ஒபாமா - காந்தி, அண்ணா ஒப்பீடு

காந்தியும் ஒபாமாவும் என்று வைத்தியநாதையர் தலையங்கம் எழுதியுள்ளார். சிந்திக்க வேண்டிய கட்டுரை. நேற்று கவிஞர் சிற்பியுடன் பேசிக்கொண்டிருந்த போது படிக்கச் சொன்னார். சென்னைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி அவர்களும் வந்திருந்தார்.

1967-ல் தமிழ்நாட்டின் அப்போதைய ஒபாமா சிஎன்ஏ என்றேன்.

பொள்ளாச்சியில் பிப். 4-6 தேதிகளில் சிலப்பதிகாரக் கருத்தரங்கு. டெல்லியில் இருந்து கி. நாச்சிமுத்து வருகிறார் என்றார்.

நா. கணேசன்


-------------------


தினமணி ஸ்ரீ வைத்தியநாதையர் எழுதின தலையங்கத்தை இணைத்துள்ளேன். அவரது நண்பர்கள் யாராகிலும் தொடர்பு கொண்டு தினமணி மேனேஜ்மெண்ட்டை அணுகி தினமணியை யூனிகோடு எழுதுருவுக்கு மாற்றச் சொல்லவும். குமுதம், விகடன், காலச்சுவடு, தினமலர், .... இன்ன பிற வெகுஜன பத்திரிகைகளைச் சான்று காட்டி, தேடி எந்திரங்களின் பயன்கூறி விளக்கினால் நிச்சயம் தினமணி யுனிகோட் ஆகிவிடும்.

உதவ வேண்டுகிறேன். அதுவரை, உங்களுக்குப் பிடித்த கட்டுரையை (தமிழ், சங்கீதம், அரசியல், ....) யூனிகோட் மாற்றி, - சுரதாவின் பொங்குதமிழ் - கைகொடுக்கும்.

பாவிக்க:
http://www.suratha.com/reader.htm

மேல்பெட்டியில் தினமணி பத்திகளை இடுக. Dinamani என்ற பொத்தானைச் சொடுக்குக. கீழ்ப் பெட்டியில் உங்கள் விருப்பக் கட்டுரை யூனிகோடில் அவதாரமாகும்.

தினமணியை யூனிக்கோட் ஆக்க உதவுங்கள்!

நன்றி!
நா. கணேசன்


...எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்: காந்தி கண்ட கனவு!

கே.வைத்தியநாதன், தினமணி, 22-1-2009

அமெரிக்காவின் 44-வது அதிபராக 47 வயது பராக் ஹுசேன் ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவைத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளில் பார்த்த அனைவரும், நடப்பதெல்லாம் நிஜம்தானா என்று பல தடவை கிள்ளி விட்டுக் கொள்ள நேர்ந்திருக்கும்.

அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையையோ வெளிவிவகாரக் கொள்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கலாம். "நாம்' என்று கூறுவது ஏன் என்றால் என்னைப் போன்ற பலருக்கும் அவை ஏற்புடையதல்ல. ஆனால், மக்களாட்சியின் மகத்துவத்துக்கு அமெரிக்காவைவிட ஒரு உதாரணம் இருக்க முடியுமா என்றால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி "இல்லை, இல்லை' என்று குரலெழுப்பத் தோன்றுகிறதே!

இப்படியெல்லாம் ஒரு தலைவர் இருக்க முடியுமா? இப்படி ஒரு ஜனநாயக உணர்வுள்ள ஒரு தேசம் இருக்க முடியுமா? இப்படி ஒரு தேசப்பற்றுள்ள மக்கள் வேறு எங்காவது இருப்பார்களா, இருக்கிறார்களா என்று பிரமிக்கவைத்து விட்டார்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அங்கே போய் குடியேறிய இப்போது அமெரிக்கர்களாக இருக்கும் பல்வேறு இனத்து மக்களும், மதத்தினரும்!

பராக் ஹுசைன் ஒபாமா! எத்தனை அற்புதமான தலைவர் இவர். அவரது முகத்தில் வெற்றிக் களிப்பைக் காணமுடியவில்லை. இறுமாப்பின் நிழல்கூட இல்லை. ஆனால், என் தாய் மண்ணின் தலையெழுத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறி இருக்கிறது.

ஒட்டுமொத்த மனித இனத்தை வழிநடத்தும் பொறுப்பு தான் வகிக்கும் பதவிக்கு இருக்கிறது என்கிற கடமை உணர்வு இருக்கிறது.

