1968ல் சென்னையில் அண்ணாவும், 1981ல் மதுரையில் எம்ஜிஆரும், 1995ல் தண்செயில் (தஞ்சையில்) ஜெயலலிதாவும் நடத்திய உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோவையில் உலகத் தமிழ் மாநாடாய் வரும் 2010 பொங்கலை அடுத்ததாய் நடக்க உள்ளது. 1995 தஞ்சை விழாவில் பேரா. கா. சிவத்தம்பி, ஸ்வீடனின் பீற்றர் ஷல்க், ... உள்ளே விடாது தடுக்கப்பட்டனர். அதற்கு பேரா. ஷல்க்கும் (உப்சாலா), பேரா. ஆ. வேலுப்பிள்ளையும் அனுப்பிய கடிதங்களை இன்று புரட்டிப் பார்க்கிறேன். ஈழத்தில் அதற்குப் பின்னர் எத்தனை அழிவுப் பேரலைகள்!
சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்கண் (1968) எடுத்த ஒளிப்படம் கொடுத்துள்ளேன்.
அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக, என் வேண்டுகோளை ஏற்று, அண்ணா தனது காஞ்சி இதழில் 1964-ல் இலங்கையின் தமிழர் நிலைகுறித்து எழுதியதை அனுப்பியருளிய நசன் அண்ணனுக்கும், தட்டெழுதி அளித்த இளங்குமரனார் அவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றி.
நா. கணேசன்
===================================================================
மலர் 1 8-11-64 இதழ் 16
===================================================================
நீதி நிச்சயம் நிலைத்திடும்; நேர்மை வென்றிடும்; மனிதாபிமானம் மதிக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
வீட்டின் விளக்கை அணைக்கமாட்டார்கள்; விழியில் நீர் பெருகிடச் செய்யமாட்டார்கள்; வேதனையைத் துடைத்திடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
இனவெறியை அடக்கிடுவார்கள், நிம்மதியான வாழ்வினைப் பெற்றிட வழி செய்திடுவார்கள் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
எமக்காக வாதாட, பரிந்து பேச, ஆதரவு காட்ட, பெரியதோர் நாட்டுத் துரைத்தனம் இருக்கிறது; எமக்குக் கொடுமைகள் இழைக்கப்படுவது கேட்டு மனம் குமுறவும், இது அறமல்ல! என்று கூறி அக்ரமம் செய்திடுவோரைத் தடுத்து நிறுத்திடத்தக்க தகுதியும் திறமையும் பெற்றவர்கள், பேரரசு நடாத்திக் கொண்டுள்ளனர்; நீதி காத்திட அப்பேரரசு முனைந்து நிற்கும் என்று நம்பினர்; அந்த நம்பிக்கையைத் துணைகொண்டு அவர்கள் சொல்லொணாத இன்னல்களைத் தாங்கிக் கொண்டனர்; காரிருள் மறையும் கதிரவன் உதிப்பான், ஒளி காண்போம் என்று உள்ளூற நம்பிக்கிடந்தனர்.
அவர்கள் தூற்றப்பட்டார்கள் துடுக்குத்தனமாக; பொறுத்துக் கொண்டனர்.
அவர்கள் வேட்டையாடப்பட்டனர், வெறியர்களால்; விம்மினர்; எனினும் நற்காலம் பிறக்கும், இடையே ஏற்படும் இடுக்கணைப் பொருட்படுத்தக் கூடாது; எதையும் தாங்கும் இதயம் கொண்டோராக இருந்திடல் வேண்டும் என்று எண்ணி, உறுதியைத் தருவித்துக் கொண்டனர்.
ஓடு! நாட்டைவிட்டு! பிழைக்க வந்தவனே! பிடி சோற்றுக்கு அலைபவனே! கூலி வேலை செய்பவனே! உனக்கு என்றோர் மொழி! ஒரு மரபு! ஒரு வரலாறு! தூ! தூ!! உன்னை நான் எது செய்திடினும், ஏன் என்று கேட்டிட யார் உளர்! நாதியற்றவனே! நாடற்றவனே! நட! நட! - என்று மிரட்டினர் மமதை கொண்டோர்; மனம் வெந்துபோகும் விதமாக இழிமொழி உமிழ்ந்தனர்; அவர்கள் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டனர்; வெறி அடங்கிடும், நேர்மை பிறந்திடும் என்ற நம்பிக்கையின் துணையை நாடினர்.
