இழுக்கம் எனுஞ் சொல்லின் முதன்மைப் பொருள் - திருக்குறள் முதலாய இலக்கியங்களில்.
அறம் X மறம், அன்பு X வன்பு, ஒழுக்கம் X இழுக்கம் ... இவையாவும் முழுமையான எதிர்ப்பதங்கள் ஆகா. சொற்களின் பொருளைக் கூர்ந்து ஆய்ந்தால் உணரலாகும். காட்டாக, இழுக்கம் என்ற சொல்லின் முதன்மைப் பொருளை, இலக்கியங்கள், பண்டைப் பெரும்புலவர்களின் உரைகள், அகராதிகள் என்ன தருகின்றன எனப் பார்க்கலாம். The above pairs are obviously chosen for their rhyming pattern, but they are not exact opposites. English professor, Harold Bloom has written extensively on Shakespeare who is the father of modern English. In the same sense, Kavichakravarthi Kampan is the father of modern Tamil. Kampan posits "aRam" vs. "maRam" in his epic. For "aRam", there is Sri Rama, where as for "maRam", there is Ravana of Lanka (< arangam). Even though this is poetic explanation, we know that "aRam" and "maRam" are NOT opposed to each other. For example, Mahendra Pallavan or Rajaraja Chozha Devar, or his son with a mighty Navy were practising both "aRam" and "maRam". Let me give two of Kampan verses. வருவித்துரைத்தல் உத்தியால் ஒழுக்கம் எனும் சொல்லை இழுக்கம் முன்னால் பெய்வர். புலவர் குழந்தையின் தமிழர் வாழ்த்தும் முக்கியமானது.
தொல்காப்பியர் கூறும் இழுக்கம் என்ற சொல்லின் பொருள், வழு (அதாவது, தவறு, பிழை, தப்பு) என்று பவணந்தி முனிவர் ஒரு நூலுக்கான 10 சிதைவுகள் எவையென விளக்கியிருக்கிறார். இந்த அரிய தொல்காப்பியம்-நன்னூல் தொடர்பை இவ்விழையில் பார்த்தோம். செய்யுள்களில் சொல்லை வருவித்துப் பொருள்கொள்ளுதல் ஆயிரக் கணக்கான உதாரணங்களில் உண்டு. எதுகையால் ஏற்படும் ஓசை நயத்துக்கு, ஒழுக்கம், இழுக்கம் என ஒரு குறளில் வருகிறது. அப்போது, (ஒழுக்க நெறியினின்று) இழுக்கம் என்று வருவித்து உரைப்பர் உரைகாரர்கள். சொல்லெச்சம் என்பர் இலக்கணிகள்.
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் - குறள் 81:8
பொழிப்பு (மு வரதராசன்): பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
*இழுக்கம் = தப்பு*
மணக்குடவர் உரை: நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம்.
இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து
*இழுக்கம் = தப்பு*
மணக்குடவர்: ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை அறிந்து என்றவாறு.
இஃது, அதனை அறிவுடையார் தவிரார் என்றது; குற்றம் வருதல் பின்னே காணப்படும்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தா பழி - குறள் 14:7
பொழிப்புரை: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
பதவுரை:
ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினால்; எய்துவர்-அடைவராவர்; மேன்மை-உயர்வு; இழுக்கத்தின்-தவறுதலால்; எய்துவர்-அடைவர்; எய்தா-அடைவதற்கு உரித்தல்லாத; பழி-பழிக்கப்படுதல்.
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.
மணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.
ஒழுக்கத்தின் ஒல்கார் எனத் தொடங்கும் குறளில், இழுக்கம் = தப்பு எனக் கூறிய மணக்குடவர், இங்கே இழுக்கம் = தப்பி ஒழுகுதல் என்றார்.
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5
மணக்குடவர் உரை: வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்.
இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
இழுக்கா (3)
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் - குறள் 4:5
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு - குறள் 39:4
இம்மூன்று குறளிலும், ஆ என்னும் எதிர்மறையிடைநிலை உள்ளது.
இழுக்கா = தவறாத/தப்பாத/வழுவாத/பிழையாத
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை:
மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும். (மு.வ.)
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை (பரிமேலழகர்)
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு
இழுக்கா = தப்பாத (மணக்குடவர் உரைக்கிறார்):
அறத்தில் தப்பாமல் ஒழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்தில் தப்பாத மானத்தையுடையவன் அரசன்.
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான். (மு.வ.)
இழுக்காமை
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6
மணக்குடவர்: யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை.
இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
இழுக்கார்
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
மணக்குடவர்: ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.
இழுக்கியான்
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் - குறள் 54:5
இக்குறளின் மணக்குடவர் உரை கிடைக்கவில்லை. தமிழின் போகூழ் காரணமாக.
பரிப்பெருமாள்: எதிரது ஆகவே பழிவரும் வழியைக் காவாதே அதனை இகழ்ந்து தப்பச் செய்தவன்;
வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து தவறியவன், பின்பு அவை வந்துற்றபோது தன் தவறு நினைந்து இரங்குவான்.
இழுக்கம் என்ற பழஞ்சொல்லின் முதற்பொருளை ஆராய விரும்புவோர் மேலே உள்ள எல்லாக் குறளும், பழைய உரைகளும் ஊன்றிக் கற்க. ஒரு சில காட்டுகிறேன். தொல்காப்பிய நூற்பாவுக்கு, பவணந்தியாரின் குறிப்புரையாக அமைந்துள்ள நூற்பாவும் கொடுத்துள்ளேன். தொல்காப்பியர் நூற்சிதைவு 10 என்பவை எல்லாவற்றையும் நன்னூலார் ஆள்கிறார்.
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
இக்குறளில் ஒழுக்க நெறியில் இருந்து தவறுதல் (= இழுக்கம்) எனப் பொருள் தருகின்றனர். (ஒழுக்க நெறியில் இருந்து) இழுக்கம் = தவறுகை. *ஒழுக்க நெறியிலிருந்து* என்பதை வருவித்து உரைப்பதால், இதற்குச் *சொல்லெச்சம்* என்கிறது தமிழ் இலக்கணம். ஒப்பீடு: “பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேரா தவர்.” *சேர்ந்தார்* எனச் சொல்லெச்சம் கொண்டு உரைகூற வேண்டியுள்ளது. -பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (இறைவனடி சேர்ந்தவர்) - இங்கே சேர்ந்தவர் என்னும் சொல் வருவித்து விரிக்கிறோம் (பரி.). அதே போலத் தான், ”ஒழுக்கம் உடைமை குடிமை; (ஒழுக்க நெறியினின்றும்) இழுக்கம் (= தவறி நடத்தல்) இழிந்த பிறப்பாய் விடும்” -குறள்.
இழுக்குதல், இழுக்கம், இழுக்கா (எதிர்மறையிடைநிலை) நிகழும் திருக்குறள்களில் இவற்றின் முதன்மைப் பொருளைப் பண்டை உரையாசிரியர்களைக் கொண்டு நிர்ணயிக்கலாகும். உ-ம்: முதல் உரைகாரர் மணக்குடவர். வள்ளுவரும், மணக்குடவரும் ஒரே சமயத்தார். படிமையோன் என்பது அச்சமயத்தவர் பற்றிச் சொல்கையில் பயன்படுத்துவர் (தொல். பாயிரம்). 1,2, ... 6 அறிவு பற்றி வகுத்தவரும் அச்சமயத்தவரே. வள்ளுவர்-மணக்குடவர் சமயத்தார் தமிழை இலக்கிய, இலக்கண மொழியாக்கிய வரலாற்றை, ஐராவதம் மகாதேவன், ஹார்வர்ட் பல்கலை நூலில் கற்றறியலாம். http://nganesan.blogspot.com/
அடைப்புக் குறிகள் உள்ளிட்ட தரிப்புக்குறிகளை அறிமுகப்படுத்திச் சொற்களுக்கு நடுவில் இடைவெளி கொடுத்து, காகிதத்தில் அச்சிடும் தொழில்நுட்பத்தைக் கொணர்ந்தவர்கள் ஐரோப்பியர் (16-ம் நூற்றாண்டில்). சொல்லெச்சம் எனும் வருவித்து உரைத்தல் செய்யும்போது, அடைப்புக்குறி (Brackets) கொடுத்துத் தெளிவாக்குகிறார் லசாரஸ். பழம்பெரும் புலவர்களிடம் தமிழ் கற்று எழுதிய திருக்குறள் உரை:
The Kural of Tiruvalluvar: With the Commentary of Parimelazagar and a Simple and Clear Padavuray; to which is Added an English Translation of the Text by J. Lazarus. ஊ. புஷ்பரத செட்டி, 1885.
https://books.google.com/
மணிமேகலைக் காப்பியத்தில் இருந்து உதாரணம், 1943-ம் வருட நூல்: https://tamildigitallibrary.
