Crocodilian Symbol in Pre-Mauryan Punch Marked Coins
Abstract: In the Pre-Mauryan punch-marked coins of the Magadha country on the banks of Ganges river, an important symbol is taken as Taurine symbol. This is done looking at Greek coins.
However, this ancient sign should rather be called as Crocodilian symbol. This essay in Tamil explains the reasons for which I use the recently found Pre-Mauryan punch marked coin from MaNalUr (Keezhadi) near Madurai as an example. This is published in the January 2022 issue of OmSakthi, Coimbatore. The crocodilian symbolism is India is ancient, and represents the Pole Star in Indian astronomy. http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html
கீழடி தொல்லியல் அகழாய்வில் முத்திரைக் காசுகள்
நா. கணேசன், ஹூஸ்டன், அமெரிக்கா
கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் மௌரியர் காலத்திற்கும் முந்தைய முத்திரைக் காசு கங்கை, யமுனை நதிக்கரை நாகரிகத்துக்கும், தமிழகத்துக்குமான உறவுகளைக் காட்டுகிறது. சங்க காலத்தை நிர்ணையிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக, நாணயவியல் ஆய்வுகளை முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி நிலைநாட்டினார். தொல்லியல் ஆய்வுகள் தாம் ஹெர்மன் டீக்கன் போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் சங்க இலக்கியம் 8-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப் பெற்றன என்ற கருத்தை உடைக்க உதவின. மௌரியருக்கு முன்பாகவே தமிழி எனப்படும் தமிழ் பிராமியின் காலம் எனக் காட்டப் பேரா. கா. ராஜன் கொடுமணல், பொருந்தல் போன்ற கொங்குநாட்டு ஊர்களில் நிகழ்ந்த அகழாய்வுகள் துணை செய்கின்றன. வில்லியம் ஜோன்ஸ் கண்டறிந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம், சென்னை கலெக்டர் எல்லிஸ் கண்டறிந்த திராவிட மொழிக் குடும்பம் இரண்டுக்கும் உள்ள உறவுகளையும், தொடர்புகளையும் மொழியியல், மரபணு அறிவியல், சிந்துவெளி மற்றும் தமிழகத் தொல்லியல் அகழாய்வுகள் மூலம் ஆராய்கிறோம். தமிழுக்கு எழுத்து மற்றும் புள்ளி உருவான கால நிர்ணயத்திற்கும் தொல்லியல் தான் சான்றுகளைத் தருகிறது.
மௌரியர் காலத்துக்கு முந்தைய முத்திரைக் காசுகள் இரண்டு இப்போது கீழடியில் கிடைத்துள்ளன. நான்காம் கட்ட அகழ்வில், 162 செ.மீ ஆழத்திலும், ஏழாம் கட்ட அகழ்வில் 147 செ.மீ ஆழத்திலும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மகத ஜனபதக் காசுகளில் வகைப்படுத்தப்படுபவை இக் காசுகள். இவற்றின் காலத்தை கி.மு. நான்காம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி எனக் கணிக்கலாம். சங்க காலச் சேரர்களின் தலைநகராக விளங்கிய கரூரில் கங்கைச் சமவெளி முத்திரைக் காசுகளைச் அச்சடிக்கும் அச்சுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கரூர், கொடுமணல், கொடைக்கானல், அழகன்குளம், திருநெல்வேலி, போடிநாயக்கனூர், இலந்தக்கரை, மாம்பலம், வெம்பாவூர், பூம்புகார் போன்ற பல இடங்களில் மௌரியர் கால முத்திரைக் காசுகள் கிடைக்கின்றன.
கீழடி முத்திரைக் காசில் “டவுரின் சின்னம் (Taurine symbol)
ஐரோப்பியக் காளைகளின் பெயரில் ஒரு சின்னம் கீழடியில் தற்போது கிடைத்துள்ள முத்திரைக் காசில் உள்ளது. ”டவுரின்” என்று பெயரில் அழைப்பார்கள். ஆனால், அப்பெயர் பொருந்துமா? மகத ஜனபத நாணயங்கள் பலவற்றுடன் ஒப்பிடும்போது, “டவுரின்” சின்னம் நீர்நிலைகள் ஆகிய குளம், ஏரி அருகிலே இருக்கிறது. மேலும், காளை தனியாக அச்சிடப்பட்டுள்ளது. எனவே, இச்சின்னத்தைக் காளை என்று அழைப்பதை விட, ”மகரச் சின்னம்” (Crocodilian symbol) என்பது பொருந்தும் (படம் 1). கிடைமட்டமாக இந்த நீருயிரிகள் வடிவமைப்பு இருக்கிறது. மேலும், முதலைகள் எப்பொழுதும் வாயைத் திறந்திருக்கும் இயல்பு உடையவை. திறந்த வாயினைக் காளையின் கொம்பு எனக் கருதி, ஆங்கிலேயர் பெயர் தங்கள் ஊர்க் காளையின் பேர் வைத்திருக்கலாம். வேத கால வருணனின் சின்னமாக, மகர விடங்கர் வழிபாடு இருந்துள்ளதைக் கீழடியில் கிடைக்கும் பானை ஓடுகளிலும் காண்கிறோம்.
இந்த மகரச் சின்னம் அசுவமேத யாகம் செய்த அரசர்கள் வெளியிட்ட பல காசுகளில் இடம்பெறுகிறது. இதனால் ”பெருவழுதி” பெயர்பொறித்த நாணயம், “மாறன்” என்ற பெயர் உடைய ஜல்லிக்கட்டுக் காசு, அதியமான் என்று பெயர் எழுதிய காசு, மலையமான் காசு, சேரமன்னர் காசு எனப் பல அரசர்களும், ’பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி’ போலவே வேள்விகளை ஆதரித்தனர் எனத் தெரிய வருகிறது. மேலும், இந்த மகரச் சின்னம் குதிரை அருகே உள்ள காசுகள் இலங்கையிலும் கிடைக்கின்றன. பௌத்தர்கள் அசுவமேத வேள்வி வேட்கவில்லை. பாண்டியர் அல்லது சோழர்கள் இக் காசுகளை இலங்கையில் வெளியிட்டிருக்கக் கூடும். தொல்காப்பியத்தில் நெய்தல் திணையின் தெய்வம் வருணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ”மழுவாள் நெடியோன்” என்று வருணனை மதுரைக் காஞ்சி என்னும் சங்க நூல் விவரிக்கிறது. மோட்டூர், உடையார்நத்தம் போன்ற ஊர்களில் உள்ள சிற்பம் போலவே, உலோகத்தில் கங்கைச் சமவெளியில் ஈமக் குழிகளில் சிற்பங்கள் கிடைத்துள்ளன. ஆங்கிலத்தில், ஹிந்து பத்திரிகையில் திருப்பரங்குன்றத்தில் கிடைத்த தமிழ் பிராமிக் கல்வெட்டு “மூ நாக்ர – மூ சக்தி” வெளியானது. நாக்ர என்றால் வடமொழியில் முதலை. மோட்டூர் மெகாலித்திக் சிற்பம், திருப்பரங்குன்றக் கல்வெட்டு, பாண்டியன் பெருவழுதிக் காசு, கீழடியில் கிடைத்துள்ள மகத ஜனபத முத்திரைக் காசுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. எனவே, கீழடி முத்திரைக் காசில் உள்ள சின்னத்தை, பெருவழுதிக் காசு போலவே, மகரச் சின்னம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment