வதரியாற்றுப்படை, ஆசிரியர்: மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், 30 ஜூலை 1967

 வதரியாற்றுப்படை

ஆசிரியர்: பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்

தற்சிறப்புப் பாயிரம்



முன்னுரை
-------------------


கொங்குநாட்டிலே ஏடுகள் தேடி மிக உழைத்தோர் திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனாரவர்களும், மகாவித்துவான் வேலம்பாளையம் ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரும் ஆவர். தமிழ்நாட்டில் பல இடங்களில் பானை ஓடுகளில் கிடைக்கும் தமிழி அல்லது தமிழ்பிராமி எழுத்துகள் அசோகருக்கு முந்தியே தமிழ் எழுதப்பெற்றிருத்தலைச் சின்னஞ்சிறு பெயர்களால் காட்டுகின்றன. இந்தியாவில் எழுத்து தோன்றிய காலத்தைக் கணிப்பதில் கொங்குநாடு தந்துள்ள வெளிச்சம் பெரிது. தமிழ்நாட்டுப் பானை எழுத்துகளில் மிகப் பெரும்பான்மை கொங்குநாட்டிலே தான் அகப்படுகின்றன. பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணியார் மாணவர் புலவர் செ. ராசு. அவர்தான் கொடுமணல் அகழாய்வு இடத்தைக் காட்டியவர். அங்கே தொல்லியல் ஆய்வுகளைப் பல்லாண்டு நடாத்தியவர் பேரா. கா. ராஜனும், மாணவர்களும் ஆவர்.

கொங்கு நாட்டில் பாடல் பெற்ற சிவ தலங்கள் ஏழு. கொங்கேழு தலங்களில் பவானிகூடல் சங்கமம் வேதநாயகி உடனாய சங்கமேசுவரர் திருக்கோயில். பவானி யாறும், காவேரி யாறும் கூடுதுறை ஆனதால், நீத்தார் வழிபாட்டில் காசிக்கு நிகரானது என்பது கொங்குநாட்டுப் பழைய மரபு. இதனால் தெட்சிணகாசி என்றும் பெயருண்டு. வானியாறு வானில் இருந்து மழைவரும் காலங்களில் நீர் மிக்கு இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த 800 ஆண்டு முன்னர் காலிங்கராயன் மிக நீண்ட கால்வாய் வெட்டினார். வானி காவிரியை வவ்வுமிடம் வவ்வானி. பின்னாளில் பவானி எனப் பேராயிற்று. சிந்துவெளி நாகரீகத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்கள் சரசுவதி நதிக்கரையிலே உள்ளன. மகாபாரதத்தில் மணலில் புதைந்துள்ள இவ்வாற்றின் கூடுதுறை பவானியில் பாண்டவர்கள் தர்ப்பணம் செய்வதாக இருக்கிறது. ‘வைசம்பால்ய’ என ரிக்வேதம் குறிப்பிடும் நதி விசும்பாள்/வானி என்ற பெயர் கொண்டதாக இருந்திருக்கும் எனத் தோற்றுகிறது. வானத்துக்கு விசும்பு எனப் பெயர்.  கிரகண காலங்களில் இக் கூடுதுறையில் நீராடுதல் புண்ணியம் என்பது கொங்குமண்டல சதகம். குமரகுருபரர் 17-ம் நூற்றாண்டில் திருமடம் நிறுவியதும், நாட்டுக்கோட்டை நகரத்தார் 200 ஆண்டுகளாய் காசி விசுவநாதருக்கு ’சம்போ’ என்ற அர்த்தஜாம பூஜையை நடத்துவதும் நிகழ்கிறது. வாரணாசியை ஒத்த தலமாக, பவானிகூடல் ஈசன் தமிழ்நாட்டிலே விளங்குகிறார்.

பவாநித் தலபுராணம் காவிரி, வானி, அமுத நதி என மூன்றும் கலக்கும் திரிவேணி சங்கமம் எனப் புகழ்கிறது. காசியிலும் அமுதநதி கலப்பதாக ஐதீகம் உண்டு. வாரணாசி விசுவநாதர் கோவிலில் அம்பிகை பவானி, அன்னபூர்ணியைப் பவானி என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   பொன்னியே கங்கை யமுனையே பவானி பொருவரும் பராசரன் வகுத்த
   மின்னவிர் அமுத நதியதே வானி யல்லது வேறல விந்தத்
   தன்னிகர் பிறிதில் தலந்திரி வேணி சங்கமம் ஆதலாற் தென்பாற்
   கன்னிமா மதில்சூழ் காசியின்  மேலாய்க் கவினுமிக் கடிநக ரன்றே.

கூகலூர் கே. சுப்பண கவுண்டர் அனைத்து சமூகங்களின் மேம்பாட்டிற்குப் பல புரட்சிகளை மேற்கொண்டவர். பவானி முக்கூடல் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்துபோது வித்துவான் வே.ரா.தெ. அவர்களைப் பிரபந்தம் பாடித் தர வேண்டும் என வேண்டியிருக்கிறார். தற்சிறப்புப் பாயிரத்தால் 30 ஜூலை 1967 தேதி அன்று வதரியாற்றுப்படை பாடப்பட்டது எனத் தெரிகிறது. சங்க இலக்கியம் கூறும் சேரர் காலத் தலைநகர் கடற்கரையில் இல்லை. இன்றைய கரூரே சங்கச் சேரர் தலைகர் வஞ்சி மாநகர் ஆகும் என மதுரைத் தமிழ்ச் சங்கம் இரு அரிய ஆராய்ச்சி நூல்களை ஒரு நூற்றாண்டு முன்னர் வெளியிட்டது. பின்னர், வாதப் பிரதிவாதங்கள் சில ஆண்டுகள் நிகழ்ந்தன. தொல்லியல் ஆய்வுகள், நாணயவியல் போன்றவற்றால் அறிஞர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் கூறிய முடிபுகள் சரி தாம், சங்க காலத்தில் சேரர் தலைநகர் வஞ்சி என்பது இன்றைய கரூர் என விளக்கினர். அதற்கான கட்டுரைகளைப் பவானிகூடல் கும்பாபிடேக மலரில் காணலாம். ஆக, பாண்டியர்க்கு மதுரை, சோழர்க்கு உறந்தை என்பது போல, சேரர்க்குத் தலைநகர் வஞ்சி (கரூர்) என ஒரு நூற்றாண்டு ஆராய்ச்சி நிரூபணம் தொல்லியல் வாயிலாக 1960-களில் நிறுவப்பட்டது. கடற்கரையில் உள்ள முசிறிப்பட்டினமும் தொல்லியல் கண்டுபிடித்துவிட்டது. பாலைக்காட்டுக் கணவாய் வழியாக, கரூருக்கும், முசிறிப் பட்டினத்திற்கும் வணிகம் சிறப்பாக நடந்துள்ளது. வேளிர்கள் சேர மன்னர் ஆதற்குச் சான்றாக, சங்கச் சேரர்கள் வெளியிட்ட காசுகளில் ஏர்க் கலப்பை உள்ளது. ‘ஆ கெழு கொங்கர்’ என்று சங்கச் சான்றோரும், இளம்பூரணரால் ‘கொங்கத்து உழவு’ என்றும், பேரூரில் பட்டீசுவரர், பட்டியாவுடைத் தாய் என்றும், வஞ்சி மாநகர் கரூரில் ஆநிலையப்பர் பசுபதீசுவரர் என்னும் வழக்கங்கள் கொங்குநாட்டு முல்லைத் திணை வளத்தை விளக்குகின்றன. சிந்துவெளியின் கம்பீரமான காளையை, காங்கேயம் காளை இனத்தில் காண்கிறோம். தக்கை என்னும் தாளக்கருவிக்கு ஏற்ப இசைக்கும் ‘கபிலை கதை’ என்னும் இசைநூல் 100 பாடல்களுடன் பரவலாகக் கொங்குநாட்டிலே உள்ளது. தக்கை ராமாயணம் கம்பனை வரிக்கு வரி சுருக்கிப் பாடிய இசைராமாயணம் இருக்கிறது.