MTL: இழுக்கம் iḻukkam , n. இழுக்கு-. 1. Fault, offence, transgression; பிழை. நாளிழுக்க நட்டார் செயின் (குறள், 808). 2. Violation of social and caste rules; ஒழுக்கந்தவறுகை. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 3. Ignominy, discomfiture; ஈனம். மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றி னும் (கம்பரா. அயோத். மந்திர. 42).
https://books.google.com/
இழுக்கம் - குறை, தப்பிதம், தளர்வு, தவறு, தாமதம், பின்வாங்குதல், வசை, வழிவிலகுதல்.
==================
-ஆ என்னும் எதிர்மறை இடைநிலை உள்ள குறள்களை வாசித்தால், இழுக்கம் = தவறு என்பது முதன்மைப்பொருள் என அறியலாம்.
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
*இழுக்கா* இயன்றது அறம் - குறள் 4:5
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந்த நான்கனையும் *இழுக்காது (=தவறாது)* இயன்றது அறம் .
ஆற்றின் ஒழுக்கி அறன் *இழுக்கா* இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
அறன் *இழுக்கா* இல்வாழ்க்கை = அறத்தைத் *தவறாத/வழுவாத/பிழையாத/தப்பாத* இல்வாழ்க்கை
அறன் *இழுக்காது* அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு
===============
பழமொழி நானூறு:
சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
பட்ட *இழுக்கம்* பலவானால் - பட்ட
பொறியின் வகைய கருமம்; அதனால்,
'அறிவினை ஊழே அடும்'.
மிக்க அறிவோரும், *தவறான* காரியங்களைச் செய்ய நேர்தல், ஊழ்வசத்தின் காரணமாகவே என்பது சொல்லப்பட்டது. பொறி - தலை எழுத்து எனவும் சொல்வர். 'இழுக்கம்' (= தவறு) - விருத்தம் என்றும் பாடபேதம். 'அறிவினை ஊழே அடும்' என்பது பழமொழி. 'பொறியின் வழிய கருமம்' என்பதும் ஒரு பழமொழியாகக் கருதலாம். - புலியூர்க் கேசிகன்.
பொறி என்றால் விதி (தலையெழுத்து) என்று இந்தப் பழமொழி வெண்பாவைக் காட்டி, கற்பொறி - நடுகல் எழுத்து என்று இருத்தல் அருமை என்பார் புலவர் செ. இராசு. இந்தியாவின் ஒரே நடுகல் கல்வெட்டு உள்ள பழமங்கலம் (மொடக்குறிச்சி வட்டம், ஈரோடு மாவட்டம்). இதன் இறுதியில், “இக் கற்பொறி இரக்ஷிப்பான் ஶ்ரீபாதம் என் தலைமேலே.” என வருகிறது, https://groups.google.com/g/
===================
ஏலாதி 62:
கூத்தும் விழவும் மணமும் கொலைக்களமும்
ஆர்த்த முனையுள்ளும் வேறிடத்து மோத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின்
*இழுக்கம்* இழவும் தரும்
கூத்தாடுமிடம், விழா நடக்குமிடம், திருமணம் நடக்குமிடம், மன்னன் குற்றவாளியைக் கொல்லும் இடம், ஆரவாரமுள்ள போர்க்களம், பழக்கம் இல்லாத புதிய இடம். இவற்றுக்கெல்லாம், வேதமும், (வேத நெறி நிற்கும்) ஒழுக்கம் உடையவர் செல்ல மாட்டார். அவ்வாறு சென்றால், (மறை ஒழுக்கத்தினின்றும்) தவறுதலும், பொருள், உயிர் இழப்பும் வரும்.
(1)> (வேதநெறி) ஒழுக்கம் உடையவர், (2) (மறை ஒழுக்கத்தினின்றும்) இழுக்கம் .
அடைப்புக்குறிக்குள் இருப்பன வருவித்து உரைப்பவை. சொல்லெச்சம் என்பர்.
