மண்ணின் மைந்தர் - கவிஞர் குலோத்துங்கன் கல்விக் காட்சியகம், தென்னிலை, கரூர்

அண்மையில் கல்வியாளர் கவிஞர் குலோத்துங்கன் (பத்மபூஷண் முனைவர் வா. செ. குழந்தைசாமி) சொந்த ஊரில் நடைபெறும் கல்லூரி சிறப்பான விழா எடுத்து அவரது தன்வரலாற்று நூலை அறிமுகம் செய்தது. அக் கல்லூரி நிர்வாகிகளுக்குப் பாராட்டு! வாசெகு ஐயா பெற்ற பல்வேறு பட்டயங்களை தென்னிலைக் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். அந்த விழாக் காணொளியுடன் சில சொற்பொழிவுகளும் கேட்போம். தமிழ் எழுத்துச் சீர்மையின் மூலம் தமிழெழுத்துக்களை ஆங்கில மீடியம், அயல் நாட்டுத் தமிழர்கள் போன்றவர்கள் சிறந்த தமிழ் அறிவு பெற்று வாழ வழிவகுப்பவர். அவரது சென்னைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவு இணையப் பல்கலைத்தளத்தில் இருக்கிறது. கேட்டுப் பாருங்கள். தமிழை நவீன யுகத்துக்கு எடுத்துச் செல்லும் இணையப் பல்கலை நிறுவுனர் கவிஞர் குலோத்துங்கன் வாழி!

இன்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் விரிந்த ஆலமரமாக தமிழ் வளர்ச்சிக்கு உலகெங்கும் துணையாக விளங்குகிறது. உலகிலேயே முதல் முறையாக ஒரு மொழிக்கென இணையத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பெற்றது உலகின் ஆறு செம்மொழிகளில் ஒன்றாய தமிழ்மொழிக்குத் தான். இணையப் பல்கலைச் சிந்தனை கவிஞர் குலோத்துங்கன் (முனைவர் வா. செ. குழந்தைசாமி) அவர்களுக்கு முதலில் உதித்தது. அதை நடுவணரசிடம் சென்று நடைமுறைப் படுத்தியும் செய்த செயல் வீரர் அவர். இன்று அவரோடு 1970களில் இருந்து தமிழ்ப் பணியாற்றும் பேரா. ப. அர. நக்கீரனார் இயக்குனராக இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களை வெள்ளுரையாகவும் (plain-text unicode), பிடிஎப் கோப்புகளாகவும் இணையப் பல்கலைக்கழகம் வேண்டுவோர்க்கெல்லாம் பகிர்ந்தளித்து வருகிறது. முந்தை நாளில் தமிழ் ஏடுகள் தீயாலும், வெள்ளத்தாலும், கரையானாலும், கவனிப்பாரின்றியும் அழிந்தன. நம் முன்னோர்கள் அச்சிட்ட லட்சக்கணக்கான நூல்கள் படிப்பாரும், பாதுகாப்பாரும் இன்றி விரைவில் அழியும் தறுவாயில் உள்ள அவலத்தைத் தமிழ்நாடெங்கும் காண்கிறோம். ரியூனியன், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, நார்வே ... போன்ற நாடுகளில் தமிழ் பேசாத, எழுதாத மரபுவழித் தமிழினத்தார்களுக்குத் தமிழ் போதிப்பது இணையப் பல்கலையின் முக்கிய நோக்கம். ஆனால், அது ஒரு கூறுதான். அதை விடவும் முக்கியமானது நூல்களை பிடிஎப் ஆக்கி ஆய்வாளருக்கு அளித்து தமிழாராய்ச்சியை உலகத்தின் சிறந்த பல்கலைகளில் விரிவாக்க உதவுவதாகும். தமிழறிஞர்கள், மொழியியல் பேராசிரியர்கள் கருத்தாடும் ஆய்வுக்களங்களில் (உ-ம்: செந்தமிழ் குழுமம் (பாரிஸ் பல்கலை), இந்தாலஜி லிஸ்ட், ...) பயன்படும் வகையில் இந்த 19-ஆம் நூற்றாண்டு, 1950-60 வரை அச்சான தமிழ் நூல்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை முழுதுமாய்த் தரும் பெரும்பணி போன்றவை வழிகாட்டியாய் விளங்கும். இந்த பிடிஎப், வெள்ளுரை என நூல்களை அளிக்கும் பணியை அரசாங்க வரிப்பணத்தில் செய்தால் இணையப் பல்கலைக்கழகத்தின் செந்தமிழ்க் கொடையாக விளங்கும். சிங்களக் காடையர் யாழ் பல்கலையை எரித்த போது, எழுத்தாளர் சுஜாதா ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்ற கதையை எழுதினார். அது யாழில் ஏற்பட்ட தமிழ் அழிப்பை லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எடுத்துச்சொன்ன எழுத்து. ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ இணையப் பல்கலையில் அதன் அதிகாரிகள் வழங்கும் நாள் செந்தமிழின் பொன்னாள்!

இன்று இணையம் ஏற்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ் வளர்ச்சி, தமிழாய்வின் வளர்ச்சி என்று பார்த்தால் இணையத்தில் அதிகமாக இல்லை என்றுதான் நான் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. 8 கோடித் தமிழர்கள்! ஆனால், வெறும் 10,000 வலைப்பதிவுகள். அதிலும் எழுதுவோர் தொகை ஆயிரத்துக்கும் குறைவே. சினிமாதான் அதிலும் பெரும்பங்கு. ஒரு 10 மின்குழுக்கள். அவ்வளவுதான். உலக அறிவும், விஞ்ஞானமும் ஆங்கிலத்தில் நாள்தோறும் விரிந்தும் பரந்தும் வளர்ந்துவருகிறது. ஆனால் அதுபோல், பாரதி, பாரதிதாசன் கனவாகிய தமிழ் வளர்ச்சி இருக்கிறதா? என்று பார்த்தால் காணோமே. அரசை எடுத்துக் கொள்ளுங்கள்: எத்தனை தமிழ்நாட்டு அரசாங்கத் தளங்கள் தமிழிலே இருக்கின்றன? பெரிதாக ஒன்றையும் காணோமே. இதற்கெல்லாம் விடிவாக தமிழ் இணையப் பல்கலை ஒன்றுதான் தெரிகிறது. அதுபோன்ற தளங்கள் மிக வேண்டும். புராணிகர்களுக்குக் கூட இணையப்பல்கலை தரவுதளங்கள் மிகுதியும் பயனாகிறது என்பது அனுபவத்தில் கண்டுள்ளேன். ’திடீர்’ சாம்பார் போல, ‘திடீர்’ புலவர்கள் ஐயா இவர்கள்’ என்று தமிழ்ப் பேராசிரிய நண்பர்கள் நகைச்சுவையாய்க் குறிப்பிடுகின்றனர். 8 கோடி தமிழ் பேசும் மக்களில் ஆயிரம் பேருக்குக் குறைவாக எழுதும் நிலை மாறி, பல லட்சோபலட்சம் தமிழர்கள் விரிவாக தங்கள் ஆராய்ச்சியை இணையப் பல்கலை போன்றவற்றைப் பயனித்து எழுதும்போது புராணிகக் கதைகள் மாறி அறிவியல் பார்வைக்குத் தமிழ் வளரும் என்பதுறுதி. தாய்லாந்து, கொரியா மொழிகளில் எத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள் இணையத்தில் என்று பார்த்தால், தமிழ், தமிழாய்வு செல்லவேண்டிய தூரம் நன்கு தெரிகிறது.