வதரி என்றால் இலந்தை மரம். வதரி மரம் தான் சங்கமேசுரர் கோயிலில் தல விருட்சம்.  பவானியைத் திருநணா, நண்ணாவூர் என்ற பெயரில் ஞானசம்பந்தர் தேவாரத்தில் பாடியுள்ளார். இப்பெயர் சங்க காலச் சேரர் வரலாற்றில் தொடர்புடையது. நன்றா என்பது நண்ணா/நணா என மாறும் மாற்றம் மொழியியலில் நிகழ்வதாகும். சம்பந்தர் காலத்திலேயே, சங்க கால ‘நன்றா’  நண்ணா என மாறிவிட்டது. பிள்ளைப்பெருமாள் சிறைமீட்டான் கவிராயர் என்னும் பழம்புலவர் பாடிய கபிலமலைக் குழந்தைக் குமாரர் வருக்கக்கோவையை வித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் 1973-ல் ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்தார்கள். அதில் நணா என்னும் பெயர் வானிகூடலுக்கு வருவதை விளக்கியுள்ளார்.  “நன்றா என்னும் பெயர்: கபிலரென்னும் கடைச்சங்கப் புலவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனிடம் நூறாயிரங் காணம் பொன்னும் நாடும் பெற்றபின், அந்தணர் ஆகலின் அம்மலையில் தங்கிப் பெருவேள்வி செய்து வாழ்ந்திருக்கலாம் என்றும், அச்சேரமன்னன் கபிலருக்குக் கொடுத்த நாட்டைக் காட்ட ஏறிநின்ற நன்றாவென்னும் குன்றம் நல்ல ஆவாகிற கபிலைப் பசுவாற் பெயர் பெற்ற இக் கபிலைக் குன்றமே ஆகலாம் என்றும் தோன்றுகிறது.  இவ்வாறு தோன்றுவதற்கு இடமாயிருப்பது கபிலைமலையை அடுத்து விளங்கும் ஆறுநாட்டான் மலையில் கடுங்கோ வாழியாதன் என்னும் சேரலாதன் கல்வெட்டமைந்திருப்பதும், பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலின் கபிலர் பாடிய பத்துப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து  “சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றாவென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ” எனக் கூறப்பட்டிருப்பதுமாம்.”

பவானிகூடல் மறைக்கொடி (வேதாம்பிகை) சமேத வதரிமூலலிங்கர் (திருநணா உடையார்) மீதான ஆற்றுப்படை இலக்கியம் இயற்றி 55 ஆண்டு சென்றபின் அச்சாகின்றது. அச்சிட இதன் கையெழுத்துப் படியை எனக்களித்த நீதிபதி ஆர். செங்கோட்டுவேலன் அவர்கள் நினைவு மேலிடுகிறது. திருப்பையூர் (திருப்பூர்) புலவர் சுந்தர கணேசன் அவர்களுக்கு என் நன்றி. சைவ உலகம் இந்நூலை வாசித்துப் பயன்கொள்ளுமாக.

முனைவர் நா. கணேசன்
ஹூஸ்டன்/பொள்ளாச்சி  
1 - 12 -2022

பஞ்சமரபு நூல் சிறப்பு

காசியும், ஶ்ரீ குமரகுருபர முனிவரும்

 காசியும் குமரகுருபரரும் 

டாக்டர் நா. கணேசன், ஸ்பேஸ் விஞ்ஞானி, ஹூஸ்டன், அமெரிக்கா


Summary: In this brief note, Dravida Vidyabhushanam UVS statement about Tulasidasar listening to Kamba Ramayanam from Kumaragurparar's lecture in Hindusthani is recorded. Tulasidasar (1543? - 1623) predates Kumaraguruparar. So, this traditional account can be about a Tambiran before Kumaraguruparar from Saiva Mutts of Tanjore  district doing pravacanam at Kaashi on Kamban. Paintings from the rare TiruppananthaaL Adheenam's booklet on the life history of Sri Kumaragurupara Swamikal are included. My note as published in Dinamani, 27-11-2022 is given.

 காசி எனப்படும் ஒளிநகரம் வருணா, அசி என்ற நதிகளை எல்லைகளாய் உடையது. எனவே, வாரணாசி என்றும் பெயர் உண்டு. ஹிந்து, சமணம், பௌத்தம் ஆகிய எல்லா இந்திய சமயங்களுக்கும் புனிதமானது. வரலாற்று அறிஞர்கள் காசியை உலகின் மிகப் பழைய நகரங்களில் ஒன்று என்கின்றனர். தமிழகத்திற்கும் காசிக்கும் சங்க கால இலக்கியங்களிலே தொடர்பு பேசப்படுகிறது. வேளாளர்களைக் கங்காபுத்திரர் என்பதும், அவர்களுக்குக் குவளை மாலை என்றும் இலக்கியங்கள் புகழ்கின்றன. சங்கரர், ராமாநுஜர், பாரதியார் எனப் பலர் காசி நகரத்திலே பாரம்பரியக் கல்வி கற்றும், போதித்தும் சில காலம்  இருந்தனர். பின்னர் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர்.

   பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர சுவாமிகள் (1615 – 1688) தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருந்த தொடர்புகளின் உன்னத சிகரம். சைவ சித்தாந்த மடத்தைக் காசியில் நிறுவி, கங்கைக் கரையிலேயே மறைந்தார். அக் காசி மடத்தின் கிளை தான் திருப்பனந்தாள் காசி மடம் ஆகும்.  1888-ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று ஹிந்து மதம் பற்றிப் பேருரை ஆற்றினார். அதற்கும் முன்னோடியாக குமரகுருபரர் செயல் அமைந்தது,

   முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாராஷுகோ இந்து சமயத்தை ஆராயக் காசியில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அம் மாநாட்டில் கலந்துகொண்டு குமரகுருபரர் சைவ சித்தாந்தம் பற்றி உரையாற்றினார். சிங்க கர்ஜனை போல் இவர் உரை அமைந்ததால், சிங்கத்தின் மீது ஆரோகணித்து வந்தார் எனக் கூறுவது வழக்கம். இளவரசர் தாராஷுகோ வடமொழியின் பால் பற்று மிகுந்தவர். சமய நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர். எனவே, காசி கேதார கட்டத்தில் குமாரசாமி மடம் எனக் குமரகுருபரருக்கு மடம் அமைக்க நிலக்கொடை அளித்தார், சிவபெருமான் அருளால் காசி விசுவநாதர், கேதாரநாதர், பாண்டுரங்கர் கோவில்களில் மீண்டும் பூஜைக்குக் குமரகுருபரர் ஏற்பாடு செய்தார். முகலாயப் பேரரசரின் மகன் ஏராளமான நிலங்களைக் காசியில் நன்கொடையாக ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளுக்கு வழங்கினார். ‘காசி மகாராஜா பாதி, குமாரசாமி மடம் பாதி’ என்பது அங்கே உள்ள பழமொழி.

துளசி ராமாயணத்தில் கம்பர்:

   ஹிந்துஸ்தானி மொழியைச் சரசுவதியின் மீது சகலகலாவல்லி மாலை பாடிப் புலமை பெற்ற குமரகுருபரர், கம்ப ராமாயணத்தைப் பற்றி தொடர் சொற்பொழிவுகள் செய்துவந்தார். அதில் பலன் பெற்றுத் துளசிதாசர் வட இந்தியாவில் புகழ்பெற்ற பக்திக் காப்பியமாகிய துளசி ராமாயணம் இயற்றினார். குமரகுருபரரின் சொற்பொழிவுகளால், வால்மீகியில் இல்லாத, கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடிய நுட்பமான செய்திகளைத்  துளசிதாசர் பயன்படுத்தி உள்ளார். இது பற்றித் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் தாம் அச்சிட்ட ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு (1939) நூலில் எழுதியுள்ளார்.