இங்கே இழுக்கம் = தப்பி நடத்தல்.
http://vaiyan.blogspot.com/
===============
இழுக்கம் == தவறு. இதனை, இழுக்கம், இழிவு இரண்டு சொல்லையும் தமிழ்மக்களைப் பாடும் விருத்தத்தில் ஒரே வரியில் பயன்படுத்தி வேறுபாட்டை விளக்குகிறார் புலவர் அ. மு. குழந்தை. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - குறள்.
தமிழ் மக்கள் :
ஒழுக்க மென்ப துயிரினு மேலதன்
இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப்
பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்
வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவோம்!
சொற்பிரிப்பு
ஒழுக்கம் என்பது உயிரினும் மேல்; அதன்
இழுக்கம் போல் இழிவில்லை எனும் சொல்லைப்
பழக்கம் ஆக்கிப் பயின்று பயின்று உயர்
வழக்கமாம் தமிழ் மக்களைப் போற்றுவோம்
ஒழுக்கம் என்பது தமது உயிரைவிட மேலானதாக, ஒழுக்க நெறியில் இருந்து தவறி/தப்பி/வழுவி/பிழைத்துத் தரம்கெட்ட வாழ்க்கை முறைபோன்ற இழுக்கு வேறு ஏதும் இல்லை என்று உணர்ந்து, உயர்ந்த வாழ்க்கையை வாழ்வதையே பழக்கமாக்கிச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த தமிழ் மக்களைப் போற்றுகிறார்!
வருவித்து உரைத்தல் - சொல்லெச்சம் - சில உதாரணங்கள்:
------------------------------
(1)
”‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 22) என்ற நூற்பாவின் ‘வரையா நாளிடை வந்தோன் முட்டினும்’ என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி. ‘இதன்கண் என்றான் என ஒருசொல் வருவிக்க’ என்றார் இளம்பூரணர். ” https://
(2) நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே. - திருமந்திரம்
”தியான முதிர்ச்சியில் சிவாநுபவத்தைத் தலைப்படல் கூடும்` என்பதற்கு, ``நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டன்`` என்பதனை இறுதிக்கண் கூறினாராயினும், அதனை இரண்டாம் அடியாக வைத்து, அதன்பின், `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைத்தல் கருத்தென்க. ”
(3) சொல்லெச்சம் பற்றி விளக்க இக்குறள் உரை போதும்.
ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடு இல்லை; போகாறு அகலாக் கடை.
பரிமேலழகர் உரை: ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின்.
('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)
பொருள், அளவு :: இரண்டும் வருவித்து உரைத்தல் மரபு. எனவே, இவையிரண்டும் *சொல்லெச்சம்*.
==============
கம்பர்:
என்றனன்இயம்பி, ‘வீதி ஏகுதல்இழுக்கம்’ என்னா,
தன்தகை யனையமேனி சுருக்கி,மாளிகையில் சார
சென்றனன் -என்ப மன்னோ - தேவருக் கமுதம் ஈந்த
குன்று எனஅயோத்தி வேந்தன் புகழ்என,குலவு தோளான்.
வீதி ஏகுதல் - வீதி வழியே போவது; இழுக்கம் என்னா - தவறு நேர்வதற்குக்
காரணம் என்று நினைத்து; தன் தகையனையமேனி - தன்னுடைய
சிறப்புக்கேற்ற திருமேனியை; சுருக்கி - சுருக்கிக் கொண்டு
'முத் தலைஎஃகன், மற்றை முராந்தகன், முனிவன், முன்னா
அத் தலை நம்மைநோனா அமரர்க்கும், நகையிற்றாமால்;
எத் தலை உலகும்காக்கும் வேந்த ! நீ, வேற்றார் ஏவ,
இத் தலைஎய்தினானைக் கொல்லுதல் இழுக்கம்; இன்னும்,
கொல்லுதல் இழுக்கம் = கொல்லுதல் தவறு.
‘பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரைஆகிலதேஎனின்,
இற் பிறப்பும்,ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான்பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் ?
இழுக்கம் இல்லாத கற்பு = தவறு/தப்பு/பிழை/வழு இல்லாக் கற்பு சீதாபிராட்டியாருடையது.