ஒருபுறம் பயங்கரவாதம், மறுபுறம் பொருளாதாரப் பின்னடைவு. இவைகளுக்கு இடையே தத்தளிக்கும் அமெரிக்காவுக்கு நம்பிக்கை ஊட்டுவதுடன் மக்களின் ஒத்துழைப்புடன் அந்த சவால்களை எதிர்கொள்ளவும், வெற்றி காணவும் முடியும் என்று அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாரே, இவரல்லவா தலைவர்?

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். அதிகாலையில் எழுந்திருந்து, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாதா கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை நடத்துகிறார். நான் நாத்திகன் என்றோ, கடவுள் இல்லை என்றோ ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. மனைவியையும் குழந்தைகளையும் மாதா கோயிலுக்குத் தனது சார்பில் அனுப்பிவிட்டு, நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று பகல் வேஷம் போடவில்லை. தனது இறை நம்பிக்கையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் நாணயம் அவருக்கு இருக்கிறது.

சரி, பெருவாரியாக கிறிஸ்தவர்கள் வாழும் அமெரிக்காவில் அதிபராகும் வேளையில் தனது இஸ்லாமியப் பின்னணியை மறைக்க வேண்டும் என்று நின்றால் அதுவும் இல்லை. உலகமெலாம் பரந்துகிடக்கும் இஸ்லாமிய சமுதாயம் அமெரிக்காவின் மீது கோபமாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும், தனது பிறப்பையோ, வளர்ப்பையோ மறைக்க விரும்பாத இந்த னிதனின் துணிவு நம்மை அசர அடிக்கிறதே...

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக முதன்முதலில் உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்று, அதற்காகத் தனது உயிரைப் பலி கொடுத்த முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் தனது பதவிப் பிரமாணத்துக்கு 1861-ல் யன்படுத்திய அதே பைபிள் மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பராக் ஒபாமாவின் செய்கை நமது இந்திய அரசியல்வாதிகளின் சில்லரை புத்திக்கு ஒரு சம்மட்டி அடி.

பராக் ஒபாமா ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். ஆபிரகாம் லிங்கனோ குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆச்சரியம் இத்தோடு முடிந்து போகவில்லை.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிப் பிரமாண சடங்கில் பிரமிக்கவைத்த இன்னொரு விஷயம் ஒன்று உண்டு. அங்கு கூடியிருந்த 20 லட்சம் மக்களில் ஒருவர்கூட ஜனநாயகக் கட்சி கொடியுடன் வந்திருக்கவில்லை. அத்தனைப்பேரும் தேசியக் கொடியுடன் தங்களது ஒட்டுமொத்த தேசத்தின் தலையெழுத்தையும் அடுத்த நான்கு ஆண்டுகள் வழி நடத்த இருக்கும் கறுப்பர் இனத் தலைவரிடம் பதவிப் பிரமாணத்தின் மூலம் அமெரிக்க நாட்டின் சாதனையை பிரகடனப்படுத்தியிருக்கிறார்களே! அந்த தேசிய உணர்வுக்கு தலைவணங்காமல் இருப்பது எங்ஙனம்?

நமது நாட்டில் இப்படியொரு பதவிப் பிரமாணம் நடந்திருந்தால் அதில் கட்சிக் கொடிகள் அல்லவா இருந்திருக்கும்? தேர்தல் முடிந்து ஆட்சியில் அமர்ந்து விட்டால் கட்சி மாச்சரியங்களை மறந்து, ஒட்டுமொத்த மக்களின் தலைவராக பதவியேற்று ஆட்சி நடத்தும் அரசியல் பக்குவம் நம்மிடம் இல்லாமல் போனது ஏன்?

தனது பதவிப் பிரமாணத்தைக் காண அமெரிக்காவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் திரண்டு வந்திருக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முன்னிலையில், "ஆதலால் ஆண்டவரே எனக்கு உதவுவீராக' என்று இறைவனின் துணையுடன் தனது சரித்திரக் கடமையை நிறைவேற்ற இருக்கும் இந்த மாமனிதன் அதற்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரை இருக்கிறதே, அதன் தனிச் சிறப்பு உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் அது பொருந்துவதாக இருக்கிறது என்பதுதான்.

பராக் ஒபாமாவுக்கு பதில் அந்த உரையை புதினோ, சர்கோசியோ, மன்மோகன்சிங்கோ யாராக இருந்தாலும், அவரவர் நாட்டு மக்களின் பிரச்னைகளின் கடுமையையும், அதிலிருந்து வெளிவர முடியும் என்கிற நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் அற்புதமான உரை அது.

