2008-ல் மிக அதிக மழை ஏன்? சின்னஞ்சிறு பெண் effect

நடைபெறும் 2008-ல் தமிழகத்தில் படுமழை. ஏன்? இதற்கு பூமத்திய ரேகைக்கு அருகே பசிபிக் மாக்கடலில் ஏற்பட்டுள்ள "லா நின்யா" (La Nina) தோற்றப்பாடு (phenomenon) தான் முக்கியக் காரணம். பசிபிக் மகாசமுத்திரம் சராசரிக்கும் மேலாகச் சற்றே குளிர்ந்துள்ளதே எல் நின்யா இயற்பாடு என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அண்மையிலே பூமிக்கோளத்தின் தண்மை-வெம்மையை ஆராயும் அறிஞர்கள் "எல் நின்யோ"(El Nino)/"லா நின்யா"(La Nina) என்ற இரு மாறுபட்ட தோற்றப்பாடுகளைக் கண்டறிந்து வரையறுத்துள்ளனர்.






எல் நின்யோவின் போது 2008ல் நிகழும் ல நின்யாவுக்கு எதிரான இயற்பாடு நிகழ்கிறது. எல் நின்யோ சென்றமுறை 1998-ல் நடைபெற்றது, அப்போது பசிபிக் பெருங்கடல் சற்றே சூடாகிப் போனதால், தென்னிந்தியாவில் வரலாறு காணா வறட்சி. காவிரி பாயும் தஞ்சைத் தரணியிலே விவசாயிகள் வங்குகளில் தோண்டிப் பிடித்த எலிக்கறி உண்ட அவலநிலை கண்டோம். ஏனைய ஊர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பல குடும்பங்கள் கடனில் மூழ்கி மாண்டன. பசிபிக் சமுத்திரம் வெதும்பும்போது எல் நின்யோ மீண்டும் வருவது உறுதி - 2012-2014ல்?? தமிழகம் தாங்கத் தயாரா?

El Nino:


La Nina:




இப்போது நிகழும் ல நின்யாவைவிட எல் நின்யோ வரும்போது தான் பிரச்சினை. இந்த பருவ மாற்றங்களை எதிர்கொள்ள நடுவண்/மாநில அரசாங்கங்கள் தயாராக நடவடிக்கைகள் எடுக்கின்றனவா? சீனாவில் 1500 ஆண்டுகளாக கடலுக்கு ஓடிப்புகும் நதிகளை அணைகளால் தடுத்து விளைநிலம் ஆக்குவதை ஒரு கடமையாக எடுத்துச் செயல் ஆற்றிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் நம்மூர்களில் அரசு மெத்தனம் உளதோ? என்ற ஐயம். ஏராளமாகத் தண்ணீர் கேரளாவில் கடலுக்கு விரைந்து ஓடுகிறது. தமிழ்ப் பேரா. கி. நாச்சிமுத்து 30 ஆண்டுகள் திருவனந்தபுரத்திலே கேரளப் பல்கலைத் தமிழ்த்துறையிலே பணியாற்றினவர். ஊர்ப்பெயர் ஆய்விலே (toponymy) பெயர்பெற்ற மொழியியற் பேராசிரியர், தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை அமைத்திட டெல்லியில் இருக்கிறார். அவர் சொன்ன தகவல்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் ஒற்றுமையாக முடிவு செய்து ஒத்துக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவது என்று கேரளாவில் சட்டம் இயற்றியுள்ளனராம். அதுவரை வீணாய் கடலுக்கு ஓடும்! எல் நின்யோவின் போது கேரளாவில் மழை குறையும் (1998-ல் பார்த்தது தானே). அப்போது கேட்டால் உறுதியாகத் தமிழ்நாட்டுக்கு ஒருசொட்டும் இல்லை என்பது வாடிக்கை. வங்கம், ஒரியம், ஆந்திரம் இந்நிலைதான். ஆனால் தெலுங்கானா, முகவை, கொங்கு, மதுரை, ... காய்கிறது. பல பத்தாண்டுகளாகச் செலவு செய்து நதிநீர் இணைப்பு பற்றிப் பேசியும், முன்னீடுகளை அரசுகளுக்குச் சமர்ப்பித்தும் தொடர்ச்சியாக எம். எஸ். உதயமூர்த்தி (1970களில் இருந்து), நா. மகாலிங்கம் (1960களில் இருந்து), பழ. நெடுமாறன், ஆனந்தராவ் (பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத்திட்ட எஞ்சினீயர்). முயற்சி பாராட்டத்தகுந்தது. மேதகு. அப்துல் கலாம் ஐயா நதிநீர் இணைப்புத் திட்டத்தை ஒருபடி மேலே ஏற்றி, இந்திய அளவிலே, அரசியல், மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்துல் கலாம் நதிநீர் இணைப்புக்காக சுரேஷ் பிரபு என்னும் அதிகாரியை நியமித்திருந்தார். ஆழியாற்றில் 'வாழ்க வளமுடன்' வேதாத்திரி மகரிசியின் ஆசிரமத்திலே சுரேஷ் பிரபு தலைமையில் கருத்தரங்குகள் நடத்தினார்கள். மத்திய மந்திரிகள், காஷ்மீர் கரண் சிங், ... வந்தார்கள். பிரபு அவர்கள் அமெரிக்கா வந்தபோழ்து அவருக்கு ஹூவர் அணைக்கட்டைக் காட்ட இந்திய எனிசினீயர்கள் சிலர் சேர்ந்து ஏற்பாடு செய்தோம், கொலராடோ நதியை மாபெரும் அணைகட்டி அடக்கியதால் தான் நெவாடா, கலிபோர்னியா (உ-ம்: லாஸ் ஏஞ்சலெஸ்) மாகாணங்களில் போன்ற பெருநகரங்கள் தோன்ற வழி வகுத்தது. இந்தியா செய்யுமா?