================
(பெருங்கதை - கொங்குவேளிர்
இன்னா வெம் நோய் எத்திறத்தாயினும்
ஒடுங்கா உள்ளமொடு அகற்றுவல் யான் என
கடும் சூள் அறைஇ காவலன் கேட்ப
ஒழுக்கினும் கற்பினும் இழுக்கம் இன்று என
பசைஇய கேள்வனை பைம்_தொடி வணங்கி
ஒழுக்கினும், கற்பினும் இழுக்கம் இன்று = ஒழுக்கத்திலோ, கற்பிலோ தவறு இல்லை
==============================
சிலப்பதிகாரம்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கந் தாராது
மதம் - இளமைக்கும் யானைக்கும் ஏற்பக் கொள்க. இடங்கழி - வரம்பு கடக்கை ; கழி காமமுமாம்; 1"இடங்கழி மான்மாலையெல்லை" என்பதன் உரை காண்க. இளமையாற் காமம் மீதூரப் பெறினும் நெறி தவறிச் செல்லார் என்றபடி.
ஆசாரக்கோவை
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனவென் றெண்ணி
இகழின் இழுக்கம் தரும்.
இழுக்கம் தரும் - தவற்றைத் தந்துவிடும். அதாவது, பெருந்துன்பம் தரும்.
சிந்தாமணி
விழுத்திணைப் பிறந்து வெய்ய வேட்கை வேர் அரிந்து மெய் நின்று
இழுக்கம் ஒன்றானும் இன்றி எய்திய தவத்தின் வந்து
வழுக்குதல் இன்றி விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட
எழுத்தனான் தந்த இன்பம் இன்னும் நீ பெறுதி என்றாள்
இழுக்கம் ஒன்றானும் இன்றி = தவறு ஒன்றுகூட இல்லாமல்.
இழுக்கம் ஒன்றானும் இன்றி = தவறு எவ்வாற்றானும் இல்லாமல் (நச்சினார்க்கினியர், சிந்தாமணியுரை)
https://temple.dinamalar.com/
=======================
”மேலும் பல குறள் உரைகளில் சில புதிய சொற்களை *வருவித்து* உரைத்து உரைவழங்கும் உத்தியைச் சிறப்பாகக் கையாளுகின்றார். சான்றாக,
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு - குறள்: 339
கலைஞர் உரை: நிலையற்ற வாழ்க்கையில் உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு, திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு இக்குறள் உரையில் குறளில் இல்லாத புதிய சொல்லாக நிலையற்ற வாழ்க்கையில் என்று சேர்த்து நிலையாமை என்ற அதிகாரப் பொருளை நினைவு கூர்கின்றார்.” http://nailango.blogspot.com/
~NG
>On Thu, Aug 17, 2023 at 8:32 AM Ramamoorthy Ramachandran <rawmurthee@gmail.com> wrote:>மிகச் சிறந்த பதிவு! - புலவர் இராமமூர்த்திநன்றி, ஐயா. இழுக்கம் என்ற சொல்லைப் பல நூல்களில் பார்க்கலாம். தொல்காப்பியம், குறள், சிலம்பு, ஏலாதி, பெருங்கதை, கம்பன், ... என மிகப் பல இலக்கியங்கள்.இழுக்கம் (< இழுக்கு-தல்) என்பதன் முதன்மைப் பொருளாக, தவறு, வழு, பிழை என்பதாக எல்லா இடத்திலும் ஆள்கிறார்கள் பண்டை ஆசிரியர்கள்.எனவே, இழுக்கம் - தப்பு/தவறு, வழு, பிழை எனக் கொள்ளவேண்டும். ஒழுக்கம் = தப்பு என விளக்கியுள்ளார் மணக்குடவர், குறளின் முதல் உரைகாரர்.எதுகைக்காக, ஒழுக்கம் என்று தொடங்கும் குறள் ஒன்றில் இழுக்கம் என்ற சொல் வருகிறது:ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.இங்கே, (ஒழுக்க நெறி தவறுகை ஆகிய) இழுக்கம் என, ஒழுக்கம் என்ற சொல்லை வருவித்துப் பொருள் உரைப்பர்.சென்னைப் பல்கலைப் பேரகராதி:இழுக்கம் iḻukkam , n. இழுக்கு-. 1. Fault, offence, transgression; பிழை. நாளிழுக்க நட்டார் செயின் (குறள், 808). 2. Violation of social and caste rules; ஒழுக்கந் தவறுகை. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 3. Ignominy, discomfiture; ஈனம். மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றி னும் (கம்பரா. அயோத். மந்திர. 42).குறள் 133-ன் மேற்கோளில், இழுக்கம் = (ஒழுக்கம்) தவறுகை என, ஒழுக்கம் என்ற சொல்லை வருவித்துப் பொருள்கோள் காண்க.இதனை, அழகாக நன்னூலாரும் விளக்கியுள்ளார்:
பழித்த மொழியான் இழுக்கம் கூறல் = வழூஉச்சொல் புணர்த்தல்
அதாவது, இழுக்கம் == வழு என்கிறார் நன்னூலார்.MTL entry:வழு vaḻu , n. < வழுவு-. 1. Error, mistake, failure, fault, lapse;
தவறு. (தக்கயாகப். 7.) 2. Damage, loss; கேடு. (சூடா.) 3. Sin; பாவம்.
