செய்குநரும்
மரங்கொல்
தச்சரும், கருங்கைக் கொல்லரும்
கண்ணுள்
வினைஞரும், மண்ணீட் டாளரும்
பொன்செய்
கொல்லரும், நன்கலந் தருநரும்,
துன்ன
காரரும், தோலின் துன்னரும்
கிழியினும்
கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதில்
செய்வினைப் பால்கெழு மாக்களும்
[சிலப்.
இந்திர விழுவூரெடுத்த காதை. வரி 28-34] இப்பாடலில் குறிப்பிட்டுள்ள தோலின் துன்னர்
என்பது செம்மர் என்பவரைக் குறிக்கும். தோல் பொருட்களைச் செய்வோர்ச் செம்மர்,
பறம்பர், உறைகாரர், தோலின் துன்னர் எனப் பலவாறு அழைக்கப்பட்டனர். இவர்கள் தோலின்
தன்மைகளையும், அதன் பயன்பாட்டு முறைகளையும் நன்கு அறிந்திருந்தனர். தோலினால்
தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகள் தமிழரின் இசையறிவை உணர்த்துவனவாகும். தாளக்
கருவிகளான இசைக் கருவிகள் இசைமரபுக்கான இலக்கணத்துடன் அமைந்துள்ளதை அறிவனார்
இயற்றிய பஞ்சமரபு நூலின் மூலம் அறியலாம்.
பறையைக் குறிக்கும்
சொற்கள்
அடக்கம்,
ஆகுளி, ஆறெறிபறை, டமாரம், துடி, (உடுக்கை, இழுகுபறை, இடை சுருங்கிய பறை) இயமரம்,
இரணபேரி, எக்கம், எல்லரி, ஏறங்கோட்பறை, கஞ்சிரா, கடுவாய்ப்பறை, கண்டிகை, கம்பலி,
கரடிப்பறை, கல்லவரம், களக்கொட்டு, கிடுகு, கிடுமுடி, கிணைப்பறை, குடப்பறை
(பன்றிப்பறை), கும்மட்டம், குரவைப் பறை, தொண்டகப்பறை கொடுகொட்டி, கோட்பறை, சல்லரி
(திமிலை), சல்லிகை சாக்கொட்டு (சாப்பறை, பிணப்பறை), சிறுபறை, சூசிகம், (தவண்டை) திண்டிமம்,
திமிக்கி, தக்கை, தட்டை, தண்ணுமை, தகுணிச்சம், தப்பட்டை, தப்பை, தம்பட்டம்,
தமுக்கு, தலைப்பறை, தலைவிரி பறை, நாவாய்ப்பறை, நிசாளம், நிரைகோட்பறை, படகம்
(பாடகம்), படலை (பதலை), பகுவாய்ப்பறை, பாகம், பாண்டிகம், பெருங்கோடனை,
மகாதுந்துமி, மத்தரி, மரக்காற்பறை, மீன்கோட்பறை, முறவம், முருகியம், மொந்தை எனப்
பல சொற்களால் பறைகள் பற்றிய செய்திகளை இலக்கியச் சான்றுகள், அகராதிகள் வழியாக அறிய
முடிகின்றது. இச்சொற்கள் யாவும் உருவத்தை அடியாகக் கொண்டும், ஒலியை அடியாகக்
கொண்டும், பயன்படும் விதத்தை அடியாகக் கொண்டும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில
பறைகளுக்கு இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்களால் குறிப்பிடப்
படுவதுண்டு. ஆகையால் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பறை வகைகள் மேலும் ஆய்விற்குரியன.
இவற்றுள்
இரணபேரி, கடுவாய்ப்பறை, படகம், மகாதுந்துமி, தண்ணுமை ஆகியன போர்ப்பறைகளாகும்.
கஞ்சிரா,
கிடுகு, கிடுமுடி, சிறுபறை, கும்மட்டம், திண்டிமம், திமிக்கி, தப்பட்டை ஆகியன
சிறுபறை வகைகளாகும். ஆறெறிபறை, சூறைகோட்பறை ஆகியன பாலை நிலப் பறைகளாகக்
குறிப்பிடப்படுகின்றன.
பறைநிலை
இது
சிற்றிலக்கிய வகைகள் ஒன்றாக இடம் பெறுகிறது. காவலர் குனிதுறத் தேவர் காத்தளிக்க
எனக் கடவுளர் விழாவினும் நாடும் நகரமும் நலம் பெற இயம்பி, வருநெறி வஞ்சி வழங்கப்
பற்றிய மொழிவரத் தொடுப்பது பறை நிலை ஆகும் என்பது பன்னிரு படலம் கூறும் பறைநிலை
இலக்கணமாகும். வள்ளுவர், கடவுளர் விழாவிலும் அரசர் முடிவுனை விழாவிலும் யானை
மீதமர்ந்து பறையறைந்து அரசரைக் கடவுள் காக்க வேண்டுமென வாழ்த்துவதைப் பாடுவதாக
இருக்கலாம் என்பது கருத்தாகும் எனத் தஞ்சைப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சியம்
(தொ.12.ப.231) விளக்கமளித்துள்ளது. பறை பிற தாளக் கருவிகளுக்கு அடிப்படையாக
அமைந்தது என்பது காலப்போக்கில் தமிழர்கள் அறியாமல், இக்கருவியிலிருந்து வளர்ச்சிப்
பெற்ற பிற தாள இசைக் கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இது
நம்முடைய அடையாளங்களை நாமே மண்ணில் மிதித்துப் புதைப்பதற்குச் சமமாகும். பறை
அனைத்துச் சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் செயல்திறன் மிக்க கருவியாகப் பயன்பட்டது.
ஆனால், பறையர், சக்கிலியர் இன மக்களைத் தவிர பிற இனத்தினர் இதைத் தீண்டாமையின்
வடிவமாகவே கருதி, பறையைப் புறக்கணித்து விட்டனர். (நிறைவு)