""நாம் சந்திக்கும் சவால்கள் உண்மையானவை. அவை பலதரப்பட்டவை. அவை கடுமையானவை. மிகவும் குறுகிய காலத்தில் அவைகளுக்கு நாம் தீர்வு காண்பது இயலாத விஷயம்'' என்கிற உண்மை நிலைமையைத் துணிந்து மக்கள் முன் வைக்கிறார்.

""கருத்து சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்களும், பெண்களும் தங்களுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்தி, தேசநலனுக்காக, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட்டு செயல்பட்டால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்'' என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறார்.

""நமது அரசாங்கம் பெரியதா, சிறியதா என்பதல்ல பிரச்னை. அது செயல்படுகிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம். குடும்பங்களில் நிம்மதியும், அமைதியும் நிலவுகிறதா, வேலையில்லாத் திண்டாட்டம் போகப் பயன்படுகிறதா, கெüரவமான ஊதியத்துக்கு வழி செய்கிறதா, முதியவர்கள் கண்ணியத்துடனும், நிம்மதியாகவும் வாழ சமூக பாதுகாப்பு தரப்படுகிறதா என்பதுதான் நம் முன் உள்ள பிரச்னைகள்'' என்று அடைய வேண்டிய லட்சியங்களைப் பட்டியல் இடுகிறார்.

""மக்களுடைய பணத்தைச் செலவிடும் பொறுப்புள்ள நாம் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அரசுப் பணத்தை முறையாக, சரியாக செலவிட வேண்டும். நமது செயல்பாடுகள் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்'' என்று நிர்வாகத்திற்கு வழிகாட்டுகிறார்.

""சந்தையைக் கட்டுப்படுத்த ஆள் இல்லாவிட்டால் அது ஒரு நாள் கட்டுமீறிவிடும். பணக்காரர்களுக்கு மட்டும்தான் ஒரு நாடு என்றால் அது வளர்ச்சியடைய முடியாது. நமது பொருளாதார வெற்றி என்பது நாட்டின் இந்த வளர்ச்சியின் பயனை எல்லோருக்கும் கொடுப்பதில்தான் இருக்கிறது'' என்று தனது பொருளாதாரப் பார்வையை வெளிப்படுத்துகிறார்.

அண்ணல் காந்தியடிகள் சொன்ன அதே விஷயங்கள் இப்போது அமெரிக்க அதிபரால் வாஷிங்டனிலிருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு கூறப்படுகிறது என்பதை எண்ணும்பொழுது அதிசயமும், ஆச்சரியமும் ஏற்படுவது நியாயம்தானே.!

அதிபர் பராக் ஒபாமா மாதா கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்து தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட கையொடு, பதவிப் பிரமாணம் முடிந்து உரையாற்றுகிறார், ""கிறிஸ்தவர், இஸ்லாமியர், யூதர், இந்துக்கள் மற்றும் மதநம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடுதான் அமெரிக்கா. இதில் எந்த மதமும் ஏற்றத்தாழ்வுடையதல்ல'' என. இதைத் தானே 70 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அண்ணல் காந்தியடிகள் சொன்னார்.

பராக் ஒபாமாவின் வெற்றி கறுப்பர் இன மக்களின் வெற்றி என்று சொன்னால் அது தவறு. உண்மையில் இது இனவெறியை ஓரங்கட்டிய அமெரிக்காவின் வெற்றி. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், வெள்ளை இனத்தவர்களின் பெருந்தன்மைக்குக் கிடைத்த வெற்றி.

அமெரிக்க மக்கள் தொகையில் கறுப்பர் இனத்தவர் வெறும் 13.1 சதவீதம்தான். இவர்களது ஒட்டுமொத்த வாக்குகள்கூட பராக் ஒபாமாவை வெற்றியடைய வைத்திருக்காது.

அமெரிக்காவில் வாழும் வெள்ளையர்கள், ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று விழைந்து மனமுவந்து வாக்களித்து ஒரு கறுப்பர் இனத்தவரை அதிபராக்கி இருக்கிறார்கள். தாங்கள் செய்த தவறை உணர்ந்து சரித்திரத்தை திருத்தி எழுத முற்பட்டிருக்கிறார்கள். இந்த விஷயத்திலும் அண்ணல் காந்தியடிகள்தான் முன்னோடி என்று எப்படி சொல்லாமல் இருப்பது?

காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களிடம் போய் அவர்களைப் போராடச் சொல்லவில்லை. உயர் சாதியினரிடம் தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜனங்கள், அதாவது கடவுளின் குழந்தைகள் என்று உணர்த்தினார். மனிதனை மனிதன் ஆண்டான், அடிமை என்று ஏற்றத்தாழ்வுடன் நடத்துவது தவறு என்று எடுத்துரைத்தார். நீங்கள் அவர்களை உங்களுக்கு சமமானவர்களாக நடத்துங்கள். நீங்கள் அவர்களைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போங்கள்' என்று கட்டளையிட்டார். தங்களை மேற்குடி என்று சொல்லிக் கொள்பவர்களின் சிந்தனையில் இருந்த சிலந்தி வலைகளை அகற்ற முற்பட்டார்.