அவர்களின் கடைகளைச் சூறையாடினர், இழுத்துப் போட்டடித்தனர்; ஐயா! நான் ஏழை! என் சொத்தே இந்தக் கடைதான்! காலமெல்லாம் பாடுபட்டு, வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சம் பிடித்து இந்தக் கடைவைத்தேன்; இதிலே பாதி கடன்! பாழாக்காதீர்! நாசம் செய்யாதீர் என்று முறையிட்டனர்; வெறியர் மனம் இளகவில்லை; காலில் வீழ்கிறானா அடிமை! அதைத்தான் செய்வான்!! கைகூப்பி நின்கிறானா! கருணை காட்டாதீர்! துரத்து! கொளுத்து! தீ மூட்டு! சூறையிடு! ஓடட்டும், ஒழியட்டும்! - என்று கொக்கரித்தனர் கொடியோர்கள்; எமக்கு வந்துற்ற இந்தப் பாசத்தைத்தடுத்திடும் ஆற்றல் பெற்றோர் உள்ளனரே; இருந்தும் வாளாயிருக்கின்றனரே! ஏன்! ஏன்!!-என்று கேட்டுக் கேட்டு விம்மினர்;
குத்திக் கொன்றனர்; வெட்டிவீழ்த்தினர்; கொளுத்தினர்; கோல்கொண்டு தாக்கினர்; என்ன குற்றம் இழைத்தோம் இந்த நிலை பெற என்று அவர்கள் கேட்டனர்; குற்றமா! கூறுகிறோம் நீ செய்த குற்றத்தை நீ இங்கு இருக்கிறாயே அதுதான் குற்றம்! உழைக்கிறாயே, அதுவும் குற்றம்தான்! உனக்கென ஒரு மொழி உளது என்கிறாயே அது மன்னிக்க முடியாத குற்றம்!! என்று கூறிக் கேலிச் சிரிப்பொலி கிளப்பினர்; ஆதிக்க வெறிகொண்டலைவோர்.
கற்பழித்தனர்! ஆம்! எந்தக் கொடுமையை எவரும் தாங்கிக்கொள்ள முடியாதோ, அந்தக் கொடுமையையும் செய்தனர் வெறியர்கள்! எல்லாம் எதன் பொருட்டு? அவர்களை விரட்ட! ஏன்? அவர்கள், தமிழர்கள் என்பதால்!!
அவர்கள் தமிழர்கள், ஆனால் தமிழகத்தைக் காணாதவர்கள்,
அவர்கள் பேசுவது தமிழ், ஆனால் அவர்கள் பிறந்தது சிங்களத் தீவினில்! அவர்கள் மட்டுமா! அவர்களுடைய முப்பாட்டனார் பிறந்ததே இலங்கைத் தீவினில். பலப் பல தலைமுறைகளாக இலங்கைத் தீவினிலே இருந்து வருபவர்களைச் சிங்கள இனவெறி தலைக்கேறிய நிலையினர் இனி இங்கு உங்கட்கு இடமில்லை! ஓடிடுக உமது நாட்டுக்கு!! என்று உறுமலாயினர்.
எமக்கு இந்நாடன்றி வேறு எந்தநாடும் தெரியாதே! இங்குதான் பிறந்தோம்! இங்குதான் எமது பாட்டனாரின் கல்லறையும் உளது. இங்குதான் நாங்கள் வியர்வையைப் பொழிந்தோம். இங்குதான் எமது உழைப்பினை அளித்தோம்! இந்தநாடு எமக்குச் சொந்த நாடு என்ற உணர்விலேயே வளர்ந்துவந்திருக்கிறோம். இந்த நாட்டில் மற்றவர்க்கு உள்ளது போலவே எமக்கும் உரிமை உண்டு என்று அறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அறிவிக்கிறதே, எம்மை ஏன் வெளியே போகச் சொல்கிறீர்! எங்கு செல்வோம்! காலில் வெள்ளெலும்பு முளைத்த நாள் முதலாய் இங்கல்லவா உழைத்துவந்திருக்கின்றோம். காட்டுமிருகங்களுடன் போராடி அவற்றின் கோரப்பற்களுக்கு இரையாகினரே எமது முன்னோர்! காடு திருத்திக் கழனியாக்கிடக் கடும் உழைப்பைத் தந்தோமே நாங்கள்! மரகதத்தீவு! என்று கவிதா நடையிலே புகழ்கின்றார்களே இந்த நாட்டை; இந்நிலை இந்நாடு பெற்றது எமது ஓயாத உழைப்பினாலன்றோ! இந்நாட்டுடன் நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டு விட்டோம்; எமக்கு வேறோர்நாடு எதற்கு? ஏன் எம்மைத் துரத்த எண்ணுகிறீர்! என்று அவர்கள் கேட்டனர். அவர்களின் தொகை பத்து இலட்சம்!!
இலங்கைத் தீவுக்கு உரியவர்கள் நாங்களே! நீங்கள் இங்கு இருக்க இனி அனுமதி இல்லை. காரணம் கூறிடத் தேவையுமில்லை. விருப்பமில்லை! வெளியேறு! நாங்கள் சிங்களவர்! இது சிங்களத்தீவு! எமது கொடி சிங்கக்கொடி!! என்று கடுமொழி புகன்றனர்; சிங்கள சர்க்கார், அந்த வெறியை அடக்கிட முன்வரவில்லை, மாறாகத் தன் புன்னகையாலும் கண்சிமிட்டலாலும், அந்த வெறியை மேலும் தூண்டிவிட்டபடி இருந்தது.
