தமிழர் இணையும் யூனிக்கோடு!

தமிழ்மணம் நடாத்தும் நண்பர்கள் யூனிக்கோடு பற்றிய சில அனுபவங்கள், வரலாறுகளை எழுத அழைத்ததால் எனக்குப் பெருமை. யூனிக்கோடுக்குத் தமிழ் வரலாற்றிலே ஒரு பெருமை உண்டு ~ பெரும்பான்மையான ஒரு குறியேற்றமாக மாறி வலைப்பதிவுகள் போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கான தமிழரைத் தமிழ்நாட்டிலேயும் வெளியேயும் வையவிரிவலையில் (world-wide web) மடலாட வைத்தது. கணினிக் குறியேற்றங்கள் பல இருந்தாலும் யூனிக்கோடினால் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்க்க முடிகிறது. கணினி என்ற கலைச்சொல் கிண்டி பொறியியற் கல்லூரியில் 1970களின் கடைசியிலே ஏற்பட்டது. யூனிக்கோடுக்கு ஒருங்குறி என்று தமிழ்ப்படுத்தியவர் நண்பர் இராமகி ஆவார். இணையம் (web), உலாவி (browser), மட்டுநர்(moderator), தொடுப்பு (link), ... எத்தனை, எத்தனைக் கலைச்சொற்கள்! தொழில்நுட்புகள் அனைத்துக்கும் உழைக்கும் தமிழ்மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழன்னைக்கு அழகுச் சொல்மாலைகள் புனையும் முயற்சிக்கு முக்கியமான வழி இணையம் என்றானது. எந்த ஓர் ஆங்கில வார்த்தைக்கும் தமிழில் பொருத்தமான சொல்லைத் தோற்றுவிக்க நொடியினில் முடிகின்றது. இணைய நாட்டாமை மேட்டிமைக் குடிகளால் நடத்த இயலாதவாறு அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கும் வாய்ப்புகளைத் தொழில்நுட்பம் இன்று தருகிறது. வணிக நிறுவனங்களிடம் உள்ள ஊடகங்களிலே எழுதக் காத்திராமல், உடனுக்குடன் தத்தம் படைப்புக்களை, எண்ணங்களை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ள ஏலுகிறது. 100,000 வலைப்பதிவுகள் தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படும் நாள் தொலைவில் இல்லை எனும் கனா மெய்ப்படவேண்டும்.

யூனிக்கோடில் கூகுள் குழுக்கள்:

முதன்முதலில் ஏற்பட்ட மடலாடு மின்குழு தமிழ்.நெட். பின்னர் கிளைத்து யாகூ குழுமங்கள் பலவாகின. தமிழ்ச் சொற்களைக் கொடுத்துத் தேட வசதிகள் நல்கின கூகுள் குழுமங்கள், ஆனால் அவ்வசதி இன்றுகூட யாகூ குழுக்களில் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். முதன்முதலில் தமிழின் கூகுள்குழு 'அன்புடன்' புகாரி [1] அமைத்துச் சிறப்பாக இயக்கி வருகிறார். இப்போது அன்புடன், முத்தமிழ், மின்தமிழ், பிரவாகம், பண்புடன், ... என்று பல துறைகளில் கூகுள்குழுக்கள் ஒருங்குறியில் நடைபெறுகின்றன, இலட்சக் கணக்கில் கடிதங்கள் பரிமாற்றம்! கூகுள் குழுக்களின் அறிமுகக் கட்டுரைகளைப் ஃபெட்னா மலர்களில் கவிஞர்கள் வரைந்தனர்: புகாரி கட்டுரை (2005), இர. வாசுதேவன் கட்டுரை (2006).

கூகுளில் இணைக்குழு உருவாக்கம்:

2005 வாக்கில் இருந்த பெரிய பிரச்சினை என்னவெனில் மரபுக் கவிஞர்கள், யாகூ குழுவின் முதலாளிகளுக்கும் கூட இணையத்தில் யூனிக்கோடு எழுதுகை என்பது கைவசப்படாத வேளை. மேலும் யூனிக்கோடு மாறுகிறது என்று தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு ஒருமுறை செய்திகள் வெளிவந்த காலம். குறியீடு மாறிய பின்னால் மாறுங்கள் என்றும் சொன்னார்கள். அந்நிலையில் யாகூகுழுவில் எழுதுவோர் எழுதட்டும், தானியங்கியாக நிழற்குழு கூகுளில் அமைத்து அந்தத் திஸ்கி மடல்களை யூனிக்கோடுக்குப் பெயர்த்து இணைக்குழுவில் வைப்போம் என்று நினைத்தேன். 'தமிழ்மணம்' காசி மென்கலம் தயாரித்து உதவினார். அதற்கு உடனே அனுமதி அளித்து, தொழில்நுட்ப முன்னெடுப்புக்கு ஆதரவு அளித்தவர் கவிமாமணி இலந்தை இராமசாமி ஆவார். மரபுக் கவிதைக் கடலைக் கடக்கும் கப்பலாகச் சந்தவசந்தம் இலங்குகிறது. அதன் மீகாமன் இலந்தையார். பலரும் பாராட்டினர். கனடா நாட்டுக் கவிஞர் பேரா. அனந்தநாராயணனின் வாழ்த்துப்பா நினைவில் இருக்கிறது [2] :


         பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
         வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
         பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
         காரணமாய் நின்றார் களித்து!



