விண்டோஸ் 7.0ல் தமிழ் ஓம் எழுத்து

சென்ற மாதம் புதிதாய் விஸ்டாவில் இயங்கும் ஒரு கணினி வாங்கினேன். அதில் தமிழ் ஓம் (U+0BD0) காணவில்லை. ஏனென்று மைக்ரோஸாப்ட் நிறுவனத்தாரை வினவினேன். ஆண்ட்ரூ கிலாஸ் (இவர் தமிழ் பிரமி உட்பட அசோகச் சக்கிரவர்த்தியின் பிராமி எழுத்துக்களை யூனிகோடில் சேர்த்தவர்) எழுதிய பதிலில் விண்டோஸ் 7.0லிருந்து தமிழ் ஓம் இலங்கும் என்று அறிவித்தார்: "Vista was released before Unicode 5.1 and the version of the Latha font that ships with it dates from that time.

Tamil OM has been added to the version of the Latha font that will ship with Windows 7."

சிந்து சமவெளி நாகரீகத்தில் தொல்திராவிடர் பங்கைப் பற்றி விரிவாக ஆராய்ந்த ஆஸ்கோ பார்ப்போலா அவர்களின் முக்கியமான கட்டுரை (1980) ஓம் என்னும் பிரணவ மந்திரம் தமிழுடன் தொடர்புடையது என்பதாகும்.

Asko Parpola, "On the Primary Meaning and Etymology of the Sacred Syllable OM", Studia Orientalia (Finnish Oriental Society) vol 50, 1980. Parpola's Om thesis:
Om's original meaning: Om in the Vedic ritual = 'yes', om = tathâ = 'yes' also in ordinary conversation, and in the Chandogya Upanishad ôm is expressly said to be a word expressing agreement. Etymology: < Dravidian âm < âkum 'yes' < 'it is (fitting, suitable)', â labialized by the following m as Jaffna Tamil ôm < âm.

Parpola Om

ஓம் என்பதன் திராவிட மூலம் காண யாழ்ப்பாணத் தமிழ் எவ்வளவு உதவுகிறதோ, உவன், உவள், உது என்னும் சங்க வழக்கின் பழமை இன்னும் ஈழத்தமிழில் எவ்வாறு வாழ்கிறதோ, அது போலவே ககரத்தின் ஹகர ஒலிப்பும் (voiceless dorso-velar fricative) தெளிவாக ஈழத்தமிழில் இருக்கிறது. பாரதத்தில் தோன்றிய அனைத்துச் சமயங்களிலும் ~ வைணவம், சைவம், சீக்கியம், சமணம், பௌத்தம், ... ~ தியான மந்திரமாய் ஓங்காரம் திகழ்கிறது. தமிழில் அழகான ஓம் என்னும் குறியுண்டு என்று உலகுக்கு அறிவிக்க அரிய வழியிது என்று கருதி யூனிக்கோடில், இந்தி ஓமுக்கு சரியிணையாகத் தமிழ் ஓம் வைத்திட இண்பிட் முன்னிகை (proposal) தயாரித்தேன். இளைய தலைமுறை தமிழின் ஓம் எழுத்தைக் கூகுள் போன்ற தேடெந்திரங்களில் துழாவிப் பார்க்கலாம். இந்தி வலைத்தாளைத் தமிழ் எழுத்தாக்கும்போது இந்த ஓம் ((U+0BD0) இந்தி ஓமின் சரிநிகர் சமானமாகக் காலமெல்லாம் கணினிகளில் பயன்படும். தமிழ்நாட்டிலே, கோயிற் கருவறைகளில் கூட, டி-சட்டைகளிலும் இந்தி ஓம் போட்டுக்கொண்டு திரிவது பரவிவருகிறது. இதனை வடநாட்டார் செய்தால் பரவாயில்லை. ஆனால் சாமியார்கள் நடத்தும் 'திடீர்' யோகா வகுப்புகள், ... போன்றன பரப்புவதால் தமிழ் மக்களுக்கு இந்தி ஓம் தான் ஓம் என்றாகிவிடும் அன்றோ? தற்காலத்தில் தமிழ்நாட்டு நகர்ப்புறக் கோயில்கள் சிலவற்றில் திருவுண்ணாழியின் முகப்பில் இந்தி ஓம் காண்கிறோம்.

ஓங்கார எழுத்து அகர, உகர, மகரங்கள் கொண்டது என்று திருமூலர் பல திருமந்திரப் பாடல்களில் அறிவித்துள்ளார். பழங்காலத்தில், ஓகார நெடிலெழுத்துக்கு அடிச்சுழியில்லை, வீரமாமுனிவர் (Constantino Giuseppe Beschi, 1680-1747 CE) ஓகார நெடிலை ஒகரக் குறிலில் இருந்து வேறுபடுத்த ஓ என்று எழுதிச் (சுழி ஒன்றைக் கடைசியில் இட்டு) முதன்முதலாய்க் காட்டினார். அதுவே இன்று நிலைத்துவிட்டது. முற்காலத்தில் ஓ எழுத்தின் பக்கத்தில் அநுஸ்வாரம் என்னும் ஒரு சிறு பூச்சியம் இருக்கும். இச்சிறு வட்டம் மலையாள ஓமில் இன்னும் உண்டு. இத் துவாரம் ஓலைகளை அழிக்கும் என்பதால் எழுதாது விட்டு வெறும் ஒ எழுதி ஓம் என்று பனையேடுகளில் படித்தனர். ஒகர உருவம் மருவி உருவானது தான் பிள்ளையார் சுழி (உ).