வேறு எங்கேனும், பத்து இலட்சம் மக்கள், அந்த நாட்டிலே உள்ள பெருவாரியான எண்ணிக்கை கொண்ட இனத்தவரால், அவர்தம் அரசினால், இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், இழிவாக நடத்தப்படுகிறார்கள், என்றால், அறம் அறிந்தோர் பதறி எழுவர்; இது இனக்கொலை, இதனை அனுமதிக்கமாட்டோம் என்று முழக்கமிடுவர்.
ஐக்கியநாடுகள் மன்றம் இதுகுறித்துக் கேட்டிடும் உரிமைபெற்றிருக்கிறது; எவ்விதெமனில், நாடுகளின் ‘சுதந்திரம்’ குறித்துமட்டுமல்ல, மக்களின் அடிப்படை உரிமைகள் எங்கேனும் எவராலேனும் அழிக்கப்பட்டால், ஏனென்று கேட்டிட, தடுத்து நிறுத்திட அந்த மாமன்றம் உரிமை பெற்றிருக்கிறது.
எனினும், மொழியால் தமிழராக உள்ள பத்து இலட்சம் மக்களையும், விரட்டியடிக்க இலங்கையில் கொடியதோர், முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஐயோ! என்று இரக்கம் காட்டவோ, ஆகாது என்று அறிவுறுத்தவோ, அக்ரமம்! என்று கண்டிக்கவோ, தமிழக அரசு துணிவு கொண்டிடவில்லை; காரணம்? இங்கு அரசு என்று உள்ள அமைப்பு, இத்துறை எம்மிடம் இல்லை; டில்லி அரசிடமே உளது; என்று கூறிக் கைவிரித்துவிட்டது, டில்லி அரசோ, இலங்கைக்குள்ளே நடைபெறும் நடவடிக்கை குறித்து ஏதும் கேட்பது கூடாது; ஏனெனில் அது இலங்கையின் அரசுரிமைத் துறையிலே நுழைந்திடும் அடாத செயலாகிவிடும் என்று விளக்கமளித்துவிட்டது. இலங்கையிலே விம்முகிறார்கள்; இங்கே விளக்கமளிக்கிறார்கள்.
இந்நிலை கண்ட பிறகு, சிங்கள அரசுக்கு ஏற்கனவே பிறந்திருந்த துணிவு பன்மடங்கு வளர்ந்தது; இந்தப் பத்து இலட்சம் ‘பராரிகளை’ என்ன நாம் செய்தாலும், எவரும் குறுக்கிடமாட்டார்கள் என்ற துணிவு, கொடுமை வளர்ந்தது; வளர்ந்து வளர்ந்து, இவர்கள் அனைவரும் இந்தியர்கள், எனவே இவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டியது இந்திய சர்க்காரின் கடமை. இவர்கட்கு இலங்கையில் இடமில்லை; இவர்கட்குச் சொந்த இடம் இந்தியா! எனேவ இவர்கள் இந்தியா சென்றிடுவதே முறை!! என்று கூறலாயினர்.
இவர்கள் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள் இலங்கையின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள்; இவர்கள் இலங்கைக்காரர்கள், இந்தியர்கள் அல்ல! எனவே இவர்களை இந்தியாவிற்கு அழைத்துக்கொள்ளச் சொல்வது முறையுமல்ல, அறமுமாகாது; இது எமது பிரச்சினையே அல்ல!! என்று டில்லி தெரிவித்தது. தமிழக அரசோ, இலங்கைத் தமிழர்பற்றி டில்லி முடிவெடுக்கும் என்று தெரிவித்ததுடன் தனது கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக்கொண்டது. பத்து இலட்சம் மக்கள், கொந்தளிக்கும் கடலில் பாய்மரமற்ற நாவாய்படும் பாடுபட்டுக்கொண்டு வதைபட்டனர், அவர்களின் வேதனையைக் கண்டு சிங்கள ஆதிக்க வெறியர்கள் கைகொட்டிச் சிரித்தனர்.
எத்துணை கொடுமையாளர்களாயினும், பத்து இலட்சம் மக்களை, இழித்தும் பழித்தும் பேசலாம், இன்னல் பல மூட்டலாம் ஆனால், அவ்வளவு பேர்களையும் படுகொலை செய்துவிட முடியாதல்லவா! பல கொடுஞ்செயல்களைத் தாங்கிக்கொண்டுள்ள இந்தக் குவலயத்தாலேயேகூட, பத்து இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாதல்லவா! அதனால், வெறி மண்டையில் புகுந்து குடைந்திடும் நிலை பெற்றிருந்தபோதிலும், சிங்களவர்களால், பத்து இலட்சம் மக்கள் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, பத்து இலட்சம் தமிழ் மரபினர், தமது உரிமையை இழக்கக்கூடாது என்ற உறுதியுடன், போராடிக்கொண்டு வந்தனர். அவர்களின் உரிமைக் கிளர்ச்சியை ஒடுக்க இலங்கை அரசு அவிழ்த்துவிட்ட அடக்குமுறை பலருடைய உயிரைக் குடித்தது; தியாகம்புரிந்திடத் தயங்காது உரிமைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி நின்றனர் தமிழ் மரபினர்.
