திருமந்திரம் காட்டும் சமாதி வழிபாடு
- கி.வா. ஜகந்நாதன் -
ஞானஒளி
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் மன்னர்கள், வீரர்கள், ஞானியர்கள் காலமானால், அவர்கள் இறந்த இடத்திலே சமாதி கட்டி வழிபட்டு வந்தார்கள். மக்கள் இறந்ததால் அவர்கள் உடம்பை இடுவது, சுடுவது என்று இரண்டு வகை உண்டு. இடுவதாவது மண்ணில் புதைத்தல், அந்த இடத்தை "இடுகாடு” என்பார்கள். சுடுவது எரிமூட்டி ஸமஸ்காரம் செய்தல், அதைச் செய்யும் இடம் "சுடுகாடு”.
அரசர்கள் இறந்தால் அங்கே ஒரு கல்லை நட்டு அதை வழிபடுவார்கள். 'கல்லெடுப்பு' என்று இழவைச் சொல்வார்கள். கல்லெடுப்பு என்பது கல்லை நடுதல் என்ற பொருளுடையது. அரசர்கள் சமாதியை அந்த இடத்தின் பெயரோடு பள்ளி என்பதைச் சேர்த்துக் குறிப்பார்கள். “சேரமான் சிக்கற் பள்ளித்துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்” என்று சேரமான் பெயர் புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. அவனுடைய இயல்பான பெயர் "செல்வக்கடுங்கோ வாழியாதன்” என்பது. அவன் "சிக்கல்” என்னும் இடத்தில் இறந்தான், அங்கே அவனுக்குச் சமாதி எழுப்பினார்கள். அதனால் "சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்” என்று குறிப்பிட்டார்கள்.
இப்படியே "சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி” என்றும், "சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்" என்றும் சில சோழ மன்னர்களைக் குறிக்கிறார்கள். வாவியைச் சார்ந்த சோலைக்கு "இலவந்திகை” என்று பெயர். அத்தகைய சோலையில் சமாதி கட்டியிருப்பதால் அதற்கு "இலவந்திகைப்பள்ளி” என்ற பெயர் வந்தது. "பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய நன்மாறன்'', "பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி” என்ற பாண்டியர்களின் பெயர்களிலிருந்து அவர்கள் சமாதி இருந்த இடம் முறையே "வெள்ளியம்பலம், கூடகாரம்” என்று தெரிகின்றது.
சமாதி மேலே நட்ட கல்லுக்கு மயிற்பீலி சூட்டி மதுவை நிவேதனம் செய்வது வழக்கம் என்று தெரிகிறது.
“நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத்து உழுப்பவும் கொள்வன் கொல்லோ” (புறநானூறு 232)
(பீலி-மயிலிறகு, நாரிஅரி பன்னாடையால் வடிகட்டப்படும் கள், சிறுகலத்து -சிறிய பாத்திரத்தில், உகுப்பவும் - விடவும்)
வீரர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு அவர்களுடைய பெயரையும் வீரச் சிறப்பையும் அதில் எழுதுவதுக்கென்று பழம் பாடல்களால் தெரிய வருகின்றன.
“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்” (புறநானூறு : 266)
இத்தகைய கற்களுக்கு வீரக்கல் என்று பெயர். இப்படியே பதிவிரதைகளின் சமாதியில் நடும் கல்லுக்கு மாஸதிக்கல் என்று பெயர். வீரர்கள் யாவரிலும் மேலான வீரர்கள் ஞானிகள்.
"புலனைந்தும் வென்றானதன் வீரமே வீரம்” என்று ஔவையார் பாடுகிறார்.
“ஆரம் கண்டிகை; ஆடையும் கந்தையே;
பாரம் ஈசன் பணியலது ஒன்றிலார்;
ஈர நெஞ்சினர்; யாதும் குறைவிலார்;
வீரம் என்னால் விளம்பும் தகையதோ?”
என்று பக்தி வீரர்களைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் பாராட்டுகிறார்.
அத்தகைய ஞான வீரர்களின் திருமேனியை நெருப்புக்கு இரையாக்காமல், பூமியில் புதைத்துச் சமாதி கட்டி கோயில் எழுப்பி வழிபட்டார்கள். சித்தர்கள் பதினெட்டுப் பேர்கள். அவர்கள் சமாதியடைந்த இடத்தில் இப்போது ஆலயங்கள் எழுந்து வெவ்வேறு மூர்த்திகளின் கோயில்களாகச் சிறப்படைந்திருக்கின்றன. பழனியைப் போகருடைய சமாதி என்று சொல்வார்கள்.
ஞானிகளைத் தகனம் செய்யக்கூடாதென்றும், அவர்களை மண்ணின் வயிற்றில் புதையலாகச் சமாதி செய்து வழிபடவேண்டும் என்றும் திருமூலர் தாம் பாடிய திருமந்திரத்தில் சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்க்கலாம்.
முடிவேயில்லாத ஞானியினுடைய திருவுடம்பைத் தீயில் இட்டு அது எரிந்து போனால் நாடெல்லாம் கொடிய தீயினால் அழிவை அடையும்; வெளியிலே போட்டு நாய் நரிகள் உண்டால் யுத்தம் உண்டாகிப் பலர் மடிந்து நாய்க்கும், நரிக்கும் உணவாவார்கள்.