20-ஆம் நூற்றாண்டில், கோவில் ராயகோபுரங்களிலே ஓம் ஓரெழுத்தாக மகர மெய் உள்ளடங்கி உருவாகியதைப் பார்த்திருப்பீர்கள். "வடமொழியில் நமஸ்தே/நமஸ்காரம் என்பதற்கு இணையான சொல் தமிழில் உண்டு, அது வணக்கம் என்பதாகும்" என இன்றைய வடக்கே இந்தி பேசுவோர் கூடத் தெரிந்து வைத்துள்ளனர். அதுபோல் தமிழ்த் தெய்வம் முருகனுக்குத் தமிழ் ஓம் இருந்தால் நல்லது, மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் மறக்காது என்று முயற்சி மேற்கொண்டேன். அதன் பலன் விண்டோஸ் 7.0 மூலமாகக் கிடைத்துள்ளது.

n3119

9 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி ஐயா,
அருண்

மாயா said...

தகவலுக்கு நன்றி

Anonymous said...

பயனுள்ள பதிவு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிறுதுளி பெருவெள்ளம்...
Little drops of water
Make a mighty oceanன்னு சொல்வாய்ங்க கணேசன் ஐயா! நீங்கள் மைக்ரோஸாப்ட்-டை வினவி இதைச் சேர்க்க உதவியதும் சிறுதுளி பெருவெள்ளம் தான்!

ஓம் என்பது அ+உ+ம காரங்களின் சேர்க்கை! மூன்று எழுத்து போலத் தெரிந்தாலும், அஃது ஓரெழுத்தே (ஏகாட்சரம்)!
இந்த ஓம் என்பதற்குத் தனியான எழுத்துரு இல்லை என்றாலும், வழக்கத்தில் ஓ-காரத்தைச் சுழித்து ம்-இடுவது மிகவும் பிரபலம்!

அதை இனி ஒருங்குறியிலும் செய்ய முடியும் என்பதை அறியும் போது மெத்த மகிழ்ச்சி!

//20-ஆம் நூற்றாண்டில், கோவில் ராயகோபுரங்களிலே ஓம் ஓரெழுத்தாக மகர மெய் உள்ளடங்கி உருவாகியதைப் பார்த்திருப்பீர்கள்//

இன்றும் திருவரங்கம், திருச்செந்தூர் முதலான தலங்களில் ஒன்றுபட்ட எழுத்துருவான ஓங்காரத்தைக் காணலாம்!

//அதுபோல் தமிழ்த் தெய்வம் முருகனுக்குத் தமிழ் ஓம் இருந்தால் நல்லது//

தமிழ்க் கடவுள் மாயோனான திருமாலுக்கும் தமிழ் ஓம் தான் மிகவும் பிடிக்கும்! :)

//மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் மறக்காது என்று முயற்சி மேற்கொண்டேன்//

முயற்சி "திரு"-வினை ஆகியது கண்டு "திரு"-மால் அடியவர்களின் மட்டில்லா மகிழ்ச்சி! :)

கோவி.கண்ணன் said...

பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள் !

நிகழ்காலத்தில்... said...

\\ஏனென்று மைக்ரோஸாப்ட் நிறுவனத்தாரை வினவினேன்.\\

(தமிழ்மணம்)சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்டமைக்கு வாழ்த்துக்கள்

மகிழ்நன் said...

பிரணவ மந்திரங்கிறது தமிழா?
என்னே தமிழறிவு

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிரணவ மந்திரங்கிறது தமிழா?
என்னே தமிழறிவு//

ஐயா மகிழ்நரே!
பிரணவம் என்னும் மந்திரம் தமிழ் இல்லை என்றாலும்,
"ஓம்" என்ற கருத்தும் பொருளும் தமிழ் தான்!

மந்திரத்தை மட்டுமே பாத்து பாத்து, அதே மாயையில் சிக்கியதால் வந்த கேள்வி!
கரிகாலன் II என்று எழுதினால் II தமிழா என்று கேட்பது போல் இருக்கு! :)

கணேசன் ஐயாவின் தமிழறிவைப் பற்றிப் பேசும் முன்னர், உங்களின் தமிழறிவையும் அளந்து கொண்டு அல்லவா வழக்குரையாட வேண்டும்?
இல்லை இது எப்படி தமிழ் ஆகும் என்றாவது கேளுங்கள்! என்னே தமிழறிவு என்று அறியாத்தனமாய்க் கேட்காதீர்கள்!

மகிழ்நன் said...

சரிங்கய்யா, மன்னிச்சுடுங்க
//"ஓம்" என்ற கருத்தும் பொருளும் தமிழ் தான்!//

ஓம் என்ற சொல்லின்(சொல்லா?)

பொருள் மற்றும் கருத்து என்ன? அதன் உள்ளடக்கம்என்ன? பயன் என்ன?