வரும் பிப்ரவரி 2010-ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு

கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு
Dinamani First Published : 18 Sep 2009 11:41:00 PM IST

சென்னை, செப். 17: "ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவை நகரில் அடுத்த ஆண்டு நடத்தப்படும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து தமது தலைமை உரையை முடிக்கும் போது, "பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதையேற்று, 9-வது உலகத் தமிழ் மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த அரசு முடிவு செய்துள்ளது' என்றார்.

இதன்பின், அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ""1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியதும் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, பல்வேறு நாடுகளிலும் தமிழகத்திலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் கோவை நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை... உலகத் தமிழ் மாநாடு குறித்து சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்புடன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1995-ம் ஆண்டு, தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது விழாவின் சிறப்பு அலுவலராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அப்போது செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அவரிடம் தலைமைச் செயலாளர் கேட்டறிந்ததாக, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டை நடத்துவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், பல்வேறு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.

--------

தினமணி தலையங்கம்: உலகளவு உவகை!
First Published : 18 Sep 2009 01:06:23 AM IST

இதனினும் இனியதொரு செய்தி இருக்க முடியாது. 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என்கிற அறிவிப்பு உண்மையிலேயே தேன்வந்து காதில் பாய்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

இப்போது பாரதி இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பார். பாரதிதாசன் வாழ்ந்திருந்தால் வாழ்த்தி மகிழ்ந்திருப்பார். தவத்திரு தனிநாயகம் அடிகள் கேட்டிருந்தால் பேருவகை அடைந்திருப்பார். இந்த ஒரு செய்தியைக் கேட்கத்தானே தமிழ் நெஞ்சங்கள் ஒரு மாமாங்கமாகத் துடித்தன.

உலகத் தமிழ் மாநாடு என்பது தவத்திரு தனிநாயகம் அடிகளின் எண்ணத்தில் மலர்ந்த அற்புதமான விஷயம். 1964-ம் ஆண்டு தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை ஆய்வு மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மொழி வல்லுநர்கள் வந்திருந்தனர். அந்த அறிஞர் கூட்டத்தில் தமிழ் மொழியின் சார்பில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜுன்பிலயோசா, இங்கிலாந்திலிருந்து டி. பர்ரோ, நெதர்லாந்திலிருந்து எல்.பி.ஜே. கைப்பர், ஜெர்மனியிலிருந்து ஹெர்மன் பெர்கர் போன்றோருடன் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசனார், வ.அய். சுப்பிரமணியம் மற்றும் தனிநாயகம் அடிகளார் போன்றோரும் இருந்தனர்.

அப்போது, தமிழுக்கென்று உலக மாநாடு ஒன்று நடத்த வேண்டும் என்கிற தனது எண்ணத்தைத் தவத்திரு தனிநாயகம் அடிகளார் வெளிப்படுத்தியது மட்டுமன்றி செயல்படுத்தவும் செய்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டதன் பின்னணி அதுதான். தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால்தான் முதல் தமிழ் மாநாடு 1966-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் கோலாலம்பூரில் கோலாகலமாகத் தொடங்கியது.

அந்த முதலாம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு முதல்வர் பக்தவத்சலம் மட்டும் செல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. நெடுஞ்செழியனும், தமிழரசுக் கட்சித் தலைவரான ம.பொ. சிவஞான கிராமணியாரும் ஏனைய தமிழறிஞர்களுடன் கலந்துகொண்டனர். இரண்டாண்டுக்கு ஒருமுறை இதேபோல உலகத் தமிழ் மாநாடு தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டபோது 1968-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம் ஏற்றுக்கொண்டு உறுதி அளித்தார்.

1968-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோதும், பக்தவத்சலத்தின் உறுதிமொழியை அரசியல் பாராட்டி உதாசீனப்படுத்தாமல் சி.என். அண்ணாதுரை தலைமையில் அமைந்த திமுக ஆட்சி நிறைவேற்ற முன்வந்தது. அதுமட்டுமல்ல, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமனின் முழு ஒத்துழைப்பும் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு இருந்தது. அவரே ஒரு கருத்தரங்கத்துக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர்கள் கு. காமராஜும், பக்தவத்சலமும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். கட்சி மனமாச்சரியங்களை மறந்து "தமிழ்' என்கிற பெயரில் அனைவரும் அண்ணாவுடன் கைகோர்த்து நின்று அந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை வெற்றியடையச் செய்தது தமிழர்தம் சரித்திரத்தில் அழியா நினைவு!