உமர் அவர்களின் தேனீ எழுதுருவும், நானும் உதவிய முகுந்தராசின் எ-கலப்பை மென்கலங்கள் பதிவுகள் வளர்ச்சிக்கு உறுதுணையாயின. பின்னர், தமிழ்மணம், தேன்கூடு உருவானதும் தமிழ்வலைப் பதிவுலகம் நிலைபெற்று தமிழர் கூடும் மேடைகளாக வலைத் திரட்டிகள் விளங்க ஆரம்பித்தன.

முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் டேஸ் பற்றிய என் கருத்துக்கள்? தற்போதைய யூனிக்கோடின் பிழை என்ன? மேலும் புதிதாக யூனிக்கோடு எழுத்துக்களை எவ்வாறு தமிழ் பெறுவது?

என் சிறு ஒருங்குறிப் பட்டறிவை அடுத்த பதிவில் காண்போம்.
நா. கணேசன்

குறிப்புகள்:


[1]
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
           கவிஞர் புகாரி

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
               புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய் !
இளமையோடும் புதுமையோடும்
               தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்!

ஓசைகளாய் இருந்தவள்தான்
               ஓலைகளில் பெயர்ந்தாள்!
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
               சங்ககாலம் கொண்டாள்!

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
               தாள்களுக்குள் பெயர்ந்தாள்!
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
               தரணியெங்கும் நிறைந்தாள்!

காகிதத்தில் கனிந்தவள்தான்
               கணினிக்குள் பெயர்ந்தாள்!
கணினிக்குள் பெயர்ந்ததனால்
               அண்டவெளி வென்றாள்!

அழிந்திடுவாள் என்றோரின்
               நரம்பறுத்து நின்றாள்!
இணையமென்ற மேடைதனில்
               மின்னடனம் கண்டாள்!

அயல்மொழியைக் கலந்தோரை
               வெட்கியோட வைத்தாள்!
அழகுதமிழ் அமுதத்தமிழ்
               ஆட்சிமீண்டும் பெற்றாள்!

[2]
பாரதம் - மகாபாரதம்; பாரதம் = பா ரதம் - கவிதை எனும் தேர் (சந்தவசந்தம் கவிதைக்குழு). வாரணம் = ஆனைமுகன்.

உலகம் உன் கையில்!

உலகம் உன் கையில்!

தம்பி!
கொஞ்சம் நில்.
என்ன சுமை உன்முதுகில்?

கவலைகள் கைக்குழந்தைகள்
அல்ல.
அவற்றைக் கீழே இறக்கிவிடு

நீ சிரித்தால் உலகம் உன்னுடன்
சேர்ந்து சிரிக்கும்.
அழுது கொண்டிருப்பவனின்
நிழல் கூட அவனை நெருங்கப்
பயப்படும்!

காற்றைப் பதுக்கி வைப்பதால்
கால்பந்து உதை வாங்குகிறது!
புல்லாங்குழலோ
காற்றை வெளியேற்றி இசை
தருவதால்
கலைஞனிடம் முத்தம் பெறுகிறது!

வெளிச்சத்துக்கு வா!
பூக்களிடம் பேசு!
மரங்களிடம் நட்பு வை.
காக்கை குருவிகளிடம் கவிதை
கேள்!

நம்பிக்கை வீணையை
நன்கு முழக்கு!
இமயமலை கூட எதிர்வந்து
நிற்கும்!
கவலைப் பிசாசு கை கட்டிநின்று
பணிவிடை செய்யும்! - உன்
பாதம் பிடிக்கும்!

நம்பிக்கை ஒரு நல்ல விமானம்
விண்ணிலும் பறக்கும்! மேலும்
பறக்கும்!
சந்திர மண்டலத்திலும்
தரையிறங்கும்!

நம்பிக்கைச் சங்கொலி
நன்கு முழங்கினால்
வேலை நிறுத்தங்கள்
விலகிப்போகும்!
ஆலைகள் எல்லாம்
ஆலயங்கள் ஆகும்!

பஞ்சாலை நூலைப் பலரும் அறிவர்
நெஞ்சாலை நூற்கும் நூல்?
நம்பிக்கை நூல்!
எந்தப் புயல்
எங்கு மையம் கொண்டால் என்ன?
இதயக் கப்பலை - நம்பிக்கை
முனையில்
நங்கூரம் பாய்ச்சு!
கலங்காத நம்பிக்கை கப்பலைக்
காக்கும்!
கரை கொண்டு சேர்க்கும்!

உள்ளே நாம் சுவாசிக்கும்
உட்காற்றும் வெளிக் காற்றும்
நம்பிக்கை நூல் இழை
நடத்தும் நாடகம்!

                   ~ வானம்பாடிக் கவிஞர் 'சக்திக்கனல்'


அனைவருக்கும் இனியதாய் 2008 இலங்குவதாக!
நா. கணேசன்