வரலாறு காட்டுகிறது, நெஞ்சு நெகிழத்தக்க பல நிகழ்ச்சிகளை உரிமைக்காகப் போரிடும் உள்ள உறுதி படைத்தவர்களுக்காக, பல்வேறு முனைகளிலிருந்து, உதவிகள் பல்வேறு வழிகளிலே அளிக்கப்பட்டு வந்ததுபற்றிப் படிக்கிறோம்.
இலங்கையில், உரிமைக் கிளர்ச்சியிலே தமிழர்கள் முனைந்து நின்றபோது ஒருதுளி ஆதரவு, ஆதரவான ஒரு சொல் அளிக்கவும் தமிழகம் துணிவு பெறவில்லை; டில்லியோ வேறு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது இந்தப் பிரச்சினையிலா காலத்தைச் செலவிட முடியும் என்று செப்பிவிட்டது.
இந்தப் போக்கு இலங்கை அரசு ஏற்கனவே கொண்டிருந்த துணிவை, இறுமாப்பு அளவுக்கு வளர்த்துவிட்டுவிட்டது. என்ன சொல்கிறீர்கள், இவர்கள் நாடற்றவர்கள் என்று அறிவிக்கிறோம் என்று தெரிவித்தது, எந்த நாட்டிலே பிறந்து வளரந்து உழைத்து வளர்த்து வருகிறார்களோ அந்த இலங்கை நாட்டிலே இவர்கள் நாடற்றவர்கள்!! இத்துடன் விடவில்லை இலங்கை, இவர்களை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தலாயிற்று.
ஏற்றுக் கொள்ளாவிட்டால், என்ன நடந்துவிடும்? பத்து இலட்சம் மக்களையும் படகுகளில் ஏற்றி, கடலிலே தவிக்கவிட்டுவிட முடியுமா?
அங்ஙனம் செய்திடின், பாரே கைகொட்டிச் சிரித்திருக்கும்!!
பத்து இலட்சம் பேர்களையும் கொன்று குவித்துவிடத் துணியுமா இலங்கை அரசு! அந்தப் பிணங்களைக் கொத்தவரும் பெரும் பறவைகளின் சிறகொலியைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது சிங்களவர்களால்.
பத்து இலட்சம் மக்களையும் இந்தியாவில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட முடியுமா? இந்திய துரைத்தனத்தின் வல்லைமயைத் தாங்கிக் கொள்ள இயலுமா சிங்கள சர்க்காரால்!
இவற்றினை எல்லாம்விட மேலானதாக, வலிவுமிக்கதாக வேறொன்றும் உளது, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு பத்து இலட்சம் மக்களை ஒரு அரசு விரட்டிடும் கொடுமை நடப்பதைக் கண்டால் உலகம் சீறி எழாதா! அந்தச் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா எந்தச் சர்க்காராலும்!
எனவே, மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, தங்கள் எதிர்காலம் என்ன என்ற ஏக்கம் தாக்கிடும் நிலை பத்து இலட்சம் தமிழ் மரபினருக்கு இருந்து வருவது என்றாலும், பத்து இலட்சம் பேர்களை அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக எப்படி வெளி ஏற்ற முடியும்? அவர்களை ஏற்றுக்கொள்ள இந்தியா இடம் கொடுத்தாலொழிய, அவர்களை எப்படி வெளியேற்ற முடியும் என்தே சிங்கள சர்க்காரை வாட்டியபடி இருந்துவந்த பிரச்சினை என்பது நுணுகி ஆராய்வோருக்குப் புலனாகும்.
என்ன செய்வது? என்ற கேள்விக் குறி, பத்து இலட்சம் தமிழர்களையும் மிரட்டிக் கொண்டிருந்தது, சிங்கள சர்க்காரையும் மிரட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் இதிலே உண்மையான சிக்கலும் தவிப்பும் சிங்கள சர்க்காருக்கே அதிகம். ஏனெனில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமானால், பார் தோன்றிய நாள் தொட்டு எவரும் நடத்திடாத படுகொலையை மேற்கொண்டாக வேண்டும், இந்தியா அந்தப் பத்து இலட்சம் பேர்களை இந்தியா வருவதற்கு இடம்தராதிருக்கும் போக்கு நீடிக்குமானால், நிலைத்திருக்குமானால்,
சிங்களச் சர்க்காருக்கு இருந்துவரும் இந்தச் சிக்கலைக் கண்டார் லால்பகதூர்; பாவம்! இதற்கோர் வழி கண்டாகவேண்டும் என்று எண்ணினார். அஞ்சற்க! இதோ நான் இருக்கிறேன் உமது பிரச்சினையைத் தீர்த்துவைக்க; பத்து இலட்சம் தமிழ் மரபினர் பற்றிய சிக்கல் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது; உங்கட்கு இது பெருந்தொல்லையாக இருக்கிறது, உணர்கிறேன். கவலையை விட்டொழிமின்! நான் ஏற்றுக் கொள்கின்றேன் ஐந்து இலட்சம் பேர்களை! மற்றோர் ஒன்றரை இலட்சம் பேர் பிரச்சினையை அடுத்த ஆண்டு கவனித்துக் கொள்ளலாம்; சிக்கலைத் தீர்த்துக் கொள்வோம் என்று கூறிவிட்டார்.