கடந்த உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்து முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள், ஆய்வேடுகள், அடுத்த தலைமுறை தமிழறிஞர்களின் பங்களிப்புகள் என்று மொழி வளம் பெற்றிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல உலகளாவிய தமிழ் ஆராய்ச்சிக்கு ஒரு பொதுமேடை கிடைத்தால் மட்டுமே, ஆரோக்கியமான தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

தவத்திரு தனிநாயகம் அடிகளை இந்தவேளையில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. முதல் நான்கு மாநாடுகளைச் சிறப்பாக நடத்திய பெருமைக்குரியவர் அவர். சிங்கள ஆதிக்கம் அதிகரிப்பதையும், அதனால் இலங்கையில் தமிழர்கள் இன்னலுறுவதையும் பொறுக்காத தனிநாயகம் அடிகள், இலங்கை அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டார். அதனால் அரசு அவரை காவல், கண்காணிப்பு என்று பயமுறுத்த எத்தனித்தது. உடனே, கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தான் தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டுத் தமிழகம் வந்துவிட்டார் தனிநாயகம் அடிகள். அதன் பிறகு அவரது வாழ்க்கை தமிழ், தமிழ் மொழி என்பதாகவே கழிந்தது.

ஒரு மொழிக்காக உலகளாவிய மாநாடு நடத்தும் முதல் முயற்சிக்குச் சொந்தக்காரர் தவத்திரு தனிநாயகம் அடிகள்தான். உலகிலேயே தமிழ் மொழிக்கு உலகளாவிய மாநாடு நடத்தப்பட்டதற்குப் பிறகுதான் சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாநாடுகள் நடந்தன.

ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு நடக்கும்போது, அந்தத் திடல் தவத்திரு தனிநாயகம் அடிகளின் பெயரால் வழங்கப்பட வேண்டும். அங்கே ஆய்வரங்கம் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த வ.அய். சுப்பிரமணியம் பெயரால் அமைய வேண்டும். மாநாட்டுப் பந்தல், நூற்றாண்டு விழா கண்ட அறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கி இருத்தல் வேண்டும். இவையெல்லாம் "தினமணி' சார்பில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கைகள்.

தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் தங்களது தாயகமான தமிழகத்தின்மீது குவிய இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை விடுத்து 1966-லும், 1968-லும் இருந்த தமிழ் உணர்வுடன் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியினருக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி!


மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை
Dinamalar

செப்டம்பர் 18,2009,00:00 IST

கோவை : கோவையில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவதாக அரசு அறிவித்திருப்பது, கொங்கு மண்டல மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு, வருகிற ஜனவரி, பிப்ரவரியில் கோவையில் நடக்கும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி அறிவித்த அறிவிப்பு, தமிழறிஞர்களை மட்டுமின்றி, கொங்கு மண்டல மக்களையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

தமிழ் ஆர்வலர்களாலும், தமிழறிஞர்களாலும் "முத்தமிழ் அறிஞர்' என்று அழைக்கப்படும் கருணாநிதி, முதல்வராக இருக்கும் போது நடத்தப்படும் முதல் உலகத் தமிழ் மாநாடு என்பதில் தி.மு.க.,வினரும் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழுக்கே மரியாதை அளிக்கும் கொங்கு மண்டல மண்ணில் இதுவரை தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்பட்டதில்லை. சர்வதேச அளவில் பஞ்சாலை நகராகவும், தொழில் நகரமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள கோவை மாநகரத்துக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பின்னிப் பிணைந்த தொடர்பு உண்டு. தமிழ்க் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் என்றென்றைக்கும் அங்கீகரிக்கிற பூமியாக கோவை திகழ்ந்துள்ளது. தொழில் மேம்பாடு, கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் அசுர வளர்ச்சி, வெளிமாநிலத்தவரின் குடியேற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு என சில பல காரணங்களால், சமீபகாலமாக கோவையில் தமிழுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதே உண்மை.

