தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார், தவசாயி அம்மாள் நிறைவாழ்வு வாழ்ந்து 93 வயதில் மறைந்தார். அப்பெயரின் பொருளைச் சில நண்பர்கள் வாட்ஸப் குழுக்களில் வினவியிருந்தனர்.
தப்த-/ தபஸ்- என்பது தவம் என்று தமிழில் தற்பவம் ஆகும். கோபம் > கோவம்; பாபம் > பாவம், ... போல, தபஸ் > தவசு, தவம் என்றாகும். மனஸ் > மனசு, மனம் ஆதற் போல. தபஸ்/தவம் = வெப்பம். காவேரி டெல்ட்டா பகுதியில், தவசிப்பிள்ளை = சமையல்காரன். தவம் செய்பவரும் தவசி. உ-ம்: காஞ்சி பெரியவர் ஒரு தவசி. தபஸ் > தவசு + ஆயி = தவசாயி. அவர்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் குலதெய்வங்கள் ஒன்றில் பெயர் ஆகலாம். அருந்தவநாயகி பல பெரிய சிவாலயங்களில் அம்பாள் பெயர். தவச்செல்வி, தவக்கொடி, ... இப்பொழுது, தவசாயி என்னும் பெயர் அருகிவிட்டது. வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்த தவசாயி அம்மாளுக்கு நினைவஞ்சலி. -ஆயி என முடியும் பழைய தமிழ்ப் பெண்பெயர்கள்: நீலாயி, பச்சாயி, ஓச்சாயி, பேச்சாயி, முத்தாயி, தவசாயி, பொன்னாயி, ..... நாகப்பட்டினத்தில் நீலாயதாக்ஷி. மக்கள் நீலாயி என்று பெயர் வைப்பர். குங்கிலியக் கலய நாயனார் பெயர் நீலாயி எனக் குலோத்துங்க சோழன் கல்வெட்டு உண்டு (தேவாரம், தருமை ஆதீனம்). கோவை அருகே பேரூரில் அம்மன் பெயர்: பச்சைநாயகி. பச்சாயி, பச்சையம்மாள், மரகதவல்லி, மரகதாம்பிகை, ... எனப் பெயர். நீலம், பச்சை எல்லாம் கௌரியின் கருமை நிறங்காட்டும் பெயர்கள். கௌரி பெயர்க்காரணம்: Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html
சென்ற வாரத்தில் அவரது மகன், முதல்வர் ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்: http://nganesan.blogspot.com/2020/10/htsc-fundraiser-oct10-2020-dinamalar.html
Dr. N. Ganesan