அண்மையில் மரை என்றால் Antelope. மரையூர், மரைக்காடு என்னும் பழந்தமிழ்ப் பெயர்கள் கொண்ட ஊர்கள் மிகுதி. இடைக்காலத்திலே ரகர > றகர திரிபு ஏற்பட்டதால் மறைக்காடு எனத் திரிந்துள்ளது. ’வேதம் அஃறிணைப் பொருள், அது எப்படி சிவனை வழிபடும்? மனிதர்கள் அல்லவா மறைப்புத்தகம் படிக்க வேண்டும்?’ எனவே, மறைக்காடு ஆனது என்பது புராணக்கதை, விஞ்ஞானத்துக்குப் பொருத்தமில்லாத கதை என்பார் பாவாணர். அதேபோல் தான் வரகூர் என்னும் பழந்தமிழ்ப் பெயருக்கு தேசாந்திரியாய் வந்த தெலுங்குநாட்டு 18-ஆம் நூற்றாண்டு சுவாமிகளுக்கு வரகூர்ப் பொருளும், தமிழ் உச்சரிப்பும் விளங்காததால் ஊரை புரி என்றும், வரகை வராஹம் என்றும் மாற்றியதையும் விளக்கினேன். அதற்கேற்பட்ட கதையை 'Urban myth' என்பர். வரகூர் மாறியிருப்பது சென்னையின் Urban mythகளில் ஒன்று எனத் தெளிவாகிறது. சென்னைத் தமிழறிஞர் ஒருவர் பர்கூர் (Burgur) என்பதும் வரகூர் என்பதன் திரிபுதான் எனக் காட்டினார். ஆர்க்காடு ஆறுகாடு (ஷடாரண்யம்) என மாறியதுபோல, மரைக்காடு வேதாரணியம் (மறைக்காடு) ஆகியுள்ளது. எனவே தான், தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் (உ-ம்: முனைவர் தி. நெடுஞ்செழியனார், மயிலாடுதுறை, 2008) அறிவுறுத்துவது போல மரைக்காடு என்று வேதாரணியத்தை பழந்தமிழ்ப் பெயரால் அழைத்தல் சிறப்பு. முதலில், பத்திரிகைகள் இதனைச் செய்ய தமிழ் முனைவர்கள் திருப்பூர் கிருஷ்ணன், அண்ணாகண்ணன், வல்லமை இதழாளர்கள் போன்றோர் முன்வரவேண்டும். அப்போது இளைஞர்கள் பழந்தமிழ்ப் பெயரை அறிந்துகொள்ள ஏதுவாகும். ஆர்க்காடு, மயிலாடுதுறை, மரையூர், மரைக்காடு, ... எனத் தமிழர் எழுதுதல் தமிழ் வரலாற்றுக்கும், தமிழின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். மரைக்காடு பற்றி விரிவாக இராமகி ஐயா பலமுறை எழுதியுள்ளார். நூலாராய்ச்சிகளில் சிறந்த தமிழறிஞர்கள் பலரும் 60-70 ஆண்டுகளாய் விளக்கிவரும் ஆய்வுமுடிபுகள் இவை. நேற்று கவிமாமணி இலந்தை ராமசாமி ஹ்யூஸ்டனில் பாரதியார் கலைமன்றத்தில் பேசியதைப் பற்றி அகத்தியர் குழுவில் எழுதியிருந்ததைப் பல்லாண்டுகட்குப் பின்னர் படித்தேன். ரகர, றகர வேறுபாட்டை எவ்வளவு நுட்பமாக பாரதியார் கையாண்டுள்ளார் என இலந்தை விளக்கியிருக்கிறார். அதேபோல, ரகர, றகர வேறுபாடுகள் ஊர்ப்பெயர்களில் உள்ள முக்கியத்துவம் தமிழர் வாழ்வில் பனுவலியல் ஆய்வினால் தெளிவாகிறது: ஆர்க்காடு > ஆற்காடு (ஷடாரணியம் என ஆனது!!), ஏர்க்காடு > ஏற்காடு, மரைக்காடு > மறைக்காடு ... பாரதியார் வலியுறுத்தும் செந்தமிழின் ரகர, றகர நுட்பங்களைத் தமிழ் ஊர்ப்பெயர்களில் ஆர்க்காடு, மரைக்காடு, மரையூர் என்பவற்றில் பயன்படுத்துவதன் இன்றியமையாமையினை விளக்கி ‘மரை, மரையூர், மரைக்காடு’ என்று கட்டுரை எழுதலாம். Smile of Murugan is  a great intro by Zvelebil to Tamil literature. முத்தமிழ் வினோதன் மரைமகள் மணாளன் முருகன் தமிழர் ஆர்க்காடு, மரையூர் போல மரைக்காடு, முதுகுன்று, மயிலாடுதுறை, ... எனும் போது முறுவல் புரிகிறான்!

என் போன்ற பலரை அறிவியற் பார்வையில் தமிழாராய்வு செய்யத் தூண்டிய பேராசான் வாசெகு ஐயாவின் காணொளிகள் சில காண்போம்!

நா. கணேசன்

At MIT, Dr. VCK speech - Tiru. APJ Abdul Kalam, President of India


கலைக்களஞ்சியம் சிடி வெளியீட்டு விழா:


திருக்குறள் விழா, சிங்கப்பூர், 1994



தமிழ்ச் செம்மொழி பற்றி - ஆஸ்கோ பார்ப்போலா அருகில் இருக்கிறார்.

கவிஞர் குலோத்துங்கன் - தென்னிலை கல்லூரிவிழாக் காணொளி:

அண்ணா பல்கலைக்கழகத்தில் கவிஞர் குலோத்துங்கனின் பயோ-டேட்டா:
http://www.annauniv.edu/cpde/Forms/BIO/VCK_Bio-Data.pdf

2 comments:

Unknown said...

அன்பான கணேசன்,
அருமையான பதிவை இனிமையாக அளித்தமைக்குப் பாராட்டு.
கவிஞர் குலோத்துங்கன் - தென்னிலை கல்லூரிவிழாக் காணொளி
கண்டு கேட்டு மகிழ்ந்தேன்.
மற்றக் காணொளிகளை விரைவில் பார்த்து கருத்து சொல்வேன்.
அன்புடன்
ராதாகிருட்டிணன்
ஆகசுட்டு 4, 2013

தமிழ்ப்பூ said...

Excellent and thought provoking article.