இந்த சூழ்நிலையில், கோவை நகரில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது, இங்குள்ள இளைய தலைமுறையிடத்தில் தமிழ்ப் பற்றையும், தமிழ்ப் பண்பாட்டையும் வேரூன்றச் செய்யும் என்று தமிழ் ஆர்வலர்கள் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்துகின்றனர். அது மட்டுமின்றி, இந்த மாநாடு காரணமாக கோவை நகருக்கு ஏராளமான வசதிகள் கிடைக்கும் என்பதும் கூடுதல் நன்மை. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்கங்களின் தலைவர்கள், மொழி வல்லுனர்கள் கோவைக்கு வருகை தருவர். கவியரங்கம், இயல், இசை, நாடகம், திரைத்துறை நிகழ்ச்சிகள், தமிழ் மொழி ஆய்வு அரங்கங்கள் என ஊரே பல நாட்களுக்கு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

மாநாட்டுக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, பல இடங்களில் புதிதாக சாலை, பாலங்கள், விடுதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கோவை நகருக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். முதல்வர், அமைச்சர்கள் பலரும் பல நாட்களுக்கு இங்கேயே முகாமிடுவர். அப்போது, கோவையில் பல்வேறு பிரச்னைகளும் அவர்களுக்கு தெரியவரும். நீண்ட காலமாக உள்ள பல பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மாநாடுக்கான அறிவிப்பு வந்து விட்டாலும், நடத்த வேண்டிய நிகழ்ச்சிகள், அதற்கான இடங்கள், தீர்மானங்கள் போன்றவை குறித்து முடிவெடுக்க சிறப்புக்குழு விரைவில் அமைக்கப்படும். செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த் துறை, தமிழ் வளர்ச்சித் துறை என பல்வேறு துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் தமிழறிஞர்கள் இதில் இடம் பெறுவர். கோவைக்கு இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதை விட, தமிழின வரலாற்றில் கோவை நகருக்கு நிரந்தரமான பெயரும் கிடைத்து விடும். பண்டிகைக்கு பல நாட்கள் இருந்தாலும் பந்தக்கால் நடப்பட்டு விட்டதால், இனி தினந்தோறும் திருவிழாக் கொண்டாட்டம்தான்.

கோவை மேயர் வெங்கடாசலம் கூறியதாவது: இந்த அறிவிப்பை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். கோவையில் நாங்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கும்போது, இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கு நாங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தமிழுக்கே பெருமை சேர்க்கும் முதல்வர் கருணாநிதி காலத்தில் நடத்தப்படும் மாநாடு என்பதால், இந்த மாநாடுக்கு இன்னும் அதிகமான பெருமை இருக்கிறது. கோவையில் இந்த மாநாடு நடப்பதால், கோவைக்கு சரித்திரப் புகழ் கிடைக்கும். சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது உருவான அண்ணா நகர்தான், இன்றைக்கு சென்னையில் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கிறது. அதேபோல, கோவை நகரில் இந்த மாநாடு நடக்கும் இடம், எதிர்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக மாறும். அடுத்த மாநாடு, எப்போது, எங்கே, எப்படி நடக்குமென்று தெரியாது என்பதால், இந்த மாநாட்டில் பங்கேற்கும் மக்கள், கொடுத்து வைத்தவர்கள்தான். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

எல்லா மாநாடுகளையும் மிஞ்சும்! கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பது குறித்து ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், கோவை மாவட்ட தி.மு.க., செயலாளருமான பொங்கலூர் பழனிசாமி கூறியதாவது: முதல்வரின் அறிவிப்பு, எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இது கோவைக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். கொங்கு மண்ணுக்கு மிகப்பெரிய பெருமையைச் சேர்க்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் கோவைக்கு வருவார்கள் என்பது மற்றொரு பெருமிதம். இதற்கான இடங்களைத் தேர்வு செய்வது, செய்ய வேண்டிய பணிகள் குறித்து, இனிமேல்தான் விவாதிக்க வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட 8 உலகத் தமிழ் மாநாட்டையும் மிஞ்சும் வகையில் மிகப் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் இதை நடத்தி முடிப்போம். இவ்வாறு அமைச்சர் பழனிசாமி கூறினார்.

கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் கூறியதாவது: உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்துவதாக முதல்வர் அறிவித்ததற்கு, கோவை மக்களின் சார்பில், எனது நன்றியை முதல்வரிடம் தெரிவித்தேன். எல்லாரும் பாராட்டும் வகையில், மாநாட்டை நடத்துவோம் என்ற உறுதியையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறேன். இந்த மாநாட்டை நடத்துவதற்கு கோவையில் எல்லாவிதமான வசதிகளும், பல்வேறு சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன. விமான நிலையம், சர்வதேச தரத்திலான ஓட்டல்கள், அரங்கங்கள் என எல்லா வசதிகளும் இருப்பதால், முந்தைய மாநாடுகளை விட சிறப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு கலெக்டர் உமாநாத் தெரிவித்தார்.

உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை

கடந்த 14 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு கோவையில் நடக்கவிருக்கிறது. தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடு. தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள், பண்பாடு, தமிழ் மொழி வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், கலைகள், மொழியியல் பற்றி இம்மாநாட்டில் புதிய உண்மைகள் வெளியாகும் என்பதால் தமிழ் அறிஞர்களிடமும் மாணவர்களிடமும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் கடின முயற்சியின் விளைவாக 1964ம் ஆண்டு, டில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்த வேண்டும் என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.

முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது.

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. நான்காவது தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.

ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. எட்டாது மாநாடு 1995ல் தஞ்சாவூரில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். இந்த மாநாட்டில்தான் முத்தமிழ் தவிர அறிவியல் தமிழ் ஒன்றும் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துவக்கத்தில் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள்தான் முடிவு செய்தனர். அப்போது அரசு வாயிலாக துவங்கப்படவில்லை. காலப்போக்கில் நிதி நெருக்கடி காரணமாக, அரசு உதவியின்றி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் மட்டுமே இம்மாநாடு நடத்துவது கடினமாகிவிட்டது. ஆகவே, தமிழக அரசின் நிதி உதவியை சார்ந்தே இம்மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றன.

பேரூர் மருதாசல அடிகள் வரவேற்பு: "தொன்மையான வரலாறும், சிறப்பான தமிழ்வழிபாடும் நடந்து வரும் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது,' என பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் கூறினார். முதல்வர் கருணாநிதி அறிவிப்பை வரவேற்று, பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் தெரிவித்ததாவது: தொன்மையான வரலாறும், சிறப்பான தமிழ்வழிபாடும் நடந்து வரும் கோவையில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோம், கிரேக்க நாடுகளிலிருந்து வணிகத்திற்காக வந்து சென்ற கோவையில் உலக தமிழ்நாடு மிகவும் சிறப்புடையதாகும்.

தமிழ்வழிக்கல்வி தழைத் தோங்கிட அரசு புதிய பாடநூல், பாடதிட்டங்களை உருவாக்கி, தமிழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கட்டாய தமிழ் கல்வி கொண்டு வர வேண்டும். தொன்மை மிகுந்த, பாடல் பெற்ற திருக்கோவில்கள் ஆகியவற்றில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப் படவேண்டும். இணைய தள வழியில் பிற மொழியினரும் எளிய வழியில் தமிழ் கற்க புதுப்புது மென்பொருள்களை உருவாக்க வேண்டும்; பழமையான தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பவர்களுக்கு பாராட்டு வழங்கி உதவித்தொகை வழங்க வேண்டும்; ஒருங்கிணைந்த ஓலைச்சுவடிகள் பட்டியலை அறிவித்திட வேண்டும்.

உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் சமுதாய, சமய தாக்குதலில் இருந்து காத்திட அரசு துணை நிற்க வேண்டும். அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் இன அடிப்படையில், தகுதிகளின் அடிப்படையில் நி யமனம் செய்திட வேண்டும். உலக பிரசித்த பெற்ற தமிழ்நூல்களை உலக மொழிகளில் வெளிவரச் செய்ய அறிஞர்களைக் கொண்டு முக்கிய நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும். அரசாணைகளை கட்டாயம் தமிழில் வெளியிடச் செய்வதோடு,அர சு அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும். தமிழ்வழி பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு, தொன்மையான சங்ககால தமிழிசை கருவிகளின் மாதிரி அருங்காட்சியம் அ� மத்தும், தமிழிசை கலைஞர்களுக்கு விருது வழங்கியும் அரசு சிறப்பித்திட வே ண்டும். இவ்வாறு, மருதாசல அடிகள் கூறினார்.