பத்து இலட்சம் தமிழ் மரபினரில் ஐந்து இலட்சத்து இருபத்தைந்தாயிரவரை, பதினைந்து ஆண்டுகளில், இங்கே திரும்பப் பெற்றுக் கொள்வது என்று ஒப்பந்தம் செய்து கொண்டுவிட்டார் லால்பகதூர்.
விழாவாம் இலங்கையில்! ஏன் இராது!! பாராட்டாம், திருமதி பண்டாரநாயகா அம்மையாருக்கு! ஏன் பாராட்டமாட்டார்கள்!! அம்மையாரின் தனித்திறமையால் கிடைத்த வெற்றி இது என்று ஏடுகள் எழுதுகின்றனவாம்! ஏன் எழுதமாட்டார்கள்!! சீனாவிடம் பிடிபட்டுள்ள இடம் யாவும் சீனாவுக்கே என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால், லால்பகதூரின் உருவச் சிலையை பீகிங்கில், மாசே-துங்கே திறந்துவைக்க மாட்டாரா!! இலங்கைத் தலைவர்களும், இதழ்களும் லால்பகதூருடைய நல்லெண்ணத்தையும், பெருந்தன்மையையும் பாராட்டுவதாகத் தெரிகிறது; வியப்பென்ன இதிலே! லால்பகதூர், தமிழர்கள் உரிமையின்மீது ஓங்கி அடித்திடுவது கண்டால், அந்த உரிமை உணர்ச்சியைத் தாக்கித் தாக்கி, பயன் காணாது கிடக்கும் சிங்களத் தலைவர்கட்குக் களிப்பு கொந்தளிக்கத்தானே செய்யும்? பாராட்டுகிறார்கள் லால்பகதூரின் ஒப்பந்தத்தை.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக, என்ன செய்வது என்று தெரியாமல், திண்டாடித் திகைத்துக் கிடந்த இலங்கை சர்க்காருக்கு, லால்பகதூர், வெற்றியைத் தேடிக் கொடுத்துவிட்டார்.
எப்படி ஒழிப்பது தமிழரின் உரிமை உணர்ச்சியை என்று எண்ணித் தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை சர்க்காருக்கு, லால்பகதூர், வழிகாட்டிவிட்டார்.
இலங்கையிலே பிறந்து வளர்ந்து, அங்கேயே வாழ்ந்துவர விரும்புபவர்களை, இந்தியர்கள் என்று கூறுவது தவறு; அவர்களை இந்தியர்கள் என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம்; அவர்களை என்ன செய்வது என்பது எமது பிரச்சினை அல்ல என்ற கோட்பாட்டில் நேருபண்டிதர் மிக உறுதியாக இருந்துவந்தார். இருந்து வந்ததனால் இலங்கை சர்க்கார் ஏதும் செய்ய இயலாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அதே கோட்பாடு தொடர்ந்து இருந்திருக்குமானால் இலங்கைக்கு, ஐக்கிய நாடுகள் மன்றம் சென்று, கேட்பது தவிர வேறு வழி கிடையாது.
மனித அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்துத் தீரவேண்டிய ஐக்கிய நாடுகள் மன்றம், ஒருபோதும், பத்து இலட்சம்பேர்களையும் இலங்கை தன் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று தீர்ப்பளித்திருக்க முடியாது. அந்தப் பத்துஇலட்சம் மக்களையும் தொடர்ந்து இலங்கை சர்க்கார் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கவும் முடியாது. நேரு உறுதியாகக் கடைப்பிடித்து வந்த கோட்பாடு, இதுவரை அந்தப் பத்து இலட்சம் தமிழ்மரபினருக்குப் பாது காப்பளித்துவந்தது.
நேரு கண்ட அந்தக் கோட்பாட்டை, லால்பகதூர் அழித்தொழித்துவிட்டார். இலங்கை சர்க்கார் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டது.
சேனாநாயகாக்களும் கொத்தலாவலைகளும் முயன்றுபார்த்துத் தோற்றுப் போயினர். அந்தக் கோட்பாட்டை மாற்றிட, லால்பகதூர் வந்தார், நேருவகுத்த அந்தக் கோட்பாடு ஒழிக்கப்பட்டுவிட்டது; இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த சிக்கலைத் தீர்த்துவிட்டேன், பலர் தோற்ற முனையில் நான்வெற்றி பெற்றுவிட்டேன்; இதோ லால்பகதூரின் கையொப்பம்; ஆண்டுதோறும் நாற்பதாயிரம் தமிழர் வெளி ஏற்றப்படுவார்கள் என்று திருமதி அறிவிக்கிறார்; திருவிழாக் கோலம் இலங்கையில்!
முடியாது!முடியாது! என்கிறீர்களே! ஒப்பந்தமாகிவிட்டது தெரியுமா! மூட்டை முடிச்சுடன் தயாராகிக் கொள்ளுங்கள்! இந்தியா செல்ல! இலங்கையை விட்டுக் கிளம்புங்கள்!! என்று சிங்களவர் கொக்கரிக்காமலிருக்க முடியுமா!!