இப்போதைய 110 கோடி சனத்தொகை இந்தியாவில் 160 கோடியாகச் சில ஆண்டுகளில் ஆக இருக்கிறது:
India's big population challenge (BBC)

விளைநிலங்கள் காங்கிரீட் காடுகளாக இந்தியாவில் உலகமயமாதலினால் மாறிக்கொண்டுள்ளன. நகர்வாசிகளும், பணக்காரர்களும் ஓட்டும் மகிழ்உந்துகளுக்கான (pleasure cars, SUVs) எரிநெய்க்காக (fuel) கன்னெய் (கல்நெய் = பெற்றோல்) தீர்வதனாலோ, அல்லது எட்டாத உச்சிக்கொம்புக்கு விலை ஏறுவதாலோ நல்ல விளைநிலங்கள் ஒதுக்கப்படும் அபாயச் சூழல் உருவாகிறது.

காலங்காலமாக வேளாண்மையை மாத்திரம் தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து, படித்து வேலைக்குப் போன ஒரே ஒருத்தன் என்பதால் இதுபற்றி எழுத ஆசைப்பட்டேன். எல் நின்யோ தாக்கும்போது உருவாகும் பாரிய வரள்நிலையை, உணவுப் பஞ்சக் கொடுமையைப் போக்க நாம், நம் அரசுகள் என்ன செய்கிறோம்? என்ன திட்டம் இருக்கிறது?

கணித்தொழில் வளர்ச்சி மாத்திரம் போறாது. இந்தியாவில் பொதுமக்களின் வயிற்றுக்குச் சோறிட நதிகளின் நீர்கள் யாவும் விளை நிலங்களில் பாய, பயிர்த் தொழில் சிறந்திட வகை செய்ய வேண்டும். அக்கனவு மெய்ப்படணும். அதுவரை, இந்தியாவின் வளம், வசதிப் பேச்சுகள் எல்லாம் வெறும் முகத்துக்குப் பூசும் வெறும் பவுடர், அரிதாரந்தான்.

வாழ்க வளமுடன்!
நா. கணேசன்

பின்குறிப்பு:

எல் நின்யோ என்றால் சிறுகுழந்தை, சுட்டிப் பையல். ஸ்பானிஷ் மொழியிலே மேரிமாதா புதல்வர் இயேசுநாதர் பெயராக அதற்கு வைத்தனர். ல நின்யா என்றால் சிறுமி. நமக்கெலாம் மாரிக்கொடை வழங்கும் சின்னஞ்சிறு பெண். தில்லைக் காளி பற்றிச் சீர்காழி பாடிய மிகப்பிடித்தமான பாட்டு ஞாபகம் வந்தது. 20களில் இருப்போர் கேட்டிருக்கிறார்களா, அறியேன். உறவினர் பலரின் திருமணக் கச்சேரிகளில் நேரில் சீர்காழியார் பாடக் கேட்டதுண்டு. சிந்துபைரவி ராகம். அவர் மைத்துனர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் இயற்றிய பாட்டு. அதைக் கேட்க:
http://www.sirkali.org/chinnan.ram
பெண்குரலில்:
http://www.musicindiaonline.com/p/x/e4C2b_xZQ9.As1NMvHdW/


பல்லவி:
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடைஉடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)

அனுபல்லவி:
பெண்அவளின் கண்அழகைப் பேசி முடியாது
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)

சரணம்:
மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணம் எல்லாம் நிறைவாள்

பின்னல்சடை போட்டுப் பிச்சிப்பூச் சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)

La Niña:
http://en.wikipedia.org/wiki/La_nina
http://www.nationalgeographic.com/elnino/mainpage.html

9 comments:

RATHNESH said...

தேவையான பதிவு கணேசன் சார். விளைநிலத்தின் அருமை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படி உணர்வுபூர்வமாக ஒன்றி எழுத இயலும்.

இந்த லா நின்யா மற்றும் எல் நினோ இரண்டின் விளைவும் மொத்த இந்தியாவிலும் இருக்குமா? இந்த ஆண்டு தமிழகம் மட்டுமின்றி பரவலாக எல்லா இடங்களிலும் குறிப்பாக அஸ்ஸாமிலும் கூடுதல் மழை.

சீர்காழியின் பாடல் வரிகளைப் படித்த மாத்திரத்தில் அவருடைய கணீரென்ற குரல் உள்ளே ஒலிக்காது இருக்குமா? அந்த சிறுமியின் அபிஷேகத்துக்காவது 2014-ல் சிவகங்கைக் குளத்தில் தண்ணீர் இருக்குமா?

Unknown said...

அன்புள்ள கணேசன்,
மிக அதிக மழை ஏன் என்ற கட்டுரை அருமையாக அமைந்துள்ளது.
சிறப்பான இந்தப் பதிவைப் படித்து மகிழ்ந்தேன். நன்றி.
வணக்கம்
அன்புடன்
ரா.ரரதாகிருஷ்ணன்
ஏப்ரல் 5, 2008

Anonymous said...

Very Informative sir. Thanks

கோவை சிபி said...

புதிய செய்தியை தெரிந்து கொண்டேன்.நன்றி.இங்குள்ள வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு(?)இது பற்றி தெரியுமா?வடமேற்கு பருவ மழையின் நீட்சி என்கிறார்கள்.
லா நின்யா என்பது சுழற்சியா?
அல்லது புவி வெப்பமாதலின் பாதிப்பா?

குமரன் (Kumaran) said...

கணேசன் ஐயா.

எல் நினோ, லா நின்யா இரண்டையும் பற்றிய அறிமுகத்திற்கு நன்றிகள். நம் நாட்டின் நிலையை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கிறது. வாய்ச்சொல்லில் வீரர்களாக மட்டுமே இருக்கிறோம்.

20களில் இருப்பவர்களுக்குச் 'சின்னஞ்சிறு பெண்' பாட்டு தெரிந்திருக்கிறதோ இல்லையோ 30களில் இருக்கும் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்களில் ஒன்று இது. மீண்டும் ஒரு முறை கேட்டு மகிழ்ந்தேன்.

Anbu Selvaraj Subramanian said...

கணேசன்,
மிக அருமை.நம் அரசுகள் உணருமா?. நம் அரசுகளுக்கு, ஓட்டு வாங்க என்ன வழி என்பதே 24/7 எண்ணமாக இருக்கிறது. மக்களும் அடுத்த தலைமுறை பற்றி எண்ணி பார்க்க வேண்டும்.கவர்ச்சி திட்டங்கள் பயன் படாது என்பதை உணர வேண்டும்.

Unknown said...

your information about this "LA NINA & EL NINO" was very useful, and we can realise about our precious agricultural land.

Unknown said...

thanks for ur info about el nino and la nina.

Athisha said...

மிக அருமை , பதிவிற்கு நன்றி