2009-ல் தமிழ்மணம் கமழ்க!

மணக்கின்ற தமிழே!

மணக்கின்ற தமிழே! உன்னை
மறைக்கின்ற நிழல்கள் தன்னைத்
தணக்கின்ற சொல்லால் சாய்த்துத்
தடுக்கின்ற ஆற்றல் போலக்
குணத்திடும் இணையம் தன்னில்
கோபுரம் போல ஓங்கி
மணத்திடும் "தமிழ்ம ணத்தை"
மாண்புறச் செய்தோர் வாழ்க! (1)

இணையத்தில் எழுது கின்ற
இன்றமிழ் இலக்கி யத்தை
இணையற்ற தொகுப்பா யாக்கி
ஈன்றநம் தமிழ்க்கு நல்கும்
பணியினைச் செய்ய வேண்டும்!
பாரெலாம் வியந்து நோக்கத்
துணிவுடன் தமிழ்ம ணத்தைத்
தூயதாய்ச் செய்தல் நன்றாம்! (2)

புகைந்திடா நெருப்பைப் போலப்
பூத்திடாப் பூவைப் போல
அகழ்ந்திடக் கிடைக்கும் நல்லோர்
அணிந்திடும் அறிவைத் தேடிப்
பகிர்ந்திடும் பணியைச் செய்யும்
பண்பினைப் பெறுதல் என்றால்
உகந்திடும் உவகைக் காக
ஒன்றியம் ஒன்றைச் செய்வீர்! (3)

செல்லுகள் அரித்த ரித்துச்
சிதைந்திடும் தமிழர் தம்மின்
தொல்லகப் படைப்பை யெல்லாம்
தூயதாய் மீட்டெ டுக்கும்
நல்லகர் அணியை ஆங்கு
நடத்திட வேண்டு கின்றேன்!
வல்லவர் குறைந்து போனால்
வதைபடும் தமிழும் என்னும் (4)

உண்மையைத் தமிழர் தாமும்
உணர்ந்திடச் செய்தல் வேண்டும்!
புண்ணிய தீர்த்தந் தேடிப்
போவது போலச் சென்று
மண்ணிலே மறைந்து போகும்
மணித்தமிழ்க் கலைகள் தம்மை
வண்மையாய் வாங்கி வந்து
வாழ்ந்திடச் செய்வோம் வாரீர்! (5)

ஒன்றியம் தன்னைப் போல
உருப்பெறும் தமிழ்ம ணத்தை
வென்றிடச் செய்ய வாரீர்!
விருதுகள் பலவும் பெற்றுச்
சென்றிடும் மகிழ்வு கொண்டு
செந்தமிழ்ப் பணிக்கு வாரீர்!
முன்றிலின் இணையந் தன்னில்
மொய்த்திடச் செய்வோம் வாரீர்! (6)

      இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: http://groups.google.com/group/thamizayam/topics?gvc=1தமிழ்மணம் சிறந்து வாழ்க!

தமிழ்மணம் கமழ வேண்டும்
தாரணி புகழ வேண்டும்
கமழுல கெல்லாம் நின்று
கற்றவர் குழும வேண்டும்
அமிழ்தினும் இனிய நீதி
அகிலெனப் பரவ வேண்டும்
சுமையெலாம் இறக்கி வைக்கும்
சுமைதாங்கி ஆக வேண்டும்!

உன்றனைக் கண்டேன் உள்ளம்
ஒளிபெற நின்றேன் வையப்
பொன்தடம் பதிந்த தாலே
பூமியை வென்றேன் என்பேன்
மன்பதை மனித மாண்பு
மகத்துவத் துள்ளோர் எல்லாம்
இன்பொடு ஒன்றாய் நின்றார்
இதுபுது உலகம் என்பேன்!

காலத்தை வென்ற நீதி
களிநடம் புரியும் வீரர்
பாலமாய்ச் சுமக்கும் பூமி
பட்டொளிக் கொடியே வீசும்
ஞாலத்தின் புதிய நாடு
நயமிடத் தமிழ்ம ணத்தின்
சீலமே உலகை ஈர்க்கச்
செய்திடும் ஆண்டாய் வாழ்க!!

    - நம்நாடு புதியபாரதி இணையம்

உலகை இணையம் இணைக்கும்;
உலவு பவரைப் பிணைக்கும்;
இலகு வாக எதுவும்
எவரும் சொல்ல உதவும்;
பலரும் பகலும் இரவும்
படித்து மகிழ்ந்து பரவும்
வலையின் துணையும் கொண்டே
வளர்வோம்; வரையும் உண்டே?
~ வி. சுப்பிரமணியன்


தமிழ்த்தாயின் இணையக்கோயில்!

இணையறியா எழிலுறுநன் னூல்கடிரு மேனிதனில் இழையாய்ப் பூண்டு
துணையதுவே என்றறிஞர் துருவுநிகண் டகராதி தொடையாச் சூடிக்
கணையனகூர் மதிபெருகக் கணினிவழி வலையுலவிக் கற்போர்க் கேற்ப
இணையமிதோர் இல்லமெனத் தேர்ந்துதமிழ்த் தாயேயீண் டிலங்கு வாயே.

பதம் பிரித்து:

இணை அறியா எழில் உறு நல் நூல்கள் திருமேனி தனில் இழையாய்ப் பூண்டு
துணை அதுவே என்று அறிஞர் துருவும் நிகண்டு அகராதி தொடையாச் சூடிக்
கணை அன கூர் மதி பெருகக் கணினி வழி வலை உலவிக் கற்போர்க்கு ஏற்ப
இணையம் இது ஓர் இல்லமெனத் தேர்ந்து தமிழ்த் தாயே ஈண்டு இலங்குவாயே.

                ~ வெண்பாவிரும்பி

 தமிழ் மணமே!!

தமிழ் நண்பர்களைத் தேடி
அலையும்போது
உன்னைக் கண்டோம்!!

இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!

எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்!!

கருத்து சுதந்திரம்
கொடி கட்டிப்
பறக்கக் கண்டோம்!!

கவிதைகள்
இங்கு களிநடம் புரியும்
கோலம் கண்டோம்!!

உலகமே திரண்டு
உள்ளங்கையில்
உருளக் கண்டோம்!!!

தரணித் தமிழர்
ஒன்றாய்க் கூடி
உவக்கக் கண்டோம்!!!

தமிழர் அனைவரும்
தமிழில் எழுதும்
கனவைக் கண்டோம்!!

எழுத்தில் வாராக் கருத்தை
எல்லாம்
உன் அகத்தில் கண்டோம்!!!

புத்தாண்டு சிறக்க

வாழ்த்துக்கள்
பலர்
வழங்கக் கண்டோம்!!

உன்னை மறவாமல்
உன்னையும்
வாழ்த்த
உள்ளம் கொண்டோம்!!!!


இந்த புத்தாண்டில்
தமிழ்மண நிர்வாகிகளுக்கும்
தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
தமிழ்மணத்தை
மேலும் சிறப்பாக
வழிநடத்திச்செல்ல
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!


தேவா.....

2 comments:

இவன் said...

வாழ்துவோர் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அண்ணா!

TamilBloggersUnit said...

வாழ்துவோர் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அண்ணா!