“ஞான தேசிகரிடம் விடைபெற்றுக் காசிக்குச் சென்று தம்முடைய கல்வியறிவினாலும் தவப்பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார். அப் பாதுஷாவின் தாய்மொழி ஆகிய ஹிந்துஸ்தானியை விரைவில் அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணிச் சகலகலா மாலையென்னும் பிரபந்தத்தை இயற்றிக் கலைமகளை வேண்டினார். கலைமகள் திருவருளால் அம்மொழியிலே சிறந்த அறிவு பெற்றுப் பாதுஷாவிடம் பேசிப் பழகினார். அவர் இவர்பால் ஈடுபட்டு இவருடைய விருப்பத்தின் படியே இவர் காசியில் இருத்தற்குரிய மடம் அமைப்பதற்குக் கேதார கட்டத்தில் இடம் உதவினார். குமரகுருபரர் அதுகாறும் மறைபட்டிருந்த ஸ்ரீ விசுவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி அங்கே கோயில் முதலியன நிருமிக்கச் செய்து நித்திய நைமித்திகங்களும் குறைவற நடக்கும்படி செய்தார்.

        குமரகுருபர முனிவர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடம் என்று பெயர்.  அங்கே இவர் சிவயோகம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் இவரால் இயற்றப்பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராமபக்தர் ஆகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனர் என்றும், கம்பராமாயணத்தில் உள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டனர் என்றும் கூறுவர்.” (உ. வே. சாமிநாதையர்).

 27 நவம்பர் 2022 அன்று, தினமணியில் வெளியான கட்டுரை:




 





Tamil Nadu govt. grants $ 300,000 to Houston Tamil Studies Chair establishment at University of Houston, Texas, USA

 ஹூஸ்டன் பல்கலையில் தமிழாய்வுப் பீடம்: தமிழ்நாட்டு அரசாங்கம் 3 இலட்சம் $ நிதிநல்கை.  HTSC gets a grant of $ 300,000 from Govt. of Tamil Nadu.

The board of Houston Tamil Studies Chair, Inc., sincerely thanks Hon. Chief Minister of Tamil Nadu, Tiru. M. K. Stalin, and Hon. ministers, Tiru. Thangam Thennarasu and Tiru. M. Subramanian and Govt. Officials for this gesture and grant Tamil and Dravidology research, in all its aspects, will flourish in Texas Universities for 100s of years to come.
It is great news that HTSC has received this grant of $ 300 K. The first phase of Tamils donating 1 million $ to University of Houston will be completed this December 2022.
The photo from the Madras event (15 November 2022), and also previous $ 500,000 payment (2021) to University of Houston President for the HTSC endowment are shown here.

The unique aspects of Houston Tamil Studies Chair are listed below. 

1.       Paid $500,000 to the University of Houston (UH) on November 11, 2021.

2.       Next payment is $500,000 by December 20, 2022

3.       Research programs could start 2023. Peer reviewed papers would be published.

4.       Teaching elective Courses in Tamil would start in August 2023.

5.       Final payment of one million dollars due in 2026.

6.       UH will pay salary for the tenure full time professor.

7.       Government of India is sponsoring a visiting professor to teach at UH.

8.       State of Texas would match the funding to HTSC through TRIP program.

9.       Tamil was taught to Peace core volunteers at UH from 1971.

10.   Focus of HTSC would be Trade, culture of Tamils.

11.   UH Chancellor Dr. Renu Khator , Consul General of India at Houston Hon. Aseem Mahajan and Dean Dan O’Connor are very supportive of HTSC.

12.   HTSC has formed committee to formulate steps to fill gap between the courses taught in Tamil schools in USA and UH Tamil course 101.

13.   HTSC is forming a committee to communicate with all schools teaching Tamil in USA

14. HTSC has received  IRS 501(c) (3) tax exemption. 


ஹூஸ்டன் பல்கலைத் தமிழ் ஆய்வு இருக்கையின் (HTSC) தனித்துவமான அம்சங்கள்:

----------------------------------------------------------------------------------

1. நவம்பர் 11, 2021 அன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு (UH) $ 500,000 வழங்கப்பட்டது.

2. அடுத்த கட்டணம் டிசம்பர் 20, 2022க்குள் செலுத்த வேண்டியது $ 500,000 ஆகும்.

3. தமிழ் ஆராய்ச்சித் திட்டங்கள் 20230-ம் ஆண்டில் தொடங்கலாம். சக மதிப்பாய்வு (Peer reviewed research) செய்யப்பட்ட ஆவணங்கள் வெளியிடப்படும்.

4. 2023 ஆகஸ்ட் திங்களில்,  தமிழில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்பிரிவுகளைக் கற்பிப்பது தொடங்கும்.

5. 2026இல் மீதி செலுத்த வேண்டிய ஒரு மில்லியன் டாலர்கள் ஆகும். இது இறுதித் தொகை. முழுப் பேராசிரியர் நியமனம் பின்னர் தேர்வாகும்.

6. முழு நேரப் பேராசிரியருக்கு ஹூஸ்டன் பல்கலைக்கழகம் சம்பளம் வழங்கும். இது ஆண்டுக்குச் சுமார் $ 150,000 அளவில் இருக்கும்.

7. ஹூஸ்டன் பல்கலைக்கு, வருகை தரும் பேராசிரியருக்கு (Visiting professor) இந்திய அரசு நிதியுதவி செய்கிறது.

8. டெக்சாஸ் மாநில அரசாங்கம் TRIP திட்டத்தின் மூலம் HTSC க்கு நிதியுதவியை  தமிழர்கள் வழங்கும் தொகைக்குச் சமமான அளவில் வழங்கும்

9. 1971 ஆம் ஆண்டு முதல் ஹூஸ்டன் பல்கலையில் அமைதி மைய தன்னார்வலர்களுக்கு (Peace Core volnteers) தமிழ் கற்பிக்கப்பட்டது. இப்போது நின்றுபோனது.

10. ஹூஸ்டன் ஆய்வுப் பேராசிரியர் தமிழர் வர்த்தகம், கடல் வாணிகம், தமிழர்களின் பண்பாடு போன்றவற்றில் ஈடுபடுவார்.

11. UH அதிபர் டாக்டர். ரேணு கத்தோர், ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகம் கௌரவ. அசீம் மகாஜன் மற்றும் டீன் டான் ஓ'கானர் ஆகியோர் HTSCக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர்.

12. அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கும்,  UH தமிழ் பாடநெறி 101க்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதற்கான படிநிலைகளை உருவாக்க HTSC குழுவை அமைத்துள்ளது.

13. அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் அனைத்து பள்ளிகளுடனும் தொடர்பு கொள்ள HTSC ஒரு குழுவை உருவாக்குகிறது

14. HTSC அமெரிக்க அரசாங்கத்திடம் RS 501(c) (3) வரி விலக்கு பெற்றுள்ளது.





திருக்குறள் அழ. இராம்மோகனின் நூல் - மூன்றாம் பதிப்பு, சிகாகோ, 2022

சிகாகோவில் வாழ்ந்த அரிய நண்பர், அழகப்ப இராம்மோகன் (1939 - 2019) கானாடுகாத்தான் என்னும் புகழ்மிக்க ஊரைச் சார்ந்தவர். திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேட்டுடன் மிக அழகிய முறையில் வெளியிட்டவர். தமிழில் அறிவியலைக் கற்றுத்தரப் பல நல்ல ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்த புரவலர். மூன்றாம் பதிப்பாக, திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு அச்சாகிக் கொண்டுள்ளது. அதற்கான நிதி உதவியைச் செய்து தாருங்கள். நன்றி. 

This Noble project is taken forward by International Tamil Language Foundation which is a 501(c) (3) organization. The donation is tax deductible. EIN: 36-3755576.

Donation can be made by check to:

International Tamil Language Foundation, 

8417, Autumn Drive, 

Woodridge, Illinois, 60517, USA.