மகாத்மா காந்தி என்கிற அந்த மாமனிதர் 70 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவை, தாழ்த்தப்பட்ட இனத்தவர்களே கொச்சைப்படுத்தாமல் இருந்திருந்தால், அவரது தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசியல் நடத்தியவர்கள் இந்த விஷயத்தில் முனைப்புடன் சமுதாய உணர்வுடன் செயல்பட்டிருந்தால், அமெரிக்கா ஒரு பராக் ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்திருப்பதைப்போல, இந்தியா எப்போதோ ஒரு ஹரிஜனத் தலைவரைத் தனது பிரதமராக்கி மனித இனத்துக்கு வழிகாட்டி இருக்கும்.

உலகின் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அளவுக்கு அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. இரட்டை கோபுரமே தகர்க்கப்பட முடியும் என்று தீவிரவாதிகள் அமெரிக்க நிர்வாகத்துக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் சவால் விட்டு செயல்பட்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலையில், 20 லட்சம் பேர் கூடியிருக்கும் திறந்தவெளியில், குண்டு துளைக்காத மேடையோ, சுற்றிலும் கறுப்பு, சிவப்பு, நீலம், சாம்பல் என்று கையில் துப்பாக்கி ஏந்திய பூனைப்படையினரோ இல்லாமல், துணிந்து பராக் ஒபாமா பதவி ஏற்கிறார், ஆச்சரியமாக இல்லை? சம்பிரதாயங்களை மீறி, திறந்தவெளியில் தைரியமாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதன் மூலம், அமெரிக்க மக்கள் மத்தியில் இருந்த பயத்தையும் பீதியையும் போக்கி அவர்களுக்கு தைரியத்தையும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறார் ஒபாமா.

அன்று நவகாளியில் சட்டை அணியாத திறந்த மார்புடன் தள்ளாத வயதில் தைரியமாக அண்ணல் காந்தியடிகள் நடந்த காட்சி நிழலாடுகிறது.

இது அண்ணல் காந்தியடிகள் கற்றுத் தந்த பாடமல்லவா? மக்களுக்காக நான் உயிரை விடவும் தயார் என்று சொல்லாமல் சொல்லி, அன்னிய ஏகாதிபத்தியத்தையே அச்சுறுத்திய அண்ணலில் வழித்தோன்றல்கள் இப்போது கறுப்புப்பூனைகளை அங்கீகாரமாகவும், தங்களது தகுதியின் அடையாளமாகவும் கருதுகிறார்களே, அதை யாரிடம் சொல்லி அழ?

நாம் வேண்டுமானால் மகாத்மா காந்தியை மறந்திருக்கலாம். ஆனால் உலகம் மறக்கவில்லை. நாம் அண்ணல் காந்தியடிகள் வகுத்துத்தந்த பாதையையும் அவரது வழிகாட்டுதல்களையும் மறந்திருக்கலாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன்னால் காந்தியடிகள் கண்ட கனவு நனவாகி இருக்கிறது.

"முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மையுற்றாய்!' என்று மகாகவி பாரதி போற்றிய அண்ணல் காந்தியடிகளின் கனவு நனவாகி இருக்கிறது- இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில்!

2 comments:

Anonymous said...

என்ன சார்! ஒபாமா தன் பாட்டியை பதவியேற்பு விழாவிற்கு அழைக்காதபோது அவருக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் கேள்விக்குறிதான்.

பாவம் அந்தப்பாட்டி ஒரு குடிசையில், ஒரு தடவை வெள்ளை மாளிகை வந்தால் என்ன சார் குறைஞ்சிடும்?

புள்ளிராஜா

தேவன் மாயம் said...

அதிபராகும் வேளையில் தனது இஸ்லாமியப் பின்னணியை மறைக்க வேண்டும் என்று நின்றால் அதுவும் இல்லை. உலகமெலாம் பரந்துகிடக்கும் இஸ்லாமிய சமுதாயம் அமெரிக்காவின் மீது கோபமாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும், தனது பிறப்பையோ, வளர்ப்பையோ மறைக்க விரும்பாத இந்த னிதனின் துணிவு நம்மை அசர அடிக்கிறதே...
///

ஒபாமா நமக்கு நல்லது செய்கிறாரா
பார்ப்போம்!!

தேவா......