இலங்கையிலுள்ள தமிழ் மரபினர் என்ன நிலையில் உளர்? என்ன நிலை பெறுவர்?
நமக்காகப் பரிந்து பேசுவார் லால்பகதூர் என்றெண்ணிக்கிடந்தோமே! அவர் பண்டார நாயகாவின் கவலையைத் துடைத்திடும் காரியத்தை அல்லவா மேற்கொண்டுவிட்டார். நமது உரிமைக்காக வாதாடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்; நம்மைச் சிங்களத்தாரிடம் காட்டிக் கொடுப்பதுபோல அல்லவா இருக்கிறது அவர் செய்துகொண்ட ஒப்பதந்தம். இதற்கோ இவர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தோம்! இதற்கோ, இந்திய சர்க்கார் இருக்கிறது எமக்காக வாதாட என்று மார்தட்டிக் கூறிவந்தோம். கனி கிடைக்குமென்றிருந்தோம், கடுவிஷமன்றோ தரப்படுகிறது. ஏற்றம் பெறுவோம் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தோம். நம்மைச் சிங்களவர் எள்ளி நகையாடும் நிலையில் வைத்துவிட்டாரே, லால்பகதூர்! என்றெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணான நிலைபெற்றுள்ளனர். தமிழர் தலைவர் திரு.செல்வநாயகம் விடுத்துள்ள அறிக்கை தமிழ் மரபினர் எத்துணை வேதனைப்படுகின்றனர் என்பதனை எடுத்துக் காட்டுகிறது.
கசப்பான முடிவு என்று கூறிக் கசிந்துருகியிருக்கிறது தினமணி.
மற்ற மற்ற இதழ்களும் மனவேதனை தரும் நிலை என்ற பொருள்பட எழுதுகின்றன.
திருமதி பண்டாரநாயகாவுக்கு அடுத்தபடியாக இந்த ஒப்பந்தத்தைக் குறித்து மகிழ்ச்சி கொண்டவர் ஒருவர் உண்டு என்றால் அவர் நமது மாநில முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களே!! இலங்கையில் உள்ள தமிழ் மரபினர்களை இந்தியர்கள் என்று கொள்ளமுடியாது என்ற நேரு கோட்பாட்டை ஒழித்திட, லால்பகதூர் எங்ஙனம் உரிமை பெற்றார்? அறிவாற்றலில், நேருவை மிஞ்சுபவர் தாம் என்ற உரிமை கொண்டாடுகிறாரா? நேருவுக்குப் புலனாகவில்லை இந்த வழி, இதோ எனக்கு வழி தெரிகிறது என்று கூறி நேருவிடம் இருந்ததைவிட மேலான நுண்ணறிவு தமக்கு இருக்கிறது என்று வாதாடப் போகிறாரா?
நேரு சிக்கலைத் தீர்த்துவைக்கத் தவறிவிட்டார், இதோ நான் தீர்த்துவிடுகிறேன் என்று கித்தாப்புப் பேச இதுபோலச் செய்தாரா?
இலங்கையிலுள்ள தமிழ் மரபிரனர், எம்மை இந்தியர் என ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என்று ஏதாவது இவரிடம் முறையிட்டனரா? அந்த முறையீடு கேட்டு நான் இந்த முடிவை மேற்கொண்டேன் என்று வாதாடப் போகிறாரா? இலங்கையிலுள்ள தமிழ் மரபினரின் கருத்தறிய முயற்சி எடுத்துக்கொண்டாரா? முடிவு, இறுதியாக அங்குள்ள தமிழ் மரபினரின் ஒப்புதல் பெற்ற பிறகே அமுலுக்குக் கொண்டுவரப்படும் என்று கூறுகிறாரா? அவர் பெரியவர்! மிகப் பெரிய நிலையிலும் உள்ளவர்! என்றாலும் கேட்கவேண்டி இருப்பதால் கேட்கிறோம்; இலங்கையிலுள்ள தமிழ் மரபினரின் கருத்தை மதித்திடாமல், அவர்களுடன் கலந்துபேசாமல், அவர்களின் ஒப்புதல் பெறாமல், அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி இலங்கை சர்க்காருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள இவர் யார்?
இவர், இந்தியாவின் பிரதமர்! புரிகிறது! தெரிகிறது!! ஆனால் பிரச்சினை, இலங்கையில் உள்ளவர்களைப் பற்றியது; அவர்கள் ஒப்பம் அளித்தாலொழிய அவர்கள் சார்பாகப் பேசிட, முடிவெடுக்க, இந்தியப் பிரதமருக்கு என்ன உரிமை இருக்கிறது!!
இலங்கை சர்க்காரின் தலைவர்களாக இருந்துவந்த சேனாநாயகா, கொத்தலாவலை ஆகியோருடன் அவ்வப்போது நடத்தப்பட்ட பேச்சுகளும், தீட்டப்பட்ட திட்டங்களும், இலங்கை சர்க்காரின் போக்கின் காரணமாகவே பொருளற்றுப் போய்விட்டன.