"அந்தம் இல் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெல்லாம் வெம்பும் தீயினில்
நொந்தது நாயநரி நுகரின், நுண்செரு
வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே”
கணக்கு இல்லாத புகழையுடைய ஞானியின் உடம்பை நெருப்புத்தாவி எரித்தால் இறைவன் கோயிலில் நெருப்பையிட்டது போலாகும், நிலத்தில் மழை பெய்யாது, பஞ்சம் ஏற்படும்; அரசர்கள் தம் அரசை இழப்பார்கள்' என்றும் திருமூலர் சொல்கிறார். ஞானியருடைய திருமேனி கோயிலைப் போன்றது. அதை எரிப்பது ஆலயத்தைக் கொளுத்துவது போன்ற பாவத்தை உண்டாக்கும்.
'அத்தகைய ஞானிகளை மண்ணில் புதைப்பது பெரிய புண்ணியச் செயல். நெருப்பு அவ்வுடம்பைத் தீண்டினால் நாட்டில் பலவகை அழிவுகள் நேரும். மண்ணின் மேல் கிடந்து அழிந்தால் நாட்டுக்கு அழகாக உள்ள இடங்களெல்லாம் நாசமாகிவிடும்; உலகில் எல்லாவிடங்களிலும் நெருப்பினால் சேதம் உண்டாகும்' என்று வேறொரு பாட்டில் சொல்கிறார்.
ஞானி சித்தியடைந்தால், அவருடைய உடலை பூமியில் குகைபோலச் செய்து அடக்கம் செய்தால் அரசர்களும் பூமியில் உள்ள மக்களும் முடிவில்லாத இன்பத்தையும் அருளையும் பெறுவார்கள்' சமாதியின் அளவைக்கூட குறிக்கிறார் திருமூலர்.
ஒன்பது சாண் ஆழமாகக் குழிவெட்ட வேண்டுமாம், சுற்றிலும் ஐந்து ஐந்து சாண் அகலம் இருக்க வேண்டும். உள்ளே குகை முக்கோண வடிவமாக அமைத்து ஒவ்வொரு பக்கமும் மூன்று மூன்று சாணாக அமைக்க வேண்டும். அதில் பத்மாசனமாகத் திருவுடம்பை வைக்க வேண்டும்.
எந்த இடங்களில் ஞானிகளுக்குச் சமாதி அமைக்கலாம்? ஞானிகள் வாழ்ந்த வீட்டில் வைக்கலாம், சாலையோரத்தில் வைக்கலாம், குளக்கரையிலும், ஆற்றின் நடுத்திட்டிலும், சோலையிலும், நகரத்திலுள்ள நல்ல பூமியிலும், காட்டிலும், மலைச்சாரலிலும் சமாதி வைக்கலாம்.
பஞ்ச லோகங்கள், நவரத்தினங்கள் ஆகியவற்றைச் சமாதிக் குழியின் கீழே பரப்பி அதன்மேல் ஆசனம் இட்டு, அதற்கு மேல் முஞ்சிப்புல்லை வைத்து விபூதியைக் கொட்டி, அதன்மேல் சூர்ணத்தைப் போட வேண்டும். அதன்மேல் மாலை, சந்தனம், கஸ்தூரி, புனுகு, பன்னீர் அவற்றைச் சேர்த்துத் தூபம் காட்ட வேண்டும். விபூதியை உடம்பின்மேல் உத்தூளனமாகத் தூவி ஆசனத்தின்மேல் வைத்துத் திருமேனியின் மேல் மலர், வாசனைப்பொடி, விபூதி ஆகியவற்றை இடவேண்டும். பிறகு நான்கு பக்கமும் மண்ணைக்கொட்டி, அன்னம், கறி, இளநீர் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து மேலே மூடிவிட வேண்டும்.
அப்பால் வெண்ணீ றும் வாசனைப் பொடியும் தூவி, மலர் பல தூவி, தர்ப்பைப்புல்லும் வில்வமும் இட்டுப்பிறகு திருமஞ்சனம் செய்வித்து, மூன்று சாண் அகலம் மூன்று சாண் நீளமாக மேடை கட்ட வேண்டும்.
அப்படி அமைத்த இடத்தில் அரசமரத்தை நடலாம், சிவலிங்கத்தை வைத்துப் பூசிக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைக்கலாம். அந்த மூர்த்திக்குச் சோடசோபசாரம் செய்ய வேண்டும்.
“ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து
மேதகு சந்நிதி மேவுத் தாம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே”
என்று சொல்லி முடிக்கிறார்.
இவ்வாறு ஞானியர்கள் சமாதி அடைந்த இடங்கள் இன்று கோயில்களாகத் திகழ்வதைப் பல இடங்களில் காணலாம். தருமபுர ஆதினத்தின் மூல ஆசிரியராக இருந்தவர், குரு ஞானசம்பந்தர், அவருடைய சமாதி இன்று ஞானபுரீசுவரர் ஆலயமாக விளங்குகிறது. திருவாவடுதுறை மடத்தின் முதல் ஞானாசிரியரின் சமாதியில் அவருடைய திருவுருவத்தையே நிறுவி வழிபட்டு வருகிறார்கள். பல இடங்களில் பிருந்தாவனமாகிய துளசி மடம் கட்டி வழிபடுகிறார்கள்.
ஞானிகளை எரிப்பது தவறு என்பதும், அப்படிச் செய்வதனால் நாட்டுக்குக் கேடு உண்டாகும் என்பதும், அவர்கள் திருமேனியைச் சமாதியில் வைத்து வழிபடுவதனால் நன்மை உண்டாகும் என்பதும் தமிழ்நாட்டில் பல நூறாண்டுக் காலமாகப் பெரியோர்கள் அறிந்து அறிவித்த செய்திகள், இதைத் திருமூலர் திருமந்திரம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது.
2 comments:
Best Messages from THIRUMANTRAM - KP.Rajappan
நல்ல கட்டுரை
Post a Comment