கலைக்களஞ்சியம் தந்த பெரியசாமித் தூரனுக்குப் பாராட்டுவிழா (1963)

தமிழறியும் ராஷ்டிரபதி இதுநாள் வரை தமிழ்க் கலைக்களஞ்சிய வெளியீட்டு விழாக்கள் ஆங்கிலத்தில் நடைபெற்று வந்தன. தமிழ் தெரியாதவர்கள் முன்னிலையில் விழாக்கள் நடந்ததால் ஆங்கிலத்திலேயே நடத்த நேரிட்டன. இப்போது தமிழ் தெரிந்த ராஷ்டிரபதி வந்திருப்பதால் தமிழிலேயே விழா நடத்துவதாக தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு. டி.
எஸ். அவினாசிலிங்கம் தமது வரவேற்புரையில் கூறினார் (கைதட்டல்). [நவ இந்தியா, 5-1-1963]




”ஜனாதிபதி கலைக் களஞ்சியத்தை வெளியிட்டு எங்களை ஆசீர்வதிப்பது பாரதமே எங்களை ஆசீர்வதிப்பதற்குச் சமம். டாக்டர் ராதாகிருஷ்ணன் நமது நாட்டின் தத்துவம், கலைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கலைக்களஞ்சியமாகவே இருக்கிறார் என ஸ்ரீ பெரியசாமி தூரன் தமது வந்தனோபசார உரையில் குறிப்பிட்டார். [சுதேசமித்திரன், 5-1-1963]. முதல் தொகுதி 1954-ல் சி.எஸ் அவர்களாலும் 5-ஆம் தொகுதி 1958-ல் இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேருவாலும் வெளியிடப்பெற்றன.

பாலவநத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைத்தேவர் துணைநிற்க ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி ஒன்றுதான் தமிழில் 100 ஆண்டுக்கு முன்பிருந்த கலைக்களஞ்சியம். அது புராணக்கதைகளை அறிய உதவியது, ஆனால் நவீன விஞ்ஞானத்தைத் தமிழில் விரிவாகச் சொல்ல ஒன்று வேண்டுமே என்று ஆழ்ந்து சிந்தித்து ‘தமிழிசையறிஞர்’ ம. ப. பெ. தூரன் அவர்கள் கலைக்களஞ்சியத் திட்டம் தயாரித்தார். கல்வி அமைச்சர் தி.சு. அவினாசிலிங்கம் துணைநின்றார். சிங்காரவேலுக்குப் பாண்டித்துரை போலவே, தூரனுக்கு அவினாசிலிங்கம் வாய்த்தது தமிழின் ஆகூழ். வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் வாங்குவதன் முன்நாளில் (14-8-1947) தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. செயலாளர் பெ. தூரன். 1948-லிருந்து 14 ஆண்டுகள் தூரன் கலைக்களஞ்சிய எடிட்டராக உழைத்தார். 15000 கட்டுரை, 1000+ ஆசிரியர்கள் எழுதினர். 10 தொகுதி, மொத்தம் 7500 பக்கம், எண்ணிறந்த படங்கள். 25000 தொழில்நுட்புச் சொற்கள். இந்தச் சொற்கள் எல்லாம் கணினியுகத்தில் பரவவேண்டுமாயின், யுனிகோட் எழுத்துருவில் வெள்ளுரையாக (plain-text) இணையப் பல்கலை அல்லது அவினாசிலிங்கம் பல்கலை (கோவை) வலைத்தளம் ஏறவேண்டும். அப்பொழுதுதான் கணித்துழாவி எந்திரங்களில் இவ்வார்த்தைகள் சிக்கும்.

கடைசித் தொகுதியை வெளியிட்ட ராஷ்ட்ரபதி எஸ். ராதாகிருஷ்ணன் தனக்கே உரிய தத்வார்த்த உரை ஆங்கிலத்தில் நிகழ்த்தியருளினார். ‘வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் ப்ரபந்நஜநகூடஸ்தர் நம்மாழ்வார் புகழைப் பேசும்போது நாலாயிரப் பிரபந்த வரியைத் தமிழில் சொன்னதும் ஆடியன்ஸில் கரகோஷம் எழும்பியது. அவர் உரை பற்றித் தமிழ்ப் பத்ரிகைகளில் 1963-ல் வந்த சில செய்திகள்:
” குறுகிய நோக்கங்கள் எதுவும் இல்லாதிருந்த காலத்தில் தென்னகத்தின் புகழ் உலகெங்கணும் பரவியிருந்தது. கம்போடியாவில் அதன் மன்னரது கொடியில் மூன்று கோபுரச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவில் சிவன் பெயராலும், விஷ்ணு பெயராலும் கோயில்கள் உள்ளன. ஜாதி, சமய வேறுபாடுகள் தலைகாட்டாத நேரத்தில் தென்னாட்டு மக்கள் பரந்த நோக்கமும், விரிந்த சிந்தையும் உள்ளவர்களாக இருந்த காலத்தில்தான் நமதுபுகழ் உலகளாவி இருந்தது. அந்தப் பழமைச் சிறப்பை நாம் மீண்டும் அடைய வேண்டும்.” (சுதேசமித்திரன், 5-1-1963).

"அறிவு என்பது நிரந்தரமாக வளர்ச்சி அடைந்துவரும் தன்மையது. அதன் ஒரே தடை அறியாமைதான். அறிவு வளர்ச்சியைத் தடை செய்து நிற்கும் அறியாமையைத் தகர்க்கவேண்டும். அப்போதுதான் சுறுசுறுப்பாக இயங்கும் உள்ளங்கள் அறிவைப் பெருக்கிக்கொண்டே போக முடியும். முற்போக்குக் கலாசாரம் என்பதற்கு இது ஒரு சோதனை.

ஆகவே நமது கலாசாரம் முற்போக்கானதாகக் கருதப்பட வேண்டுமானால் இதர கலாசாரங்களிலுள்ள சிறந்த, உயரிய அம்சங்களை நமதாக்கிக்கொள்ளும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். பௌதிகம், கணிதம், ரசாயனம், வான சாஸ்திரம் போன விஞ்ஞானதுறை ஒவ்வொன்றிலும் இதரர்கள் பிரமாத சாதனைகளைப் புரிந்திருக்கின்றார்கள். நாம் அவர்களனைவரது வாரிசாக வேண்டும்.”

”கம்போடியா கொடியில் கோபுரம் பொறிக்கப்பட்டிருப்பதையும், இந்தோனேஷியாவில் சிவன் விஷ்ணு ஆலயங்கள் இருப்பதையும் அவர் எடுத்துக்காட்டினார். தற்போதுள்ள பரம்பரை ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது பரந்த கண்ணோட்டம் கொள்ள வேண்டும். கடந்த கால பெருமையை நிலைநாட்ட விரும்பினால் இன்னமும் உள்ளத்தைப் பீடித்துக் கொண்டிருக்கும் சில்லரை எண்ணங்களை அகற்ற வேண்டும்” என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறித்தினார்.” (தினமணி, 5-1-1963).

--------------------------


தமிழால் எதுவும் முடியும்: தமிழ் கலைக்களஞ்சியமே சான்று. எம். பி. தூரன் பாராட்டு விழாவில் சி. சுப்பிரமணியம் பேச்சு. முடியுமா என்பதல்ல; முடிப்போம் முறையாக முடிப்போம் - காமராஜ் (நவ இந்தியா, 11.2.1963)



(இடமிருந்து வலம்) திரு. பெ. தூரன், சி. சுப்பிரமணியம், எம். ஏ. முத்தையா செட்டியார், 2012-ல் நூற்றாண்டு விழாக்காணும் டாக்டர் மு. வ.

சென்னை, பிப். 11
“உழைப்பில் இன்பம் காண்பவர்; விளம்பரத்தை விரும்பாது ஏற்ற பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய கர்மவீரர்; தமிழ் உள்ளளவும், தமிழ் மக்களும் தமிழ்நாடும் உள்ளளவும் அவர் புகழ் இருக்கும்.” என்று திரு எம். பெரியசாமி தூரன் பாராட்டப்பட்டார்.

நீதிபதிகளும், அமைச்சர்களும், பேராசிரியர்களும் திரண்டிருந்த பாராட்டுக் கூட்டத்தில் திரு. பெரியசாமி தூரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. கே. காமராஜ் ரூ. 63,500 கொண்ட பணமுடிப்பை விழாக் குழுவினர் சார்பில் வழங்கினார்.

15 ஆண்டு உழைப்பினைத் தொடர்ந்து தமிழ் வரலாற்றில் முதன்முதலாக உருவாகியிருக்கும் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரான திரு. பெரியசாமி தூரனுக்கு பாராட்டும் நிதி அளிப்பு வைபவமும் சென்னை அசோக் ஓட்டலின் திறந்தவெளி அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.