உலகத் தமிழ் மாநாடு இடம்; எகிறுகிறது எதிர்பார்ப்பு!

உலகத் தமிழ் மாநாடுக்கு இடங்களை தொலை நோக்குப் பார்வையுடன் தேர்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. வரும் ஜனவரி, பிப்ரவரியில் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்த மாத்திரத்திலேயே, கோவை நகரைச் சுற்றிலும் உள்ள இடங்களுக்கு புது மவுசும், கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் நகர பகுதிகளை விட்டு, புறநகரப் பகுதிகள்தான் மாநாடு அரங்கங்கள், உலகப் பிரதிநிதிகள் தங்குவதற்கான விடுதிகள், நுழைவாயில்கள் அமைக்கப்பட்டன.

சென்னையில் அண்ணாநகர் அப்போதுதான் உருவாக்கப்பட்டது. அந்த மாநாட்டுக்காக அப்பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது. அதன்பின், அந்தப் பகுதியில் குடியேற்றங்கள் அதிகரித்து, பிற வசதிகளும் செய்து தரப்பட்டு, பரபரப்பான நகரமாக உருவெடுத்தது. மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநாடு நடத்தப்பட்டது. அதற்குப் பின்பே, அப்பகுதி படிப்படியாக வளர்ச்சியைப்பெற்றது. தஞ்சைக்கும் உலகத் தமிழ் மாநாட்டினால் பல வித நன்மைகள் கிடைத்தன. இதேபோன்று, கோவையில் உலகத் தமிழ் மாநாடு நிகழ்ச்சிகளுக்காக தேர்வு செய்யப்படும் இடமும், எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்பது நிச்சயம். ஆனால், இந்த இடங்களைத் தேர்வு செய்வதில் நிதானமும், தொலை நோக்குப் பார்வையும் இருக்க வேண்டியது அவசியம். சுயநலத்தின் அடிப்படையில் ஒரே பகுதியில் இடங்களை தேர்வு செய்யக்கூடாது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இருப்பதால், பரவலாக நாலா திசைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதுவே, சமச்சீரான வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக அமையும். கோவையில், "கொடிசியா' அரங்கம், வ.உ.சி.மைதானம் உள்ளிட்ட பல முக்கிய அரங்கங்களும் அவினாசி ரோட்டிலேயே உள்ளன. விமான நிலையமும் இதே ரோட்டிலேயே உள்ளது. நட்சத்திர ஓட்டல்களும் இங்கேயே உள்ளன. எனவே, நீலம்பூர் பை-பாஸ் ரோட்டோரத்தில் காலியாகவுள்ள இடங்களில் மாநாடு நடத்துவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார் மூத்த அரசியல்வாதி ஒருவர். இந்தப் பகுதியை தேர்வு செய்வதற்கு, வேறு சில காரணங்களையும் சிலர் அடுக்குகின்றனர்.

உலகத் தமிழ் மாநாட்டில் ஒரு வாரத்துக்கும் அதிகமான நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், பல இடங்களில் நடத்தப்பட வேண்டும். பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பல ஆயிரம் பிரதிநிதிகளை தங்க வைப்பதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், தினமும் நிகழ்ச்சிகள் நடந்தாலும் மாணவ, மாணவியரின் கல்வி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. எனவே, புறநகரில் ஒரே பகுதியாக இல்லாமல், சத்தி ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு என நாலாபுறங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதற்கான அடிப்படை வசதிகளையும் அந்தந்த பகுதியில் ஏற்படுத்த வேண்டும். கொடிசியா, மாநகராட்சி கலையரங்கம், விஜயா கண்காட்சி அரங்கம் என உள்ளரங்க நிகழ்ச்சிகளையும் திசைக்கு ஒன்றாக நடத்தும்போது, எல்லாப் பகுதியையும் மேம்படுத்துகிற கட்டாயம் ஏற்படும். மாநாட்டுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருந்தாலும், ஓரிரு வாரங்களிலேயே இதற்கான பணிகள் துவங்கி விடும் என்பதால், இப்போதே மக்களிடம் எதிர்பார்ப்பு எகிறத் துவங்கி விட்டது.

