மதுரை அருகே கிண்ணிமங்கலத்தில் ஏகநாதன் மடம் இருக்கிறது. இங்கே, சுமார் 1800 ஆண்டுகளுக்கு
முற்பட்ட தமிழ் பிராமி (அ) தமிழி எழுத்துடன் கூடிய முகலிங்கம் கிடைத்துள்ளது. ”எகன் ஆதன் கோட்டம்”
என இரண்டு வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டு. எ என்னும் குறில் எகரம் தொல்காப்பியச் சூத்திரப்படி
ஏகாரத்தின் உள்ளே புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது மிகச் சிறப்பானது. எகரப் புள்ளி எழுத்தை
மசிப்படி எடுத்த முனைவர் வெ. வேதாசலம் படித்துள்ளார். ஏகாரத்தின் உள்ளே புள்ளி அறச்சலூர் இசைக்கல்வெட்டு,
பூலாங்குறிச்சி, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் பீடம் , சில நடுகற்கள் போன்றவற்றில்
காணலாம். குறில் எகரத்தைப் புள்ளியுடன் எழுதியுள்ள கல்வெட்டுக்களில் கிண்ணிமங்கலம்
முகலிங்கத்தில் உள்ள கல்வெட்டே பழைமையானது எனலாம். முழுமையாக, ஐந்து புள்ளிகள் வருவதுபோல,
நான்கு வரிகளில் எல்லா மெய்களுக்கும் புள்ளி வரும் நெகனூர்ப்பட்டி கல்வெட்டு கி.பி.
நான்காம் நூற்றாண்டு எனத் தொல்லியல்துறை கணித்துள்ளது (பக்கம் 85, தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள், 2006, அரசு வெளியீடு). கிண்ணிமங்கலம் மடத்தின் சிற்பக் காலம் கி.பி.
2-ம் நூற்றாண்டு எனக் கணிக்கிறார் முனைவர் வெ. வேதாசலம்.
இரண்டு சிவாலயங்களில் தான் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன: (1) நெட்ரம்பாக்கம் (2) கிண்ணிமங்கலம். மற்ற சங்ககாலக் கல்வெட்டுக்களில் அனேகம் மலைக்குகைகள், கற்படுகைகளில் சமணர்களின் தொடர்புடையவை. கிண்ணிமங்கலம் இலிங்கத்தை தலைகீழாகத் திருப்பித் தான் எழுத்துக்களைப் படிக்கவேண்டும். இதே போல, 2016-ல் கிடைத்த நெட்ரம்பாக்கம் இலிங்கத்திலும் “சேநருமான்” என்று எழுதியுள்ளதைப் படிக்கச், சிவலிங்கத்தை 180 பாகை தலைகீழாகத் திருப்பல் வேண்டும். மண்ணுக்குள் - பாதாள லோகம் சென்றுவிட்டதால், தலைவன் பேரை இவ்வாறு எழுதி, ஈமச்சீர்கள் செய்து, சிவலிங்கத்தை நாட்டுவது வழக்கம் எனத் தெரிகிறது. பள்ளிப்படைகொண்டான் பெயர் மண்ணுள்ளே மறைந்துவிடும். நெற்றம்பாக்கம் லிங்கத்தில் நெய்தல் மலர்களும், இலைகளும் உள்ள தடாகமும், அத்துடன் தமிழ் பிராமி எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. நெய்தல் நீர்ப்பூத் தாவரம் தொல்காப்பியத்திலே நெய்தல் திணைக் கடவுள் வருணன் தொடர்பைக் காட்டுகிறது. இவை பற்றி விரிவாக எழுதியுள்ள கட்டுரை:
கிண்ணிமட லிங்கத்தில் உள்ள எகன், ஆதன், கோட்டம் மூன்றுமே சிறப்பான சொற்கள். எகன் என்பது எஃகன் என்பதன் குறுக்கம் ஆகலாம். எக/எகு/எஹு என்று தொடங்கும் இக்ஷ்வாகு அரசர் பெயர்களுக்கு எஃகு என்னும் விளக்கம் உண்டு. கோட்டம் = கோயில், இங்கே பள்ளிப்படை. சேரர்களின் தலைநாடாகிய கொங்குநாட்டுக்குச் சங்க காலத்தில் கிண்ணிமங்கலம் மிகு தொடர்பு உடையது. கொங்கர் புளியங்குளம் (சங்ககாலக் கல்வெட்டு) கிண்ணிமடத்தின் மிக அருகே இருக்கிறது. சேரர் தலைநகர் வஞ்சி (இன்றைய கரூர்) நேர் வடக்கே உள்ளது. உதியன் சேரலாதன், நெடுஞ் சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சேர அரசர்களும், அவர்களோடு தொடர்புடைய சிற்றரசர், வேளிரும் ஆதன் என்ற பெயர் உண்டு. உ-ம்: சேரர் குலச்சின்னம் ஆகிய கொல்லிமலை (பாண்டியர்க்குப் பொதியில் போல, அங்கே ஆய் மன்னர்), அதன் தலைவன் வல்வில் ஓரி தந்தை ஆதன். ஓய்மான் அரசர் சேரருடன் தொடர்புண்டு: நல்லி ஆதன், வில்லி ஆதன். அதியமான் வமிசத்து ஆதன் எழினி செல்லூர் என்னும் கேரளப் பட்டினத்தை ஆண்டான். அதேபோல, நெடுவேள் ஆதன் போந்தைப் பட்டினத்தை ஆண்டான். போந்தை = பனை, சேரர் குலச்சின்னம் ஆதலால் போந்தைப்பட்டினம் முசிறி, தொண்டி, பந்தர் போன்ற ஏதாவதோர் சேரர் பட்டினம் ஆகலாம். அதியர்கள் சேரர் வமிசம் எனப் 12-ம் நூற்றாண்டு வரை கற்பொறித்தனர். அழகர்மலை , கொங்கர் புளியங்குளம் , மேட்டுப்பட்டி, புகழூர், எடக்கல் கல்வெட்டுகளில் ஆதன் என்பதற்குப் பதிலாக அதன் என்ற பெயர் வருகிறது. ஒருவேளை அது ஆதனாக இருக்கலாம். தை என்றால் தந்தை, இறை எனப் பொருள். 12 மாதங்களில் மகர மாதம் ஒன்றனுக்கே தை எனத் தமிழ்ப் பெயர் நிலைத்தது. தை - தையல் தம்பதி. கண்ணன்+தை = கண்ணந்தை, சாத்தன்+தை = சாத்தந்தை, கொற்றன்+தை = கொற்றந்தை, பூதன்+தை = பூத்தந்தை (பூச்சந்தை என்பர் இப்போது), கீரன்+தை = கீரந்தை, ஆதன்+தை = ஆந்தை என்ற குலப் பேர்களை இன்றும் லட்சக்கணக்கான குடும்பங்களில் கொங்குநாட்டில் கேட்கலாம். கண்ணந்தை எனும் பேர் பானையோட்டில் -ணந்தை என்று மட்டும் அரபுநாட்டில் தமிழ்க் கல்வெட்டாய்க் கிடைப்பது அறிவீர்கள். ராவண காவியம் பாடின புலவர் அ.மு.குழந்தை, பேரா. இணையப் பல்கலை நிறுவுநர் வா.செ. குழந்தைசாமி போன்றோர் ஆந்தை குலத்தாரே. ஆதன், ஆந்தை என்பது பிராகிருத மரபில் முறையே அதன், அந்தை என முதல்நெடில் குறுகிப் பல சங்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் வருகிறது. கிண்ணிமங்கலத்தின் பழம்பெயர் கிள்ளிமங்கலம் என்று சொல்லின்செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை ‘ஊரும்பேரும்’ நூலில் விளக்கியுள்ளார். கிள்ளிமங்கலம் (கிண்ணிமங்கலம்) கிழார் மகன் சேர கோவனார் பாடிய பாடல் நற்றிணையிலே இருக்கிறது. இங்கே இப்போது கிடைத்துள்ள முகலிங்கம் அவரது உறவினர் ஒருவருக்கு எடுக்கப்பட்டது போலும். புறநானூற்றுப் பாடல் 249 தும்பி சேரகீரனார் பாடியது. அப்பாடலில் தான் தலைவனை இழந்த தலைவி குங்குமம் இழந்து, வரிநீறு ஒன்றையே தரிக்கும் 16-ம் நாள் ஈமச்சீர் பாடப்பட்டுள்ளது பாசுபத காபாலிகம் கொங்கில் பரவியதைப் பாடும் பாடல் ஆகும். திரிபுண்டரம் அழகாக, தும்பி சேர கீரனாரால் வரிநீறு எனப்படுகிறது.தும்பி சேர கீரனார் பாடல், புறநானூறு 249, உரையுடன் படித்தருளுக:
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.Xw2ulOdOnIW
ஈரோடு, பச்சோடு (பாப்பினி), பெரியோடு, சித்தோடு, வெள்ளோடு, ... போல ராசிகணத்தார் பரப்பிய பாசுபத சைவம் பழனி-திண்டுக்கல் அருகே எரியோடு வந்து, கிண்ணிமங்கலம் சேர்ந்த வரலாற்றை விளக்கும் ஆவணமாக, இப்போது கி.பி. 2-ம் நூற்றாண்டின் முகலிங்கம் “எகன் ஆதன் கோட்டம்” என்ற எழுத்துடன் கிடைப்பது அருமை. கண்டுபிடிப்பாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்கள்.
[1] கிண்ணிமங்கலம் ஏகமுக லிங்கத்தின் உச்சி முதலில் இருந்த நிலை: (Kinnimangalam Ekamukha Linga with top intact when found). Published in The Hindu (English) edition, July 4th, 2020.
Very important Tamil inscription discovery on two Siva lingas marking the time of Paashupata Saivam reaching Tamil country from 2nd century CE onwards.
Dr. N. Ganesan
0 comments:
Post a Comment