சி. சுப்பிரமணியம்

யூனியன் கனரகத் தொழில் அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற நாளன்று தமிழ் வளர்ச்சிக் கழக்த்திற்கு வித்தூன்றப்பட்டு கலைக்களஞ்சியம் உருவாக்கத் திட்டமிட்ட வரலாற்றை திரு. சி. சுப்பிரமணியம் விவரித்தார். ”கலைக்களஞ்சியத்தின் ஆட்சிக் குழு, திரு. பெரியசாமித் தூரனை ஆசிரியராக ஏற்றது. 15 ஆண்டு சலியாத பேருழைப்பினால் ஒன்பது தொகுப்புகள் கொண்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் இப்போது உருப்பெற்றுவிட்டது. உலகில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அவற்றில் காணக் கிடக்கின்றன. நவீன கருத்துக்களுடன், நம் நாட்டுப் பழங்கால கருத்துச் செல்வங்களும் கலைக் களஞ்சிய தொகுப்புக்களில் பொதிந்துள்ளன. எந்தவித நவீன விஞ்ஞான, தத்துவக் கருத்துக்களையும் தமிழில் விளக்க முடியும் என்பதை களஞ்சியம் பகர்கிறது” என்று அவர் பாராட்டினார்.

தமிழால் எதுவும் முடியும்: இக் களஞ்சியமே சான்று

மேலும் பேசுகையில் அமைச்சர் திரு. சுப்பிரமணியம் கூறியதாவது:

பழங்கருத்துக்களுடன் புதுக்கருத்துக்களையும் தெரிந்துகொள்ளா விட்டால் பின்னடைந்து விடுவோமோ என்ற எண்ணம் பொதுவாக ஏற்படுவது இயல்பு. இந்த எண்ணக் குழப்பத்தை நீக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினால் எடுத்த காரியம் நடக்கும். அதை இந்தக் கலைக்களஞ்சியம் சாதித்திருக்கிறது. முடியும் என்று நிரூபிக்கிறது. இக்கால விஞ்ஞானக் கருத்துக்களைத் தமிழில் விளக்கமுடியும் என்று களஞ்சியம் விளக்குகிறது. நம்பிக்கையும் ஊட்டுகிறது.

நவீன கருத்துக்களை விளக்கும் சக்தியும், தெளிவும், திறனும் தமிழுக்கு உண்டு என்கிறது களஞ்சியம். ஆனால் கலைச் சொற்களை தமிழில் ஆக்க முடியுமா? என்பது ஒரு பிரச்சினை; இச் சிக்கல் எல்லா மொழிகளுக்குமே உண்டு. அந்தந்த மொழியிலேயே கலைச்சொற்களும் இருத்தல் வேண்டும் என்பது எல்லா மொழிகளுக்கும் சாத்தியம் அல்ல. ஆங்கில மொழியில் பயன்படும் கலைச் சொற்கள் அனைத்துமே அந்த மொழிக்கு சொந்தமானவையல்ல. பிற மொழிகளில் இருந்து இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கலைச்சொற்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதில் நமக்குக் குழப்பம். சர்வதேச கலைச் சொற்களை எல்லாம் தமிழில் உருவாக்கி ஏற்க முன் வந்தால் இந்தச் சங்கடம் தீரும். தனித்தமிழ் வேண்டும் என்பவர்களாலும் தாங்கள்தான் தமிழை வளர்க்கிறோம் என்று கூறுபவர்களாலுமே தமிழ் வளர்ச்சிக்குத் தடை.

அந்நிய மொழி மோகம் தவறு

மேலும் அந்நிய மொழி மூலம் தான் அறிவுபெற முடியும் என்ற போக்கு சரியன்று. நகர்ப்புற மக்களுக்கு இது ஓரளவு சாத்தியப்பட்டாலும் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் இதரர்கள் அந்நிய மொழியைப் பயின்று அறிவைப் பெற வேண்டும் என்றால், அது நடவாத காரியம். தமிழ் மூலம் கருத்துக்களைச் சொன்னால் தரம் குறையும் என்பது ஆராய்ச்சிக்கு உரியதுதான். தமிழால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தக் கலைக் களஞ்சியமும் இனிவரும் கலைக்களஞ்சியங்களும் இதற்கு விடைபகரும்.

ஆங்கிலமா? தமிழா? எது வேண்டும் என்று கூறுபவர்களானாலும் அனைவரது குறிக்கோளும் ஒன்றுதான். மக்கள் அறிவுபெற வேண்டும் என்பதே அவர்களது லட்சியம்.

அறிவை எந்த வகையில் வழங்க வேண்டும் என்பதில் அவசரப்படாமல் நிதானமாக யோசித்துப் பணியாற்ற வேண்டும். தேக்கமோ பின்னோட்டமோ இன்றி மெள்ள மெள்ளப் படிப்படியாகவேனும் பணியாற்றி வெற்றி காண வேண்டும் என்று திரு. சி. சுப்பிரமணியம் விருப்பம் தெரிவித்தார். வரும் தலைமுறையினரும் திரு. பெரியசாமி தூரனைப் புகழ்வர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மன உறுதிதான் தேவை: காமராஜ் அறிவுறுத்தல்.