3 comments:

you know who said...

/தவத்திரு தனிநாயகம் அடிகள் கேட்டிருந்தால் பேருவகை அடைந்திருப்பார். இந்த ஒரு செய்தியைக் கேட்கத்தானே தமிழ் நெஞ்சங்கள் ஒரு மாமாங்கமாகத் துடித்தன./

வெட்கம் கெட்ட வார்த்தைககள். நூலகம் எரிந்ததே என்று இறந்த தனிநாயகம் அடிகள், ஈழத்தமிழர்களை நாய்போல கொல்லென்று வழி நடத்தும் கருணாநிதி என்ற நவீனபார்ப்பனியச்செம்புதூக்கியின் இந்தக்கூத்தினையா கண்டு பேருவகை அடைந்திருப்பார்? தினமலருக்குத் தமிழ் வளர்ச்சியிலே வந்த ஆர்வப்போலியை விட தினமணியின் இந்த வார்த்தைகளிலே கசடு தவழ்கிறது. தமிழாராய்ச்சி மகாநாடுகளின் பேரிலே தமிழக ஆட்சியாளர்கள் ஈழத்தமிழரை நாய்போல நடத்தியதைத் தவிர எதையும் செய்யவில்லை. எதற்கு இன்னும் சுப. வீரபாண்டியன் இந்த ஆளைத் தலையிலே தூக்கி வைத்து ஆடுகிறார்?

Anonymous said...

மாநாட்டின் இறுதிநிகழ்வன்று 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களுக்காக நிறுவப்பட்ட மிக எழிய நினைவுத்தூபியைக்கூட ஸ்ரீலங்கா பொலிஸ் பலமுறை உடைத்தனர்.
அன்றைய கொலைகளுக்குப் பொறுப்பாக இருவரை தமிழ் இளைஞர்கள் குற்றம் சாட்டினர். ஒருவர் பொலிஸ் ஏ.ஸ்.பி சந்திரசேகரா, மற்றவர் யாழ்ப்பாண மேயர் துரையப்பா. இவரில் சந்திரசேகராவைக் கொல்ல பலமுறை முயன்று தோற்ற சிவகுமாரன் பொலிஸின் கைகளில் பிடிபடாமல் சயனைட் உட்கொண்டு இறந்த முதல் போராளி. பின்னர் துரையப்பாவை கொன்று முதல் அரசியல் கொலையை நடாத்தியது பிரபாகரன்.
அண்மையில் இந்தியாவில் 1995 ல் நடந்த மாநாட்டுக்கு வந்திருந்த பேராசிரியர் சிவத்தம்பியை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியவர் ஜெயலலிதா. இம்மாநாட்டினைப்பற்றி கருத்துத்தெரிவித்த ஜப்பானிய தமிழ் ஆர்வலரும் பெராசிரியரும் மிக அருவருப்பான மாநாடு எனக் கூறினர்.
இப்போது கருணாநிதி!ஈழத்தமிழர்களுக்கு இவை எல்லாம் வேதனையான வேடிக்ககள்!

Anonymous said...

தஞ்சை தமிழ் மாநாட்டின்போது அவமானப்படுத்தப்பட்டது பேராசிரியர் சிவத்தம்பி மட்டுமல்ல, சுவீடன் நாட்டுத் தமிழறிஞர் பீட்டர் ஷால்க் அவர்களும். அப்போது இதைச் செய்தது ஜெயலலிதா அரசாங்கமும், நரசிம்மராவ் அரசாங்கமும். இப்போது செய்யப்போவது கருணாநிதியும்-சோனியா காந்தியும் இணைந்து. தமிழர்கள் கொஞ்சம் தூங்கினால் ராஜபக்ஷவையும் கூட சேர்த்துக்கொள்வார்கள்.