One can also pay via PayPal or Zelle using meenakshi@kural.org

பெரும் பதவி வகித்தாலும் பழகுதற்கு இனியர். தமிழர் முன்னேற்றம் பற்றியே சிந்தித்தவர். அவர் வெளியிட்ட பண்பாட்டுக் கையேட்டில் என் நூலகத்தில் இருந்த பல கட்டுரைகள், ஒளிப்படங்கள் காணலாம். 

அமெரிக்காவில் தமிழும், திருக்குறளும் வளர்த்த இனிய நண்பர், திருமிகு. அழகப்ப இராம்மோகன். அவரது குடும்பத்தார் அனைவரும்  - குறிப்பாக, மகள் பார்வதி வெங்கட், மகன் சிதம்பரம் ராம்மோகன், திருமதி. மீனாட்சி இராம்மோகன் - எங்கள் நண்பர்கள். ஸ்டீபன் ஹாக்கிங்கின் நூல்களைத் தக்காரைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிட்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலையில் வெளியான இயற்பியல் காணொளிகளைத் தமிழாக்கித் தந்த பெருமகன். தமிழர் வாழ்வு உயர, அறிவியலும், சுயசிந்தனையும், தாய்மொழிப்பற்றும் இன்றியமையாதவை என்று கண்டு வாழ்நாள் எல்லாம் உழைத்தவர். அவரது நூலகம் 10,000 நூல்களைக் கொண்டது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது போல, உலகின் முதல் நூலகம் அலெக்சாண்டிரியாவில் இருந்து சில ஆயிரம் ஆண்டு முன்னே அழிந்தது. அந்த இடத்தைச் சென்று ஆராய்ந்தவர் அவர்.

அழகப்ப ராம்மோகனின் கனவுத்திட்டமாகிய நூலகம், அதில் காணொளிகள், இணைய வசதி, ஏராளமான நூல்கள் என அவரது சொந்த ஊர் கானாடுகாத்தானில் டிசம்பர் 26, 2019-ல் தொடங்கிற்று. 

நான் ஸ்பேஸ் ஸ்டரக்சர்ஸ், ராக்கெட் ஸயன்ஸ்-ல் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்க விண்வெளி நிலையத்தில் பணியில் சேர்ந்த அமயம், திரு. ராம்மோகன் பலமுறை ஹூஸ்டன் இல்லம் வந்திருக்கிறார். அவர் கடின உழைப்பாளி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க முலாம் பூசிய விவிலிய நூல் இருக்கும். அதே போல, அதே பதிப்பகத்தில் தங்க முலாம் பூசி திருக்குறளும், ஓவியமும் (மணியம்செல்வன்), பண்பாட்டுக்கையேடும் மிகுந்த பொருட்செலவில் வெளியிட்டார்கள். அந்நூலுக்காக, ஒரு தலைப்பை வடித்துத் தந்தேன் “Culturescape of Tamils" என்பது அச்சொல். இராம்மோகனுக்கு மிகப்பிடித்த தலைப்பு அது. ஏ. கே. ராமாநுஜன் “Interior Landscape" என்று அகத்திணைக் கோட்பாட்டுக்குப் பெயரளித்தார். அதன் வழி, Culturescape of Tamils என்ற பெயரமைத்தேன். தமிழ்ப் பண்பாட்டுக் கையேட்டில் வெளியான கட்டுரைகள் பலவும் என் நூலகத்தில் இருந்து இராம்மோகனார் தேர்ந்தெடுத்தவை. 1900களின் ஆரம்பத்தில் சுமார் ஒரு இலட்சம் கட்டுரைகள், ஆய்வேடுகள், நூல்கள் பற்றிய விரிவான தமிழ், தென்னிந்திய மொழியியல், சமூகவியல், கலைவரலாறு பற்றிய நூற்றொகுப்பு (Bibliography on Tamils) செய்தேன். அதில் இருந்து ஒருபக்கம், இராம்மோகனின் வலைத்தளத்தில் (https://kural.org/ ) இருந்து பார்க்கலாம்: https://kural.org/culturescape/

                                          சிகாகோ இராம்மோகன் 

                                     --------------------------------------------------------------------

                                      அன்பார்ந்த நண்பர் அழகப்ப ராம்மோகன்

                                      இன்பார் திருக்குறளை இப்பாரில் என்றும்

                                      அமிழ்தெனப் போற்றஅரும் பாதைதந்தார் வாழி

                                      தமிழுள் ளளவும் தழைத்து.  

https://ar-ar.facebook.com/1428383984066811/posts/1428415247397018/  

தங்க முலாம் பூசிய திருக்குறள் நூல்

--------------------------------------------------------------------------------

திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே. தொடர்புக்கு :- திரு. அழகப்பா ராம்மோகன், திட்ட இயக்குநர், உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா.










திருக்குறள் - தங்க முலாம் பூசிய பதிப்பு:
----------------------------------------------------------------
 தமிழ் மறை திருக்குறள்

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை (International Tamil Language Foundation) என்ற அமைப்பு, தமிழ் மறை திருக்குறள் என்ற நூலை வெளியிட்டு இருக்கின்றது.

‘இது, தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு,
தமிழின எதிர்கால வழிகாட்டி’
என்று முகப்பில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

இதுவே நான் பார்த்த குறள் நூல்களுள் சிறப்பானது.

1815 பக்கங்கள். தலைமைத் தொகுப்பாசிரியர், அழகப்பா ராம்மோகன். உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநரும் இவரே. நூலின் நுழைவாயிலில்,

‘தனிப்பட்ட தமிழர்கள் தமிழை மறக்கலாம், தங்களை மறக்கலாம், இறந்தும் போகலாம். ஆனால், தமிழ்ச் சமுதாயம் தன்னை மறக்க இயலாது. அது இறப்பற்றது. அதன் ஒட்டுமொத்தமான கூட்டு நினைவுகள், புத்தக வடிவில் அழியாது காக்கப்பட்டு வந்துள்ளன. அவை என்றும் நிலைத்து நிற்கும். நமது கிரேக்க, ரோம தோழமை நாகரிகங்கள் மறக்கப்பட்டபோதிலும், ஐரோப்பிய மறுமலர்ச்சி அந்த கிரேக்க, ரோம நாகரிகங்களின் மீட்டு எடுப்பில்தான் வெற்றி பெற்றது. அதே முறையில், இந்தப் புதிய ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் இனம் காணப்போகும் மறுமலர்ச்சி வெற்றி பெற வேண்டும் என்றால், அது அதன் பண்டைய நாகரிகச் சிறப்பை மீட்டு எடுப்பதில்தான் உள்ளது. அதற்காகவே இந்த நூல் முயற்சி’

என்று குறிப்பிட்டு உள்ளார். அத்துடன், ‘இது உங்கள் மனை. இந்த மனைக்குப் பரப்பும், உயரமும் தேவை. எப்படிச் செய்வது என்பது, உங்களைப் பொறுத்தது. எவ்வளவு சிறப்பாக, வலுவாக, உயரமாக, அகலமாகச் செய்ய முனைந்தாலும், இந்தக் கருவறை-மையம்-முற்றம் இடம் கொடுக்கும்’ என்கிறார்.

இந்த நூலின் ஆக்கத்தில், அமெரிக்கா, தமிழ்நாடு, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, மலேசியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் பங்கு அளித்து உள்ளனர். அச்சிடுவதற்கான நிதி உதவியையும், பன்னாட்டுகளில் வசிக்கின்ற 97 தமிழ்ப் புரவலர்கள் பகிர்ந்து கொண்டு உள்ளனர். 2000 ஆம் ஆண்டு ஜனவரியில், முதல் பதிப்பாக, அமெரிக்காவில் பத்தாயிரம் படிகள் அச்சிடப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு குறளையும் இருவகையாக எழுதி இருக்கின்றார்கள். முதலில், இலக்கண மரபில் பெரிதாகவும், அடுத்து, இக்கால நடைமுறைக்கு ஏற்றவாறு சொற்களைப் பிரித்தும் எழுதி இருக்கின்றார்கள். ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து இருக்கின்றார்கள்.

புத்தகத்தைத் திறந்தவுடன் உள் அட்டையில் கீழ்காணும்செய்திகள் இடம் பெற்று உள்ளன:

தமிழர் வரலாறு; மற்றவர்கள் பார்வையில்...

* ‘பாண்டிய அரசு ஒரு ராணியால் ஆளப்படுகிறது’ - மெகஸ்தனிஸ், கிரேக்கத் தூதர், கி.மு. 400

* ‘பான்-கான்-டோ-லுh வில் இருந்து, கப்பல் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் பயணித்தால், காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி, பரந்தும், மக்கள் மிகுந்தும், பலவிதமான பொருள்களோடு முத்தும், மணி வகைகளும் நிரம்பித் திகழும். பேரரசர் வான் (கி.மு. 140-86) காலம் முதல் நம்முடன் வாணிபம் செய்து வருகிறார்கள்.’ - பான் கோ, சீன விருந்தாளி, கி.மு. 100

* இந்தியாவின் ஒரு இடத்திலிருந்து, அதுவும், பாண்டிய அரசனின் பரிசுகளோடு அனுப்பி வைத்த தூதுவர்கள், அகஸ்டஸ் சீசரிடம் வந்தார்கள். - கிரேக்க நாட்டு ஸ்டிராபோ, கி.மு. 10

* பாண்டிய நாட்டு முத்துப் பண்ணைகள், தெற்கே குமரி முனையிலிருந்து, கொற்கை வரை விரிந்து உள்ளது. கொற்கைக்கு அப்பால் இருககும் உறையூருக்கு, எங்குமில்லாதபடி கரையோரம் விளைந்த முத்துகள் கொண்டு வரப்பட்டு, மெல்லிய துணி வகைகளோடு ஏற்றுமதி ஆகின்றன. - பெரிப்ளஸ், ரோம், கி.பி. 75

* தமிழர்கள், எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டுமல்லாமல், வானவியல் அறிவும் பெற்றுள்ளார்கள். ஆடவர்கள் எல்லோரும் ஓலைச் சுவடிகளில் பாதுகாக்கப்பட்ட சித்தாந்தம் என்ற வழிகாட்டும் நூலைக் கற்கிறார்கள். - மா டவான்லின், சீன வரலாற்று ஆசிரியர், கி.பி. 550-600

* காஞ்சித் தலைநகரம்: இது வளமான பூமி. பூவும், கனிகளும் பெருமதிப்புள்ள பல்வகைப் பொருள்களும் கொண்டு இருந்தது. இதன் மக்கள் தைர்யம் உடையவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும், பொது நலம் பேணுபவர்களாகவும், கல்வியில் நாட்டமுடையவர்களாகவும் இருந்தார்கள். - யுவான் சுவாங், சீனப் பயணி, கி.பி. 640

* குலசேகர பாண்டியனுடைய அரசு, செல்வம் கொழிக்கும் வளமுடையது. மதுரை நகர் அரசப் பெட்டகத்தில் 1200 கோடி பெறுமானமுள்ள தங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தவிர, பெருமதிப்புள்ள முத்து, சிகப்பு, பச்சை போன்ற, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத மணிவகைகள் இருந்தன. - வாசாஃப், இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர், (சிராஸ்ரீ) கி.பி. 1281

* உடன்பிறந்த சகோதர மன்னர்கள் ஐவர் இருக்கிறார்கள். இதில் ஒருவரான சுந்தரபாண்டித் தேவர் முடிசூட்டப்படுகிறார். இந்த அரசகுமாரன் சிறப்புகள் எல்லாம் பெற்ற சான்றோன். - மார்க்கோபோலோ, வெனிஸ்சிலிருந்து வந்த பயணி, கி.பி. 1293

* தமிழர்கள் கவிதை, ஓவியம், சிற்பக்கலையில் மகோன்னதமான முத்திரை பதித்தவர்கள். ஆனால், அவர்களது தலைசிறந்த படைப்புகள் படிமங்களே. அதில் தலையாயது சிவ வடிவம். உலோகத்தில், பிளாரன்ஸ் தந்த மேதை டான்டொலோ பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே, 1011 ஆம் ஆண்டில் வார்க்கப்பட்டது. இதைப்போல, பண்டைய கிரேக்கம் முதல் இன்று வரை எதுவும் படைக்கப்படவில்லை. - மைக்கேல் வுட், இங்கிலாந்து ஆசிரியர், உலக நாகரிகங்கள்.

அடுத்ததாக, திருக்குறள் பெருமை என்ற தலைப்பில், ஒரு கட்டுரை இடம் பெற்று உள்ளது. வா.செ. குழந்தைசாமி, எஸ். மகராஜன், ஆல்பர்ட் சுவைட்சர், உ.வே.சா., எம்.ஏரியல் ஆகியோரது கருத்துகளைத் தொகுத்து, வா.செ. குழந்தைசாமி எழுதி உள்ளார். திருக்குறள் குறித்து ஏராளமான செய்திகள், ஒப்பீடுகள் இடம் பெற்று உள்ளன.

ரோமில் நடந்த அகஸ்டஸ் பேரரசன் முடிசூட்டு விழாவில், பாண்டிய மன்னனின் தூதர் கலந்து கொண்டதாக, கி.பி. முதல் நூற்றாண்டில், முதலாவது புவியியல் நூலை எழுதிய கிரேக்க அறிஞர் ஸ்டிராபோ குறிப்பிட்டு உள்ளார்.

கி.மு. முதல் நூற்றாண்டிலேயே, மலேசியா, வட போர்னியோ, வடக்கு ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன், தமிழர் விரிவான வாணிக உறவு கொண்டு இருந்தனர் என்று, புகழ் பெற்ற தொல் பொருளியல் அறிஞரும், வரலாற்று ஆசிரியருமான ஆர்.பி. டிக்சன் வலியுறுத்துகிறார்.

தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளுக்கும், சீனப் பேரரசுக்கும் இடையில், தூதரகத் தொடர்புகள் இருந்து வந்ததற்கான சான்றுகள், சீன இலக்கியங்களில் காணப்படுவதாக, பால் பெரியோ குறிப்பிடுகிறார்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சீன எழுத்தாளர் பான் கூ என்பார், ஹீவா பேரரசர் காலத்தில், சீனாவுக்குத் தூதர்களைச் சோழ அரசன் அனுப்பியதாகக் கூறி உள்ளார். (கே.எம். பணிக்கர், இந்தியாவும், சீனாவும் பக்கம் 17,19).

இந்நூலின் உள்ளடக்கம்:

பகுதி 1

திருக்குறள் அறிமுகம், திருக்குறள் பெருமை, அதிகார அடக்கம், சிந்தனைச் சாறு, அதிகார ஓவியங்கள், திருக்குறள் மூலம், ஆங்கில மொழியாக்கம், நுண்பொருள் விளக்கவுரை, உரையாசிரியர் பக்கம், பாட்டு முதற் குறிப்பு அகராதி, குறள் பொருள் அகராதி, திருக்குறள் மந்திரங்கள், வள்ளுவர் படக்கதை, மொழிபெயர்ப்புப் பதிப்புகள்.

பகுதி 2

தமிழ் வாழ்த்து, தமிழ்ச் சான்றோர் வாழ்த்து, தமிழ் மொழி - ஒரு அறிமுகம், பண்பாடு, தமிழ்ப் பண்பாடு, தமிழினப் பண்பாட்டுக் குறியீடு, இன்றைய தமிழினம், தமிழ் ஒரு செவ்வியன் மொழி, தமிழின் தொன்மையும், தொல்காப்பியமும், தமிழின் கொடை, இலக்கணமும் செய்யுள் மரபும், தமிழ் ஒலியியலும் வரி வடிவமும், தமிழ்க் கவிதை ஓவியங்கள், சங்க காலத் தனிச் சிறப்பு, தமிழர் சட்டங்கள், தமிழ் மரபிசை, நாட்டியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் வரலாறு, மருத்துவ இயல், கணித இயல், வானவியல், தொழில் நுட்ப மேன்மை, சிவ நடராச தத்துவம், தமிழர் வளர்த்த சமயங்கள்.

பகுதி 3

தமிழின எதிர்கால வழிகாட்டி

புதிய ஆயிரம் ஆண்டுகள், அற வழி, மனம், மனப்பயிற்சி வழி உள்நோக்கு, உடற்பயிற்சி, சிந்தனைத் திறன் வளர, உங்கள் சிக்கல்கள் தீர, கடமை ஆற்றலே தவம், தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பு, தமிழினம் ஓங்குக, வேற்றுமைகளில் ஒருமைப்பாடு, வள்ளுவக்குக் கடிதமும், பதிலும், வாழ்வுக்கு நெறிமுறைகள், தமிழின் எதிர்காலம்

தொடர்புக்கு:
International Tamil Language Foundation,
8417, Autumn Drive, Woodridge, Illinois, 60517 USA
Web: www.kural.org
e-mail: thiru@kural.org
Ph: 630-985-3141

- அருணகிரி (writerarunagiri@gmail.com)


தமிழன் இராம்மோகன்
-----------------------------------------
                                 ஈரோடு தமிழன்பன்

அமெரிக்காவின்
அகரத்தமிழன் இராம்மோகன்
அழகப்பன்
இன்றில்லை என்பதறிந்து
நேற்றும்
கண்ணீர் வடிக்கிறது
நாளையின் கண்களிலும்
கண்ணீர் தேங்குகிறது

பொதிகை
அனுப்பிவைத்த ஒரு
புலவன்போல் இருந்தவன்
 வைகை
அனுப்பிவைத்த  ஒரு
புரவலன்போல்
இருந்தவன் இன்றில்லை

கனவுகளிலும்
தமிழ்வளர்க்கத் திட்டமிட்டவன்
நனவுகள் கைகளில் தானே
ஆயுதமாய்த்
தமிழ்ப்பகையை எதிர்த்தவன்
இன்றில்லை

இன்று-
எமக்குப் பகல்ஒழிக்கும்
இரவானது இடரானது

ராம்மோகன்
இறப்பறிந்து தமிழ்த்தாய்
னகர இறுவாய்
எல்லா எழுத்துகளுக்கும்
கருப்புடை அணிவித்தாள்

வள்ளுவனாரின்
ஆயிரத்து முன்னூற்று முப்பது
அருங்குறட்பாக்களும்
கைகளில் மலர்வளையங்களோடு
ராம்மோகன் வீட்டு
வாசலில் நிற்கின்றன

முப்பாலிலும்
துயரம் பொங்கி வழிகிறது
ராம்மோகன்
முகம்பார்த்து அழுகின்றன

செப்பலோசை
ஒனறும் செப்பமுடியா நிலையில்
ஊமை ஓசை உள்ளிருந்து
அரற்றுகின்றது

அவருடைய
இதயநேர்த்தியும்
ஈரக்கனவும் படைத்த
பரிசுப்பதிப்பு வள்ளுவத்தின்
பக்கம்
ஒவ்வொன்றிலிருந்தும்
திருவள்ளுவர்
தேம்பி அழுகிறார்.

கையேடு
தமிழருக்குத் தயாரித்தவன்

யாரோடு புறப்பட்டுப் போனான்
தெரியவில்லையே
பொய்யோடு வாழாதவன்
இனி
மெய்யேடு தந்த
ஐயன்
வள்ளுவனோடு வாழலாம்
என்று புறப்பட்டுப் போனானோ?

மழு ஆயுதம் காட்டும் ’கேரளாந்தகன்’ ஸ்ரீ ராஜராஜ சோழனின் இரண்டு பொற்காசுகள்

 
Two Gold Fanams of Rajaraja Chozhan I
----------------------------------------------------------
A brief note on a Rajaraja Chozhan I gold coin. The king appropriates the frequent Chera emblems, Mazhu and Ankusham, after his first prominent victory over the Cheras. This note has appeared in the 2022 Deepavali Malar of OmSakthi magazine, Coimbatore.
https://archive.org/details/rajaraja-cholan-battle-axe-coin/page/n3/mode/2up

Oswal Auction company has put on sale a coin with the legend, Keralandakan. This gold coin weighs 0.27 grams. Sri. Alakkudi A. Seetharaman has explained that this is the coin issued by Rajaraja Chozan I after his first major victory against Cheras in battle, “Kaandaluurc caalai kalam aRuttu aruLi”. It is highly likely that the letter "ma" (ம) in front of the cockerel represents Mazhu 'battle-axe' as it becomes clear when the second associated coin is studied.


Figure 1. Rajaraja I coin, with the legend, KeraLaantakan (Reverse side)


There is another related gold coin, of the same weight (0.27 grams), issued by Rajarajan I. This is put on sale by Marudhar Arts, Bangalore (Figure 2). In this coin, there is no inscription in Tamil script. Instead, there is a battle-axe (Mazhu), and an elephant-goad “ankusham”. Note that both ankusham and Mazhu are typically seen in Chera coins in Sangam era or even in Venad Chera coins when Cheras became under the rule of Chozha sovereignty. “vEzham uDaittu malainADu”- Auvaiyar. It appears that Chola chakravarti appropriates the typical Chera symbol, Parashu/Mazhu and uses it. It is interesting that the elephant goad, usually standing vertically along with bow-arrow in Chera coins is shown in a fallen position under the Cholas. In his later years, he builds the famous Dakshina-Meru at Tanjore, as Cheras are driven slowly from their Sangam Age capital, Vanji (Karur) first to Dharapuram, and then to AnjaikkaLam by Imperial Cholas. The hill in the Vanji city was called Meru ‘Axis Mundi’ and was used for Rajya Pattabhishekam by Cheras. The original Chera capital, Karur’s degrading was accomplished by Chozha kings’ campaign. This can be seen in Tiruppukazh, Kudaiyuur kaifiyat (Colin Mackenzie mss.) etc.,



Figure 2. Rajaraja I coin, with battle-axe and elephant-goad on the reverse side.


On the Reverse side:
Outline of the large Mazhu ‘Battle Axe’. Note the Ankusham ‘elephant goad’ of Cheras shown in the “fallen” horizontal position. Both are usually seen in Chera coins even in Sangam age.

On the Obverse side:
Outline of the (single-bitted) Axe, with its handle, is shown in red. Note the rooster standing above the buffalo (like Durga) is wearing a garland of human heads, those fallen in the warfront. There is a single-bitted Axe called Mazhu in Tamil above the right horn of the buffalo head.  There are four human heads around the left horn of the buffalo.

I've marked  the battle field (களம்) or battle ring (கழல்) in blue color on the obverse side. To study this Chola gold coin, no rotation of the reverse side should be done. The seller has placed carefully the views of both obverse and reverse sides. As sellers of 1000s of ancient coins, observe carefully their photo of the two sides of the Chola gold coin showing the top-bottom orientation of the coin on both sides. See the elephant-goad (Ankusham), the Chera emblem, fallen due to Sri Rajaraja Devar's war at Kandalur Salai on the reverse side. Also, see the body parts cut by the battle-axe on the reverse side shown in red color. ~NG



தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு, கோயம்புத்தூர், 25-9-2022

 தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு, கோயம்புத்தூர், 25-9-2022


 








NGM-college-Pollachi-Bharatiyar

 பாரதியார் சிலை நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.








திருமந்திரம் காட்டும் சமாதி வழிபாடு

திருமந்திரம் காட்டும் சமாதி வழிபாடு

- கி.வா. ஜகந்நாதன் -

 ஞானஒளி

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் மன்னர்கள், வீரர்கள், ஞானியர்கள் காலமானால், அவர்கள் இறந்த இடத்திலே சமாதி கட்டி வழிபட்டு வந்தார்கள். மக்கள் இறந்ததால் அவர்கள் உடம்பை இடுவது, சுடுவது என்று இரண்டு வகை உண்டு. இடுவதாவது மண்ணில் புதைத்தல், அந்த இடத்தை "இடுகாடு” என்பார்கள். சுடுவது எரிமூட்டி ஸமஸ்காரம் செய்தல், அதைச் செய்யும் இடம் "சுடுகாடு”.

அரசர்கள் இறந்தால் அங்கே ஒரு கல்லை நட்டு அதை வழிபடுவார்கள். 'கல்லெடுப்பு' என்று இழவைச் சொல்வார்கள். கல்லெடுப்பு என்பது கல்லை நடுதல் என்ற பொருளுடையது. அரசர்கள் சமாதியை அந்த இடத்தின் பெயரோடு பள்ளி என்பதைச் சேர்த்துக் குறிப்பார்கள். “சேரமான் சிக்கற் பள்ளித்துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்” என்று சேரமான் பெயர் புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. அவனுடைய இயல்பான பெயர் "செல்வக்கடுங்கோ வாழியாதன்” என்பது. அவன் "சிக்கல்” என்னும் இடத்தில் இறந்தான், அங்கே அவனுக்குச் சமாதி எழுப்பினார்கள். அதனால் "சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்” என்று குறிப்பிட்டார்கள்.

இப்படியே "சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி” என்றும், "சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்" என்றும் சில சோழ மன்னர்களைக் குறிக்கிறார்கள். வாவியைச் சார்ந்த சோலைக்கு "இலவந்திகை” என்று பெயர். அத்தகைய சோலையில் சமாதி கட்டியிருப்பதால் அதற்கு "இலவந்திகைப்பள்ளி” என்ற பெயர் வந்தது. "பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய நன்மாறன்'', "பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி” என்ற பாண்டியர்களின் பெயர்களிலிருந்து அவர்கள் சமாதி இருந்த இடம் முறையே "வெள்ளியம்பலம், கூடகாரம்” என்று தெரிகின்றது.

சமாதி மேலே நட்ட கல்லுக்கு மயிற்பீலி சூட்டி மதுவை நிவேதனம் செய்வது வழக்கம் என்று தெரிகிறது.

“நடுகல் பீலி சூட்டி நார் அரி

சிறுகலத்து உழுப்பவும் கொள்வன் கொல்லோ” (புறநானூறு 232)

(பீலி-மயிலிறகு, நாரிஅரி பன்னாடையால் வடிகட்டப்படும் கள், சிறுகலத்து -சிறிய பாத்திரத்தில், உகுப்பவும் - விடவும்)

வீரர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு அவர்களுடைய பெயரையும் வீரச் சிறப்பையும் அதில் எழுதுவதுக்கென்று பழம் பாடல்களால் தெரிய வருகின்றன.

“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து

இனி நட்டனரே கல்லும்” (புறநானூறு : 266)

இத்தகைய கற்களுக்கு வீரக்கல் என்று பெயர். இப்படியே பதிவிரதைகளின் சமாதியில் நடும் கல்லுக்கு மாஸதிக்கல் என்று பெயர். வீரர்கள் யாவரிலும் மேலான வீரர்கள் ஞானிகள்.

"புலனைந்தும் வென்றானதன் வீரமே வீரம்” என்று ஔவையார் பாடுகிறார்.

“ஆரம் கண்டிகை; ஆடையும் கந்தையே;

பாரம் ஈசன் பணியலது ஒன்றிலார்;

ஈர நெஞ்சினர்; யாதும் குறைவிலார்;

வீரம் என்னால் விளம்பும் தகையதோ?”

என்று பக்தி வீரர்களைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் பாராட்டுகிறார்.

அத்தகைய ஞான வீரர்களின் திருமேனியை நெருப்புக்கு இரையாக்காமல், பூமியில் புதைத்துச் சமாதி கட்டி கோயில் எழுப்பி வழிபட்டார்கள். சித்தர்கள் பதினெட்டுப் பேர்கள். அவர்கள் சமாதியடைந்த இடத்தில் இப்போது ஆலயங்கள் எழுந்து வெவ்வேறு மூர்த்திகளின் கோயில்களாகச் சிறப்படைந்திருக்கின்றன. பழனியைப் போகருடைய சமாதி என்று சொல்வார்கள்.

ஞானிகளைத் தகனம் செய்யக்கூடாதென்றும், அவர்களை மண்ணின் வயிற்றில் புதையலாகச் சமாதி செய்து வழிபடவேண்டும் என்றும் திருமூலர் தாம் பாடிய திருமந்திரத்தில் சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்க்கலாம்.

முடிவேயில்லாத ஞானியினுடைய திருவுடம்பைத் தீயில் இட்டு அது எரிந்து போனால் நாடெல்லாம் கொடிய தீயினால் அழிவை அடையும்; வெளியிலே போட்டு நாய் நரிகள் உண்டால் யுத்தம் உண்டாகிப் பலர் மடிந்து நாய்க்கும், நரிக்கும் உணவாவார்கள்.

"அந்தம் இல் ஞானிதன் ஆகம் தீயினில்

வெந்திடின் நாடெல்லாம் வெம்பும் தீயினில்

நொந்தது நாயநரி நுகரின், நுண்செரு

வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே”

கணக்கு இல்லாத புகழையுடைய ஞானியின் உடம்பை நெருப்புத்தாவி எரித்தால் இறைவன் கோயிலில் நெருப்பையிட்டது போலாகும், நிலத்தில் மழை பெய்யாது, பஞ்சம் ஏற்படும்; அரசர்கள் தம் அரசை இழப்பார்கள்' என்றும் திருமூலர் சொல்கிறார். ஞானியருடைய திருமேனி கோயிலைப் போன்றது. அதை எரிப்பது ஆலயத்தைக் கொளுத்துவது போன்ற பாவத்தை உண்டாக்கும்.

'அத்தகைய ஞானிகளை மண்ணில் புதைப்பது பெரிய புண்ணியச் செயல். நெருப்பு அவ்வுடம்பைத் தீண்டினால் நாட்டில் பலவகை அழிவுகள் நேரும். மண்ணின் மேல் கிடந்து அழிந்தால் நாட்டுக்கு அழகாக உள்ள இடங்களெல்லாம் நாசமாகிவிடும்; உலகில் எல்லாவிடங்களிலும் நெருப்பினால் சேதம் உண்டாகும்' என்று வேறொரு பாட்டில் சொல்கிறார்.

ஞானி சித்தியடைந்தால், அவருடைய உடலை பூமியில் குகைபோலச் செய்து அடக்கம் செய்தால் அரசர்களும் பூமியில் உள்ள மக்களும் முடிவில்லாத இன்பத்தையும் அருளையும் பெறுவார்கள்' சமாதியின் அளவைக்கூட குறிக்கிறார் திருமூலர்.

ஒன்பது சாண் ஆழமாகக் குழிவெட்ட வேண்டுமாம், சுற்றிலும் ஐந்து ஐந்து சாண் அகலம் இருக்க வேண்டும். உள்ளே குகை முக்கோண வடிவமாக அமைத்து ஒவ்வொரு பக்கமும் மூன்று  மூன்று சாணாக அமைக்க வேண்டும். அதில் பத்மாசனமாகத் திருவுடம்பை வைக்க வேண்டும்.

எந்த இடங்களில் ஞானிகளுக்குச் சமாதி அமைக்கலாம்? ஞானிகள் வாழ்ந்த வீட்டில் வைக்கலாம், சாலையோரத்தில் வைக்கலாம், குளக்கரையிலும், ஆற்றின் நடுத்திட்டிலும், சோலையிலும், நகரத்திலுள்ள நல்ல பூமியிலும், காட்டிலும், மலைச்சாரலிலும் சமாதி வைக்கலாம்.

பஞ்ச லோகங்கள், நவரத்தினங்கள் ஆகியவற்றைச் சமாதிக் குழியின் கீழே பரப்பி அதன்மேல் ஆசனம் இட்டு, அதற்கு மேல் முஞ்சிப்புல்லை வைத்து விபூதியைக் கொட்டி, அதன்மேல் சூர்ணத்தைப் போட வேண்டும். அதன்மேல் மாலை, சந்தனம், கஸ்தூரி, புனுகு, பன்னீர் அவற்றைச் சேர்த்துத் தூபம் காட்ட வேண்டும். விபூதியை உடம்பின்மேல் உத்தூளனமாகத் தூவி ஆசனத்தின்மேல் வைத்துத் திருமேனியின் மேல் மலர், வாசனைப்பொடி, விபூதி ஆகியவற்றை இடவேண்டும். பிறகு நான்கு பக்கமும் மண்ணைக்கொட்டி, அன்னம், கறி, இளநீர் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து மேலே மூடிவிட வேண்டும்.

அப்பால் வெண்ணீ றும் வாசனைப் பொடியும் தூவி, மலர் பல தூவி, தர்ப்பைப்புல்லும் வில்வமும் இட்டுப்பிறகு திருமஞ்சனம் செய்வித்து, மூன்று சாண் அகலம் மூன்று சாண் நீளமாக மேடை கட்ட வேண்டும்.

அப்படி அமைத்த இடத்தில் அரசமரத்தை நடலாம், சிவலிங்கத்தை வைத்துப் பூசிக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைக்கலாம். அந்த மூர்த்திக்குச் சோடசோபசாரம் செய்ய வேண்டும்.

“ஆதன மீதில் அரசு சிவலிங்கம்

போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து

மேதகு சந்நிதி மேவுத் தாம்பூர்வம்

காதலில் சோடசம் காண்உப சாரமே”

என்று சொல்லி முடிக்கிறார்.

இவ்வாறு ஞானியர்கள் சமாதி அடைந்த இடங்கள் இன்று கோயில்களாகத் திகழ்வதைப் பல இடங்களில் காணலாம். தருமபுர ஆதினத்தின் மூல ஆசிரியராக இருந்தவர், குரு ஞானசம்பந்தர், அவருடைய சமாதி இன்று ஞானபுரீசுவரர் ஆலயமாக விளங்குகிறது. திருவாவடுதுறை மடத்தின் முதல் ஞானாசிரியரின் சமாதியில் அவருடைய திருவுருவத்தையே நிறுவி வழிபட்டு வருகிறார்கள். பல இடங்களில் பிருந்தாவனமாகிய துளசி மடம் கட்டி வழிபடுகிறார்கள்.

ஞானிகளை எரிப்பது தவறு என்பதும், அப்படிச் செய்வதனால் நாட்டுக்குக் கேடு உண்டாகும் என்பதும், அவர்கள் திருமேனியைச் சமாதியில் வைத்து வழிபடுவதனால் நன்மை உண்டாகும் என்பதும் தமிழ்நாட்டில் பல நூறாண்டுக் காலமாகப் பெரியோர்கள் அறிந்து அறிவித்த செய்திகள், இதைத் திருமூலர் திருமந்திரம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது.

தமிழ்நாடு மாநில முருக பக்தர்கள் பேரவை - ஐந்தாவது மாநில மாநாடு

தமிழ்நாடு மாநில முருக பக்தர்கள் பேரவை - ஐந்தாவது மாநில மாநாடு

திருமுருக பக்தர்கள் பேரவையின் மூன்று நாள் மாநில மாநாடு, பெருந்துறையில் ஆக., 12ல் துவங்குகிறது.

சிரவணபுரம் கவுமார மடாலயத்தை தலைமையிடமாக கொண்ட மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், ஐந்தாவது மாநில மாநாடு, பெருந்துறை சக்தி மண்டபத்தில் ஆக., 12, 13, 14ல் நடக்கிறது.மாநாட்டில் நம் கலை, கலாசாரம், பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முருக பக்தர்கள் ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருமுருக பக்தர்கள் பேரவை, கொங்கு மண்டலம் தமிழக சைவ நெறிக்கழகம், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்து வருகிறது.மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கேற்கவும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் விருப்பம் உள்ளவர்கள், கவுமார மடாலயத்தை 98656 23817, 93631 58914 என்ற எண்களிலும், பெருந்துறை திருமுருக பக்தர்கள் பேரவையினரை, 77080 85424, 94434 98561 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

https://simplicity.in/coimbatore/tamil/news/101080/food

தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் மாநில மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் - கோவையில் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள்
கோவை: திருமுருக பக்தர்கள் பேரவையின் மூன்று நாள் மாநில மாநாடு, பெருந்துறை, சக்தி மண்டபத்தில் ஆகஸ்ட் 12, 13, 14ம் ஆகிய மூன்று நாட்கள் நடக்கவுள்ளது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, திருமுருக பக்தர்கள் பேரவை, கொங்கு மண்டலம் தமிழக சைவ நெறிக் கழகம், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்த மாபெரும் மாநாட்டில் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் பக்தர்கள், மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோவை கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் கூறியதாவது:-

பன்னெடுங்காலமாக, நமது முன்னோர் முருக வழிபாட்டை போற்றி கொண்டாடி வருகின்றனர். முருக வழிபாட்டை முன்னெடுப்பதில் பல்வேறு அமைப்புகள், காவடிக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்படுகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
அத்தகைய பக்தர்களை ஒருங்கிணைக்கும் விதமாக, கவுமார மடாலயத்தின் மூன்றாம் குரு மகா சந்நிதானம், 1990ல் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டார்.
அதன் பயனாக, முதலில் 5 மாவட்ட மாநாடும், 1992ல், பழநியில் முதலாம் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடும் நடத்தப்பட்டன. வழித்தடங்களில், தனிச்சாலை சிரவணபுரம் கவுமார மடாலயத்தை தலைமையிடமாக கொண்ட மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், ஐந்தாவது மாநில மாநாடு பெருந்துறை சக்தி மண்டபத்தில் ஆகஸ்ட் 12, 13, 14ம் ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து அச்சுறுத்தல் உள்ளதால், தனிச்சாலை வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது, திண்டுக்கல் முதல் பழநி வரை, அப்போதைய எம்.பி., கார்வேந்தன் தனிச்சாலை அமைத்து கொடுத்தார்.
அதேபோன்ற, தனிச்சாலை வேறு வழித்தடங்களிலும் அமைத்து தர வேண்டும், யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும், பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.
அடுத்த தலைமுறைக்கு, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு காப்பீடு வாயிலாக குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அரசு முன் வந்து பக்தர்களிடம் சிறு தொகை பெற்று காப்பீடு வழங்கலாம். இதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது, முருக பக்தர்கள் அறக்கட்டளையின் கோரிக்கை.
இந்த மாநாட்டில் நம் கலை, கலாசாரம், பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணிகளும் மேற்கொள்ளப்படும். முருக பக்தர்கள் ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை, திருமுருக பக்தர்கள் பேரவை, கொங்கு மண்டலம் தமிழக சைவ நெறிக்கழகம், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை ஆகியோர் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் பக்தர்கள், மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, குமரகுருபர சுவாமிகள் தெரிவித்தார்.
மாநாட்டில் பங்கேற்கவும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் விருப்பம் உள்ளவர்கள், முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை தலைமையகமான கவுமார மடாலயத்தை 98656 23817, 93631 58914 என்ற எண்களிலும், பெருந்துறை திருமுருக பக்தர்கள் பேரவையினரை, 77080 85424, 94434 98561 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

One of the successful projects was to declare Thai Poosam celebrating Muruka Bhakti as a Tamil Nadu Govt. Holiday. ஐந்து படங்கள் சேர்த்துள்ளேன். உ-ம்: பழனியில் 1992-ம் ஆண்டு நடந்த முதல் மாநாடு. இப் பேரவை, சிரவை, பேரூர், பழனி ஆதீனங்கள் அறிவுரையால், தமிழக அரசு தைப் பூசத் திருநாளை அரசாங்க விடுமுறை நாள் என அறிவித்தது தமிழ்நாடு மாநில ஹிந்து சமய வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.