இலங்கைக் குடிமக்களாகப் பதிவு செய்துகொள்ள இடமளிக்கிறோம் என்று நேருவிடம் வாக்களித்துவிட்டு, குடிஉரிமை கேட்டவர்களை இழுக்கடித்து, காலொடித்து, சூது செய்ததை யாரறியார்!
நியாயமற்றமுறையில் பலர், குடிஉரிமை மறுக்கப்பட்டது, அம்பலப்படுத்தப்பட வில்லையா?
தமிழர்களைக் குடிஉரிமை பெறவிடாமல் செய்யும் சூட்சியில் சிங்கள அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பது மெய்ப்பிக்கப்படவில்லையா?
இந்த முறை கேட்டினை இலங்கை உயர்நீதிமன்றமே கண்டிக்கவில்லையா?
இவையாவும், எப்படியேனும், இலங்கையிலிருந்து தமிழ் மரபினரைத் துரத்திவிட வேண்டும் என்பதுதான் இலங்கை சர்க்காரின் திட்டம் என்பதைக் காட்ட வில்லையா?
இந்தப் போக்குக்கு உடந்தையாக இருந்திட லால்பகதூர் ஒப்புக்கொண்டு விட்டார் என்பதன்றி இந்த ஒப்பந்தத்துக்கு வேறென்ன பொருள்?
இலங்கைவாழ் தமிழர்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்று கூறினால் மட்டும் போதாது, காட்டிக்கொடுத்துவிட்டார்கள் என்பதுதான் பொருத்தம்.
ஏமாற்றத்தையும் துயரத்தையும் சுமந்துகொண்டு, உழைத்து உருவாக்கிய திருநாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, தமிழகம் வரப்போகிறார்கள் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள்- பசி, பட்டினி, வேலையில்லாக் கொடுமை என்பவைகள் தலைவாயிலில் நிற்கின்றன அவர்களை வரவேற்க. சாவை, அமைதிக்கு அடையாள மென்றும்; வேதனைத் துடிப்பை, வலிவுக்குச் சான்று என்றும், கூறிடும் வித்தகர்களாக உள்ள அமைச்சர்கள் உள்ளனர், வருக! ஒழுங்காக இருந்திடுக! அர்ஜுனன் கதையினைத் தெரிந்துகொள்க! என்று அறிவுரை கூற.
வரப்போகிறார்களாம் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகையினர்; உழைத்து உருக்குலைந்தவர்கள்; உரிமை பறிக்கப்பட்ட நிலையினர்; காப்பாற்றப்பட வேண்டியவர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள், காவேரி தென் பெண்ணையை இதற்குமுன்பு காணாதவர்கள்; தமிழ் மரபினர்; தத்தளிக்கும் நிலையினர்!!
காங்கிரஸ் அரசு ஒன்றின்மீது ஒன்றாக நமக்குப் பரிசு அளித்து வருகிறதல்லவா! இது எல்லாவற்றிலும் மேலான பரிசு – ஐந்து இலட்சம் மக்களின் வாழ்வு பறிக்கப்பட்டு, இங்கு அனுப்பிவைக்கப்படும் பரிசு!! ஐயோ! தமிழா! உன்கதி இதுவோ!!
===================================================================
சின்ன காஞ்சிபுரம், 86, திருக்கச்சிநம்பி தெரு, “அல்லி” அச்சகத்தில், (உரிமையாளர்) சி.என்.ஏ.இளங்கோவனால் அச்சிடப்பட்டு வெளியிடப் படுகிறது. ஆசிரியர் சி.என். அண்ணாதுரை.
தமிழா! உன் கதி இதுவோ? ~ C. N. அண்ணாதுரை, காஞ்சி (இதழ்) 1964
Subscribe to:
Post Comments (
Atom)
10 comments:
அன்பு கணேசன்,
நினைவுக்குக் கொண்டுவந்து சிந்தனை செய்து இந்நாள் நிகழ்வுகளையும் எதிர்கால தமிழர் நிலையையும் சீர் பெற அமைத்துக்கொள்ளவேண்டிய கடமையைச் சுட்டும் வழியை உங்களின் பதிவு காட்டி பயன் தருகிறது. நன்றி.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
செப்டம்பர் 20, 2009
//நேரு சிக்கலைத் தீர்த்துவைக்கத் தவறிவிட்டார், இதோ நான் தீர்த்துவிடுகிறேன் என்று கித்தாப்புப் பேச இதுபோலச் செய்தாரா?//
என் பாட்டனால், என் தாயால், தீர்க்க முடியாததை நான் தீர்க்கிறேன் என்று இப்படி கித்தாப்பு பேசித்தான் ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தமும் அதைத்தொடர்ந்து இந்திய அராஜகப் படையினரின் அவலங்களும் நிறைவேறின....
//இலங்கையிலுள்ள தமிழ் மரபினரின் கருத்தை மதித்திடாமல், அவர்களுடன் கலந்துபேசாமல், அவர்களின் ஒப்புதல் பெறாமல், அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி இலங்கை சர்க்காருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள இவர் யார்?//
முன்பே, இதை யாரும் ராஜீவிற்கு அனுப்பியிருந்திருக்கலாம்.
திருடர் முன்னேற்றக் கழகத் தலைவர் சொல்லுகிறார், நாங்களே அடிமைகள், நாங்கள் என்ன செய்யமுடியும் என்று சொல்லுகிறார்.
அரிய தகவல்களுடன் அருமையான பதிவு
நன்றி.
அன்புடன்
ஆரூரன்
அன்புநண்பர் கணேசன்,
வணக்கம்.இந்த நேரத்திற்கும் அண்ணாவின் மனக்குமுறல் பொருத்தமானதாக விளங்கும் கொடுமையை என் சொல்வது.
நாற்பத்தைந்து ஆண்டுகளாக இனப்படுகொலை-கண்டும் காணாமலும்
பூசிமெழுகும் தலைவர்கள்-
நடுவண் அரசிடம் பிச்சை கேட்கும் அவலம்-இந்தத் துயர்நிலை
என்றுதான் நீங்கும்?
என்றைக்கு விடிவு?
ஏக்கத்துடன்,
மறைமலை
காலத்திற்கு ஏற்ற பதிவு
தக்க தருணத்தில் தரப்பட்ட பதிவு. மிக்க நன்றி!
அறிஞர் அண்ணாவின் கருத்துகள் தொலைநோக்குடையன. ஐநாவுக்கு உரிய கடமையை அப்பொழுதே அண்ணா சொன்னார். நடுவண் அரசின் சிங்கள ஆதரவுப் போக்கைச் சுட்டிக் காட்டினார். நேருவுக்குரிய மனித நேயச் சிந்தனைகளில்லா இலால்பகதூராரின் அச்ச மனத்தை எடுத்துரைத்தார். பக்தவச்சலத்தாரின் உணர்வற்ற நிலையைக் கூறினார். இவ்வுடன்பாட்டிற்காகத் தில்லிக்குச் சென்னை வழி பயணித்த சீறீமாவோவுக்கு மீனம்பாக்க விமான நிலையத்தில் அப்பொழுது கறுப்புக் கொடி காட்டியவர்களுள் ஒருவனாக இருந்தேன். தமிழர் ஒழிப்புக் கொள்கையைச் சிங்களவர் தொடங்கியது 1915களில். முதலில் அகப்பட்டவர் முசுலீம்கள். பின்னர் மலையகத் தமிழர். தொடர்ந்து ஈழத்தமிழர்.
அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் படவடிவக் கோப்பாக வைத்த 8,11,64 இல் வெளியான காஞ்சி இதழின் (நாள் ஒரு நூல் வரிசை எண் 698) பக்கங்களை மக்களுக்குச் செய்தியாக எடுத்து தட்டச்சு செய்து வைத்துள்ளது கண்டு மகிழ்கிறேன். பொள்ளாச்சிக்குப் பெருமை - பொள்ளாச்சி நசன்
அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் படவடிவக் கோப்பாக வைத்த 8,11,64 இல் வெளியான காஞ்சி இதழின் (நாள் ஒரு நூல் வரிசை எண் 698) பக்கங்களை மக்களுக்குச் செய்தியாக எடுத்து தட்டச்சு செய்து வைத்துள்ளது கண்டு மகிழ்கிறேன். பொள்ளாச்சிக்குப் பெருமை - பொள்ளாச்சி நசன்
அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் படவடிவக் கோப்பாக வைத்த 8,11,64 இல் வெளியான காஞ்சி இதழின் (நாள் ஒரு நூல் வரிசை எண் 698) பக்கங்களை மக்களுக்குச் செய்தியாக எடுத்து தட்டச்சு செய்து வைத்துள்ளது கண்டு மகிழ்கிறேன். பொள்ளாச்சிக்குப் பெருமை - பொள்ளாச்சி நசன்
அண்ணாவின் குமுறலில் அர்த்தம் உள்ளது. 10 லட்சம் இந்தியத்தமிழர்களின் வெளியேற்றம் கண்ட போது யாழ்ப்பாணத்தமிழனின் அரசியல் நோக்கு எப்படி இருந்தது என்று ஆராய்ந்து எழுதினால் சிறப்பாக இருக்கும். தமிழர் பற்றிய சிங்களவரின் மனநிலையை அப்போது உணரத்தவறி விட்டனரோ? அப்போது இவர்களுக்கு குரல் கொடுத்திருக்கலாம். இன்று ஐநா சபையின் முன் தீக்குளித்தல் போன்ற கவன ஈர்ப்பை அப்போதே செய்திருந்தால் 80 களில் யாழ்ப்பாணத்தில் நடந்த படுகொலைகளை உலகம் முன்னபே கண்டு நிறுத்தியிருக்கும். அதே போல், ஈழத்து தமிழ் முஸ்லும்களைத் தமிழர் பேரணியில் இணைக்கத்தவறியதன் பின் விளைவு இன்று தமிழ் முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மீண்டும், மீண்டும் அங்கு அரசியல் பிழை நடக்கிறது. அண்ணா இது பற்றி என்ன யோசித்தார் என்பது பற்றி ஏதேனும் தகவல் உண்டா?
Post a Comment