வழுவாய் மருங்கிற் கழுவாயுமுள (புறநா. 34). 4. Scandal, ill-repute;
பழிப்புரை. வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69). 5. (Gram.) Solecism,
impropriety in language; deviation from rule; திணைபால் முதலியன தத்தம்
இலக்கணநெறி மயங்கி வருவதாகிய குற்றம். (நன். 375.)பிற பின்,நா. கணேசன்> On Thu, Aug 17, 2023, 14:31 N. Ganesan <naa.ganesan@gmail.com> wrote:ஒரு நூலின் சிதைவுகள்
---------------------
சிதைவெனப் படுபவை வசையற நாடின்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில மொழிதல்மயங்கக் கூறல்
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்
பழித்த மொழியான் இழுக்கம் கூறல்
தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்
-------- தொல்காப்பியம், பொருள், மரபியல், 109
தொல்காப்பியர் பட்டியலிடும் நூற்சிதைவுகளை என்னென்ன என விளக்கும் உரையாக,
நன்னூலில் பவணந்தி முனிவர் சூத்திரித்துள்ளார்:
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத்தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந்து இறுதல் நின்றுபயன் இன்மை
என்று இவை ஈரைங் குற்றம் நூற்கே
தொல்காப்பியம் - நன்னூல்
----------------------
கூறியது கூறல் = கூறியது கூறல்
மாறுகொளக் கூறல் = மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் = குன்றக் கூறல்
மிகைபடக் கூறல் = மிகைபடக் கூறல்
பொருளில மொழிதல் = வெற்றெனத் தொடுத்தல்
மயங்கக் கூறல் = மயங்க வைத்தல்
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல் = சென்று தேய்ந்து இறுதல்
பழித்த மொழியான் இழுக்கம் கூறல் = வழூஉச்சொல் புணர்த்தல்
தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் = மற்றொன்று விரித்தல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை = = நின்று பயன் இன்மை.
மிக அருமையாகப் பவணந்தி முனிவர் தொல்காப்பியர் நூற்பாவுக்குப்
பொருள் தந்துள்ளார். இழுக்கம் பற்றி மடலாடினோம். உ-ம்: குறள், கம்பன், ...
பழித்த மொழியான் இழுக்கம் கூறல் = வசைச்சொற்களால், தவறுகளைக் கூறுதல்.
Tolkappiyar cautions that an author should not stoop low to do
personal attacks, instead just critique the errors in ideas expressed
in the opponent's work.
இதனை, அழகாக நன்னூலாரும் விளக்கியுள்ளார்:
பழித்த மொழியான் இழுக்கம் கூறல் = வழூஉச்சொல் புணர்த்தல்
அதாவது, இழுக்கம் == வழு என்கிறார் நன்னூலார்.
வழு vaḻu , n. < வழுவு-. 1. Error, mistake, failure, fault, lapse;
தவறு. (தக்கயாகப். 7.) 2. Damage, loss; கேடு. (சூடா.) 3. Sin; பாவம்.
வழுவாய் மருங்கிற் கழுவாயுமுள (புறநா. 34). 4. Scandal, ill-repute;
பழிப்புரை. வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69). 5. (Gram.) Solecism,
impropriety in language; deviation from rule; திணைபால் முதலியன தத்தம்
இலக்கணநெறி மயங்கி வருவதாகிய குற்றம். (நன். 375.)
~NG