தமிழ் வளமான மொழி; தமிழால் எதுவும் முடியும்; முடியாதது எதுவும் இல்லை; எதையும் முடிப்போம் என்ற மன உறுதியே இதற்கு ஆதாரம் என்று முதலமைச்சர் திரு. காமராஜ் பண முடிப்பை திரு. பெரியசாமி தூரனுக்கு அளித்துப் பாராட்டுகையில் தெரிவித்தார்.

நல்லதைச் செய்வதிலும் அவசரம் கூடாது

தொடர்ந்து பேசுகையில் அவசரப்பட்டு எதையும் செய்து விடுதல் கூடாது என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.

15 ஆண்டு உழைப்பின் பின்னர் இம்மாபெரும் கலைக் களஞ்சியம் உருவாகியிருக்கிறது. 10 பேரைக் கூப்பிட்டு சில குறிப்புகளை மொழிபெயர்க்கச் சொல்லி அச்சு ஏற்றிவிட்டால் ஒரு ஆண்டிலேயே நூலாகியிருக்கும். ஆனால் யார் படிப்பர்? பாராட்டுவர்? யாருக்குப் பிரயோஜனம் சிலர் குழப்பம்செய்து பார்த்தனர்

உலகம் வேண்டுவது சமதர்மம். அது நல்ல லட்சியம். குழப்பம் உண்டாக்கி அந்த உயர்ந்த சமதர்ம ஆட்சியைப் பெறலாமா? குழப்பம் செய்தும் சிலர் பார்த்தனர். ஆனால் அது சரியா? பொது மக்களும் அதை அங்கீகரிக்கவில்லை. எதையும் நிதானமாகவே சாதிக்க வேண்டும். சரியான பாதையில் போகிறோமா என்பதே பிரச்சினை. எதையும் நன்முறையில் ஒழுங்காகச் செய்தலும் வேண்டும். இப்படி நிதானப்படுத்திச் செய்வது தவறு அல்ல. ஆதலால் தமிழால் முடியுமா என்பது அல்ல. முடியும் முடிப்போம் என்ற மன உறுதியோடு கடமை புரிவோம் என்று திரு. காமராஜ் கூறினார்.

சிறுவர்களுக்கென தனி கலைக்களஞ்சியம்

கலைக்களஞ்சியம் உருவாக்கிய தூரனின் பணி முடிந்து விடவில்லை என்றும், சிறுவர்க்கான கலைக் களஞ்சியம் உருவாக இனி அவர் உழைத்தல் வேண்டும் என்றும் முதலைச்சர் கேட்டுக்கொண்டார்.

திரு. தி. சு. அவிநாசிலிங்கம் பேசுகையில் கலைக்களஞ்சியம் உருவாக உதவிய அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார். உயர்நிலைப் பள்ளிப்படிப்பைப் பூர்த்திசெய்த மாணவன் இத்தொகுப்புகளைப் படித்தால் பட்டதாரிகளையும் மிஞ்சும் அறிவு பெற முடியும் என்று டாக்டர் மு. வரதராசனார் கூறினார்.

பாராட்டுக்குத் தக்க முறையில் பதிலளித்த திரு. பெரியசாமி தூரன் கலைக்களஞ்சியத்தில்
ஏதேனும் பிழை காணப்படின் பார்ப்பவர்கள் அறிவித்தால் மறுபதிப்புகளில் திருத்திக் கொள்கிறோம் என்று கூறினார். தனக்கு ஏற்பட்ட பல இன்னல்களுக்கிடையே சோர்வின்றிப் பணியாற்றியவர் திரு. தூரன் என்று நீதிபதி திரு. எம். அனந்தநாராயணன் புகழ்ந்துரைத்தார்.

திருமதி. சௌந்தரா கைலாசம் பேசுகையில் களஞ்சியம் உருவாக்கிய திரு. தூரன் தனது பெயரை அத் தொகுப்புகளில் எங்குமே பொறித்துக் கொள்ளாதது அவரது அடக்கத்தைக் குறிக்கிறது என்று பாராட்டினார் [1].

திரு. நா. மகாலிங்கம் எம்.எல். ஏ. நன்றி கூறினார். ஆரம்பத்தில் திரு. எம். ஏ. முத்தையா செட்டியார் அனைவரையும் வரவேற்றார்.

திரு. கே. சாமிநாதன் இறைவணக்கமும், திரு. டி. கே. சண்முகம் தேசிய கீதமும் பாடினர்.

செய்திகளுக்கு நன்றி:
தமிழ் வளர்ச்சிக் கழகம், http://tamilvk.com

[1] 1990களில் சிஎஸ், கவிதாயினி சௌந்தரா கைலாசம்

0 comments: